எதிரே விண்ணை முட்டும் கோபுரம் தெரிகிறது. தொலைவில் மண்ணை முட்டும் தொடுவானம் தெரிகிறது. சிறகிருந்தால் இந்த கோபுரத்தின் உச்சியிலிருந்து கிளம்பி அந்தத்தொடுவானம் வரை சக்கர வட்டம் அடிக்கலாம். என்னும் ஆசை எழுகிறது. நமக்குச்சிறகு இல்லை ஆனால் என்ன? வானத்துக்கும் மண்ணுக்குமாய் நாம் சவாரி செய்வதற்கு ஏற்ற வாகனம் ஒன்று இருக்கிறதே!
பாரதி பாடுகிறார்..
தென்னையின் கீற்றுச் சலசல வென்றிடச் செய்துவருங் காற்றே!
உன்னைக் குதிரை கொண்டேறித் திரியுமோர் உள்ளம் படைத்து விட்டோம்.
ஆம் காற்றுதான் அந்த வாகனம். அதிலே ஸ்தூலமாக அதாவது இயல்பான உருவத்துடன் செல்லமுடியாதுபோனாலும், சூட்சமமாக அதாவது உணர்வினால் சவாரி செய்யலாம் அத்தகைய உள்ளம் படைத்திருக்கிறோம் நாம்.
’மண்ணுலகத்து நல்லோசைகள் காற்றெனும் வானவன் கொண்டுவந்தான்’. என்கிறார் மகாகவி. இந்தக்காற்று நமக்குப்பணிவிடை செய்கிற தூதுவனாக விளங்கி எத்தனை எத்தனை சப்த ஜாலங்களை, ஒலி அலைகளை ஏந்தி வருகிறது! அவை எல்லாவற்றையும் மண்ணில் இசைத்துப்பாடி மகிழ வேண்டும் என்கிற ஆசை எழுகிறதல்லவா!
ஒரு கவிஞர் சொன்னார் “இறைவா இந்த உலகத்தில்தான் எத்தனை அன்பு நிறைந்திருக்கிறது! அந்த அன்பை எல்லாம் வாரிச்சுருட்டிக்கொண்டுவிடமுடியுமானால் எத்தனை பேறு அது!”
அன்புக்கு மட்டுமல்ல ஒலிக்கும் அதே தாபம்தான்.
பாரதியின் வசனகவிதையில் இதனைக்காணலாம்..
.பாரதியின் வசன கவிதை இனிமைகொண்டது. எளிமையானது, கவிதைநயம் மிக்கது, உயிர்த்துடிப்பான ஓட்டம்பரவியது!
பாம்புப் பிடாரன் பற்றிப் பாரதி தன் வசன கவிதையில்கூறுவதைப்பார்க்கலாம்
பாம்பு அவன் இசைக்கு மயங்கி ஆடுகிறது,ஆனால் பாம்புக்கு செவி இல்லை என்கிறார்கள் பிறகு ஏன் அது ஆடுகிறது?
பாம்புக்கு செவி என்று தனி உறுப்பு இல்லை ஆனால் தன் உடல் முழுதுமே ஒலி அலைகளை உள்வாங்கி புல்லரித்துநர்த்தனமிடும் அபூர்வ நாத லயம் நிறைந்திருக்கத்தான் வேண்டும்!
இசையை இப்படி உடல்முழுதும் வாங்கி மகிழும் பிராணி வேறு ஏதும் உண்டா என்று வியப்பு ஏற்படுகிறது!
அதிருக்கட்டும் பாம்புப்பிடாரன் குழல் ஊதுகிறானே அந்தக்குழலிலா இசை பிறந்தது! குழல் தனியாக இசை புரியமுடியாதே! அப்படியானால் குழலில் உள்ள தொளைமூலமாக இசை பிறந்ததா? வெறும் தொளையில் இசை பிறக்கமுடியாதே! அப்படியானால் பாம்புப்பிடாரன் மூச்சிலே பிறந்ததா இந்த இசை?
கேள்வி சிக்கலாக இருக்கிறது.
பாரதி பதில் சொல்கிறார்..
”அவன் உள்ளத்திலே இசை பிறந்தது, குழலிலே வெளிப்பட்டது!”
//
அவன் உள்ளத்தில் பாடுகிறான். அது
குழலின் தொளையிலே கேட்கிறது’ என்கிறார் தன் வசன கவிதையில் .
ஆனால் நமக்குத்திருப்தி பிறக்கவில்லையே! உள்ளத்திலே இசை பிறந்தாலும் உள்ளம் தனியே எப்படி ஒலிக்கும் என்று கேட்கிறோம்.
நியாயம் தான்.
