வாசலுக்குக்கோலம் போட வந்த ஜனகா அந்தக்காலைப்பொழுதில் தெருவில் கோலிக்குண்டு விளையாடிக்கொண்டிருந்த தன் மகன்களைக் கண்டு திகைத்தாள். ஆறுவயதிலும், நான்கு வயதிலுமாக இரண்டுஆண்குழந்தைகளும் ஒன்றரை வயதில்ஒருபெண் குழந்தையும் இருக்கிறது இருபத்தி ஒன்பதுவயது ஜனகாவிற்கு. வேறெந்த செல்வம் இருக்கிறதோ இல்லையோ ஏழைகளுக்கு புத்திர செல்வத்திற்கு மட்டும் தடையில்லை’ என்று அவளே அடிக்கடி அலுத்துக்கொள்வாள்.
"ஆம்பிளை சிங்கமா ரெண்டுபேரும் அழகுக்கிளியா ஒர் பொண்ணும் நமக்கு இருக்குன்னு பெருமைப்படறதவிட்டு அலுத்துக்கிறயே ஜனகா...” என்பான் அவள் கணவன் பத்ரி பெருமையாக. வறட்டுப்பெருமை பேசுவதும் சீட்டு ஆடுவதும் வெட்டியாக வீட்டில் அமர்ந்து மனைவியின் சமையல் வேலைவருமானத்தில் வாழ்வதும் பத்ரிக்கு திகட்டாத விஷயங்கள்.
’நீ போய்ட்டுவா ..நான் குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறேன்’ என்று வீட்டில் உட்கார்ந்துகொண்டு சகாககள் நாலைந்து பேரோடு சீட்டுவிளையாடுவான். கல்யாணம் ஆனபுதிதில் சாயிராம் காட்ரிங் சர்வீசில் சமையல்பணி செய்துகொண்டிருந்தான். பெரிய பிள்ளை ஜனகாவின் வயிற்றில் இருக்கும்போதே அங்கே மேலிடத்தில் சண்டை போட்டு வேலையை அடியோடுவிட்டு விட்டான் ..வேறேங்கும் வேலை தேடிப்போகவுமில்லை. உடனே ஜனகா வாயும் வயிறுமாய் சமையல்வேலை தேடிப்போனபோது பெசண்ட் நகரில் வக்கீல் திருமலைவீட்டில் ஆள் தேடுவதாய் காதில்விழவும் போய்க்கெஞ்சி மன்றாடியதில், வக்கீல்மாமி மனம் கனிந்து வேலை போட்டுக்கொடுத்தாள்..ஜனகாவின் நாலாயிரம் ரூபாய் சம்பளத்தில்தான் குடும்பமே ஓடுகிறது. இதில் சீட்டாட்டத்தில் விட்டதைப் பிடிக்கிறேன் என்று இருநூறும் ஐநூறுமாய் பத்ரி சுருட்டிக்கொண்டுவிடுவான்.
“டேய் பசங்களா என்னடா இந்த நேரத்துல கோலிவிளையாட்டு? பல் தேய்ச்சீங்களா இல்லையா?”ஜனகா கோலப்பொடியில்குனிந்து தரையில் நாலு இழு இழுத்தபடி கேட்டாள்.
“அம்மா! நான் தெருக்கோடி பைப்புல எழுந்ததும் போய் பல்தேச்சிக் குளிச்சும் ஆச்சு. ராத்திரியெல்லாம் நம்ம வீட்டு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வழியா ஒரேடியா வெய்யில் அனலா தாக்கிடுத்து. திரும்ப ஆத்துல வந்து பார்த்தா நீ பின் கட்டுல பாத்ரூம்ல குளிச்சிண்டு இருந்தே அதான் தம்பியும் நானும் விளையாட இங்க வந்துட்டோம். தங்கப்பாப்பா தூங்கறா..” என்றான் பெரியவன் பிரஹலாதன்.
ஜனகா கோலமாவுக்கிண்ணத்துடன் வீட்டிற்குள் நுழைந்தவள் மணி ஏழாகியும் வேஷ்டி நழுவினது தெரியாமல் பாயில் தூங்கிக் கொண்டிருந்த பத்ரியை எழுப்பினாள்.
