Social Icons

Pages

Friday, December 08, 2006

லூட்டி(தேன்கூடு போட்டிக்கு)

"இத பாருங்க என்னால இனிமேலும் பொறுத்துக்க முடியாது..இந்த நந்துவோட தொல்லை தாங்கமுடில்ல...பேசாம அவன ப்ளேஹோம்ல சேர்த்துடவேண்டியதுதான்.. "

"என்னவிஜி இப்படிபேசறே? அஃப்டரால் அவனுக்கு ரண்டரை வயசுதான் இந்த வயசுல குழந்தங்க துறுதுறுன்னுதான் இருக்கும்.. எப்டியும் மூணுவயசுல நர்சரில போடப் போறோம் அதுவரை வீட்ல எஞ்சாய் பண்ணட்டுமே குழந்தை? "

"ஆனாலும் இவன் லூட்டி தாங்கமுடில்லயே? கீழ ஒருசாமான் வைக்கமுடில்ல...எல்லாத்தியும் உடச்சி நொறுக்கிட்றான் நேத்து என்ஃப்ரண்ட் சுமி விட்டுல போயி மானத்தை வாங்கிட்டான். "

"என்ன செஞ்சான் அப்டி? "

"அவங்க ஆசைஆசையா வாங்கி டீபாய் மேல வச்சிருந்த க்ருஷ்ணர் பொம்மைய எடுத்துக் கீழ போட்டு உடச்சிட்டான். குறும்பா கைதட்டி சிரிச்சிக்கிறான் தனக்குத் தானே.. அவங்க ஒருமாதிரி சொன்னாங்க 'விஜிபையன்
லூட்டி அடிக்கறான் , சரியானஎமன் 'அப்டின்னு. "

"என்னவோ எனக்கு என் மகன் சமத்தா தான் தெரியறான்..ஆபீஸ் விட்டு வந்தது முதல் என்மடில அமைதியா உக்காந்துட்டுஇருக்கானே...ஒரு பொருளையும் எடுக்கல..உடைக்கல...குறும்புத்தனம் சேட்டை எதுவும் காணோமே? நீ சும்மா அவன் மேல பழி போடறே? "

"எல்லா குழந்தைகளும் இப்படிதான் அப்பா எதிர்ல நல்லாவே ஆக்ட் பண்ணுதுங்க பகலெல்லாம் அம்மாக்கள் உயிரை வாங்கி எடுத்திட்டு சாயங்காலம் அப்பா வந்ததும் சாதுமாதிரி உக்காந்துட்டு நம்ம பேச்சை பொய் பண்ணுதுங்க. சரிசரி ,இந்தாங்க காபி. "

"என்ன விஜி காபில உப்பூகரிக்குது? "

"எல்லாம் உங்க புத்திரபாக்கியத்தின் வேலைதான். சமையல்மேடைமேல எம்பி டப்பாக்களைஎடுத்துஏதாவது லூட்டி செய்துடறான். அதை எடுத்து இதுல இதை எடுத்து அதுலன்னு விஷமம் தாங்கலஎனக்கு.. சுமி சொன்னாப்ல எமனா வந்து எனக்குபொறந்துருக்கான்.."

"குழந்தைய திட்டாத விஜி."

"நீங்கதான் ஒருநாள் வீட்டைப் பாத்துக்குங்களேன், நான் அபீஸ் போய்வரென் ..அப்றோம் தெரியும் இவன் அட்டகாசம்.. இவன் ஒருத்தன் எனக்கு ஜன்மத்துக்கும் போதும்.".


"அதான் உனக்கு ரண்டாவதா குழந்தையே பொறக்க வாய்ப்பில்லேனு டாக்டருங்க சொல்லிட்டாங்களே ..சரிஅதைவிடு விஜி சினிமா எதும் போகலாமா இன்னிக்கு? "

"இந்த வாலு விடுவானா? நினைவிருக்கா, வேட்டையாடுவிளையாடு முதல்பாதி நீங்களும் கடைசி பகுதி நானும்பாத்திட்டு வீடுவந்ததும் கதை கேட்டு புரிஞ்சிட்டோம்..நந்து அங்க வந்து உரக்க ஏதோ பாட்றான்..முன் சீட்டுக்கார லேடீஸ் தலைல இருக்கற பூவை பிச்சி எடுக்கறான். தியேட்டர்ல எல்லாரும் உச்சு உச்சு'ங்கறாங்க...மானம் போகுது.. ஒரு நிமிஷம் அடங்கறதில்ல...அத்தனை சேட்டை..பாருங்க முகத்துலயே டன் கணக்குல குறும்பு வழியுது? எனக்கு நந்துவோட
நாள் முழுக்க ஓடி அவன் குறும்பை சமாளிச்சி களைச்சிப் போயிட்றேன்அமைதியா கொஞ்ச நேரமாவது வீட்ல இவன் சத்தம் லூட்டி இல்லாம நான் இருக்கணும்.."

