உயிர்களிடத்து அன்பு வேண்டும் .
ஷைலஜா
வாஷிங்டனிலிருந்து வந்து இறங்கி முழுதாக ஒரு நாள் கூட ஆகவில்லை. ஸ்ரீதரனுக்காக காத்திருந்த முதல் அதிர்ச்சியான விஷயம், அவர் அனுமதி இல்லாமல் மகன் கிரீஷ் அவருடைய வீட்டை விற்றதுதான்.
‘பையன் பெயருக்குத் தானே உரிமைப் பத்திரம் தருகிறோம், தன்னை மீறியோ,கேட்காமலோ என்ன செய்யப் போகிறான் என்று நினைத்தது எத்தனை விபரீதமாக முடிந்துவிட்டது?’
விற்று வந்த பணம் அத்தனையையும் அவருடைய வங்கிக் கணக்கில் தான் செலுத்தியிருந்தான். மொத்தமாக மூன்று கோடி ரூபாய். வங்கிக் கணக்குப் புத்தகத்தில் பதிவாகி இருந்தது. வாழ் நாளில் ஒன்றுக்குப் பின் இத்தனை பூஜ்யங்களை அவர் இது வரை பார்த்ததேயில்லை. அதற்கு அவசியமும் நேர்ந்ததில்லை.
யாருக்கு வேண்டும் லட்சமும், கோடியும்?
தியாகராய நகரின் உயிர் நாடியான உஸ்மான் ரோடில் அமைந்திருந்த வீடு அது. ஐம்பது வருடங்கள் முன்பு சென்னை வந்த புதிதில் வாங்கிய நிலம். அந்த காலத்தில் இருபத்தி ஐந்தாயிரம் கொடுத்து அந்த நிலத்தை வாங்க அவர் பட்ட பாடு அவருக்குத் தான் தெரியும். அப்போதே தி. நகர் என்றால் குதிரைக் கொம்பு தான்.
அந்த வீட்டுக்குப் போன பிறகு தான் கிரீஷ் பிறந்தான். மகள் திவ்யா பிறந்தாள். அவர்களின் படிப்பு அபாரமாகமாக அமைந்தது. இப்போது கிரீஷ் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் பொது மேலாளர். கை நிறைய சம்பளம். திவ்யா படிப்பு முடிந்தவுடன் திருமணமாகி அமெரிக்காவில் குடியேறிவிட்டாள். சுங்கத் துறை அதிகாரியாக சேர்ந்த ஸ்ரீதரனுக்கு வேகமான முன்னேற்றமும், உத்தியோக உயர்வும் கிடைத்தது. அவர் ஓய்வு பெறும்போது கமிஷனர் பதவியில் இருந்தார். அது தான் அந்தத் துறையில் உயர்ந்த பதவி.
ஒருவனுடைய படிப்பும், பதவியும் அவனுடைய பூர்வ ஜன்ம பாவ புண்ணியத்திற்கேற்ப அமைகின்ற விஷயம். அதற்கும் வீட்டு அமைப்புக்கும் முடிச்சு போட்டுப் பார்க்கக் கூடாது. வாஸ்து மாற்றத்தால் முன்னேற்றம் என்பது காக்காய் உட்கார பணம் பழம் விழுந்தது என்பார்களே, அந்தக் கதை தான் ஸ்ரீதரனைப் பொறுத்த மட்டில். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இதெல்லாம் ஒரு பொருட்டு அல்ல ஸ்ரீதரனுக்கு.
அவருக்கு நேர்ந்த பேரிழப்பு என்றால் அது அந்த வீட்டின் பின்னே இருந்த தோட்டம் தான். ஒரு மாமரமும், கொய்யா மரமும் நன்கு உயர வளர்ந்திருந்தன. ஸ்ரீரங்கம் தாத்தாச்சாரியார் தோப்பிலிருந்து கன்று வாங்கி வந்து நட்டது. ‘இமாம் பசந்த்’ ஜாதி. தமிழில் முக்கனிகளில் மாவிற்கு முதலிடம். ஆஃப்கானிஸ்தானிலிருந்துதான் மாங்கன்று முதலில் நம் நாட்டுக்கு வந்ததாம். பலாவையும் வாழையையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்துக் கொண்டது மாம்பழம். வந்தாரை வாழ வைக்கும் தமிழ். வருஷத்தில் எட்டு மாதம் காயும், பழமும் காய்த்துக் குலுங்கும் மரம். அடர்ந்த மற்றும் வெளிறிய இளம்பச்சை இலைகளின் இடையே மஞ்சள், சிவப்பு, சற்று ஊதா நிறத்தில் தொங்கும் கணக்கில்லாத மாம்பழங்கள் பார்ப்பதற்கே கொள்ளை அழகு. அந்த மரத்திற்கு தினமும் விருந்தாளிகளின் வரவு கணக்கில் அடங்காது. குறைந்தது ஒரு நூறு கிளிகளாவது அங்கே அமர்ந்து அந்த ‘இமாம் பசந்த்’ தை சிறிய செக்கச் சிவந்த அலகுகளினால் கொத்தித் தின்பதை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.