”எழுந்திருங்க நான் வக்கீல் மாமியாத்துக்கு சீக்கிரமா கிளம்பணும். நரசிம்மஜயந்தியாம் ராத்ரி ஆயிடும் இன்னிக்கு திரும்பி வர்ரதுக்கு. ஐம்பதுபேருக்கு சமையல் செய்யணும். அந்திப்பொழுதுலதான் நரசிம்ம அவதாரம் நடந்ததாலே சாயந்திரமா நரசிம்மருக்கு பூஜை இருக்கு நிறையவேலைஇருக்குன்னு வக்கீல்மாமிசொல்லி இருக்கா. லேட் ஆச்சுன்னா மாமி என்னை உண்டுஇல்லைன்னு பண்ணிடுவா”
...”யாரு அந்த பெண் சிங்கம் தானே? ’பெசண்ட்நகர்பேய்’ன்னு எங்க வட்டாரத்துல அந்த மாமிக்கு பேரு வச்சிருக்கோம்..சீமாச்சு ஒருதடவை அவாத்துக்கு ஏதோ ஃபங்ஷனுக்கு காட்ரிங் பண்ணப்போனப்போ ஏற்பட்ட அனுபவத்துல வச்சபேருதான்..ஹ்ம்ம்.. நீ என்னமாத்தான் ஆறுவருஷமா அவகிட்ட வேலைபாக்றியோ ஜனகா? ஆஆஆவ்வ்வ்...” என நீளமாய்க் கொட்டாவிவிட்டபடி எழுந்த பத்ரி,” இன்னிக்கு சீட்டுவிளையாட்ற ப்ரண்ட் ரங்கமணி லஞ்ச் ட்ரீட் தரேன்னு சொல்லி இருக்கான்.. நங்கநல்லூர்ல அவன் மச்சினன் புது மெஸ் திறந்திருக்கானாம் அதுக்கு வரசொல்லி இருக்கான் நான் சின்னவன் துருவனையும் குட்டி கோதையையும் சைக்கிள்ல வச்சி அழைச்சிண்டு போறேன்.. மூணுபேரை சைக்கிள்ல கூட்டிண்டு போறது கஷ்டம்..அதனால பெரியவனை நீ உன்கூட இன்னிக்குக் கூட்டிண்டு போ... அவனும் நரசிம்ம ஜயந்தி வைபவத்துல கலந்துக்கட்டுமே”
” வக்கீல் மாமி என்ன சொல்வாளோ தெரியல ஆனா யார் யாரோ வருவா வருஷா வருஷம் பாத்துருக்கேனே.... சரிடா ப்ரஹா வரியா என்கூட?”
”வரேனே...பெரிய பங்களான்னு நீ சொல்வியேம்மா ! தோட்டம்லாம் இருக்குமா? மரம் செடில்லாம் இருக்குமா? ஊஞ்சல் போட்ருப்பாளா நான் அதுல ஆடலாமா?”
"சமத்தா இருக்கணும்.. ஏதும் விஷமம் பண்ணினா அந்த வக்கீல்மாமிவேதவல்லி உன்னை மிரட்டுவா..,,,பொல்லாதமாமி அவாத்துல மாமாவே மாமிகிட்ட பயப்படுவார். என்னவோ போ அப்பப்போ கொஞ்சம் அரிசியும் பருப்பும் தூக்கித்தரா ...மிச்சம் மீதி சாப்பாடு தரா...மாமியோட பொண்ணு அமெரிக்காலேந்து வந்தா இரக்கப்பட்டு நமக்கு துணி மணில்லாம் வாங்கித்தரா.அதான் நானும் பல்லைக் கடிச்சிண்டு அங்கபோய்ட்டுவரேன் உங்கப்பா மட்டும் பொறுப்பா இருந்தா எனக்கு இந்த நிலைவருமா ப்ரஹா?”
தன்னைச் சுட்டிக்காட்டிப்பேசுவதைக் கேட்ட பத்ரி பாயைவிட்டு துள்ளி எழுந்தான்.”என்னடி குழந்தைகிடட் வாய் நீள்றது ?நாந்தான் உன் இடத்துல இங்க தினமும் பசங்களைப் பாத்துக்கறேனே? குளிப்பாட்டி யுனிஃபார்ம் உடுத்தி பழையதைப்போட்டு பள்ளிக்கூடம் அனுப்பறேன். சின்னது கோதை நடுக்கூடத்துல ஆய் போனா அள்ளிக்கூட போட்றேன்.பகல் ஒருமணீக்கு நீ திரும்பிவரவரைக்கும் எல்லாத்தியும் பாத்துண்டு வீட்ல சீட்டு ஆடி சம்பாதிக்கவும் செய்றேன் இன்னும் என்னடி பொறுப்பு வேணும் உனக்கு?”.
பத்ரி கூச்சல் போட ஆரம்பித்துவிட்டால் ஓயமாட்டான் தன்மேல்தவறு இருப்பவர்களுக்கே உரிய அதிகப்படி பேச்சு பத்ரியிடம் உண்டு.
பதில் பேசாமல் மௌனமாய் ஜனகா வெளியேறினாள். கூடவே அரைட்ராயரை இழுத்துப்பிடித்துக்கொண்டு நடந்து வந்த ப்ரஹ்லாதன்,” அம்மா! எனக்கு சரியான பேர்தான் வச்சிருக்கே!அதான் அப்பா இரண்யனாட்டம் அரக்கனா இருக்காரோ?’என்றான்.
” உஷ் அப்பாவை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.... உனக்கு நான் பேரு வைக்கலடா.. வக்கீல் மாமியாத்துல நீ என் வயத்துல இருக்கறப்போ வேலைல சேர்ந்தேன். மாமி நரசிம்மபெருமாள்பக்தை. பையன் பொறந்தா பிரஹலாதன்னு வைடீ ஜனகா ன்னு சொல்லிட்டா!”
