Social Icons

Pages

Thursday, November 29, 2012

பாணரின் பக்தி!

ஆழ்வார்கள் பதின்மரில் மிகக்குறைந்த பாசுரங்களில் அரங்கனைத்துதி செய்தவர் திருப்பாணாழ்வார்.


திருப்பாணாழ்வார் வரலாறு தனிச்சுவை நிறைந்தது. தொண்டர் குலமே தொழுகுலம் ,’பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்’ என்று பெரிய பெருமாளே சங்கொலித்த வரலாறு. பாணரின் வரலாறு. அத்தொழுகுலத்திற்கு தீக்காப்பிடத்தேவை இல்லை வைதீகச்சடங்குகள் தேவை இலலை.
குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து ’ என்று சொல்லப்பட்ட பஞ்சம வர்ணத்தில் நம்பாடுவான்போல அவதரித்த பாணர் பெருமானை அரங்கன் ஆட்கொண்ட அழகுதான் என்னே!
ஸ்ரீரங்கத்தை அடுத்த உறையூர் இங்கே இதேபோல ஒரு கார்த்திகைமாதம் இன்றையதினம் போல ஒரு ரோகிணி நட்சத்ரத்தில் அவதரித்தவர் பாணர். இவர் பிறந்த குலத்திற்கு ஏற்றபடி யாழ்ப்பாடலில் தேர்ச்சி பெற்றார் நாரதர்போல ஞானவைராக்கியங்களுடன் திகழ்ந்தார்.
இறைவன் திருவருளால் சிறுவயதிலேயே அனைத்தும் அறிந்தவராகி இறைபக்தி மேலோங்க காவிரியில் நீராடி காவிரிக்கரையில் தனது இசைக்கருவியுடன் அமர்ந்து அரங்கன்மீது மனமுருகப்பாடிவந்தார்.
இவரது தூயபக்தியைக்கண்ட பிராட்டியார் அரங்கனிடன்” வெகுகாலமாய் நம்மைப்பாடிவரும் இவரை புறத்தே வைத்துப்பார்க்கலாகுமோ “ என்று விண்ணப்பம் செய்தார்.
பாணரின் பெருமையை உலகோர் அறியச்செய்யவும் இறைவனைப்பற்ற பிறப்பு முக்கியமல்ல பக்தியே முக்கியம் என்பதை நடத்திக்காட்டவும் தமது கோயிலின் அணுக்கத்தொண்டரான சாரங்கமுனிவரின் கனவில் தோன்றி,” நமக்கு நல்லன்பரான பாணரை நாளை நீர் உமது தோளிலே எழுந்தருளப்பண்ணிக்கொண்டு சந்நிதிக்கு வாரும்” எனநியமித்தார் அரங்கப்பெருமான்.
சாரங்கரும் மறுநாள் காவிரிக்கரை ஓரம் அமர்ந்து கண்மூடி அரங்கனைதியானித்திருந்த பாணரிடம் ,”தாங்கள் அரங்கன்சந்நிதிக்கு வரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
பாணர்திடுக்கிட்டு,” நானா?நீசனான நான் காவிரிக்கரைதாண்டி அரங்க மாநகர்மண்ணைமிதிக்கலாமோ? பிரும்மாதி தேவர்கள் வணங்கும் சந்நிதிக்கு நான் வரக்கூடாது” என்று பயத்துடனும் பணிவுடனும் மறுத்துவிட்டார்.
இதுபோல இருமுறை மறுத்துவிடவும் லோக சாரங்க மகா முனிவர் அரங்கனிடம் இதை விண்ணப்பித்தார்.
பெருமாள் அன்றிரவு இருவருக்கும்கனவில் நியமித்தார். அதன்படி மறுநாள் மகாமுனிவர் அனைவருடன் காவிரிகரைக்குச்சென்று பாணரைப்பணியும்முன்பே அவர் இவர்களைக்கண்டு வணங்கிவிழவும்” நமது
அ ந்தரங்கபக்தனான திருப்பாணாழ்வாரை உமது தோள்களிலே வைத்துவீதியை வலமாக வந்து நமதுசந்நிதியில்விடும்” என்று அருளீச்செய்ததை கூற,”ஐயோ இதென்ன அபசாரம் எம்பெருமானே இதென்ன திருவிளையாடல்” எனக்கூறி சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கிய பாணரை அப்படியே தன் தோளீல் எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வீதி வலமாகசென்றார் .,கருடன் திருமாலைத்தோளீல் ஏற்றியதுபோல!.
அப்போதே பெரியபெருமாள் அவருக்கு ஞான சாக்ஷாத்காரமாக தன்னைக்காட்டிக்கொடுக்க பாணரும் தாம் அகக் கண்ணால் அனுபவித்தை பாசுரமாகப்பாடினார்
கருவறையில் நுழைந்ததும் பெரியபெருமாளின் வடிவழகைக்கண்ணாலே கண்டு,” எழில் நீல மேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே” என்று நெகிழ்ந்தார்.
 
