Social Icons

Pages

Sunday, July 14, 2013

வெள்ளை வண்ண விடமுமுண்டாங் கொலோ.!

கம்பராமாயண வகுப்பு இப்போதுதான் ஆரம்பித்தமாதிரி இருக்கிறது அதற்குள்   14வாரங்கள் ஓடிவிட்டன!

பாரதநாட்டின்  மிகச்சிறந்த  காவியமாக  இராமாயணம்  போற்றப்படுகிறது. காலங்கள் பல கடந்தும் அது இன்னமும்  வாழ்கிறது .

ராமாயணத்திற்கு  என்ன ஒரு சிறப்பென்றால் ராமானுஜர் , திருமலை நம்பிகளிடம் 18தடவை  ராமாயணம் கேட்டாராம்! அத்தனை  தடவைகேட்க அத்தனை விஷயம் அதில்  இருக்கிறதென்றாராம்  எதிராஜர் என்னும் பெரும்புதூர் மாமுனியான  ராமானுஜர்.

வாங்கரும் பாதம் நான்கும் வகுத்த வால்மீகி என்பான்
தீங்கவி செவிகளாரத்  தேவரும் பருகச்செய்தான்


என்கிறான் கம்பன்.

ஒரு ஸ்லோகத்திற்கு நான்கு பாதங்கள்-அதாவது அடிகள்.

24000  ஸ்லோகங்கள்!  அவர் வகுத்திருந்த பாதங்களில் எதனையும் வாங்க-அதாவது-  எடுக்க  இயலாதபடி  தேவர்களும்  செவி மகிழக் கேட்கும்படியாக இருக்கிறதாம்!

கம்பன் அமுதத்தில்  பல துளிகளை  ரசிக்கும் பேறு பெற்றுள்ள நிலையில்
நேற்றைய வகுப்பில்  கம்பனின் ஒரு பாடல்  கண்ணையும் மனத்தையும் விட்டு  இன்னமும் நீங்காமல்  இருப்பதை  கொஞ்சம் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேனே!




அதாவது  இராமன்   (இன்னும் திருமணம்  நடக்கவில்லை)  சீதையைப்பார்த்த நினைவில் தவிக்கிறானாம்.


கம்பன் , ராமன் நினைப்பதை   இப்படி  எழுதுகிறான் பாருங்கள்.


கொள்ளை கொள்ளக்  கொதித்தெழு பாற்கடல்
பள்ள வெள்ள மெனப்பட ருந்நிலா
உள்ள வுள்ள வுயிரைத்துருவிட
வெள்ளை வண்ண விடமுமுண்டாங் கொலோ.


கொள்ளை கொள்ள  அதாவது  உலகமுழுவதையும் கவர்ந்து இழுத்து தன் வசமாக்குவதற்கு
கொதித்தெழு பாற்கடல்.. பொங்கி எழுகின்ற பால்கடல்

பள்ள  வெள்ளமென  ஆழமாகிய நீர் வெள்ளம் போல்படரும்
படரும்...உலகெங்கும் பரவி உள்ள
நிலா..சந்திரகாந்தமானது
உள்ள உள்ள..நான் அந்த மங்கையை.நினைப்பதே பயனாகப்பிழைத்துள்ள
உயிரைத்துருவிட.... உயிரைத்துளைப்பதனால்
வெள்ளை வண்ண விடமுமுண்டு கொலோ..வெள்ளைநிறத்தில் விஷமும் இருக்கிறதோ(என்று எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது)

விஷம் என்பதுகரிய நிறம். ஆனால் நிலாஎன்கிற வெள்ளை நிறம் விஷமாகக்கானப்படுகிறதாம். காதலியில்லாமல் தனிமையில் இருக்கும் தனக்கு மரண வேதனை தருகிற நிலவினைப்பழித்துக்கூறுகிறானாம் ராமன்!

பாடல் அருமையாக இருக்கிறதுதானே! கம்பராமாயணப்பாற்கடலில் இது ஒரு துளிதான்!








 
மேலும் படிக்க... "வெள்ளை வண்ண விடமுமுண்டாங் கொலோ.!"

Thursday, July 11, 2013

பத்தும் செய்யலாம் பணமிருந்தால் !





 .....................................................
உலகம் இருப்பதும் பணத்தாலே இங்கே
கலகம் வருவதும் அதனாலே-மனக்
கலக்கம் பிறப்பதும் பணத்தாலே-இதன்
விளக்கம் தருபவர் யார் இங்கே?

பேதங்கள் வளர்வதும் பணத்தாலே-நல்ல
வேதங்கள் கெடுவதும் அதனாலே- வீண்
வாதங்கள் பிறப்பதும் பணத்தாலே- அதன்
பாதங்கள் வெறுப்பவர் யார் இங்கே?

மனமுங் குலைவது பணத்தாலே-நல்ல
குணமும் கெடுவது அதனாலே- அதை
தினமும் வணங்கும் மனிதனுக்கு-எந்தக்
கணமும் இல்லை ஒரு தவிப்பு!

பத்தும் செய்யலாம் பணமிருந்தால் -எந்தப்
பித்தும் பிடிக்கும் அது இருந்தால்!-சிலர்
செத்தும் பிழைப்பார் பணத்தாலே-நற்
முத்துக்குணத்தையும் தான் இழப்பார்!

நிறத்தால் பிரியும் மனிதனையே -தன்
திறத்தால் பிரித்தே வைத்திடுமே-இதை
வெறுத்தோர் என்று யாருமில்லை-பணத்தை
வெறுத்தோர் இங்கே வாழ்வதில்லை!






('தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினால்
சர்வதேச மட்டத்தில் ஜூன் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் சகோதரிஷைலஜா முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார் கவியருவி சான்றிதழ் பெறும்முதலாவது கவிதை இது '   என்று  அறிவித்துள்ளார் தடாக நிறுவனர் நன்றி அவர்தமக்கு)
https://www.facebook.com/thadagamkalaiilakkiyavattam?hc_location=timeline
 


 
மேலும் படிக்க... "பத்தும் செய்யலாம் பணமிருந்தால் !"

Sunday, July 07, 2013

தாயே யசோதா!(சிறுகதை)





மாலதியும் பத்ரியும்  ஏகமனதோடு அந்த முடிவிற்கு வந்தார்கள். அதற்குத்  தங்களைத்  தயார்ப்படுத்திக்கொள்ள  ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன..
 
 
ஆமாம்,  மீராவை அவர்கள்  தத்தெடுத்து இன்றோடு  பதிமூன்று  வருஷங்கள் ஆகிவிட்டன.   அவளுக்கு ஆறுவயதாகும் வரை  குழந்தையாகத்தான் இருந்தாள் அப்புறம்தான்  ஒருநாள் கேட்டுவிட்டாள்” என்னம்மா  நான்  உன்னை மாதிரியும் இல்லை அப்பா மாதிரியும் இல்லை  அப்படியானால் நான் யார்ஜாடை? என்று கேட்டபோது  இருவருக்குமே தூக்கிவாரிப்போட்டது.
 
  பத்ரி  ஊரிலிருந்து  அப்போது வந்திருந்த தன்  தாயை  சுட்டெரிப்பதுபோல பார்த்தான்
 
.’உங்க வேலையா இது?’  கண்கள் அதட்டின
 
 
”இல்லையப்பா சத்தியமாய் நான் இல்லை”
 
அவன் தாய் மிரண்டாள் கண்களாலேயே.
 
” அப்பா! உங்க  அக்கா  ஒருத்தங்க  இருந்தாங்கன்னு சொல்விங்களே அவங்க கூட சின்ன வயசுலேயே இறந்துட்டாங்கன்னும் சொல்லி இருக்கீங்க . நான் அத்தை ஜாடையா இருக்கலாமோ?”  அவளே தொடர்ந்து கேட்கவும்.”ஆமாம் ஆமாம் “ என்று  உரத்தகுரலில்  மாலதியும் பத்ரியும்  பெருமூச்சு விட்டபடி அமோதித்தனர்.
 
அப்போதிலிருந்தே  என்றைக்காவது மீராவிடம் உண்மையைசொல்லிவிடவேண்டும் என நினைத்துக்கொண்டார்கள் . இப்போதுதான் அதற்கு வேளை  வந்திருக்கிறது.
 
  கல்யாணமாகி ஏழுவருடமாகியும் குழந்தை இல்லாமற்போகவும்  குறை  மாலதியிடம் என்று முடிவானதும்  பத்ரி சற்றும்  மனம் தளரவில்லை..”தத்தெடுக்கலாம் மாலு.. தப்பில்லை...நமக்காய்ப்பிறந்ததுமேல் நாம் அன்பு செலுத்தினால் அது இயற்கை ,ஆனா  அனாதைகளை  தத்தெடுத்து நம்குழந்தையாய் வளர்க்கிறதுதான் மானுடம்” என்றான்.
 
