(இந்த ஜீ தம்பிவேற அழகுபற்றி இப்படிக் கொஞ்சமா எழுதிட்டீங்க செல்லாதுன்னு சொல்றான்!இப்படித்தான் என் சொந்தத்தம்பி ஒருமுறை போன்ல,'எப்படி இருக்கு உன் இலக்கியப்பணி?' ன்னு கேட்டான் நான் சோகமா,' எங்கடா உப்புமா கிண்டவும் சாம்பார்வைக்கவுமே சரியா இருக்கு ,,நேரமே இல்ல..எழுதவே முடில்லடா'ன்னேன் அதுக்கு அவன் 'இதைவிட பெரிய இலக்கியப்பணி வேறென்ன நீ செய்யமுடியும்?'னான்..வீட்லயே எதிரிங்க:)
விதிவலியது !நான் பாட்டுக்கு இருந்தேன் என்னை எழுதவச்சி மாட்டிக்கிறீங்க!)
சரி..சீரியசா எழுதபோறேன் இனிமே..
யாமறிந்த மொழிகளிலே தமிழினைப்போல இனிதாவதெங்கும் காணேன் என பாரதி சொன்னதுதான் எத்துணை உண்மை!
அவனுடைய பாடல்கள் அனைத்தும் சிறப்பானதுதான் ஆனாலும் தமிழ் கொஞ்சும் இந்தப்பாடல் அனைவருக்கும் பிடித்திருக்கும்.
..தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்..
...சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
..உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
வாக்கினிலே ஓளியுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும்ம் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழி பெற்றீப் பதவி கொள்வார்
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக்கண்டார்..
யாமறிந்த புலவரிலே கம்பனைபோல் என் கவிச்சக்கரவர்த்திக்கு பாரதி முதலிடம் தந்த்தமைக்குக் காரணம் இல்லாமல் இல்லை. அவனுடைய சொல்லாட்சி சுவையானது.உதாரணத்திற்கு இங்கு எனக்குப்பிடித்த பாடலை அளிக்கிறேன்..
சூர்ப்பனகை ராமரைப்பார்க்க அழகிய இளம்பெண்போல தன்னை மாற்றிக் கொண்டு வருகிறாளாம் அதை கம்பர் வர்ணிப்பதைப்பருங்கள்..நடையிலேயே நாட்டியமாடும் தமிழ்!
பஞ்சி ஒளிர், விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்க,
செஞ்செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி
அம்சொல் இளமஞ்சை என ,அன்னம் என மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்சமகள் வந்தாள்
கஞ்சம்-தங்கம்
மஞ்சை-மயில்
வள்ளுவனின் குறளில் குரல் கொடுக்க நிறைய உண்டு.ஆனாலும் தமிழோடு இணைந்துவாழ்ந்த இரட்டைப்புலவர்கள் கதையை இங்கு அளிக்க விரும்புகிறேன்...
இன்றைக்கு ஏறத்தாழ ஐநூறு அல்லது அறுநூறு வருடங்கள் முன்பாக, சோழநாட்டில் ஆமிலந்துறை என்னும் ஊரில், செங்குந்தர் மரபில் இரண்டு புலவர்கள் தோன்றினர். ஒருவர் பெயர் மதுசூரியர், இன்னொருவர் இளஞ்சூரியர். உறவு முறையிலும் ஒருவர் மாமன் மகன், மற்றவர் அத்தைமகன். இருவரும் சேர்ந்தே செய்யுள் பாடிவந்ததால் அவர்களை இரட்டையர் என்றே ஊரில் மக்கள் அழைத்தனர்.
இரட்டையர்கள் தங்கள் சமயமாகிய சைவத்தில் பெரும் பற்று கொண்டவர்கள். வாழ்நாள் முழுவதும் சிவத்தலங்களுக்குச் சென்று அங்கு கோயில் கொண்டுள்ள இறைவனைப் பாடி மகிழ்ந்தனர். இருவரில் ஒருவர் முடவர் இன்னொருவர் குருடர். குருடரின் தோளில் ஏறிக் கொண்டு, முடவர் நடக்கும் பாதைவழி கூற, முன்னவர் அதன்படிச் செல்வார். இருவருக்குமே கலைமகள் அருள் பரிபூரணமாக இருந்தது. இனிய செந்தமிழ்ப் பாடல்களைப் பெரு முயற்சியும் உழைப்புமின்றி எளிதில் பாடி அனைவரையும் பரவசப்படுத்தினர்.