“அப்போ மாமிதான் ஹிரண்யா!” கைகொட்டி சிரித்தான் பிரஹலாதன்.
”உஷ் அங்கவந்து இப்டில்லாம் சிரிக்கப்டாது ...மாமி கோச்சிபபா...சமத்தா இரு என்ன?’
”சரிம்மா. ”
பழைய மாம்பலம் ஸ்ரீனிவாசா தியேட்டர் வாசல் பஸ் ஸ்டாப்பில் இருவரும் சில நிமிஷங்கள் காத்திருக்கும்போதே பஸ் வந்துவிட்டது.
பஸ்ஸில் ஏறியதும் கண்டக்டரிடம்,” பெஸன்ட்நகர் கலாஷேத்ரா காலனி” என்று சொல்லி பத்துரூபாயைக்கொடுத்தாள்.
பஸ்ஸில் நிற்கக்கூட இடமில்லை..
”ஏன்மா தினம் இப்டித்தான் நெருசல்ல போய்ட்டு வரியா பாவம்மா நீ”
“தினம் இவ்ளொ கூட்டம் இருக்காது,இன்னிக்கு தான் இப்படி .சரி நீ என் பக்கமாவே இரு....காணாமபோய்டாதே”
கலாஷேத்ரா காலனி வந்ததும் ஜனகா மகனுடன் கீழே இறங்கினாள். இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.
“பக்கத்துலதான் வீடு ப்ரஹா...அஞ்சு நிமிஷத்துல போய்டலாம்”
“வக்கீல் வீட்ல நாய் இருக்காம்மா?’
’மாமிதான் ’ என்று சொல்லவந்த ஜனகா லேசான சிரிப்புடன் ” இப்போ இல்லை...நீ குழந்தையா இருக்கறப்போ ஒண்ணு இருந்தது அது பேரு நரசிமமா” என்றாள்.
”என்னது நாய்பேரு நரசிம்மனா?”
” ஆமாம் வக்கீல் மாமி பயங்கரமான நரசிம்ம சுவாமிபக்தை! வீட்டுக்கு பேரு ஜெய்நரசிம்மா!
மாமியோட பையன் பேரு லஷ்மிநரசிம்மன். மாமியாத்ல குலதெய்வம் நரசிம்மராம் அதனால் நாய்க்கும் அதே பேரை வச்சாளாம் அந்தநாய் ஒருநாள் செத்துபோனதும் மாமிக்கு ஒருமாசம் சாப்பாடு இறங்கல...பாவம்..அந்த சோகத்துல இதுவரைக்கும் வேற நாயே வாங்கல..”
” ஏன்மா நம்மவீடல் நாய் வாங்கிவளக்கலாமா? கிரிக்கட் தோனி பேரை வைக்லாம் எனக்கு அவரை ரொம்பபிடிக்கும்.”
”ஆமாண்டா ந்ம்ம பொழைப்பெ நாய் பொழப்பா இருக்கு இதுல நாய் ஒண்ணுதான் குறைச்சல்..சரிசரி...வக்கீல் வீடு வந்துடுத்து நான் சொன்னது நினைவிருக்கோல்லியோ?’
”அம்மா! நீ எழுந்ததும் நீராகாரம் தருவே இன்னிக்கு தரவே இல்ல.பசிக்கறதும்மா இப்போவே...”
”அவசரத்துல மறந்துட்டேன் ப்ரஹா... மாமியாத்துல பாலோ மோரோ போனதும் தரேன்ப்பா”
”சரிம்மா”
வீட்டு வெளிவாசலில் செம்மண் நிரப்பி பெரிய படிக்கோலம்போடப்பட்டிருந்தது,
காம்பவுண்ட் சுவரில் க்ரானைட்டில் பதித்திருந்த சிறிய நரசிம்மர் சிலைக்கு சாமந்திமாலை அணிவித்திருக்க போர்ட்டிகோ தாண்டி நிலைப்படிக்கு வரும்போது மேலே மாவிலைக்கொத்து தொங்கியது. திறந்த கதவிற்கு அருகே நின்று ‘மாமி...”என்று குரல்கொடுத்தபடியே உள்ளே நுழைந்தாள் ஜனகா.
“மணி எட்டாறது இவ்ளோ லேட்டா வரயே? ஏழரைக்கே வரசொன்னேனே, இன்னிக்கு ந்ருசிம்ம ஜயந்தி நினைவிருக்காடி ஜனகா? ” உரத்த குரலில் அதட்டலாய்க் கேட்டபடியே வந்த உருவத்தைப் பார்த்தான் ப்ரஹலாதன்.
