Social Icons

Pages

Thursday, April 18, 2013

ராமர் விட்ட பாணம்!






ஜனகமகாராஜனின் அரசவை.

ராம,லக்ஷ்மணர்களோடு விஸ்வாமித்திரர் அரசவையில் வீற்றிருக்கிறார்.

அப்போது அந்த வில் வண்டி வருகிறது, ஆம் சிவதனுசு எனும் அசாத்தியப்பெருமைகொண்ட வில் அது!

எட்டு சக்கரம் கொண்ட வண்டியில் அதனை வைத்து,


'உறுவலி யானையை ஒத்த மேனியர்
செறிமயிர்க்கலெனத்திரண்ட தோளினர்'

எனக்கம்பன் வர்ணிக்கும் பலசாலியானவர்கள் இழுத்துக்கொண்டுவருகின்றனர்.

சபைமுழுவதும் ஆர்வமாய் காத்திருக்கிறது. வேடிக்கைபார்க்க மக்கள் எல்லாம் அங்கும் இங்குமாய் கூடி அமர்ந்திருக்கிறார்கள்.

"என்ன வில் இது !ஆகாசத்தைத் தொடுவதுபோல இப்படி கம்பீரமாய் இருக்கிறதே!"

என்று பேசிவியக்கிறார்கள்.

திண்நெடு மேருவைத்திரட்டிற்றோ.....மேருமலைத்திரட்டி இந்தவில்லைப்பண்ணினார்களா?

வண்ண வான்கடல் பண்டுகடைந்த மத்தென்பர்......கடலில் மந்தரமலையைக்கடைந்த அந்தமலையே திரும்பவும் வந்துவிட்டதா?

அண்ணல் வாள் அரவினுக்கு அரசனோ?.........பாம்புக்கெல்லாம் அரசனாக இருக்குமோ?

விண் இரு நெடிய வில் வீழ்ந்ததோ?..... வானவில் என்று சொல்வார்களே அதுதான் கீழே வீழ்ந்து இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறதா?


'என், "இது கொணர்க" என, இயம்பினான்?' என்பார்;
'மன்னவர் உளர்கொலோ மதி கெட்டார்?' என்பார்;
'முன்னை ஊழ் வினையினால் முடிக்கில் ஆம்' என்பார்;
'கன்னியும் இச் சிலை காணுமோ?' என்பார். ’



கம்பர் அழகாக வர்ணனை செய்திருப்பதைக்கவனியுங்கள்

"என்ன இது எதுக்கு இதைக்கொண்டுவந்திருக்காங்க எப்படி இதைப்போய் வளைக்கமுடியும் அரசனுக்கு புத்தி கெட்டுப்போய்விட்டதா?"என ஒருவரைஒருவர் பார்த்துப்பேசிக்கொள்கிறார்களாம்.


இப்படி அனைவரும் பார்த்து பிரமிக்கும் வில்லை வளைப்பவனுக்குத்தான் மகளைத்திருமணம் செய்துகொடுப்பதாய் ஜனகன் முடிவெடுத்ததற்குக் காரணம் இருக்கிறது..


சீதை ஒருநாள் அம்மானை ஆடினாளாம்.முணுகாயைவைத்துக்கொண்டு அதுகீழே விழாமல் ஆடுவது அம்மானை எனும் ஓர் பெண்கள் விளையாட்டு.. ஆடும்போது ஒருகாய் கீழே விழவும் அது , சிவதனுசு வைக்கப்படிருந்த பெட்டிக்குக்கீழே உருண்டு ஓடிப்போனதாம்.

இதை ஜனகர் பார்த்துக்கொண்டே இருந்தாராம்.சீதை அடுத்தகணமே தன் இடதுகையால் அந்தப்பெட்டியை சற்றும் சிரமமின்றி அனாயாசமாய் நகர்த்திவிட்டு அமமானையைக் குனிந்து பொறுக்கிக்கொண்டாளாம். மலையைத்தூக்கிவைக்கும் வலிமைகொண்ட தன் மகளுக்கு அப்போதே எப்படிப்பட்ட மாப்பிளையைப்பார்க்கவேண்டுமென ஜனகர் தீர்மானித்துவிடுகிறார்.அதனால்தான் சிவதனுசை யார் எடுத்து வளைக்கிறார்களோ அவருக்கே என்மகளை மாலையிடச்செய்வேன் என்று நினைத்துக்கொள்கிறார்.