உள்ளம் குழலில் ஒட்டாது. ஆனால் உள்ளம் மூச்சில் ஒட்டும். குழல் கூட எப்படி தனியே ஒலிக்கும்? மூச்சு குழலில் ஒட்டும், குழல் பாடும்!.
பொருந்தாத பொருள்களைப்பொருத்தி வைத்து அதிலே இசை உண்டாக்குதல்...சக்தி.
இந்த அபூர்வமான விளக்கத்தை பாரதியின் வசன கவிதையில் பார்க்கிறோம். மூச்சிலே ஒட்டும் உள்ளமும், காற்றிலே சவாரி செய்யும் உள்ளமும் அழகும் அருளும் நிறைந்த இப்பெரிய உலகின் ரசானுபவங்களை எல்லாம் நமக்குக்காட்டுகின்றன!
. ஒலிமயமானது உலகு! அத்தனை ஒலிகளும் இசைக்கீற்றுகள். அவற்றைக்கேட்டுப் பண்ணிசைக்கும் உள்ளமெல்லாம் பாக்கியம் செய்தவை!
எதிரே கோபுரம் தெரிகிறது அது அழகின் வார்ப்பு! தொலைவில் தொடுவானம் தெரிகிறது அது அருளே வடிவான இறைவன் கருணையுடன் மண்ணைத்தொட்டு நிற்கும் பூரிப்பு!
தெரியும் பொருளைக்கொண்டு தெரியாத பொருளை எட்டிப்பிடித்துவிட முடியும் என்கிற தத்துவம் புரிகிறது!
ஒலி அலைகளும் அதே வித்தையைத்தான் உணர்த்துகின்றன. அவை புற உலகை மட்டுமல்லாது அக உலகையும் நமக்குக்காட்டுகின்றன. அவ்வாறு காண்பதில் வெறும் காட்சி இன்பம் மட்டுமல்ல காட்சிக்கு அப்பாற்பட்ட இறையருளின் மாட்சி இன்பமும் நமக்கு வாய்க்கின்றன!
இது எத்தனை பாக்கியம்!.
எளிமையாக இருப்பதுபோலத்தோன்றினாலும் சூட்சமமாக பல கருத்துக்களை அர்த்தங்களை பாடல்வரிகளில் புகுத்துவதில் பாரதிக்கு நிகர் பாரதியே!
திருவைப்பணிந்து நித்தம்
செம்மைத்தொழில்புரிந்து
வருகவருவதென்றே - கிளியே
மகிழ்வுற்றிருப்போமடி!
வெற்றி செயலுக்கு உண்டு ....
என்று தொடரும் கிளிப்பாட்டில் வெற்றி செயலுக்கு உண்டு என்பவன் செயல் செம்மையாக இருக்கவேண்டும் என்கிறான். செம்மைத்தொழில் என்பது அதுதானே! செயல் என்னும் சொல் மிக எளிமையாகத்தோன்றினாலும் பரந்த உட்கருத்தும் ஆழ்ந்த பீடத்தையும் கொண்டது.’பக்தி உடையார் காரியத்திற் பதறார்’ என்கிறார்பிறிதோரிடத்தில்.
காரியத்தில் அதாவது செயலில் ஈடுபட்டோர் பக்தி உடையோராக இருக்கவேண்டும்.அவர்கள் வித்து முளைக்கும் தன்மைபோல மெல்லச்சென்று உயர்ந்து பயன் அடைவார்.என்கிறான். விதை மண்ணில் நட்டதும் காய்த்து கனிதருவதில்லை அது மேலே செல்வது உறுதி,அதற்குக்காலமும் பருவமும் கூடவேண்டும்.
எந்தச்செயலுக்கும் பக்தி அடிப்படை .அது இறைவனைத்துதித்து நிற்கும் சொல்லுக்கான பொருள்மட்டுமில்லை. ஆழ்ந்த உள்ளுணர்வு இடையறா முயற்சி லயிப்பு ஈடுபாடு சிரத்தை பணிவு ஆகியபலபொருட்களை உள்ளடக்கிய ஒருமைச்சொல்.அத்னாலதான் ‘நித்தம் செம்மைத்தொழில் புரிந்து..என்றான் பாரதி.
இன்று புதிதாய்ப்பிறந்தோம் என்று நெஞ்சில் எண்ணமதைத்திண்ணமுற இசைத்துக்கொண்டு வாழல் வேண்டும் ‘என்ற பாரதிதான் ‘நித்தம்’ என்ற கால அளவைச்சொல்கிறார். தினம் தினம் புதுமைதானே! ஒவ்வொருகணமும் புதிது! உயிரும் புதிது உள்ளமும் புதிது! தொழிலும் அதில்காணும் செம்மையும் கணம் கணம் மலர்வன புதியன!