 
சின்னஞ்சிசுவை தத்தெடுத்த கையோடு வேலைமாற்றிகொண்டு  சென்னையிலிருந்து பெங்களூருக்கு  வந்துவிட்டான்.
குழந்தைக்கு  மீரா என்று பெயர் வைத்தனர்.
 
 
மீராவைக்கண்போல வளர்த்தனர்.
 
 
மீராவிற்கு தினமும் தூங்கப்போகுமுன்பு கதைகள் சொல்லும் வேலை  மாலதிக்கு !அதைப்பெருமையாய் செய்துவிடுவாள் மாலதியும்..பாடம் சொல்லிக்கொடுப்பது பத்ரியின் கடமை.  ஆக அவர்களின்  வற்றாத அன்பில் மீரா  இன்று பதிமூன்றுவயதுப்பெண்ணாய் வளர்ந்து நிற்கிறாள்.. அறிவும் விவேகமும் கொண்ட பெண் என்று வகுப்பு ஆசிரியை அவளைபுகழ்கிறார்.
 
“கொடுத்து வச்சவ மாலு நீ! உன் பொண்ணு ரொம்ப சமத்து  ...படிப்பில் சுட்டி. குணத்திலும் பிடிவாதம்்மில்லை.. என் பொண்ணுக்கு படிப்பும் வரலை. மகாபிடிவாதம் அப்படியே  என் மாமியாரைக்கொண்டிருக்கு சனியன்’என்று  குடி இருப்புதோழி  வசந்தா  சொல்வாள்..
 
வசந்தாவைப்போல பலரிடமும் மீராவிற்கு நல்லபெயர்தான்!
 
“ஆச்சுடிம்மா  இனிமே எப்ப வேணாலும் மீரா   வயசுக்கு வந்திடலாம்...  பளபளன்னு வளர்ந்திருக்கா ...எல்லாம்  பருவம்! கூடிய சீக்கிரம்  வயசுக்கு  வரதுக்கு முன்னாடி  உண்மையை   நீங்களா சொல்லிடறது உத்தமம். ....நாளைக் கடத்தக்கடதத  விபரீதமாய் போய்விட வாய்ப்பு இருக்கு...ஈர மண்ணில் தடயம் பதியும் சொல்கிற வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும் மனசு இது..அப்புறம் எதிர்த்துக்கேள்விகேட்கும் பருவம்  வரும். சண்டைபோட்டு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் ஆமாம் அதான் எச்சரிக்கிறேன்”  என்று போனமுறை  வந்துபோன பத்ரியின் அம்மா சொல்லிவிட்டுப்போய்விட்டாள். அவளுக்கு தன் மகனின் உதிரம் மீராவிடம் இல்லாவிட்டாலும்  ‘பாட்டி பாட்டி’என அவளை சுற்றியபடி்   பல்லாங்குழி விளையாடுவது   தாயம் ஆடுவது   என்று  வயதான  தன்னைஒதுக்காத பண்பு மனதை  நிறைத்தது.
 
ஆகவே மீராவிடம்  ‘நீ நாங்கள்பெற்றமகள் இல்லையம்மா  தத்தெடுத்த குழந்தை’என சொல்லிவிடவேண்டியதுதான்’
 
 
பத்ரி  மனதுக்குள்  ஒரு  ஒத்திகைபார்த்துக்கொண்டான்.
 
பள்ளிவிட்டு வீடுவந்த மீரா வழக்கம்போல கைகால் கழுவிக்கொண்டாள்.பூஜை அறை சென்று கண்மூடி தியானித்தாள்.
 
பிறகு  மாலதியை நோக்கி,” அம்மா இன்னிக்கு ஸ்கூல்ல என்னாச்சு   தெரியுமா?” என்றாள்.
 
 
மாலதி வியப்பும் குழப்பமுமாய் பார்த்தாள்.
 
“கதை சொல்லல்  நிகழ்ச்சி நடந்தது அதை  தனியார் டிவி ஒண்ணு வந்து  படம்பிடிச்சாங்கம்மா.. நான் சொன்ன  யசோதை கிருஷ்ணர்   கதையை ரொம்ப ரசிச்சாங்கம்மா..அடுத்தவாரம்   ஒளிபரப்பாகப்போகுதாம்”
 
“அப்படியா மீரா?”
 
“ஆமாம்மா..ஆல் க்ரெடிட்ஸ் கோஸ் டு மை மாம்”  என்று நான் பெருமையாய் சொல்லிட்டேன்..
 
 
“என் செல்லக்கண்ணூ ஆச்சே நீ?”   மாலதி  கண்  சிமிட்டிப்பாராட்டினாள்.
 
இல்லையாபின்ன?  ஒருவயசிலிருந்து உன்கிட்ட கதை கேட்டு கேட்டு எல்லா டய்லாக்கும்  ஆழ்வார்  பாசுரங்களும்  நெட்ரு”ம்மா!!!”
 
 
“வாலுக்குட்டி சரிசரி சாப்பிட வா.உ.னக்குபிடிச்ச  பூரி மசால் செய்திருக்கேன்”
 
“பாட்டிக்கும் பிடிக்கும்மா...அவங்க   இங்க இருந்தப்போ   செய்திருக்கலாமே?நேத்து பாட்டி ஊருக்குப் போனதும் இன்னி்க்குப்பண்ற? மாமியார்மேல என்ன கோபம்?!”
 
 
“ஹேய் நாட்டி கேர்ல்”
 
செல்லமாய் அவள்தலையில் மாலதி குட்ட  மீரா  பயப்படுவதுபோல ஓட  ஆபீஸ்விட்டு  அப்போதுதன வீடு வந்த பத்ரி இதைரசி்த்தமாதிரி  தெரியவில்லை.
 
 வழக்கமாய் அவனும் இதில்கலந்துகொண்டு மீராவை சிரிக்கவைப்பான் இன்று அமைதியாக தன் அறைக்குப்போகவும் மீரா,”அப்பாக்கு ஆபீஸ்ல ஏதும் பிரச்சினைபோலருக்கும்மா போய் கவனிச்சி  சாப்பிடக்கொடுங்க” என்று சொல்லி விட்டு தனது அறைக்குள் படிக்கபோய்விட்டாள்.
 
டிபனை சாப்பிடக்கூடப்பிடிக்காத பத்ரி,” மாலதி..அம்மா சொன்னமாதிரி  நாம் இனியும்  தாமதிக்கக்கூடாது   இன்னிக்கு சொல்லிடணும் சொல்லியே ஆகணும்  அதன்விளைவு என்னவாக இருந்தாலும் எதிர் நோக்கித்தான் ஆகணும்” என்றான்.
 
மாலதி மௌனமாய் தலையசைத்தாள்.
 
இருவரும் தயங்கிதயங்கி   அந்த அறைக்குள் நுழைந்தனர்
 
செல்பொனில்   யாரிடமோ உரக்க   பேசிக்கொண்டிருந்தாள் மீரா.
 
இதபாரு வர்ஷா..பரிட்சைக்குபத்துநாள்தான் இருக்கு இப்போபோயி சினிமாபோகலாமாங்கறே அதுவும் வீட்டுக்கு சொல்லாம?  பெத்துவளர்த்த அப்பாவுக்கு துரோகம் செய்யலாமா அது மகாதப்பில்லையா? பரிட்சைமுடியட்டும் அவங்க  கிட்ட  சொல்லிட்டு நிம்மதியாபோகலாம் என்ன வச்சிடவா ?’ என்று செல்போனை கீழேவைத்தவள் அறையில்நிழலாடவும் நிமிர்ந்தாள்.
 
 
கண்களை விரித்து,”அட அப்பா அம்மா ரெண்டுபேரும்  சேர்ந்து இன்னிக்கு  வந்துட்டிங்களே , என்னவிஷயம்?”  என்று  குறும்பாய் கேட்டாள்.
.
அவளது அறைச்சுவரிலிருந்த வள்ளுவர் படமும் பாரதி படமும்  உலோகத்திலான அனுமன் வார்ப்பும்  யசோதைக்குப்பயப்படுவதுப்போல பாசாங்கு காட்டும் கிருஷ்ணரின் காலண்டரும் அறைக்கு அழகு சேர்த்தன என்றால் ஒழுங்காய்  \கச்சிதமாய்  அலமாரியில் அடுக்கி  வைத்திருந்த பாடப்புத்தகங்களின் வரிசைகளும்   வெளியே எங்கும்  தொங்காத  ஆடைவகைகளும் அறையின்  தூய்மையைப் பறை சாற்றின.   .
 
