Social Icons

Pages

Thursday, November 07, 2013

மாறநேர் நம்பி .

மாறனுரை செற்றதனில் தேனிருந்தான் வாழியே
நம்மாழ்வார் அவதார ப்ரதிநிதியோன் வாழியே
யாமுனாரின் வினையனைத்தும் தான் தரித்தான் வாழியே
அச்சமற மனமகிழ்ச்சி அணைத்திட்டான் வாழியே!
..காழியூர் மன்னார் அனந்தாழ்வார்--


 மாறநேர் நம்பி ஆளவந்தாரின் அந்தரங்க சீடர்களில் முக்கியமானவர். இவர் பஞ்சகுலத்தவர். இவரது சரித்திரம் ஆழ்வார்கள் ஆசாரியர்களின் வாழ்க்கையைப்போலவே போற்றத்தக்கது.
மாறநேர் நம்பி ஒரு முறை மிகவும் பசித்த போது வாய்க்கால் நீரை சேற்றுடன் அள்ளி குடித்தாராம்.. அதைக் கண்டு வியந்து வினவிய ஆளவந்தாரிடம் ‘கஞ்சிக்குக் காத்திருந்தேன் வரவில்லை. எனவே இந்த மண்சுவருக்கு(உடம்பிற்கு) மண்ணிட்டேன்” என்றராம். உலகப்பற்று அறுத்த உத்தமர். தம் உணர்வில், நம்மாழ்வாரை ஒத்திருந்ததால் ‘மாறன்நேர் நம்பி” (மாறனுக்கு இணையான நம்பி) என   அவரை அழைத்த ஆளவந்தார்,” மாறநேர் நம்பியே! இனி நீர் இந்த கிராமத்தில் வயலில் பணி செய்யவேண்டாம் என்னோடு ஸ்ரீரங்கம் வாருங்கள்” என்றார்.

“சுவாமி  நான் தங்கள் அருகில் கூட நிற்கத் தகுதி இல்லாதவன் தாழ்ந்தகுலத்தைச்சேர்ந்தவன்”

“ஜாதி குலம் ஆசாரம் இவைகளுக்கு அப்பாற்பட்ட ஞான தேசிகனாய் இருக்கிறாய் அப்பா! இனி நீர் எமது கோஷ்டியில்தான் சேரவேண்டும் “ என்று கட்டளையிட்டார் ஆளவந்தார்.

 குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ண்ற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம் அடியார், எம்அடிகளே

என்ற நம்மாழ்வாரின் பாசுரம் இங்கு சிந்திக்கத்தக்கது.

காவிரிநதிக்கரையில் குடில் அமைத்துக்கொண்டு ஆளவந்தாரையே ஆசாரியராகக்கொண்டு அவருக்கு வழுவிலா அடிமை செய்து வந்தார் மாறநேர்நம்பி.

கீழச்சித்திரை வீதியில் (தற்போது சித்திரைத்தேர் நிற்குமிடத்திற்கருகில்)  திருமாளிகையமைத்து ஒரு பிரவசனக்கூடமும் (உபதேசிக்கும் மண்டபம்) அமைத்தார். மறுநாள் அதற்கு  ஒரு சுத்தப்படுத்தும் வைதீக காரியம் நடத்த உத்தேசித்திருந்தார் ஆளவந்தார்.

 நள்ளிரவில் ஒரு கரிய உருவம் வீட்டினுள் புகுந்து அங்குமிங்கும் அலைந்து எல்லாவற்றையும் நன்கு பார்த்து விட்டு வெளியேறியது. ஆளவந்தார் இதனைப் பார்த்து விட்டார். யாரென கேட்க  முற்படுகையில் அது மாறநேர்நம்பியெனவும், தாம் தாழ்ந்தகுலம் என்பதால் அடுத்த நாள் காலை சுத்தம் செய்யும் வைதீகக்காரியம்  நடந்துவிட்டால் பார்க்க இயலாதாகையினால் இரவே வந்து பார்த்துவிட்டு சென்றதாயும் அறிந்தார். ஆளவந்தார் கண்ணீர் சிந்தினார்.” மாறநேர் நம்பி திருவடிகள் பட்டதே போதும் – இந்த இடம் மிக மிக புனிதமாகிவிட்டது. இனி புனிதப்படுத்துவதற்காக புண்யாஹம் தேவையில்லை” என்று மறுநாள் காலை நடக்கவிருந்த நிகழ்ச்சியினை ரத்து செய்து விட்டார்.


