Social Icons

Pages

Thursday, November 29, 2012

பாணரின் பக்தி!

ஆழ்வார்கள் பதின்மரில் மிகக்குறைந்த பாசுரங்களில் அரங்கனைத்துதி செய்தவர் திருப்பாணாழ்வார்.


திருப்பாணாழ்வார் வரலாறு தனிச்சுவை நிறைந்தது. தொண்டர் குலமே தொழுகுலம் ,’பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்’ என்று பெரிய பெருமாளே சங்கொலித்த வரலாறு. பாணரின் வரலாறு. அத்தொழுகுலத்திற்கு தீக்காப்பிடத்தேவை இல்லை வைதீகச்சடங்குகள் தேவை இலலை.
குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து ’ என்று சொல்லப்பட்ட பஞ்சம வர்ணத்தில் நம்பாடுவான்போல அவதரித்த பாணர் பெருமானை அரங்கன் ஆட்கொண்ட அழகுதான் என்னே!
ஸ்ரீரங்கத்தை அடுத்த உறையூர் இங்கே இதேபோல ஒரு கார்த்திகைமாதம் இன்றையதினம் போல ஒரு ரோகிணி நட்சத்ரத்தில் அவதரித்தவர் பாணர். இவர் பிறந்த குலத்திற்கு ஏற்றபடி யாழ்ப்பாடலில் தேர்ச்சி பெற்றார் நாரதர்போல ஞானவைராக்கியங்களுடன் திகழ்ந்தார்.
இறைவன் திருவருளால் சிறுவயதிலேயே அனைத்தும் அறிந்தவராகி இறைபக்தி மேலோங்க காவிரியில் நீராடி காவிரிக்கரையில் தனது இசைக்கருவியுடன் அமர்ந்து அரங்கன்மீது மனமுருகப்பாடிவந்தார்.
இவரது தூயபக்தியைக்கண்ட பிராட்டியார் அரங்கனிடன்” வெகுகாலமாய் நம்மைப்பாடிவரும் இவரை புறத்தே வைத்துப்பார்க்கலாகுமோ “ என்று விண்ணப்பம் செய்தார்.
பாணரின் பெருமையை உலகோர் அறியச்செய்யவும் இறைவனைப்பற்ற பிறப்பு முக்கியமல்ல பக்தியே முக்கியம் என்பதை நடத்திக்காட்டவும் தமது கோயிலின் அணுக்கத்தொண்டரான சாரங்கமுனிவரின் கனவில் தோன்றி,” நமக்கு நல்லன்பரான பாணரை நாளை நீர் உமது தோளிலே எழுந்தருளப்பண்ணிக்கொண்டு சந்நிதிக்கு வாரும்” எனநியமித்தார் அரங்கப்பெருமான்.
சாரங்கரும் மறுநாள் காவிரிக்கரை ஓரம் அமர்ந்து கண்மூடி அரங்கனைதியானித்திருந்த பாணரிடம் ,”தாங்கள் அரங்கன்சந்நிதிக்கு வரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
பாணர்திடுக்கிட்டு,” நானா?நீசனான நான் காவிரிக்கரைதாண்டி அரங்க மாநகர்மண்ணைமிதிக்கலாமோ? பிரும்மாதி தேவர்கள் வணங்கும் சந்நிதிக்கு நான் வரக்கூடாது” என்று பயத்துடனும் பணிவுடனும் மறுத்துவிட்டார்.
இதுபோல இருமுறை மறுத்துவிடவும் லோக சாரங்க மகா முனிவர் அரங்கனிடம் இதை விண்ணப்பித்தார்.
பெருமாள் அன்றிரவு இருவருக்கும்கனவில் நியமித்தார். அதன்படி மறுநாள் மகாமுனிவர் அனைவருடன் காவிரிகரைக்குச்சென்று பாணரைப்பணியும்முன்பே அவர் இவர்களைக்கண்டு வணங்கிவிழவும்” நமது
அ ந்தரங்கபக்தனான திருப்பாணாழ்வாரை உமது தோள்களிலே வைத்துவீதியை வலமாக வந்து நமதுசந்நிதியில்விடும்” என்று அருளீச்செய்ததை கூற,”ஐயோ இதென்ன அபசாரம் எம்பெருமானே இதென்ன திருவிளையாடல்” எனக்கூறி சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கிய பாணரை அப்படியே தன் தோளீல் எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வீதி வலமாகசென்றார் .,கருடன் திருமாலைத்தோளீல் ஏற்றியதுபோல!.
அப்போதே பெரியபெருமாள் அவருக்கு ஞான சாக்ஷாத்காரமாக தன்னைக்காட்டிக்கொடுக்க பாணரும் தாம் அகக் கண்ணால் அனுபவித்தை பாசுரமாகப்பாடினார்
கருவறையில் நுழைந்ததும் பெரியபெருமாளின் வடிவழகைக்கண்ணாலே கண்டு,” எழில் நீல மேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே” என்று நெகிழ்ந்தார்.
 
 
 
 
 
பெரிய பெருமாளைக்கண்ணாரக்கண்ட பாணர் வாழ்க்கை நியதியைப்பாடவில்லை பாசுரம்தோறும் பலன் சொல்லவில்லை திவ்யதேசங்களின் இயற்கை அழகை வர்ணிக்கவில்லை நாயக நாயகி பாவத்தில் உளம் செலுத்தவில்லை.. பெருமாளே தரிசனம் தந்தபிறகு அவை் எதற்கு? பாதாதி கேச வர்ணனையாக பத்தே பாசுரங்களில் இறைக்காட்சிபெற்றுவிட்டவருக்கு எங்கும் நிறைந்த பரம் பொருள் அவர் உள்ளே புகுந்தபின்பு பழவினைக்கு அங்கு வேலை ஏது? மற்ற உலகாய்த விஷயங்கள் தான் எதற்கு?
திருக்கமலபாதம் அரை சிவந்த ஆடை எழில் வந்த திருவயிற்்று உதர பந்தம் திரு ஆரம் கண்டம் செய்யவாய் ..அந்தக்கண்கள் கரியவாகி புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப்பெரியவாய கண்களாம்!
.பெரியபெருமாளும் ஆழ்வார்திருமேனியை தீக்காப்பிடாமலும் வைதீகசடங்குகள் ஏதுமில்லாமலும் திருமேனியை அப்படியே அங்கீகரித்து அருளினார் அப்போது ஆழ்வார் பெருமான் அனைவரும் காணும்படியாக பெரிய பெருமாள் திருவடிகளில் ஐக்கியமானார்.ஆண்டாளைபோல இப்பேறு பெற்ற இந்த ஆழ்வாரின் சந்நிதியை திருவரங்கத்தில் ஆண்டாள் சந்நிதிக்கு எதிரே காணலாம்.
இதன்காரணமாக இன்றும் அரங்கநாதப்பெருமாளை சேவிப்பவர்களுக்கு ஆழ்வார் எழுந்தருளியுள்ள திருவடியிலிருந்து தீபம் ஆரம்பித்து திருமுடிவரை காட்டி சேவிக்க வைக்கப்பட்டுள்ளது இந்த நடைமுறையைத் திருவரங்கத்தில் மட்டும்காணமுடியும்.
இவ்வாறு ஆழ்வார் அரங்கனைதான் கண்ட அனுபவத்தை பத்தே பாசுரங்களில் பாடிக்காட்டுகிறார் சகலவேத சாரமான ஓங்காரத்தில் அடங்கி உள்ள அகாரம் உகாரம் மகாரம் ஆகிய மூன்று எழுத்துக்களைக்கொண்டு முதல்மூன்று பாசுரங்களில் தொடங்குவதால் இப்பிரபந்தம் ஓங்காரத்தின் சாரமானது என்று ஆழ்வாரே உணர்த்துகிறார். நாம் பற்ற வேண்டியது எம் பெருமானின் பாதுகையே என்பதை ஐந்து ஆறு ஏழாவது பாசுரங்களில் முதல் எழுத்துக்களில் உணர்த்துகிறார்
காண்பனவும் உரைப்பனவும் மற்றொன்றிக்
கண்ணனையே கண்டுரைத்த கடிய காதல்
பாண்பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும்
பழமறையின் பொருள் என்று பரவுமின்கள்
என்று சுவாமி தேசிகரும் போற்றுகிறார்.