ஒருபாடலின் முதல் இரண்டு அடிகளை ஒருவர் பாடுவார். அதை ஒட்டி மற்றவர் அடுத்த பகுதியைப் பாடி முடிப்பார். வயிறு ஒன்று இருக்கிறதல்லவா, அதை நிரப்பியாக வேண்டுமே. அதற்காக அவ்வப்போது சில செல்வந்தர்களையும் அணுகி அவர்கள் மீது பாடிப் பரிசு பெற்று வாழ்ந்துவந்தனர். திருத்தலங்களுக்குச் சென்று முதலில் இறைவன் மீது பாடிவிட்டுப் பிறகுஅவ்வூரில் உள்ள செல்வந்தர்களைப்பாடிப் பரிசுடன் திரும்புவர்.
ஒருமுறை இரட்டைப்புலவர்கள் சிதம்பரம் பெருமானைத் துதிக்க கோயிலுக்குச் சென்றனர். திரும்பும் வழியில், பெருஞ்செல்வம் படைத்த செல்வந்தன் ஒருவன் விலை உயர்ந்த ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு போவதைப்பார்த்து அவனைப்பற்றிப் புகழ்ந்து முடவர் முதலில் பாட, குருடர் வழக்கம் போல முடித்துக் கொடுத்தார். அறுசுவை மட்டுமேயன்றித் தமிழ்ச் சுவையறியாத அந்த செல்வந்தர் பாடல் கேட்டு நெடுமரம்போலவே நிற்கவும், முடவர்,
'மூடர் முன்னே பாடல் மொழிந்தால் அறிவரோ
ஆடெடுத்த தென்புலியூர் அம்பலவா'
எனப்பாடி நிறுத்தினார்.
அக்குறிப்பினை அறிந்த குருடர்,
'-ஆடகப்பொற்
செந்திருவைபோல் அணங்கைச் சிங்காரித்துஎன்னபயன்
அந்தகனே நாயகனானால்?'
எனப்பாடி முடித்தார்.
அதற்குள் அங்கே மக்கள் கூடிவிட்டனர். அவர்கள் இப்பாடலின் உட்கருத்தையும் சொல்நயத்தையும் சிலேடைப் பொருளையும் கண்டு வியந்து இன்னொரு பாட்டு பாடும்படி அவர்களை வேண்டினர்.உடனே முடவர்,
'பாடல் பெறானே பலர்மெச்ச வாழானே
நாடறிய நன்மணங்கள் நாடானே'
என்றுபாடிநிறுத்த, குருடர்,
'-சேடன்
இவன் வாழும் வாழ்க்கையிருங்கடல்சூழ் பாரில்
கவிந்தென் மலர்ந்தென்னக்காண்.'
என்று அந்தப் பாடலைப் பாடி முடித்தார்.
அங்கே குழுமி இருந்தவர்கள் இப்பாடலைக்கேட்டு ரசித்து அச்செல்வருக்கு இவர்களின் அருமை பெருமையைக் கூறவும் அவனும் அதை உணர்ந்து இரட்டையர்களை உபசரித்து வேண்டிய பரிசினைக் கொடுத்து அனுப்பினான்.
ஒருமுறை இவர்கள் தங்கள் வழிப்பயணத்தில் ஆங்கூர் என்னும் ஒரு சிவாலயத்தினை அடைந்தனர். அப்போது கோயிலில் உச்சிக்கால பூசை நடந்து கொண்டிருந்தது. குருடருக்கு வழி நெடுக நடந்துவந்த களைப்பு. முடவருக்கும் பசி. மனம் பொறுக்காமல் முடவர்,
'தேங்குபுகழ் ஆங்கூர்ச்சிவனேயல்லாளியப்பா
நாங்கள் பசித்திருக்கை ஞாயமோ'
என்றுபாடவும் குருடர்,
'-போங்காணூம்
கூறுசங்கு தோல்முரசு கொட்டோசையல்லாமற்
சோறுகண்ட மூளியார் சொல்.'