பழுத்த மாம்பழ நிறத்தில் பெரியவிழிகளும் அதை இன்னும் பெரிதாக்கிய காட்டிய மூக்குக்கண்ணாடியும் விடைத்தநாசியும் தடித்த உதடுமாக வேதவல்லியைப் பார்க்கும்போது அம்புலிமாமா புத்தகத்தில் அசோகவன சீதை அருகே அமர்ந்திருந்த ஒருராட்சசியின் படம் ப்ரஹலாதனுக்கு நினைவுக்கு வந்தது..மாமியும் அவனை ஏறெடுத்துப்பார்த்தாள்.
”யாருடி இந்த வாண்டு ? பெரியவனா சின்னவனா?”
”பெ.. பெரியவன் ப்ரஹா..”
”என்னடி ப்ரஹா? ப்ரஹலாதன்னு வாய் நெறயக் கூப்டாம? நான் வச்ச பேராச்சே ஏண்டா அம்பி என்ன படிக்கறே?’
”ரண்டாம் க்ளாஸ், மாம்பலம் அரசுப்பள்ளில”
”ஒழுங்காப்படிக்கப்போறியா இல்ல உங்கப்பனாட்டம் சீட்டு ஊருசுத்தறதுன்னு திரியப்போறியா? இன்னிக்கு எதுக்குடி இவனை இங்க அழைச்சிண்டு வந்தே ஜனகா?’
”அவர் எங்கயோ போகணூமாம்... சைக்கிள்ள இவனையும் கூட்டிண்டு போகமுடியாது ஆத்துல தனியா விடவும் முடியாது ரெண்டுங்கெட்டான் ..ஸ்கூல் வேற லீவ் விட்டாச்சு. அழைச்சிண்டுபோன்னு அவர் ஆர்டர் போட்டுட்டார்”
”நீயும் அழைச்சிண்டு வந்துட்டியாக்கும்? இந்தகாலத்துலயும் இப்படி ஒரு பதி பக்தியான பொண்ணை நான் இப்பத்தான் பாக்கறேன் “என்றாள் மாமி கிண்டலாக..
ஜனகா தலை குனிந்தாள்
..
”சீக்கிரமா தளிகை முடிச்சிட்டு ஜோடுதவலை நிறைய பானகம் பண்ணிடு. பதினஞ்சிகிலோ வெல்லம் உடைச்சி சுக்கு ஏலம் தட்டிப்போட்டு பண்ணு.. அம்பதுபேராவதுவருவா ஆமா, எங்க இந்த மனுஷன் போய்த்தொலைஞ்சார்? காலங்கார்த்தால பேப்பர்ல தலைசாய்ச்சா எழுந்து வர்ரதே கெடயாது..... ஏன்னா.... ஏன்னா எங்கபோய்த்தொலைஞ்சேள்?”
மாமி கணவரைத் திட்டிகொண்டே தேடும்போது வக்கீல் திருமலை தனது மெலிந்த உடலைக்குறுக்கிக்கொண்டு பயந்தபடி எதிரே ஓடி வந்தார்.
“எங்க ஒழிஞ்சங்கோ இவ்ளோ நாழி? கொல்லைலபோயி பவழமல்லி பொறுக்க சொன்னேனே? வெய்யில் வந்தா எல்லாம் வாடிப்போயிடும்.தோட்டக்கார கடங்காரன் இன்னிக்குப்பாத்து லீவ் போட்டுட்டான்.”
”ஹிஹி .....போன் வந்தது நம்ம லஷ்மிநரசிம்மன் அமெரிக்காலேந்துபேசினான். பொழுதுபோனதே தெரில்லடி வேதம்”என்று அசடு வழிந்தார்.
” அவன் நறுக்குனு நாலு வார்த்தைதான் பேசுவான் நீங்கதான் வளவளனு கோர்ட்கேஸ் கதைலாம் அவன்கிட்ட அளப்பங்கோ...சரி, இன்னும் காபி குடிக்கலதானே?”
”இல்லையே ஜனகா வந்து வழக்கம்போல கலந்துதருவான்னு காத்துண்ட்ருக்கேன்”
”இன்னிக்கு காபி சாப்பிடக்கூடாது”
“இதென்ன புதுசா இருக்கு?”
”ஆமாம் புதுசா கேள்விப்பட்டேன் அன்னிக்கு டிவில உபந்நியாசகர் சொனனர் ந்ருசிம்ம ஜெயந்தி அன்னிக்கு சாயந்திரம் அவர் பிரத்யட்சமான அந்திpபொழுதுவரை வாய்ல பச்சத்தண்ணி குத்திக்கக் கூடாதாம் அப்றோமா அவருக்கு அம்சை பண்ணின பானகத்தை முதல்ல சாப்பிடணுமாம் நாம பாட்டுக்கு இத்தனை வருஷமா காலமெருந்து நாலு காபி ஒரு பாக்கெட் பிஸ்கட்டுன்னு தள்ளிண்டு இருந்திருக்கோம். அறுவயசு பக்கம் நெருங்கிண்ட்ருக்கோம் இனிமேலாவது இந்த அல்ப ஆசைலாம் விடணும் அதுவும் நாள் கிழமைல புரிஞ்சுதா?”
