Social Icons

Pages

Friday, December 08, 2006

லூட்டி(தேன்கூடு போட்டிக்கு)

"இத பாருங்க என்னால இனிமேலும் பொறுத்துக்க முடியாது..இந்த நந்துவோட தொல்லை தாங்கமுடில்ல...பேசாம அவன ப்ளேஹோம்ல சேர்த்துடவேண்டியதுதான்.. "

"என்னவிஜி இப்படிபேசறே? அஃப்டரால் அவனுக்கு ரண்டரை வயசுதான் இந்த வயசுல குழந்தங்க துறுதுறுன்னுதான் இருக்கும்.. எப்டியும் மூணுவயசுல நர்சரில போடப் போறோம் அதுவரை வீட்ல எஞ்சாய் பண்ணட்டுமே குழந்தை? "

"ஆனாலும் இவன் லூட்டி தாங்கமுடில்லயே? கீழ ஒருசாமான் வைக்கமுடில்ல...எல்லாத்தியும் உடச்சி நொறுக்கிட்றான் நேத்து என்ஃப்ரண்ட் சுமி விட்டுல போயி மானத்தை வாங்கிட்டான். "

"என்ன செஞ்சான் அப்டி? "

"அவங்க ஆசைஆசையா வாங்கி டீபாய் மேல வச்சிருந்த க்ருஷ்ணர் பொம்மைய எடுத்துக் கீழ போட்டு உடச்சிட்டான். குறும்பா கைதட்டி சிரிச்சிக்கிறான் தனக்குத் தானே.. அவங்க ஒருமாதிரி சொன்னாங்க 'விஜிபையன்
லூட்டி அடிக்கறான் , சரியானஎமன் 'அப்டின்னு. "

"என்னவோ எனக்கு என் மகன் சமத்தா தான் தெரியறான்..ஆபீஸ் விட்டு வந்தது முதல் என்மடில அமைதியா உக்காந்துட்டுஇருக்கானே...ஒரு பொருளையும் எடுக்கல..உடைக்கல...குறும்புத்தனம் சேட்டை எதுவும் காணோமே? நீ சும்மா அவன் மேல பழி போடறே? "

"எல்லா குழந்தைகளும் இப்படிதான் அப்பா எதிர்ல நல்லாவே ஆக்ட் பண்ணுதுங்க பகலெல்லாம் அம்மாக்கள் உயிரை வாங்கி எடுத்திட்டு சாயங்காலம் அப்பா வந்ததும் சாதுமாதிரி உக்காந்துட்டு நம்ம பேச்சை பொய் பண்ணுதுங்க. சரிசரி ,இந்தாங்க காபி. "

"என்ன விஜி காபில உப்பூகரிக்குது? "

"எல்லாம் உங்க புத்திரபாக்கியத்தின் வேலைதான். சமையல்மேடைமேல எம்பி டப்பாக்களைஎடுத்துஏதாவது லூட்டி செய்துடறான். அதை எடுத்து இதுல இதை எடுத்து அதுலன்னு விஷமம் தாங்கலஎனக்கு.. சுமி சொன்னாப்ல எமனா வந்து எனக்குபொறந்துருக்கான்.."

"குழந்தைய திட்டாத விஜி."

"நீங்கதான் ஒருநாள் வீட்டைப் பாத்துக்குங்களேன், நான் அபீஸ் போய்வரென் ..அப்றோம் தெரியும் இவன் அட்டகாசம்.. இவன் ஒருத்தன் எனக்கு ஜன்மத்துக்கும் போதும்.".


"அதான் உனக்கு ரண்டாவதா குழந்தையே பொறக்க வாய்ப்பில்லேனு டாக்டருங்க சொல்லிட்டாங்களே ..சரிஅதைவிடு விஜி சினிமா எதும் போகலாமா இன்னிக்கு? "

"இந்த வாலு விடுவானா? நினைவிருக்கா, வேட்டையாடுவிளையாடு முதல்பாதி நீங்களும் கடைசி பகுதி நானும்பாத்திட்டு வீடுவந்ததும் கதை கேட்டு புரிஞ்சிட்டோம்..நந்து அங்க வந்து உரக்க ஏதோ பாட்றான்..முன் சீட்டுக்கார லேடீஸ் தலைல இருக்கற பூவை பிச்சி எடுக்கறான். தியேட்டர்ல எல்லாரும் உச்சு உச்சு'ங்கறாங்க...மானம் போகுது.. ஒரு நிமிஷம் அடங்கறதில்ல...அத்தனை சேட்டை..பாருங்க முகத்துலயே டன் கணக்குல குறும்பு வழியுது? எனக்கு நந்துவோட
நாள் முழுக்க ஓடி அவன் குறும்பை சமாளிச்சி களைச்சிப் போயிட்றேன்அமைதியா கொஞ்ச நேரமாவது வீட்ல இவன் சத்தம் லூட்டி இல்லாம நான் இருக்கணும்.."

"சரி ... இன்னிக்கு இவனை நைட் 10மணிவரை உன்கண்லயே காட்ல போதுமா?நான் பாத்துக்கறேன்."

