Social Icons

Pages

Tuesday, May 28, 2013

கோடை தந்த கொடை!

கோடையில்  நாலுநாள் வெளியூர் சென்றே ஆகவேண்டிய கட்டாயம். என்னதான்  கல்யாண சாவு என்று வயதான அந்தப்பெண்மணி  இறந்துபோனதை சொன்னாலும் துக்கவீட்டில் கலகலப்பாய் பேசக்கூடாது என்று வாயைக்கட்டிப்போட்டுக்கொண்டபோது  அந்த வீட்டின்பரணிலிருந்து பழையபுத்தக வாசனை வீசியது!
 
 ஆர்வமாய்  விழிகளை  நிமிர்த்தி , உயர(கவனிங்க உயர் இல்ல  உயர:):)வகைப்பெண்குலமாதலால் அதிக சிரமமில்லாமல் எட்டிப்பார்த்தபோது அங்கே கட்டுக்கட்டாய்  பழையபுத்தகங்கள் தூசிப்போர்வையில்  மூச்சுவிட சிரமப்பட்டுக்கொண்டிருப்பதைக்காண முடிந்தது.
 
“எல்லாம்  இந்தவீட்டுப்பெரியவங்க அந்த நாளில்(அதாவது19 70வருஷம் முதல்) வாங்கிப்படித்தபழைய  புத்தகங்கள் பத்திரிகைகள்... எல்லாத்தியும் பேப்பர்க்காரனுக்குப்போடலாம்னா அதுக்கு வேளையே வரலை.. வீடு மாத்தறபோது தூக்கிக்கடாசணும்” என்றாள் அந்தவீட்டு மருமகள்.
 
ஐயொ என பதட்டமாய் அலறியே விட்டேன்... ‘ஒரு பார்வை நான் அவைகளைப்பார்க்கலாமா?’ என்று கேட்டவுடன் அனுமதி கிடைத்தவுடன்  தூசிக்கட்டை இறக்கித்தட்டி போத்தீசின் புதிய டிசைன் பட்டுப்படவையை பார்க்கும் சேலைப்ரியாக்கள்  போல பரவசமானேன்.
 
 
பொக்கிஷங்கள் எல்லாம்  உயர்ந்த இடத்தில்  தான் இருக்கின்றன என்பது எவ்வளவு உண்மை!
 
ஏகப்பட்ட  ரீடர்ஸ் டைஜஸ்ட்கள்  நடுவில்  , விகடன், கல்கி இதழ்களின்  பழைய  சிக்  வடிவம்!முதசுரபியும் கலைமகளும்  தூசி படிந்து  சற்றே நைந்துமிருக்க  ரகசியமாய்  காதல் என்ற பத்திரிகை  ஒன்று எட்டிப்பார்த்தது !
 
காதலை நகர்த்திவிட்டு.....
 
எட்டு தும்மலுடன்  நாலைந்து   இதழ்கள்  தேறினதை எடுத்துக்கொண்டு நன்றி சொன்னேன்
 
 
தமிழில் சொல் இன்பம் என்று நீதிபதி மகராஜன்  அவர்கள் எழுதி இருக்கிறார்  பாருங்கள்   ஆஹா  யாம் பெற்ற இன்பம்  இணையலோகமும்  பெறவேண்டுமல்லவா?
 
 
 
 அதாவது  கவிஞர்கள் உலக அனுபவங்களைத் தாயன்போடும் பரிவோடும் அனுபவித்து அவற்றைத் தமதாக்கிக்கொண்டு பின் தம் அபாரமான சொல்லாற்றலால் கவிதையாக்கி அவற்றை எடுத்துச்சொல்லும் போது  சொல் இன்பம் நமக்குக்கிடைக்கிறதாம்!
..
 
கோழி முட்டையிடுகிறது முட்டையை உடனே உடைத்துப்பார்த்தால் வெறும் தண்ணீர் போலத்தான் இருக்கும்  உள்ளே இருப்பதை 21 நாட்கள் எச்சரிக்கையோடு அடை காத்துக்குஞ்சு பொரிக்கிறது கோழி. அந்த 21நாட்களும்  ஓர் அற்புத நாடகம் நடக்கும். ஒருபக்கத்தில் உள்ள  நீர் அணுக்கள் மஞ்சள் நிறஅலகாகவும் வேறொரு பக்கத்தில் உள்ள அணுக்கள் சிவப்புநிறக்கால்களாகவும் மற்ற அணுக்கள் கோழிக்குஞ்சின் உடம்பாகவும் மெல்ல மெல்ல மாறிக்கொண்டே வரும். கடைசியில் கோழிக்குஞ்சு முட்டையை உடைத்துக்கொண்டு வெளியே வருகிறதாம்,,தூணைப்பிளந்துகொண்டு நரசிம்மம்  வந்ததுபோல!
 