ஆளவந்தாருக்கு ராஜபிளவை நோய் தாக்கியது. தம் ஆச்சார்யனுக்கு ஏற்பட்ட இப்பெரும் தீங்கைக் கண்டு துடித்தார் மாறநேர்நம்பி. அரங்கனிடம் வெகுவாக மன்றாடினார். இறுதியில் வென்றார். அவரது நோயை தாம் பெற்றார் அரங்கனிடம் பிரார்த்தித்து. தமக்கு இந்த ‘ராஜபிளவை’ நோய் வந்தபோது அதனை ‘ஆச்சார்ய பிரஸாதம்’ என்றெண்ணி பெருமிதம் கொண்டார். ஆளவந்தார் மாறநேர்நம்பியிடம் ,”என்னே கருணை என்னே குருபக்தியப்பா உனக்கு! என் பிறவிதனை போக்கவந்த கொடுநோயை நீ எடுத்துக் கொண்டாயே!’ என்று வருத்தப்பட்டாராம். தமது பாட்டனாரும் ஆசாரியாருமான நாதமுனிகளின் தாள்களை மனத்தில் இருத்தியபடியே பெரியபெருமாள் திருவடிகளைச்சேர்ந்தார் ஆளவந்தார்.(பிதா மஹம் நாதமுனிம் ப்ரஸீத மத்வ்ருத்த ம சிந்தயித்வா--ஸ்த்தோத்திர ரத்னம் 65)

மகாஞானியானவரும் மகாபூரணருமான பெரியநம்பிகளால் நீராட்டி, புண்ணுக்கு மருந்திட்டு, உணவு ஊட்டப்பட்டு அன்போடு ஆதரிக்கப்பட்டார் மாறநேர்நம்பிகள்.

“பெரிய நம்பி சுவாமிகளே! தங்கள் பணிவிடைகட்கு  என்னென்று நன்றி கூறுவேன்? நா தழுதழுக்கிறது. அடியேன் இன்னும் மூன்றுநாட்களே தேகவாசம் செய்வேன் ப்ராணப்ரயாண சமயத்தில் கேசவா கோவிந்தா மாதவா என்று கூறி உயிர் பிரிந்தால் என்னுடைய உடலை எரித்து புஷ்கரணியில் தீர்த்தாமாடி வீடு திரும்பவும், அன்றியும் ஆழ்வார்கள் புகழ்பாடும் தருணம் உயிர்பிரிந்தால் உடலை எரித்து கண்டஸ்நானம்(கழுத்தளவு குளியல்) பண்ணிவிட்டு வீடு திரும்பவும். இவை இரண்டுமின்றி ஆச்சாரியன் ஆளவந்தாரின் திருநாமங்களை ஜபித்துக்கொண்டிருக்கையில் உயிர் பிரிந்தால் உத்தம வைஷ்ணவர்களுக்குப் பண்ணுவது போல ப்ரும்மரதமேரருளி அந்திம காரியங்களைச்செய்யவும். ” என்று எடுத்துக்கூறினார்.

மாறநேர் நம்பியின் குருபக்தியைக்கண்டு பெரிய நம்பிகள் மிகவும் வியந்துபோனார்.

அந்த அந்திம நேரமும்  வந்தது.

மாறநேர் நம்பி ஆளவந்தாரையே மனதில் நிறுத்தி அவர் நாமத்தை ஜபித்துக்கொண்டே ஆசாரியன் திருவடியை அடைந்தார்.
மனம் வருந்திய பெரியநம்பி சுவாமிகள், நம்பி கூறியபடி  உயர் அந்தணர்களுக்குச் செய்யும் அந்திமக்காரியங்களை மாறநேர்நம்பிக்குச்செய்ய ஆயத்தமானார்..  ஸம்ஸ்காரங்களனைத்தும் மாறநேர்நம்பிகளுக்கு செய்தார்.
ஆனால் மாறநேர்நம்பிகள் என்ற தாழ்ந்தகுலத்தவருக்கு ஸம்ஸ்காரம் செய்து வைத்தபடியால் இவரை சக அந்தணர்கள் ஒதுக்கினர் தம் சமுதாயத்தினை விட்டு.

. இது குறித்து இராமனுஜர் வினவுகின்றார்.”நம்மிடம்
 தெரிவித்திருந்தால் நாமே சம்ஸ்காரத்தை பூர்த்தி பண்ணியிருப்போமோ  தாங்கள் அபவாதததை ஏற்கவேண்டுமா?” என்று கண்பனித்தார் பாஷ்யக்காரர்.


  ‘ஜடாயுவிற்கு ஸ்ரீராமபிரான் பண்ணவில்லையா? விதுரருக்கு தர்மர் கொள்ளிபோடவில்லையா?.ஜடாயு, விதுரரையும் விட எந்தவிதத்திலும் எந்தன் மாறநம்பி தாழ்ந்தவரில்லை  ..ஸ்ரீராமனையும் யுதிர்ஷ்டிரனையும்விட அடியேன்  அந்த தகுதி உடையவனுமல்லன். பயிலும் சுடரொளி நெடுமார்க்கடிமை பாசுரங்களின் பொருள்பட நடப்பவன் அடியேன். திருவாய்மொழி மறவாது மொழியும் என்னை தூஷிப்பவர்களின் கூச்சல் கடல் ஓசையைப்போல பயனற்றுப்போகும்” என்றார் பெரியநம்பி.

