Social Icons

Pages

Monday, November 10, 2014

வாசி வல்லீர் இந்தளூரீரே! - வாழ்ந்தே போம் நீரே!

அரங்க மாளிகைக் கருங்கடல் வண்ணனை
ஆலிமா முகிலை வாலி காலனை
இந்த ளூருறை எந்தைபெம் மானை
ஈசன் நான்முகன் வாசவன் தலைவனை
உள்ளுவார் உள்ளத் துள்ளுறை சோதியை
ஊரகம் நின்றருள் நீரகத் தடிகளை
எவ்வுள் மாயனைத் தெய்வநா யகனை
ஏர்மலி சிகரத்து நீர்மலை ஆதியை
ஐவாய் அரவில் அறிதுயில் அமலனை
ஒருகால் மொழியினும் ஒழிகுவை நெஞ்சே !
ஓதநீர் ஞாலத் துழலும்
ஔவியப் பிறப்பில் அழுந்தி வாடுவதே

பிள்ளைப்பெருமாள் ஐய்யங்கார் எழுதியதிருவரங்கக் கலம்பகத்தின் ஒரு பாடல் உயிர் எழுத்துகளின் வரிசையில் அமைந்துள்ளது. இப்பாடல் பெருமானுடைய ஐந்து நிலைகளையும் விளக்குவதாகவும் திகழ்கிறது. எளிய மொழி அமைப்பும், பொருட்செறிவும் மனதைக் கவர்வதாக உள்ளது

பாடலில் ஐவாய் அரவில் அறிதுயில் என்கிறார்  திவ்யகவி. அறிதுயில்  திருவரங்கஅரங்கனுக்கே உரியது.  அறிதுயிலுக்கு  உண்மையான பொருள்  அறிய ஆவல்.

 பாற்கடலில் பையத்துயின்ற பரமன் என்கிறாள் ஆண்டாள்.
  பைய என்றால்   மெல்ல  மெதுவாக  என்று அர்த்தம்.
பாண்டியநாட்டுமக்கள்தான் இதுக்கு சரியாக பொருள் சொல்லவேண்டும்.

 ஆனால்மயிலாடுதுறையை அடுத்த ‘திரு இந்தளூர்’ என்னும் திவ்ய தேசத்தில் ‘பரிமள அரங்கன்’  நீண்ட  நெடுந்துயில் கொண்டுள்ளான். 108 திருப்பதிகளில் 26 ஆவது திருப்பதி.

ஐந்து அரங்கத் தலங்களில் (பஞ்சரங்க) ஒன்று. (ஸ்ரீரங்கப்பட்டினம், ஸ்ரீரங்கம், கோயிலடி என்ற ஆதிரங்கம், கும்பகோணம், திரு இந்தளூர். )

இன்றைக்கு இந்தளூரில்  உற்சவத்திருநாள் அதனால் பரிமளரங்கனின் பக்கம் நாம் போகலாம்!

நல்ல ஆழ்ந்த உறக்கம்  பரிமள ரங்கனுக்கு.அதனால்தான் பாருங்கள்   108 திருத்தலங்களில் 86 தலங்களை நேரில் கண்டு பாடியவரான  திருமங்கை ஆழ்வார். இங்கும் பெருமாளைத் தரிசித்துப் பாட வரும்பொழுதில் அவரை   ஏறெடுத்தும் பார்க்கவில்லை. 

கோவிலுக்குள் அவர் நுழையும்போது வழிபாடுகள் நிறைவுற்றுக் கதவு அடைக்கப்படுகிறது! .
‘ஆழ்வாருக்கோ மிகுந்த மனவருத்தம்.சந்நிதி வாசலில் நின்றபடி  கெஞ்சிக்கொஞ்சிப்பார்க்கிறார் ரங்கனை. ரங்கன் செவி சாய்க்கவில்லை.கடைசியில் கோபத்துடன் பத்துபாடல்களைப்பாடுகிறார். அன்பும் பாசமும் கொண்டவர்களின்மீதே வரும்  தார்மீகக்கோபம்.

இந்த திவ்யதேசத்தில்  தேவரீருடைய திருமேனி என்ன நிறமுடையது எனக்கேட்கிறார்.

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம், வண்ணம் எண்ணுங்கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டும் இந்தளூரிரே/


என்று  ஆர்வமாய் விசாரிக்கிறார்.

