Social Icons

Pages

Friday, September 11, 2015

கரிசல் பூமிதந்த கனித்தமிழ் கவிஞன்!





கார்த்திகைமாதக்கடைசிநாள் ஒன்றில்  கரிசல்பூமி, கவிபூமிக்கு  ஒரு பரிசினைக்கொடுத்தது.   நெல்லைஜில்லா கொள்ளைப்பெருமை கொண்டது!கோவில்பட்டி கொடுத்துவைத்தது.! எட்டயபுரம் ஏற்றம் கொண்டது. 


சுப்பையாவின்  திறமையை  சொல்லுவதும் எப்படி ஐயா! முண்டாசுக்கவிஞன் பெருமையை  தண்டோரோ போட்டுத்தானா சொல்லவேண்டும்!  மல்லிகைமணத்திற்கு விளம்பரமா தேவை?  இல்லை இல்லை  .. அவனை நினைக்காத நாள் இல்லை.ஆனால்.நினைவுநாளில் சற்று கூடுதலாய் நினைக்கவைக்கிறது ,அவன் விட்டுச்சென்ற பாக்கள் என்னும் பூக்களின் வாசம்!
கல்வடிவக்கடவுளைபோல் அவன் சொல்வடிவத்தமிழ் சிற்பம் காலத்தால் அழியுமா என்ன!வெறும் தமிழ் வண்ணத்தமிழ் ஆனது அவன் கைவண்ணத்தில்! அணையா ஜோதியாக அவன் அறிவு விளக்கு எரிந்துகொண்டே இருந்ததினால்  அளவில்லா கவிதைகளை அள்ளி வழங்கிவிட்டான்! அவனே மரபுக்கும் புதுமைக்கும் நடுவே நின்ற  நெருப்பு!  

முன்னைப்பழமையும் பின்னைப்புதுமையும் அவன் அடிமுடியைக்காணமுடியாமல் இன்னமும் அலைந்துகொண்டிருக்க ஓர் அதிசியமாக  ஓங்கி நிற்கிறான் சுப்ரமண்யபாரதி! இந்த எட்டயபுரத்து சிவகாசிப்பட்டாசின் கவிதைகள் ஒவ்வொன்றும் கந்தகக்கடுதாசி!

தமிழ் அவனுக்குத்தோழி. நஞ்சுதமிழ்தனை ஒழித்து நல்லதமிழில் அவன் எழுதும்  பாட்டினை ரசிக்க உடன் இருப்பாள் பல நாழி.
.முப்பத்தி ஒன்பதுவயதிற்குள்  தன் முழுத்திறமையையும் காட்டிவிட்டு மறைந்த மகாகவிஞனின்  நினைவுதினம் இன்று.


பாரதியின் பன்முக ஆளுமை பலரும் அறிந்ததே ஆயினும் அவனது  பிறந்த ஊர் நேசம் பலபாடல்களில்  பழகிய சொற்களில்  தெறிக்கும்.  பிறந்துவளர்ந்த  ஊரின் மீது பற்று இல்லாதவர்  யார்?

பிறந்த ஊருக்குப்போய்ப்பாருங்கள்அங்கு வீசும் காற்றும் காதோரத்தில்
 கதைபலபேசும்.

பாரதியின் நினைவுநாளில் அவனது  பிறந்த மண் வாசம் வீசும்  சிலபாடல்களைப்பார்க்கலாம்.

தமிழகத்தில்  தமிழின் அழகு  ஊருக்கு ஊர்  வித்தியாசப்படும். பாட்டுப்பாடுதல் என்பதை பாட்டு படித்தல் என்பார்கள் நெல்லையில்.

பாரதியும், தனது தீராதவிளையாட்டுப்பிள்ளை  என்ற பாடலில்

புல்லாங்குழல்கொண்டுவருவான்
அமுது பொங்கித்ததும்பு நல்
கீதம் படிப்பான்..


என்று சொல்லி இருப்பார்.

இந்தப்பாடலை தனது முப்பதாவது வயதில் பாடி இருக்கிறார். அதாவது  பிரந்தமண்ணைவிட்டு  வந்தபலகாலம்  கழித்து!  கீதம் பாடுவான் என்றில்லாமல் கீதம் படிப்பான் என்கிறார்.