ஆனாலும் பத்ரிக்கு மாலதியைவிட சற்றுதிடமனதோ என்னவோ  சட்டென ஆரம்பித்துவிட்டான்.
 
”மீரா! உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்”
 
” இப்பவா  ? நான் பரிட்சைக்குப் படிக்கணும்ப்பா”
 
“இதுவும் வாழ்க்கைப்பரிட்சைதான்  மீரா!”..
 
”என்னப்பா  சினிமா அப்பா மாதிரி பேசறீங்க?” என்றுகேட்டு சிரித்துவிட்டாள்மீரா.
 
மாலதி சின்னதாய்விசும்பவும்திடுக்கிட்டு” அ  ..அம்மா?” என்று அவள்தோளைத் தொட்டாள்.
 
பத்ரி தொடர்ந்தான்.
 
“ஆமாம்  மீரா  ...இனியும் நீ குழந்தை இல்லை.. யு ஆர்   எ மெச்சூர்டு சைல்ட் நௌ..”
 
“ஆஃப்கோர்ஸ் நான் குழந்தை இல்லைதான் அப்பா..பதிமூணுவயசுப்பெண்தான்  அதற்கு என்ன அப்பா?”
 
 
”மீரா..நாங்க சொல்றதை நீ  மன திடமாய்  கேட்கணும்மா...  ஆமாம் மீரா  திடமாய்  கேட்டுக்கோ....அது வந்து.. ...நீ  நீ..நாங்க பெத்த குழந்தை இல்ல.தத்தெடுத்தப் பெண் குழந்தை.   ஆனா.. ஆனா பெத்தபெணணைவிட நாங்க உன்னை கவனிச்சோம் இனியும்கவனிப்போம் கண்ணம்மா”
 
சொல்லிமுடிப்பதற்குள் பத்ரி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான் மாலதி ஹோவெனக்கதறிவிட்டாள்.
 
 
அழுகைதான் அங்கே சிலகணங்களுக்குப் பேசிக்கொண்டிருக்க  சட்டென  கலகலவென சிரித்தாள்மீரா.
 
 
மாலதியும்பத்ரியும் திகைப்புடன் அவளைப்பார்த்தனர்.
 
“இதுக்கா இவ்வளவு  வார்த்தைகள்? அப்பா !அம்மா ! இந்த விஷயம் எனக்கு எப்போதோ தெரியுமே!”  என்றதும்  தூக்கிவாரிப்போட  இருவரும் நிமிர்ந்தனர்  .
 
எப்படி எப்படி? தத்தெடுத்த மையம் மற்றும் மாலதியின்  இறந்துபோன  அன்னை க்கும்தனது அன்னைக்கும் மட்டுமே தெரிந்த  ரகசியம் எப்போது  அம்பலமாகிப்போனது?
 
பத்ரி குழப்பமும் வேதனையுமாய் நிற்கையில் மீரா,
 
“யார் சொன்னாங்கன்னு யோசிக்க வேண்டாமே அம்மாமூலமாகத்தான் எனக்கு தெரிஞ்சுது”என்றதும் மாலதி அதிர்ந்தாள்..பத்ரி நிலைகுலைந்தான்
 
“நா..நானா?”  மாலதி வீறிட்டாள்.
ஆமாம்மா..நீநேரிடையாய் சொல்லலை.ஆனா  எப்போதும் கிருஷ்ணர் கதையை எனக்கு சொல்வாய்  அந்தக் கதையில் ஒரு  தடவைகூட   கிருஷ்ணரை சுமந்துபெற்ற தேவகியைக்கொண்டுவரமாட்டாய் அம்மா  யசோதையைத்தான் அவளுக்கு மகன்  மேலிருக்கும் அன்பை,  பாசத்தை  சொல்வாய்! அப்படியே எப்போதாவது   சொன்னாலும் தேவகியின் வேதனையை  ஆழ்வார் பாடியதை  சந்தோஷமாய் சொல்லிக்கொள்வாய்! 
 
மருவும் நின் திருநெற்றியிற் சுட்டி
      அசைதர மணிவாயிடை முத்தம்
தருதலும் உன்தன் தாதையைப் போலும்
      வடிவு கண்டுகொண்டு உள்ளம் உள் குளிர
விரலைச் செஞ் சிறுவாயிடைச் சேர்த்து
      வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் உரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம்
      தெய்வ நங்கை யசோதை பெற்றாளே
 


பாடி முடிக்கும் போது கண்பனிப்பாய் !  அம்மா...எழெட்டுவயதிலேயே இதை கவனித்திருக்கிறேன் ஓரளவுபுரிந்துபோனது. ஒருநாள்அத்தையின்  சின்னவயதுப்புகைப்படம் தற்செயலாய் அன்று கொலுபொம்மைபெட்டிக்குள்  கிடைத்ததையும் பார்த்தேன் ஊஹூம் என்ககு அத்தையின் சாயலே இல்லை. என் மாநிற உடம்பும் கொஞ்சம் கூட  உங்க சாயலே இல்லாத முகமும் எனக்குள்ளிருந்த சந்தேகத்தை  நிரூபித்தது.ஆனால் என்னஅம்மா  தேவகி யை அதிகம்  யாரும் நினைப்பதில்லை .கிருஷ்ண வைபவம் என்றால் அது ஆயர்பாடிலிருந்துதானே  ஆரம்பிக்கிறது அவன் மகிழ்ச்சியும்  கொண்டாட்டமும் அங்கேதானே அம்மா? நான்  என்னை க்ருஷ்ணனா நினைச்சிக்கிறேன்  சந்தோஷமா  இருக்கேன்  உங்களைவிட உசந்த பெற்றோர் எனக்கு எங்கே  கிடைப்பார்கள்? “ சிரித்தபடி  மீரா சொல்லி முடித்ததும்
பத்ரியும் மாலதியும் அவளை இறுக அணைத்துக்கொண்டார்கள்.
 
 கண்ணீரைத்துடைத்துக்கொண்டு மெல்ல சிரிக்க ஆரம்பித்தார்கள்.
 
அணைத்த தோள்களின்   மறுபுறமிருந்த  மீராவின் கண்களில்தான்  இப்போது நீர் பெருக ஆரம்பித்தது.
 .
 
(julyகலைமகள்  இதழில் பிரசுரமாகி உள்ள சிறுகதை)
 
 
 

மேலும் படிக்க... "தாயே யசோதா!(சிறுகதை)"

Monday, June 24, 2013

கம்பனை ரசித்த கண்ணதாசன்!






இந்தத் தலைமுறை மக்கள் நன்கு அறிந்த தமிழ்க்கவிஞன்  கவியரசு கண்ணதாசன். பாரதிக்குப்பிறகு சொற்களில் எளிமையோடு அதே நேரம் தமிழின்  வலிமை குன்றாமல்  சுவைபடப்பாடல்களை எழுதியப்பெருமை  கண்ணதாசனுக்கு உண்டு.

ஒளியின்றி நிழல் இல்லை, வாசித்ததின் பாதிப்பின்றி படைப்பில்லை.
அப்படிக்கண்ணதாசனை  பாதித்தவன் கம்பன்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல  என்று முதலில்  அந்தப்புலவன் பெயர்தனை ஏன் வைத்தான் பாரதி என்றால். அறிவின் சிகரம் கம்பன்!  கல்வி சிறந்த தமிழ்நாடு  என்ற பாரதி ’கல்வி’ என்றதுமே உடனே உயர்கம்பன் பிறந்த தமிழ் நாடு என்றான்!! கம்பன் பிறந்த  உயர்தமிழ்நாடில்லை  உயர்கம்பன் பிறந்த தமிழ்நாடாம்!

கம்பனைப்பற்றி சான்றோர் பெருமக்கள் பலர்  புகழ்ந்து  வியந்து எழுதி உள்ளார்கள் . அப்படி எழுதிய  நூல்களில் நான் அண்மையில் வாசித்த புத்தகம்தான் கம்பன் களஞ்சியம் என்னும்  அருமையான புத்தகம்.இதனை எனக்கு அளித்தவர் சகோதரர் பேராசிரியர்பெஞ்சமின் லெபோ அவர்கள்  நூலாசிரியரும் இவரே!


 கம்பனின் புகழ்பாடி தமிழ் வளர்க்கும் இவர்  கம்பராமாயணத்தில் மூழ்கித்  திளைத்த தனது  இனிய அனுபவங்களை  இந்த புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.
அவற்றில்  கண்ணதாசன் ரசித்த கம்பன் என்னும் தலைப்பில் சகோதரர்  எழுதியதை இன்று  கவிஞரின் பிறந்த நாளில்  நாம்  பார்க்கலாம்.


