கோடையில் நாலுநாள் வெளியூர் சென்றே ஆகவேண்டிய கட்டாயம். என்னதான் கல்யாண சாவு என்று வயதான அந்தப்பெண்மணி இறந்துபோனதை சொன்னாலும் துக்கவீட்டில் கலகலப்பாய் பேசக்கூடாது என்று வாயைக்கட்டிப்போட்டுக்கொண்டபோது அந்த வீட்டின்பரணிலிருந்து பழையபுத்தக வாசனை வீசியது!
ஆர்வமாய் விழிகளை நிமிர்த்தி , உயர(கவனிங்க உயர் இல்ல உயர:):)வகைப்பெண்குலமாதலால் அதிக சிரமமில்லாமல் எட்டிப்பார்த்தபோது அங்கே கட்டுக்கட்டாய் பழையபுத்தகங்கள் தூசிப்போர்வையில் மூச்சுவிட சிரமப்பட்டுக்கொண்டிருப்பதைக்கா ண முடிந்தது.
“எல்லாம் இந்தவீட்டுப்பெரியவங்க அந்த நாளில்(அதாவது19 70வருஷம் முதல்) வாங்கிப்படித்தபழைய புத்தகங்கள் பத்திரிகைகள்... எல்லாத்தியும் பேப்பர்க்காரனுக்குப்போடலாம்னா அதுக்கு வேளையே வரலை.. வீடு மாத்தறபோது தூக்கிக்கடாசணும்” என்றாள் அந்தவீட்டு மருமகள்.
ஐயொ என பதட்டமாய் அலறியே விட்டேன்... ‘ஒரு பார்வை நான் அவைகளைப்பார்க்கலாமா?’ என்று கேட்டவுடன் அனுமதி கிடைத்தவுடன் தூசிக்கட்டை இறக்கித்தட்டி போத்தீசின் புதிய டிசைன் பட்டுப்படவையை பார்க்கும் சேலைப்ரியாக்கள் போல பரவசமானேன்.
பொக்கிஷங்கள் எல்லாம் உயர்ந்த இடத்தில் தான் இருக்கின்றன என்பது எவ்வளவு உண்மை!
ஏகப்பட்ட ரீடர்ஸ் டைஜஸ்ட்கள் நடுவில் , விகடன், கல்கி இதழ்களின் பழைய சிக் வடிவம்!முதசுரபியும் கலைமகளும் தூசி படிந்து சற்றே நைந்துமிருக்க ரகசியமாய் காதல் என்ற பத்திரிகை ஒன்று எட்டிப்பார்த்தது !
காதலை நகர்த்திவிட்டு.....
எட்டு தும்மலுடன் நாலைந்து இதழ்கள் தேறினதை எடுத்துக்கொண்டு நன்றி சொன்னேன்
தமிழில் சொல் இன்பம் என்று நீதிபதி மகராஜன் அவர்கள் எழுதி இருக்கிறார் பாருங்கள் ஆஹா யாம் பெற்ற இன்பம் இணையலோகமும் பெறவேண்டுமல்லவா?
அதாவது கவிஞர்கள் உலக அனுபவங்களைத் தாயன்போடும் பரிவோடும் அனுபவித்து அவற்றைத் தமதாக்கிக்கொண்டு பின் தம் அபாரமான சொல்லாற்றலால் கவிதையாக்கி அவற்றை எடுத்துச்சொல்லும் போது சொல் இன்பம் நமக்குக்கிடைக்கிறதாம்!
..
கோழி முட்டையிடுகிறது முட்டையை உடனே உடைத்துப்பார்த்தால் வெறும் தண்ணீர் போலத்தான் இருக்கும் உள்ளே இருப்பதை 21 நாட்கள் எச்சரிக்கையோடு அடை காத்துக்குஞ்சு பொரிக்கிறது கோழி. அந்த 21நாட்களும் ஓர் அற்புத நாடகம் நடக்கும். ஒருபக்கத்தில் உள்ள நீர் அணுக்கள் மஞ்சள் நிறஅலகாகவும் வேறொரு பக்கத்தில் உள்ள அணுக்கள் சிவப்புநிறக்கால்களாகவும் மற்ற அணுக்கள் கோழிக்குஞ்சின் உடம்பாகவும் மெல்ல மெல்ல மாறிக்கொண்டே வரும். கடைசியில் கோழிக்குஞ்சு முட்டையை உடைத்துக்கொண்டு வெளியே வருகிறதாம்,,தூணைப்பிளந்துகொண்டு நரசிம்மம் வந்ததுபோல!
