முன்குறிப்பு..1 பிரபலபதிவர் அபி அப்பாக்கும் இந்தப்பதிவுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை.
மு.கு 2....
ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம் - பெரியாழ்வார் திருநட்சத்திரம் - பிறந்த தினம் - (ஜூலை3ம்தேதி இடவேண்டிய பதிவு இது,,சிலகாரணங்களினால்தாமதமாகிவிட்டது)
முகு3..தவறாம பின்குறிப்பு படிங்க!
**********************************************************************
நிறையப்பேசின ஆழ்வார்கள் மூவர்!
ஸ்ரீநம்மாழ்வார் ஸ்ரீகலியன் ஸ்ரீபெரியாழ்வார்,முறையே 1296 , 1253, 473 பாசுரங்கள் அருளியுள்ளனர்.
’ஒளிபுத்தூர் வித்தகன் விட்டுச் சித்தன் விரித்த தமிழ்’ என்று பெரியாழ்வார் தன்னை வித்தகன் என்று சொல்லிக்கொள்கிறார் ஒருபாடலில். வித்தகன் என்றால் கெட்டிக்காரர் என்று அர்த்தம். பாண்டியன் சபையில் வாதத்தில் வென்ற வித்தகராயிற்றே!
புதுவைக்கோன்பட்டன் புதுவைமன்னன் பட்டர்பிரான் என்று பெரியாழ்வார் வில்லிபுத்தூருக்கே ராஜாவாக இருந்திருக்கிறார்.
பெரிய ஆழ்வார், பெரியாழ்வார் மட்டுமே!
விஷ்ணு சித்தன் இவர் தம் இயற்பெயர்! பட்டர்பிரான் என்பது சிறப்புப் பெயர்!
திருவரங்கம் மற்றும் அதன் தொடர்புள்ள எல்லாமே "பெரிய" என்று தான் அடைமொழியப்படும்!
பெரிய கோவில் - திருவரங்கம்
பெரிய திருவடி - கருடன்
பெரிய அவசரம் - திருவரங்க நிவேதனம்
பெரிய பெருமாள் - அரங்கநாதன்
பெரிய பிராட்டி - அரங்கநாயகி
அந்த வரிசையிலே, அவனுக்குப் பெண் கொடுத்த பக்தரும்
பெரிய ஆழ்வார் -
பெரியாழ்வார்!
மற்றவர்களுக்கு எல்லாம் வெறும் பரிவு தான், இறைவனிடத்தில்!
இவருக்கு மட்டுமே பொங்கும் பரிவு!
தாய் போல் பொங்கும் பரிவு! குழந்தையை நினைக்கும்போதே தாய்க்கு நெஞ்சகம் பொங்கிவிடும்! தாய்ப்பால் பொங்கும் பரிவு! - அதனாலேயே அவர் பெரிய ஆழ்வார்!
பெருமாளுக்கே தாய் ஆனதால் பெரிய ஆழ்வார்!
ஆண்டாள் பூமித் தாயின் அம்சம்! அந்த தாய்க்கே தந்தை ஆனதால் பெரிய ஆழ்வார்!
இப்படி இவர் ஒருவரே,
அவனுக்குத் தாயுமாகி, அவளுக்குத் தந்தையும் ஆனதால் பெரிய - பெரிய ஆழ்வார்
தமிழில் அபியும் நானும் என்று சிலநாள்முன்பு ஒருபடம் வந்தது.அப்பா-மகள் பாசம்பற்றிய கதை.
ஆண்டாள்்மீது பெரியாழ்வார் கொண்ட பாசத்தின் முன்பு அபியாவது அவள் அப்பாவாவது! வேறெந்த தந்தை-மகளுக்கிடையே இப்படி ஒரு பாசப்பிணைப்பு இருக்குமா என்றால் அது சந்தேகமே!
ஆண்டாளைப்பற்றிப்பாடும்போது ’பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே!’ என்கிறார்கள். இத்தனைக்கும் அவர் துளசிக்குவியலில்தான் ஆண்டாளைக்கண்டுபிடித்திருக்கிறார். பெற்ற பெருமை இல்லாதவருக்குக்கிடைத்த பேற்றினைப்பாருங்கள்!
’பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ் மாலைமுப்பதும் தப்பாமே’ என்கிறாள் ஆண்டாளே தான் வடித்த திருப்பாவைப்பாடலில். அப்பாவும் பெண்ணும் மாறிமாறி அன்பைப்பரிமாறிக்கொள்கிறார்கள்.