கௌதம முனிவரின் சாபத்தால் கல்லாக  மாறிய  அகலிகை  இராமனது பாதத்துகள் பட்டதும் மீண்டும் பெண்ணாக மாறுகிறாள்..அதற்கு முன்புதான் தாடகை என்னும் அரக்கியை  சுடுசரம் கொண்டு வீழ்த்தி வந்திருக்கிறான்  இராமன். அவனது கைவண்ணம் கண்டு  பிரமித்த  விஸ்வாமித்திரர்  இப்போது கால் வண்ணம் கண்டு  மகிழ்கிறார்.


அதனைத்தான்  கம்பன்,


இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம் 
உய்வண்ணம் அன்றிமற்றோர் துயர்வண்ணம் உறுவதுண்டோ
மைவண்ணத்தரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே உன் 
 கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்குகண்டேன் 


என்கிறார்!

இதனை கண்ணதாசன்  ‘பால் வண்ணம் பருவங்கண்டு வேல்வண்ணம்  விழிகள் கண்டு  மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்  என்று  பாடல் எழுதினார்.
 
கண்வண்ணம் அங்கே கண்டேன்
’கைவண்ணம்இங்கே கண்டேன்
பெண்வண்ணம் நோய் கொண்டு  வாடுகிறேன்

என்று ம் தொடர்கிறது!

கம்பனில் கவியரசர்  திளைத்து ரசித்த பகுதிகள்  ஏராளம்   விதி பற்றிய  பாடல் ஒன்றை கவிஞர் மிகவும் ரசித்திருப்பதை தியாகம்  படத்தில் வரும் இந்தப்பாடல்  சொல்கிறது.

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்
நதி செய்த குற்றமில்லை
விதி செய்த குற்றமின்றி
வேறயாரம்மா?

சிறப்பான இந்தவரிகளுக்கு  பிறப்பெடுத்துக்கொடுத்தவை கம்பனின் காவியவரிகளே  என்கிறார்  நூலாசிரியர் திரு பெஞ்சமின் லெபோ.

ஆம்..
  முடிசூட்டல்  இராமனுக்கே என  தசரதன் முடிவு செய்கிறான்.  கூனி இதனைக்கேட்டு  வெகுண்டு எழுகிறாள்.

 கைகேயியைக்கண்டு அவளைத்தூண்டிவிடுகிறாள். அவளும் 
தசரதனிடம் முன்னர் கேட்ட வரங்களை நினைவுபடுத்தி அவற்றை இப்போது பெற்றுக்கொண்டு அதனபடி  பிறகுஅவள் பேசியவிதம் அனைவரும் அறிந்த கதைதான்

ஆனால்  அதுகேட்டு இலக்குவன் குதிக்கிறான் கோபத்தில்.

அதைக்கம்பனின்  தமிழ்  கூறுவதைப்பாருங்கள்..கோபத்தில் குதிப்பது இலக்குவன் என்பதை குதித்தாடும் சொற்கள்  கூவுவதில் தெரிகிறது அல்லவா?


வலக்கார் முகம்என் கையதாக அவ்வானுளோரும்
விலக்காரவர் வந்துவிலக்கினும் என்கை வாளிக்கு
இலக்கா எரிவித்துலகு ஏழினொடு ஏழும் மன்னர்
குலக்காவலு மின்றுனக்கு யான்தரக் கோடியென்றான்"

(தேவர்களே வந்தாலும் அவர்களை என் அம்புகளுக்கு இரையாக்குவேன்,
ஈரேழு உலகங்களையும் யான் அளித்து உனக்கு முடி நான் சூட்ட
நீ பெற்றுக்கொள்வாயாக! - இதுதான் இதன் பொருள்)


தம்பியின் கோபம் கண்டு நம்பி  திகைக்கிறான்.
அவனை  சமாதானப்படுத்துகிறான்

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப்புரந்தான்
மதியின் பிழையன்று, மகன்பிழையன்று மைந்த
விதியின் பிழைஇதற்கு என்கொல் வெகுண்ட தென்றான்
-        



இப்படிக்கம்பனை  ஆழ்ந்து ரசித்த கண்ணதாசனின் தமிழ்ப்பங்கும்  அளவற்றது அல்லவா?

   கம்பன் களஞ்சியம் என்னும் இந்த நூலில்  மேலும் அருமையான  தகவல்கள்  உள்ளன்..நூலாசிரியர் திருபெஞ்சமின் லெபோ அவர்களின் கைவண்ணத்தில் நான் இங்கு கொடுத்துள்ளது கால்வண்ணமில்லை அதாவது  1/4 பகுதிகூட இல்லை! ஆகவே முழுவதும் வாசிக்க  இந்தப்புத்தகத்தை நீங்கள்  வாங்கிவிடுங்களேன்!

கம்பன் களஞ்சியம்
விலை 60ரூபாய்
ஆசிரியர் பேராசிரியர் பென்சமின் லெபோ

கிடைக்குமிடம்..

வானதி பதிப்பகம்
23 தீனதயாளு சாலை
தி நகர்
சென்னை 17





 
மேலும் படிக்க... "கம்பனை ரசித்த கண்ணதாசன்!"

Tuesday, June 11, 2013

தப்பு பண்ணியவர்கள்.





விடியலுக்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்கும் போதே சின்னசாமி அந்த பஸ் டெப்போவிற்கு வந்து விட்டான்.  முதல் நாள் இரவு கிராமத்திலிருந்து மூன்று கிலோ மீட்டரும் நடந்தே வந்து அருகிலிருந்த ஊரிலிருந்து ரயிலில் பயணம் செய்து, நகரத்திற்கு வந்து, இறங்கிய போது கிராமவாசியான சின்னசாமிக்கு தன் ஐம்பது வயதின் பழைய சோற்றிலும், கேழ்வரகு கூழிலும் வளர்ந்திருந்த திடமான உடம்iபே தூக்கிப் போடுகிற மாதிரி இருந்தது.  சட்டெனக் கண்கள் கலங்கிப் போயின.
 
     பாவம், புவனாவுக்குப் பூஞ்சை உடம்பு.  அந்தப் புள்ளய நான் பட்டணத்துக்குப் படிக்க அனுப்பியிருக்கக் கூடாது.  கருக்கல்லுலேயே பட்டணம் இத்தினி பரபரப்பாயிருக்கும்னா, இது பட்டப் பகல்ல எப்படி இருக்கும்?  இந்தச் சூழ்நெலெயில என் பதினாறு வயசு மகளை இங்கிட்டுப் படிக்க அனுப்பின நான் பாவி, மகா பாவி!’’
 
     மனசு ஓலமிட்டது.
 
     ரயிலடியிலிருந்து விசாரித்துக் கொண்டு அந்த பஸ்டெப்போவிற்கு வந்தவன், ’ஹோஎன்றிருந்த அந்தப் பெரிய திடலில் அங்கும் இங்குமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களை ஒவ்வொன்றாய் அருகில் போய் பார்க்க ஆரம்பித்தான். 
 
சின்னச்சாமியின் தோளிலிருந்து நீண்டு தொடை வரை தொங்கிய அந்தத் துணிப் பையில் உருண்டையாய் ஏதோ ஒரு முடிச்சு அவனை உரசிக் கொண்டே வந்தது.  பையை கெட்டியாய் ஒரு கரத்தில் பிடித்தபடி, பைத்தியக்காரனைப் போல டெப்போ முழுவதும் சுற்றி வந்தவன் கடைசியில் கண் மலர்ந்தான்.
 
     இதான்... இதான்... புவனா காலேசுக்குத் தெனமும் ஏறிப்போற பஸ்ஸு.  என் செல்வ மகளை எமனுக்கு பலி கொடுத்த வாகனம்...
 
சின்னசாமி நெஞ்சு பதை பதைக்க அந்த பஸ்ஸிற்குள் ஏறினான்.  இருட்டில் தட்டுத் தடுமாறி ஓர் இருக்கையில் அமர்ந்தான்.
 
     தோள் பையைத் தூக்கி மடி மீது வைத்துக் கொண்டான்.  விரல்கள் வாஞ்சையுடன் அந்த பைக்குள்ளிருந்த அந்த சிறு மூட்டையைத் தடவின.
 
