Social Icons

Pages

Friday, September 18, 2015

இராவண வதம்!




கம்பகாவியத்தின் கடைசிப்பகுதி யுத்தகாண்டம்!

‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்னும்நம்மாழ்வாரின் திருவாய்மொழி பணித்த வண்ணம் இராமபிரானைக்கற்கத்தொடங்கிய கம்பன் வால்மீகியின் வழியில் இராமாயணத்தைப் பாடத்துவங்கினான். வால்மீகியை ஏற்றும் தழுவியும் சற்றே மாற்றியும் மெருகூட்டியும் கதைப்போக்கு, கற்பனை, வருணனை ,பாத்திரப்படைப்பு ,காட்சி அமைப்பு போன்றவற்றில் புதுமை செய்து பாடலானான். ஆழ்வார்களின் அருளிச்செயலில் அவன் கொண்டிருந்த ஈடுபாடு எல்லையற்றதாகவே  தோன்றுகிறது.

கம்பனின்  பிரபலமான  பாடலான ’மைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே உன்கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்கு கண்டேன்.

என்பதின்  தாக்கம்  அவன் ஆழ்ந்து நேசித்த ஆழ்வார்பெருமானின் 

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற *
பின்னைவண்ணம் கொணடல்வண்ணம் வண்ணமெண்ணுங்கால்*
பொன்னின்வண்ணம்மணியின் வண்ணம் புரையுந்திருமேனி*
இன்னவண்ணமென்றுகாட்டீர் இந்தளூரிரே!

என்கிறபாடலை நினைக்கவைக்கிறது.

 இனி யுத்தகளத்தை  பார்க்கலாம்.
. இராம- இராவண யுத்தம் ஆரம்பமாகிவிட்டது.. இராவணன்  சரமாரியாக அம்புகளை அண்ணல்மீதுவிடுகிறான். இராமரும் எதிரி தளர்ச்சி அடையும்வரை பாணங்களை செலுத்துகிறார். 

இராவணன்  தலை கடலில்  விழும்போது தேவர்கள் நிலையை கம்பன் இப்படிச்சொல்கிறான்.

குதித்தனர்  பாரிடைக்குன்று கூட்டற
மிதித்தனர் வடகமும் தூசும் வீசினர்
துதித்தனர் பாடினர் ஆடித்துள்ளினர்
மதித்தனர் இராமனை வானுளோர் எலாம்..

(வடகம்  என்றால்  மெல்லிய ஆடையாம்! தூசு-=அரையாடை)

ஒருகட்டத்தில்  இராமபாணங்களால் இராவணன் தேரில் மூர்ச்சித்து விழுந்துவிட  இராமனின் தேரோட்டி மாதலி சொல்கிறான்.”உணர்வு தெளிந்துவிட்டால் இவனை ஒன்றும் செய்யமுடியாது இதுதான் சமயம்  இப்போதே இவனை அழித்திடுங்கள் ஐயனே” என்கிறான்.

‘அது நீதியல்ல’என்கிறான் இராமன்.

உணர்வு  மீண்ட இராவணன் மறுபடி இராமரைத்தாக்குகிறான். கடைசியில் இராமன் பிரும்மாஸ்திரத்தை எடுத்து இராவணன் மார்பில் செலுத்தவும் அவன்  நிலைகுலைந்து வீழ்கிறான்.இராவண வதம் இறுதியாக  முடிவடைகிறது.

இராகவன் தன்புனித வாளி உடல்புகுந்துதடவியதால் மனச்சிறையில்  சுரந்த காதற்பித்து நீங்க அவன் முகங்கள் மாசு நீங்கி பொன்போல பொலிந்தன என்பதை கம்பன் இப்படி சொல்கிறார்.. அடங்க அடங்க என்று  வரிக்குவரி சொல்லி நம்மை வியப்பில் வாய் அடங்க(அடைக்க) வைக்கிறார்! 