என்று பின் இரண்டடிகளைப் பாடினார்.அதனால் முடவர்,'நாங்கள் பசித்திருக்க நீ சாப்பிடுவது முறையோ?' என வருந்திக்கேட்ட வினாவிற்குக் குருடர் சொன்ன அடிகளால் அந்தக்கோயில் சிவனே சோறு காணாமல் இருந்தார் என்னும் உண்மை வெளிப்பட்டது.
அப்போது அங்கு குழுமி இருந்த பக்தர்களுக்கு இந்தப்பாடலின் பொருள் விளங்கவில்லை. சில நாள் கழித்துத்தான், அந்தகோயிலின் அர்ச்சகர் செய்யும் மோசடி ஒன்று வெளிவந்தது.. அந்த அர்ச்சகர் தமது சொந்தப்பசிக்காக சுவாமியின் நித்திய நைவேத்தியத்தின் பொருட்டு தரப்படும் அரிசி பருப்பு முதலியவற்றைத் தாம் எடுத்துக்கொண்டு நைவேத்திய நேரத்தில் ஒரு செங்கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடாக்கி அதனை ஒருபாத்திரத்தில் வைத்து மூடிக்கொண்டுவருவார். பலர் அறிய சுவாமி சந்நிதானத்தில் அதன் மீது தண்ணீரைத்தெளிப்பார். உடனே கல்லிலிருந்து ஆவி எழும்புவதைப் பார்ப்பவர்கள் அர்ச்சகர் பெருமானுக்கு சுடச்சுட நைவேத்தியம் செய்வதாக நினைப்பார்கள். இந்த சூது, ஒருநாள் ஒருவனுக்குத் தெரிந்துவிட, அவன் அதை ஊர் முழுவதும் அறிவித்து விட்டான். உடனே அவ்வூரார் கூடி அர்ச்சகரை அப்புறப்படுத்தினர். முன்பு இரட்டையர் வந்து பாடிய பாடலின் அர்த்தம் இப்போது மக்களுக்குப் புரிந்தது.
இன்னொருமுறை இரட்டைபுலவர்கள் சங்கத்தமிழ் வளர்த்த மதுரைக்குவந்து சொக்கநாதரையும், அங்கையற்கண்ணியையும் வழிபட நினைத்தனர். முடவர் வழி காட்ட குருடர் அவரைத்தோள் ஏற்றிகொண்டு இருவருமாய் பொற்றாமரைக்குளம் வந்தனர். நீராடிவிட்டு ஆலயப்பிரவேசம் செய்ய நினைத்து முதலில் குருடர் குளத்திலிறங்கினார். படித்துறையில் அமர்ந்து உடையைத் துவைக்கத் தொடங்கினார், நீர்ப்பரப்பில் அதை விரிக்கத் துணி கைநழுவிப் போய்விட்டது. உடை நழுவியதுதெரியாமல் குருடர் கைகளை நீரில் தடவித் தடவிப் பார்க்கவும் கரையில் அமர்ந்த முடவர்,
'அப்பிலே தோய்த்தடுத்தடுத்துநாமதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ'
என்றுபாடினார்.
'-அப்படியே
ஆனாலுங்கந்தை,அதிலுமோர் ஆயிரங்கண்
போனால் துயர் போச்சுப்போ'
என்றார் குருடர். அது கேட்ட முடவர் விடாமல்,
'கண்ணாயிரமுடைய கந்தையேயானாலும்
தண்ணார்குளிரையுடன் தாங்காதோ?'
என்று கொக்கி போட்டார்.
'-எண்ணாதீர்
இக்கலிங்கம் போனாலென் ஏகலிங்கமாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டேதுணை!'
என விடை அளித்தார் குருடர். அந்த ஆடை சிறிது நேரத்தில் தானாகவே காற்றில் திரும்பவும் அவர் கைக்கு வந்தது.