பாரமாய பழவினை பற்றறுத்து* என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்*
கோரமாதவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்தம்மான்* திரு
வாரமார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே
திருப்பாணாழ்வார்


மேலும் படிக்க... "பாணரின் பக்தி!"

Wednesday, November 28, 2012

கலியன் என்னும் கண்ணன் மனம் கவர் கள்ளன்!

கார்த்திகை மாதம் கிருத்திகா நட்த்திரத்தில் அவதரிதத இவர் முகத்தில் நல்ல தேஜஸ், வiீிர்யம், எதிரிகளுக்கு எமன்போல தோற்றமளித்ததால் இவர் தந்தை இவருக்கு பரகாலன் எனப்பெயர் வைத்தாராம்/
 
 
மகாபுத்திசாலியாய் வளர்ந்த இவரை தஞ்சை மன்னன் தனது அவையில் சேனாதிபதியாக வைத்துக்கொண்டார்.
 
 
இவரது குதிரைக்கு ஆடல்மா என்று பெயர்.நர்த்தனம் செய்யும் குதிரையாம்! இவர் ஏறி உட்கார்ந்தால் நாலுகாலும் பூமியில் இருக்காதாம் அப்படி ஒரு வேகம். இவரது பராக்கிரமங்களைக்கண்டு குறுநிலமன்னராக ஆக்கினான். திருமங்கை மன்னன் எனப்பெயர்பெற்றார் கலியன்.
திருவரங்கத்தில திருமதில் கைங்கர்யம் செய்தவர்(திருமங்கை மன்னன் திருச்சுற்று)
நீலன் என்கிற பேர்ல கள்ளனாய்
நீலவண்ணக்கண்ணனின் திருவடியைத்தொட்டு
மகிழ்ந்த பேறு பெற்றவர்
சார்ங்கம் எனும் மாலின் ஆயுதத்தின் அவதாரம்
குமுதவல்லி என்னும் அரங்கபக்தையின்
ஆருயிர்க்கணவன்!
அரங்கனிடம் தன் சிந்தையைப்பறிகொடுத்த ஆழ்வார்!
அந்த ஆழ்வாருக்கு இன்று பிறந்தநாள்!
பன்னிரு ஆழ்வார்களில் கடைக்குட்டி! அதிகபிரபந்தங்களை-பெரிய திருமொழி திருநெடுந்தாண்டகம் திருக்குறுந்தாண்டகம் திருவெழுக்கூற்றிருக்கை சிறிய திருமடல் பெரியதிருமடல் ஆறு பிரபந்தங்களை அருளிச்செய்த ஆழ்வாரும் இவரே! 1084 பாசுரங்கள். வேதாந்த ஞானம் ஆதம் ஞானம் தத்துவ ஞானம் நிறைந்த பாசுரங்கள். கலியனின் அறிவியல் விளக்கம் கொண்ட பாசுரங்கள் பல உள்ளன.
கடைக்குட்டிகளுக்கு பெற்றோரிடம் சலுகை அதிகம்தானே இவரும் திருமாலிடம்,’ இதோபார் எனக்கு ஒன்றும் நீ யசோதைக்கு பண்ணினதுபோல லீலை காட்டவேண்டாம் தேவகியிடம் அவதாரமாய் வந்ததைப்பண்ணிக்காட்டவேண்டாம் சத்ருக்களை வதம் செய்து மார்பிலே ரத்தத்தைக்காட்டவேண்டாம் எம்பெருமானே நீ உன் திருமேனியக்காட்டினால் போதும் எனக்கு சேவை சாதிக்கவில்லை என்றால் ஈஸ்வர தத்துவத்தையே அழித்துவிடுவேன்’ என்று மடல் எடுக்கிறார்!
பரகால நாயகியாய் எம்பெருமானிடம் தூது அனுப்ப அன்னம் வேண்டாம் அது பிரிக்கிற இனம் கிளீயை அனுப்பலாமென்றால் அது ரசமான வஸ்துவை கொத்தித்தின்னும். அதுவும் வேண்டாம் என் மனசையே தூது போகச்சொல்கிறேன். ஆனால் தூது போன மனசும் பரகால நாயகியை மறநது அங்கேயே தங்கிவிட்டதாம்!
 
காதல் மனைவி குமுதவல்லியால்  மாலின்  தீவிர பக்தனானவர் கலியன்.
ஸ்ரீரங்க நகரில்கோயில் மதில் கட்டியவர். கூலி கொடுக்க பணமின்றி ஆட்களிடம் 'பணம் வேணுமா.. இல்லே மோட்சம் வேணுமா' என்று கேட்டதாகவும் மோட்சம் என்று அவர்கள் சொல்ல பரிசலோடு கொள்ளிடத்தில் கவிழ்த்து விட்டதாகவும் ஒரு கதை உண்டு! உண்மையா பொய்யா தெரியவில்லை. ஆனா வழிப்பறி நடத்தி அதுல வந்த நிதியை கோவில் திருப்பணிக்கு அளித்த மகாதிருடர் கலியன்!அந்த கால ராபின்ஹுட் தான் திருமங்கை ஆழ்வார்!
ஒருமுறை ஒரு கல்யாண கோஷ்டி வருகிறது. ஜோய் அலுக்காஸ் விளம்பரம் போல நகைகளை அணிந்தபடி உல்லாசமாய் ஒரு புதுமணத்தம்பதிகள் நடந்துவருகிறார்கள். ஆஹா தெற்குச்சுவர்மதில் கட்ட தேட்டை போடவேண்டியதுதான் என நீலன் மனம் கணக்குபோடுகிறது. அவர்களைத்தடுத்து நிறுத்தி நகைகளை கழற்றித்தர சொல்கிறான். அனைத்தும் அவன் கைக்குவர தம்பதிகளில் கணவனாய் வந்த மாலின் கால் விரலில் உள்ள ஒரு நகையை அவரால் கழற்ற இயலவில்லை.”இதையாவ்து விடப்பா எனக்கு கழற்ற முடியவில்லை’ என்றார்,
“ஆ எப்படிவிடுவது அதை வைத்து நாலு கருங்கல் வாங்கிவிடுவேனே சரி நானே கழற்றுகிறேன்” என்ற கலியன்

வழிப்பறியின் போது, பரமனின் காலில் உள்ள மெட்டியைத் திருடுவதற்காகத் தொட்டார்! வாயால் கடித்து இழுத்துப்பார்த்தார் ஊஹூம் அது விரலைவிட்டு வரவே இல்லை. “என்னய்யா மந்திரம் போட்டாய் இப்படி உன்னோடு இறுகிக்கிடக்கிறதே?’ என்று கலியன் கோபமாய் மாலிடம் வினவ அவரும்,’காதைக்கொடு கலியா உனக்கு அந்த மந்திரத்தை நானும் உபதேசிக்கிறேன்’ என்று அவன் செவியில் அதை ஓதினார். அடுத்தகணம் கலியன் அதிர்ந்து மகிழ்ந்து அண்ணலை வணங்கி எழுந்தான். எந்த ஆழ்வாருக்கும் கிடைக்காத இந்தப்பேறு கலியன் எனும் திருமங்கை ஆழ்வாருக்கே உண்டு
குலம்தரும் செல்வம் தந்திடும்
–அடியார் படுதுயர் ஆயினஎல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும்
–அருளோடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
–பெற்றதாயினும் ஆயின செய்யும்
நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
அஷ்டாட்சர மந்திரப்பெருமைதனை உரைக்கும் இந்த ஒருபாடல் ஒன்றுபோதும் மாலின் மேல்ஆழ்வார் கொண்ட ஆழ்ந்த பக்தியினை நமக்கு எடுத்துச்சொல்ல
இவர் கால்படாத திருத்தலம் தான் உண்டா? .
மிக அதிகமான திவ்ய தேசங்களைப் பாடியது இவர் ஒருவர் தான்!வைணவத்தை ஒரு மக்கள் அமைப்புக்குள் கொண்டு வந்தவர்.
சம்பந்தப் பெருமானின் திருக்கை வேலைப் பரிசாக வாங்கியவர்!
இன்று திருவரங்கம் கோவில் இப்படிப் பரந்து விரிந்து நிற்கிறது என்றால், அதற்கு முழுக்காரணம் இவரே! இவர் துணைவியார் குமுதவல்லி நாச்சியார், இவருக்கு உற்ற துணையாய், இறைப்பணிகள் அனைத்துக்கும் கைகொடுத்தார். ஆழ்வார்களிலேயே, தம்மோடு தம் மனைவிக்கும் சேர்த்தே, சிலையும் வழிபாடும் இருப்பது, இவருக்கு மட்டும் தான்!

