Social Icons

Pages

Thursday, November 08, 2012

ஆணி முத்தே!ஆனி(ணி) முத்தே*! என் அருமை அப்பாவே!
வானிலே யார் காண விரைந்தாய் நீ?

தேனினும் இன் தமிழில்
திகட்டாக்கவிதைதந்த
திருலோக சீதாராம் எனும் உன்
குருநாதரைக்காணவா அல்லது
வாழ்ந்திட்ட நாளெல்லாம்
தாழ்வில்லா தமிழுக்கு
சாரதியாய் திகழ்ந்திட்ட
பாரதியைப்பார்க்கப்போனாயா?

உலகத்துச்செய்திகளை எல்லாம்
ஊன்றிப்படித்து உடன்
உணர்வோடு பகிர்ந்து கொள்வாய்
ஒரு நாள் நீயே
செய்தியாவாய் என்று
நினைத்தே பார்க்கவில்லை அப்பா.

இளம் வயதில் உன் தோளில்
ஏறியது குடும்பச்சுமை
இயல்பாக ஏற்றுக்கொண்ட
உன் அதரத்தில்
இறக்கும் வரை
இருந்ததென்னவோ
மாறாத புன்னகை.

வாடிய மனிதருக்கெல்லாம்
வாய் வார்த்தையாலே
ஆறுதல் அளிப்பாய்
வாழ்க்கை அலுத்துவிட்டதாய்
ஒரு நாளும் நீ
வாய்விட்டு சொன்னதில்லை
பாழாய்ப்போன காலன்
பறித்துக்கொண்டானே உன்னை.

உன் ஆறடி உயரத்தில்
அழகிய வதனத்தில்
முத்துப்புன்னகையில்
கனிவான பேச்சினில்
காலனும் மயங்கினனோ
கவர்ந்துதான் போயினனோ?

யாரையும் தாழ்மைப்படுத்திப்
பேசாத நற்குணம் உனக்கு
எவரிடமும் குற்றம் காணா
குழந்தை உள்ளம் உனக்கு
பத்துவயதில்
நான் எழுதிய
சொத்தை ஜோக்கினை
மெத்தப்புகழ்ந்தாய்
நீ தந்த
ஊக்கத்தில்தான்
என் விரல்களுக்கும்
எழுதத்துணிவு வந்தது.

எழுத்துலகில் பிரவேசிக்கையில்
ஏஎஸ் ஆர் மகள் என்ற
அடையாளம் ஏற்றம் தந்தது

”செய் வனத்திருந்தச்செய்
செய்யும் தொழிலே தெய்வம்
அன்பினால் உலகை ஆள்”
இம்மூன்றும் உன் தாரக மந்திரம்
இவற்றை இனிக்கடைப்பிடிப்பதான
உறுதிமொழி தான் அப்பா
உன் மறைவிற்கு
நான் செய்யும்
உண்மையான அஞ்சலி.

********************

* ஆனிமுத்தே என்று ஆரம்பித்தமைக்குக்காரணம்முத்தான என்  அப்பா ஆனிமாதம் பிறந்து ஆனிமாதம் மறைந்தார் என்பதால் ஆ்ணி முத்து சிறப்பானது என்பதும் இன்னொரு காரணம்.

இன்றோடு என் தந்தை மறைந்து நான்கு மாதங்கள் ஆகின்றன.

23 comments:

 1. ஆனி முத்து சிறப்பான தலைப்பு காரணமும் சிறப்பு.

  ReplyDelete
 2. அன்பு ஷைல்ஸ்,படத்தைப் பார்த்தால் என் அப்பா நினைவுக்கு வருகிறார்.நேற்றுதான் தீபாவளிச் சீர் எழுதும்போது அவர் நினைவு வந்து கண்ணை மறைத்தது. உண்மையாகவெ முத்துதான் அப்பா.அவர் பெற்ற மகளின் சிரித்த முகமும் அப்பா ஜாடை.

  ReplyDelete
 3. அப்பாவை நினைவுகூர்ந்த கவிதை அருமை. அவர் மகத்தான மனிதர் என்பதை படிக்கும் போதே உணர முடிகிறது அக்கா. அவரை அப்பாவாய்ப் பெற பாக்கியசாலிதான் நீங்கள்.