            அம்மாடி புவனா... பலி கொடுக்கத்தான் உன்னைப் பட்டணத்துக்குப் படிக்க அனுப்பினேனா இந்தப் பாவி அப்பன்?  எனக்கென்ன தாயீ தெரியும் பட்டிணமும்ல, பாழாப் போற பஸ் பயணமும், பசங்களோட கிண்டலும் கேலியும்? நல்ல மனுசங்கன்னு நினைச்சி கிராமத்துக்கு வந்துக் கேட்டுக்கிட்டவங்க பாதுகாப்புல உன்னை அனுப்பி வச்சேன்மா.. நீயும், ’அப்பா! நான் நல்லா படிச்சி தம்பி, தங்கைங்களைக் காப்பாத்தணும்பான்னு ஆசையா இந்தக் குடியானத் தகப்பன்கிட்டே சொன்னே மவளே! வீட்டு வேலை செஞ்சிட்டு மேல் படிப்பும் படிக்கத் தான் மக பட்டிணம் போறான்னு நெனச்சி அனுப்பினேனே தவுர இப்புடி ஆறே மாசத்துல மேலு லோகம் போகவா தாயீ உன்னை நான் பிரிஞ்சி அனுப்புனேன்?
 
     பொறுப்பை ஏத்துட்டப் பெரிய மனுஷங்க இப்ப எங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு கையை விரிக்கிறாங்க... உரசிப் பாக்குற வரைக்கும் பித்தளை கூட தங்கம் மாதிரி தான் மினுமினுப்பாயிருக்கும் போல இருக்குது... இப்புடி உன் உயிர் போவும்ன்னு முன்னமே தெரிஞ்சிருந்தா கிராமத்துலேயே கூழோ, கஞ்சியோ குடிச்சிட்டு வயல் வேலை செய்யட்டும்ன்னு உன்னை வளர்த்திருப்பேனே தாயீ... ஒண்ணுந் தெரியாத படிக்காத பட்டிக்காட்டு அப்பனா இருந்துட்டு இப்புடி உன்னைப் பறி கொடுத்துட்டேனே, புவனா... ஐயோ!  நான் என்ன செய்வேன் தாயீ.  உன் நெனப்புல தான் நீ செத்த இந்த ஆறாம் நாள் உன் சாம்பலோட இந்த பஸ்சில வந்து குந்தறேன்.  தாயீ... அம்மாடீ! இந்த பஸ்ஸுல தான் நீ அன்னிக்கு என்னவோ கலாட்டாவாமே... அதைச் செஞ்ச ஈவு இரக்கமில்லாதவங்களாலே ஓடற பஸ்சிலிருந்து கீழே இறங்கி, மண்டை உடைஞ்சி மரணமடைஞ்சி போனே?
     எல்லா வெவரமும் நாலு நாளா புத்தகத்துல பேப்பர்ல வந்திடிச்சி... இது நியாயமா’?ன்னு மாதர் சங்கமெல்லாம் போராடறாங்களாம்... என்ன செஞ்சி என்னம்மா?  போன உசுரு வரப் போவுதா என்ன?
 
     யோவ், யாருய்யா அது? டெப்போவுலேந்து பஸ்ஸை எடுத்து வெளியேக் கொணாந்து பஸ்டாண்ட் போவுறதுக்குள்ள ஏறி உக்காந்திட்டு இருக்கறது, இறங்குய்யா, இறங்கு இறங்கு...’’
 
     காக்கி சட்டை போட்டு வாயில் பீடியை செருகியபடி ஒருவர் வந்து அதட்டவும் சின்னசாமி மிரண்டு போய் கீழே இறங்கினான்.
 
     என்ன அது பைல?’’ சந்தேகத்துடன் காக்கிச் சட்டை அதைப் பிடுங்கி உள்ளேப் பிரித்துப் பார்த்து, அவருவருப்புடன்’’ “என்னயா மண்ணெல்லாம் சுமந்துட்டு... சீ...’’ என்று சீறி விட்டுப் போனான்.
 
     மண் இல்லப்பா... மனசு... என் பொண்ணு புவனாவோட மனசு.  அவ கடைசியாய் நடந்த தடம் இந்த பஸ்ஸுல இருக்கும்ன்னு தான் தேடிட்டு நான் வந்தேன்.  பசங்க எல்லாம் ஒட்டு மொத்தமா அவளைச் சீண்டி சித்திரவதை செஞ்சப்போ பஸ் டிரைவரும், கண்டக்டரும் வாயை மூடிக்கிட்டு இருந்தாங்களாம்... காரணம் பஸ்ஸுல அப்போ பயணம் செஞ்ச பையனுகளுல ஒருத்தன் ஒரு பெரிய தலையோட மவனாம்.  பயணிகளும் பயந்து ஒடுங்கிட்டாங்களாம்... எல்லாம் பத்திரிகைக் காரங்கதான் சொன்னாங்க...
 
     எத்தினி கனவுகளோட புவனா இந்த பஸ்ஸுல காலேசுக்குப் படிக்கப் போனாளோ, பாவம்... அவ... சாம்பலும் இதே பஸ்ஸுல ஒரு நாள் பிரயாணம் செஞ்சிட்டுப் பெறகு ஆத்துநீர் எதிலாச்சும் கரைஞ்சி போவட்டும்ன்னு தான் நான் சாம்பலைத் தூக்கிட்டு இப்போ பட்டணம் வந்துருக்கறேன்...!’’
 
     சின்ன சாமி கண்ணீருடன் நடந்தான்.  அந்தக் குறிப்பிட்ட பஸ்  புறப்படும் நிலையத்திற்கு விசாரித்துக் கொண்டு வந்தவன் சரியாய் காலை எட்டு மணிக்கு ஏறி அமர்ந்தான்.
 
     புவனா தினமும் அந்த நேரம்தான் பஸ்ஸில் ஏறி அரை மணி நேரப் பயணத்தில் தன் கல்லூரியை அடைவதாக ஒரு முறை கிராமத்திற்கு வந்தபோது சின்னசாமியிடம் சொல்லி இருக்கிறாள்.
 
     பஸ் புறப்பட்டது.
 
     சின்னசாமி கல்லூரி பெயர் சொல்லி டிக்கெட் கேட்டு வாங்கவும், பையன்கள் சிலர் உரக்க சிரித்து விட்டு பெரிசு காலேஜ் போய் படிக்கப் போவுதுடா...!  அதுவும் லேடீஸ்காலேஜ்!’’ என்று கிண்டல் செய்தனர்.
 
     அவர்களை வெறுப்புடன் ஏறிட்டான் சின்னசாமி.  பாவி பசங்களா.. உங்களில் ஒருத்தன் தானடா என் மக உயிரைப் பறிச்சிருக்கீங்க....
 
     அடுத்தடுத்த நிறுத்தங்களில் கல்லூரி மாணவிகள் ஏறும்போது பையன்களின் கேலியும், கிண்டலும் எல்லை மீறவும் சின்னசாமி கொதிப்புடன், “தம்பீங்களா... உங்க போக்குக்கெல்லாம் எல்லையே கெடையாதுங்களா?’’ என்று கேட்டு விட்டான் ஆற்றாமை தாங்காது.
 
     அவ்வளவு தான்... கட்டம் போட்ட சட்டையும், ஜீன்ஸும் அணிந்த இளைஞன் ஒருவன் டிரைவரிடம் ஸ்டாப்என்று கூச்சல் போடவும், பஸ்  சட்டென  நின்றது.
 
     அவன் சின்னசாமியின் அருகில் வந்தவன் ஆக்ரோஷமாய் பார்த்துவிட்டு, “, பட்டிக்காடு... யாரப்பாத்து என்ன  கேள்வி கேக்கறே?  அதிலும் எல்லைஎதுன்னா கேக்கற?’’ என்று கூச்சல் போடவும் நண்பர்கள்  தினா... விடுடா.. கண்ட்ரீப்ரூட்.... அழுக்கு வேட்டியும், பச்சை மேல் துண்டுமா, முகத்துல மூணு நாள் தாடியோட பாக்கவே பரிதாபமா இருக்கிறான்டா....’’ என்று தடுத்தனர்.
 
     இவனுகளைத் தாண்டா தட்டி வைக்கணும்... படிப்பு அறிவு இல்லாதவன் தான் பல் உடையற மாதிரி கேள்வி கேட்பான்.  வயசுப் பசங்க குஷியா இருந்தா பொறுக்க மாட்டானுங்க... இவங்க வயசுல போடாத ஆட்டமா நாம இப்பப் போட்டுட்டோம்?’’
 
     லீவ் இட் யா!’’
 
     விடறதா, அதெல்லாம் நடக்காது.  என் எல்லைஎதுன்னு கேட்டுட்டான் இல்லே, அதை இப்போ அவனுக்குக் காட்டணும்!’’
 

     சின்னசாமி மிரட்சியுடன் பார்க்கும்போது அவன் தோளைப் பற்றி நிற்க வைத்தான்.
 
மேல் துண்டை சட்டென உருவிக் கீழே போட்டான் தினா.
 
     பார்ரா... பெரிசுக்கு சிட்டிக்கு வரப்போ ஷர்ட் போட்டுட்டு வரணும்ன்னு தோணலே?  இடியட், இதுல வாய் மட்டும் நீளுது?’’
 