அதட்டிவிட்டு மாடிக்குஏறினாள் மாமி.அவள் போனதும்,ஜனகாவிடம் தயங்கித்தயங்கி நெருங்கி வந்த வக்கீல்திருமலை,”அம்மாடி ஜனகா! ஒருவாய் காபி சக்கரை போடாம வழக்கம்போலக் கொடுத்துடுடிம்மா. எனக்கு டயபடீஸ்னு தெரிஞ்சும் மாமி இப்படி கண்டிஷன் போடறா பாரு?”என்றார் கெஞ்சுதலான குரலில்
”மாமா! மாமிக்குத்தெரிஞ்சா.....?”
”தெரிஞ்சாதானே? ஆமா இதுயார் உன் பிள்ளையா ஜனகா?”
“ஆமாம் மாமா பேருபிரஹலாதன்”
“இவன் கைல ஒரு லோட்டா காபி கொடுத்து தோட்டம் பக்கம் அனுப்பிடு அங்க பவழமல்லி மரத்துகிட்ட நான் இருக்கேன்...”
“சரி மாமா”
திருமலை நகர்ந்ததும் பிரஹலாதன் சிணுங்கினான்.
”அம்மா பசிக்கறது எனக்கும் ஏதாவது கொடு”
”முதல்ல மாமாக்கு காபி கொண்டு கொடுத்துட்டுவாடா..”
ப்ரஹலாதன் கொண்டுவந்து கொடுத்த காபியை சாப்பிட்டதும் திருமலை” தாங்க்ஸ்டா குழந்தை! ஆமா நீ காபி சாப்ட்டியோ?”என்று அன்பாகக்கேட்டார்.
”இல்ல மாமா காபில்லாம் ஆத்லபோடறதில்ல ... ஆனா கார்த்தால் நீராகாரம் சாப்டுவேன் இன்னிக்கு கிளம்பற அவசரத்துல அம்மாவும் தரல நானும் அப்படியே வந்துட்டேன்... பானகம் பண்னப்போறாளாமே மாமா? எனக்கு.பானகம் ரொம்பப் பிடிக்கும் ”
”அது பூஜைமுடிஞ்சி சாய்ந்திரமாத்தான் உன் வாய்க்குக்கிடைக்கும்டா..அதுவரை பட்டினி கிடக்கமுடியுமா உன்னால? அம்மாகிட்ட கேட்டு ஃப்ரிட்ஜ்ல ஜூஸோ பழமோ எடுத்து சாப்பிடுப்பா”
பிரஹலாதன் காபிலோட்டாவுடன் சிட்டாய்ப்பறந்தான்.
ஜனகா வெல்லத்தை கொல்லைப்புறம் கொண்டுவந்து அங்கிருந்த பாறாங்கல் திண்ணைமீது வைத்து சிறு கல் உலக்கையால் நங்நங்கென்று தட்டினாள்.
கூடவே வந்த பிரஹ்லாதன்,”அம்மா! எனக்கு துளி வெல்லம் தரியா?” என்று கேட்டான் ,கேட்கும்போதே நாவில் நீர் சுரந்துவிட்டது.
“இல்லடா உம்மாச்சிக்கு பண்றது இதை முதல்ல நாம சாப்டக்கூடாது”
இதைக்கேட்டுக்கொண்டே அங்கே வந்த திருமலை” குழந்தைக்கு சின்ன வில்லை கொடு ஜனகா ஆசைப்படறான் பாவம்”
என்றார்.
ஜனகா யோசித்தபடி ஒரு வில்லையை எடுத்து மாமாவிடம் கொடுத்து,:நீங்களே கொடுங்கோ மாமா..எனக்கென்னவோ பயமா இருக்கு” என்றாள்.
எதேச்சையாய் அங்கே வந்த வேதவல்லி திருமலையின் கையில் வெல்ல வில்லையைப்பார்த்து ருத்ரதாண்டவம் ஆடினாள்.
” என்ன நினைச்சிண்டு இருக்கேள் மனசுல? பெருமாளுக்கு அதுவும் உக்ரநரசிம்மருக்குபண்ற பிரசாதத்தை மனுஷா முதல்ல சாப்பிடறதா? எனன் அக்கிரமம் இது? வயசுக்கு ஏத்த விவேகமே இல்லை உங்ககிட்ட.. இந்தப்பொடியனுக்காகவோ இல்ல நீங்க முழுங்கவோ எப்ப்டி எடுத்தாலும் அது மகா தப்புதான்.. டேய் பொடியா போடா அந்தப்பக்கம்.....கூடத்துமூலைல உக்காந்துக்கோ அம்மாபுடவைத் தலைப்பைப் பிடிச்சிண்டு வந்தே கொன்னுடுவேன் உன்னை.பூஜைமுடிஞ்சதும் எல்லாம் நீயும் கொட்டிக்கோ யார் வேண்டாஙக்றா? நரசிம்மர் யார்மேலே எப்போ எப்டி வருவார்னு யாருக்குத்தெரியும். ஆவேசம் வந்து அவாமூலம் தன் கோபத்தைக்காட்டமாட்டாரோ? அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் .. சுவாமி உக்ரம் தெரியாதா என்ன? அதைத் தணிக்கத்தானே பானகம் பண்றோம்? ”முணுமுணுத்தபடி மாமி அகன்றாள்.
