Social Icons

Pages

Sunday, December 13, 2015

மழைப்பேச்சு.




யாகங்கள் பல செய்தீர் உங்கள்மன
சோகம் நீங்கிடவேண்டுமென்றே
தாகம் தணிக்க வந்தேன் தவறா?
கண்ணுக்கு எட்டாத்தொலைவில்
காணாபொருள்போலிருந்தேன்
காட்சிகொடுத்ததும் தவறா?
கோடிக்குரல் அழைத்தால்
தேடிவருவது தெய்வகுணம்
ஓடிவந்ததும் தவறா?
என்பாதைஅத்தனையும்
எங்கும் அடைத்துவிட்டீர்
எப்படியோ வந்ததும் தவறா?
என்குணம் எதிலும் அடங்கும்
என்பது தெரிந்திருந்தும்
ஏரிகுளங்களை அழித்தது தவறு
இல்லாத பொழுதினில் ஏங்குவதும்
வருகின்றபொழுதினில் சேமிக்காததும்
வாழும் மனிதன் செய்யும் தவறு
இயற்கையின் கொடைதன்னை
இயன்றவரை அழிப்பதுதான்
இன்றைய மனிதனின் தவறு
பொறுத்ததுபோதுமென்றுதான்
பொங்கி எழுந்து வந்தேன்
புரிந்ததா உங்கள் தவறு?
மேலும் படிக்க... "மழைப்பேச்சு."

Friday, December 11, 2015

பாரதி காட்டும் ஒலி அலைகள்!

எதிரே விண்ணை  முட்டும் கோபுரம் தெரிகிறது. தொலைவில் மண்ணை முட்டும் தொடுவானம் தெரிகிறது. சிறகிருந்தால் இந்த கோபுரத்தின் உச்சியிலிருந்து  கிளம்பி அந்தத்தொடுவானம்  வரை  சக்கர வட்டம் அடிக்கலாம். என்னும் ஆசை எழுகிறது. நமக்குச்சிறகு இல்லை ஆனால் என்ன? வானத்துக்கும் மண்ணுக்குமாய் நாம் சவாரி செய்வதற்கு ஏற்ற  வாகனம்  ஒன்று  இருக்கிறதே!


பாரதி பாடுகிறார்..

தென்னையின் கீற்றுச் சலசல வென்றிடச் செய்துவருங் காற்றே! 
உன்னைக் குதிரை கொண்டேறித் திரியுமோர் உள்ளம் படைத்து விட்டோம்.


ஆம் காற்றுதான் அந்த வாகனம். அதிலே  ஸ்தூலமாக அதாவது  இயல்பான உருவத்துடன் செல்லமுடியாதுபோனாலும், சூட்சமமாக அதாவது  உணர்வினால் சவாரி செய்யலாம் அத்தகைய உள்ளம்  படைத்திருக்கிறோம் நாம்.

’மண்ணுலகத்து நல்லோசைகள்  காற்றெனும் வானவன் கொண்டுவந்தான்’. என்கிறார் மகாகவி. இந்தக்காற்று நமக்குப்பணிவிடை செய்கிற தூதுவனாக விளங்கி எத்தனை எத்தனை சப்த ஜாலங்களை, ஒலி அலைகளை ஏந்தி வருகிறது! அவை எல்லாவற்றையும் மண்ணில் இசைத்துப்பாடி மகிழ வேண்டும் என்கிற ஆசை எழுகிறதல்லவா!

ஒரு கவிஞர் சொன்னார் “இறைவா  இந்த உலகத்தில்தான் எத்தனை அன்பு நிறைந்திருக்கிறது! அந்த அன்பை எல்லாம்  வாரிச்சுருட்டிக்கொண்டுவிடமுடியுமானால் எத்தனை பேறு அது!”

அன்புக்கு மட்டுமல்ல  ஒலிக்கும் அதே தாபம்தான்.
பாரதியின்  வசனகவிதையில் இதனைக்காணலாம்..

.பாரதியின் வசன கவிதை இனிமைகொண்டது. எளிமையானது, கவிதைநயம் மிக்கது,  உயிர்த்துடிப்பான  ஓட்டம்பரவியது! 

பாம்புப் பிடாரன் பற்றிப் பாரதி தன் வசன கவிதையில்கூறுவதைப்பார்க்கலாம்

 

பாம்பு அவன் இசைக்கு மயங்கி ஆடுகிறது,ஆனால் பாம்புக்கு செவி இல்லை என்கிறார்கள் பிறகு ஏன் அது ஆடுகிறது?
பாம்புக்கு செவி என்று தனி உறுப்பு இல்லை ஆனால் தன் உடல் முழுதுமே ஒலி அலைகளை உள்வாங்கி புல்லரித்துநர்த்தனமிடும் அபூர்வ நாத லயம் நிறைந்திருக்கத்தான் வேண்டும்!

இசையை இப்படி உடல்முழுதும் வாங்கி மகிழும்  பிராணி வேறு ஏதும் உண்டா என்று வியப்பு ஏற்படுகிறது!
அதிருக்கட்டும்  பாம்புப்பிடாரன் குழல் ஊதுகிறானே அந்தக்குழலிலா இசை பிறந்தது! குழல் தனியாக  இசை புரியமுடியாதே! அப்படியானால் குழலில் உள்ள தொளைமூலமாக இசை பிறந்ததா? வெறும் தொளையில் இசை பிறக்கமுடியாதே! அப்படியானால் பாம்புப்பிடாரன் மூச்சிலே  பிறந்ததா இந்த இசை?
கேள்வி சிக்கலாக இருக்கிறது.

