ஓங்கி உலகளந்த உத்தமன்!
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி,தன் பாசுரத்தில் வேறு எந்த அவதாரத்தையாவதுவேறு எந்த இடத்திலாவது, உத்தமன் என்று அழைத்துப் பாடி இருக்கிறாளா என்று தெரியவில்லை ஆனால் வாமனனை மட்டும் ஓங்கி உலகளந்த உத்தமன் என்கிறாள்! உலகளந்த என்று மட்டும் சொல்லாமல் முதல் சொல்லாக ஓங்கி என்றாள் ஏன்? அந்த சொல்லின் வீச்சு அற்புதமானது!
.பாரதி ...’"ஓங்கி வளர்ந்ததோர் கம்பம். அதன் உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே...’ என்கிறபோது கம்பத்தின் கம்பீரம் காட்சியாகிறது.
மகளைப்போல தந்தை,பெரியாழ்வாரும் உத்தமன் என்கிறார் ஒருபாசுரத்தில் .
,
” பாடிப்பாடி வருகின்றாயைப்
பற்பநாபன் என்றிருந்தேன்
ஆடிஆடி அசைந்து அசைந்திட்டு
அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி
ஓடிஓடிப்போய்விடாதே
உத்தமா..... என்கிறார்.
நம்மாழ்வாரோ
விதியினால் பெடை மணக்கும் மென்நடைய அன்னங்காள் மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு .. என்கிறார். கள்வன் என குற்றமாய் சொல்லவில்லை. ’திருடனே’ என உற்றவர்களை செல்லமாய் உரிமையாய் அன்பாய் அழைப்பதுபோலத்தான் இதுவும்.. |
மேலும்...
மன்னவன் பெரிய வேள்வியில் குறள் ஆய்
மூவடி நீரொடும் கொண்டு
பின்னும் ஏழ் உலகும் ஈர் அடி ஆக
பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்-
மூவடி நீரொடும் கொண்டு
பின்னும் ஏழ் உலகும் ஈர் அடி ஆக
பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்-
என்றுதான் திருமங்கையாழ்வாரும் அருள்கிறார். நிமிர்ந்தோன் என்பதைவிட ஓங்கி உலகளந்தான் என்கிறபோது அவதாரத்தின் பிரும்மாண்டம் கண்முன் விரிகிறது.
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி.....என்கிறது திருப்பாவை பாசுரத்தின் ஆரம்ப வரிகள்.
ஆண்டாள் பூர்ண அவதாரங்களான ராம-கிருஷ்ண அவதாரங்களப் பாடாமல்,த்ரிவிக்ரமன் பேர் பாடச் சொல்கிறாள். இதே த்ரிவிக்ரம அவதாரத்தை 17வது பாசுரத்திலும்(அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே(மறுபடி ஓங்கி உலகளந்த என்கிறாள்பாருங்கள்) என்றும், 24வது பாசுரத்தின் முதலடியிலும்(அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி! என்றும் ஆண்டாள் போற்றுகிறாள்!
ராம-கிருஷ்ண அவதாரங்களில் முறையே ராவணன்,கம்சன் தவிரவும் பல அசுரர்களை அண்ணல் வதம் செய்கிறார். இந்த அவதாரத்தில் மட்டும்(மகாபலியை அழிக்கவில்லை ஆனால், அவன் அகந்தையை அழித்து, அவனைத் திருத்தி தடுத்தாட் கொண்டார் ஆகவேஅந்தக் கருணை வடிவமான வாமன அவதாரமே அவளைப்பெரிதும் கவர்ந்திருக்கவேண்டும்.
மஹாபலி பக்தனாயிருந்தும் அவன் செயல்பாடுகளில் அத்து மீறிய அதிகார துர் உபயோகமும் அட்டூழியமும் இருந்ததால் இப்படி அவனை அப்புறப் படுத்த வேண்டி வந்தது. அதிகாரக்குவிப்பு எதை வேண்டுமானாலும் செய்யச் சொல்லும் அதற்குத் தடைஅவசியம் என்பது எல்லாகாலங்களிலும் பொருந்துகிறதே!
பெருமாள் நெடியவர், குறுகி அறியாதவர்; எல்லா உயிர்களுக்கும் அவை வேண்டும் வரங்களை வாரி வழங்குபவர்; யாரிடமும் எதையும் கேட்காதவர்.இந்திரனுக்காக மகாபலியிடம் சென்றபோது நெடியவர் குறுகி வாமனனாகச் சென்றார். இல்லறத்தார் பிரம்மச்சாரியானார்; வாரிக் கொடுப்பவர்வெறும் மூன்றடி நிலம் கேட்கிறார்.
கிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தூக்கியதில் இந்திரன் அவரோடு மாறுபட்டு அபசாரம் செய்தான். அப்படி தமக்கு அபசாரம் செய்தவனே, மகாபலியினால் தனது ராஜ்யத்தை இழந்து துன்பப்பட்டு பிரார்த்தித்த போது, அவனுக்காக மகாபலியிடம் செல்கிறார்.
`அகலகில்லேன் இறையும்' என்று உனது மார்பை விட்டகலாத திருமகளை மறைக்க மான் தோலை மூடிக்கொண்டு நீ பிரம்மச்சாரியாகிவிட்டாய்' என் றார் வேதாந்த தேசிகர்
`அகலகில்லேன் இறையும்' என்று உனது மார்பை விட்டகலாத திருமகளை மறைக்க மான் தோலை மூடிக்கொண்டு நீ பிரம்மச்சாரியாகிவிட்டாய்' என்
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்ததில்
குறள் சொல்லும் பாடம் இது!
(மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்து அளந்தான்...திருவள்ளுவமாலை)
பிச்சை எடுக்கும்போது ஒருவனுடைய கல்வி, கேள்வி,புகழ்,சாதுரியம்,மற்றும் வெற்றி என்ற ஐந்து தேவதைகளும் அவனை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து மீண்டு வர இயலாத தூரத்துக்கு விலகுகிறார்கள் என்பது தெரியாதா ? அதையும் செய்தான் பெருமாள். அது வாமனாவதாரம். அவன் உத்தமன்.எனவேதான் `ஓங்கி உலகளந்த உத்தமன்' என்றார் நாச்சியார்.
பல வைணவக்கோவில்களில் இந்தப்பாசுரத்தைசொல்லியபடியே நம் கையில் அர்ச்சனை பிரசாதங்களை தருகிறார்கள் அதுவும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓங்கிஉலகளந்த என்னும் பாசுரம் எல்லா சந்நிதிகளிலும் யாராவது ஒருவர் பாடிக்கொண்டே இருக்கிறார்கள்! தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரியும் நீங்காத செல்வமும் எங்கும் நிறைந்திருக்க ஆண்டாள் அண்ணலிடம் விரும்பிக்கேட்டு அருளிய பாசுரம் இது!
` ( மகாபலி கேட்டுக்கொண்டபடி வருடம் ஒருமுறை அவன் தன் மக்களைக்காண வரும் திருநாள்தான் ஓணத்திருநாள்! இன்றைய நன்னாள்!