  ReplyDelete
 4. அப்படியே அப்பாவோட ஜெராக்ஸ் நீங்க, :)

  ReplyDelete
 5. இப்படித்தான்
  கைக் குவிச்சு
  உங்கப்பாவும் ரசம் குடிப்பார்
  என்று அம்மாவும்
  சார் அப்படியே
  உங்கப்பா மாதிரியே நடைசார்
  என்று அப்பாவின் உதவியாளரும்
  அவங்கப்பா மாதிரியே
  நல்ல கூர்மையான புத்தி
  என்று யாரேனும் யாரையேனும்
  சிலாகிக்கையில் உணர்கிறேன்
  அப்பாக்கள் இறப்பதில்லை.

  ReplyDelete
 6. உங்கள் அப்பாவிடமிருந்து உங்களுக்கு வந்து சேர்ந்த நற்குணங்கள், ஒவ்வொரு மகளுக்கும் அவரவர் அப்பாவிடமிருந்து வந்து சேர்ந்து அமைந்திட வேண்டும் ஷைலஜாஜீ!

  ReplyDelete
 7. அப்பாவை நினைவு கூர்ந்து வடித்த கவிதை அருமை. ஆனா, அப்பாவை இழந்த சோகத்துக்கு எங்களால் ஆறுதல் சொல்ல முடியாது.., அந்த வேலையை இறைவன் பார்த்து கொள்ள வேண்டி எங்களால் அவனை, இறைஞ்ச மட்டுமே முடியும்..,

  ReplyDelete
 8. Sasi Kala12:39 PMஆனி முத்து சிறப்பான தலைப்பு காரணமும் சிறப்பு.

  >நன்றி சசிகலா

  ஆனிமுத்து என்பதை ஆணிமுத்து என மாற்றச்சொன்னார் ஜீவ்ஸ். அதனால் மாற்றிவிட்டேன்

  ReplyDelete
 9. வல்லிசிம்ஹன்1:59 PMஅன்பு ஷைல்ஸ்,படத்தைப் பார்த்தால் என் அப்பா நினைவுக்கு வருகிறார்.நேற்றுதான் தீபாவளிச் சீர் எழுதும்போது அவர் நினைவு வந்து கண்ணை மறைத்தது. உண்மையாகவெ முத்துதான் அப்பா.அவர் பெற்ற மகளின் சிரித்த முகமும் அப்பா ஜாடை.

  >>>
  வாங்க வல்லிமா
  நமக்கெல்லாம் அப்பாவோட சற்று கூடுதல் நெருக்கம் தான் என்ன செய்வது எல்லா நாளும் அவர் நம்மோடு இருக்க இயலவில்லையே...ஆமாம் நான் கொஞ்சம் அப்பா ஜாடை என்பார்கள்..நன்றி வல்லிமா வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 10. பால கணேஷ்2:31 PMஅப்பாவை நினைவுகூர்ந்த கவிதை அருமை. அவர் மகத்தான மனிதர் என்பதை படிக்கும் போதே உணர முடிகிறது அக்கா. அவரை அப்பாவாய்ப் பெற பாக்கியசாலிதான் நீங்கள்.
  >>>>ஆமாம் கணேஷ் அப்பா உன்னத மனிதர் தான்
  அவர் மகள் என்னும் பாக்கியம் இந்த ஜன்மத்தில் அடைந்துவிட்டேன்.நன்றி கருத்துக்கு

  ReplyDelete
 11. //ஐயப்பன் கிருஷ்ணன்2:32 PMஅப்படியே அப்பாவோட ஜெராக்ஸ் நீங்க, :)

  ///

  :) நன்றி ஐயப்ஸ்

  ReplyDelete
 12. //ஐயப்பன் கிருஷ்ணன்2:46 PMஇப்படித்தான்
  கைக் குவிச்சு
  உங்கப்பாவும் ரசம் குடிப்பார்
  என்று அம்மாவும்
  சார் அப்படியே
  உங்கப்பா மாதிரியே நடைசார்
  என்று அப்பாவின் உதவியாளரும்
  அவங்கப்பா மாதிரியே
  நல்ல கூர்மையான புத்தி
  என்று யாரேனும் யாரையேனும்
  சிலாகிக்கையில் உணர்கிறேன்
  அப்பாக்கள் இறப்பதில்லை.