பாரதி பதில் சொல்கிறார்..
”அவன் உள்ளத்திலே இசை பிறந்தது, குழலிலே வெளிப்பட்டது!”
//
அவன் உள்ளத்தில் பாடுகிறான். அது
குழலின் தொளையிலே கேட்கிறது’  என்கிறார் தன் வசன கவிதையில்   .
ஆனால் நமக்குத்திருப்தி பிறக்கவில்லையே! உள்ளத்திலே இசை பிறந்தாலும் உள்ளம் தனியே எப்படி ஒலிக்கும் என்று கேட்கிறோம்.
நியாயம் தான்.
உள்ளம்  குழலில் ஒட்டாது. ஆனால் உள்ளம் மூச்சில் ஒட்டும். குழல் கூட எப்படி தனியே ஒலிக்கும்? மூச்சு குழலில் ஒட்டும், குழல் பாடும்!.
பொருந்தாத பொருள்களைப்பொருத்தி வைத்து அதிலே இசை உண்டாக்குதல்...சக்தி.
இந்த அபூர்வமான  விளக்கத்தை பாரதியின் வசன கவிதையில் பார்க்கிறோம். மூச்சிலே ஒட்டும் உள்ளமும், காற்றிலே சவாரி செய்யும் உள்ளமும் அழகும் அருளும் நிறைந்த இப்பெரிய உலகின் ரசானுபவங்களை எல்லாம் நமக்குக்காட்டுகின்றன!

. ஒலிமயமானது உலகு! அத்தனை ஒலிகளும் இசைக்கீற்றுகள். அவற்றைக்கேட்டுப் பண்ணிசைக்கும் உள்ளமெல்லாம் பாக்கியம் செய்தவை!

எதிரே கோபுரம் தெரிகிறது அது அழகின் வார்ப்பு! தொலைவில் தொடுவானம் தெரிகிறது அது அருளே வடிவான இறைவன் கருணையுடன் மண்ணைத்தொட்டு நிற்கும் பூரிப்பு!

தெரியும் பொருளைக்கொண்டு தெரியாத பொருளை எட்டிப்பிடித்துவிட முடியும் என்கிற தத்துவம் புரிகிறது!

ஒலி அலைகளும் அதே வித்தையைத்தான் உணர்த்துகின்றன. அவை புற உலகை மட்டுமல்லாது அக உலகையும் நமக்குக்காட்டுகின்றன. அவ்வாறு காண்பதில் வெறும் காட்சி இன்பம் மட்டுமல்ல காட்சிக்கு அப்பாற்பட்ட இறையருளின் மாட்சி இன்பமும் நமக்கு வாய்க்கின்றன!
இது எத்தனை பாக்கியம்!.
எளிமையாக இருப்பதுபோலத்தோன்றினாலும் சூட்சமமாக  பல கருத்துக்களை  அர்த்தங்களை  பாடல்வரிகளில்  புகுத்துவதில்  பாரதிக்கு நிகர் பாரதியே!

திருவைப்பணிந்து நித்தம்
செம்மைத்தொழில்புரிந்து
வருகவருவதென்றே - கிளியே
மகிழ்வுற்றிருப்போமடி!
வெற்றி செயலுக்கு உண்டு ....

என்று தொடரும்  கிளிப்பாட்டில் வெற்றி செயலுக்கு உண்டு என்பவன்  செயல் செம்மையாக  இருக்கவேண்டும் என்கிறான். செம்மைத்தொழில் என்பது அதுதானே! செயல் என்னும் சொல் மிக எளிமையாகத்தோன்றினாலும் பரந்த உட்கருத்தும் ஆழ்ந்த பீடத்தையும் கொண்டது.’பக்தி உடையார் காரியத்திற் பதறார்’ என்கிறார்பிறிதோரிடத்தில்.

காரியத்தில் அதாவது செயலில்  ஈடுபட்டோர் பக்தி உடையோராக இருக்கவேண்டும்.அவர்கள் வித்து முளைக்கும் தன்மைபோல மெல்லச்சென்று உயர்ந்து பயன் அடைவார்.என்கிறான். விதை மண்ணில் நட்டதும் காய்த்து கனிதருவதில்லை அது மேலே செல்வது உறுதி,அதற்குக்காலமும் பருவமும் கூடவேண்டும். 

எந்தச்செயலுக்கும் பக்தி அடிப்படை .அது இறைவனைத்துதித்து நிற்கும் சொல்லுக்கான  பொருள்மட்டுமில்லை. ஆழ்ந்த உள்ளுணர்வு இடையறா முயற்சி லயிப்பு ஈடுபாடு சிரத்தை பணிவு ஆகியபலபொருட்களை  உள்ளடக்கிய  ஒருமைச்சொல்.அத்னாலதான்  ‘நித்தம் செம்மைத்தொழில் புரிந்து..என்றான் பாரதி.


இன்று  புதிதாய்ப்பிறந்தோம் என்று  நெஞ்சில் எண்ணமதைத்திண்ணமுற இசைத்துக்கொண்டு வாழல் வேண்டும் ‘என்ற பாரதிதான் ‘நித்தம்’ என்ற கால அளவைச்சொல்கிறார். தினம் தினம் புதுமைதானே! ஒவ்வொருகணமும் புதிது! உயிரும் புதிது உள்ளமும் புதிது! தொழிலும் அதில்காணும் செம்மையும் கணம் கணம் மலர்வன புதியன!