"சரி ... இன்னிக்கு இவனை நைட் 10மணிவரை உன்கண்லயே காட்ல போதுமா?நான் பாத்துக்கறேன்."

"ரொம்ப சந்தோஷம் முடிஞ்சா உங்களுக்கு கோயிலே கட்டுவேன் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு தர்ரதுக்கு.... முதல்ல உங்க மகனை அழைச்சிட்டுப் போய்ச்சேருங்க. "

கணவனையும் மகனையும் அனுப்பிவிட்டு ஹாலை சுத்தம் செய்யஅரம்பிக்கிறாள் விஜி மூலைக்கொன்றாய் பொம்மைகள் செய்தித் தாள்கள் என்று கிடந்தன.

எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி விஜி நிமிர்ந்தபோது மணி எட்டு ஆகிவிட்டது.

நிம்மதியாய் ஷவரில் ஷாம்பூபோட்டு குளித்தாள்.தலை முடியை வாரி அலைஅலையாய் முதுகில் பரப்பிக்கொண்டாள்.

நிதானமாய் முகத்திற்கு ஒப்பனை செய்து கண்ணாடியில் பார்த்தபோது முப்பதுவயதில் ஆறுவயது குறைந்த மாதிரி இருந்தது.

வீடே அமைதியாய் அதது வைத்த இடத்தில் அழகாய் இருந்தது .அந்த சூழ்நிலையை ரசித்து பார்த்தபடி ஹாலில் சோபாவில் அமர்ந்தாள்.

கண்ணைமூடி ஆனந்தமாய் அப்படியே உறங்க ஆரம்பித்தவளை காலிங்க் பெல் ஓசை எழுப்பியது.

"யாரு?"

கேட்டபடி கதவைத்திறந்தவள் கதவுக்கு வெளியே நின்ற நபரைப் பார்த்து குழப்பமாய் கேட்டாள், 'யா...... யார் நீங்க? யாரைப் பாக்கணும்?'

"மேடம் இது சிவகுமார் வீடுதானே? "

"ஆமா நான் அவர் மனைவி விஜி என்ன விஷயம் நீங்க யாரு?"

"மே.... மேடம்... உங்க ஹஸ்பண்ட் கொஞ்சமுன்னாடி ரோட் க்ராஸ் செய்யறப்போ கைல குழந்தயோட ஒரு கார்ல அடிபட்டு கிழவிழுந்துட்டாரு..விபத்தாயிடிச்சி .."

'அய்யோ.. '

"சாருக்கு பலத்த அடீ இல்ல....... அ... ஆனா.... குழந்த...."

"அய்யோ குழந்தைக்கு என்ன ஆச்சு? "

"நேர்ல வந்து பாருங்கம்மா என்னால் இதுக்கு மேல சொல்லமுடியாது."

வந்தவனின் குரல் உடைந்துவரவும் திகிலோடு விஜி அவனைப்பார்த்தாள்.
அவனைத் தொடர்ந்து அந்த விபத்து நடந்து இடத்திற்கு சென்றாள்

அங்கே...

அவளது அருமைமகன் நந்து ரத்தவெள்ளத்தில் கிடந்தான்.

"பாவம் பச்சபுள்ள..ஓடி ஆட வேண்டிய வயசுல அப்படியே அடங்கிக் கிடக்கான் பாருங்க..யாரு பெத்த புள்ளையோ? "

"அய்ய்யோ..இது என் மகன் நந்தூ..... கண்முழிடா நந்தூ இப்படி கிடக்காத இந்த அமைதி என்னைக் கொன்னுடும்டா.... நந்தூ நீ இப்படி ஒரே இடத்துல கிடக்கவேணாம்.... உன் லூட்டியும் விஷமமும் குறும்பும் எனக்குத் தேவைடா கண்ணா.. "

" விஜி என்னாச்சு? ஏன் இப்டி கெட்ட கனவு கண்ட மாதிரி திகிலா எழுந்து உக்காந்துருக்கே? நான் இப்பதான் நந்துவோட வெளியேபோய் வரேன்... நீ சொன்னது உண்மைதான்...போன இடத்துல ஒரு நிமிஷம் சும்மா இருக்கல..ஓட்றான்..குதிக்கறான்..கடைக்கு கூட்டிப் போனா அங்க சாக்லேட் பாட்டிலை உடைச்சிட்டான்...ஃப்ரண்ட் வீடு கூட்டிப் போனேன் அங்க சின்ன பசங்களை சீண்டிவிடறான்..அவங்க வீடு நீட்டா நல்லா இருக்கு நந்து போயி எல்லாத்தியும் கலைச்சிட்டான் ...அவங்க வீட்டு அமைதியே இவனால் குலைஞ்சி போயிடிச்சி... "