  //
  கவிதை நெகிழ்ச்சி ஐயப்ஸ்

  ReplyDelete
 13. //நாஞ்சில் வேணு3:21 PMஉங்கள் அப்பாவிடமிருந்து உங்களுக்கு வந்து சேர்ந்த நற்குணங்கள், ஒவ்வொரு மகளுக்கும் அவரவர் அப்பாவிடமிருந்து வந்து சேர்ந்து அமைந்திட வேண்டும் ஷைலஜாஜீ!

  //
  மிக்க நன்றி வேணுஜீ வருகைக்கும் அன்பான கருத்துக்கும்

  ReplyDelete
 14. //ராஜி3:44 PMஅப்பாவை நினைவு கூர்ந்து வடித்த கவிதை அருமை. ஆனா, அப்பாவை இழந்த சோகத்துக்கு எங்களால் ஆறுதல் சொல்ல முடியாது.., அந்த வேலையை இறைவன் பார்த்து கொள்ள வேண்டி எங்களால் அவனை, இறைஞ்ச மட்டுமே முடியும்..,

  //
  வாங்கம்மா அன்புத்தங்கையே ராஜியே! இறைவனிடம் இறைஞ்சுங்கள் அது போதும் நன்றி உங்களின் அக்கறையான பின்னூட்டத்துக்கு

  ReplyDelete
 15. நெகிழ்ச்சியான வரிகள் ஷைலஜா. காலம் ஆற்றட்டும் பிரிவின் துயரை.

  ReplyDelete
 16. அப்பாவை நினைத்து வடித்த கவிதை எனது அப்பாவையும் நினைவில் கொண்டுவருகின்றது.
  அப்பாக்கள் வாழ்கின்றார்கள் என்றும் மனத்தில். இறைவன் உங்களுக்கு மன ஆறுதலைத் கொடுக்கட்டும்.

  ReplyDelete
 17. அவரின் எங்கும் செல்லவில்லை... உங்களின் நினைவிலேயே உள்ளார்... நெகிழ வைத்தது வரிகள்...

  ReplyDelete
 18. வணக்கம் சகோதரி
  நலமா??  அப்பா...
  என்ற சொல்லில்தான்
  எத்தனை காந்த சக்தி
  சொல்லி முடிக்கையிலே
  உடலில் ஆயிரமாயிரம்
  குதிரை சக்தி ஏறியதுபோல
  ஒரு உணர்வு...
  எம் விரல்பிடித்து நல்வழி காட்டி
  இதுவே உன் பாதையென
  உன்மத்தமாய் உரைத்துச் சென்ற
  தந்தையின் அன்புக்கு நிகர் அவர் தான் ....

  ஐயாவின் ஆத்மாவிற்கு என்
  இதயப்பூர்வமான மலர் அஞ்சலிகள்...

  ReplyDelete
 19. அப்பாக்கள் இறப்பதில்லை. அதுமட்டும் மறுக்கமுடியாத உண்மை !

  ReplyDelete
 20. படத்தில் எத்தனை கம்பீரம்! comforting smile.
  உங்களுக்கு பெரும்பலமாய் இருந்தவர் என்று புரிகிறது. அஞ்சலி நன்று.

  ReplyDelete
 21. ராமல்ஷ்மி இராஜேஸ்வரி அப்பாதுரை தனபாலன் மாதேவி மகேந்திரன் ..தங்கள் அனைவரின் வருகைக்கும் மேலான கருத்துக்கும் மிக்க நன்றி
  தாமதமான எனது பதிலுக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

  ReplyDelete
 22. //”செய்வனத்திருந்தச்செய்
  செய்யும் தொழிலே தெய்வம்
  அன்பினால் உலகை ஆள்”

  இம்மூன்றும் உன் தாரக மந்திரம்
  இவற்றை இனிக்கடைப்பிடிப்பதான
  உறுதிமொழி தான் அப்பா
  உன் மறைவிற்கு
  நான் செய்யும்
  உண்மையான அஞ்சலி.//

  அப்பா என்றும் இறப்பது இல்லை.
  கடைசிவரை அப்பா நம் நினைவினில் தான் இருப்பார்.

  தங்கள் அஞ்சலி மிகவும் சிறப்பானது.

  ReplyDelete
 23. தந்தைகள் எங்கே நம்மை விட்டுப் பிரிகிறார்கள். என்றென்றும் நம் மனதில் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அல்லவா அவர்கள்.

  கவிதை ரொம்ப அழகாருக்கு.

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.