தோட்டத்தின் தெற்கு மூலையில் அமைந்துள்ள சிறிய ஊஞ்சலில் ஆடிக் கொண்டு அதை அனுபவிப்பது அவருடைய காலை நேர அம்சங்களில் ஒன்று.
ஆரம்ப காலத்தில் மனைவி அடிக்கடி புலம்புவாள், ‘இந்த பாழாப் போன கிளி ஒரு பழம் கூட நமக்கு விட மாட்டேன் என்கிறதே’ என்று.
ஸ்ரீதரன் அவளை ஒரு நாள் தோட்டதிற்கு அழைத்து ஊஞ்சலில் அமரச் சொல்லி கிளிகளின் அழகை வர்ணித்தார். அதற்கப்புறம் அந்த மாதிரியான புலம்பலை கேட்டதேயில்லை.
பாரதியின் குயில் பாட்டுத் தான் நினைவுக்கு வரும் அவருக்கு. பூர்வ ஜன்மத்தில் குயிலுக்கு மாடன், குரங்கன், வேந்தன் என்று மூன்று காதலர்களாம்!.
இப்போது பாரதி இருந்திருந்தால் கிளிப் பாட்டு பாடியிருப்பார். பாட்டினால் பரவசமடையச் செய்யும் அந்தக் கருங்குயிலுக்கே மூன்று காதலர்கள் என்றால் அழகான பச்சைக் கிளிக்கு மயங்கும் காதலர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.
அந்தக் கொய்யா மரத்திற்குப் பின்னும் ஒரு கதை உண்டு. அவர் அம்மாவுக்கு ரொம்ப பிடித்த பழம் கொய்யா. கடையில் ஆப்பிள், வாழை என்று எத்தனையோ பழங்கள் இருந்தாலும், அம்மாவுக்கு கொய்யா மட்டும் தான் கண்ணைப் பறிக்குமாம். கொய்யா என்றால் உயிர்
அம்மாவின் சொந்த ஊரான கரூருக்குப் பக்கத்தில் மேலப்பாளையத்திலிருந்து எடுத்து வந்த பதியன். மாமரம் குளிர் காலத்தில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளும் போது, கிளிகள் இந்த மரத்தை தஞ்சமடையும். இதிலும் காய்ப்புக்குக் குறைவில்லை.
நினைவு தெரிந்த வரை அந்த மரங்களிலிருந்து பழங்களைப் பறித்ததில்லை.
ஒரு நடை போய் பழைய வீட்டைப் பார்த்து விட்டு வரலாமென்று கிளம்பினார்.
வீடு இருந்த சுவடே தெரியவில்லை. தரை மட்டமாகியிருந்தது. மரங்களையும், அதன் விருந்தினர்களையும் இனி வரலாற்றுக் குறிப்புகளில்தான் பார்க்க முடியும்.
‘அப்பா. இப்போ நான் போட்டிருக்கிற ஒப்பந்தம் இருக்கிறதிலயே பெஸ்ட். கையில் மூணு கோடி கொடுத்து ஒரு ஃப்ளாட்டும் தருகிறான். எட்டு மாதத்தில் வீடு ரெடி ஆயிடும். இனிமேல் தனி வீடு பராமரிக்கறது கஷ்டம்’ கிரீஷின் நியாயப் படுத்த முயன்ற வார்த்தைகளும், சமாளிப்பும் இனி எந்த விதத்திலும் அவருக்கு பலன் அளிக்கப் போவதில்லை.
இடிந்த வீட்டின் சுவடுகளை வெளியே இருந்தே பார்த்துவிட்டு திரும்பினார்.
காலை வேளை பூஜைகளை முடித்துவிட்டு சோபாவில் அமர்வதற்கும், செல்வராஜ் வீட்டிற்குள் வருவதற்கும் சரியாக இருந்தது.
ஸ்ரீ பெரும்புதூரில் இருக்கும் செல்வராஜ் ஒரு நிலத் தரகர். நியாயஸ்தன். மாதா மாதம் தவறாமல் கடைசி செவ்வாய் அன்று திருப்பதி சுவாமியை தரிசிப்பது அவனுடைய முப்பது வருடப் பழக்கம். புதன் கிழமை காலையில் ஒரு லட்டு பிரசாதத்துடன் அவனைப் பார்க்கலாம். கடந்த பத்து வருடங்களாக அவன் வருகையினால் பிரசாதத்தை பெறும் பாக்கியம் அவருக்கு.
“ஐயா வணக்கம்!” செல்வராஜ் எழுந்து நின்றான்.