பின்னர் அண்ணாமலையானைத்தொழ ஒருமுறை இவர்கள் திருவண்ணாமலை வந்தனர். அங்கே சக்தியை பூசிப்பவனும், செந்தமிழ்ப்புலவனும், செருக்கு மிக்கவனும், புலவர்களைக் கண்டால் இழிவாகப் பேசுபவனுமான சம்பந்தாண்டான் என்பவனைக் கண்டனர். அப்போது அவன் நாவிதனிடம் தலைசவரம் செய்து கொண்டிருந்தான். வந்தவர்கள் புலவர்கள் என அறிந்துகொண்டவன், இடக்காக, "மன் என ஆரம்பித்து மலுக் என முடிவதுபோல வெண்பா பாடமுடியுமா உங்களால் எனக்கேட்டான். அவனது அறியாமையை எண்ணிப்புலவர்கள் தமக்குள் சிரித்தனர். முடவர்,
'மன்னு திருவண்ணாமலைச்சம்பந்தாண்டாற்குப்
பன்னுந்தலைச்சவரம் பண்ணுவதேன்'
எனப்பாடலை ஆரம்பிக்க, பின்னவர்,
'-மின்னின்
இளைத்த இடைமாதர் இவன் குடுமி பற்றி
வளைத்திழுத்துக் குட்டாமலுக்கு.'
என்று அவன் தலைக்கே தொடர்புப்படுத்தி, அவனுடைய மனைவியர் இருவரிடமும் அவன் படும்பாட்டை விவரித்து அவன் செருக்கொழியுமாறு வெண்பா பாடிமுடித்தனர் அன்றுமுதல் அவன் செருக்கும் அழிந்தது.
புலவர்களைப்போற்றும் கூவத்துநாராயணன் மீது இரட்டையர்க்கு மிகுந்த அபிமானம் உண்டு. அவரது மறைவில் மனம் வெறுத்துக் காலனையே சாடினர்.
'இடுவார் சிறிதிங்கு இறப்போர் பெரிது
கெடுவாய் நமனே கெடுவாய்-படுபாவி
கூவத்து நாரணனைக்கொன்றாயே,கற்பகப்பூங்
காவெட்டலாமொ கறிக்கு?'
என்று ஓர் யாப்பு பாடினர்.
ஒருமுறை இரட்டையர்கள் ஆசுகவி பாடுவதில் வல்லவரான காளமேகப் புலவரை சந்தித்தனர். அவருடன் திருவாரூரை அடைந்து, தியாகராயப் பெருமானை வணங்கினர். பெருமாளைப் பாட நினைத்த குருடர்,
'நானென்றால் நஞ்சிருக்கும் நற்சாபங் கற்சாபம் பாணந்தான்.....' என்று தொடங்கினார்,ஆனால் அதன்மேல் பாடல் தொடர இயலாமல் நிறுத்தினார். முடவருக்கும் அதனை முடிக்க சொல் வரவில்லை. அருகே இருந்த காளமேகப்புலவர், உடனே'மண்தின்ற பாணமே" என்றார். இச்சீரான வார்த்தைகிடைத்ததும் முடவர்,
'-தாணுவே
சீராரூர் மேவும் சிவனே நீ எப்படியோ
நேராரூர் செற்ற நிலை?'
என்று வெண்பா பாடிமுடித்தார்.
பின்பு இரட்டைப்புலவர்கள் காளமேகப்புலவரின் அற்புத சக்தியை வியந்து,
'விண் தின்ற கீர்த்தி விளை காளமேகமே
மண்தின்றபாணமென்று வாயினிக்கக்-கண்டொன்று
பாகொடு தேன் சீனியிடும் பாக்கியம் பெற்றோமிலையே
ஆகெடுவோ முக்கியங்கென்னாம்?'
எனப்பாடிப் புகழ்ந்தனர். அவரிடம் பிரியாவிடை பெற்றுப்பிரிந்தனர்.
காலசக்கரம் சுழன்றது. சில ஆண்டுகள் கழிந்தன. இரட்டையர் திருவானைக்காவல் வந்து இறைவனை வழிபட்டு தங்களது பழைய நண்பரும் பெரும்புலவருமான காளமேகப்புலவரை சந்திக்க விரைந்தனர். அப்போது அவர் இல்லத்தில், "சற்று முன்னர்தான் அவருடைய உயிர்பிரிந்து உடல் தகனத்திற்குப் போய்விட்டது" எனக்கூறினர். இரட்டையர் அதிர்ச்சியுடன் சுடுகாட்டிற்கு வந்தனர் காளமேகப்புலவரின் உடலை நெருப்பு, தன்னுள் வேகவைக்கத் தொடங்குவதை கண்ணுற்ற முடவர், முகத்தில் சோகம் தாளாது அறைந்து கொண்டார்.