பிரஹலாதன் பயந்துபோய் கூடத்துமூலையில் போய் உட்கார்ந்துகொண்டான்.டிவியில் நரசிம்மர்கோயில் ஒன்றின் அபிஷேக ஆராதனைக்காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது.
மணி பகல் 12 ஆனது.
திருமலை திருதிருவென விழித்தபடி பிரஹலாதன் அருகில் வந்தவர்,”குழந்தே பசிக்கறதாடா?” என்று கேட்டார்.
“ஆமாம் மாமா அம்மாவும் பயப்படறா ஒண்ணும் தரமாட்டேங்கிறா..”
“நான் கொஞ்சம் பழம் கொண்டுவந்து தரட்டுமா வேஷ்டில மறைச்சி எடுத்துண்டு வரேனே?”
“வேண்டாம் மாமா ..மாமி உங்கள ரொம்ப திட்றா பாவம் நீங்க..”
”அவ அப்படித்தான்..ஆனா மாமி ஃப்ரண்ட்ஸெல்லாம் வந்தா அவாளே உரிமையா ஃபிரிட்ஜைத் திறந்து ஜூசும் கூல்ட்ரிங்கும் குடிச்சிட்டுத்தான் பூஜைக்கு உக்காருவா பாரேன்.மாமியும் அவாளை ஒண்ணும் சொல்லமாட்டா...எல்லாம் பணம் பண்றவேலைடா”
எரிச்சலுடன் முணுமுணுத்தபடி மாடிக்குப்போனவர் மறுபடி மூன்றுமணிக்குக் கீழே வந்தபோது கூடத்தில் அப்படியே கைகட்டிக்கொண்டு முகம் வாடிய நிலையில் அமர்ந்திருந்த பிரஹலாதனைப்பார்த்து வேதனையுடன் ‘ச்சூள்’ கொட்டினார்.
வேதவல்லி ஹாலில் கீழே ரத்னகம்பளத்தை விரிக்கச்சொல்லி பணியாட்களுக்கு உத்தரவு போட்டுக்கொண்டிருந்தாள்.
இதுதான் நலல் சமயம் உள்ளபோய் ஒரு லோட்டா பானகத்தை கொண்டுவந்துடலாம்..குழந்தையும் தெய்வமும் ஒண்ணூதான்..இந்தக்குழந்தை சாப்பிட்டால் பகவான் ஒண்ணும் கோவிச்சிக்கமாட்டார்.அதுவும் நரசிம்மனின் அபிமான பக்தனின் பேரை வச்சிண்டு இருக்கான் குழந்தை. வாய் மூடி தேமேன்னு உக்காந்திருக்கு...இன்னும் மூணுமணிநேரத்துக்கு மேல ஆகும் பிரசாதம் கிடைக்கறதுக்கு . அதுவரை பையன் தாங்குவானா? எங்காவது மயக்கம் போட்டு விழுந்துட்டா...? இந்த ஜனகாவும் எனக்கு மேல பயந்துசாகறா..
இப்படி நினைத்தபடிதிருமலை மெல்ல சமையலறைக்குப்புகுந்தார்.
ஜனகா அப்பளம் பொறித்துக்கொண்டிருந்தாள்.
அவளுக்குத்தெரியாமல் ஓரமாய் தாம்பாளம் போட்டு மூடிவைத்திருந்த ஜோடுதவலையை நெருங்கினார். மெல்ல அந்த தாம்பாளத்தை கையில் எடுக்கும்போது அது கைதவறி ஜிலீங் என்று சப்தப்படுத்திக்கொண்டு கீழே விழுந்தது.தூக்கிவாரிப்போட ஜனகா திரும்பினாள்.
“என்னாச்சு என்ன சத்தம் அங்க?வாசல்ல எல்லாரும் கார்ல வந்துட்டா...நீங்க கிச்சன்ல என்ன பண்றங்கோ? வாசல்லப்போய் எல்லாரையும் வரவேற்கிற வழியைப்பாருங்கோ..ம்ம்?”
வேதவல்லி போட்ட கூச்சலில் சப்தநாடியும் ஒடுங்க திருமலை வாசலுக்குப்போய்விட்டார்.
வந்தவர்கள் “ஸ் அப்பா என்ன வெய்யில்.... ஜூஸ் கொண்டாங்க சமையக்கார மாமி “ என்று நுழைந்ததும் உத்தரவிட்டனர்.
