”நான் சொன்ன வாசகத்தை எழுதிமுடிச்சிங்களா இல்லையா? இடியட்ஸ்... இன்னுமா அந்தப்பலகை ரெடியாகல?” என்று வள் என்று சீறி விழுந்தபடியே கடைக்குள் நுழைந்தாள் அந்தப்பெண்மணி.
'நல்வரவு 'என்று கொட்டையாய் பெயர்ப்பலகையில் எழுதிமுடித்த சிகாமணி அந்தப்பெண்மணியைக்கண்டதும் பெயிண்டையும் ப்ரஷையும் அப்படியே கீழே வைத்துவிட்டு சின்னதடுப்பிடையே புகுந்து கடையின் உள்பக்கம் பதட்டத்துடன் ஓடினான்.
“முதலாளீ” என்றான் மூச்சிறைக்க
.
“என்னடா சிகா?”
மரப்பலகை ஒன்றினைத்தரம் பார்த்துக்கொண்டிருந்த குமரவேல் இப்படிக்கேட்டதும் சிகாமணி,”முதலாளி! அந்தம்மா கடைசில நம்ம கடைக்கே வந்திட்டாங்க இப்ப” என்றான்.
முதலாளி இல்லாத நேரங்களில் எல்லாம் கடையின் டெலிபோன் ரிசிவரை சிகாமணிதான் எடுப்பது வழக்கம், அப்படி இரண்டுமூன்றுதடவைகளில் எடுக்க நேர்ந்தபோது இந்தப்பெண்மணி போனில்” இன்னுமா நான் சொன்ன போர்டை எழுதி முடிக்கல வாட் நான்சென்ஸ் ஈஸ் திஸ்?” என்றும்,” ரோஸ்வுட்பலகையின் நாலுமூலையிலும் பித்தளைல விளிம்புகட்டி நடுல அழகா எடுப்பா எழுதச்சொல்லி ஒருவாரமாச்சு இன்னும் போர்டை ரெடி பண்ணாம இருக்கீங்கஒரு வேலைகொடுத்தா பொறுப்பா செய்யறதில்லையா? இதே அமெரிக்காவா இருந்தா இதுக்கெல்லாம் நாங்க கோர்ட்ல கேஸ்போடலாம் தெரியுமா? இந்தியா உருப்படாம போகக் காரணமே உங்களமாதிரி சிலபேராலதான்”என்றும் கூச்சல்போட்டிருக்கிறாள்.அவள் மென்மையாகப்பேசி சிகா கேட்டதே இல்லை.
அதனால் அவளை நேரில்கண்டதும் சிகாமணி திகைத்துப்போனான். ஐம்பதுவயதிருக்கும் வசதியான வீட்டுப்பெண்மணி என்பதை தோற்றமே காட்டியது. பாப்கட் செய்த தலை. பாண்ட் ஷர்ட் அணிந்து வந்தவள் கூலிங்க்ளாசைக் கழட்டிவிட்டு உஷ்ணப்பார்வையில் கடையை அளந்தாள்.
“வாங்கம்மா வாங்க” முதலாளி பொறுமையாய் வரவேற்றார்.
“என்னதத வாங்குறது?பத்துநாளாச்சு நான் ஒரு போர்டு எழுதச்சொல்லி, இன்னும் முடிக்கல நீங்க? கடைக்குபோன்செய்தா எப்போவும் நீங்க மரப்பலகை வாங்க வெளில்போயிருக்கிறதாகவே இந்தப்பையன் சொல்றான்...ஏய் நீதானேப்பா அது?பொடிப்பயலே... நேர்ல நறுக்குனு நாலுவார்த்தை கேக்கத்தான் அதிரடியா வந்தேன்..இதபாருங்க போர்டு நாளைக்கே ரெடியாகி வீட்டுக்குக்கொண்டுவரணும் சொல்லிட்டேன் ஆமா..”
“சரிங்கமா அந்த குறிப்பிட்டமரப்பலகை கிடைக்க தாமமாகிடிச்சி.. நாலுமூலையிலும் பளபளன்னு பித்தளைவிளிம்பு பொருத்திட்டோம் கடைசி இழைப்புநடக்குது முடிச்சிட்டா தம்பி வாசகத்தை அரைமணில எழுதிடுவான் சாய்ந்திரமே அவன் கைல வீட்டுக்கு கொடுத்தனுப்பறேன்,மா..”
”என்னத்த கொடுத்தனுப்பப்போறீங்களோ உங்களையெல்லாம் நம்பிப் பிரயோசனமே இல்லை ....என்ன கடை வச்சி நடத்தறீங்களோ ஹ்ம்..” காலடியில் இடறிய சைலன்ஸ்ப்ளீஸ் என்ற வாசகம் எழுதிய பலகையை மிதித்துக்கொண்டே போனாள்.
மாலை சொன்னபடிபலகையை இழைத்து முடித்துவிட்டார்குமரவேல்.
சிகாமணியிடம் பலகையில் எழுத வேண்டிய வாசகங்களை ஒருதாளில் எழுதிக்கொடுத்தார் ”சரியா எழுது சிகா அதுக்குவேற அந்தம்மா சீறிட்டுவருவாங்க”என்று சொல்லி சிரித்தார்.
சிரத்தையாய் வெள்ளை பெயிண்டில் ப்ரஷைதோய்த்துமணிமணியாய் எழுதிமுடித்தவன் காய்ந்ததும் கையோடு முதலாளி கொடுத்த விலாசத்திற்கு எடுத்துக்கொண்டுபோனான்.
வாசலில் அல்சேஷன் நாய் ஒன்று கன்றுகுட்டி சைசில் இவனைப்பார்த்து வாலைஆட்டிக்கொண்டுவந்தது.சிகா சற்றுமிரண்டு நிற்கையில் ஒருசுற்றிசுற்றி வந்து மோப்பமிட்டுவிட்டு ஒதுங்கிப்போய்விட்டது. சின்ன லொள் கூட இல்லை!
உள்ளே போனில் மும்முரமாய் பேசிக்கொண்ட்ருந்த அந்தபெண்மணி சிகாவைகக்ண்டதும்,
” வந்து தொலைஞ்சியா?ரெடியாச்சா ஒருவழியா? இந்த சின்ன வேலைக்கு ஒருவாரத்துக்கு மேல கேட்குதாக்கும்?யூஸ்லெஸ்பீபிள்! சரிசரி அதை காம்பவுண்ட்கேட்ல கம்பிபோட்டு இறுக்கமாய்க் கட்டி்ட்டுப்போய்ச்சேரு... என்ன தயங்கி நிக்கற?ம்? கம்பி கதவுலயே இருக்குதுபொ,,போ..” என்று சீறி விழுந்தாள்.
சிகா அந்தப்பலகையை கவனமாய் நுழைவுவாசலில் இருந்த க்ரில் கேட்டில் இரும்புக்கம்பியை வளைத்து முறுக்கி இறுக்கக் கட்டினான்.
கதவை மூடிவிட்டு ’தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று பெருமூச்சுவிட்டபடிவெளியே போனவன் சட்டென திரும்பிப்பார்த்தான்.
”நாய் ஜாக்கிரதை” என்ற வாசகம் எழுதிய பலகை வீட்டின் உட்புறம் திரும்பி இருந்தது.
***********************************************************************************************
(நவினவிருட்சத்தில் அண்மையில்வெளியான சிறுகதை)