     தினா... விட்டுத் தள்ளு.’’
 
ஒரு பையன் இப்படி அலட்சியமாய் சிரித்தபடி சொல்லவும் சின்னசாமி அடிபட்ட புலிபோல சிலிர்த்து உடம்பை உதறிக் கொண்டான்.  கண் சிவக்க உதடு துடிக்க தினாவிடம், “துண்டை உருவுனதோட உன் திமிரை அடக்கிக்க தம்பீ.. பட்டிக் காட்டானுக்கு உடை நாகரிகம் தெரியாது தான்... ஆனா, உள்ளத்து நாகரிகம் தெரியும்... அதனால தான் உன்னைக் காயப்படுத்த நெனைக்கல... என் பேச்சை மீறினா நீ விபரீதத்த சந்திக்கணும்... ஆமா?’’   என்று அழுத்தம் திருத்தமாய் சொன்னான்.
 
     அவ்வளவுதான்... தினா ஆவேசமாய் சின்னசாமியின் தோளிலிருந்து அந்தப் பையை உருவிக் கீழே போட்டுவிட்டு, “இப்ப என்ன சொல்ற பெரிசு?’’ என்று இடக்காய் கேட்டான்.
 
     சட்டெனக் குனிந்து பையை எடுத்தவன் உள்ளிருந்த மூட்டையை வேகமாய்ப் பிரித்து மகளின் அஸ்தியை அள்ளி எடுத்து அதை அப்படியே தினாவின் வாயில் கொண்டு அழுத்தினான் சின்னசாமி.
 
     தினா திமிறத் திமிற அவன் கைகளை வலுவுடன் தன் கரங்களால் அழுத்திப் பிடித்தப்படி, “உப்பைத் தின்னவன் தண்ணி குடிக்கணும்; தப்பை பண்ணியவன் மண்ணைத் தான் திங்கணும்... ஆமாண்டா, இது என் செத்துப் போன மவளோட உடம்பு மண்.  அவளை எரிச்ச சாம்பல் மண்ணு.  உன்னை மாதிரி ஒருத்தன் அவளைக் கிண்டல் செஞ்சி, பஸ்ல ஓட ஓட விரட்டி, படிக்கட்டுல தள்ளி, அவளைத் தடுக்கிக் கீழே விழுந்து சாக வச்சிட்டான்...
 
     எத்தினி கனவுகளோட என் மவ கிராமத்த விட்டுப் பொறப்பட்டு இங்கே வந்தா தெரியுமாடா?  குடியானவன் குடும்பமும் விளங்க நான் நல்லா படிச்சி, முன்னேத்திக் காட்டறேன்னு லட்சியத்தோட இங்க வந்தா...  வீட்டு வேலை செஞ்சி சம்பாரிச்சி அதுல கெடக்கிற துட்டுல படிக்கிறேன்பான்னு புறப்பட்டு வந்தா... அவளை ஈவு இரக்கமில்லாம சாகடிச்சது உன்னை மாதிரி இளைய தலைமுறைப் பசங்க தான்.
 
     காசு, கடவுளோட கண்ணைக் கட்டிப் போடாதுடா... அது பாத்துக்கிட்டே தான் இருக்கும்... தெய்வம் நின்று கொல்லுமடா... நின்னு கொல்லும்!’’ என்ற சின்னசாமியின் நெகிழ்ச்சியான கூக்குரல் தினாவை மட்டுமல்லஅங்கு அனைவரையும் உலுக்கிப் போட்டது.
                    **************************************************************************
 
     இப்போதெல்லாம் அந்த ரூட்டில் செல்லும் அந்த பஸ்ஸில் ஈவ் டீஸிங்சுத்தமாய் இல்லை என்று பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.
 
     சின்னசாமியை பேட்டி எடுக்க யாராரோ கிராமத்திற்கு வருகின்றனர்.  நன்றி கூறுகின்றனர்.
 
சின்னசாமியால்தான் எதுவும் பேச இயலவில்லை.
 
*****************************************************************************************************************
 
(இந்தக்கதை ஆறுவருடம் முன்பு தினமலர்  ராமரத்தினம் நினைவுச்சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு  பெற்ற கதை அந்த காலகட்டத்தில் ஈவ் டீசிங்  அதிகமாக  இருந்தபோது அதன்  பாதிப்பில் படைத்த கதை.  பெண்மணி மாத இதழ்  இந்தமாதம் இக்கதையை பரிசுபெற்ற சிறுகதைகள் என்ற  வரிசையில்  இம்மாதம் பிரசுரம் செய்துள்ளது)



(



--
***



--
 
 
மேலும் படிக்க... "தப்பு பண்ணியவர்கள்."

Saturday, June 01, 2013

குழந்தையும் நாமும்!



 

ஜூன்  1. உலக குழந்தைகள் தினம்
 
 1949ல் வெளிவந்த அட்லாண்டிக் மாத இதழ்  ஒன்று கண்ணில் பட்டது.
Miltred Howland   அவர்கள்  இப்படி  எழுதி உள்ளார் ஆங்கில வரிகளை
தெரிந்தவரை தமிழில்  மொழி பெயர்க்கிறேன்.( ஆங்கிலக்கவிதை  கீழே)
 
 தன் நிலையினின்றும் உயர்ந்து
விண்ணையும் தொடும் ஆற்றலை
 ஒரு குழந்தைக்கு
நாம் எப்படிக்கற்றுத்தருவோம்-மிகவும்
கீழான நிலையில் தாழ்ந்துவிட்ட நாம்?
 
 நாணயமாகவும்  கௌரவமாகவும் வாழ்ந்திரு
உண்மையின் பொருட்டே  உயிர் வாழ்ந்து
அதற்காகவே உயிர் விடுஎன்று ஒரு
குழந்தையிடம் எப்படிச்சொல்வோம்
பொய்யோடு பொய்யாய் வாழ்ந்துவிட்ட நாம்?
 
வாழ்க்கையின் சரியான பாதை அன்பின்
 வழிதான்என்று அவனிடம் எப்படிக் கூறுவோம்
.வெறுக்கவே கற்றுவிட்ட நாம்?
 
 பிரார்த்திக்கக் கற்றுக் கொடுக்கவும், அவனை
 பக்தனாக  மாற்றவும் எப்படித் துணிவோம்-
பிரார்த்தனையே செய்தறியாத நாம்?
 
 How shall we teach
A child to reach
Beyond himself
And touch the stars
We who stooped so much?
 
How shall we tell
A child to dwell
With honour ,live and die
For Truth
We who have lived a lie?
 
 How shall we say
To him' the way
Of life is through the gate
Of Love'
We, who have learned to hate?
 
How shall we dare
to teach him Prayer
and turn him toward the way
Of faith
We who no longer pray?
 
 
 
 

--

--
 
 
மேலும் படிக்க... "குழந்தையும் நாமும்!"

Tuesday, May 28, 2013

கோடை தந்த கொடை!

கோடையில்  நாலுநாள் வெளியூர் சென்றே ஆகவேண்டிய கட்டாயம். என்னதான்  கல்யாண சாவு என்று வயதான அந்தப்பெண்மணி  இறந்துபோனதை சொன்னாலும் துக்கவீட்டில் கலகலப்பாய் பேசக்கூடாது என்று வாயைக்கட்டிப்போட்டுக்கொண்டபோது  அந்த வீட்டின்பரணிலிருந்து பழையபுத்தக வாசனை வீசியது!
 
 ஆர்வமாய்  விழிகளை  நிமிர்த்தி , உயர(கவனிங்க உயர் இல்ல  உயர:):)வகைப்பெண்குலமாதலால் அதிக சிரமமில்லாமல் எட்டிப்பார்த்தபோது அங்கே கட்டுக்கட்டாய்  பழையபுத்தகங்கள் தூசிப்போர்வையில்  மூச்சுவிட சிரமப்பட்டுக்கொண்டிருப்பதைக்காண முடிந்தது.
 
“எல்லாம்  இந்தவீட்டுப்பெரியவங்க அந்த நாளில்(அதாவது19 70வருஷம் முதல்) வாங்கிப்படித்தபழைய  புத்தகங்கள் பத்திரிகைகள்... எல்லாத்தியும் பேப்பர்க்காரனுக்குப்போடலாம்னா அதுக்கு வேளையே வரலை.. வீடு மாத்தறபோது தூக்கிக்கடாசணும்” என்றாள் அந்தவீட்டு மருமகள்.
 
ஐயொ என பதட்டமாய் அலறியே விட்டேன்... ‘ஒரு பார்வை நான் அவைகளைப்பார்க்கலாமா?’ என்று கேட்டவுடன் அனுமதி கிடைத்தவுடன்  தூசிக்கட்டை இறக்கித்தட்டி போத்தீசின் புதிய டிசைன் பட்டுப்படவையை பார்க்கும் சேலைப்ரியாக்கள்  போல பரவசமானேன்.
 