இப்போது வில் சபை நடுவில் வீற்றிருக்கிறது.

ராமன் உட்கார்ந்திருக்கும் விதத்தைப்பார்த்தால் அவன் எடுத்து முறித்துவிடுவான்போல இருக்கிறதாம்..ஏற்கனவே  தாடகையை வதம் செய்திருக்கிறதே ராமனின் சொல்லொக்கும் கடியவேகச் சுடுசரம்?


‘வந்தெதிர்ந்த  தாடகை தன் உரத்தைக்கீறி வரு குருதிப்பொழிதர வன் கணையொன்று ஏவி’ என்கிறார் குலசேகர ஆழ்வார்.

இன்றும்  பாலபருவத்தினர் விளையாட்டாய் சொல்கிறார்களே  ‘ராமர்விட்ட பாணம்  திரும்பிப்பார்த்தா  காணோம்’ என்று?!

ராமர் விட்ட பாணம் எப்படி இருக்கும் என்று கேட்டால் எப்படி பேசின மாத்திரத்தில் சொல் செவியில் போய் விழுகிறதோ அப்படி  ஒரு கடையவேகச்சுடுசரமாம்! அதுவும்  வயிரக்குன்ற கல்லொக்கும் தாடகையின் நெஞ்சைத்துளைத்து அப்பால் போனதாம்  . அது கல்லா புல்லார்க்கு நல்லோர் சொன்ன பொருள் எனப்போயிற்றன்னே  என்கிறார் கம்பன்.   நல்லோர்கள்  புல்போன்ற அற்பர்களுக்கு  சொன்ன வார்த்தைகள்  அவர்களின் ஒரு செவி வழி சென்று மறு செவி வழியே  வெளியேறுவது போலவாம்!
 
 

இப்போது ராமர்  சிவதனுசுவை  எடுக்கிறார்.
 
தடுத்து இமையாமல் இருந்தவர் தாளில்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்!
 
அவ்வளவுதான்!  ராமனின் மாண்பை கம்பர்  ஒரே  வரியில் சொல்லிவிட்டார்  பாருங்கள்!   கையால்  எடுத்ததைத்தான் பார்த்தார்களாம் அடுத்த நொடி என்றெல்லாம்  கூட இல்லை உடனேயே  என்பதற்கான  அவகாசமும் இல்லை வில்லை எடுத்தான்  முறித்தான் என்கிறார்!
 
கம்பனின் கடைசிவரியைக்கண்ணால் பருகுவோம் காதால் பருகுவோம்!
 
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்!
 
(நாளை ராமநவமித்திருநாளைக்குப்புதிய பதிவுடன் சந்திப்போம்)

26 comments:

  1. அழகான ரசிக்க வைக்கும் வர்ணனை... வாழ்த்துக்கள்...

    தொடருகிறேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் தொடர் வருக+கருத்துக்கு

      Delete
  2. Anonymous9:55 AM

    //////////////
    சீதை ஒருநாள் அம்மானை ஆடினாளாம்.முணுகாயைவைத்துக்கொண்டு அதுகீழே விழாமல் ஆடுவது அம்மானை எனும் ஓர் பெண்கள் விளையாட்டு.. ஆடும்போது ஒருகாய் கீழே விழவும் அது , சிவதனுசு வைக்கப்படிருந்த பெட்டிக்குக்கீழே உருண்டு ஓடிப்போனதாம்.

    இதை ஜனகர் பார்த்துக்கொண்டே இருந்தாராம்.சீதை அடுத்தகணமே தன் இடதுகையால் அந்தப்பெட்டியை சற்றும் சிரமமின்றி அனாயாசமாய் நகர்த்திவிட்டு அமமானையைக் குனிந்து பொறுக்கிக்கொண்டாளாம். மலையைத்தூக்கிவைக்கும் வலிமைகொண்ட தன் மகளுக்கு அப்போதே எப்படிப்பட்ட மாப்பிளையைப்பார்க்கவேண்டுமென ஜனகர் தீர்மானித்துவிடுகிறார்.அதனால்தான் சிவதனுசை யார் எடுத்து வளைக்கிறார்களோ அவருக்கே என்மகளை மாலையிடச்செய்வேன் என்று நினைத்துக்கொள்கிறார்.
    //////////////////

    இந்தாளு ஏன் இப்டி ஒரு கண்டிசன் போட்டார் என்று இப்பத்தான் தெரிகிறது.
    அருமையான மற்றும் எளிமையான விளக்கம்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கடசி பெஞ்ச்

      Delete
  3. தடுத்து இமையாமல் இருந்தவர் தாளில்
    மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்;
    கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
    எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்!