.
‘தமிழ்கவி கற்கணுமா வா என்கிட்டே” என்று பெருமாளிடமே உத்தரவு போட்ட ஆழ்வாரும் இவரே! கடைக்குட்டி இளம்கன்று பயம் அறியுமா என்ன?!
பெரியதிருமொழியில் இவர்,
“மெய்ம்மை சொல்லில் வெண்சங்கமொன்றேந்திய
கண்ண! நின்தனக்கும் குறிப்பாகில்
கற்கலாம் கவியின் பொருள்தானே”
என்று திருக்கண்ணமங்கை பெருமான் கண்ணன் தம் திருமொழியின் அர்த்தங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுவதை அவன் திருமுகக் குறிப்பிலிருந்து கண்டு,”நீ என்னிடமிருந்து கவியின் பொருளைக் கற்றுக்கொள்ளலாம்” என்று நியமித்தார்
அதற்கு பரம ரசிகனான கண்ணனும்.” அவசியம் உம்மிடமிருந்து கற்கிறேன் ஆனால் இப்போது அர்ச்சாவதாரமாகையாலே அது கூடாது.பின்னொருசமயத்திலே நீர் உமது அவதார நட்சத்திரமான கார்த்திகையில் கார்த்திகைநாளிலே உமது திருநாமமான’திருக்கலிகன்றிதாசர்’ எனும் திருநாமத்துடன் இந்தச் சோழ நாட்டிலே அவதரிக்கபோகிறீர் அப்போது நான் ஆவணி ரோஹிணியில்(கண்ணன்) கிருஷ்ணன் என்னும் பெயரோடு அவதரித்து உம்மை ஆசார்யனாகக் கொண்டு ஆழ்வார்கள் அனைவருடையவும் ஆண்டாளுடையவும் அருளிச் செயல்களின் பொருள்களையும் மற்றும் ரஹஸ்யார்த்தங்களையும் ஸ்ரீ ராமாயணார்த்தங்களையும் உம்மிடம் இருந்தே கற்றறிந்து உலகுய்ய வெளிப்படுத்துவேன்” என்று அருளிச்செய்தான்.அதன்படியே கலிகன்றாகிய திருமங்கையழ்வார் திருக்கலிகன்ற தாசராகிய நம்பிள்ளையாகவும் கண்ணன் ஸ்ரீமத் கிருஷ்ணமாஹ்வரான(கிருஷ்ண சூரி என்னும்) பெரியவாச்சான் பிள்ளையாகவும் அவதரித்தனர் என்று பெரியோர் பணிப்பர்.
கலியனின் அறிவியல் நம்மை அதிசயக்க வைக்கிறது.
வெற்றிடத்தில் அதாவது வெற்று ஆகாசத்தில் ஒலி கேட்காது என்று சொல்கிறார்கள் இந்த அறிவியலை நாம் ஆராய வேண்டி உள்ளது ஆகாயத்திலிருந்து வாயுவும் வாயுவிலிருந்து அக்னியும் அக்னியிலிருந்து நீரும் நீரிலிருந்து மண்ணும் இறைவனின் கருணையில் சிருஷ்டிகளாயின.
மண்ணிற்கு ஐந்துகுணங்கள்... ஒலி தொடுகை ரூபம் ரஸம் கந்தங்கள்
நீருக்கு ஒலி தொடுகை(ஸ்பரிசம்) ரூபம் ரஸங்கள்
அக்னிக்கு ஒலி தொடுகை ரூபங்கள்(வடிவங்கள்)
வாயுக்கு இரண்டு குணங்கள். ஒலி , தொடுகை.
ஆகாயத்திற்குமட்டும் ஒலி மட்டுமே குணம். குணம் எனில் இயற்கையான தன்மை எனலாம்.
திருமழிசையும், பூநிலாய் ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய் தீநிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய் மீநிலாயதொன்றுமாகி,,,,’ என்று பஞ்சபூதக்கொள்கையை அருளிச்செய்துள்ளார்.
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வர நவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற...
என்று நம் குலபதியான நம்மாழ்வாரும் அருளி உள்ளதில் விசும்பு எனப்படும் ஆகாயத்திற்கு நவில்= சப்தகுணம் என்று அர்த்தம். ஆனால் விஞ்ஞானிகள் ஆகாயத்தில் ஒலி கேட்காது அதாவது வெற்று ஆகாயத்தில் சப்தம் பரவாது என நிரூபித்துவிட்டார்கள்.
காற்றுள்ள இடத்தில்தான் ஒலி ஊடுருவும் என்பதை எல்லோரும் அறிவார்கள். அப்படியானால் வைதீக சித்தாந்தத்தில் தத்துவ விசாரங்கள் செய்யும் இடத்தில் ஆகாயத்தின் குணம் சப்தம் என்று சொன்னது எப்படிச்சரியாகும்? இந்தபிரச்சினையை ஸ்ரீ தேசிகன் திருவாக்கான அறிவுதரும் பெரிய திருமொழி என்றான இந்த பாசுரம் நமக்கு விளக்குகிறது இதை அருளியவர் திருமங்கை ஆழ்வார்தான்.
பெரிய திருமொழியில் ஏழாம் பத்தில் தேரெழுந்தூர் பாசுரம் இது..
திருவாழ் மார்வன் தன்னைத் திசை மண் நீர் எரி முதலா
உருவாய் நின்றவனை ஒலி சேரும் மாருதத்தை
அருவாய் நின்றவனைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
கருவார் கற்பகத்தைக் கண்டு கொண்டு களித்தேனே.
விளக்கம்/பஞ்சபூதங்களாய் இருப்பவன் பிரானே திசைகளாய் இருப்பவன் அவனே அதாவது ஆகாயத்தை சொல்கிறார். அதேபோல நிலம் நீர் தீயாய் இருப்பவனும் அவனே இந்த நான்கையும் கூறியவர் அவற்றின் குணங்களைக்கூறாமல் ஒலி சேரும் மாருதத்தை என்கிறார். அதாவ்து மாருதம் எனில் காற்று, காற்றில்தான் ஒலி என்கிற குணம் தெளிவாக இருக்கும். ஒரு பொருள் என்றால் அதற்கு ஏதாவது குணம் இருக்கவேண்டும். பூமிக்கு 5 நீருக்கு4 நெருப்புக்கு 3 வாயுக்கு இரண்டு என்கிறபோது ஆகாயம் என்கிற பொருளுக்கு என்னதான் குணமாக இருக்கமுடியும்?ஆகாயத்தைத்தொட முடியாது. ஆக தன் குணம் ஒலியாகத்தான் இருக்கமுடியும். அதுவும் வாயு எனும் தத்துவத்தில்தான் ஒலி சேர்கிறது. பஞ்சபூதங்களில் ஆகாயம் மிகவும் சூட்சமமான பொருள். அது மனிதனுக்கு அவ்வளவு எளிதில் விளங்காதுதான். ஆகவே ஒலி சேரும் மாருதம் என்கிறார் என்ற விஞ்ஞானக்குறிப்பை இங்கே வைக்கிறார் ஆழ்வார் பெருமான்.
ஆகாயத்தின் குணமான ஒலியை காந்த அலைகளாக்கி கேட்கவைத்துவிட்டார்கள் நெருப்பின் குணமான ஒளீயை அதாவது காட்சியை உலகெங்கும் தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள் இதேபோல காற்றின் குணமான தொடு உணர்ச்சி நீரின் குணமான சுவை மண்ணின் குணமான வாசனை எல்லாவற்றையும் வேறு வேறு அலைகளாக்கி எங்கும் ஏற்றுமதி செய்யவும் முடியலாமோ? அல்லது அப்படி நடந்துதான் விட்டதோ?:)
மறுபடியும் கலியனின் கல்யா்ண குணத்திற்கு வருவோம்.
தன் குலதெய்வம் என்று திருமங்கைஆழ்வார் யாரைச்சொல்கிறார் தெரியுமா?
தான் அவதரித்த அருகில் உள்ள திவய்தேசமாகிய திருவாலிதிருநகரப்பெருமானையா?
திருக்குடந்தை ஆராவமுதனையா?
நரையூர் நின்ற நம்பியையா?
திருக்கண்ணபுரம் பெருமாளையா?
கலியுகத்தெய்வம் வேங்கடவனையா
தனக்கு நிதிகாட்டிக்கொடுத்த பேரருளாளனையா
பூலோக வைகுந்தம் ஆளும் அரங்கனையா?
இவர்களில் யாரையுமே இல்லை!
யாரைத் தன் குலதெய்வம் என்கிறார்?
///
எதிரிகளை அழித்து அவர்களுடைய சரீரங்களை நாய் நரி விலங்குகள்: விரும்பிஉண்ணும்படியாகவும் மெல்லிய சுவாபமுடைய பெண்கள் தங்களே விரும்பி அணைக்க மிடுக்குடைய இலங்கேஸ்வரனான ராவணனுடைய மார்பகத்தை அக்கினியானது ஏறி வதம் செய்துகொடுமையான யுத்தத்தைப்பலரும் காணும்படிசெயதவராய் அந்த சிரமம் தீரும்படி திருக்கடல் மல்லையில் ஸ்தல சயனத்தில் பள்ளிகொண்டிருக்கும் எம்பெருமானை மனதாரக்கொண்டாடும் அடியவர்கள் எவர்களோ அவர்கள் எங்கள் குலத்துக்கு தெய்வர்கள் ஆவார்கள்.
விண்டாரை வென்றாவி விலங்குண்ண . மெல்லியலார்
கொண்டாடும் மல்லகலம் அழலேற வெஞ்சமத்துக்
கண்டாரை, கடல்மல்லைத் தலசயனத்துறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையாரவர்கள் எங்கள் குலதெய்வமே
(பெரிய திருமொழி2.6.4)
கலியன் தோண்ரிய கார்த்திகைத்திருநாள் இன்று.
ஆழ்வார் திருவடிகளே சரணம்!




