Social Icons

Pages

Monday, September 29, 2008

வாஷிங்டனில் நவராத்திரி!


வாஷிங்டனில் திருமணம் என்று பலவருடங்கள் முன்பு விகடனில் சாவி என்னும் எழுத்தாளர்
நகைச்சுவைகதை எழுதிஇருந்தார்.

வாஷிங்டனில் நவராத்திரி கேள்விப்பட்டிருக்கீங்களா?

இருங்க அதைத்தான் இப்போ சொல்லப்போறேன்.
2வருடம் முன்பு நவராத்திரி நேரம் நான் என் சித்தப்பாவின் வீட்டில் வாஷிங்டனில் இருந்தபோது நவராத்திரிகொலு வைக்கும் ஆசைவந்தது.

நம்ம ஊர் மாதிரி அங்க வீடுகளில் எல்லா இடங்களிலும் தரையே தெரிவதில்லை(சிலவீடுகளில் சமையற்கட்டுமட்டும்) அங்கே பெரும்பாலும் கார்பெட் போர்த்தியதரைகளே. மாடிப்படிகள், சுவர்
எல்லாம் மரத்தில்தான் .. சகலமும் விருட்ச ராஜ்ஜியம்,அபார்ட்மெண்ட் வீடுகளில் நாலாவது மாடியில் குடி இருப்பவர்கள் ராத்திரியில் நடந்துபோனால் சரக்சரக் என சில நேரம் சத்தம் கீழ்வீட்டுக்காரங்களுக்குக் கேட்கிறது. போனபுதிதில் நான் கொஞ்சம் அரண்டுபோனது நிஜம்.


ஆனால் இந்தமரசுவர்களில் ஒரு பெரியவசதி என்னவென்றால் சுவரில் ஒரு காலண்டர் அடிக்கவேண்டுமானால் டக் என்று ஆணி அடித்த உடன் சமத்தாய் ஆணி இறங்கிப் போகிறது. ஆனால் வாடகைவிட்டில்
அபார்ட்மெண்ட்டில் எல்லாம் இப்படி டக்டக் என்றுஆணி அதிகம் அடிக்கக் கூடாதாம்
வாடகைவீடுகளில் மாவிலைதோரணம் வாசலில்கோலம் என்று பல நம்மூர் வழக்கங்கள் நாட் அலவ்ட்!

வாஷிங்டனில் அக்டோ பர் குளிர் நாளில் நான் போனபோதுதான் தசரா வந்தது.

இந்தியாவில் ஸ்ரீரங்கத்தில் இருந்தநாட்களில் கொலுபொம்மைகள் வைக்க ஒருவாரம்முன்பே
கோயில் வளாகத்தின் ரங்கவிலாசில் படை எடுத்து புதுப்புதுபொம்மைகளாய் சேர்த்துவிடுவோம். அப்போதெல்லாம் கள்ளி(அல்லது கல்லுவா அர்த்தமே சரியா இல்லயே:))பெட்டிகள் கண்டாமுண்டாசாமான்கள் கனம்நிறைந்த பழைய தீபாவளிமலர்கள் டால்டாடப்பாக்கள் என்று கொலுபடிக்கு ஆதார வேர்களாய்பல பொருட்கள் வீட்டில் சுலபமாய் கிடைக்கும்.. பார்க் ஜூ அருவி என்று கற்பனைக்கு வந்தபடி
கைவரிசையைக்காட்டுவோம்..அப்புறம் ஸ்லாட்டட் ஆங்கிள்வந்தது சாதாரணநாட்களில் அது எங்களுக்குபுத்தக அலமாரி கொலுநாட்களில் அதுவே படிக்கட்டுகளாய் அவதாரம் எடுக்கும்.(பெங்களூரில் நைசாய் ஷோகேசிலேயே பொம்மைகளை வைத்து ஒப்பேற்றிக்கொண்டுவருகிறோம் என்னும்
உண்மையை இங்கே சொல்லிவிடவேண்டும்:))

வாஷிங்டனில் விஸ்தாரமாய் கொலுவைக்க ஆசைப்பட்டு தயாராகத்தான் ஊரிலிருந்துவந்திருந்தேன்.