இது  போலத்தான் ஒரு உண்மையான கவிஞனின் இதயத்திலே ஓர் உணர்ச்சி மிக்க கருத்து கருத்தரிக்கிறது சூல் கொண்ட நேரத்தில் அருவ நிலையில் இருக்கிறது. கவிஞன் அதை அடைகாத்துக்கொண்டே இருக்கிறான். சூடு ஏற ஏற கவிக்கரு நுண்ணுருவம்  பெறுகிறது. சொல்லுருவம் அடைகிறது. இப்படியாக முட்டைக்குள் நடந்த அற்புத நாடகம் கவிஞனின் இதயத்திற்குள் நடககிறது.
 
 
தமிழ்நாட்டின் ஆறுகளின் பெயர்களை சொல்லச்சொன்னால் பலசரக்குக்கடைப்பட்டியலைப்போல இருக்கும்.  பாரதிபோன்ற கவிஞர்கள் இவற்றை  வரிசைப்படுத்தும்போது எத்தனை அழகாய்  வருகிறது பாருங்கள்!
 
காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
      கண்டதோர் வையை பொருனைநதி-என
மேவி யாறு பலவோடத்-திரு
      மேனி செழித்த தமிழ்நாடு
 
 
நாம் தமிழ் நாட்டை நிலப்பரப்பாகப்பார்க்கி்றோம்    ஆறுகளை நீர்ப்பரப்புகளாய்ப்பார்க்கிறோம் ஆனால் கவிஞனின் பார்வையில்  தமிழ்நாடு என்பது திருமேனியாம்!ஆறுகளால் அது  செழித்துள்ளதாம்! உள்ளத்திலே இருந்த இன்பம் சொல்லிலே  பாய்ந்து ஆறுகளை  வரிசைப்படுத்தி நிறுத்துகிறது!
 
 
 

  மஞ்சுமஞ் சுங்கைப் பரராச சேகர மன்னன் வெற்பில்
பஞ்சுமஞ் சும்பதப் பாவைநல் லாய்படை வேள் பகழி
அஞ்சுமஞ் சுங்கய லஞ்சுமஞ் சுங்கட லஞ்சுமஞ்சும்
நஞ்சுமஞ் சும்வெற்றி வேலோ வுமது நயனங்களே
 
 
இந்தப்பாடலை யாரும் கேள்விப்பட்டதுண்டா? மஞ்சு  பஞ்சு அஞ்சு நஞ்சு முதலிய  மென்மையான  ஒலிகளைப்பாடலில்  தூவிவிட்டுச் சொல்  இன்பத்தை  உண்டாக்குகிறார்  ஒரு கவிஞர்.(பாடலுக்கு அர்த்தம்  ஜீவ்சு சொல்லுவார்)
 
சொல்லிலே இருக்கும் பொருள்  வேதனையைக்கொடுப்பதாக இருந்தாலும் கவிச்சொல்லின் ஒலி அந்த வேதனையையும் மாற்றிக்கேட்பவர்களுடைய இதயத்திலே இன்பத்தையே   கொடுக்கிறது. Beneditto Croce என்ற இத்தாலிய அழகியல் புலவர் ,’There is nothing like aesthetic pain' என்று சொன்னார். அதாவது வேதனையான பொருளைக்கூட கலைஞன் தன்  கலைத்திறனால் ஆனந்தத்தைக் கொடுக்கும் முறையிலே சொல்லிவிடுகிறான். இன்பத்தைக்கொடுக்கும் நிகழ்ச்சியை  கலைத்திறமை இல்லையெனில் துன்பத்தைக்கொடுக்கும் முறையில் சொல்லிவிடலாம்.
 
 
இங்கே ஔவையார் பாட்டு யாருக்காவது நினைவுக்கு வருகிறதா?பாண்டியன் கல்யாணத்தில் தான் பட்ட பாட்டை   அதாவது தொல்லையை சொல் இன்பத்தோடு நமக்குப்பரிமாறும்  பாடல் அது!

15 comments:

  1. தமிழின் பல்சுவைகளை ரசித்தேன்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. இங்கே ஔவையார் பாட்டு யாருக்காவது நினைவுக்கு வருகிறதா?//


    ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
    இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
    என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
    உன்னோடு வாழ்தல் அரிது.

    ReplyDelete
    Replies
    1. ூஹும் இந்தப்பாட்டு இல்ல கண்டுபிடிங்க இராஜேஸ்வரி ..க்ளூதரட்டுமா?

      Delete
  3. //There is nothing like aesthetic pain' //

    அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் அந்த வலியின் இன்பம் புரியும்

    கீட்ஸ் , ஷெல்லி, டி.எஸ். எலியட். ஆங்கிலத்தில்
    மகாதேவி வர்மா இந்தியில், ஹர வம்ப்ச ராய் பச்சன் ( அமிதாப் பச்சன் அவர்கள் தந்தை )
    முகம்மது இக்பால் உருதுவில்,
    ஜெயதேவர் வடமொழியில்
    படித்துக்கொண்டே இருக்கலாம்
    சுப்பு தாத்தா
    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுப்பு தாத்தா வலியின் இன்பத்துக்கு வாசித்த அ்றிஞர்கள்பெயரையும் அளித்துவிட்டீர்கள் உண்மைதான் நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

      Delete
  4. // பொக்கிஷங்கள் எல்லாம் உயர்ந்த இடத்தில் தான் இருக்கின்றன என்பது எவ்வளவு உண்மை! //

    பழைய புத்தகங்களின் அருமை நிறையபேருக்கு தெரிவதில்லை.
    கோடையில் வீசிய குளிர் தென்றலாய் வந்த இலக்கியச் சுவையாக இருந்தது உங்கள் பதிவு..