ஜனகா கொண்டுபோய்கொடுக்கும்போது ஓரமாய் உட்கார்ந்திருந்த மகனையும் ஒரு கண் பார்த்துவந்தாள்.
திருமலைக்கு கோபமாய்வந்தது கூடத்தில் மூலையில் உட்கார்ந்திருக்கிற குழந்தைக்கு ஒருவாய் நீராவது யாராவது கொடுத்துத் தொலைத்தால் என்ன? பெத்தவளுக்கே விசாரமில்லை..
அவன் அருகில்போய்,”சர்பத் கொண்டுவரட்டுமாப்பா?” என்றுகேட்டார்.
”வேண்டாம் மாமா அதெல்லாம் பழக்கமில்ல.. எனக்கு பானகம்பிடிக்கும் பூஜை ஆனதும்அதே சாப்பிட்றேனே?” என்றான் பிரஹலாதன் .
“அதுக்கு இப்போதான் மணி அஞ்சாறது அஞ்சரைக்கு ஆரம்பிச்சி ஆறரைக்குதான் பூஜை முடிப்பா அப்புறம்தான்ப்பா பானக விநியோகம் நடக்கும்”
”பரவால்ல மாமா..தோட்டத்துப்பைப்ல தண்ணி குடிச்சிட்டேன் ..”
திருமலை வேதனையுடன் வந்தபோது கையில் ஜூஸ் டம்ளருடன் வந்த லேடீஸ்க்ளப் தலைவி மாலதி ஜகன்னாதன்,” வேதா ஈஸ் ஆல்வேஸ் க்ரேட்! நரசிம்ம ஜயந்தி வைபவத்தை அவள் வீட்டில் கொண்டாடறவிதமே தனி” என்று யாரிடமோ புகழ்ந்து கொண்டிருந்தாள்.
“எல்லாம் சிரத்தையாய் செய்யணும் மாலதி, இல்லேன்னா நரசிம்மர் யார்மேலாவது ஆவேசமாய் வந்துடுவார்.” என்றாள் வேதவல்லி பெருமையும் பயத்துடனுடனும்.
பூஜை ஆரம்பித்தது. திருமலை முன்வரிசையில் உட்கார்ந்து கொண்டிருந்தவர் சட்டென பின்வரிசையைப்பார்த்தார் அங்கே பிரஹலாதன் சுவரோடு சுவராய் சாய்ந்து கண்ணைமூடிக்கொண்டிருந்தான்.
‘ஐயோ அவனுக்கு மயக்கம் கியக்கம் வந்துருக்குமோ?’
விளக்கேற்றி விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லத்தொடங்கினர். பஜனைபாடல்கள் என்று தொடர்ந்தது. இரண்டுமணிநேரமானதும்,
’எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்* திருவோணத்திரு விழவில்
அந்தியம் போதில் அரியுருவாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப் பல்லாணடு பல்லாயிரத்தாண் டென்று பாடுதுமே’
பல்லாண்டு கூறிவிட்டு ஒருவழியாய்கற்பூர ஹாரத்தி காண்பித்து மங்கள சுலோகம் சொல்லிமுடித்தனர்.. பானக நைவேத்யமும் முடிந்தது
வேதவல்லி மடிசார் புடவை தடுக்கத்தடுக்க வேகமாய் பானக ஜோடுதவலைப்பாத்திரத்தை திறந்தாள்..டம்ளரில் பானகத்தை ஊற்றி அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்தாள்.
திருமலை ஓடிப்போய்,”ஒரு டம்ளர் இங்க..” என்றார்.
“அடடா உங்களுக்கு என்ன அவசரம்? வெளிமனுஷாளை கவனிங்கோ முதல்ல போங்கோ அந்தப்பக்கம்” விரட்டிய மனைவியை விரக்தியாய் பார்த்தபடி ஒரு மூலையில்போய் நின்றுகொண்டார் திருமலை.
ஓரிரு நிமிடங்கள்தான்.....
திடீரென ஹ்ஹ்ஹ்ஹூஉம்ம் என்று தலைமயிரை சிலுப்பிக்கொண்டு உடம்பை முறுக்கிக்கொண்டு நடுக்கூடத்தில் தொம் என கைகாலை அகட்டியபடி குதித்தார் திருமலை.
”வக்கீல் சாருக்கு எனனச்சு? முழியை உருட்றாரே? ஐய்யோ பயமா இருக்கே?”
“மாமா மாமா!”
“நான் நரசிம்மம் வந்துருக்கேன்..” திருமலை உக்ரமாய் வார்த்தைகளை உமிழ்ந்தார்.
”ஆ பெருமாளே! நரசிம்மா ! நான் சொன்னெனே சிரத்தையா பூஜை பண்ணினா பெருமாள் யார்மேலாவது வந்துடுவார்னு. என் பாக்கியம் பெருமாள் இங்க .ஹோ பெருமாளே ஏஏஏ..” வேதம் பெருமையாய் சொன்னபடி நாலுதடவை கீழேவிழுந்து சேவித்தாள்.