ஆறேழுமாதம் சுற்றிபார்க்கவந்த இடத்தில் சித்தப்பாவிடம் அதைவாங்குங்க இதைவாங்குங்க என்று ஆர்டர் போடமுடியுமா? ஆனாலும் கொலு என்றால் படிகள் அமைத்து அதில்பொம்மைவைத்தால் அதன் அழகே தனிதான்.

ஆனால் சித்தப்பாவும (அமெரிக்க) சித்திக்கும் என்கவலைபுரிந்தது போலும்

". டோ ண்ட் ஒர்ரி இங்க மரக்கடைகளுக்குபோனால் விதம்விதமாய் சைஸ் வாரியாய் மரப்பலகைகள்கிடைக்கும் வாங்கிவரலாம்" என்றனர்.

மரக்கடை என்றதும் நான் கூட திருச்சிபாலக்கரை பஸ் நிறுத்தம் அருகே இருக்கும் மரக்கடைகளைவிட சற்றுப்பெரிதாய் கற்பனை செய்துகொண்டேன். ஆனால் அங்கே போனதும்தான் தெரிந்தது அது ஒரு
கிரிக்கட் மைதானம் அளவில் இருக்கிறதென்று !அமெரிக்காவில் எல்லாமே பெருசு தான்!

விதம்விதமான அளவில் மரப்பலகைகள் வாங்கினதும் அதை அறுப்பதற்கு என்ன செய்வதென்று விழித்தோம்.

என் கணவர்," நீதான் இருக்கிறாயே ?"என்று தன் பங்குக்கு அறுத்தார்! மறுபடி,அறம் ரம்பம் இழைப்புளி இன்ன பிறஆயுதங்களை சித்தப்பா வாங்கினார்.


எல்லாம் கார்டில் தேய்த்து வாங்கிவிட்டதால் அப்போது விலை தெரியாத எனக்கு பிறகு டாலரில்
விலை கேட்டுதெரிந்து அதை என் இந்தியமூளை ரூபாயில் பெருக்கிப்பார்த்து மொத்தம் பத்தாயிரம்
ரூபாய்க்குமேல அகிவிட்டது எனப்புரிந்ததும் திகைப்பானது.

"இட்ஸ் ஆல்ரைட்" என்றார் சித்தப்பா பெருந்தன்மையாக.


வீட்டிற்குவந்து மரப்பலகைகளை மெதுவாய் இறக்கி வீட்டிற்குள்கொண்டுவந்து சேர்த்தோம்
சித்தப்பாவும் என்கணவரும் இஞ்ச் டேப்பால் அளவு எடுத்து குறித்து அளந்து ஒருவழியாய் அறுத்து எடுத்த போது பலமணிநேரங்கள் ஓடிவிட்டன.

இந்தியாவிலிருந்த் புறப்படும்போதே ஒரு அட்டைப்பெட்டியில் தசாவதார(சினிமா அல்ல):) செட், சீதாராம பரத சத்ருகுண ஆஞ்சநேய செட் இன்னும் பலபொம்மைகளை தெர்மாகொலில் பதுக்கிக்கொண்டுவந்திருந்தேன்
தஞ்சாவூர் தலையாட்டி செட்டியார்பொம்மை எந்த ஏர்போர்ட் ஸ்டாண்டார்ட் பெட்டிகளிலும் அடங்காமல் உடைந்த பல் வெளியே தெரிய செட்டியார் மானத்தை வாங்கிவிட்டார்!

செட்டியாரை அமுக்கி கைப்பையில் பெரியதுண்டில் சுற்றிப்போட்டுகொண்டு திருட்டுமுழி முழித்தபோது லுஃப்தான்சா விமானப்பணிப்பெண் என்னை ஒரு சந்தேகப்பார்வை பார்த்துப்பின் பையைத்திறந்து பார்த்து சமாதானமானாள்.

எல்லாவற்றையும் இப்போது ஆர்வமாய் வெளியே எடுத்தேன்.

மீராபாயின் தம்புராவில் இரண்டு இழை விலகி இருக்க காந்தீஜீ நூற்றுக்கொண்டிருந்த தக்ளிகாணாமல்போயிருக்க ராமலட்சுமண செட்டில் அனுமாரின் கன்னத்தில் காயம்பட்டமாதிரி லேசாய் பொம்மை உடைந்துவிட்டிருந்தது.