"போதும் நிறுத்துங்க...குழந்தைன்னா குறும்புத் தனமாத் தான் இருக்கும் பொருள்களை எடுத்துப் புரட்டிப்போடும்... வீடென்ன ம்யூசியமா அமைதியாயும், அப்படியே வச்சது வச்ச இடத்துல இருக்கவும்? குழந்தையோட குறும்பை ரசிக்கணுங்க,,,இதெல்லாம் அவங்க வளர்ந்த பிறகு நமக்குக் கிடைக்குமா என்ன? "

சிவகுமார் தன் மனவியை திகைப்புடன் பார்க்க ஆரம்பித்தான்.
***********************************************************************************************

18 comments:

  1. குழந்தைகளும் குறும்பும் பிரிக்க முடியாதவை..
    அருமையான கதை.

    ReplyDelete
  2. :)

    முதலில் வந்தவை எல்லாமே அப்படியே எங்க வீட்ல நடக்கிற தினசரி கதை .. (எங்க வீட்ல கேமர கீமரா பொருத்தலியே?)

    கொஞ்சம் ட்ரமாட்டிக்கா இருந்தது அந்த கனவு. வேறெதுவும் சொல்லியிருக்கலாமோ?

    உரயாடல்களை "(Double quote)ல் பொதிந்தால் படிக்க எளிதாயிருக்கும். செய்யுங்களேன்.

    வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. கொஞ்ச நேரத்துல நான் பயந்திட்டேன். குறும்புப் பண்ணினதுக்காக ரத்த வெள்ளமா? நல்ல வேளை கனவாக்கிட்டீங்க.

    வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நல்ல கதை...

    குறும்பும் குழந்தையும் சேர்த்து ரசிக்க வேண்டிய விஷயம்...

    வாழ்த்துக்கள்...

    -ராஜ்.

    ReplyDelete
  5. நல்லவேளை...கனவுன்னு சொன்னீங்க. ஒரு நிமிசம் நான் பதறிப் போய்ட்டேன். ஒடனே போன் போட்டு எப்படி இப்படி எழுதப் போச்சுன்னு கேக்க இருந்தேன். கனவாக்க்கித் தப்பிச்சீங்க.

    வள்ளுவரு என்ன சொல்றார்னா...அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ். அந்த வகையில உப்புப் போட்ட காப்பியும் அந்த அப்பாக்கு நல்லாத்தான் இருந்திருக்கனும்.

    ReplyDelete
  6. புன்முறுவலுடன் படித்துகொண்டிருந்த என் முகம் ஒரு நிமிடம் மாறி விட்டது. ரத்த வெள்ளமா... நல்ல வேளை கனவாக்கிட்டீங்க. நல்ல கதை.

    ReplyDelete
  7. nice.வெற்றி பெற வாழ்த்துக்கள்.
    இங்கே எங்க வீட்டிலும் இது தான் கதை.திட்டி முடித்து கொஞ்சநேரத்திலே அவனை தூக்கி கொஞ்சிக்கிட்டு இருப்பேன்..வீட்டில்
    எல்லாரும் எப்ப அம்மாவும் பையனும் சண்டை போடுவாங்க எப்ப சேர்ந்துப்பாங்கன்னு தெரியாம குழம்பி நிப்பாங்க.

    ReplyDelete
  8. Anonymous5:24 PM

    Nalla kathai, vaashthukkal ;)

    ReplyDelete
  9. //குழந்தையோட குறும்பை ரசிக்கணுங்க,,,இதெல்லாம் அவங்க வளர்ந்த பிறகு நமக்குக் கிடைக்குமா என்ன?
    //
    நல்ல கதை! வாழ்த்துக்கள் ஷைலஜா!

    ReplyDelete
  10. சாத்வீகன், ஜீ, ராஜ். முரளி, ஹனீஃப். லட்சுமி. சிபி..வருகைக்கும் விமர்சனத்துக்கும் நன்றி!

    அலெக்ஸ், வீட்டுக்கு வீடு நடப்பதுதானே இதெல்லாம் அதான் அப்படியே எழுதினேன்..நீங்க "உரயாடல்களை "(Double quote)ல் பொதிந்தால் படிக்க எளிதாயிருக்கும். செய்யுங்களேன்"என்றுகுறிப்பிட்டபடி செய்துவிட்டேன் நன்றி.