"ரொம்ப சந்தோஷம் முடிஞ்சா உங்களுக்கு கோயிலே கட்டுவேன் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு தர்ரதுக்கு.... முதல்ல உங்க மகனை அழைச்சிட்டுப் போய்ச்சேருங்க. "

கணவனையும் மகனையும் அனுப்பிவிட்டு ஹாலை சுத்தம் செய்யஅரம்பிக்கிறாள் விஜி மூலைக்கொன்றாய் பொம்மைகள் செய்தித் தாள்கள் என்று கிடந்தன.

எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி விஜி நிமிர்ந்தபோது மணி எட்டு ஆகிவிட்டது.

நிம்மதியாய் ஷவரில் ஷாம்பூபோட்டு குளித்தாள்.தலை முடியை வாரி அலைஅலையாய் முதுகில் பரப்பிக்கொண்டாள்.

நிதானமாய் முகத்திற்கு ஒப்பனை செய்து கண்ணாடியில் பார்த்தபோது முப்பதுவயதில் ஆறுவயது குறைந்த மாதிரி இருந்தது.

வீடே அமைதியாய் அதது வைத்த இடத்தில் அழகாய் இருந்தது .அந்த சூழ்நிலையை ரசித்து பார்த்தபடி ஹாலில் சோபாவில் அமர்ந்தாள்.

கண்ணைமூடி ஆனந்தமாய் அப்படியே உறங்க ஆரம்பித்தவளை காலிங்க் பெல் ஓசை எழுப்பியது.

"யாரு?"

கேட்டபடி கதவைத்திறந்தவள் கதவுக்கு வெளியே நின்ற நபரைப் பார்த்து குழப்பமாய் கேட்டாள், 'யா...... யார் நீங்க? யாரைப் பாக்கணும்?'

"மேடம் இது சிவகுமார் வீடுதானே? "

"ஆமா நான் அவர் மனைவி விஜி என்ன விஷயம் நீங்க யாரு?"

"மே.... மேடம்... உங்க ஹஸ்பண்ட் கொஞ்சமுன்னாடி ரோட் க்ராஸ் செய்யறப்போ கைல குழந்தயோட ஒரு கார்ல அடிபட்டு கிழவிழுந்துட்டாரு..விபத்தாயிடிச்சி .."

'அய்யோ.. '

"சாருக்கு பலத்த அடீ இல்ல....... அ... ஆனா.... குழந்த...."

"அய்யோ குழந்தைக்கு என்ன ஆச்சு? "

"நேர்ல வந்து பாருங்கம்மா என்னால் இதுக்கு மேல சொல்லமுடியாது."

வந்தவனின் குரல் உடைந்துவரவும் திகிலோடு விஜி அவனைப்பார்த்தாள்.
அவனைத் தொடர்ந்து அந்த விபத்து நடந்து இடத்திற்கு சென்றாள்

அங்கே...

அவளது அருமைமகன் நந்து ரத்தவெள்ளத்தில் கிடந்தான்.

"பாவம் பச்சபுள்ள..ஓடி ஆட வேண்டிய வயசுல அப்படியே அடங்கிக் கிடக்கான் பாருங்க..யாரு பெத்த புள்ளையோ? "

"அய்ய்யோ..இது என் மகன் நந்தூ..... கண்முழிடா நந்தூ இப்படி கிடக்காத இந்த அமைதி என்னைக் கொன்னுடும்டா.... நந்தூ நீ இப்படி ஒரே இடத்துல கிடக்கவேணாம்.... உன் லூட்டியும் விஷமமும் குறும்பும் எனக்குத் தேவைடா கண்ணா.. "

" விஜி என்னாச்சு? ஏன் இப்டி கெட்ட கனவு கண்ட மாதிரி திகிலா எழுந்து உக்காந்துருக்கே? நான் இப்பதான் நந்துவோட வெளியேபோய் வரேன்... நீ சொன்னது உண்மைதான்...போன இடத்துல ஒரு நிமிஷம் சும்மா இருக்கல..ஓட்றான்..குதிக்கறான்..கடைக்கு கூட்டிப் போனா அங்க சாக்லேட் பாட்டிலை உடைச்சிட்டான்...ஃப்ரண்ட் வீடு கூட்டிப் போனேன் அங்க சின்ன பசங்களை சீண்டிவிடறான்..அவங்க வீடு நீட்டா நல்லா இருக்கு நந்து போயி எல்லாத்தியும் கலைச்சிட்டான் ...அவங்க வீட்டு அமைதியே இவனால் குலைஞ்சி போயிடிச்சி... "

"போதும் நிறுத்துங்க...குழந்தைன்னா குறும்புத் தனமாத் தான் இருக்கும் பொருள்களை எடுத்துப் புரட்டிப்போடும்... வீடென்ன ம்யூசியமா அமைதியாயும், அப்படியே வச்சது வச்ச இடத்துல இருக்கவும்? குழந்தையோட குறும்பை ரசிக்கணுங்க,,,இதெல்லாம் அவங்க வளர்ந்த பிறகு நமக்குக் கிடைக்குமா என்ன? "

சிவகுமார் தன் மனவியை திகைப்புடன் பார்க்க ஆரம்பித்தான்.
***********************************************************************************************
மேலும் படிக்க... "லூட்டி(தேன்கூடு போட்டிக்கு)"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.