 
பொக்கிஷங்கள் எல்லாம்  உயர்ந்த இடத்தில்  தான் இருக்கின்றன என்பது எவ்வளவு உண்மை!
 
ஏகப்பட்ட  ரீடர்ஸ் டைஜஸ்ட்கள்  நடுவில்  , விகடன், கல்கி இதழ்களின்  பழைய  சிக்  வடிவம்!முதசுரபியும் கலைமகளும்  தூசி படிந்து  சற்றே நைந்துமிருக்க  ரகசியமாய்  காதல் என்ற பத்திரிகை  ஒன்று எட்டிப்பார்த்தது !
 
காதலை நகர்த்திவிட்டு.....
 
எட்டு தும்மலுடன்  நாலைந்து   இதழ்கள்  தேறினதை எடுத்துக்கொண்டு நன்றி சொன்னேன்
 
 
தமிழில் சொல் இன்பம் என்று நீதிபதி மகராஜன்  அவர்கள் எழுதி இருக்கிறார்  பாருங்கள்   ஆஹா  யாம் பெற்ற இன்பம்  இணையலோகமும்  பெறவேண்டுமல்லவா?
 
 
 
 அதாவது  கவிஞர்கள் உலக அனுபவங்களைத் தாயன்போடும் பரிவோடும் அனுபவித்து அவற்றைத் தமதாக்கிக்கொண்டு பின் தம் அபாரமான சொல்லாற்றலால் கவிதையாக்கி அவற்றை எடுத்துச்சொல்லும் போது  சொல் இன்பம் நமக்குக்கிடைக்கிறதாம்!
..
 
கோழி முட்டையிடுகிறது முட்டையை உடனே உடைத்துப்பார்த்தால் வெறும் தண்ணீர் போலத்தான் இருக்கும்  உள்ளே இருப்பதை 21 நாட்கள் எச்சரிக்கையோடு அடை காத்துக்குஞ்சு பொரிக்கிறது கோழி. அந்த 21நாட்களும்  ஓர் அற்புத நாடகம் நடக்கும். ஒருபக்கத்தில் உள்ள  நீர் அணுக்கள் மஞ்சள் நிறஅலகாகவும் வேறொரு பக்கத்தில் உள்ள அணுக்கள் சிவப்புநிறக்கால்களாகவும் மற்ற அணுக்கள் கோழிக்குஞ்சின் உடம்பாகவும் மெல்ல மெல்ல மாறிக்கொண்டே வரும். கடைசியில் கோழிக்குஞ்சு முட்டையை உடைத்துக்கொண்டு வெளியே வருகிறதாம்,,தூணைப்பிளந்துகொண்டு நரசிம்மம்  வந்ததுபோல!
 
இது  போலத்தான் ஒரு உண்மையான கவிஞனின் இதயத்திலே ஓர் உணர்ச்சி மிக்க கருத்து கருத்தரிக்கிறது சூல் கொண்ட நேரத்தில் அருவ நிலையில் இருக்கிறது. கவிஞன் அதை அடைகாத்துக்கொண்டே இருக்கிறான். சூடு ஏற ஏற கவிக்கரு நுண்ணுருவம்  பெறுகிறது. சொல்லுருவம் அடைகிறது. இப்படியாக முட்டைக்குள் நடந்த அற்புத நாடகம் கவிஞனின் இதயத்திற்குள் நடககிறது.
 
 
தமிழ்நாட்டின் ஆறுகளின் பெயர்களை சொல்லச்சொன்னால் பலசரக்குக்கடைப்பட்டியலைப்போல இருக்கும்.  பாரதிபோன்ற கவிஞர்கள் இவற்றை  வரிசைப்படுத்தும்போது எத்தனை அழகாய்  வருகிறது பாருங்கள்!
 
காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
      கண்டதோர் வையை பொருனைநதி-என
மேவி யாறு பலவோடத்-திரு
      மேனி செழித்த தமிழ்நாடு
 
 
நாம் தமிழ் நாட்டை நிலப்பரப்பாகப்பார்க்கி்றோம்    ஆறுகளை நீர்ப்பரப்புகளாய்ப்பார்க்கிறோம் ஆனால் கவிஞனின் பார்வையில்  தமிழ்நாடு என்பது திருமேனியாம்!ஆறுகளால் அது  செழித்துள்ளதாம்! உள்ளத்திலே இருந்த இன்பம் சொல்லிலே  பாய்ந்து ஆறுகளை  வரிசைப்படுத்தி நிறுத்துகிறது!
 
 
 

  மஞ்சுமஞ் சுங்கைப் பரராச சேகர மன்னன் வெற்பில்
பஞ்சுமஞ் சும்பதப் பாவைநல் லாய்படை வேள் பகழி
அஞ்சுமஞ் சுங்கய லஞ்சுமஞ் சுங்கட லஞ்சுமஞ்சும்
நஞ்சுமஞ் சும்வெற்றி வேலோ வுமது நயனங்களே
 
 
இந்தப்பாடலை யாரும் கேள்விப்பட்டதுண்டா? மஞ்சு  பஞ்சு அஞ்சு நஞ்சு முதலிய  மென்மையான  ஒலிகளைப்பாடலில்  தூவிவிட்டுச் சொல்  இன்பத்தை  உண்டாக்குகிறார்  ஒரு கவிஞர்.(பாடலுக்கு அர்த்தம்  ஜீவ்சு சொல்லுவார்)
 
சொல்லிலே இருக்கும் பொருள்  வேதனையைக்கொடுப்பதாக இருந்தாலும் கவிச்சொல்லின் ஒலி அந்த வேதனையையும் மாற்றிக்கேட்பவர்களுடைய இதயத்திலே இன்பத்தையே   கொடுக்கிறது. Beneditto Croce என்ற இத்தாலிய அழகியல் புலவர் ,’There is nothing like aesthetic pain' என்று சொன்னார். அதாவது வேதனையான பொருளைக்கூட கலைஞன் தன்  கலைத்திறனால் ஆனந்தத்தைக் கொடுக்கும் முறையிலே சொல்லிவிடுகிறான். இன்பத்தைக்கொடுக்கும் நிகழ்ச்சியை  கலைத்திறமை இல்லையெனில் துன்பத்தைக்கொடுக்கும் முறையில் சொல்லிவிடலாம்.
 
 
இங்கே ஔவையார் பாட்டு யாருக்காவது நினைவுக்கு வருகிறதா?பாண்டியன் கல்யாணத்தில் தான் பட்ட பாட்டை   அதாவது தொல்லையை சொல் இன்பத்தோடு நமக்குப்பரிமாறும்  பாடல் அது!
மேலும் படிக்க... "கோடை தந்த கொடை!"

Sunday, May 05, 2013

ஓட்டுப்போட்டாச்சு!





முகு>>
 
(election   அதவாது ಚುನಾವಣೆ  அதாவது தேர்தல் கன்னடத்தில் சுனாவனே!(cunāvaṇe)  இன்னிக்கு நடக்கிறது  பெங்களூரில். )
 
                     
இரண்டுவாரங்கள் முன்பு யோகாவகுப்பில் சிக்கலான ஒரு ஆசனம் செய்துகொண்டிருந்தபோது செல்  சிணுங்கியது.


யோகா மாஸ்டர்(பெண்)மூஞ்சியைக்கெ(கொ)ஞ்சலாய்ப்பார்த்துவிட்டு கண்ணாலேயே ஏதும் அவசர கால் ஆக இருக்குமோ என்னவோ சீக்கிரம் முடிச்சிடறேன் மேடம் என்று சொல்லிவிட்டு போனை அந்த சிக்கலான நிலையிலேயே கையில் எடுத்துக்காதில்வைத்து ஹலோவினேன் .


உடனே எதிர்முனையில்,’நானு குமார சாமி தேவகௌடாவின் மகன் பேசறேன்’ என்றுகன்னடத்தில் குரல் வந்ததும் சிக்கலை வி டுவித்து பவ்யமாய் எழுந்துகொண்டு “நமஸ்காரா” என்றேன்.


மனசுக்குள் ஒரே குறுகுறுப்பு  என்னடாது  நாம்பிரபலமாகிவிட்டோமா எந்தக்கதையாவது கன்னடத்தில் மொழியாக்கமாகி  என்பேர் புகழ் கன்னட உலகில்பரவி , பெரிய அரசியல்தலைவர்களெல்லாம் அதைப்படித்துப்பாராட்டுகிறார்களா ? ஒருக்கணம்  (தோட்டம் பக்கம் யோகா வகுப்பு இல்லையெனினும்) புல்லரித்தது.