 
 
 
 
பெரிய பெருமாளைக்கண்ணாரக்கண்ட பாணர் வாழ்க்கை நியதியைப்பாடவில்லை பாசுரம்தோறும் பலன் சொல்லவில்லை திவ்யதேசங்களின் இயற்கை அழகை வர்ணிக்கவில்லை நாயக நாயகி பாவத்தில் உளம் செலுத்தவில்லை.. பெருமாளே தரிசனம் தந்தபிறகு அவை் எதற்கு? பாதாதி கேச வர்ணனையாக பத்தே பாசுரங்களில் இறைக்காட்சிபெற்றுவிட்டவருக்கு எங்கும் நிறைந்த பரம் பொருள் அவர் உள்ளே புகுந்தபின்பு பழவினைக்கு அங்கு வேலை ஏது? மற்ற உலகாய்த விஷயங்கள் தான் எதற்கு?
திருக்கமலபாதம் அரை சிவந்த ஆடை எழில் வந்த திருவயிற்்று உதர பந்தம் திரு ஆரம் கண்டம் செய்யவாய் ..அந்தக்கண்கள் கரியவாகி புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப்பெரியவாய கண்களாம்!
.பெரியபெருமாளும் ஆழ்வார்திருமேனியை தீக்காப்பிடாமலும் வைதீகசடங்குகள் ஏதுமில்லாமலும் திருமேனியை அப்படியே அங்கீகரித்து அருளினார் அப்போது ஆழ்வார் பெருமான் அனைவரும் காணும்படியாக பெரிய பெருமாள் திருவடிகளில் ஐக்கியமானார்.ஆண்டாளைபோல இப்பேறு பெற்ற இந்த ஆழ்வாரின் சந்நிதியை திருவரங்கத்தில் ஆண்டாள் சந்நிதிக்கு எதிரே காணலாம்.
இதன்காரணமாக இன்றும் அரங்கநாதப்பெருமாளை சேவிப்பவர்களுக்கு ஆழ்வார் எழுந்தருளியுள்ள திருவடியிலிருந்து தீபம் ஆரம்பித்து திருமுடிவரை காட்டி சேவிக்க வைக்கப்பட்டுள்ளது இந்த நடைமுறையைத் திருவரங்கத்தில் மட்டும்காணமுடியும்.
இவ்வாறு ஆழ்வார் அரங்கனைதான் கண்ட அனுபவத்தை பத்தே பாசுரங்களில் பாடிக்காட்டுகிறார் சகலவேத சாரமான ஓங்காரத்தில் அடங்கி உள்ள அகாரம் உகாரம் மகாரம் ஆகிய மூன்று எழுத்துக்களைக்கொண்டு முதல்மூன்று பாசுரங்களில் தொடங்குவதால் இப்பிரபந்தம் ஓங்காரத்தின் சாரமானது என்று ஆழ்வாரே உணர்த்துகிறார். நாம் பற்ற வேண்டியது எம் பெருமானின் பாதுகையே என்பதை ஐந்து ஆறு ஏழாவது பாசுரங்களில் முதல் எழுத்துக்களில் உணர்த்துகிறார்
காண்பனவும் உரைப்பனவும் மற்றொன்றிக்
கண்ணனையே கண்டுரைத்த கடிய காதல்
பாண்பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும்
பழமறையின் பொருள் என்று பரவுமின்கள்
என்று சுவாமி தேசிகரும் போற்றுகிறார்.






பாரமாய பழவினை பற்றறுத்து* என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்*
கோரமாதவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்தம்மான்* திரு
வாரமார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே
திருப்பாணாழ்வார்


3 comments:

  1. விளக்கங்களுக்கு நன்றி... பகிர்வு சிறப்பு...

    ReplyDelete

  2. ஆழ்வாரின் பக்திப்பரவசம்
    அடியேனைக் கரைய வைத்தது.
    கண்களைக் குளமாக்கியது.

    இன்னமும் தொடரவேண்டும்
    ஆழ்வார்களின் வரலாறே
    அரங்கனின் பெருமையைச் சொல்லுமே

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  3. என் அமுதினைக் கண்ட கண்கள்
    மற்றொன்டினைக் காணாவே

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.