--













மேலும் படிக்க... "பாரதி காட்டும் ஒலி அலைகள்!"

Thursday, October 08, 2015

படியில் குணத்துப் பரத நம்பி!


aramகம்பகாவியத்தில் இராவணவதைப்படலம் முடிந்து சீதையுடன் இராமன் அயோத்திக்குத்திரும்பும் காட்சி!
இலங்கைமாநகரினின்றும் புஷ்பகவிமானத்தில் பரிவாரங்களுடன் புறப்படும் இராமன் சீதைக்கு ஒவ்வொருஇடமாக காட்டிக்கொண்டுவருகிறான்.வருகிறான்.
கோதாவரி நதி வரும்போது அதனருகில் உயர்ந்தகுன்றினைக்காண்பித்து,’நாம் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்த இடம் ‘என்கிறான்.
பரத்வாஜமுனிவர் இராமரை எதிர்கொண்டு தன் இருப்பிடத்திற்கு அனைவரும் வந்து விருந்துண்ணும்படி அன்புடன் கேட்க இராமனால் தட்டமுடியவில்லை..ஆனால் அயோத்தியில் தம்பி பரதன் தன் வரவுக்குக்காத்திருப்பான் என நினைக்கிறான்.குறித்த நேரத்தில் தான் செல்லாவிட்டால் பரதன் தீமூட்டி அதில் விழுந்துவிடுவதாக சொல்லி இருந்தது இராமனுக்கு தவிப்பாக இருக்கிறது.பரதனுக்கு சேதி அனுப்பவேண்டும்.


ஆகவே அனுமனை அழைத்து,தனதுமோதிரத்தையும் கொடுத்து தான் அயோத்திக்கு திரும்பிவந்துகொண்டிருக்கும் தகவல் சொல்லி அனுப்புகிறானாம் இராமன்.
ஆகாயமார்க்கத்தில் அனுமன் வாயுவேகத்தையும்விடவும் தனது நாயகன் இரமானின் அம்பின் வேகத்தைவிடவும் தனது வேகத்திற்கே ஈடாகாமல் சிந்தைபின்செல தான்முந்திச்செல்கிறான்.
அங்கோ பரதன் இராமனின் வரவுகாணாது வருந்தி தம்பிசத்ருகனனை தனக்காக தீ மூட்ட சொல்கிறான்.
சத்ருக்னன் திடுக்கிடுகிறான். செய்வதறியாது மனம் சோர்வுறுகிறான்.
தனக்கு நேர்ந்துள்ள நிலைமையின் விரக்தியில் இளையவன் புலம்புகிறான்.
விவரம் அறிந்து கோசலை ஓடிவருகிறாள்.பரதன் செயல்கண்டு பதறுகிறாள்
.” ‘எண்ணில் கோடி இராமர்களென்னினும் அண்ணல் நின்னருளுக்கு அருகாவரோ?’ என்கிறாள்.
இதே வார்த்தையை முன்பு குகன் சொன்னான்.
ஆயிரம் இராமர் நின்கேழ்
ஆவரோ தெரியின் அம்மா
பரதனைப்பற்றி இராமன் கூறியதும் குகன் இப்படிவியந்தானாம்!
இங்கு கோசலைதன் மகனை காட்டுக்கு அனுப்பியகைகேயி மகனிடம் அவள்கொண்ட கனிவுதான் என்னே! அதனால் கௌசல்யா சுப்ரஜா ராமா என்று சுப்ரபாதம் சொல்கிறோம்!
பரதன் மட்டும் லேசுப்பட்டவனா? ’தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத் தீவினை என நீத்தவன்” அல்லவா?மணிமுடிதவிர்த்து சடைமுடி தரித்துக்காடு சென்ற காகுத்தனைத்தேடி தானும் அதே கோலத்தில் சென்று தன் நினைப்பு நிறைவேறாத நிலையில் வேறுவழியின்றி தமையனின் திருவடிகளைப்பெற்றுவந்து அவற்றை அரியணையில் அமர்த்தி அவன் சார்பில் ஆட்சிபுரிந்தவன். இராமனுக்கு அடிமை என்னும் இயல்பையே விரும்புபவன்.