 உடையவரும் மனம் நெகிழ்ந்து பெரிய நம்பியை வணங்கி நின்றார்.
பெரியநம்பி  இப்படிமாறநம்பிக்கு  அந்திமக்காரியங்கள் செய்ததால் ஊர்மக்களின் பகைக்கு ஆளானார்.

திருவரங்கத்தில் நான்கு சித்திரைவீதிகள்(கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு) நான்கு கோபுரங்களைக்கொண்டது, இந்தவீதிகளில் ஆச்சார்ய புருஷர்கள் என்று அழைக்கப்படும் வைணவசமயத்தலைவர்களின் திருமாளிகைகள் அமைந்துள்ளன. சித்திரைதேரடியும் கிழக்கு சித்திரைவீதியில் இருக்கிறது. தேரடி அருகே பெரியநம்பியின் திருமாளிகையும் அவருக்கென்று சிறு சந்நிதியும்  இன்னமும் உள்ளது.

 அன்று சித்திரைத்தேர்..தேர்த்திருவிழா என்றால்  ஊரே இரண்டுபடும். பெரிய நம்பியின்மீது பகைகொண்டவர்கள் அவர் இல்லத்து  வழியாக தேர் செல்வதை விரும்பவில்லை.. அவர்களின் முணுமுணுப்பை நம்பியின் மகள் அத்துழாய் கேட்டுவிட்டாள்.  மானசீகமாய் நம்பெருமானிடம் வேண்டுகோள் விடுத்தாள்”அரங்கா! என்  தந்தை செய்தது தவறில்லை என்று உனக்குத்தெரியும் அப்படியானால் அவருக்கு தரிசனம் தராமல் உனது தேர் நகரக்கூடாது” என்றாள்.

திருத்தேர் நகராமல் நின்றது.


பின்னர் ஊர்மக்கள் பெரியநம்பிகளின் உயர்ந்தகுணத்தை எம்பெருமானே ஏற்றுக்கொண்டதை அறிந்து தங்கள் தவறினுக்கு  வணங்கி அவரிடம் மன்னிப்புகேட்டார்கள். அவரை அன்போடு  தேருக்கு அழைத்து  வந்தார்கள்.
பெரிய நம்பியும் எம்பெருமானின் தரிசனம் பெற்று பெருமகிழ்ச்சி அடைந்தார்

 தேர் நின்ற இடமே தேரடியானது. அதன் மிக அருகிலேயே பெரிய நம்பிதிருமாளிகை!   இவை இரண்டையும் திருவரங்கம் கிழக்குச்சித்திரைவீதியில்  இன்றும் காணலாம்!




 எனது இக்கட்டுரையை வெளியிட்ட விஜயபாரதம்  தீபாவளிமலர்2013க்கு நன்றி

 









--
 
. .


--
மேலும் படிக்க... " மாறநேர் நம்பி ."

Monday, November 04, 2013

சேஷ வாகனம்.(சிறுகதை)

 
 
விஜயபாரதம் தீபாவளி மலரில் வந்துள்ள  சிறுகதை  உங்கள் பார்வைக்கு!
 
சேஷ வாகனம்.

.

"ராஜு !இன்னிக்கு  சேஷவாகனமாம் கிளம்புடா போயிட்டுவரலாம்” என்று அழைத்தபடியே  வந்தார் திருமலை.
 
அறுபது வயதிருக்கும்  திருமலை மாமாவிற்கு. சின்னஸ்ரீரங்கத்தில்  திருமலை என்றால் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. ஊரின் மேல் உள்ள பற்றி்ல் பதவி உயர்வுக்கான தேர்வு எழுத விருப்பமின்றி அருகில் வங்கியில்  கடைசிவரை கிளர்க்காகவே இருந்து  அண்மையில்  பணி ஓய்வு பெற்றவர். சின்ன ஸ்ரீரங்கம் அழகியரங்கன் கோவிலின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருப்பவர்.நெடுநெடுவென ஆறடி உயரத்தில் ரோஜாப்பூ நிறத்தில் பளிச்சென்ற திருமண் முகத்தில் தெரியும் தேஜசில்  மாமாவே எனக்கு  பெருமாளாகக்காட்சி அளிப்பதுபோலிருந்தது.

கிராமம் என்றில்லாத பெரிய நகரம் என்றுமில்லாத  சற்றே பெரிய சிற்றூர்தான்  சின்ன ஸ்ரீரங்கம்.  ஊருக்கே பெருமை கோவிலால்தான். கோவிலில்  வருடா வருடம் நடக்கும் புரட்டாசிமாத உற்சவம்  ஆரம்பித்துவிட்டது.
 