--

 
மேலும் படிக்க... "கலியன் என்னும் கண்ணன் மனம் கவர் கள்ளன்! "

Monday, November 19, 2012

நெஞ்சில் உரமுமின்றி....





”ஒரு வழியா நம்ம ரங்கப்ரசாத்துக்கும் பொண்ணு கிடச்சி கல்யாணம் நிச்சயம் ஆகிடிச்சிப்பா...    இவன் இப்படியே நாலைஞ்சிவருஷம் இருந்து அப்புறம் கல்யாண்ம் செஞ்சிட்டுக் குழந்தையைப் பெத்துக்கிட்டா அந்தக்குழந்தை, இவனை ’அப்பா‘ன்னு சொல்லாமல் ’தாத்தா’ன்னு தான் சொல்லிடும்”
ராம்குமார், ரங்கப்ரசாத்தை பார்த்தபடி இப்படி உரக்க சொன்னதும் கூடி இருந்த அவன் நண்பர்கள் எல்லாரும் கையிலிருந்த கண்ணாடி டம்ளரை டீபாய்மீதுவைத்துவிட்டு ஏதோ ஜோக்கைக்கேட்டதுபோல கை தட்டி சிரித்தார்கள்.
”டேய்,டேய் என்னங்கடா உங்களுக்கெல்லாம் என் வீட்டுமொட்டைமாடி ல பேச்சிலர் பார்ட்டி கொடுக்கிற இந்த பொன்னான நாளில், என்னைப்போயி இப்படி கிண்டல் அடிக்கறிங்களே! நான் என்னடா செய்யறது, உங்களுக்கெல்லாம் பொறுப்பா உங்க அப்பா அம்மா பொண்ணு பாத்து கல்யாணம் செய்துவச்சிட்டாங்க..எனக்கு அப்பாவும் இல்ல அம்மாவும் இல்ல லவ் செய்ய எந்தப்பொண்ணும் கிடைக்கல...வரவர பொண்ணு கிடைக்கறதே பெரும்பாடா இருக்கு ...தூரத்து உறவுக்காரங்க . அப்படி இப்படி முப்பத்தி ஆறு வயசுல எனக்கும் கல்யாணம் நிச்சயம் செய்துட்டாங்க...”
ரங்க்ரசாத் வெட்கமும் தயக்கமுமாய் பேசிக்கொண்டிருக்கும்போது மோகனின் செல்போன் குரல்கொடுத்தது.முதல் நாள் மழையில் தவறுதலாய் செல்போனை நனைத்துவிட்டதால் ரிப்பேருக்குக்கொடுத்தது அன்று மாலைதான் கைக்கு வந்திருந்தது.
..
“ யாருடா இந்த அர்த்தராத்திரில? உன் ஒய்ஃப் ஜனனிதான் கீழே ஹால்ல மத்த லேடீஸ்கூட டிவி பார்த்துட்டு இருக்காங்க... ..அடிக்கடி போன் செய்ற நாங்க
நாலு பேரும் இங்க இருக்கோம், வேற யாருடா உனக்கு இந்தமும்பைல இந்த நேரத்துல போன் செய்யறது?” கண்ணடித்தான் விட்டல்.
செல்போனை எடுத்து திரையில் ’வாசுதேவன்’ என்ற பெயரைப் பார்த்ததும் முகம் சுளித்த மோகன்,” அட சட்’ என்று சலித்துக்கொண்டான்..
”யாருடா?”
” ஒரு ரம்பகேஸ் .... திருச்சில என் சில அப்பாவோட ஜிக்ரி தோஸ்த்து. பேரு வாசுதேவன் ...அப்பப்போ போனைப்போட்டு அறுக்கும் ...இந்தாளுக்கெல்லாம்
எங்கப்பா என் போன் நம்பரைக் கொடுத்திருக்கார்.. “ பல்லைக் கடித்தான் மோகன்.
அடித்து ஓய்ந்ததும் பாண்ட்பாக்கெட்டில் செல்போனை திருப்பிப் போடுவதற்குள் மறுபடி அழைப்பு வரவும் எடுத்தான். அவரேதான்.
“ அதே ஆளாடா மோகன்? பேசாம போனை சைலண்ட்மோட்ல போடு”
”அதான் பண்ணனும்” என்று மோகன் கடுகடுத்தபோது மாடிப்படி ஏறி அங்கு வந்த அவன் மகன் ஆதர்ஷ்,’அப்பா” என்று கூவினான்.
”என்னடா மணி பதினொண்ணாகுது, இன்னும் நீ தூங்கலையா?”மோகன் தனது ஐந்துவயது மகனை தூ்க்கி எடுத்துக்கொண்டபடி கேட்டான்.
“ எனக்கு தூக்கம் வரல.. மம்மியும் ஆண்டீஸ் எல்லாரும் தூங்கிட்டாங்க.. நிகிலும் வர்ஷாவும் ஆளுக்கொரு செல்போன்ல கேம் விளையாடறாங்க...அம்மாகிட்ட
கேட்டா திட்டுவாங்க அதான் உங்ககிட்ட கேக்கவந்தேன்..அப்பா நானும் விளையாடணும்ப்பா ப்ளிஸ்பா”
”நல்லதாப்போச்சி, நானே இப்போ போனை எங்கடா வைக்கலாம்னு நினச்சிட்டு இருந்தேன்,,, இந்தா ஐபோன் உனக்குத்தான் போன் கால் எதுவும் வந்தால்
அட்டென்ட் பண்ணாத...நான் அப்புறம் மிஸ்டு கால்ல பாத்துக்கறேன் என்ன?
“சரிப்பா”
செல்போனை வாங்கிக் கொண்டு ஆதர்ஷ் திரும்பிப்போனதும் மொட்டைமாடியில் பார்ட்டி களைகட்ட ஆரம்பித்தது.
மூன்றுமணிக்கு எல்லோரும் லேசான தள்ளாட்டத்துடன் கீழே இறங்கிவந்தனர்.
ரங்கப்ரசாத் கேட்டுக்கொண்டபடி எல்லாரும் அவன் வீட்டிலேயே ஹாலில் உருள ஆரம்பித்தார்கள்.
ஜனனி தூக்கக் கலக்கத்தில் மகனிடமிருந்து மோகனின் செல்போனை வாங்கி தலைகாணிக்கு அடியில் வைத்தாள்.
நிதானமாக காலை எழுந்துகொண்டு ஒருவருக்கொருவர்‘ குட்மார்னிங் ! ஹாவ் எ குட் டே!’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பல்லைத்தேய்த்து
காபியைக்குடித்தபடி அரட்டைஅடித்துமுடித்து்க்கிளம்பும்போது மணி ஒன்பதாகிவிட்டது.
செல்போனை உயிர்ப்பித்து வந்த குறுஞ்செய்திகளைப்பார்த்த மோகன் வீறிட்டான்.
”ஐய்யெயொ அப்பா நேத்து மதியமே செத்துப்போயிட்டாராம்”
ஜனனி திடுக்கிட்டு நின்றாள்.
ஆதர்ஷ், ‘தாத்தாவா? திருச்சி தாத்தாவா செத்துப்போயிட்டார்?இனிமே எனக்கு யாருப்பா தெனாலிராமன் கதை சொல்வாங்க ஊஉஊ” என்று அழ
ஆரம்பித்தான்.
“என்ன நேத்து பகலே இறந்துட்டாரா ? மோகன் போனைப்போட்டுக்கேளு சீக்கிரம்” நண்பர்கள் கவலையுடன் பரபரத்தார்கள்.
வாசுதேவனுக்கு போன் செய்தான் மோகன்.
” ஹலோ?என்னாச்சு மாமா ஏன் எனக்கு உடனே சொல்லல்ல?” துக்கமும் கோபமுமாய் கேட்டான்.
“நேத்து மதியத்திலேருந்து பலதடவை முயற்சி செய்தேன்ப்பா..போன் ஸ்விச்டு ஆஃப்னு வந்தது...”
“ஐயோ போன் ரிப்பேர் அதான், சரி , சாயந்திரம் ஏழுமணிபோல சரியாத்தானே இருந்தது அப்போ செய்யக்கூடாதா?”