பெரியாழ்வார் பரதனைப்பற்றி இப்படி அருள்கிறார்.
முடி ஒன்றி மூவுலகங்களும் ஆண்டு உன் 
அடியேற்கு அருள் என்று அவன்பின் தொடர்ந்த 
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று 
அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற 
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற
படியில்குணத்துப்பரத நம்பி என்னும் வார்த்தைக்கு ஆழ்ந்த பொருள் உள்ளது. படி..ஒப்பு. ஒப்பில்லாத உயர்ந்த குணங்களை உடையவன் பரதன் என்பது பொருள்
குணங்களால் நிறைந்தவன் என்று தோன்றவும் பரதன் நம்பி என்கிறார்.
பங்கமில்குணத்துப்பரதனாகக் காட்டுவான் கவிச்சகரவர்த்தி.
பங்கம் இல் குணத்து எம்பி பரதனே
துங்க மாமுடி சூடுகின்றான்.
என்பது இராமனின் கூற்று.
ஆழ்வார்கள் அடியொற்றிச்செல்லும்கம்பனுக்கு பரதன் நம்பி என்னும் பெரியாழ்வாரின் பெருமைமிகு சொல்லாட்சி நெஞ்சிலேயேஉழன்று கொண்டிருக்கவேண்டும் அதனால் பரதன் தவவேடம் கண்டு திகைத்த குகனின் மனநிலையைக்கண்டு கல்லும்கனியப்பாடுகிறான் கம்பன்.
நம்பியும் என் நாயகனை
ஒக்கின்றான்; அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்;
தவம் வேடம் தலைநின்றான்;
துன்பம் ஒரு முடிவு இல்லை;
திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின்பிறந்தார்
இழைப்பரோ பிழைப்பு?‘‘ என்றான்
நம்பியும் என் நாயகனை என்னும் வரியில் பெரியாழ்வாரின் பரதன் நம்பி எனும் வார்த்தையின் பாதிப்பினைக்காணலாம்.
இப்படிப்பட்ட பரதன் தீயில் விழத்துணிந்துவிட்டான்.சொன்னபடி இராமன் வரவில்லை என தான் எடுத்த முடிவுக்குத்துணிந்துவிடுகிறான்.
 தீவலம் வந்து பரதன் அதில் விழ இருக்கும் அக்கணம்
அனுமன் வந்துவிடுகிறான்
குன்றுபோல் நெடுமாருதி கூடினான்
என்கிறான் கம்பன்.,
வந்தவன் தீயை முதலில் அணைக்கிறான். அக்கினிசாட்யாகவும் இதை நாம் எடுத்துக்கொள்ளலாம்.ஆம் ’அக்னிசாட்சியாக ராமன் வந்துகொண்டிருக்கிறான் என்னும் சேதி சொல்ல நான் வந்திருக்கிறேன் என்னை நீ நம்பலாம்!’என்னும் அனுமனின் மனோவாக்காக இருக்கலாம்! பரதனை நெருப்பு பற்றுமுன்பாக மாருதி பற்றுகிறான்.
காற்றின் மகனை தீஎன்ன செய்யும்?ஏற்கனவே அனுமன் இலங்கைக்கு தன் வாலினால் தீவைக்கும்போது சீதை,’ தீயால் அனுமனுக்கு ஏதும் தீமைவரக்கூடாது ’என வேண்டிக்கொண்டிருக்கிறாள்!
மாதாவின் வாக்கு மகனுக்குக்காப்பு!
கையினாலெரியைக்கரியாக்கினான் என்று அனுமன் வலிய பரந்த தன் கையினால் அக்கினியைப்பிசைந்து அவித்துக்கரியாக்கினதாக கம்பன் வர்ணிக்கும்போது கண்முன் காட்சியாய் விரிகிறது அல்லவா! .
இராமன் அளித்தமோதிரத்தை பரதனிடம் கொடுக்கிறான் வால்மீகியில் இப்படி ஒருகாட்சி இல்லை என்கிறார்கள்,. (அன்று அண்ணல், சீதைக்கு அளித்த கணையாழியை இன்று பரதனுக்கு அளிக்கச்செய்ய கம்பனால்முடிகிறது!)

மோதிரம் வாங்கித்தன் முகத்தின் மேலணைத்துக்கொள்கிறான் பரதன்.
அவன்மன நிலையை கம்பன் தமிழில் காணலாம், சுவைத்து மகிழலாம்.
அழும், நகும்; அனுமனை – ஆழிக் கைகளால்
தொழும், எழும்; துள்ளும் – வெங் களி துளக்கலால்
விழும், அழிந்து ஏங்கும் – வீங்கும், வேர்க்கும்; அக்
குழு வொடும் குனிக்கும் – தன் தடக்கை கொட்டும் ஆல்
வேதியர் தமைத் தொழும் – வேந்தரைத் தொழும்;
தாதியர் தமைத் தொழும் – தன்னைத் தான் தொழும்;
ஏதும் ஒன்று உணர்குறாது – இருக்கும், நிற்கும் ஆல்;
காதல் என்று அதுவும் ஓர் – கள்ளில் தோற்றிற்றே!

அழும் நகும் என்கிறவார்த்தைகள் குழந்தைத்தனத்தை சொல்வது. கள்ளம்கபடம் இல்லா குழந்தைமனம்தான் அப்படியெல்லாம் செய்யும்
இங்கேயும் கம்பன் ஆழ்வார் பெருமானின் இந்தப்பாடலைத்தான்நினைக்கவைக்கிறார்!
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ணநீர் கைகளால் இறைக்கும்*
சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும்
தாமரைக்கண் என்றே தளரும்.......
மேலும் படிக்க... "படியில் குணத்துப் பரத நம்பி!"

Saturday, September 19, 2015

பாசம் எப்போதும் தொடர்கதைதான்!



இரண்டுவருஷமாய் நான் இந்தியாவிற்குப்போகவே இல்லை. அதற்குமுன்புவரை வருடம்ஒருமுறைதவறாமல் போவது வழக்கமாக இருந்தது. ஒவ்வொருமுறையும் இருபதுநாளுக்குமேல் லீவ் எடுத்துக்கொண்டு வீட்டில் அப்பா அம்மா அண்ணா மன்னி தம்பிதங்கை அண்ணாவின் குழந்தை ப்ரியாக்குட்டியுடன் பொழுதினைக்கழித்துவருவேன்.மலைக்கோட்டை, சமயபுரம்,
கல்லணை,முக்கொம்பு,வயலூர் என்று பெரிய திட்டங்களோடுதான்
துபாயைவிட்டுப்புறப்படுவேன் ஆனால் அங்கெல்லாம் போக நேரம் கிடைக்காத அளவுக்கு வீடு என்னைக் கட்டிப் போட்டுவிடும்.