இதிகாசங்களில் கூறியபடி க்ருதயுகத்தில்பாலின் வண்ணமாகவும் த்ரேதயுகத்தில் பொன் நிறமாகவும் துவாபரயுகத்தில் நீலமணி நிறத்துடனும் என்றைக்கும் நிலையான மேகவர்ணனாக கலியுகத்திலும் சேவை சாதிப்பீர். இங்கு எவ்வண்ணம் எனக்காண ஏங்குகிறேன் என்றார்.

பரிமளரங்கன்   சரியென  தன் திருமேனியை ஆழ்வாருக்குக்காட்டவேண்டாமோ? பெரிய மனிதர்களுக்கே உரிய  பிகு. கொஞ்சம்  அடியாரை அழவைத்து  வேடிக்கைபார்ப்பது பின் அணைத்து அருளுவதே ஆண்டவனின் வழக்கம்தானே!

ஆழ்வார்பெருமானும் பொறுமை இழந்தார்.

உமது வடிவழகைக்காட்ட மறுத்த இந்தளூர்ப்பெருமானே!
உம் திருமேனியை நீரே கட்டிக்கொண்டு வாழ்ந்திடும்  என்று  மங்களாசாசனம் செய்தார்.

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து; அடியோர்க்கு
தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு,
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான்!
வாசி வல்லீர் இந்தளூரீரே! - வாழ்ந்தே போம் நீரே!




திரைவிலகியது. தம் சயனக்கோலத்தை ஆழ்வாருக்குக்காட்டினார்  பெருமான்.
. திருமங்கை ஆழ்வாரின் அழகுத்தமிழைப் பரிமளன் பருக விரும்பியதே  அறிதுயிலின் நோக்கம்!


(பாசுரவிளக்கம் மேலும்  ஒரு  அன்பர் கூறியது இப்படி)

காசு - பொற்காசுதான்.
காசின் ஒளியில்
இந்த இடத்தில் இன் என்பது காட்டிலும் அதைவிட என்னும் பொருளில் வருவது.
காசு + இன் ஒளியில், பொன்னின் நிறத்தினும் மிக்கு ஒளிரும் உன்னுடைய வண்ணத்தைக் காட்டீர் !
எந்நிலையிலும் மாறாத மங்காத கரவாத ஒளி படைத்தது பொன். அதைக் காட்டிலும் மன்னிய ஒளி படைத்தவன். படைப்பு மாறி படைப்பு வரினும் மாறாத ஒளி. அது நித்ய விபூதியில் திகழும் ஒளியாய் இருந்தாலும் அதை இங்குத்தை சம்சார பூமியில் உள்ளவர்களுக்கு வாசியாகிய வேறுபாடு கருதாது காட்ட வேண்டித்தானே இங்கு வந்து நிற்கிறீர்! பின்னர் வந்து காண வேண்டி ஆசையுடன் வந்தால், காட்ட மறுத்தால் என்ன அர்த்தம்? அந்தத் திகழ்ச்சியை நீரே வைத்துக்கொண்டு வாழும் போம்! - என்று இறாய்க்கிறார் கலியன்.
வாசி வல்லீர் -- நித்ய விபூதி சம்சாரம் ஆகிய வித்யாசத்தைக் கடந்து வந்து நிற்க வல்லீர் 

***

4 comments:

  1. தான் அரங்கனை கண்டு தரிசிக்க முடியாத இயலாமையை எண்ணி .'வாழ்ந்தே போம் நீரே’ என்று பெருமாளிடம் கோபப்படுகிறார் ஆழ்வார். .அதீத பக்தி இருந்தால் பகவானிடம் கூட ஒரு சுவாதீனம் வந்துவிடுகிறது.அதை அவரும் விரும்புகிறார் போல தெரிகிறது.
    ரொம்ப அருமையாகவும் மெல்லிய ரசனையுடனும் எழுதியுள்ள உங்கள் இடுகை அமர்க்களம்....

    ReplyDelete
  2. துலா ஸ்நான சமயத்தில் பரிமளரங்கனின் பதிவு அருமை. நன்றி

    ReplyDelete
  3. ஸ்ரீ பார்த்தசாரதி திரு முருகானந்தம் சுரமண்யன் சகோதரர் சே குமார் ஆகியோர்க்கு நன்றி மிக

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.