”உன் பூஜைல குத்தம் இருக்கு் வேதா”
“கு..குத்தமா? இல்லையே நேமமா செய்தேனே சுவாமீ?” கைநடுங்க குரல் நடுங்க சொன்னாள் வேதவல்லி/
“ஹ.. அநியாயமா செய்துட்டு என்ன பேச்சு பேசறே நீ?”
“அநியாயாமா? அபசாரம் மன்னிச்சிடுங்கோ பெருமாளே என்ன குத்தமாச்சு?”
”என் பக்தனை பட்டினி போட்டுட்டு நீங்கள்ளாம் பானகம் சாப்பிடறங்கோ...இது மகா அநியாயம்”
“பக்தனா? எல்லாரும் உங்க பக்தா பெருமாளே.. யாரைசொல்றேள்?யாரு?”
“பிரஹலாதன் என் அபிமான பக்தன் தெரியாதா? ஹூஹூ,ம்ம்ம்ம்”
“ப்ரஹலாதன் உங்க அருமைபக்தன் அறிவேனே ஹரி ஹரி”
“அந்தபிரஹலாதன் இல்லை...இங்க இருக்கும் பிரஹலாதன்”
“பிரஹ்...ஓ சமையக்காரி பையனா?...” புரிந்தவளாய் வேதம் “அபச்சாரம் பண்ணிட்டேன் “ என்று மறுபடி விழுந்து சேவித்தாள் பருத்த உடல் மூச்சிறைக்க கூடத்துமூலையில் மயக்கமாகிக் கிடந்த பிரஹலாதனை நெருங்கினாள்..
“சீக்கிரமா பெருமாள் மலையேறதுக்குள்ள பெருமாள் உத்தரவை செய்துமுடி வேதா” யாரோ வயதான பெண்மணி உரத்தகுரலில் சொன்னாள்.
பிரஹலாதனின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவனை மடியில் அமரவைத்து பானகத்தை சொம்பில் கொண்டுவரச்சொல்லி அதனை மெல்ல அவன் வாயில் ஊற்ற ஆரம்பித்தாள்.’நரசிம்மப்பெருமாளே என்னை மன்னிச்சிடு உன் பக்தனை நான் கவனிக்காதது தப்புதான்’ வாய்விட்டு அரற்றினாள்.
மடக் மடக் என பானகத்தை முழுங்கிய பிரஹலாதனுக்கு உயிரே திரும்பிவந்தமாதிரி இருந்தது. மெல்ல ஆசுவாசமாய் கண்ணைத்திறந்தான்.. அனைவரும் தன்னை கீழே விழுந்து நமஸ்கரித்துக்கொண்டிருக்க, அங்கே நின்றுகொண்டிருந்த திருமலை மட்டும் பிரஹலாதனைப்பார்த்துக் குறும்பாய் கண் சிமிட்டினார்.
Tweet | ||||
அருமையான கதை.
ReplyDeleteநெஞ்சம் நெகிழ்ந்தேன்.
// கோமதி அரசு said...
ReplyDeleteஅருமையான கதை.
நெஞ்சம் நெகிழ்ந்தேன்.
6:45 PM
//
நன்றி கோமதி அரசு தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
//சீக்கிரமா பெருமாள் மலையேறதுக்குள்ள பெருமாள் உத்தரவை செய்துமுடி வேதா” யாரோ வயதான பெண்மணி உரத்தகுரலில் சொன்னாள்.
ReplyDeleteபிரஹலாதனின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவனை மடியில் அமரவைத்து பானகத்தை சொம்பில் கொண்டுவரச்சொல்லி அதனை மெல்ல அவன் வாயில் ஊற்ற ஆரம்பித்தாள்.’நரசிம்மப்பெருமாளே என்னை மன்னிச்சிடு உன் பக்தனை நான் கவனிக்காதது தப்புதான்’ வாய்விட்டு அரற்றினாள்.
மடக் மடக் என பானகத்தை முழுங்கிய பிரஹலாதனுக்கு உயிரே திரும்பிவந்தமாதிரி இருந்தது. மெல்ல ஆசுவாசமாய் கண்ணைத்திறந்தான்.. அனைவரும் தன்னை கீழே விழுந்து நமஸ்கரித்துக்கொண்டிருக்க, அங்கே நின்றுகொண்டிருந்த திருமலை மட்டும் பிரஹலாதனைப்பார்த்துக் குறும்பாய் கண் சிமிட்டினார். //
நல்ல மன திருப்தி அடைந்தேன் கடைசி வரிகளில்
கொஞ்சம் சிரிப்பும் வந்து விட்டது
இது உண்மையில் நடந்தாலும் நரசிம்மர் இப்படித்தான் பண்ணி இருப்பார் :))
THANKS:)
ReplyDeleteநன்றி திரு நரசிம்மன் நாலாயிரம்...மன்னிக்க தாமதமான என் பதிலுக்கு.
ReplyDelete