இந்தவருடமும் ஊருக்குப்போகவேண்டாமென்றுதான் இருந்தேன் ஆனால் போனவாரம் போனில்ப்ரியாகுட்டி,"சித்தப்பா எப்போ வரே?' என்று கேட்டதும் மனது கேட்கவில்லை.
புறப்பட்டுவிட்டேன்!




காவிரிப்பாலத்தில் டாக்சியில் வரும்போதே காலைநேரத்து இளம்குளிரோடுவீசியகாற்றில் உடலிற்குப் புதுத்தெம்பு வந்துவிட்டது.



மாம்பழச்சாலையைக் கடந்து ஊருக்குள் டாக்சிநுழையும்போது எதிரே விண்ணைமுட்டும்ராஜகோபுரம் 'வா வா' என அழைப்பதுபோல இருக்கிறது.


தெற்குவாசலில் டாக்சியை நிறுத்தசொல்லி மன்னிக்குப் பிடிக்குமே என்று ஜாதிமல்லிபத்துமுழமும், கோபுரத்துஅடியில் கூறுகட்டி
விற்றுக்கொண்டிருந்தவளிடம் அம்மாவுக்காக கொய்யாபழமும் வாங்கிக்கொள்கிறேன்.




டாக்சியின் எஃப் எம் கமல்படத்தின் ’ உன்னைக்காணாமல்...’என்றது.போனமுறை ஊர்வந்தபோதுதீப்தா எனக்குப்பாடிக்காட்டிய பாடல்! என் இனிய சிநேகிதியான அவளுக்கும் குடும்பச் சுமை அதிகம்,அதுவும்அவள் அப்பாவின் மறைவிற்குப்பிறகு, உள்ளூரில் ஒருசீட்டுக்கம்பெனியில் பணிபுரிகிறாளாம், மாதம்நாலாயிரம் ரூபாய் சம்பளத்திற்காக


சித்திரை வீதிவழியே டாக்சிபோகும்போது இரண்டுவருடங்களில் கொஞ்சமும் மாறாத என்ஊரைப்பெருமையுடன்பார்த்துக்கொள்கிறேன்.


. தேரடியில் ரங்கப்ரசாத் மற்றும் பாபு, சுதர்சனுடன் கிரிக்கெட் விளையாடியதைமனம் அசைபோட்டது.




?யாரு பரத்வாஜனா? ஏண்டாப்பா, ரண்டுவருஷம் கழிச்சி வரபோல்ருக்கு?"
எதிர்வீட்டுதிண்ணையிலிருந்து மூக்குக்கண்ணாடியை எடுத்து மறுபடி அணிந்தபடியேகிச்சாமாமா குரல்கொடுத்தார்.




"ஹைய்யா சித்தப்பா வந்தாச்சு:!" ஓடிவந்தது ப்ரியாகுட்டி. அட! ப்ரியாக்குட்டிஎப்படி வளர்ந்துட்டது!





டாக்சியை அனுப்பிவிட்டு நிமிர்கிறேன்.



வீட்டுவாசல்கதவை அடைத்துக்கொண்டு உறவுப்பட்டாளம்!



பார்வையாலேயே பாசத்தைப்பொழிந்தார் அப்பா. பள்ளிக்கூடத்தில் ஆசிரியராய்பணிபுரிந்தபோது அதிகம் பேசிய களைப்போ என்னவோ ஓய்வுபெற்றதிலிருந்து அப்பாயாருடனுமே அதிகம் பேசுவதில்லை.



"அதில்லைடா பரத் உங்கப்பாக்கு குடும்பச்சுமையை உன்மேல ஏத்திட்டோ மேன்னுமனசுக்குள்ள குறுகுறுப்பு உங்கண்ணாக்கும் சுமாரான சம்பளம்தான். சேமிப்பும்அதிகமில்லை..குடும்பம் ஓடணும்னுதான் படிச்சதுமே நீ துபாய் போய் பணம்அனுப்பிண்டு இருக்கே..பாவம் ...நாங்கள்ளாம் வாய்விட்டு சொல்லிடுவோம்...உங்கப்பா மனசுக்குள் வச்சிண்டு குமைவார். அதான் மௌனசாமியாராய் ஆயிட்டார்"என்று போனதடவையே அம்மா சொன்னாள்

.


"ரண்டுவருஷமாச்சே கண்ணா எப்டிப்பா இருக்க? என்னவோ இந்தக்குடும்பம் முன்னேறவும்வீட்டுக்கடனை அடைக்கவும் உன்னை
அவ்வளோ தூரத்துக்கு அனுப்பிட்டோ மேன்னு பலசமயம் வருத்தமா இருக்குப்பா"


அம்மா இப்போதும் பார்த்ததும் கண்பனித்தாள்.




"வாங்கோ! போனவருஷம் வருவேள்னு ரொம்ப எதிர்பார்த்தோம்"என்றாள் மன்னி. கல்யாணமாகி ஆறுவருடங்களாகியும் மாறாத புன்னகைமுகம்.




" அதான் லீவே கிடைக்கலை வரமுடியலைன்னு போன்ல சொல்வானே விஜி? இப்போ லீவ்கிடைச்சிருக்கு ஓடிவந்துட்டான் என் தம்பி!...வாடா பரத்...எப்படீ இருக்கே? அம்மா! அவனுக்கு ஃபில்டர்காஃபி புதுப்பால்லபுதுசா போட்டுக்கொடு" அண்ணா ராஜு தோளைத்தட்டி வரவேற்றான்

.


"பரத் அண்ணா! நான் இந்தவருஷம் ப்ளஸ்டூக்கு ரொம்ப ஹார்ட் ஒர்க் பண்ணிபடிக்கறேன்'


'நானும்:தான்"




இரட்டைசகோதர உறவுகள் சேர்ந்துகுரல் கொடுத்தன.