“இதோ வந்துட்டேன்  ....மாமா,நாதஸ்வரம் யார் வாசிக்கப்போறா?” என்று கேட்டேன் நான்.
 
திருமலைக்கு நாதஸ்வரக்கச்சேரி என்றால் உயிர்  .பொதுவாகவே இசையில் நல்ல ரசனை அவருக்கு.அப்பா   இருந்தவரை அவரும் திருமலைமாமாவும் ராகங்களைப்பற்றி விமர்சனம் செய்து பேசிக்கொண்டிருப்பார்கள். அ்ப்பா    மாரடைப்பில் திடீரென போனதும் நானும் அம்மாவும்  என் வேலை காரணமாய்  இரண்டுவருஷம் முன்புஊரைவிட்டே  போய்விட்டோம் இதுபோல உற்சவ சமயங்களில் மட்டும்  ஊர் வந்து பூட்டிக்கிடக்கிற வீட்டைத்திறந்து  10நாட்களும் தங்கிச்செல்வோம்.  இந்ததடவை அம்மா  வடக்கே தீர்த்தயாத்திரைக்குப்போய்விட்டாள் . தனியே இருக்கும் உணர்வே ஊரில் ஏற்பட சாத்தியமில்லை.

கோயிலில் தினமும் யாராவது ஊர்க்காரர்களின் மண்டகப்படி இருக்கும் ததியாராதனம் நடக்கும் சாப்பாட்டுக்குக்கவலை இல்லை .திருமலை மாமாவின் குடும்பம் இருக்கிறவரை எனக்கு எதற்கும்  கவலை இல்லை. எனது இன்னொரு அப்பா திருமலை மாமா.
 
“யாரோ  தங்கமணின்னு ஒருத்தராம்.. இதல்லாம் என்ன கச்சேரி அந்த நாளில் அனந்தபத்மநாபன் வாசிக்கணும் அதைக்கேக்கணும்” என்றார் சுவாரஸ்யமில்லாமல்.
 
அந்த சமயம் கோவில் வாசலிலிருந்து  பெருமாள் புறப்பாட்டின் வேட்டுச்சத்தம் கேட்டது இல்லாவிட்டால் திருமலை ஒரு புராணமே பாடி இருப்பார்.கோவிலை நோக்கி அவர் முன்னே நடக்க நான் பின் தொடர்ந்தேன்.
முத்தும் ரத்தினமும் மின்ன  வைரங்கள்  ஒளியினை வாரிக்கொட்ட எம்பெருமான் நாகவாகனத்தில்  கண்கொள்ளா காட்சி அளித்தார். படமெடுக்கும்ஐந்துதலை நாகவாகனம் முழுவதும் பொன் பூச்சில்  தகதகத்தது.
‘இருளறியச்சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணிபணம் ஆயிரங்களார்ந்த அரவரசப்பெருஞ்ஜோதி’என்று ஆழ்வார் பாடியதுபோல  நாகத்தலைகள் கண்ணையும் மனதையும் நிறைப்பதை உணர்ந்தேன்.
 
வாகனத்தை  தோளில் சுமந்தபடி ஸ்ரீபாதம் தாங்கிகள் முன்னே  சென்றனர்.   நாங்களும்  கூடவே நடக்க ஆரம்பித்தோம்.





 ராகமாலிகையை நாதஸ்வரத்தில்  இழைத்துக்கொண்டிருந்தார் தங்கமணி.சிவரஞ்சனி  கரகரப்ரியாவைத் தொடர்ந்து  கீரவாணிராகத்தை நாதமாய்க்குழைத்தபோது காதுகளைத்திறந்துகொண்ட நான் கண்களை அப்படியே  அனுபவிக்கும் நோக்கத்தில் மூடிக்கொண்டேன்.

இசைக்குத்தான் எத்தனை கவர்ச்சி.செவிவழிபுகுந்து இதயத்தை வருட இசையால்மட்டுமே முடியும்.ராகமாலிகையில் அடுத்து புன்னாகவராளிராகத்தை வாசித்தபோது மெய் சிலிர்க்க ஆரம்பித்தது. நெஞ்சக்காட்டில் பாம்பு ஒன்று புகுந்து ஆடுகி்றமாதiிரி இருந்தது.
 
தiிடுக்கிட்டுக்கண்விழித்தேன்.
 