தசாவதார செட்டில் வாமன அவதாரம் இந்தியாவிலேயே மறந்து விட்டுவந்திருப்பதை உணர்ந்தேன்.

"ஐயோ இப்ப என்ன செய்யறது? தசாவதாரம் நவாவதாராமாயிடுமே??" என்றேன் என்
வாழ்க்கைத்துணைவரிடம்.

என்கணவர்,"உன் ஒன்றுவிட்டதம்பி குட்டையாய் இருப்பானே அவனைக்கொண்டுவந்து கொலுப்படியில்வை" என்று ஜோக் அடித்தார், நான் முறைப்பதை ரசித்தபடி!

சித்தப்பா ஈமெயில் முலம் நவராத்திரிக்கு தமிழ்க்குடும்பங்களை அழைத்து அழைப்பு விடுத்திருந்தார்.

சித்தி அரைகுறைதமிழில் நவராத்திரி மகாத்மியத்தை என்னிடம் கேட்டுத்தெரிந்துகொண்டார். நான்
வாங்கிவந்திருந்த மைசூர் சில்க் சேலையைக்கட்டிக்கொண்டு சுண்டல் செய்ய உதவி புரிந்தார்.

ஏழெட்டுமாமிகள்முதல்நாளே பி எம் டபில்யூ காரில்வந்துஇறங்கினர்.

ஒருமாமி கொலுவைக்கண்டதும் தானாகவே
'சரஜிஜநாபசோதரி ' என்று உணர்ச்சிவசப்பட்டுப்பாடதொடங்கிவிட்டார்.

இன்னொரு மாமியிடம் நான் தான் சும்மா இல்லாமல் "ஸ்ரீசக்ரராஜ." :பாடச்சொல்லி வேண்டுகோள் விடுக்க அவங்க, 'பலவிதமாயுன்னைப்பாடவும் ஆடவும்' என்ற வரியைமட்டும் பலவிதமாய்ப்பாடி அபிநயித்து
நீணட்டிமுழக்கி பாடிக்கொண்டே இருந்தார்! அப்புறம் சுண்டல் விநியோகித்துப் படுக்கப்
போகும்போது நள்ளிரவாகிவிட்டது!நித்திரைபறிபோனதில் நொந்து போய் என்கணவர்"இனிமே மாமிகளை பாடச்சொல்லி வற்புறுத்தாதே ப்ளீஸ்" என்று என்னிடம் கைகுவித்தார்.

இன்னொருநாள் நாலைந்து சிறுமிகள்பட்டுப்பாவாடை காதில் ஜிமிக்கி கழுத்தில் காசுமாலை என்று அசல் கிராமத்துச்சிறுமிகள்போல டொயோட்டா காரில் வந்து இறங்கினர்.

ஆங்கிலமும்தமிழும்கலந்து பேசியபடி அவர்கள் தங்கள் அம்மாக்களோடும் தாத்தா பாட்டிகளோடும்வந்து அமர்ந்ததும்" யாராவதுபாடுங்களேன்" என்றேன்.

"வர்ஷா நன்னா திவ்யமா பாடுவா" என்றார் குழந்தையின் தாத்தா பெருமையாக.
அந்த ஏழுவயது வர்ஷாவைபாடச்சொன்னேன்.

அதுபலமாய்த் தலையாட்டியது.

"எனக்குதமிழ் சாங் தெரியுமே?" என்றது குஷியானகுரலில்.

"ஆஹா இந்த அமெரிக்கால இருந்துண்டு தமிழ் பேசறியே அதே பெருமையா இருக்கு..எங்க
ஒருபாட்டுபாடு,,கேக்கலாம்?"

"ஸ்ருதிப்பெட்டி கொண்டுவரலையே அச்சச்சோ" தவித்தது குழந்தை.

அமெரிக்க சித்தி,"நான் வச்ருக்கேன் கோண்ட்டு த்ரேன்.." என்று ஆர்வமாய் இந்தியாபோனபோது வாங்கிய எலெக்ட் ரானிக் ஸ்ருதிப்பெட்டியயை எடுத்துவந்து கொடுக்கவும் குழந்தையின் அம்மா அதனில் ஸ்ருதி சேர்த்து அதை, குழந்தை அங்கீகரிக்க அரைமணி ஆகியது.


