நீண்ட நாள் கழித்து இந்தஅறைக்குள் நுழைகிறேன். மொட்டைமாடியில் காற்றோட்டமான ஜன்னல்கள் கொண்ட மேற்கூரை மேய்ந்த சின்ன அறைதான்.ஆனாலும் என்னுடைய சாம்ராஜ்யம் இங்கேதான் நடந்திருக்கிறது. சுற்றிலும் புத்தக அலமாரிகள் நடுவில் ஒரு மரமேஜை அருகில் நாற்காலி . சின்னதாய் டேபிள்ஃபான் ஒன்று . நண்பர்கள் வந்தால் அவர்களை உட்கார வைக்க நீளமாய் ஒரு மரபெஞ்ச். குடிநீருக்காய் ஒரு பானை அவ்வளவுதான் சாம்ராஜ்ய சொத்துக்கள்!
பதினைந்து வருஷம் முன்பு இந்த அறையைக்கட்டி முடிக்கவே பத்தாயிரம் ரூபாய்க்குமேல் செலவானது. சுமதிகூட,”என்னங்க இவ்ளோ பணம் ஒரு சின்ன ரூமுக்கா செலவழிக்கணும் அதுல ரம்யாக்கு தங்கத்துல நகையாவது வாங்கலாம் அவளுக்கும் வயசு ஏழு ஆகபோகுதில்ல?” என்றாள் கவலையுடன்.
“கீழ்வீட்ல எனக்குன்னு தனி ருமே இல்லை ஒரே சத்தம் வேற. இங்கே தனியா ஏகாந்தமா உக்காந்திட்டு கற்பனை செய்து கதைகதையா எழுதி லட்சலட்சமா சம்பாதிச்சிடுவேன் கவலைப்படாதே”என்று சமாதானம் சொன்னேன்.
கலைஞனுக்கு லட்சங்களில் லட்சியம வந்துவிட்டால் கலைமகளுக்குப்பிடிக்காதுபோலும்.... பணத்திற்காகவே எழுத ஆரம்பித்தேன். நாலைந்துவருஷங்களிலேயே என் புகழ் மங்க ஆரம்பித்து எழுதியபடைப்புகளை தொடர்ந்து பத்திரிகைகள் நிராகரித்தன. அந்தவிரக்தியில் நான் பேனா பிடிப்பதையே நிறுத்தியும் ஏழெட்டுவருஷங்கள் ஆகிவிட்டன.
இன்று மனைவியும் மகளும் சொந்தக்காரர் வீட்டுத்திருமணத்திற்குப்போய்
விட்டார்கள்..ஆபிசிலிருந்து சீக்கிரமாகவே வீடுவந்தவன் அப்படியே கூடத்து சோபாவில் எதையோ பறிகொடுத்தவன் போலப்படுத்திருக்கிறேன். பஸ்ஸில் வரும்போது பத்திரிகை ஒன்றில் படித்த கதையை அசைபோடுகிறேன். எழுதியவர் பெயர் ஒன்றும் பிரபலமாய்த்தெரியவில்லை ஆனால் எழுதிய கருத்தும் கதையின் ஓட்டமும் மனசை அள்ளிச்சென்றன.
இப்படித்தான் நானும் பல கதைகள் எழுதி இருக்கிறேன். ஒரு நிகழ்ச்சி ஓர் அனுபவம் ஓர் உணர்ச்சி படித்த ஓர் செய்தி என்று எதுவேண்டுமானாலும் ஒரு சிறுகதையை உருவாக்கிவிடும்.. அப்படிப்பட்ட கதைகள் எழுதி பரிசுகள் வாங்கி பிரபல எழுத்தாளர் எழிலூர்எதிராஜன் என்று நான் பேரும் புகழுமாய் வாழ்ந்த காலம் கனவுபோல இருக்கிறது. இந்த ஏழெட்டுவருஷங்களில் நான் எழுதுவதையும் எழுத்தாளர்களை சந்திப்பதையும் அடியோடு நிறுத்தியேவிட்டேன். காரணம் விரக்திதான்.
அப்படியே பழைய நினைவுகளை அசைபோட்டு சிந்தித்து உட்கார்ந்திருந்தவனை டீபாய் மீதிருந்த டெலிபோனின் ட்ரிங் ட்ரிங் என்ற சத்தம் சுதாரிக்கவைத்தது.
ரிசீவரை எடுக்கிறேன்.
"ஹலோ எழுத்தாளர் எழிலூர்எதிராஜன் இருக்காரா?"
எதிர்முனை என்னை இப்படிக்கேட்கவும் வியப்பில் கண் விரிக்கிறேன் ...எல்லோரும்மறந்துவிட்டிருப்பார்கள் என்று நினைக்கும் நேரத்தில் இப்படி ஒரு குரல் உற்சாகமாய் கேட்கவும்.”ஆமாம்நீங்கயாரு?’ என்கிறேன்
”சார் நான் ரசிகன்.......”
”ஓ என் ரசிகரா? வேடிக்கைதான் நான் கதை எழுதுவதையே நிறுத்தியே பல வருஷமாச்சே?””