”ஏழுமணிக்கு உன் வீட்டுல உறவுக்காரங்க எல்லாரையும் ஸ்டேஷன் பஸ் ஸ்டாண்டுன்னு கொண்டுவிடப்போகவேண்டி இருந்ததுப்பா.....அப்புறம்
பத்துமணிக்கு மேலன்னு நினைக்கிறேன் மூணுவாட்டி செய்தேனே கட் ஆகிட்டதுப்பா....கடைசில எஸ் எம் எஸ் கொடுத்தேன்பா...”
” ஓ ஆமாம்....இப்போ நினைவுக்கு வருது அப்போ நான் ஆபீஸ் மீட்டிங்க்ல இருந்தேன் அதான் எடுக்க முடியல...சரி டெட்பாடி இருக்கில்ல நான் பொறப்பட்டு
வரேன் இப்போவே, ஆனா ஜனனி ஆதர்ஷ் வரது டவுட்டு..ஆதர்ஷுக்கு எக்சாம் டைம் இப்போ”:
” மோகன், ஒரு நிமிஷம் உன் அம்மா பேசணுமாம்” என்றார் எதிர்முனையில் வாசுதேவன்.
அம்மா என்றதும் மோகனுக்கு வியர்த்தது. அப்பா திருமலை சாது, அதிகம் பேசமாட்டார்.
எத்தனையோ தொழில் இருந்தும் தான் ஆசிரியப்பணியைமேற்கொண்டதை மட்டும் அடிக்கடி பெருமையாக சொல்லிக் கொள்வார்
’கல்வி என்பது ஆழ்வார் பேசுவதுபோல ஞான ஒளி இன்றுவரை அறிவியல் விளக்கமுடியாத ஒரு அதிசியம் தீபம் எப்படி தன்னில்குறையாமல் எப்படி மற்றொரு விளக்கிற்கு ’ஒளியைப்பரப்புகிறது என்று அன்பே தகளியாய் ஆர்வமே நெய்யாய் இன்புறுகிச்செயும் கல்வி தான்தீபம் .அது தனக்கும் ஒளிகாட்டும் மற்றவர்க்கும் ஒளிகாட்டும் என்பார். அ்ம்மா தைரியசாலி. வீட்டில் முழுப்பொறுப்பும் அம்மாவுடையது. தவறுகளைச்சுட்டிக்காட்டத்தயங்கமாட்டாள். வைராக்கியமும் தன்னம்பிக்கையும் அம்மாவிற்கு அதிகம் என்பதை மோகன் அறிவான்.
”ஹலோ அம்,,, அம்மா” என்றபோது நா தழு தழுத்தது. சதைஆடியது.
”அட , அம்மா அப்பாவையும் நினைவில் இருக்காப்பா? இருந்தால் ஆறுமாசம் மு!ன்னாடி உங்கப்பா திடீர்னு ஸ்ட்ரோக்ல படுக்கைல விழுந்ததும்
வந்துபார்த்திருக்கலாமே? பாவம் கண்காணாத தூரம் ! விசாகிடைக்கணும் அதான் வரலை!. ஒருத்தர். உயிரோடு இருக்கிறபோது அவங்களைவிட்டு ஒதுங்கிப்போகிற உறவுகளை அவர் இறக்கிறபோது தொலைவில் தள்ளிடும் முகமுழிகூட கிடைக்கவிடாது தெரியுமா?”
மோகனின் அம்மா வசந்தா எதார்த்தமாகத்தான் கேட்டாள் மோகனுக்கு சுர்ரென கோபம் தலைக்கேறி விட்டது.
”அம்மா, இந்த நேரத்துல இது தேவையா? பம்பாய் வந்தது முதல் ஆபீஸ்ல கொள்ளையாய் வேலை.அதான் மாசாமாசம் சுளையா மூணாயிரம் ரூபா
அனுப்பறேனே ஒரு நாள் மறந்தாலும் வாசு மாமா போன் பண்ணிடுவாரே ? சரி சரி... நான் கிளம்பி வரேன் எப்படியாவது”
” ஆஹா!வந்து உன் பங்குக்கு சாம்பலைக்கரைச்சிடு...நம்ம ஊர் காவேரிலபோதும்பா.. கங்கைக்கெல்லாம் போயி சிரமப்டாதே என்ன?”
”என்னது சா..சாம்பலா ? அப்போ அப்பாவை தகனம் பண்ணியாச்சா?”
”ஆச்சு...உனக்கு தகவல் சொல்லத்தான் முடியவே இல்லையேப்பா? வாசு மாமாவுக்கு உனக்கு போன் பண்ணிப்பண்ணி விரலே தேஞ்சி போயிருக்கும்”
”அய்யோ அம்மா போன் தண்ணி பட்டு கெட்டுப்போயிருந்ததும்மா....நானே ஜனனி செல்லுலதான் மேனேஜ் பண்ணினேன் தெரியுமா?”
”அந்த செல் நம்பரை எங்களுக்கு நீயோ அவளோ கொடுக்கலையே! வேற எப்படி யாரைக்கொண்டு உனக்கு தகவல் சொல்றது?..மனம் போல மாங்கல்யம்!”
“என்னம்மா இப்ப போய் இடக்கா?”
”இயற்கைதானே இதுல இடக்கு எங்கப்பா வந்தது?”
”சரி நான் வரேன்”
திருச்சி ஏர்ப்போர்ட்டிலிரு்ந்து வாடகைக்காரில் உறையூருக்கு வந்தான். வீட்டிற்குள் நுழைந்ததும் கூச்சலிட்டான்.
”மூத்தபிள்ளை நான் வந்து கொள்ளிபோடணும்னு உங்களுக்குத்   தோண வேண்டாமா? ஐஸ் பெட்டில வச்சிருக்கவேண்டியதுதானே??”
“உனக்காக அந்தி சாயறவரைக்கும் காத்திருந்து தகவலும் கொடுக்க வழிதெரியாமல் தவிச்சி வேற வழி இல்லாம சின்னவனை விட்டு காரியத்தை முடிக்க வச்சேன்..பகலில் இறந்தவர்களை மூன்றரை மணி நேரம் வைத்திருக்கலாம் அதற்குமேல் வச்சிருந்தா இறந்தவர் இருந்தபோது செய்த
புண்ணியங்களுக்குப் பலன் இருக்காது. இறந்தவர்களின் இறுதிப்பயணத்தை தாமதப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.என்கிறது தர்ம சாஸ்திரம்” அழுத்தமாய்  சொன்னாள் வசந்தா.
அம்மாவின் தீர்க்கமான குரல் மோகனை எரிச்சலூட்டியது”‘ஏம்மா உனக்கு அப்பா போன சோகமே கிடையாதா? என்னைக்கண்டதும் கட்டிண்டு அழுவாய்னு பார்த்தா தர்மம் சாஸ்த்திரம்னு பேசறே?”
“அதெல்லாம் சினிமா அம்மாக்கள் செய்யலாம்.எதார்த்தத்துல தங்களை தவிக்கவிட்டுட்டுப்போன பி்ள்ளைகளை நினைச்சி ஒவ்வொரு பெத்தவயிறும்
புழுவாய்த்துடிக்கும்,. உனக்கு நிஜமாவே பிரியம் இருந்தால் ரிடையர் ஆகி வீட்டோடு கிடக்கும் அப்பாவுக்கு ஒரு சிநேகிதனாய் துணைக்கு
இருந்திருக்கமாட்டியா? திடீர்னு பம்பாய் ஒருகோடி வேலை மாத்திண்டு போகத்தோணுமா? மூளை நோயால் பாதிக்கப்பட்டுதன்னாலே எதையுமே
 செய்துகொள்ள முடியாமல் கிடக்கும் உன் இருபத்திஆறுவயது தம்பியை இப்படி விட்டுப்போகத்தான் முடியுமா?அப்பாவை தன்னிடம் அழைத்துக்கொண்டது கடவுளின் விருப்பம். இன்னும் படுக்கையில் கிடந்து அவஸ்தைப்படவேண்டாம்னு அந்தக் கடவுள் தன் நிழலுக்குக்கூட்டிக்கொண்டதுக்கு நான் ஏன் அழணும்? ’அமரபதவி’ன்னா சும்மாவா? என்னடாது அம்மா இப்படிக்கேக்கறேனேன்னு நினைக்கிறியா? அடிப்படையில் அன்பும் ஆதரவும் கொண்டவள்தான்.