தான் சூடிய மாலையை இறைவனுக்குச்சூட்டிட அதனை தந்தையிடம்கொடுத்த துணிச்சல்காரியான பெண் ஆண்டாள்.
அந்த நாளிலேயே பெண் சுதந்திரம் இருந்திருக்கிறதென்பதற்கு ஆண்டாளின்
நாச்சியார் திருமொழி வாசகங்களே போதும். அப்படி ஒரு சுதந்திரத்தை அவளுக்கு அளித்தவர் பெரியாழ்வார் என்றால்மிகை இல்லை.
மகளின் ஆசையைபூர்த்தி செய்து அவளை திருமாலுடன் சேர்த்துவைத்து வீடுவந்தவர் மகளின் பிரிவில் மனம் தவிக்கிறார். செங்கண்மால்தான் கொண்டுபோனான் என மனதைத்தேற்றிக்கொள்ள பிரயத்தனப்படுகிறார்.ஆனாலும் பாசம் மனசை வழுக்கிவழுக்கி நினைவுகளை பின்னோக்கி இழுத்துச்செல்கிறது.மகளோடு கூடிக்கழித்த நாட்களை அசை போடுகிறது.
’நல்லதோர் தாமரைப்பொய்கை
நாண்மலர் மேல்பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு
அழகழிந்தாலொத்ததாலோ
இல்லம் வெறியோடிற்றாலோ
என்மகளை எங்கும் காணேன்
மல்லரையட்டவன் பின்போய்
மதுரைப்புறம் புக்காள்கொலோ’
கண்ணில் நீர்மல்கப்பாடுகிறார் பெரியாழ்வார்.
கண்பனித்தது என்பார்கள்.
ஆமாம் பெரியாழ்வாருக்கு மகள் மணமாகிசென்றதும் கண்பனித்துத்தான் போனது.
அவரது விழிகளாகிய தாமரைக்கு மகள் எனும் சூரிய ஒளி இல்லாமல்போய்விட்டதாம்.
பனிவந்து தாமரையைச் சூழ்கிறதாம். பனிகண்டமலர் விரியுமோ?
பெண்ணிருந்தவரை இல்லம் தாமரைப்பூத்த பொய்கையாய் அழகாக இருந்ததாம்.இப்போது பனிபெய்வதால் இதழ்கள் உருகிக்கருகிவிட்டதாம்,கொடி மொட்டையாய் நிற்கிறது இதுபோல வீடு அழகழிந்து வெறியோடிவிடுகிறது.
நம் மனதிற்குப்பிரியமானவர்கள் பிரிந்துவிட்டால் இல்லமென்ன நம் உள்ளமே ’வெறிச்’ என்றுபோய்விட்டதாய் சொல்கிறோம் அல்லவா? அதைத்தான் ஆழ்வார் இந்தப்பாடலில் சொல்லி இருக்கிறார்.
பொய்கையின் படம் பெரியாழ்வாரின் சொற்சித்திரத்தில் மனதில் பதிந்துவிடுகிறது.கவிதைக்கென்று தனி வார்த்தைகள் இல்லையென்று காட்டிவிட்டார் பெரியாழ்வார், ஆமாம் உலகத்தில் வழங்கிவரும் சொற்களை வைக்கிற இடத்தில் வைத்தால் அவைகளுக்கு அபூர்வ சக்தி ஏற்பட்டுவிடுகிறது என்பது உண்மைதானே!
பின்குறிப்பு
எனக்குத்திருமணம் முடிந்து என்னை திருவரங்கத்திலிருந்து பெங்களூருக்கு அனுப்பும்போது தன் கண்ணீரைபேனாவில் நிரப்பி என் தந்தை எழுதிய பாடல் இது!
மணமகளாய் என்மகள்தான்
மணம்முடித்துச்செல்கின்றாள்
குணம் நிறைந்த கணவருடன்
குதூகலமாய்ச் செல்கின்றாள்
இத்தனை நாள் நான் வளர்த்த
என் இனியத்திருமகள்
இன்றென்னைப்பிரிந்து
தொலைதூரம் செல்கின்றாள்
வரும் நாளில் அவள் நினைவில்
வாடித்தான் இருப்பேனோ
வசந்தமான நினைவுகளை
அசைபோட்டுத்தான் இருப்பேனோ?
மறுபடியும் சந்திக்கும்
நாளுக்குக் காத்திருப்பேன்
மனமெல்லாம் மகள்நினைவில்
மானசீகமாய் வாழ்வேன்!
*********************************************