வர்ஷா கைவளையல்களைபின்னுக்குத் தள்ளிக்கொண்டு சம்மணம்போட்டுகொண்டு அமர்ந்தாள்
"வலதுகைலதான் தாளம்போடணும் வர்ஷு" குழந்தையின் அம்மா எச்சரித்தாள்.

'ஒகேமாம்மீ"

தொண்டையைக்கனைத்துக்கொண்டதுகுழந்தை

சூடா பால் குடிக்கறியா வேணா?

வேணாம்...

பாத்து ஸ்ருதிபிசகாம பாடு என்ன?

இடக்கரத்தால் தலைப்பின்னலை எடுத்து முன்னேதள்ளிக்கொண்டபடி," ஆரம்பிக்கட்டுமா?" என்றுகேட்டது

அட! ஆரம்பமே அமர்க்களமா இருக்கே! --- தாத்தா பூரித்துப்போனார்.

"பாடு குழந்தே.. கேக்க காத்துக்கொண்டிருக்கோம்"

"சுட்டும்விழிச்சுடரே சுட்டும்விழிச்சுடரே என்னுலகம் உன்னைச்சுற்றுதே, சட்டப்பையில் உன்படம் பற்றிக்கொண்டு உரச ..." வர்ஷா உரத்தகுரலில் குதூகலமாய்ப்பாட

தாத்தா தலைஆட்டி ரசிக்க, கூட்டம் கைத்தட்டி உடன்பாட, நான் ஙே என்று விழிக்க......

இப்படி ஏக அமர்க்களத்துடன் வாஷிங்டனில் நவராத்திரி நடந்து முடிந்தது.
**********************************************************************

9 comments:

  1. கொஞ்சம் கொஞ்சமாய் அருகிவரும் இது போன்ற கொலு விசயங்கள் (இண்ட்ரஸ்ட் போயிக்கிட்டே இருக்கு!) மிக ஆர்வத்துடத்துடன் அயல் நாடுகளில் கொண்டாடப்படுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிரது! :)))

    ReplyDelete
  2. ஷைலு, எந்த வருஷ நவராத்திரி இது.
    2006 ஆ.
    சுட்டும்விழி பாடிய பெண்ணைக் கற்பனை செய்து பார்த்தேன். டோட்டல் செட்டப் இன்னோரு சாவி கதை மாதிரி இருந்தது.

    அழகோ அழகு.

    ReplyDelete
  3. //சுட்டும்விழி பாடிய பெண்ணைக் கற்பனை செய்து பார்த்தேன். டோட்டல் செட்டப் இன்னோரு சாவி கதை மாதிரி இருந்தது.//

    :)), வல்லிம்மாவின் வார்த்தைகளை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  4. கருத்து தெரிவித்த ஆயில்யன் ,வல்லிமா , ராமலஷ்மி ! உங்களுக்கு என் நன்றி.

    ReplyDelete
  5. என்னங்க அக்கா. இம்புட்டு சீக்கிரம் முடிச்சிட்டீங்க. வாஷிங்டனில் திருமணம் மாதிரி ஒரு தொடர் நாவலா வரும்ன்னு நினைச்சேனே. அதே அளவிற்கு நகைச்சுவை இருந்தது. ரெண்டு மூனு தடவை சிரிச்சேன். ;-)

    ReplyDelete
  6. ஷையக்கா. இதுல உங்க கற்பனையும் நிறைய உண்டுதானே :) எங்க ஊர்ல எல்லாம் குட்டிப் பிள்ளைங்க பாடினாலும் ஒழுங்கான பாட்டுகள்தான் பாடுவாங்களாக்கும்.

    ReplyDelete
  7. இப்போதான் படிச்சேன். மிக அருமை.

    குமரன் சொன்னது போல இதை ஒரு தொடரா எழுதுங்களேன்.

    ReplyDelete
  8. ஹைய்யோ..... சூப்பர்.

    இங்கே ஒரு குழந்தை 'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டாரும் சாண்டா க்ளாஸ் ஈஸ் கமிங் டு டௌன் ம் பாடித்து.

    ReplyDelete
  9. குமரன் கவிநயா மதுரையம்பதி துளசிமேடம்..உங்களுக்கு நன்றி வருகைக்கும் கருத்து சொன்னதுக்கும்!!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.