Social Icons

Pages

Sunday, April 14, 2013

நல்லதோர் ஆரம்பம்!

கம்பராமாயண  வாசிப்பு ,அதுவும் வீட்டருகே!
 
விஷயம் கேள்விப்பட்டதும் கட்டுத்தறி ஒன்று கவிகேட்கத்தயாரானது.
 
 
 
 
திருவரங்கம் கோயிலின் வடபகுதியில் வசிப்பவர்களுக்கு மாலைநேர மெரீனா  என்றால் அது கம்பமண்டப வளாகம்தான். மேட்டழகிய சிங்கர் கோவில் படிக்கட்டுகளில் ஓடுவதும் கம்பர் ராமாயணம் அரங்கேற்றிய அந்த நாலுகால்  கல்மண்டபத்தைச்சுற்றி வந்து  ஓடிபிடித்து விளையாடுவதுமாக  அப்போதே   உணர்ந்த கம்ப மண்டப கல் வாசனையின்  தொடர்போ  என்னவோ  இப்போது இந்த பாக்கியம்!
 
 
அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில பாடல்களை மட்டுமே சொற்பொழிவுகளிலும்  வாசித்ததிலும்  அறிந்துகொண்டிருந்த ஆர்வம் பேரார்வமாய்ப்பெருக ஆரம்பித்தது.
 
இப்படி ஒரு நற்செயலை நிகழ்த்தக்காரணகர்த்தாவாய் இருக்கும் சொக்கனுக்கு போன் செய்து நான் வருவதை உறுதி செய்தேன்.
 
 
அப்படியே  எங்களுக்கெல்லாம் கம்பரசம் வழங்க இருக்கும்  கண்ணபிரான் பேர் கொண்ட ஹரி கிருஷ்ணன் அவர்களுக்கும் போன் செய்து மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டேன். அவரும்
உற்சாகக்குரலில்  தன புறப்பட்டுவரத்  தயாராய்  இருப்பதை தெரிவித்தார்.
 
 
சித்திரைக்கென்றே வரும்  சிறப்புக்கனல் கதிர்களை  நேற்று மாலைக்கதிரவன்  சிக்கனமின்றி வாரி வழங்கிக்கொண்டிருந்தான். அதைப்பற்றிய கவலையின்றி கம்பவெள்ளத்தில் மூழ்க  தயாராகி  பத்து நிமிடம் முன்னதாகவே சொக்கன் அவர்களின் ஐடி  காரியாலய கட்டிட வளாகத்தில் புகுந்துவிட்டேன்.  வாசலில் கிரானைட் படிக்கட்டில்  போய் நின்றேன்
 
.'யார் நீங்கள்?  யாரைப்பார்க்கணும் இன்று ஆபீஸ் லீவு” என்றார்
மாநிலமொழியில்  காவலர். ஆகாய நீல சீருடையில் அமைதி  தவழும் முகத்திலிருந்தார்.
 
 
“சொக்கன் என்பவர் வரசொல்லி இருக்கிறார் அவர் இங்குதான் பணிபுரிகிறார் ” என்றேன்.
 
 
“சொக்கன்? அந்தபேர்ல  யாரும் கிடையாதே?” என்று சந்தேகமாய் கேட்டபடி கண்ணாடிக்கதவைத்தள்ளிக்கொண்டு  உள்ளே போய்விட்டார்.
 
 
நான் சற்று கவலையுடன் சொக்கனுக்கு போன் செய்ய அவரோ,”உங்களை நான்  பார்த்துவிட்டேன் . எதிர் திசையில்  பைக்கில் நான் ஹரியண்ணாவோடு இருக்கிறேன் வண்டியை யு டர்ன் அடித்து மூன்று நிமிஷத்தில் அங்கே வந்துவிடுவேன்” என அபயம் அளித்தார்.
 
அப்போது  வாசல்வழியாக ஒரு ஆள் என்னையே பார்த்துக்கொண்டு வந்தான்  எனக்கு அந்த ஆளின் பார்வை ஏதொ சந்தேகத்தை உண்டாக்கியது. 
 
 திருடனா, கேடியா என யோசிக்கும்போது அவன் என் அருகில் வந்து ஹிந்தியில்”யார் நீங்க எதுக்கு இங்க கம்பெனி வாசல் கதவுகிட்ட நிக்கறீங்க? எனக்கு உண்மையை சொல்லுங்க’என்று அதட்டினான்.
 