இது போலத்தான் ஒரு உண்மையான கவிஞனின் இதயத்திலே ஓர் உணர்ச்சி மிக்க கருத்து கருத்தரிக்கிறது சூல் கொண்ட நேரத்தில் அருவ நிலையில் இருக்கிறது. கவிஞன் அதை அடைகாத்துக்கொண்டே இருக்கிறான். சூடு ஏற ஏற கவிக்கரு நுண்ணுருவம் பெறுகிறது. சொல்லுருவம் அடைகிறது. இப்படியாக முட்டைக்குள் நடந்த அற்புத நாடகம் கவிஞனின் இதயத்திற்குள் நடககிறது.
தமிழ்நாட்டின் ஆறுகளின் பெயர்களை சொல்லச்சொன்னால் பலசரக்குக்கடைப்பட்டியலைப்போல இருக்கும். பாரதிபோன்ற கவிஞர்கள் இவற்றை வரிசைப்படுத்தும்போது எத்தனை அழகாய் வருகிறது பாருங்கள்!
காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி-என
மேவி யாறு பலவோடத்-திரு
மேனி செழித்த தமிழ்நாடு
கண்டதோர் வையை பொருனைநதி-என
மேவி யாறு பலவோடத்-திரு
மேனி செழித்த தமிழ்நாடு
நாம் தமிழ் நாட்டை நிலப்பரப்பாகப்பார்க்கி்றோம் ஆறுகளை நீர்ப்பரப்புகளாய்ப்பார்க்கிறோம் ஆனால் கவிஞனின் பார்வையில் தமிழ்நாடு என்பது திருமேனியாம்!ஆறுகளால் அது செழித்துள்ளதாம்! உள்ளத்திலே இருந்த இன்பம் சொல்லிலே பாய்ந்து ஆறுகளை வரிசைப்படுத்தி நிறுத்துகிறது!
மஞ்சுமஞ் சுங்கைப் பரராச சேகர மன்னன் வெற்பில்
பஞ்சுமஞ் சும்பதப் பாவைநல் லாய்படை வேள் பகழி
அஞ்சுமஞ் சுங்கய லஞ்சுமஞ் சுங்கட லஞ்சுமஞ்சும்
நஞ்சுமஞ் சும்வெற்றி வேலோ வுமது நயனங்களே
இந்தப்பாடலை யாரும் கேள்விப்பட்டதுண்டா? மஞ்சு பஞ்சு அஞ்சு நஞ்சு முதலிய மென்மையான ஒலிகளைப்பாடலில் தூவிவிட்டுச் சொல் இன்பத்தை உண்டாக்குகிறார் ஒரு கவிஞர்.(பாடலுக்கு அர்த்தம் ஜீவ்சு சொல்லுவார்)
சொல்லிலே இருக்கும் பொருள் வேதனையைக்கொடுப்பதாக இருந்தாலும் கவிச்சொல்லின் ஒலி அந்த வேதனையையும் மாற்றிக்கேட்பவர்களுடைய இதயத்திலே இன்பத்தையே கொடுக்கிறது. Beneditto Croce என்ற இத்தாலிய அழகியல் புலவர் ,’There is nothing like aesthetic pain' என்று சொன்னார். அதாவது வேதனையான பொருளைக்கூட கலைஞன் தன் கலைத்திறனால் ஆனந்தத்தைக் கொடுக்கும் முறையிலே சொல்லிவிடுகிறான். இன்பத்தைக்கொடுக்கும் நிகழ்ச்சியை கலைத்திறமை இல்லையெனில் துன்பத்தைக்கொடுக்கும் முறையில் சொல்லிவிடலாம்.
இங்கே ஔவையார் பாட்டு யாருக்காவது நினைவுக்கு வருகிறதா?பாண்டியன் கல்யாணத்தில் தான் பட்ட பாட்டை அதாவது தொல்லையை சொல் இன்பத்தோடு நமக்குப்பரிமாறும் பாடல் அது!