படித்தல் வாசித்தல் என்ற இரண்டுமே ஒரேபொருளை வழங்குகிறது. குழல் வாசித்தல்  வீணை வாசித்தல் என்கிறோம். இந்த வழக்கம்  இன்னமும் நம்மிடையே இருக்கிறது.

கண்ணன் என் காதலன் பாட்டில்  ஓர் இடம் பார்க்கலாம்

.கனவுகண்டதிலே  ஒருநாள்
கண்ணுக்குத்தோன்றாமல்
இனம் விளங்கவில்லை எவனோ
என் அகம் தொட்டுவிட்டான்.

இதில் இனம்  என்பதற்கு அடையாளம் என்று பொருள். இன்றும் கோவில்பட்டிபகுதிகளில் இந்த  இனம்  எனும் சொல்லாட்சி இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் அடையாளம் என்றே சொல்கிறோம்.

பாரதியின் சந்திரிகையின் கதை  கடைசிப்பக்கத்தில்  இப்படி  எழுதியிருக்கிறார்.

“….இவர் எத்தனைக்கெத்தனை  அவள் உறவையும் ஊடாட்டத்தையும் விரும்பத்தொடங்கினாரோ அத்தனைக்கும்அத்தனை இவள் இவரிடமிருந்து ஒதுங்கவும் மறையவும் தொடங்கினாள். அவளை நாம் காதலிக்கும் யோக்கியதை இல்லாத மனையடிமைப் புகழ்ச்சியாகவும் குழந்தைவளர்க்கும் செவிலியாகவும் நடத்திவந்தோம். அப்போதெல்லாம் இவள் நமக்கு மிகவும் பணிவுடன் அடிமையிலும் அடிமையாய் நடந்துவந்தாள். இப்போது நாம் பரமார்த்தமாக இவளுடைய அன்பைக்கருதி அதனைவேண்டிச்  சருவப்புகுந்தபோது இவள்பண்ணுகிற மோடியும் இவள் செய்யும் புறக்கணிப்புகளும்  பொறுக்கமுடியவில்லையே…”

சோமநாதய்யர் என்ற கதாபாத்திரம் இவ்வாறு ஆலோசித்ததாக எழுதியிருக்கிறார் பாரதி.
இதில்  முதலில்வரும் ஊடாட்டம் என்ற சொல்லைபார்க்கலாம்.

ஊடாட்டம் என்றால்  கலத்தல் அடிகலந்து பழகுதல் என்று அர்த்தம். மலையாளமொழியிலும் இந்த சொல் உண்டு.  ஊடாட்டம் ஊடுதட்டு ஊடு பாய்ச்சல் ஊடு புகுதல் என்ற வெவ்வேறு பொருள்கொண்ட சொற்களும் நெல்லைப்பகுதியில் சகஜம்.

ஊடாடும் எனும் சொல்லை  ஆரண்யகாண்டத்தில் மாரீசன் வதைப்படலத்தில் சூர்ப்பனகை தன்  அண்ணன் இராவணனிடம் பேசும்போது ‘சீதை என்னும் மானைவைத்துக்கொண்டு நீ இன்பம் துய்ப்பாயாக நான் அனுபவிப்பதற்கு ராமனை அடையும்படி செய்’என்று வேண்டுகிறாள்.

மீன் கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்த,
தேன் கொண்டு ஊடாடும் கூந்தல், சிற்றிடை சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடு நீ, உன் வாள் வலி உலகம் காண,
யான் கொண்டு ஊடாடும்வண்ணம் இராமனைத் தருதி என்பால்

 ’ஊடாடும்’ என்ற சொல் எத்தனை அழகாக கையாளப்பட்டிருக்கிறது! இந்த சொல் ராமாயணத்தில் கையாளப்பட்டிருப்பதால் அன்றே  தமிழ்நாடெங்கும் வழங்கிவந்த சொல் என்பது தெளிவு ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் நாவில் இந்த சொல் பயின்றுவரப்பார்க்கிறோம்.

அடுத்து சருவுதல் என்ற சொல்லைப்பார்ப்போம்

.இதற்குப்பழகுதல் கொஞ்சிக்குலாவுதல் என்று பொருள். கொஞ்சிப்பழகுவதற்காக நெருங்கிஉறவாடுதல் இன்னும் பொருத்தமாக இருக்கலாம்.