 
அதற்குள் கண்ணாடிக்கதவைத்திறந்து உள்ளிருந்து வந்த சீருடைக்காவலர் ஹிந்தியில்“ அதையேதான்   நானும்  கேட்டேன் ஏதோ  பேர் சொல்றாங்க .ஆமா  நீ இன்னிக்கு அபீஸ் லீவுன்னு யூனிஃபார்ம்ல வரலையா  டீக் ஹை” என்று சொல்லி சிக்கனமாய் சிரித்தார்
 
 
இதென்னடா வம்பாய் போச்சு நம்மைப்பார்த்தால் ஏதும் சந்தேகப்படும் நபர் போலவா இருக்கு  இத்தனைக்கும் வெய்யிலுக்கு இதமாய் கூலிங் கிளாஸ் கூட போட்டுவரவில்லை அப்புறம் என்ன  இப்படி  என்னும் கவலையில் கைப்பையை  வரட் வரட் என விரல்நகத்தால் தேய்த்துக்கொண்டிருக்கையில்  சொக்கனின் பைக் சொகுசாய் உள்ளே நுழைய அவரது புன்னகை என்னை நோக்கி வருவதைக்கண்ட காவலாளர்கள்   (அதட்டல் ஆத்மீயும்) அசடு வழிந்தார்கள்.
 
(அப்புறம் தான் தெரிந்த்து சொக்கனின் இயர்பெயர்  அது அல்ல என்று)
 
ஹரிகிஜீ  முகத்தில்  25கிமீ வெய்யிலில்  பயணம் செய்துவந்த களைப்பே தெரியவில்லை  பாரதி கம்பன் என்றால் எனக்கு  பாலைவன வெய்யிலும்  சோலைவனத்தென்றல்தான் என்பதுபோல அப்படி ஒரு கனிவும் களிப்பும் அவர் முகத்தில்.
 
மூவரும் அந்த அலுவலகக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் குளிர்சாதனம் கொண்ட  அறையில் நுழைந்தோம்.
 
பிறகு  சில நிமிடங்களில் ஒவ்வொருவராக  வந்தனர்  சரியாய் 6மணிக்கு  காகிதக்கோப்பையில் பழரசம் அருந்தியபடியே கம்பகாவிய அறிமுக சொற்பொழிவு ஆரம்பமானது.
 
 
15பேர்களுக்கு மேல் கூடி இருந்தோம்.
 
ராமாயணம் என்றால் ஜடாயு இல்லாமலா  ஐந்து நிமிடங்கள் கடந்தபின் அவர் நுழையவும்   “அதானே ராமாயணத்தில்ஜடாயுவின் வருகை முதலில் கிடையாதே” என்று  உரிமையாய்  கிண்டல் அடித்ததை  ரசித்துசிரித்தார்.
 
முதல் நிகழ்வு என்பதே  தெரியாமல்  சரளமாக   நடந்தது வாசிப்பு அனுபவம் அனைவருக்கும் கிடைத்தது.  சாற்று கவி  என கம்பனைப்புகழ்ந்து மற்றோர் எழுதிய பாடல்கள் வாசிகக்ப்பட்டன.
 
அஞ்சிலே ஒன்று பெற்றான் பாடலும் அதில் அடக்கம்.
பாடல்களினூடே  சில சொற்களுக்கு  ஹரிகிஜீ நல்ல  விளக்கம் அளித்தார்.
 
ராமகாவியத்தில்  இரண்டு  இடங்கள் அதாவது பலருக்கு இன்னமும்   வாலி வதம் மற்றும் அக்னிபிரவேசம்  அதனைப்பற்றி அந்தப்படலங்கள் வரும்போது விரிவாய்ப்பேசுவோம் என்றார்.
 
ஜடாயு அவர்களும் பதம் பிரித்து பாடல்களை  அழகுற வாசித்தார் .
அதிகம் தமிழ்தெரியாது  இப்போதுதான் கற்றுவருகிறேன் ஆனாலும் கம்பனைப்பிடிக்கும் ஆகவே வந்தேன் என்ற இரு இளைஞர்களின் மனம் திறந்த   பேச்சு  அவரவர் அறிமுக உரையில்  பளிச்சிட்டது.
 