 ஆனால் .வாழ்வின் அமைப்பும் சிக்கல்களும் என்னை ரொம்பவே மாத்திட்டது.. இப்ப என்னைச் சுற்றி ஒரு கடினத்தோல். நத்தைக்கும் ஆமைக்கும் ஏன் கடுமையான/கெட்டியான மேல் கூடு? முள்ளம்பன்றி சிலிர்த்தால் ஏன் அதன் முட்கள் வெளிப்படுகின்றன அப்படித்தான்னு வைத்துக்கொள்”
”அம்மா.! உன்னைப்போல எனக்குப்பேசத்தெரியாது ஆனாலும். உனக்கு என்னிக்கும் தம்பி மேலதான் பாசம் அதான் அவனைவிட்டு கொள்ளிபோட
 வைச்சிருக்கே?”
“நான் பாசத்துக்கு முன்னுரிமை கொடுப்பதே இல்லை. அதில் வழுக்கிவிழுவது அபத்தம். அறிவுபூர்வமா சிந்திச்சதுல கடமை என்பதைத்தான் நான் மதிக்கறேன்.உன் அ்ப்பாவிற்கான என் கடமையை சரியா முடிச்சேன் ..உன்னைப்படிக்கவைச்சி கல்யாணம் செய்கிறவரைக்குமான என் கடனையும்  முடிச்சேன்.கடைசியாய் இப்படி மூளைவளர்ச்சி இல்லாத பையனை காப்பது என் கடமை.. ஸ்பாஸ்டிக் என்றால் ஒரு குணப்படுத்த முடியாத நோய்,அவர்களுக்கு ஆதரவான தேவைகள் இருக்கும் பட்சத்தில் நீண்ட நாட்கள் வாழ முடியும்..இந்த நோய் உனக்கு வந்தாலும் என்கடமையை செய்வேன்”
”சரி ....நீ புலம்பிக்கொண்டே இருக்கிறாய், நான் சாம்பலைக்கொண்டு காவேரில கரைச்சிட்டு பத்தாம் நாள் வரேன் ,என்ன?”
கொள்ளிபோட்டவன் கைலயே அதையும் செய்யவைப்பேன்... உனக்கு ஒழிஞ்சா திரும்பிவா”
”என்னம்மா கிண்டலா? எனக்கும் கடமை இருக்காதா?”
”ஆமாம்பா கல்யாணமான இந்த பத்து வருஷத்துல உன் கடமையைதான் நான் பார்த்திட்டுவரேனே உன் அப்பா ஒரு அப்பாவி வாயில்லாப்பூச்சி ,,பக்கவாதம்வந்து படுக்கையோட கிடந்தவரைபார்க்க வராமல் போன உன் கடமையைத்தான் கண்ணால் பார்த்தேனே... மாசாமாசம் அதுவும் வாசுமாமா போன்பண்ணி நினைவுபடுத்தினால் பாங்குக்கு பணம் அனுப்புவாய் கடனேன்னுதான்! கடமையின் நிறம் கருப்பு போல இருக்கு.
 கருப்பு ஒண்ணுதான் நிறம். மத்த எல்லா வண்ணமும் சாயம்தான்.. எதுவுமே அக்னில போட்டா கருத்துப் போயிட்றது இல்லயா.. ஆனா சாயம்
 கருத்துப்போறதுன்னு சொல்றதில்லையே.. வெளுத்துப் போறதுனு சொல்றா!.”
”அம்மா! ஓவரா பேசாதே. இனி உன்னையும் தம்பியையும் நான் தானே பார்த்துக்கணும்? ”
”எப்படிப் பார்த்துக்கொள்வாயப்பா? உன் பம்பாய் ஃப்ளாட் ரொம்ப நாகரீகமானவங்க வாழும் இடமாமே? அங்கே இந்த மூளை வளர்ச்சி இல்லாத தம்பியைக்கூட்டிட்டுப் போகமுடியாதுன்னு உன் பொண்டாட்டி சொல்லிட்டாளே அன்னிக்கே.?.அவளுக்கு எல்லாமே அழகாய் இருக்கணும்னு அடிக்கடி சொல்வா..அம்மாகூட இப்போ பழைய அழகில்லை, இனிபூவும்பொட்டும் போய் அசிங்கமாயிடுவேன். ஆனா நெஞ்சுல உரம் இருக்குப்பா... கணவனை இழந்த பெண்களுக்கு இது கொஞ்சம கூடுதலாகவே வந்துடும். அதனாலதான் புருஷன் போனாலும் தனி ஒருத்தியா குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிவிடுகிறாள் ஒரு பெண். அந்த நெஞ்சுரம் தான் பல எதிர்ப்புகளை தாங்கிக்கொள்ள உதவியா இருக்கு.. அப்பாவை நீ உயிரோட இருந்தப்போ வந்து பார்க்காததையும் நான் இப்போ குத்தமாசொல்லலை...உன் பாட்டியோடு இருந்த சமயத்தில், (அவருக்கு அப்போது 106 வயதுக்கு மேல்) சிவப்பெறும்பு அவரைக் கடித்துவிட்டது. மெல்ல கடிபட்ட
 இடத்தைத் தடவி, எறும்புக்கு மென்னி கின்னி முறிந்துவிடாமல் எடுத்துப் போட்டார். பிறகு சொன்னார். ‘வெய்ய காலம். சின்ன ஜீவன். அதென்ன பண்ணும் பாவம். எத்தயாவது பிடிச்சுண்டா தேவலாம்போல இருக்கோ என்னவோ...‘. அப்படித்தான் பிள்ளைகளின் அலட்சியத்தையும் பெத்தவங்க
 நினைக்கிறாங்கப்பா...“
வசந்தா நிதானம் இழக்காமல் இப்படிச்சொல்லி முடிக்கும் போது வக்கீல் உடையில் ஒரு இளைஞன் வீட்டிற்குள் நுழைந்தான்.
வாசுதேவன் தனது அறுபது வயதைக்கடந்த நிலையிலும் ஓட்டமாய் ஓடி அவனை வரவேற்றார்.
“வாப்பா மாதவா உன்னைத்தான் எதிர்பார்த்திட்டே இருக்கோம்.... ” என்றார் உற்சாகமாக..
“எங்க வாத்தியார் விஷயமாச்சே டிலே பண்ணுவேனா அங்கிள்? அவரால படிச்சி முன்னுக்குவந்த மாணவன்..இன்னிக்கு திருச்சில பிரபல வக்கீலா நான்
 இருக்கேன்னா அது திருமலைசார் அன்னிக்குப்போட்ட கல்விப்பிச்சை.“ என்று நெகிழ்ந்தான்.
வசந்தா அவனைப்பார்த்து புன்னகை செய்தபடி,” இப்படித்தாம்பா அன்னிக்கு அமெரிக்காலேருந்து சதீஷ்னு ஒரு பையன் வந்தான்...அவன் வந்தவேளை எங்கவாழ்க்கைலயும் வெளிச்சம் வந்துவிழுந்தது. அப்போ உங்க வாத்தியாருக்கு கைகால் சுவாதீனமாகத்தான் இருந்தது ..சதீஷ் ஆர்வமாய் தன் வாத்தியார் செய்யும் பூஜையையும் அன்னிக்குப்பார்த்தவன் சட்டுனு கண்மலர்ந்தான் அன்னிக்கு பூஜை த்தட்டில் இருந்த அந்த சாளகிராமங்கள் சில அவன் கண்ணில் பட்டதும், அவைகளைப்பற்றி அவன் பூரித்துச்சொன்னதும் அப்புறம் அந்தக்கல்லை கின்னஸுக்கு தெரியப்படுத்தியதும் எதிர்பாராமல் நடந்தவைகள்.. “ என்றாள் பெருமூச்சுவிட்டபடி.
.
”சதீஷால் திருமலைசாருக்குக்கிடைச்சது ஒரு கோடி ரூபாய்!
 