'ஆசுகவியால் அகில உலகெங்கும்
வீசுபுகழ்க் காளமேகமே'
என முடவர் கதற, குருடர் உடனே,
'-பூசுரா
விண்கொண்ட செந்தனவாய் வேகுதே ஐயையோ
மண்தின்ற பாணமென்றவாய்!'
எனப்பாடி அழுதார்.
இளமையிலே புலமைபெற்ற இந்த இரட்டையர் கலம்பகம் உலா முதலிய அரிய பெரிய ப்ரபந்தங்களைப் பாடியவர்கள். தமிழ் உள்ளவரைக்கும் இவர்கள் பாடல்களும் வாழும் என்பதில் ஐயமில்லை.
Tweet | ||||
இரட்டைப் புலவர்களைப் பற்றி எத்தனை செய்திகள்.
ReplyDeleteகிட்டத்தட்ட ஒரு வாழ்க்கை வரலாறே எழுதி விட்டீர்களே!
மிகவும் சுவையாக இருந்தது படிக்க.
சுவாரசியமாகவும் தான்!
மூத்தவர் பெயர் மதுசூரியரா இல்லை முதுசூரியரா?
மூத்தவர் முதுசூரியர்; இளையவர் இளஞ்சூரியர் என்ப் படித்த நினைவு.
அருமை அருமை அருமை. ஷைலஜா. ஒரே மூச்சில் படித்து முடித்தேன். இருசூரியர்களின் கதையுடன் அவர்களின் செய்யுள்களையும் தந்து மனமுவக்கச் செய்துவிட்டீர்கள். மிக்க நன்றி.
ReplyDeleteஅருமை .. அருமை. சிறுவயதில் இந்த இருவரைப் பற்றிய கதையை கேள்விப்பட்டதுண்டு.
ReplyDeleteவிஎஸ்கே முதுசூரியர்தான் சரி. தட்டும்போதுஅச்சுப்பிழையாகிவிட்டது, சாரி!
ReplyDeleteகுமரன்!நன்றி.
ReplyDeleteசத்யா! நன்றி உங்ககருத்துக்கும்.
ஷைலு,
ReplyDeleteஅருமையான பதிவு.
அப்படியே 'சிலேடை'களைக் குறித்து ஒரு பதிவு
போடுங்க. அப்பத்தான் 'அழகு பூர்த்தி'யாகும்:-)
சிலேடைகள் குறித்தா துளசிமேடம்? முயற்சி செய்யறேன்..நன்றி கருத்துக்கு.
ReplyDeleteஷைலஜா, அழகு அருமை.
ReplyDeleteஇத்தனை திறம் ஒளித்து எங்கிருந்தாய் நீ'னு கேட்க முடியாது. கண்டுபிடிக்க எனக்குத்தான் நேரமாகிவிட்டது.
//இக்கலிங்கம் போனாலென் ஏகலிங்கமாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டேதுணை//
இந்த வரிகளும் இரட்டைப் புலவர்கள் வாழ்வும் பள்ளிநாட்களைக்
கொண்டு வந்து விட்டன.
ரொம்ப நன்றி ஷைலஜா.
மிக மிக நெகிழ வைத்துவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.
ரொம்ப அருமை-ங்க..
ReplyDelete/சீரியசா எழுதபோறேன் இனிமே/
'இவ்வளவு' சீரியசா இருக்கும்-னு எதிர்பார்க்கலை..
இரட்டைப் புலவர்களைப் பற்றி செய்திகள் புதிது. ஆச்சரியப்பட வைக்கிறது.
நன்றி!
வாங்கோ வல்லிம்மா..நலமா? இரட்டைபுலவர்கள் மாதிரி எத்தனை எத்தனைபேர் தமிழுக்காக வாழ்ந்தவர்கள்! கற்றது கைமண் அளவே..நிறைய இன்னும் படித்து கேட்டு எழுதணும்.நன்றி உங்க பாராட்டுக்கு.
ReplyDeleteஷைலஜா
மிக அருமை.