    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு தமிழ் இளங்கோ

      Delete
  5. நிச்சயம் பொக்கிஷங்கள் தான்.....

    சிறப்பான பகிர்வு. நன்றி ஷைலஜா ஜி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வெங்கட் நாகராஜ் ஜீ!

      Delete
  6. நன்றி தி தனபாலன்

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. துக்கத்துக்குச் சென்ற இடத்தில் பழம்பொக்கிஷங்களைக் கண்டறிந்ததோடு அவற்றை எங்களோடும் பகிர்ந்துகொள்வதற்கு நன்றி. சொல்லின்பம் சாற்றும் கவிதையின்பத்தில் திளைத்தேன்.

    பாண்டியன் திருமணத்தில் ஔவையார் விருந்து உண்ணவில்லையாம்...ஆனால் நமக்கு பாவிருந்து படைத்துவிட்டார்.

    வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்(து)
    உண்ட பெருக்கம் உரைக்கக்கேள் – அண்டி
    நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியி னாலே
    சுருக்குண்டேன் சோறுண் டிலேன்.

    ReplyDelete
    Replies
    1. சபாஷ் கீதமஞ்சரி! கருத்துக்கும் நன்றி

      கம்பரைக்கொண்டுவருகிறார் நீதிபதி அதையும் பாருங்களேன் இங்கே...













      நீதிபதி மகராஜன் மேலும் தொடர்கிறார்..



      அந்தப்புரத்தில்தசரதனோடு மன்றாடி வரங்களைப்பெற்றுவிடுகிறாள் கைகேயி.

      சுமந்திரனை அனுப்பி இராமனை அழைத்துவரச்சொல்லுகிறாள். சுமந்திரனுக்கோ அல்லது அயோத்தி மக்களுக்கோ அந்தப்புரத்தில் நடந்த நாடகமும் அதன் முடிவும் தெரியாது. ராமனைத்தேரில் அழைத்து வருகிறான் சுமந்திரன்.



      தெருவில் உள்ள மக்கள் ராமனிடத்தில் அன்பு நிறைந்தவர்கள் அவர்கள் ராமனுக்கு பட்டாபிஷேகம் ஆகப்போகிறது என்று கண்ணாரக்கண்டு உருகி நிற்கிறார்கள். ராமனைக்காட்டுக்கு அனுப்பபோகிறாள் கைகேயி என்று கம்பனைப்படிக்கிற நமக்குத்தெரியும். நம்மைப்பார்த்தல்லவா பாடுகிறார் கம்பர் அயோத்தி மக்களைப் பார்த்து அல்ல.



      பாடல் இதுதான்.




      மின் பொருவு தேரின் மிசை

      வீரன் வரு போழ்தில்,

      தன் பொரு இல் கன்று

      தனி தாவி வரல் கண்டு, ஆங்கு

      அன்பு உருகு சிந்தையொடும்

      ஆ உருகுமாபோல்

      என்பு உருகி நெஞ்சு உருகி


      நஞ்சு உருகி நிற்பார்



      பாட்டை மொத்தமாகப் படிக்கும் போது உருகு என்ற சொல் மாத்திரம் அல்ல பக்கத்திலே ் துணையாக நிற்கின்ற ‘மின்பொருவு’ ‘தன் பொருளில்’ போன்ற சொற்கள் கூடப் பொருளை இழந்துவிட்டு உருகவும் நம்மை உருக்கவும் செய்கின்றன அல்லவா?

      Delete
  9. நிஜம்ம்ம்மா... அந்த உண்டேன் உண்டேன் எனக்குத் தெரியும். என்னத்தப் பண்ண.. கொஞ்சம் லேட்டா தலையக் காட்டினதால ‌தோழி கீதா என்னை முந்திட்டாங்க. (இனி சுறுசுறுப்பா இருந்துருடா கைப்புள்ள!) தமிழமுதம் பருகப் பருக இனிமைக்கா!

    சமீபத்துல எனக்கும் இதுபோல ஒரு பொக்கிஷம் கிடைச்சது. அதைப் பகிரலாம்னு இதைப் படிச்சதும் தோணுது. ‌ஐடியா தந்ததுக்கு ஒரு ஸ்பெஷல் மைசூர் பா தர்றேன் உங்களுக்கு!

    ReplyDelete
    Replies
    1. பெர்த்டே பாய் வருக! பயங்கர பிசி ஆச்சே தம்பி வந்து கருத்து சொன்னதுக்கு மிக்க நன்றி ஆனா அதுக்காக திருநெல்வேலிக்கே அல்வாவா எனக்கே மைபாவா ஓவரா இல்ல?:)

      Delete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.