அன்ன வயல் புதுவை ஆண்டாள், அரங்கற்குப்
பன்னு திருப் பாவைப் பல் பதியம்! – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு!
உய்யக்கொண்டார் அருளிய இந்தப்பாசுரத்தை சொல்லாமல் மார்கழி
கிடையாது.அதாவது மார்கழித்திங்கள் என ஆரம்பிக்கும் திருப்பாவையின் முப்பதுபாசுரங்கள் தொடராது.
அன்னங்கள் நடைபயிலும் வயல்களை உடைய ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள் பாடிக்கொடுத்தவள் சூடிக்கொடுத்தவள் என்கிறார் அவளைச்சொல்லு என்கிறார். அவள் அருளிய பாசுரங்களை சொல்லவேண்டுகிறார்.அவள் புகழைப்பாடுவோமாக என்பதும்
’ சொல்லு ’என்ற சொல்லுக்கு உண்டு. சொல் ஒன்று பொருள் பல அல்லவா!
முதற்பாடலில் அஷ்டாக்ஷர மந்திரத்தைக்கொண்டுவந்துவிட்டா ள் பாருங்கள் வேறெங்கும் நாராயணன் வரக்காணோம்! நமக்கே பறை தருவான்என்றும் அடித்துச்சொல்லிவிட்டாள்! பக்தர்
ஒன்று கேட்டுவிட்டால் பரமன் மறுப்பானோ
அதிலும் ’நாராயணனே’ என்ற சொல்லில் அவராகவே அல்லது அவர் மட்டுமே என்று இருபொருள் வரும்படி முதல்பாட்டிலேயே ஐஸ்மலையைத் தூக்கி அண்ணல்மீது போட்டுவிட்டாள் , முப்பதாம் பாட்டில் அவர் உருகி நின்றுவிடப்போவது உறுதி என அந்தபெண்பாவைக்குத்தெரிந்திருக் கிறது. தெய்வ நம்பிக்கை இதுதானே!
எப்போதுமே ஒரு நூலுக்கு முதல் பகுதி சிறப்பாக இருக்கவேண்டும்.! ஆரம்பமே அமர்க்களமாய் இருக்கவேண்டும்.
ஒரு காவிய நூலுக்கு முதல்பாடல் கம்பீரமாக இருக்கவேண்டும்
.கம்பன் ‘உலகம் யாவையும்; என ஆரம்பிக்கும்போதே நாம் ஸ்திரமாக உட்கார்ந்து அதனை கவனிக்க ஆரம்பிக்கிறோம். உயர்வற உயர்நலம் என்று நம்மாழ்வார் பெருமான் அருளும்போது அந்த உன்னத நிலைக்கே போய்விட்ட மகிழ்ச்சி உடலில்பரவுகிறது.’தர்ம க்ஷேத்ரே குருக்ஷேத்ரே’ என கீதை ஆரம்பிக்கும் போது விழிகள் வியப்பிலும் ஆர்வத்திலும் படப்படக்கின்றன. அப்படித்தான் ஆண்டாள் ‘மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாள்’ என ஆரம்பிக்கும்போது மனத்தில் இருள் விலகி குளிர்மதியின் ஒளி ஊடுருவுகிறது.!சிறுமீர்கள் இளஞ்சிங்கம் எனும்போது இளமைஊஞ்சலாடுகிறது! எக்காரியம் ஆயினும் சுத்தம் முக்கியம் செய்வன திருந்த செய்! நீராட அழைப்பது இதற்குத்தான் போலும்!
நாங்கள் நீராடி நோன்பிற்குத்தயாராகிவிட்டோம் தாயே அடுத்து இந்த வையத்து வாழும் நாங்கள் செய்யவேண்டிய கடமைகளை சொல் ஆண்டாளம்மா!