ReplyDelete//
மன்னுதிரு வண்ணா மலைச்சம்பந் தாண்டாற்குப்
பன்னும் தலைச்சவரம் பண்ணுவதேன் - மின்னின்
இளைத்தஇடை மாதர் இவன்குடுமி பற்றி
வளைத்திழுத்துக் குட்டா மலுக்கு
//
இது காளமேகத்தின் பாடலல்லவா?
மேலும் மண்தின்ற பாணம் பாடல் பற்றி நான் அறிந்தது:
இரட்டையருக்கு 'பாணந்தான்'னுக்கு மேலே பாடல் தோன்றவில்லை.
ஆகையால் அதனை அப்படியே ஒரு சுவற்றின்மீது கரிக்கட்டையால்
எழுதிவைத்துவிட்டுச் சென்றார்கள். அந்தப் பக்கமாய் வந்த காளமேகம், அந்தப் பாடலை விட்ட இடத்திலிருந்து எழுதி முடித்தார்.
மண்தின்ற பாணமே - தாணுவே
சீராரூர் மேவும் சிவனேநீ எப்படியோ
நேரார் புரமெரித்த நேர்?
பின்னர் அந்தப்பக்கமாக வந்த இரட்டையர் பூர்த்தியாகிய
முழுப்பாடலையும் பார்த்துவிட்டு, யார் பாடியது என்று அறிந்து
மகிழ்ந்தனர்.
தொடருங்கள்.
''FloraiPuyal said...
ReplyDeleteமிக அருமை//
FloraiPuyal !(தமிழில் எப்படி அழைப்பது?:)) நன்றி.
நான் படித்த இரட்டைப்புலவர் குறிப்பில் இருந்தபடி அளித்திருக்கிறேன் நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்..ஏனெனில் விவரம் தருகின்ற புத்தகத்திலும் இப்படி ஏதாவது மாற்றிக் கொடுக்கிறார்கள்..
தொடரவேண்டும் இன்னும் சில, காவியம்படைத்த புலவர்கள் பற்றி ..
கருத்துக்கு மறுபடி நன்றி
ஷைலஜா
வாங்க தென்றல்!தமிழில் புலவர்கள் எத்தனை எத்தனைபேர் தமிழன்னைக்குப் பாமாலை சூடி உள்ளனர் ! நேரம் கிடைக்கும்போது அதையெல்லாம் தெரிந்தமட்டில் தவறின்றி எழுத ஆர்வம்,,பார்க்கலாம்நன்றி கருத்துக்கு
ReplyDelete/நேரம் கிடைக்கும்போது அதையெல்லாம் தெரிந்தமட்டில் தவறின்றி எழுத ஆர்வம்
ReplyDelete....
/
வாழ்த்துக்கள், ஷைலஜா! நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.
மணிப்பிரவாள நடை என்ற பெயரில் நம் தாய்த் தமிழுடன் வடமொழி கலந்ததால் இன்றைக்கு நம் மொழி இந்த பாடுபடுகிறது.
ReplyDeleteதமிழை வளர்ப்பதற்காக அரும்பாடுபடும் நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
புலவர்களின் வாழ்வினைக் குறித்த பதிவுகள் மிகக் குறைவு. அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். இவற்றை எதிலிருந்து படித்தீர்கள் என்பன போன்ற நூற்குறிப்பையும் (reference)தந்தால் இன்னும் பயனாக இருக்குமே.
ReplyDeleteநன்றி!
நன்றி விடாது கருப்பு உங்க கருத்துக்கும் வருகைக்கும்.
ReplyDeleteசுந்தரவடிவேல்!வாங்க! நான் இவர்களைப் பற்றிய குறிப்பினை சிலவருடங்கள்முன்பு மஞ்சரி எனும் பத்திரிகையில் படித்தேன் உடனே எழுதிவைத்துக்கொண்டேன் டைரியில். வருடம் தேதிமறந்துவிட்டது இனி நீங்கள் சொல்வதுபோல செய்ய நினைக்கிறேன் நன்றி கருத்துக்கு.
இரட்டைப்புலவர்களின் புலமை போற்றுதலுக்குரியது.நன்றி
ReplyDeleteஅ.ஜனார்தனம்
Elamaran
ReplyDelete