Social Icons

Pages

Saturday, September 06, 2014

தஞ்சை நகர் கண்ட தன்னிகரற்ற விழா!


திருலோக சீதாராம் .



தமிழ் வாழும் இடமெல்லாம் இவர் புகழ்வாழ்ந்துகொண்டிருக்கிறது.

 பாரதியைப்போல குறைவான நாட்களே வாழ்ந்தாலும் தமிழுக்கு நிறைவான பணி செய்த மாகவிஞர்

. உயரத்தில் வாமனர், உள்ளத்தில் ஓங்கி உலகளந்தவர்

1917-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி பிறந்தார் . திருவையாறு லோகநாத சாஸ்திரியின் மகனாகப் பிறந்தசீதாராம், திருவையாறு ஊரின் முதல் எழுத்து "திரு'வையும், தந்தையின் பெயரில் உள்ள "லோக'த்தையும் சேர்த்துக்கொண்டார்.

'ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போது எனக்குநெருங்கிய நண்பர்கள் பட்டாளத்தில் அகிலன், சுகி, திருலோக சீதாராம்,A.S..ராகவன்(என் தந்தையார் )
,ஸ்ரீரங்கம் நரசிம்மன், ராமகிருஷ்ணன் பின்னாளில் சுஜாதாவான ரங்கராஜனும் அடக்கம்' என்று வாலி அடிக்கடி சொல்லுவார் தனது பேட்டிகளில் அதிலும் திருலோகசீதாரமைப்பற்றி அதிகம் புகழ்ந்து எழுதி இருக்கிறார்.


ஒருமுறை கோயம்புத்தூரில் சன்மார்க்க சங்க விழாவில், சுத்தானந்த பாரதியார், ""இவர் சாமான்யப்பட்டவரல்லர், திரிலோக மின்சாரப் புயல், திரிலோக சஞ்சாரி'' என்று கூறிப் பாராட்டினார். திரிலோக சஞ்சாரியாக அவர் பல ஊர்களுக்குப் பலரைக் காணச் செல்வார். ஓரிடத்திலேயே இருக்கமாட்டார்.


தன் கருத்தைச் சுவையாக வெளிப்படுத்த "தேவசபை' என்னும் அமைப்பை நிறுவினார். இருபது, முப்பது பேர்தான் கூடுவர். இதையே அவர் "அமரர் சங்கம்' என்றார்.

திருப்பராய்த்துறை காவிரிக் கரையில் தொடங்கப்பட்ட அந்தத் திருக்கூட்டங்களில் அவர் பேசக் கேட்டவர்கள் பாக்கியவான்கள்.
திருலோகம், மகாகவியைப் பரப்புவதை மட்டும் தம் லட்சியமாகக் கொள்ளவில்லை. மகாகவி பாரதியின் மறைவுக்குப் பிறகு செல்லம்மாள் பாரதி, திருச்சி-தில்லை நகரில் வசித்து வந்தார். அங்கு பாரதி குடும்பத்தாரின் நலன்களையும் கவனித்துக்கொள்வதைத் தன் கடமையாகக் கொண்டார்.

திருலோக சீதாராம் பாரதியின் துணைவியாரைக் கடைசி வரையில் தன் தாயாகவே ஆதரித்து வந்தவர் கவிஞரின்  மடியில் தலைவைத்தபடியேதான்   தன் கடைசிப்பயனத்தை முடித்தார்  பாரதியின் துணைவியார்.

அவருடைய எண்ணங்களின் தொகுப்பு, "இலக்கியப் படகு' என்ற நூலாக வெளிவந்திருக்கிறது. அவை, "சிவாஜி' இதழில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. அது ஒன்றுதான் ஓரளவுக்கு அவர் வாழ்க்கை லட்சியத்தை இந்தத் தலைமுறைக்கு விவரிக்கிறது.


ஐம்பத்தி அறு ஆண்டுகளே வாழ்ந்த‌. .திருலோகம் எத்தகைய பொருளானாலும்  குறிப்பு ஏதுமில்லாமல் பேசத் தொடங்கிவிடுவார்.