    பலமுறை கேட்டு ரசித்த வரிகள். இன்றும் உங்கள் பதிவில் ரசித்தேன்.
    நேற்று ராமன் பிறந்த கதை; இன்று சீதா சுயம்வரம்; நாளை சீதா கல்யாணமா?

    ReplyDelete
    Replies
    1. ஆஹா நாளை சீதா கல்யாணமா? அழகான கேள்வி...ராமர் சித்தம் என்னவோ அப்படி நடக்கும் ரன்சனி நாராயணன் வருகைக்கு நன்றி

      கம்பராமாயண வகுப்பு வரும் சனிக்கிழமை இருக்கு வர இயலுமா?

      Delete
    2. வெளியூரில் இருக்கிறேன், ஷைலஜா!
      நிறைய மிஸ் பண்ணுகிறேனே என்று வருத்தமாக இருக்கிறது. பெங்களூர் திரும்பியவுடன் நிச்சயம் வருகிறேன். அதுவரை நீங்கள் எழுதுவதை படித்து திருப்தி அடைகிறேன்.

      Delete
    3. பரவால்ல மெதுவா வாங்க

      Delete
  4. இப்பேற்பட்ட வில்லை ராமன் எளிதில் உடைக்க அவரின் பலமும் பராக்கிரமும் மாத்திரம் அல்ல காரணம் வேறு எங்கோ உளது என குலசேகரரும் அவரை ஒட்டி கவி சக்ரவர்த்தியும் கண்டனர் என ம. பெ. சீனிவாசன் (கம்பனும் ஆழ்வார்களும்) அழகாக காட்டியுள்ளார்.

    செவ்வரினற் கருநெடுங்கண் சீதைக்கு ஆகி
    சினவிடையோன் சிலை இறுத்து
    "சீதையின் செவ்வரியோடிய கரிய நெடுங் கண்களெனும் பாசத்தால் பிணித்து ராமன் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும்.அவள் கடைக்கண் வீச்சினால் வேகம் பெற்றுத்தான் வில்லை அவன் முறித்து இருக்கவேண்டும்" என ஆழ்வாரின் ஊகமாம்.

    அதையே உறுதி செய்வது போல் கம்பனும் கெளசிக முனி வாயிலாக சீதையை போல உள்ள கண்ணழிக்காக ஒரு வில் என்ன ஏழு மலைகளை கூட முறித்து விடமாட்டானா என்ன என்பதை இதன் மூலம் தெரிவிக்கிறான் என்கிறார் சீனிவாசன் அவர்கள்

    நச்சுடை வடிக்கண்மலர் நங்கை இவள் என்றால்
    இச்சிலை கிடக்க, மலை ஏழையும் இறானோ(1152)

    ReplyDelete
    Replies
    1. என்னே அருமை உங்கள் பின்னூட்டம் இதுவே ஒரு அழகான இடுகை! ஆழ்வார் பாசுரம் கம்பர் பாடல்கள் இவற்றை நன்கு வாசித்து பகிர்ந்த தங்களுக்கு நன்றி பல

      Delete

  5. சீதையின் அம்மானை ஆட்டம், வில்லை முறிக்க சனகனின் நிபந்தனைக்குக் காரணம் எல்லாம் கர்ணபரம்பரைக் கதைகளோ? கம்ப ராமாயணத்தில் படித்த நினைவு இல்லை. நான் தவறவிட்ட பாடல்கள் ஏதாவது இருக்குமோ.?உங்கள் தயவால் கம்பனது சில பாடல்களை மீண்டும் படித்தேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நான் வாசித்தேன் எங்கயோ அம்மானை சீதை ஆடினதை

      பார்த்து எங்கு என மறுபடி இடுகிறேன் நன்றி ஜி எம் பி சார்..உங்க இடுகையும் பார்த்தேன் கம்பராமாயணப்படலம் அத்தனையும் அழகாய் ஒரே இடுகையில் நன்றாக இருக்கு

      Delete
  6. கம்பன் சொல்லாடல் அற்புதம்! உங்கள் வர்ணனையை நல்ல ரசித்தோம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜனா ரசித்தமைக்கு

      Delete
  7. கம்பன் கவி நயத்தை எவ்வளவு பருகினாலும் தணியாத வேட்கை.