எதிரே நாகவாகனத்தில் எம்பெருமான்! ‘என்ன ராஜூ  ஊரைவிட்டுப்போனாலும் என்னை மறக்கவில்லைதானே? ‘என்று குறும்பாய் கேட்பதுபோல இருந்தது. அதெப்படி இருபத்தி ஐந்து வருடம் புரண்ட மண்ணை மறக்கமுடியுமா என்ன? அப்பா சொல்லிக்கொடுத்த ஆழ்வார்பாசுரங்களும்  கீதை உரைகளும் என்னை மேலும் உரம்போட்டு ஊர் நினைவை உற்சாகப்படுத்துமே தவிர மறக்க வைத்துவிடுமா?
நானும்  மகிழ்ச்சிகலந்த பார்வையை அரவணையில் வீற்றிருந்த  எம்பெருமானிடம்  செலுத்தியபோது  ஐந்துதலை நாகம் மெல்ல அசைந்ததுபோல இருந்தது. என்ன! வாகனத்தில் நாகத்தலைகள் எங்காவது  தானாய்அசையுமா?
ஒரு நொடிதான் அசைவு நின்று மறுபடி நாகத்தலைகள் நிமிர்ந்தே நிற்க ஆரம்பித்தது . என்ன இது பிரமையா? மறுபடி நிமிர்ந்தேன் லோகமூர்த்தி சிரித்துக்கொண்டிருந்தார். அப்பாடி எல்லாம் பிரமை வெறும் பிரமைதான்!
 
 .
 
”ராஜூ,போகலாமா? ”திருமலை என் தோளைத்தட்டினார். என்ன ஆயிற்று மாமா முன்பெல்லாம்  கோவிலின் உற்சவம் என்றால்  சந்நிதி வாசலிலேயே  நின்றுகொண்டிருப்பார், அர்ச்சனை , அலங்காரம் பிரசாதம் அம்சை ஆகி விநியோகம்  வரைஎல்லாம் சரிவர நடக்கிறதா என்று  பார்ப்பார். கோயில் ட்ரஸ்டி என்ற முறையில் கணக்குவழக்குகள் எல்லாம் கவனிப்பார் வீதி உலா சமயங்களில் வேதகோஷ்டியோடு தானும் சேர்ந்து நடப்பார். போனவருஷமே மாமா அவ்வளவு உற்சாகமாய் இல்லைதான்  இந்தவருஷம் இன்னமும்  வாடிப்போனவராய் தெரிகிறாரே!
 
‘ஏன் மாமா கச்சேரி அற்புதமா யிருக்கே மனசே இல்லையே கிளம்பறதுக்கு”
 
“கிளம்பு சொல்றேன்.. எனக்கும்மனசே சரியில்லை”நகர ஆரம்பித்தார்.
 
திருமலையின் குரல் சுரத்தில்லாமலிருக்கவும் ‘சரி;என சொல்லி அவரைப்பின் தொடர்ந்தேன்.
 
வழியெல்லாம்  அவர் பேசவே இல்லை திடீரென,”ராஜூ!   உனக்கு சாரநாதபட்டரைத்தெரியுமோல்லியோ என்று கேட்டார்.
 
“தெரியுமே  மாமா .இப்போ  ரண்டுவருஷமா  கோவிலில்  பெருமாளுக்குக்கைங்கர்யம் பண்ணுகிற பட்டப்பா பட்டரின் அண்ணாதானே? நீங்க அடிக்கடி   புகழ்ந்து சொல்லும்  ரெங்கபட்டரின் மருமான் தானே அவர்?”
 
“ஆமா அவரைத்தான் இப்ப  பாக்கப்போறோம்”
 
கீழ் வீதியின் கோடியிலிருந்த  ஒரு வீட்டை அடைந்தோம்.
 
வாசல்திண்ணையில்  விசிறியை  வீசிக்கொண்டு உட்கார்ந்திருந்த சாரநாதபட்டர் எங்களைக்கண்டதும் முகம் மலர்ந்தார்.

“வாடா ராஜூ! சென்னைல  ஜோலியாக்கும்?  கல்யாணம்  எப்ப?  ஏதும்  பட்டணத்துல வேற ஜாதிக்காரப்பொண்ணைப் பாத்து வச்சிட்டியா?” என்றார்  கிண்டலும்  உரிமையும் கலந்த குரலில்.

“அதெல்லாம்  பண்ணமாட்டான் ராஜகோபாலன்.. வேதசிரோன்மணியோட பேரன்... அவனும்  வேதம் படிச்சிருக்கான். வேலை நிமித்தம் வெளியூர்போயிட்டானே தவிர அவன் ஊரையும் கோயிலையும் பெருமாளையும் மறக்கிறவன் இல்லை.பெரியவா ஆசிர்வாதம் அவனுக்கு நிறைய இருக்கு. பெருமாளை ஆத்மார்த்தமா  நேசிக்கிறவா தப்பு பண்ணமாட்டா” என்றார் திருமலைமாமா  நறுக் என்ற  குரலில்.

மாமாவின் வார்த்தைகளில் எனக்குப்பெருமையாக இருந்தாலும் அவர் ஏதோ கோபத்தில் இருப்பதை முகம் காட்டியது.