    ராக்ஸ்! கனவில கூட எனக்கும் குழந்தையை ரத்தவெள்ளத்துல பார்க்கத்துணிவில்லைதான் ஆனாலும் கற்பனை என்பதால் அப்படி எழுத நேர்ந்தது. நன்றி விமர்சித்த உங்களுக்கும்.
    ஷைலஜா

    ReplyDelete
  11. நல்ல கதைதான்! வாழ்த்துக்கள்!!

    குழந்தைக்கு ஏதோ விபத்து என்றதும், ஏதோ பின்னி எடுக்க போறீங்க அப்டின்னு பார்த்தால்...
    கனவு என்றால் வெகு சுமாரான அதிகம் படித்த கதை மாதிரிகளில் ஒன்றாகி விட்டது! பரவாயில்லை. சிக்கலுக்கு எந்த மாதிரி தீர்வு என்பதில் தான் கதையே இல்லையா? சிக்கலே இல்லை என்றால்...?

    வாழ்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  12. கவிதை இல்லையா இம்முறை?

    நல்ல கதை. கனவு என்று முடித்த "O Henry turn" நல்லா இருந்தது.

    ReplyDelete
  13. Anonymous2:38 AM

    நல்ல கதை...

    அந்த கனவு கொஞ்சம் ஒவர் டோஸ் தான்... படிக்கிற யாரையும் ஒரு நிமிஷம் கலங்கடிச்சுடும்...

    யாருமே இல்லாத அமைதியாய் இருந்த வீடே கூட போதும் அவள் மனம் திருந்த.

    நீங்க ஜெயிச்சா எனக்கு ட்ரீட், நான் ஜெயிச்சா உங்களுக்கு ட்ரீட். சரி தானே ?!

    ReplyDelete
  14. //கனவு என்றால் வெகு சுமாரான அதிகம் படித்த கதை மாதிரிகளில் ஒன்றாகி விட்டது! பரவாயில்லை. சிக்கலுக்கு எந்த மாதிரி தீர்வு என்பதில் தான் கதையே இல்லையா? சிக்கலே இல்லை என்றால்...?// என்னும் சிவாஜி !உங்க வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி...சிக்கல் இல்லாத வாழ்க்கை உண்டா?வெகு சுமாரான கதை என்பதற்கான காரணம் அதன் தீம் என நினைக்கிறேன் ..இந்தத்தவறு அடுத்து நேராமல் பார்க்கமுயல்வேன்.
    இந்தியாவின் கெட்ட செய்தி எனும் ஜெயன்..கவிதை இந்த தலைப்பில் சட்டென உதிக்கவில்லை பார்க்கலாம் இறுதிநாளிற்குள் ஏதும் தோன்றினால் அளிப்பேன்.நன்றி உங்களுக்கும்.


    //நீங்க ஜெயிச்சா எனக்கு ட்ரீட், நான் ஜெயிச்சா உங்களுக்கு ட்ரீட். சரி தானே ?// என்னும் சதீஷ்! வருகைக்கு நன்றி. போட்டில யார் ஜெயிச்சாலும் ட்ரீட் வாங்கிடுவோம் சரியா?:0
    ஷைலஜா





    /

    ReplyDelete
  15. //எல்லா குழந்தைகளும் இப்படிதான் அப்பா எதிர்ல நல்லாவே ஆக்ட் பண்ணுதுங்க பகலெல்லாம் அம்மாக்கள் உயிரை வாங்கி எடுத்திட்டு சாயங்காலம் அப்பா வந்ததும் சாதுமாதிரி உக்காந்துட்டு நம்ம பேச்சை பொய் பண்ணுதுங்க//

    நந்தகோபன் குமரன் யசோதை இளஞ்சிங்கத்தைப் பற்றியா எழுதியிருக்கிறீர்கள்? :-)

    ReplyDelete
  16. ஷைலஜா,

    கதை என்பதை மறந்து சில நிமிடம் ஒன்றிப்போய்விட்டேன்!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. Anonymous7:53 AM

    saw ur blog thro'KRS.

    Looty miga nantraga ullathu.Thodanthu ezhuthavum.

    Thangal uur srirangam enpathal Koil-ium patri ezhuthinal nandraga amaiyum enntru nambugiren.

    sundar.

    ReplyDelete
  18. நன்றிகுமரன் மற்றும் ஈசிஆர்.
    சுந்தர் உங்கள் விருப்பத்தை உங்க நண்பர் அட்டகாசமாய் அரங்கவைபவம் செய்துவருகிறாரே? எனினும் நானும் நேரம்கிடைக்கும்போது விவரமாய் எழுத இருக்கிறேன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    ஷைலஜா

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.