திருச்சி தமிழ்ச் சங்கமானாலும் சரி; கொல்கத்தா தமிழ்ச் சங்கமானாலும் சரி, அவர் பேசும் தலைப்புக்குக் குறிப்பு ஏதும் தயாரிக்க மாட்டார். மடைதிறந்த வெள்ளம், சொல்மாரி என்பார்களே அதைப்போன்றே பேச்சமையும்

திருச்சியிலிருந்து எழுத்தாளர் ஏ.எஸ்.ராகவனுடன் எஸ்.எஸ்.வாசனைச் சந்திக்கச் சென்று, தன் சொல்லாற்றலால் சம்மதிக்க வைத்ததோடு, வாசன் வரலாற்று புகழ்மிக்க சொற்பொழிவை நடத்த வைத்த திறமை,


அவருடைய சொல்லாற்றலை - பாரதியைப் பற்றிய புலமையை அறிந்த எஸ்.எஸ்.வாசன், ஆனந்த விகடனில் தொடர்ந்து எழுதச்சொன்னார். 100 கட்டுரைகள் எழுதவேண்டும் என்ற லட்சியத்துடன் தொடங்கி, 23 கட்டுரைகளுக்கு மேல் எழுதமுடியவில்லை. அக்கட்டுரைகள், "புதுயுகக் கவிஞர்' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்திருக்கிறது.
36 ஆண்டுகள் "சிவாஜி' இதழை இடைவிடாமல் நடத்தினார். இறுதியாக "கவிஞர் அச்சகம்' என்னும் அச்சகத்தை ஏற்படுத்தி நூல்களை அதில் அச்சிட்டு வெளியிட்டார்

.
திருலோக சீதாராமின் உயிர் நண்பர் அறிஞர் T.N..ராமச்சந்திரன் ஆங்கிலக் கவிதையில் மிக்க புலமை பெற்றவர். பாரதியை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியவர். திருலோக சீதாராமைப் பற்றி உள்ளும் புறமும் சொல்லக்கூடியவர் அவர். கவிஞர் திருலோக சீதாராம் எழுதிய "கந்தர்வ கானம்' என்னும் ஒப்பற்ற காவியத்துக்கு முன்னுரையும் விரிவான அணிந்துரையும் எழுதியுள்ளார். அணிந்துரையில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்

:
                                               சேக்கிழார் அடிப்பொடி        T.N..ராமச்சந்திரன்



""எல்லாம் மேல்நாட்டுக் கவிதையின் தாக்கம்' என்று இந்நாளில் எளிதில் சொல்லிவிடுகிறார்கள். ஆனால், திருலோகம் எழுதியுள்ள கந்தர்வ கானத்தில் கருத்தும் சொற்றொடரும் அப்படி அப்படியே ஆங்கிலக் கவி மேதைகளின் கவிதைகளில் இருக்கின்றன என்ற வியப்பான செய்தியைப் படிக்கும்போது, ஆங்கில அறிவு போதுமானதாக இல்லாத திருலோகத்தின் கவிதை கருத்துகள் பிரான்ஸின் தாம்ஸனோ, டி.எஸ்.எலியட்டோ கூறியவற்றை நம் கவிஞர் எவ்வாறு கூறினார்? (1967). கவிஞர் திருலோகம் சொல்வதுபோல் நேரில் பாடிக் காட்டுவதிலும் கேட்பதிலும்தான் கவி இன்பம் முழுமை பெறுகிறது. கந்தர்வ கானத்தைக் கவிஞர் பாடியதைக் கேட்ட பிரமிப்பு எவ்வளவு முறை படித்தாலும் வராது என்பது உண்மையே''

ஹெர்மன் ஹெஸே எழுதியதை  தமிழில் படிக்க வேண்டும் என்றால் ‘சித்தார்த்தா’ இருக்கிறது. ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட சித்தாந்தாவைக் கவிஞர், தமிழில் மொழிபெயர்த்தார். மூலம் எது, மொழியாக்கம் எது என்று பாகுபாடு சொல்ல முடியாத அளவுக்கு மொழிபெயர்ப்பு ஆற்றல் அவருக்குள் இருந்தது.. ‘கவித்துவ’ நடையில் செய்து தந்திருக்கிறார். இந்த ‘கவித்துவ’ நடையும் ஆத்மீக விஷயமும் இந்திய நாவலை படிப்பது போன்ற தன்மையை ஏற்படுத்துவதால் சிலர் விரும்பிப் படித்திருக்கிறார்கள். பலர் படிக்க வேண்டும். ஒரு சிறந்த நாவல் இது.

திருலோக சீதாராமை 20-ஆம் நூற்றாண்டின் புரட்சிக் கவிஞர் - புதுமைக் கவிஞர் - புதிரான கவிஞர் - பாரதி புகழ்ப் பரப்பிய கவிஞர் - பிறவி மேதை என்று எதைச் சொல்லிப் பாராட்டுவது?