வழக்கம் போல லட்டு பிரசாதத்தை கொடுக்க ஸ்ரீதரன் பெற்றுக் கொண்டார்.
“ஊரிலே எல்லாரும் செளக்கியம் தானே? உற்சாகமில்லாம இருக்கிறமாதிரி தோணுதுங்க!” அகக் குறிப்பை முகக் குறிப்பிலிருந்து தெரிந்து கொண்டு பேசினான்.
“ அதெல்லாம் ஒண்ணுமில்லே செல்வராஜு.. பயணக் களைப்பு. பேத்தியைப் பிரிந்து வந்ததில் சோகம். வேறே எதுவும் இல்லை.”
ஸ்ரீதரன் சமாளித்தார்.
“வர ஞாயிற்றுக்கிழமை பொண்ணுக்கு நிச்சயம் செய்யறேன். நீங்க கண்டிப்பா வந்து ஆசீர்வாதம் பண்ணனும்” அழைப்பிதழை வழங்கினான்.
“முயற்சி செய்யறேன்”
“உங்களுக்கு நேரம் இருந்தா சொல்லுங்க. நம்ம ஊரு தண்டலம் தான். ஸ்ரீபெரும்புதூர் பக்கத்துல. அமைதியான ஊரு. நீங்க வரும்போது அழைச்சிக்கிட்டுப் போறேன். உங்க உடம்புல இருக்கிற அலுப்பு, மனசுல இருக்கிற பாரம் எல்லாம் பறந்து போயிடும்”
செல்வராஜ் தன் ஊரைப் பற்றி பெருமையாக பேசுவது கேட்பதற்கு இனிமையாகத்தான் இருந்தது.
‘நாம் தான் நகரத்தில் நம்மையே தொலைத்துவிட்டு உட்கார்ந்திருக்கிறோமே!’
ஞாயிறு காலையில் எழுந்ததும் செல்வராஜின் ஞாபகம் தான்.
அப்படி என்னதான் இருக்கு அந்த ஊரிலே?. சென்றுதான் பார்ப்போமே!
அவனுடைய அழைப்பிழதை எடுத்துக்கொண்டு தயாராகிவிட்டார்.
கார் பூவிருந்தவல்லியிலிருந்து இருபது நிமிடங்கள் தான் பிரயாணித்திருக்கும். வலது பக்கம் தண்டலம் என்ற கிராமத்துக்குள் புகுந்து செல்வராஜின் வீட்டின் முன் நின்றது.
காரிலிருந்து இறங்கிய ஸ்ரீதரனுக்கு ஆச்சரியமாக இருந்தது. சென்னைக்கு அருகில் இத்தனை அருமையான கிராமமா? எங்கு திரும்பினாலும் பசுமை. நிறைய மரங்கள். அழகான தோப்புகள். வாசலில் மாடுகள்.
இன்னமும் பரந்து விரிந்து இருந்த அந்த நிலப் பரப்பு தொழிற்சாலை, அடுக்கு மாடிகளுக்கு பலியாகாமல் பசுமையாக காட்சி அளித்தது.
நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் சென்னை திரும்ப தயாரானார்.
எதிரே ஒரு பெரிய தோப்பு அவருக்குத் தெரிந்தது. காலாற நடக்கலாம் என்று தோன்றியது. செல்வராஜுவும் கூட வந்தான்.
அருகில் சென்றதும் அவர் பிரமிப்பில் ஆழ்ந்தார். அத்தனையும் மா மரங்கள். சுமார் ஐம்பது மரங்களாவது இருக்கும்.
“உள்ளே ஒரு கயித்துக் கட்டிலிலே படுத்துக்கிட்டு அண்ணாந்து பார்த்தீங்கன்னா ரொம்ப நல்லாயிருக்கும். வித விதமான பறவைகள், அதுவும் பச்சைக் கிளிகள் வந்து உட்காரும்” செல்வராஜ் யதேட்சையாக சொன்னான்.
கிளிகள் கிளிகள் ...
ஸ்ரீதரனுக்கு தொலைந்து போன பிதுரார்ஜித சொத்து கிடைத்தது போன்ற கிளர்ச்சி.
“இதன் பரப்பளவு, விலை, யாரு இதுக்கு சொந்தக் காரன், முப்பது வருடத்துக்கு வில்லங்க சான்றிதழ், எல்லா விபரத்தோட நாளைக்கு என்னை வந்து பாரு. முன் பணம் ஒரு ஐயாயிரம் வச்சுக்கோ.” முடிவை எட்டிய மாதிரி அப்படி ஒரு வேகம் அவரது செயலில்.
ஸ்ரீதரனின் மன பாரம் மட்டும் இறங்கவில்லை. மனமே தண்டலத்தில் தஞ்சமடைந்து விட்டது.
Ithanks ILAKKIYAVEL magazine) November issue