செவிக்குணவு  நிறைவாக  முடிந்தது
 
சக்கரைப்பொங்கலும் சுண்டலும்  சொக்கன்வீட்டிலிருந்து  வயிற்றுச்சுவைக்கு வந்திருந்தது.
 
செவியும் வயிறும் நிறைந்த மகிழ்வில்  அனைவரும் அடுத்தவாரம் சந்திக்கும் முன் விடைபெற்றுக்கொள்வோம் எனக்கூறி பிரிந்தோம்.
 
 
நல்லதொரு  நிகழ்வினிற்கு வித்திட்டுள்ள சொக்கனுக்கு நன்றி அதனை ஏற்று  மகிழ்ச்சியுடன் கம்பனைக்கண்முன் காட்டப்போகும் திரு ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு  எல்லார் சார்பிலும் நன்றி  .
 
அடுத்த  வாசிப்பு  வரும் சனிகிழமை  மாலை 5மணிக்கு அதே இடம்  பெங்களூர் தமிழ் அன்பர்கள்  வரலாமே!
 
 

12 comments:

  1. கம்பரசம் பருகிய அனுபவம் அருமைக்கா! தூரத்தில் இருக்கிறோமே என்ற ஏக்கத்தையே தந்து விட்டது. ஆனாலும் உங்கள் எழுத்திலாவது படித்து ரசிக்க முடிந்ததில் பெருமகிழ்ச்சி. உங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  2. ஹரிகிஜி என்றால் யார்.?அன்று தமிழ்ச் சங்கத்தில் நடந்த பதிவர் சந்திப்புக்கு வந்தாரே அவரா.?வீடியோ எல்லாம் எடுத்து அனுப்புகிறேன் என்றவர் முகவரி எல்லாம் வாங்கிக் கொண்டதோடு சரி. .உங்களுக்காவது வந்ததா. ?அவருக்கு நினைவூட்டுங்கள். இன்று தொலைக் காட்சியில் கம்பன் கழகம் ஏற்பாடு செய்திருந்த விவாதங்கள் மிகவும் சுவையாக இருந்தது. , இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. Anonymous5:13 PM

    போகமுடியாத குறையைத் தீர்த்துவிட்டீர்கள். நன்றி

    ReplyDelete
  4. நீங்கள் பாக்யசாலி.அகத்தின் அருகாமையிலேயே கவி சக்ரவர்த்தி கம்பரின் காவியத்தை அறிஞர்களால் வாரம்தோறும் அலசப்படுவது ஒரு நல்ல சந்தர்பம்.கம்ப ராமாயணத்திற்கும் ஆழ்வார்களின் பாசுரங்களுக்கும் உள்ள ஒற்றுமையையும் கண்டு களிக்கலாம்.

    ReplyDelete
  5. மிக்க மகிழ்ச்சி... பதிவாகிப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மிக்க நன்றி...

    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. கம்பரசம் பருகியதை சொன்ன பகிர்வு அருமை...

    ReplyDelete
  7. கம்பர் மண்டபம் - திருவரங்கத்தில் எனக்கும் பிடித்த இடம்....

    கம்பரசம் பருகிய உங்களுக்கு வாழ்த்துகள்.... தொடரட்டும் கம்பரசம்....

    ReplyDelete
  8. நல்லதோர் ஆரம்பம்! மகிழ்ச்சி. தொடரட்டும்.

    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் ஷைலஜா.

    ReplyDelete
  9. நடந்த நிகழ்வினை அருமையாக நகைச்சுவை குன்றாமல் எடுத்துக்கூறியுள்ளது மிகவும் சுவையாக உள்ளது.

    //செவிக்குணவு நிறைவாக முடிந்தது. சக்கரைப்பொங்கலும் சுண்டலும் சொக்கன்வீட்டிலிருந்து வயிற்றுச்சுவைக்கு வந்திருந்தது.//

    செவியும் வயிறும் நிறைந்த மகிழ்வில் இதைப்படித்து முடித்த நானும் இப்போது.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. கொடுத்து வெச்சவங்க :-)))

    இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஷைலஜாக்கா.

    ReplyDelete
  11. பின்னூட்டமிட்ட அமைதிச்சாரல் கணேஷ் குமார் கடைசிபெஞ்ச், திரு பார்த்தசாரதி திரு ஜி எம் பி தனபாலன் அனைவர்க்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  12. புத்தாண்டு வாழ்த்துகள் ராமல்ஷ்மி! கருத்துக்கு நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.