”அதைத்தான் கேட்க வருகிறேன் .....எதனால் எழுதுவதே இல்லை? அற்புதமான வளமான எழுத்து உங்களுடையது”
”அப்படியா?”
”ஆமாம் ......உங்களுடைய சிறுகதைகளில் ஆன்மாவைக்கண்டவன் நான்.”
”மகிழ்ச்சி ரசிகன்”
“ஆமாம் ! நீங்கள் ஒரு சிறந்த படைப்பாளி சார்....உங்களைமாதிரி படைப்பாளிகளால்தான் மனதில்பட்டதை அழகான காட்சியை
உயர்ந்த அல்லது இழிந்த பண்புகளை விருப்பு வெறுப்பு இல்லாமல் உள்ளது உள்ளபடி திறந்த மனத்தோடு எத்ற்காகவும் கவலைப்படாமல் உன்னத படைப்பினை உருவாக்கமுடியும்.உள்ளத்தின் உள்ளொளி எழுத்தில் பிரகாசித்துவிடும். படைப்பாளி பயனை எதிர்பார்ப்பதில்லை ஆனால் அவன் படைப்பு சமுதாயத்திற்கு எவ்வளவோ பயன்படுகிறது. சமுதாயத்தின் பண்பாட்டை வளர்ப்பதுதான் கலை. அதன் இலக்கு மனிதனை உயர்த்துவது. அவன் சிந்தனையை விரிவடையச்செய்வது அவன் வாக்கில் ஒளிதுலங்கச்செய்வது அவன் செயலை மேம்படசெய்வது.இந்த அற்புதமான பணியை உங்கள் எழுத்து ஒருகாலத்தில் செய்துகொண்டிருந்தது. அதை முடக்கிவிட்டீர்களா சார், என்னைப்போன்ற ரசிகர்களுக்காக தாங்கள் மீண்டும் எழுதவேண்டும்.இது என் கோரிக்கை அல்ல , கட்டளை!” என்று சொல்லிவிட்டு எதி்ர்முனை ரிசீவரை வைத்துவிட்டது.
சட்டென மனதில் யாரோ விளக்கு ஏற்றியமதிரி அகமும் புறமும் பிரகாசமாகிறது.
இருண்டகிடந்த என் மனத்தின் அறையை யாரோ திறந்துவிட்டமாதிரி இருக்கிறது அதனால்தான் இந்த மாடி அறைக்கதவைத்திறந்து உள்ளே நுழைகிறேன். ஜன்னல்களைத்திறந்துவைக்கிறேன். மாலைநேரத்துக்காற்று ரம்மியமாய் வீசுகிறது.
புத்தக வாசனையை இழக்காத அந்த அறைச்சுவர்களில் படங்களாய் வீற்றிருந்த அரவிந்தரும் அன்னையும் என்னைப்பார்த்துப்புன்னகைக்கிறார்கள். இந்தப்புன்னகையைக்காணவாவது நான் இந்த அறைக்குள் வந்திருக்கலாமோ? எழுதுவதும் ஒரு தவம் தானே ? தவம் செய்ய மறந்தேனோ?’புத்தகத்தில் இல்லாதவற்றைக் கற்றுக்கொடுப்பவர் நல்ல வாத்தியார்; ஆசிரியர் சொல்லிக்கொடுக்காதவற்றையும் கற்றுத்தெரிந்துகொள்ளுபவன் நல்ல மாணவன்’ என்று ஆங்கிலத்தில் ஒரு வசனம் இருக்கிறது. அதுபோல அன்றாட வாழ்விலே ஈடுபட்டுத் தத்தளித்து நீந்திக்கரையேற முயற்சி செய்து கொண்டிருக்கும் நாம், நம் அவசரத்தில் காணாது விட்டுவிட்ட அல்லது கண்டும் இனம் தெரியாது விட்டுவிட்ட அனுபவங்களை நம் கண்ணுக்கு முன் கொண்டுவந்து நிறுத்தி அவற்றுள் புதைந்துகிடக்கும் உண்மைகளை வெளிக்கொண்ர்ந்து நம் கவனத்தைல் நிலைநாட்டுவதுதானே எழுத்துக்கலைஞனின் பணி என்று தோன்றுகிறது. என் பணியை செய்யத்தவறிவிட்ட உணர்வில் உள்ளம் குறுகுறுக்கிறது.மேல்நாட்டு அறிஞர் ஒருவர் கூறியதுபோல”நிலையில்லாது கரைந்து மறைந்துகொண்டிருக்கும் கணங்களில் அமரத்துவத்தைக்காட்டுவது தான் கலை” என்ற விமர்சனம் சிறுகதைக்கு மிகவும் பொருந்துவதாகப்படுகிறது.
மேஜையின் அருகே சென்று நாற்காலியில் அமர்ந்து பேனாவை எடுத்து எழுத ஆரம்பிக்கிறேன் .கற்பனை விண்ணாய் விரிகிறது. சொற்கள் இடித்துக்கொண்டு வாக்கியங்கள் மின்னலாய் தெறிக்க காவிய மழை ஒன்று பெய்துவிடுகிறது.