 World largest Ruby and Saphire weighing 2805 carats in original form, the worth was equal to U.S Defence budget.
 The Guenness Book of world records lists these gems as the largest gems in the world!
 
  ஆமாம் உலகிலேயே பெரிய அளவிலான மாணிக்கக்கல்லும் பச்சைமரகதக்கல்லும் என் ஆசானின் வீட்டில் பூஜை அறையில் வழிப்பாட்டுக்கற்களா இருந்து பூஜிக்கப்பட்டு வந்திருக்கு! பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது எத்தனை நிதர்சனமான உண்மை! சதீஷ் விவரம் சொன்னதும் திருமலை சார் அதைக்கொடுக்க முன் வந்ததே எதிர்பாராததுதான்! ஆனா உயிலைப்படிச்சா
 காரணம் விளங்கிடும்!உடனே திருச்சி தில்லை நகர்ல அப்போ விலைக்கு வந்த வீட்டை வாங்கிப்போட்டுட்டார் .திருமலை சார். பிறகு ஒருநாள் என்னை
 வைத்துக்கொண்டு இரண்டு சாட்சிகளுடன் உயில் எழுதி வச்சிருக்கார்.. அதை வாசிக்கத்தான் வந்திருக்கிறேன்!” மாதவனபெருமையுடன் இப்படிச்சொன்னதும்  மோகன் பொறுக்கமுடியாமல் கேட்டுவிட்டான்,
”இவ்வளவு நடந்திருக்கு இந்தவீட்டின் மூத்தபையன்னு எனக்கு எதுவுமே சொல்லலையே! போகட்டும் உயிலையாவது என் முன்னாடி
 வாசிக்கறீங்களே அது போதும்..அப்பாவுக்குப்பெருந்தன்மை அதிகம்.. அவர் பாரபட்சமாக எல்லாம் நடந்திருக்கமாட்டார் தன் உயிலில்.” என்றான் உறுதியான குரலில்.
ஆனால் உயிலை மாதவன் வாசித்து முடித்ததும் முகம் வெளிறிப்போனவனாய்,” எ என்ன ? அந்த வீட்டை ஸ்பாஸ்டிக் சொசைட்டிக்கு எழுதி வச்சிட்டாரா?  மனசுல என்ன பெரிய பாரி வள்ளல்னு நினைப்பா? மும்பய்ல நான் ஒரு ஃப்ளாட் வாங்க நினச்சிருக்கேன் அதுக்காவது உதவி இருக்கக்கூடாதா? பிள்ளைகளை படிக்க வச்சா மட்டும்போதுமா சொத்து சுகம்னு சேர்த்து வைக்கணும்னு பெத்தவங்களுக்குத்தோணாதா? “என்று ஆவேசமாய் கூச்சல் போட்டுக்கொண்டே இருக்க, வீட்டைக்காலிபண்ணிக்கொண்டு சின்னப்பையனுடன் அந்த மாற்றுத்திறனாளிகளின் மையத்தில் நிரந்தரமாய் தங்கி சேவை செய்ய, வசந்தா ஆயத்தமானாள்.
*************************************************************************************************************************************************************************************************
 
 
மேலும் படிக்க... "நெஞ்சில் உரமுமின்றி...."

Wednesday, November 14, 2012

குழந்தைகள் தினக்கவிதை!






நல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும்
நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும்
உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும்
உத்தமராய் உலகினிலே திகழ்ந்திடவேண்டும்

இளமையிலே கல்விதனை  கற்றிடல் வேண்டும்
இன்முகத்துடனே பழக அறிந்திடல் வேண்டும்
தெளிவுடனே ஏடுகளைப்படித்திடல் வேண்டும்
தேர்ந்த கல்வி கொண்டபின்னும் அடங்கிடல் வேண்டும்

சொல்லும் செயலும் தூய்மையுடன் விளங்கிடல்வேண்டும்
சோர்வு அயர்வு சோம்பலுமே நீக்கிடல் வேண்டும்
கடமையதை தவறாமல் செய்திடல் வேண்டும்
காரியத்திலென்றும் நல்ல உறுதியும் வேண்டும்





வைகறையில்துயிலெழுந்து கொள்ளவேண்டும்
வாழும்வகைத்திட்டங்களை வகுத்திடல் வேண்டும்
மெய்வளர விளையாடித்தீர்த்திடவேண்டும்
மேன்மைமிகு கலைகளையும் கற்றிடல் வேண்டும்

இனிய சொல்லைமட்டும் நா இயம்பிடவேண்டும்
இயன்றவரை அடுத்தவர்க்கு உதவிட வேண்டும்
கனிவுகொண்ட நெஞ்சம்கடைசிவரை இருந்திடவேண்டும்
கருணை ஒளி கண்களிலே திகழ்ந்திடல் வேண்டும்

தாய் தந்தையேநம் தெய்வம் என உணர்ந்திடல் வேண்டும்
தாய்நாட்டின் சிறப்பதனை போற்றிட வேண்டும்
அறிவுதந்த ஆசானையே  வணங்கிடல் வேண்டும்
அன்பினாலே உலகம் தன்னை ஆளவும் வேண்டும்

நாடு நமது நாடு என்ற எண்ணம் வேண்டும்
நன்மையான செயல்கள் மட்டும் செய்திடல் வேண்டும்
ஒற்றுமைப்பயிரினையே வளர்த்திட வேண்டும்
ஒப்புயர்வற்றவர்களைச் சார்ந்திடவேண்டும்

நன்னெறிக்கு  ஒளிகொடுக்கும் வள்ளுவர்  வாக்கு- உயர்
ஞான ஒளி காட்டும் புத்தர் அன்புப்பெருக்கு
உள்ளம் கருணை நிலவும் காந்தி உண்மை விளக்கு
உணர்ந்து நடந்தால்  உண்டு பல நன்மை நமக்கு!
 
மேலும் படிக்க... "குழந்தைகள் தினக்கவிதை!"

Thursday, November 08, 2012

ஆணி முத்தே!



ஆனி(ணி) முத்தே*! என் அருமை அப்பாவே!
வானிலே யார் காண விரைந்தாய் நீ?

தேனினும் இன் தமிழில்
திகட்டாக்கவிதைதந்த
திருலோக சீதாராம் எனும் உன்
குருநாதரைக்காணவா அல்லது
வாழ்ந்திட்ட நாளெல்லாம்
தாழ்வில்லா தமிழுக்கு
சாரதியாய் திகழ்ந்திட்ட
பாரதியைப்பார்க்கப்போனாயா?

உலகத்துச்செய்திகளை எல்லாம்
ஊன்றிப்படித்து உடன்
உணர்வோடு பகிர்ந்து கொள்வாய்
ஒரு நாள் நீயே
செய்தியாவாய் என்று
நினைத்தே பார்க்கவில்லை அப்பா.

இளம் வயதில் உன் தோளில்
ஏறியது குடும்பச்சுமை
இயல்பாக ஏற்றுக்கொண்ட
உன் அதரத்தில்
இறக்கும் வரை
இருந்ததென்னவோ
மாறாத புன்னகை.

வாடிய மனிதருக்கெல்லாம்
வாய் வார்த்தையாலே
ஆறுதல் அளிப்பாய்
வாழ்க்கை அலுத்துவிட்டதாய்
ஒரு நாளும் நீ
வாய்விட்டு சொன்னதில்லை
பாழாய்ப்போன காலன்
பறித்துக்கொண்டானே உன்னை.