"இந்தவருஷமும் நீ வரலேன்னா நாங்க கடனை உடனைவாங்கி டிக்கட்போட்டுண்டுதுபாய்வந்துருப்போம்,தெரியுமா அப்படி
ஏங்கிட்டோ ம்டா பரத்! போன்ல எத்தனை பேசினாலும் நேர்ல பாக்றாப்ல ஆகுமா சொல்லு?"




"வந்ததும்வராததுமா அவனை ஆயிரம் கேள்வி கேக்காதங்களேண்டிம்மா.. பரத்! ஊஞ்சல்லஉக்காருப்பா... டீ சித்ரா! fan போடேன் சித்த..குழந்தை வெளிநாட்ல ஏசிகீசின்னு சௌகர்யமா இருப்பான் இங்க வந்த சித்த நாழிலகறுத்துப்போயிட்டான்பாரு.." அத்தை-அப்பாவின் மூத்த சகோதரி- வாஞ்சையுடன் என்
தலையைக் கோதிவிட்டாள்.




. :அம்மா சூடாய் வெண்பொங்கலும் கத்திரிக்காய் சுட்ட கொத்சும் தட்டில் வைத்துஎன்னிடம் நீட்டினாள்.தங்கநிறத்தில் வறுபட்டமுந்திரிகளும், பொம்மைமுயலின்கண்களைப்போல முழித்துக்கொண்டிருந்த மிளகும் நாக்கில் நீர் ஊறவைத்தது.




புழக்கடைப்பக்கம் போய் கிணற்றடியில் கைகால் அலம்பிக்கொண்டுவந்து தட்டைஅம்மாவிடமிருந்து வாங்கிக்கொண்டேன்.




"காஃபி முதல்ல தரக்கூடாதோ?" அண்ணா கத்தினான்.



"பசியா இருக்குமோன்னு முதல்ல டிபனைத் தந்தேன்..முடிச்சதும் காஃபி கலந்துட்டாபோச்சு"


"பொங்கலோட வடையும் பண்ணி இருக்கலாம்னு இப்போ தோண்றது

..சாப்பாட்டுக்குப்பண்ணிடலாம்மா...மச்சினருக்கு தயிர்வடைன்னா ரொம்பவேபிடிக்குமே?" மன்னி உருகினாள்.



"நேத்தே திரட்டிப்பால் கிளறிவச்சிட்ட்டேன் குழந்தைக்கு தட்ல ஓரமா போடேன்பத்மா,சொல்லணுமாக்கும்? "அத்தை அதட்டினாள் அம்மாவை அன்பாக.


வாங்கிவந்த சாமான்களை அனைவரிடமும் கொடுத்தபோது கண்களில் மகிழ்ச்சிதவழ நன்றிதெரிவித்தனர்.




"எதுக்குடா இப்படி சிரமம் எடுத்துக்கறே?"அண்ணன் அன்பாய்கடிந்துகொண்டான்.


ஊரும் மாறவில்லை என்வீட்டுமனிதர்களும்மாறவில்லை என்னும்போது எனக்குப்பெருமையாகஇருக்கிறது.




"கொள்ளிடம்போய்குளிச்சிட்டுவந்துடறேன்" என்றபோது அப்பா தன் சைக்கிள்சாவியைஎன்னிடம் தந்தார். நடந்துபோகக்கூடாதாம்!




படித்துறையில் தீப்தா துணி துவைத்துக்கொண்டிருந்தவள், என்னைக்ண்டதும்,"பரத்எப்போ வந்தே? "என்று வியப்பாய் கேட்டாள்.



சிறிதுநேரம் நாஞ்சில்நாடனையும் ஜெயகாந்தனையும் அலசினோம்.



"ஜெயகாந்தனும் போயிட்டாரேடா பரத் நம்பவேமுடியல"



"ஆமா ...மனசுக்கு ரொம்பக்கஷ்டமா இருக்கு.."



"என்னவோபோ..சொல்லிக்காம வர ஒரேவிருந்தாளி மரணம்தான்...
அதுபோக்கட்டும்..நாளைக்கு ஆடும்பல்லக்குடா, பரத்...வாசல்பூரா
கோலம் வழக்கம்போலப்போடப்போறேன்..நீவந்து பார்த்து கருத்து சொல்லணும் என்ன?"



"இந்த கம்ப்யூட்டர் யுகத்துலயும் சின்னக் குழந்தைமாதிரி கோலம்போடறதும்கொள்ளிடக்குளியலுமாய் அது இதுன்னு இருக்கியா தீப்தா?"



"மனசுக்கு சந்தோஷமான விஷயங்களை எதுக்கு மாத்திக்கணும் அல்லதுமறக்கணும் , அதுவேமத்த துக்கங்களை மறக்க ஒருகருவியா இருக்கறப்போ?"



நான் சிரித்தபடி வேறுபக்கம் நகர்ந்தேன்



ஆயிற்று ஊருக்குபோகிற நாள் வந்தாயிற்று.



எந்நேரமும் விரல்பிடித்துக்கொண்டே விளையாடிய ப்ரியாகுட்டி..


பார்வையால் வருடும் அப்பா..


வாய்க்கு ருசியாய் சமைத்துப்போடும் அம்மாவும் அதனை வயிறாரப் பரிமாறியமன்னியும்
..