சமைக்கும்போதே வரும் வாசனைகளால் பதார்த்தங்களின் சுவையை அறியமுடிவதுபோல எழுதும்போதே வந்து விழுந்த வார்த்தைக்கலவைகளில் ஆத்மத்ருப்தியான படைப்பு உருவாகி விட்டதை உணர்கிறேன். விரக்தியும் வெறுப்புமாய்சிலவருடங்கள் ஒளிந்திருந்த எதிராஜன் மறைந்து புத்துணர்ச்சியுடன் மீண்டுவந்தவனாய் உற்சாகமாய் கீழே வருகிறேன் .
கல்யாணத்திற்குப்போயிருந்த மனைவியும் மகளும் வருகிறார்கள்.என்னைக் கண்டதும் மனைவி,”எப்போ வந்தீங்க?” என்கிறாள் வியப்புடன்.
“மதியம் சாப்பிட்டதும் வீடு வந்திட்டேன் அப்போ என்னவோ மனசு உற்சாகமாய் இல்லை ரொம்ப டல்லாயிருந்தது ஆனா இப்போ ஒகே”
உஸ்ஸ்ஸ் என்று பெருமூச்சுவீட்டபடியே,” அப்படியா? ஆமா.... காலைல எழுந்ததுமே கவனிச்சேன் நம்ம வீட்டு லாண்ட்லைன் போன் ’டெட்’டா இருந்திச்சி... கம்ப்ளெயிண்டும் போற வழில கொடுத்தேனே யாரும் வந்து ரிப்பேர் செய்தாங்களா?” என்று கேட்டபடியே ரிசீவரை காதில் வைத்தவள்,” ஹ்ம்ம் இன்னமும்டயல்டோன் கேக்கலயே, டெட் ஆகத்தான் இருக்குது” என்கிறாள் சலிப்பான குரலில்
”என்ன! போன் ’டெட்’டா இருக்கிறதா?’்” என்று நான் திகைத்து நிற்கிறேன். மனசுக்குள் ரசிகன் நகைக்கிறான்.
(கதை அண்மையில் நவீனவிருட்சத்தில் வெளிவந்துள்ளது)
Tweet | ||||
கதை அருமையாயிருக்கு..
ReplyDeleteஒளிவீசும் விளக்கானாலும் தூண்டுகோல் இருந்தா இன்னும் பிரகாசமா எரியுமில்லையா..
நல்ல கதை. நல்ல நடை. முடிச்சு இன்னும் கொஞ்சம் பலமாக இருந்திருக்கலாம். எட்டு வருட தாமசம் ஒரு போன் அழைப்பில் முடிவுக்கு வருதல் கதையை சீக்கிரம் முடிக்கும் உந்துதலாலா? அல்லது அமானுஷ்ய நிகழ்வை சுவை கூட்டிக் காட்டும் உத்திக்காகவா?
ReplyDelete//அமைதிச்சாரல் said...
ReplyDeleteகதை அருமையாயிருக்கு..
ஒளிவீசும் விளக்கானாலும் தூண்டுகோல் இருந்தா இன்னும் பிரகாசமா எரியுமில்லையா..
7:49 AM
////
ஆமாம் அமைதிச்சாரல் ...தூண்டுகோலா முதல்ல நம்ம மனசு இருக்கணும் அது சோர்வடைஞ்சிட்டா எல்லாம் ஓவர் இது ஒரு பிரபல எழுத்தாளருக்கு நடந்தால் எப்படி இருக்கும் என்பதின் கற்பனை இது. நன்றி கருத்துக்கு.
//ganesh said...
ReplyDeleteநல்ல கதை. நல்ல நடை. முடிச்சு இன்னும் கொஞ்சம் பலமாக இருந்திருக்கலாம். எட்டு வருட தாமசம் ஒரு போன் அழைப்பில் முடிவுக்கு வருதல் கதையை சீக்கிரம் முடிக்கும் உந்துதலாலா? அல்லது அமானுஷ்ய நிகழ்வை சுவை கூட்டிக் காட்டும் உத்திக்காகவா?
2:14 PM
’’
வருகைக்கு முதலில் நன்றி கணேஷ்.
ஒருபோன் அழைப்பில் முடிவுக்கு வருதல் என்பதல்ல எல்லாமே உறங்கிக்கிடந்த மனசிற்கு ஏற்பட்ட விழிப்புதான் அது. உணர்வுகளின் விழிப்பாகவும் மாறுகிறது.பொங்கிவரும்பாலை சிறுதுளி நீர் சட்டென அமைதிப்படுத்தித்தணிப்பதில்லையா அதுபோல!
நன்றி உங்கள் கருத்திற்கு,
அருமை தோழி உற்சாகமும் ஊக்கமும் இருந்தால் வாழ்க்கை பயணம் தடைபடாமல் செல்லும் அழகிய வெளிபாடு
ReplyDelete