.  சருவுதல் என்னும் சொல் கோவில்பட்டிப்பகுதியில் தான் அதிகம்புழக்கத்தில் இருக்கிறது போலும்!

மோடி  என்னும் சொல் செருக்கு கம்பீரம் ஆடம்பரம் ஸ்டைல் என்றெல்லாம் பொருள்தருகிறது(பிரதமரை  நினைக்கவேண்டாமே?:) மோடி  அதிகம் கம்பராமாயணத்தில் வரும்!!.....”…நிந்தன் மோடி கிறுக்குதடி தலையை நல்ல மொந்தை பழைய கள்ளைப்போலே… என்கிறார்  திக்குத்தெரியாத காட்டில்  பாட்டில்!!

ஆத்திரம் என்ற சொல்லை நாம் கோபமென நினைக்கிறோம் அது அசல்பொருள் அல்லவாம்   அவசரம் என்பதே சரியாம். பணம்  மிகுந்திருந்தால் ஆத்திர அவசரத்துக்கு உதவும் என்றபழமொழி உண்டே.  ஆதுரம் எனும் வடசொல்லே ஆத்திரமாம் ஆதுரம் என்றால் அவசரம் என்றே பெயர். கோபம் அவசரம் என்பவைகளுடன் ஆவல் கடமை என்னும் பொருள்களும் கோவில்பட்டிவழக்கில் இந்த சொல்லுக்கு உண்டு.  ‘அவருக்கு உன்னைப்பார்க்கவேண்டுமென ரொம்பவும் ஆத்திரம்’என்றால்  இங்கே ஆத்திரம் ஆவல் ஆகிறது. பாரதி ‘ஆத்திரம்’ என்னும் சொல்லை அழகாகப்பயன்படுத்திய பாடல்களை மறக்கமுடியுமா என்ன!

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடி ஆத்திரம்கொண்டவர்க்கேகண்ணம்மா சாத்திரம் உண்டோடி

ஏதுக்கித்தனை மோடிதானோ? பிரபலபாடல் நினைவுக்குவருகிறது இது திரைப்படப்பாடலா என்ன?

இப்படிப்பலப்பல  பிறந்த மண்ணின்  வாசமிகு வார்த்தைகளை பாரதி தன்கவிதைகளில்  அள்ளித்தெளித்திருப்பார்!..

எழுத்துக்களைத்  தீப்பந்தங்களாக  ஏந்தியபாரதி,தீபங்கள் ஏற்றும் திருக்கார்த்திகைமாதத்தில் பிறந்ததாலோ என்னவோ இப்படிச்சொன்னான்,

 தீ இனிது !

ஆம் ஐம்பொறிகளும் தீப்பொறிகளாக  வாழ்ந்துகாட்டிவிட்டு வானமேறிவிட்டான் அந்த வரகவி! நமக்கு  இனி வாராகவி!

6 comments:

  1. பாட்டுக்கொரு புலவன் பாரதியின் நினைவு நாளில் பல வட்டாரத் தமிழ் சொற்களையும் அலசி இருக்கிறீர்கள். வாழ்த்துகள். இன்று என் தளத்திலொரு போட்டி அறிவித்திருக்கிறேன் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைக்கிறேன்

    ReplyDelete
  2. அன்பு ஷைலஜா. பாரதி நினைவு நாள் எப்பொழுதும் ஒரு சோகம் சூழும்.
    உங்கள் அருமை வார்த்தை விளையாட்டுகளால் ஆத்திரம் அவசரம் ,மோடி என்று மீண்டும் பாரதியைப் படிக்க ஆவல் எழுகிறது.
    அதிசயமான எழுத்து.சொல்லாடல் பாரதியை மீண்டும் உயிர்ப்பித்த ஷைலஜாவுக்கு மிக நன்றி.

    ReplyDelete
  3. சருவுதல் விளக்கம் உட்பட அனைத்தும் சிறப்பு... நன்றி...

    ReplyDelete
  4. வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது... விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது... தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது... நன்றி...

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  5. பாரதியின் நினைவு நாளில் மிக அருமையான பகிர்வி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நன்றி டிடி ஜி எம் பி சார் வல்லிமா சே குமார் ஆகியோர்க்கு டிடி உங்க வலைப்பூவில் பதில் த்ந்துவிட்டேன்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.