பாடங்களில் சந்தேகம்கேட்டு என்னைப்பெரிய ஆசிரியர் போல மதிக்கும் என்உடன்பிறப்புகள்..




'துபாய்ல உப்பு,புளிகிடைக்குமா ?நல்ல ஹோட்டல் இருக்கா? உடம்புக்கு ஏதாவதுன்னாயாருடா பக்கத்துல இருக்கா உனக்கு?'

அத்தையின் அன்பான அக்கறையான கேள்விகள்.



'பரத்! அம்மா அப்பாவைப்பத்தி கவலையேபடாதே ...நானும்மன்னியும் நன்னாபாத்துக்றோம் என்ன? "

அண்ணாவின் அனுசரணையான பேச்சு..



சிநேகிதம் என்கிற எல்லைக்கோடிற்குள்லேயே எப்போதும் இருந்துகொண்டுபழகும்அன்புதோழி தீப்தா...





எல்லாரையும் விட்டு ஊருக்குபுறப்படவேண்டுமே என்றிருக்கிறது.






அப்பாமட்டும் எவ்வளவு தடுத்தும் சென்னை செல்லும் ரயிலில் ஏற்றிவிட ஸ்ரீரங்கம்ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்.



ரயில் வருவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்கும் போது அப்பா என்னிடம்,


"பரத்! உன்கிட்ட வந்ததுலேந்து கேட்க நினச்சேன் , இப்போ கேட்டுட்றேன்.. உன் தலைலகுடும்பச்சுமைய ஏத்திட்டோம்ன்னு எங்கபேர்ல கோபமா? அதனால்தானே நீ இத்தனை நாளாய்ஊர்பக்கமே வரலயா?" என்றார்.




'ஐயோ அப்பா! இந்தப்பேச்சுக்கு உங்கள் மௌனமே பரவாயில்லை' என்று கத்தவேண்டும்போலிருந்தது.



என்னையே பார்த்துகொண்டிருந்த அப்பாவின் விரல்களை பிடித்துக்கொள்கிறேன்.


"அ அ ..அ.ப்.பா! " வார்த்தைகள் உடைந்து வந்தன .




இருபத்தி ஏழுவயதில் இருபதுவயதை முழுங்கிவிட்டு, சிறுவனாய் கதறஆரம்பிக்கிறேன்.


"அப்பா ஒவ்வொரு தடவை ஊருக்கு வந்துவிட்டுப்போகிற போதெல்லாம் உங்க எல்லாருடையபாசத்தையும் பரிவையும் அனுபவிச்சிட்டுதிரும்பி துபாய் போனதும் பலநாட்களுக்கு என்னால் இதிலிருந்துமீளமுடிவதில்லை.. எதையுமே ருசிகண்டால்தானே அவஸ்தை?என்னால் ஆசையை அடக்கமுடியும்போல இருக்கு... ஆனா அவஸ்தையை தாங்கமுடியலப்பா..அதான் இத்தனை நாளா வரல...இப்போ மறுபடி துபாய்போனதும் இந்த அவஸ்தைதொடரபோகிறதுப்பா.." நான் முடிக்கவும் உடனே


"ப..ர..த்!"  என்ற அப்பாவின் குரலில் மேலும் கரைந்துவிடவும் இருந்த நிலையில், நல்லவேளையாய் ரயில் வந்துவிட்டது .
மேலும் படிக்க... "பாசம் எப்போதும் தொடர்கதைதான்!"

Friday, September 18, 2015

இராவண வதம்!




கம்பகாவியத்தின் கடைசிப்பகுதி யுத்தகாண்டம்!

‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்னும்நம்மாழ்வாரின் திருவாய்மொழி பணித்த வண்ணம் இராமபிரானைக்கற்கத்தொடங்கிய கம்பன் வால்மீகியின் வழியில் இராமாயணத்தைப் பாடத்துவங்கினான். வால்மீகியை ஏற்றும் தழுவியும் சற்றே மாற்றியும் மெருகூட்டியும் கதைப்போக்கு, கற்பனை, வருணனை ,பாத்திரப்படைப்பு ,காட்சி அமைப்பு போன்றவற்றில் புதுமை செய்து பாடலானான். ஆழ்வார்களின் அருளிச்செயலில் அவன் கொண்டிருந்த ஈடுபாடு எல்லையற்றதாகவே  தோன்றுகிறது.

கம்பனின்  பிரபலமான  பாடலான ’மைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே உன்கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்கு கண்டேன்.

என்பதின்  தாக்கம்  அவன் ஆழ்ந்து நேசித்த ஆழ்வார்பெருமானின் 

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற *
பின்னைவண்ணம் கொணடல்வண்ணம் வண்ணமெண்ணுங்கால்*
பொன்னின்வண்ணம்மணியின் வண்ணம் புரையுந்திருமேனி*
இன்னவண்ணமென்றுகாட்டீர் இந்தளூரிரே!

என்கிறபாடலை நினைக்கவைக்கிறது.

 இனி யுத்தகளத்தை  பார்க்கலாம்.
. இராம- இராவண யுத்தம் ஆரம்பமாகிவிட்டது.. இராவணன்  சரமாரியாக அம்புகளை அண்ணல்மீதுவிடுகிறான். இராமரும் எதிரி தளர்ச்சி அடையும்வரை பாணங்களை செலுத்துகிறார். 

இராவணன்  தலை கடலில்  விழும்போது தேவர்கள் நிலையை கம்பன் இப்படிச்சொல்கிறான்.