“வாங்கோ  திருமலை என்ன அதிசியம்  தேவரீர் என் குடிசைக்கு  வந்திருக்கிறீர்கள்!  நானும் சேஷ வாகனம் சேவிக்கப்போகாமல்  கால்வலின்னு  திண்ணைலயே  உக்காந்துட்டேன்,.  இப்படி உக்காருங்கோ ரண்டுபேரும்” என்று  அமர்ந்தபடியே வரவேற்றார் 
 
மாமா உட்காராமலேயே,” சாரநாதா! உங்க மாமா முன்னே எழுதிவைச்சிருந்தாரே அந்த சுவடிகளைக்கொடு” என்றார் சற்று  அதட்டலான குரலில்.
 
“என்ன திருமலை  இப்போ திடிர்னு கேக்கறீர்?போனவருஷம் எடுத்துக்கொண்டுபோங்கள்  இங்கே யாருக்கு சுவடியெல்லாம்  படிக்கப்பொறுமை இருக்குன்னு மன்றாடினேன் நீங்க அப்போ  எடுத்துக்கவேஇல்லை”
 
“அது பழையசமாசாரம் ஆனா இப்ப அதைப்பார்த்தாகணும்னு தோன்றது கொண்டுவாயேன்..”
 
்  உள்ளேபோனவர் திரும்பி வருகிற கால்மணி நேரமும் அப்படியே நின்றுகொண்டிருந்தோம்.

சுவடிகளைப்பெற்றுக்கொண்டு”வரேன்” என்றவர் விருட்டென நடக்க ஆரம்பித்தார்.
 
எனக்கு மாமாவின் செய்கை  புதுமையாய் இருக்கவே”சுவடில என்ன இருக்கு?’ என்று கேட்டேன்.
 
“மாமா பெருமுச்சுவிட்டபடி “நாளைக்கு   வாயேன்,பேசலாம் ” என்றார்

. மாமாவுக்கு என்ன ஆயிற்றுதிடீரென்று?
 
என்னவோ ஆகி இருக்கி்றது இவ்வளவு பதட்டம் அவரை ஆட்கொண்டு நான் பார்த்ததில்லை. பெருமாள் புறப்பாடு என்றால்  வீதி உலா  முடிகிறவரை  பெருமாள்கூடவே இருப்பவர்  இப்படி  சட்டென  தன் வீட்டை நோக்கி நடப்பது வியப்பாகப்பட்டது.


மறுநாள் போனேன்.

“வா  ராஜு.. உட்கார்.. நேத்திக்கு உன்னை ரொம்ப குழப்பிவிட்டுட்டேனோ? எனக்கே  ஏன் அப்படி நடந்துகொண்டேன்னு புரியலைப்பா..”  என்று சொல்லி சிரிக்க முயன்றார். அவர்முன்  மேஜையில் பழைய ஓலைச்சுவடிகள் கிடந்தன.
அவரே தொடர்ந்தார்.”கோயில் முன்னமாதிரி இல்லை ராஜூ.. ரங்கபட்டர் இருந்தவரை  அவரது தொண்ணூறுவயசுவரை கோயிலுக்காக  உழைச்சார் உண்மையான சேவகம் பண்ணினார். அவர் இருந்தவரை கோவில் நிர்வாகத்தில் எந்தக் குளறுபடியும் வரலை.அவர்போனதும் அவருக்கு வாரிசு இல்லாததால் மருமான்கள் இருவரும் போட்டியிட  கால்வலி தொல்லையால் சாரநாதனும் கோவிலுக்கு கைங்கர்யம் பண்ண போகாமல் அடிக்கடி வீட்டோட தங்கிவிட  பட்டப்பா பட்டர் தான் முழுப்பொறுப்பு ஏற்கிறான். அவனுடைய அரசியல்வாதிகளின் சகவாசத்தில் கோயிலில் அக்கிரமம் நடக்கிறது அதைஎனக்குத்தெரியாமல் பட்டப்பா மறைக்கப்பார்க்கிறான்.
இன்னிக்கு நாகவாகனத்தில் இருக்கிறது பழைய பொன் நாகமே இல்லை அதேபோல  வெள்ளீல பண்ணி தங்கமுலாம் பூசி  வச்சிட்டான் பட்டப்பா..  இதெல்லாம் அரசல்புரசலா எனக்குத்தெரிந்துதான் இருக்கிறது ஆனா எதையும் கேட்கமுடியாமல்  அவனோட சமீபத்திய அரசியல் பலம்  என்னைக்கட்டிப்போடறது. ..ஆனா  தெய்வம் எல்லாத்தையும் பாத்துண்டுதான் இருக்கு”

பெருமூச்சுவிட்டு நிறுத்தினார்.

ஓஹோ மாமாவின்  கவலை இதுதானா?