உன் ஆறடி உயரத்தில்
அழகிய வதனத்தில்
முத்துப்புன்னகையில்
கனிவான பேச்சினில்
காலனும் மயங்கினனோ
கவர்ந்துதான் போயினனோ?

யாரையும் தாழ்மைப்படுத்திப்
பேசாத நற்குணம் உனக்கு
எவரிடமும் குற்றம் காணா
குழந்தை உள்ளம் உனக்கு
பத்துவயதில்
நான் எழுதிய
சொத்தை ஜோக்கினை
மெத்தப்புகழ்ந்தாய்
நீ தந்த
ஊக்கத்தில்தான்
என் விரல்களுக்கும்
எழுதத்துணிவு வந்தது.

எழுத்துலகில் பிரவேசிக்கையில்
ஏஎஸ் ஆர் மகள் என்ற
அடையாளம் ஏற்றம் தந்தது

”செய் வனத்திருந்தச்செய்
செய்யும் தொழிலே தெய்வம்
அன்பினால் உலகை ஆள்”
இம்மூன்றும் உன் தாரக மந்திரம்
இவற்றை இனிக்கடைப்பிடிப்பதான
உறுதிமொழி தான் அப்பா
உன் மறைவிற்கு
நான் செய்யும்
உண்மையான அஞ்சலி.

********************

* ஆனிமுத்தே என்று ஆரம்பித்தமைக்குக்காரணம்முத்தான என்  அப்பா ஆனிமாதம் பிறந்து ஆனிமாதம் மறைந்தார் என்பதால் ஆ்ணி முத்து சிறப்பானது என்பதும் இன்னொரு காரணம்.

இன்றோடு என் தந்தை மறைந்து நான்கு மாதங்கள் ஆகின்றன.
மேலும் படிக்க... "ஆணி முத்தே!"

Monday, November 05, 2012

மனிதன் என்னும் புதினம்.

”ஒருவன் தனது மனசாட்சியை ஏமாற்றி வாழமுற்பட்டாலும் அவனது வாழ்வு முழுமைஅடைவதில்லை அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறான் என்பதுதான் நிதர்சனமஇந்தக்கதையில் மைதிலி பூமா புவனா ஆகியோர் லஷ்மி சரஸ்வதி மற்றும் சக்தி ரூபமாக வலம் வருகின்றனர். நூலாசிரியர் 15நாவல்கள் 250சிறுகதைகள் நுற்றுக்கும்மேற்பட்ட வானொலிநாட்கங்கள் படைத்துள்ளார் அரவிந்தரிடமும் பாரதியிடமும் மட்டற்ற ஈடுபாடுகொண்டவர் ஆன்மிகத்தில் தோய்ந்தவர் இந்த மனிதன் வாசிப்பவர்களை பண்பட்ட மனி்தர்களாக ஆக்க பெரிதும் உதவி செய்யும் என்பது உறுதி.”


 
                                                                                                

இப்படி ஒரு அணிந்துரையுடன் அப்பாவின் நாவல் ’ மனிதன்’ அண்மையில்
திருமகள்பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது.. பல வருடங்கள் முன்பு விகடன் போட்டியில் பரிசு பெற்ற நாவல் .பலரின் இதயங்களை கொள்ளை கொண்ட புதினம்.!. விகடனுக்கு தந்தை சார்பில் நன்றியை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

 அப்பாஉயிரோடு இருக்கும்போதே இந்த ஆண்டு அவரது (ஜூன்19) பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ்கிஃப்டாக கொடுக்கவேண்டும் என என் சகோதரர்களும் கசின் பிரபல எழுத்தாளர்இந்திரா சௌந்தர்ராஜனும் ரகசியமாக இந்த முயற்சியில் ஈடுபட்டதை அப்பா ஒருநாள் கண்டுபிடித்துவிட்டார்! அவருக்கும் இனிய அதிர்ச்சி. மனிதன் நாவல்தான் அந்தநாளில் அவரை வெளி உலகிற்கு அதிகம் அடையாளம் காட்டிய நாவல். அது மறுபடியும்
புத்தகமாக வருவதில் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

கோவை மெர்க்குரி பதிப்பகத்தார் முதலில் இதை அழகாக வெளியிட்டிருந்தனர்
பேராசிரியர் அ சீனிவாசராகவன் அவர்களின் ஆத்மார்த்தமான முன்னுரையுடன் நூல்வெளிவந்திருந்தது.

 1977ல் ஸ்ரீரங்கத்தில் காவிரியில் வந்தது பெருவெள்ளம்.
பொன்னிக்கு அன்று என்ன தோன்றியதோ ஊருக்குள் உற்சாகமாய் வளைய வந்தாள்.

வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது

என்பது ஔவை வாக்கு. ஆனால் அப்பாவின் மனிதன் நாவல் மற்றும் பல எழுத்துக்கள் கவிதைகள் அனைத்தையும் காவிரி அடித்துக்கொண்டுபோய்விட்டது. வீட்டிற்குள்புகுந்து அப்பாவின் அலமாரியைக்குடைந்து திரைக்கையால் அள்ளிக்கொண்டு அன்று அவள்
போனதில் அந்த மனிதன் நாவலும் அடக்கம். அதனாலே இந்த நூலை மறு பதிப்பாகவெளிக்கொணர என் சகோதரர்கள் முன்வந்தார்கள்.

புத்தகத்தின் முகப்பு அட்டைக்காகந்தமிழ்ப்பத்திரிகை உலகின்பிரபல ஓவியரைஅணுகிக்கேட்டபோது அவர் ஒப்புதல் தந்தார் ஆனால் சொன்ன நாளில் தரவில்லை.

அதற்குள் அப்பா ஒரு நாள் கீழே விழுந்து இடுப்பில் எலும்பு
முறிந்து ஆஸ்பித்திரியில் சேர்ந்தார்.ஆபரேஷன் நன்கு முடிந்ததும் அங்கே
படுத்தபடியே மனிதன் நாவலின் மறுபதிப்பைப்பற்றி மகிழ்வுடன்
பேசிக்கொண்டிருந்தார்.

அப்பா உடல்நலன் சரியாகி அவர்மீண்டும் நடப்பதற்குள் புத்தகம் வந்தால்
நல்லதென ஓவியரை மறுபடி அணுகி நிலைமையைக்கூறினோம். அவர் முடியாதென்றுசொல்லாமலேயே நாட்களைக்கடத்தினார். வேறுவழியின்றி அந்த யோசனையைக்கைவிட்டோம்.

எழுத்தாளரும் எனது ஒன்றுவிட்ட சகோதரருமான இந்திரா சௌந்தர்ர்ராஜன் அவர்களின்பெருமுயற்சியால் திருமகள் பதிப்பகம் மனிதன் எனும் புதினத்தை அண்மையில்வெளியிட்டுவிட்டது..


மனிதனைக் கையில்பெற மாமனிதரான என் தந்தைதான் இன்று உயிரோடு
இல்லை. ஜூலை8ம்தேதி அமரராகிப்போன அவரது ஆசையை அவரது புத்திரசெல்வங்களான நாங்கள் நிறைவேற்ற விரும்புகிறோம்.. ஆம் அவரது உன்னதக்காவியமான மனிதனைஉலகிற்கு கொண்டு செல்லப்போகிறோம்.

தமிழ்ஆர்வலர்களே! வாசிப்பில் நேசம் கொண்ட வாசகர்களே! நீங்கள் யாவரும் எனதுதந்தை திரு ஏஎஸ்ராகவன் அவர்களின் இந்த மனிதன் நாவலை வாசிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்

நூல் பற்றிய விவரங்கள்...

*மனிதன்.*
**
**
நாவலை எழுதியவர்... ஏஎஸ் ராகவன்
விலை 190ரூ(360 பக்கங்கள்)
திருமகள் நிலையம்..
,
சுகான்ஸ் அபார்ட்மெண்ட்ஸ்,

13 சிவப்ரகாசம் சாலை
தி நகர்
சென்னை 17

தொலைபேசி 24342899

பிகு..நாவலை  சற்று  சலுகை விலையில் பெற
எழுத்தாளரும் என் உடன்பிறப்புமான  வெங்கடேஷ்(ராஜரிஷி  எழுத்தாளர்)
என்பவரை  இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்  நன்றி
அலைபேசி எண்... 9176846599


--
 
மேலும் படிக்க... "மனிதன் என்னும் புதினம்."
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.