குதித்தனர்  பாரிடைக்குன்று கூட்டற
மிதித்தனர் வடகமும் தூசும் வீசினர்
துதித்தனர் பாடினர் ஆடித்துள்ளினர்
மதித்தனர் இராமனை வானுளோர் எலாம்..

(வடகம்  என்றால்  மெல்லிய ஆடையாம்! தூசு-=அரையாடை)

ஒருகட்டத்தில்  இராமபாணங்களால் இராவணன் தேரில் மூர்ச்சித்து விழுந்துவிட  இராமனின் தேரோட்டி மாதலி சொல்கிறான்.”உணர்வு தெளிந்துவிட்டால் இவனை ஒன்றும் செய்யமுடியாது இதுதான் சமயம்  இப்போதே இவனை அழித்திடுங்கள் ஐயனே” என்கிறான்.

‘அது நீதியல்ல’என்கிறான் இராமன்.

உணர்வு  மீண்ட இராவணன் மறுபடி இராமரைத்தாக்குகிறான். கடைசியில் இராமன் பிரும்மாஸ்திரத்தை எடுத்து இராவணன் மார்பில் செலுத்தவும் அவன்  நிலைகுலைந்து வீழ்கிறான்.இராவண வதம் இறுதியாக  முடிவடைகிறது.

இராகவன் தன்புனித வாளி உடல்புகுந்துதடவியதால் மனச்சிறையில்  சுரந்த காதற்பித்து நீங்க அவன் முகங்கள் மாசு நீங்கி பொன்போல பொலிந்தன என்பதை கம்பன் இப்படி சொல்கிறார்.. அடங்க அடங்க என்று  வரிக்குவரி சொல்லி நம்மை வியப்பில் வாய் அடங்க(அடைக்க) வைக்கிறார்! 

வெம்மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க மனம்அடங்க வினையும் வீயத்
தெம்மடங்கப் பொருதடக்கைச் செயல் அடங்க மயல்அடங்க ஆற்றல் தேயத் தம்அடங்கு முனிவரையும் தலை அடங்க
நிலை அடங்கச் சாய்த்த நாளின்
மும்மடங்கு பொலிந்தன அம் முறைதுறந்தான்
உயிர்துறந்த முகங்கள் அம்மா.




வீரமும்சினமும் அவனுக்கு தவறாகப் பயன்பட்டமையால் அவனது மேன்மைமிகு ,அனைத்து முனிவர்களின் தலைமைத் தன்மை கொண்ட தவக் களையை அவன் முகம்இழந்திருந்ததுஇன்று அத்தனை சினமும்,வீரமும் அடங்கிப் போனதால் ,தவக் களை உயிர் பெற்று முன்ன தன் நிலை மாறி மூன்று பங்கு பொலிவுற்று இன்று காணப் படுகிறது.

இராவணன் சிரத்தைக்கொய்ததை  திருமங்கை ஆழ்வார் இப்படிச்சொல்லுவார்

 . …… இலங்கைக்கோனை
பானுநேர் சரத்தால்பனங்கனிபோலப்
பருமுடி உதிரவில் வளைத்தோன்..’

பனங்கனிபோல என்னும் உவமை அரக்கனின் பத்துதலைகளையும் கொத்தாகப்பறித்து உதிர்த்த எளிமையைக்காட்டுகிறது. ஆழ்வாரின் இந்த உவமையை அப்படியே ஏற்றுக்கொண்டு கம்பன் இடத்தைமட்டும் மாறி இருக்கிறான்,கதை மாந்தரிலும் மாற்றம் செய்திருக்கிறான்
சடாயு உயிர்நீத்த படலத்தில்  இப்படி ஒரு பாடலை கம்பன் அளிக்கிறான்.

…தத்து உற்று அயரேல்தால பலத்தினேலும்
 கொத்தப்பன கொண்டிவன் கொண்டன வெற்றி வாசை
 பத்திற்கு மின்றே பலியீவது பார்த்தியென்றான்’

.’’  அழாதே சீதை.பனப்பழங்களின் கொத்துபோல ஒரு நிரையாக அடர்ந்துள்ள இவனது பத்துதலைகளையும் நான் அறுத்து  பத்துதிக்குகளுக்கும் பலிகொடுக்கிறேன் பார் ‘என்று ஜடாயு வை பேசவைத்த சிறப்பு கம்பனுக்கே உரியது.

 ஆழ்வார்பெருமக்கள் ராவண வதத்தை புகழ்ந்து பாடினதுபோல ஆண்டாளும்
மாதலிதேர்முன்பு கோல்கொள்ள
 மாயன் இராவணன்மேல்
 சரமாரி தாய்தலை
அற்றற்று வீழத்தொடுத்த
 தலைவன் வரவெங்கும் காணேன்  
என்பதாக  குயிலைநோக்கி நாச்சியார் திருமொழியில் பாடுகிறாள்..

இராமன் இரதமிருந்துகீழிறங்கி இறந்துகிடக்கும் இராவணனைப்பார்க்கிறானாம்..

பொல்லா அரக்கனைக்கிள்ளிக்களைந்தவன் இராமன்.சினத்தினால் தென்னிலங்கைகோமானைச்செற்ற மனதுக்கினியானாகிய  இராமனுக்கு இராவணனை  வென்றமை தனக்கு சிறப்பைத்தராதென்று தோன்றுகிறதாம்! புன்சிரிப்புடன்  கூறுகிறான்.
திகைப்பாகத்தான் இருக்கிறது நமக்கு!  இராமனின் இந்த மனநிலைக்குக்காரணம் என்ன?

(
மேலும் படிக்க... "இராவண வதம்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.