திருமலை  மேலும் பேசத்தொடங்கினார்.”ராஜூ..அதிருக்கட்டும்..இங்கே பாரேன் இது ரங்கபட்டர் எழுதின ஓலைச்சுவடிகள் எனக்கு சுவடி வாசிக்கிற கலை தெரியும் அதான்  நேத்து கேட்டு வாங்கிண்டுவந்தேன் இதுல அவர் தான்  பகவானை நேரில் பார்த்ததை அனுபவிச்சி எழுதி இருக்கார்,..”

“அப்படியா?”

‘ஆமாம் ராஜூ அதுவும் வெறும் சங்குசக்கரத்தோட  இல்லை தலைக்குமேலே குடைபிடிச்சமாதிரி ஐந்துதலை நாகத்தோட    சேஷவாகன உற்சவத்திருநாளில் தரிசித்து இருக்கார்..அண்ணலின் சிரம் மீது நிஜ நாகம் படமெடுத்து ஆடுவதை  அப்படியே வர்ணித்து எழுதி இருக்கிறார் ராஜூ! இதுல ஒரு விசேஷம் என்னன்னா  அந்த சொரூபம் பார்த்ததுமே அவருக்கு  திகைப்பில் வாய் அடைச்சிபோய்டுத்தாம்.   ஊமையாகிப்போனேன்  என் அனுபவத்தை ஒருஓலைச் சுவடியில் எழுதுகிறேன்”ன்னு   அன்னிக்கே என்னிடம் ஜாடையில் சொன்னார் அப்போது நான் இதை  பெரிதாக எண்ணவே இல்லை..”

“இது ரொம்பவே ஆச்சரியம் மாமா?”

“ஆச்சரியம் ஒன்றுமே இல்லை ராஜூ..எங்கோ வெடித்த அணுகுண்டின் கதிர்கள் எங்கோ இருக்கிறவனைத் தாக்கிடறதுன்னு  படிக்கலையா? அதை நம்புகிறாய் இதை நம்பமாட்டாயா?”

என்பிரமை நீங்குமுன்பே அவர் தொடர்ந்தார்.

”ரங்கபட்டர் சிறுவயதுமுதலே கோயில் கைங்கர்யத்தில் ஈடுபட்டவர். அவர் அர்ச்சனை செய்தாலோ  சஹஸ்ரநாமம் சொன்னாலோ கணீரென கேட்கும் ஆத்மார்த்தமாய் செய்வார். அரைகுறையாய் எதையும் செய்யமாட்டார். சேஷவாகனம்  மட்டும் அவர்பொறுப்புதான்  யாரையும் நெருங்கவிடமாட்டார்.
பழையநாளில் விஜயநகர ராஜா  ஒருத்தர்அன்பளிப்பாய்கொடுத்ததாம்  இந்த ஐந்துதலைநாக வாகனம்  முழுக்கச்சொக்கத்தங்கமாம். ரங்கபட்டருக்கு மனசும் கையும் சுத்தம். இந்த ஓலையில் அவர்  எல்லா விவரமும் எழுதி இருக்கிறார்.  வாசிக்கிறேன் கேளேன்..“

திருமலை ஆர்வமாய் வாசிக்க ஆரம்பித்தார்.

‘ இன்னிக்கு சேஷ வாகனம்.வாகனத்தில் பெருமாளை எழுந்தருளப்பண்ணிவிட்டு ஒருமுறை பெருமாளைப்பார்க்கிறேன்..ஸ்வர்ணாபரணங்களும் முத்து ரத்தினமாலைகளும் பெருமாளின் திருமேனியில்  பெருமையுடன்  வீற்றிருக்கின்றன. விருட்சியும் தவனமும் சேர்த்துக்கட்டிய பூமாலையும் மணக்கக்காட்சி அளிக்கிறது..ஐந்துதலையுடன்  படமெடுக்கும் தங்க நாகம்  மின்னுகிறதுஆனாலும் ஏதோ குறை தெரிகிறதே...பூக்களாலேயே  பெருமாளின் முதுக்குப்புறத்தை உயர்த்திக்காட்டவேண்டாமோ? சட்டென கோவில் நந்தவனத்துக்கு ஓடினேன்.புதராய் மண்டிக்கிடந்தது  தாழம்பூ.அப்படியே பறித்துக்கொண்டுவந்து  பெருமாளின்  பின்பக்கமாக சற்று உயரக்காணும்படியாக விசிறிபோல  தாழம்பூவை வைத்து அலங்கரித்தேன் ஆஹா! மனசு குளிர்ந்தது இப்போதுதான்.  என்ன அழகு என்ன அழகு எம்பெருமான்  என்னமுதினைக்கண்ட கண்கள் மற்றொன்றினைக்காணாவே என்று ஆழ்வார்பெருமான் அருளியதும் எத்துணைப்பொருத்தம்!பார்த்துக்கொண்டே இருக்கையில் பெருமானின் தலைக்குமேலே ஐந்து தலைநாகம் அழகாக ஆடியபடி குடைபிடிக்கிறது.  பிரமையோ?  ஊஹும் இல்லை இல்லை நாகம் அப்படியே இருக்கிறது..நிஜ நாகம்!உடம்பே சிலிர்க்கிறது அப்படியே சாஷ்டாங்கமாய் கீழே விழுந்து சேவித்தேன்.”எம்பெருமானே  என்னே உன் கருணை! அலங்கார வாகனத்தை அசல்வாகனமாய் மாற்றிக்காட்டிவிட்டாயே!” கண் நிறைக்க  தரிசித்தேன் ..கண்ணில் நீர் பெருகிப்பார்வையை மறைத்தது துடைத்துக்கொண்டு திரும்பிப்பார்க்கையில் பெருமாள் இருக்கிறார் குடைபிடித்த நாகம் மறைந்திருந்தது.
அதன்பின்பு எனக்கு உடல் தளர்ந்துவிட்டது. படுக்கையில் விழுந்துவிட்டேன்திருநாடேகும் நாளுக்குக்காத்திருக்கிறேன் எம்பெருமான் திருவடியை அடைய சித்தமாகிவிட்டேன் அதற்குமுன்பாக  என் அனுபவத்தை இதில் எழுதி வைக்கிறேன். ‘