எனது நமஸ்காராவிற்கு எதிர்முனையில்பதிலே இல்லை குமாரசாமிபாட்டுக்கு பேசிக்கொண்டே போனார்  கடைசியில் ஆகவே எங்கள் கட்சியை ஆதரியுங்கள் என்று சொல்லி  முடித்தார் ஆஹா அப்பதான் தெரிஞ்சுது அது ஆடமாடிக்காய் வந்த  ஓட்டுகேட்கும் யுத்தி என்று!

அசடு வழிய நான் நிற்க வேறு சிலயோகாபெண்மணிகள்,” யாரு  குமாரசாமியா?தேவகௌடா பிள்ளை அவரு! நல்லா எலெக்‌ஷன் கான்வாசிங்  செய்றார் எங்களுக்கும் அடிக்கடி இப்படி கால் வருது”  என
    அலுத்துக்கொண்டார்கள்.

அடிக்கடி  குமாரசாமி போன் செய்துகொண்டே இருந்தார்!
 

ஒருதடவை,”நானு குமார்..”என்றதுமே போனை கட் செய்துவி்ட்டேன்.
கடைசில   பார்த்த அந்தக்குமார் என்று ஆரம்பித்தவர் என் தோழி சுமதியின் (கன்னடக்)கணவர்!
\
 அவர் மனைவியும் என் அருமை சிநேகிதியுமான சுமதி  என்னிடம்,”  ‘3பேர் 3காதல் படம் உன் நண்பர் வசந்தின(சந்தடிசாக்குல  சுயப்ரதாபம் சொல்வதில் ஷைலஜாக்கு இணை யாரு?:))படமாச்சே வரியான்னு கேட்க  என் போன்ல சார்ஜ் இல்லைன்னு குமாரைவிட்டு கேட்க சொன்னா அவர்நான் குமார்ன்னு சொன்னபோதே கட் பன்ணியாமே?”  என்று அதட்டினாள்..

”ஐயெயொ சாரிடி“ நிலைமையை சொன்னேன்


பரவால்லபோ படம்  சுமார்தான் அதனால்  தப்பிச்சே
 
இப்போ எல்க்‌ஷனுக்கு வருவோம்
 
குமாரசாமியையப்போல இதரகட்சிக்கார வேட்பாளர்கள் போனில் துரத்தல்லை


ஆனால்  சாலை மூலையில் ஒரு  பெரிய காரில்  கதவுகளைத்திறந்து வைத்துக்கொண்டு  அவர்களின்தொண்டர்கள் மைக்கில் ஆதரவு கேட்பார்கள் கூடவே கன்னடப்பாட்டு  எட்டூருக்கு முழங்கும்.

ஒரு வேட்பாளருக்கு விசில் சின்னம் அவர் ஓட்டுக்காக  ஆதரவு கேட்டுவரும்போதெல்லாம் அவர்தம் தொண்டர்கள் விசிலை அடிப்பார்கள் பாருங்கள் காது கிடுகிடுத்துப்போய்டும்.’அண்ணா  விசில் அண்ணா  நனகே ஒந்து..” என்று சில சிறுவர்கள்  ஓடிப்போய் கேட்டு வாங்கிக்கொண்டு நாள் முழுக்க  கண்டக்டர் பணி செய்வார்கள்.

:
 
வீட்டில் அந்தந்தக்கட்சிக்காரர்களின் கைகுவித்தபோட்டோவு்டன் நோட்டீஸ்கள் வந்தவண்னமாகவே இருந்தன அதைசேர்த்து வைத்துப்பார்த்ததில் முக்கால்கிலோ எடை தேறியதுன்னாபார்த்துக்குங்க:)
 
 
 
இன்னிக்கு எல்க்‌ஷனுக்காக நேத்து இரவு பெங்களூரில் அடைமழை பொழிந்துதள்ளிவிட   காலைநேரம் ஜில்லென்றிருக்கவே ஓட்டுச்சாவடிக்கு   காலனிமக்கள்  பலரும்பலமொழிகள் பேசிக்கொண்டே க்யூவில்போய்நிற்க ஆரம்பித்தோம்.

வோட்டர் ஐடி  கொண்டுவரதவர்களை திரும்ப வீட்டிற்குப்போகவைத்துவிட்டார்கள்.

“என்ன  எலெக்‌ஷனோ என்னவோ  யாருக்கு வோட்டு  போட்டு என்ன யார் வந்து என்ன கிழிக்கப்போறாங்க?’என்று அலுத்துக்கொண்டே  ஒரு பெரியவர்  சின்னதாய் அரசியல்பேச ஆரம்பிக்க ”உஷ் அதெல்லாம் இப்பபேசக்கூடாது ”என்று போலீஸ்கார இளைஞர் அதட்டினார்.

இன்னொருவர் தன்மகள் முதல்தடவி ஓட்டுப்போட வருவதால்  அதன் விதிமுறைகளைவிளக்கும்போது,”கையில் விரல்ல மசி வைப்பாங்க..ஞாபகம் வச்சிக்கோம்மா கை  கை” என்றார் இரு முறை அவ்வளவுதான்  ஓட்டுச்சாவடி பிரமுகர் ஒருவர் கோபமாய்,”கை கைன்னு சொல்லக்கூடாது இங்க” என்றார்.

‘நல்ல வேளை ‘கால்’சின்னம்  யாரும் வைச்சிக்கல  இல்லேன்னா  க்யூல  அவங்களாலபோன் ‘கால்’அட்டெண்ட் பண்ண முடியாது/  ஒருக்கால்  மரக்கால் என்றெல்லாம்  தமிழில்  சகஜமாய்  தமிழர்கள்  பேசமுடியாது  கால்நடை என்று ஒரு ஆடு மாடைப்பார்த்தா  சொல்லிடமுடியாது. மாதவிப்பந்தல் மேல்.பல்கால்குயிலினங்கள் கூவின   என்று நான்  திருப்பாவைகூட பாடமுடியாது  என்ன சொல்றீங்க?” என்று கண்வரிடம் ஜோக்கடித்தேன் அவர் சீரியஸ் சிகாமணியாய்  சிரமப்பட்டு  தூரத்துமரத்தின் நுனியைப்பார்த்தார்.இப்படித்தான் வீட்டு முல்லைகளின் மணம்  வீட்டில் இருப்பவர்களுக்கு எங்க தெரியுது?:)

அப்புறமா அந்த வைகுண்ட ஏகாதசிக்யூவில் கால் வலிக்க நின்று  ஓட்டுப்போட்டு  வெளியே வந்தோம்.


பிகு..
மோதிரவிரலில் மசி(மை?)  வைத்தார்கள்.சாதாரணமாக ஆள்காட்டிவிரலில்தானே வைப்பார்கள்? அல்லது நான் தான் எல்க்‌ஷனுக்குப்பிறகு மக்களை மறக்கும் அரசியல்வாதி மாதிரி இந்த மை மசி சமாசார்ங்களை மறந்துவிட்டேனா?:)

 

 
 
 

--
 
 

 
 
மேலும் படிக்க... "ஓட்டுப்போட்டாச்சு!"

Wednesday, May 01, 2013

உழைப்பாளிகள்!

 
 
 
 
 
கருப்பு நிறத் தார் உருக கற்சரளை மேல் பரவச்
செருப்பின்றி மேல்நடந்து சாலைப்பணி செய்தபடி
நெருப்புமிழும் கதிரவனின் கனல்வரியைத் தாங்கி நின்று
இருப்பவனைக் காணுங்கால் கண் கலங்கிப் போகிறதே
 
சட்டியிலே கல் அடுக்கி சாரத்தின் மேலேறி
சுட்டெரிக்கும் வெய்யிலிலே சுமையோடு நடந்திட்டுக்
கட்டிடத்தில் வேலை செய்யும் கன்னியரைக் காண்கையிலே
கொட்டும் இமை கூடத்தான் குத்திட்டு நிற்கிறதே
 
 
 
 
ஊற்றுகின்ற வேர்வையிலே உடை முழுதும் நனைந்திடவே
காற்றசைவு கணப்போது கனலோடு வந்திடவே
சேற்றினிலே கால்வைத்து சிந்தையதிலே செலுத்தி
நாற்று நடுகின்றவரைக் கண்டு நா அசைய மறுக்கிறதே
 
ஆலையிலே அனல்வீசும் உலையிலே உழைப்பவரை
காலை முதல் மாலைவரைகழனியிலே உழுபவரை
சாலையிலே வண்டிகளைத் தள்ளிச் செல்பவரை
சோலையிலே நான் நின்று காண நெஞ்சம் குறுகுறுக்கிறதே..
 
மேலும் படிக்க... "உழைப்பாளிகள்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.