--
.திருலோகம் அவர்களின் ஆப்த நண்பரும் அவரை தம் குருவாகவும் வரிக்கும்  தஞ்சையின் பிரபலதமிழ் அறிஞர் சேக்கிழார் அடிப்பொடி என்னும் திரு டி என் ஆர் அவர்கள், குருவின் அத்தனை கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த நூல் வெளியீட்டுவிழாவிற்கு  இம்மாதம் sep 2ம்தேதி தஞ்சைக்கு நேரில் செல்ல  வாய்ப்புகிட்டியது.


அதுவும்  அவர்தம்  புத்திர செல்வங்கள் அனைவருடனும்   ஒரே வாகனத்தில்  பெங்களூரிலிருந்து பலமணி நேர இனியப்பயணமாக அமைந்தது.


(படத்தில் மாகவிஞர் திருலோக சீதாரம் அவர்களின் வாரிசுகள்)

தங்கள் தந்தை  கூறிய பாரதி  நினைவுகளை  கவிஞரின்   வாரிசுகள் பகிர்ந்துகொண்டதும்,  பயணத்தில் பாரதி பாடல்களை அவர்கள்பாடிக்கொண்டு வந்ததும் மறக்க முடியாதது !

(இவர் இந்திரா  திருலோகத்தின் மூன்றாம் மகள்
 செல்லம்மாள் பாரதிதான் இவரை முதலில்கையிலெடுத்து உச்சிமுகர்ந்தாராம்.


இந்த நூலை  ஆர்வமுடனும்  பொறுப்புடனும் படித்து அதனை திறனாய்வு விளக்கமாக சொற்பொழிவு நடத்தியது  சொர்ணமால்யா.




 நடிகை என்ற ஒருமுகத்தை மீறிய  பன்முகத்திறமை  இவரிடம்  புதைந்துகிடப்பதை அன்றைய  பேச்சு புரியவைத்தது. சைவத்திருமுறையில்   சொர்ணமால்யாவுக்கான  ஆர்வம் காரணமாக சேக்கிழார் அடிப்பொடி என்னும்  திரு டி என் ராமசந்திரன் அவர்களிடம் பயிற்சிபெற்று அவர்மூலமாக திருலோகசீதா ராமைப்பற்றி டி என் ஆர் எழுதிய கவிதை நூலுக்கு  மிக சிறப்பான விமர்சனத்தை  அழகிய தமிழ்  ஊடேஆங்கிலத்த்லும்  அளித்தார். சொர்ணமால்யாவின் சொல் ஆளுமை  அயரவைத்தது உண்மைதான்.

நூலின் பெயர்
THE POETICAL WORKS OF
THIRULOKA SITARAM
WITH
TRANSLATION AND NOTES
BY
SEKKIZHAR ADI-P-PODI TNR




424 பக்கங்களில் பல கவிதைநதிகளின் சங்கமாய் தமிழ்க்கடல் பரந்துள்ளது .

தி என் ஆர் அவர்கள்  முன்னுரையில் இப்படி எழுதி இருக்கிறார்
Tiruloka Sitaram is the spiritual son of Subramanya Bharathi. He was endowed with a retentive power which baffled the world of literati. His way of recitation was peerless. The home of poetry is in the listening ear. From there it slides into the heart to abide there sempiternally
Said an anonymous poet:
Verses are children of the lyre;
They should be sung; not heard.

I am getting old. I treasure the dictum of Robert Browning which says:

"Grow old along with me!
The best is yet to be......."


  .
  . ஆங்கில வார்த்தைகள்  மிக அரிதான  சொற்பிரயோகங்கள்.  வாசிக்கையில் பிரமிப்பில் ஆழும் மனது ..நம்மால்  வேறென்ன செய்யமுடியும்?

உதாரணத்திற்கு சில  அளிக்கிறேன் .


ஒளியமுதம்  என்ற தொகுப்பில் ஒரு கவிதை பாடல்  திருலோகம் அவர்களுடையது இதன் ஆங்கிலமொழிபெயர்ப்பு   திரு தி என் ராமசந்திரன்.


கவிந்த இருளில் மத்திட்டுக்
காலைவரையிற் கடைந்ததனால்
குவிந்து திரண்ட வெண்ணையெனக்
கொள்ளை ஒளியைக்காணமம்மா


In the bowl of night inverted
Churning was on till day did dawn
And now behold the 'bundant light
That like butter floats on high.