திருமலை கண்பனிக்கப்  படித்துமுடித்ததும் எனக்கு நேற்றுஇதேபோல்  படமெடுத்து  தலை நிமிர்த்தி நின்ற   காட்சி நினைவுக்குவந்தது. நான் கண்டதும்  இதைத்தானே!  ்  சேச்சே  ரங்கபட்டர் என்னும் உயர்ந்த ஆத்மா எங்கே நான் எங்கே! பிரமைதான் இதையெல்லாம் மாமாவிடம் சொல்லிப்பெருமையடித்துக்கொள்ளக்  கூடாது.

ஒருவாரம் ஓடிவிட்டது ஆயிற்று நானும் ஊர்போகிற நாள் வந்துவிட்டது.

கோவில் பக்கம்  போனவன் அங்கே நந்தவனத்தின் அருகே பெரிய கூட்டத்தைக்காணவும் திகைப்புடன் அருகில் போனேன்.

“பட்டப்பா  பட்டரை பாம்பு கடிச்சிடுத்து... நந்தவனத்துல தாழம்பூப்புதர்ல தாழம்  பூப்பறிக்க  போனவரை பாம்பு தீண்டியதும் கூப்பாடு போட்ருக்கார்  எல்லாரும் ஓடி வந்தாளாம்.  டவுன் அஸ்பித்ரிக்கு கார்ல  கூட்டிண்டு போய்ருக்கா..ஒருத்தர் பாம்பு நெளிஞ்சி ஓடறதைபபர்த்து  ஆ’ன்னு  வீறிட்டாராம்  .அஞ்சுதலைப்பாம்பாம். அஞ்சுதலைப்பாம்பைப்பார்த்தேன் அதுதான் பட்டரைக்கடிச்சிடுத்துன்னு சொன்னார் ..பெரிய  பாம்பாம் அடிக்க பின்னாடியே  போய்ருக்கா.. அது  தப்பிச்சிப்போய்டுத்துபோல்ருக்கு  பாம்பை அடிக்கப்போனவாளை இன்னும் காணல..பட்டப்பா வேற  உயிருக்கு ஆபத்தான நிலைல இருக்கார்..”

நான் யோசிக்கலானேன்.  தாழம்பூப்புதர்ப்பாம்பென்றால் முன்னர் இரண்டுவருஷம் முன்பு ரங்கபட்டருக்குக்காட்சி அளித்த அதே ஐந்துதலைப்பாம்புதானோ? இங்கிருந்துதானே படமெடுத்து வந்து அவருக்கு அரிய காட்சியைக்கொடுத்தது? உண்மையான பக்தராகிய அவரைத்தீண்டாத நாகம் கோவிலுக்கு துரோகம் செய்யும் பட்டப்பா பட்டரைக்கண்டதும் வெகுண்டு தீண்டி விட்டதோ?

அப்படியானால் நேற்று எனக்கு ரங்கபட்டர் கண்ட அதே காட்சியை பெருமாள் காணவைத்தாரே! கூடவே சி்ன்ன சிரிப்பும் சிரித்துவைத்தாரே!  கலியுகத்தில்  வேறு எவ்விதம் பக்தருக்குக்கடவுள்   பிரசன்னமாகப்போகிறார்? சீறவேண்டிய பாம்பு அடங்கிக்குடை பிடித்ததே அதுவல்லவோ விசேஷம்?
நான் கண்களைத்  துடைத்துக்கொண்டேன்.





****************************************************************







--

 
 
. .
Reply
Forward
 
    
மேலும் படிக்க... "சேஷ வாகனம்.(சிறுகதை)"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.