    அழகாக நயமாக சொன்ன விதம் நன்று. 'நின் பிரிவினும் சுடுமோ
    பெருங்காடு' என்றதில் சீதையின் மனோதிடம் அறிந்த நாம் தங்கள் விளக்கத்தில் உடல் பலமும் நிறைந்தவளென்பதை உணர்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. நன்ரி நிலா மகள் கம்பன் கவிதைகள் நம்மை மிகவும் ஈர்ப்பது உண்மைதான்

      Delete
  8. கம்பராமாயணம் எத்தனை தடவை கேட்டாலும் ரசிக்கலாம்.

    ராம நவமி வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மிக மாதேவி வாழ்த்துகளுக்கும் வருகைக்கும்

      Delete
  9. நீங்கள் சொன்ன கம்பரசம் படிக்கப் படிக்க ரசனையில் நனைந்தது மனசு என்றால், பின்னூட்டங்களைப் படிக்கையில் கூடுதல் சுவாரஸ்யத்தில் துள்ளிக் குதிக்கிறது! நாளை ராமநவமி தினத்துப் பதிவைப் படிகக அவசியம் வந்திடுறேன்! (அதுசரி... ஜனகர் வில்லை வளைக்கத்தான சொன்னாரு? ராமர் ஒடிச்சது ரூல்ஸ்படி தப்பில்லையோ...? ஹி... ஹி....!)

    ReplyDelete
    Replies
    1. வில்லை வளைத்து நாணேற்றச் சொல்றாரு ஜனகர்ஜி. சிவனின் வில் அத்தனை பலமானது, நாணேற்றக் கூட வளைக்கமுடியாத வில்னு ஜனகர்ஜி மேத் போடறாரு. ஆனா ராமன் யாரு? ராஆமனாச்சே? நாணேத்துற ஸ்பீடுல வில்லே உடைஞ்சு போயிருது.

      இதுல இன்னொரு க.ப.க உண்டு. அதாவது வில்லுக்கும் உணர்வு உண்டாம். அது சொல்லிச்சாம்.. ராமனுக்கு மட்டும் கேக்குறாப்புல. "ஐயனே.. அழகுராமா.. வீரக்கொழுந்தே.. உனக்கு கோடி நமஸ்காரம். உன் கைபட்டதும் இன்னொருத்தர் கை என் மேலே படக்கூடாது.. எங்கே நீ நாண் பூட்டினதும் இன்னொருத்தர் முயற்சி பண்றேன்னு என்னைத் தொட்டா என் புனிதமே போச்சுடா ராமா.. அதனால என்னை தொம்சம் செஞ்சுடு"னு கெஞ்சிக் கேட்டுதாம் வில். அகெய்ன் ராமனுக்கு மட்டும் கேக்குறாப்புல. அதான் ராமன் கி எடுத்தது இற்றது எல்லாம்.

      சிவன் ஒரு ராட்சசனுக்குக் கொடுத்த சாபம்னு ஒரு கதை கூட இருக்கு. ராமனுக்காக அகலிகை மட்டும் காத்திருக்கவில்லை.

      Delete
    2. ் ஆஹா வில்லு இப்படில்லாம் சொல்லித்தா..?:).நல்ல விளக்கம் அப்பாதுரை நன்றி மிக

      Delete
  10. தெரிந்ததைப் படிப்பது இன்பம். தெரியாததைப் படிப்பது பேரின்பம். தமிழில் கம்பனுக்கும் பாரதிக்கும் மட்டுமே இது பொருந்தும்.
    மிகவும் ரசித்துப் படித்தேன். அம்மானை விளையாட்டுக் கதை பிரமாதம். கேள்விப்பட்டதில்லை. beautiful visual.

    ReplyDelete
    Replies
    1. அம்மானை கதை உண்டே ஆசார்ய ராமாமிர்தம் எனும் ஆண்டவன் சுவாமி எழுதிய நூலில் இருக்கு. நன்றி அப்பாதுரை தங்களின் மேலான கருத்துக்கு

      Delete
  11. கம்பரசம்.... ஒரு முறை கம்பராமாயணம் படிக்கும் ஆசை வந்துவிட்டது......

    ReplyDelete
  12. ரசனைமிக்க பகிர்வு...
    அருமை.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.