அமரகவிஞர் திருலோக சீதாரமின் கந்தர்வகானம் கவிதைத்தொகுப்பிலிருந்து....

பொழுது புலர்ந்தது பொதியை முடியிற்
கீற்றுப் பிறையாய்க் கிடந்த சுனையின்
கீழே மூலை மலைக் குகை பிளந்த
பேழ்வாய் எயிற்றுப் பிறங்கிய புனலும்
தொழுது வணங்கித்  தோய்ந்தது மண்ணில்.

A Poem From Gandharvaganam

          The Dawn
The day dawned on Pothika's peak
And 'neath the spring that lay a crescent
Was the ragged mountain-cave,
Its mammoth mouth wide agape
'Twixt whose teeth, solemn and devout
Flowed the flood onto the plain.


செப்டம்பர் 2  சேக்கிழார்  அடிப்பொடியின்  எண்பதாவதுபிறந்த நாளாகவும் அமைந்து விட்டிருந்தது. சிவப்பழமாக பரசிவவெள்ளம்   அகத்திலும் முகத்திலும் ஜொலிக்க  அமர்ந்திருந்தார்

(சதாபிஷேக தம்பதிகளுடன்  நான்..)

 .காலையில் பிறந்தநாள் வைபவம். மதியம் நூல் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி. செவிக்கும் வயிற்றுக்கும் அருமையான உணவு

பிரேமா நந்தகுமார்  அவர்களும்  மாலை நூல் வெளியீட்டுவிழாவிற்குவருகை தந்து சிறப்பித்தார்.

ப்ரேமா நந்தகுமார்  (எழுத்தாளர் ஆன்மீகவாதி சிறந்த சொற்பொழிவாளர் .   குமுதினி என்றபிரபல எழுத்தாளரின் மருமகள் .(Prema Nandakumar is a renowned Sanskrit scholar and Indologist)




என்ன சொல்ல  வாய் அடைக்கிற‌து சான்றோர் பெருமக்கள் வரிசையில்  நிற்பவர் அல்லவா திருமதி பிரேமா நந்தகுமார்! என்ன ஒரு எளிமை என்ன ஒரு  அறிவுத்திறமை!அவர் அருகில் சிலமணி நேரம் அமர்ந்த பெருமையும் மகிழ்ச்சியும் 'தவம் பலித்தது' என்று என்னை அவரிடமே வாய்விட்டு சொல்லவைத்துவிட்டது!
.
டி என் ஆர்  அவர்கள்  புகழை உரைப்பது  உலகிற்கு சூரியனைப்பற்றி சொல்வதுபோலத்தான். தஞ்சையின் பிரபல வக்கீல். தமிழும் ஆங்கிலமும் நன்கறிந்தவர். தமிழ் இவருக்கு தாய் மடி. ஆங்கிலமோ  இவருக்கு எடுபிடி.
அவரைப்பற்றிய  யுட்யுப் சுட்டி  அளித்துள்ளேன் தமிழ்மீது பற்றுகொண்டோர் அனைவரும் அவசியம் அதைக்காணவேண்டும்

அந்த நாளில் அதாவது  70களில் சித்திரக்கவி மாலை   பாடிய  திருவையாற்றுக்கவிஞர்  புலவர்  அப்துல்கபூருக்கு    சேக்கிழார் அடிப்பொடியான  திரு  டி என் ராமசந்திரன்  ஒரு வீட்டையே பரிசளித்தார்.
சங்க காலத்தில் மட்டுமா புலவரும்  புரவலரும் இருந்தனர்?இப்போதும் இருந்துகொண்டுதான்  உள்ளனர் தி என் ஆர் அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக நிற்கிறார்
 .
இருக்கின்றபோதுதான் பாரதியைப்பலர் அறிந்து பாராட்டவில்லை இறந்தபின் அவரது பெருமைகளை தமிழ்  உலகிற்கு எடுத்துரைக்கும் பெருமக்களை அவர்களின் படைப்புகளை  நாம் ஆதரிக்கவேண்டியது தமிழர்களின் கடமை. தமிழுக்காக வாழ்பவ‌ர்களை  வாழும் நாட்களில் வண‌ங்குவதே  நமக்குப் பெருமை.

டி என் ஆர்  பற்றிய குறும்படம் இங்கே திருரவி சுப்ரமண்யம் தயாரிப்பில்..

https://www.youtube.com/watch?v=__pasa5tskc

மேலும் படிக்க... "தஞ்சை நகர் கண்ட தன்னிகரற்ற விழா!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.