வெம்மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க மனம்அடங்க வினையும் வீயத்
தெம்மடங்கப் பொருதடக்கைச் செயல் அடங்க மயல்அடங்க ஆற்றல் தேயத் தம்அடங்கு முனிவரையும் தலை அடங்க
நிலை அடங்கச் சாய்த்த நாளின்
மும்மடங்கு பொலிந்தன அம் முறைதுறந்தான்
உயிர்துறந்த முகங்கள் அம்மா.




வீரமும்சினமும் அவனுக்கு தவறாகப் பயன்பட்டமையால் அவனது மேன்மைமிகு ,அனைத்து முனிவர்களின் தலைமைத் தன்மை கொண்ட தவக் களையை அவன் முகம்இழந்திருந்ததுஇன்று அத்தனை சினமும்,வீரமும் அடங்கிப் போனதால் ,தவக் களை உயிர் பெற்று முன்ன தன் நிலை மாறி மூன்று பங்கு பொலிவுற்று இன்று காணப் படுகிறது.

இராவணன் சிரத்தைக்கொய்ததை  திருமங்கை ஆழ்வார் இப்படிச்சொல்லுவார்

 . …… இலங்கைக்கோனை
பானுநேர் சரத்தால்பனங்கனிபோலப்
பருமுடி உதிரவில் வளைத்தோன்..’

பனங்கனிபோல என்னும் உவமை அரக்கனின் பத்துதலைகளையும் கொத்தாகப்பறித்து உதிர்த்த எளிமையைக்காட்டுகிறது. ஆழ்வாரின் இந்த உவமையை அப்படியே ஏற்றுக்கொண்டு கம்பன் இடத்தைமட்டும் மாறி இருக்கிறான்,கதை மாந்தரிலும் மாற்றம் செய்திருக்கிறான்
சடாயு உயிர்நீத்த படலத்தில்  இப்படி ஒரு பாடலை கம்பன் அளிக்கிறான்.

…தத்து உற்று அயரேல்தால பலத்தினேலும்
 கொத்தப்பன கொண்டிவன் கொண்டன வெற்றி வாசை
 பத்திற்கு மின்றே பலியீவது பார்த்தியென்றான்’

.’’  அழாதே சீதை.பனப்பழங்களின் கொத்துபோல ஒரு நிரையாக அடர்ந்துள்ள இவனது பத்துதலைகளையும் நான் அறுத்து  பத்துதிக்குகளுக்கும் பலிகொடுக்கிறேன் பார் ‘என்று ஜடாயு வை பேசவைத்த சிறப்பு கம்பனுக்கே உரியது.

 ஆழ்வார்பெருமக்கள் ராவண வதத்தை புகழ்ந்து பாடினதுபோல ஆண்டாளும்
மாதலிதேர்முன்பு கோல்கொள்ள
 மாயன் இராவணன்மேல்
 சரமாரி தாய்தலை
அற்றற்று வீழத்தொடுத்த
 தலைவன் வரவெங்கும் காணேன்  
என்பதாக  குயிலைநோக்கி நாச்சியார் திருமொழியில் பாடுகிறாள்..

இராமன் இரதமிருந்துகீழிறங்கி இறந்துகிடக்கும் இராவணனைப்பார்க்கிறானாம்..

பொல்லா அரக்கனைக்கிள்ளிக்களைந்தவன் இராமன்.சினத்தினால் தென்னிலங்கைகோமானைச்செற்ற மனதுக்கினியானாகிய  இராமனுக்கு இராவணனை  வென்றமை தனக்கு சிறப்பைத்தராதென்று தோன்றுகிறதாம்! புன்சிரிப்புடன்  கூறுகிறான்.
திகைப்பாகத்தான் இருக்கிறது நமக்கு!  இராமனின் இந்த மனநிலைக்குக்காரணம் என்ன?

(

3 comments:

  1. அழகான விளக்கம்.
    அது சரி. யுத்த காண்டம் பாக்களில்
    கம்பனுக்கும் வால்மீகிக்கும், யுத்தம் முடிந்து போன நிலையில்
    ராமனின் மன நிலை குறித்து வேறு பாடுகள் உள்ளனவா என்ன?

    //ராமனின் இந்த மனநிலைக்குக்காரணம் என்ன?//
    ராமனுக்குத்தான் தெரியும் போல.
    சுப்பு தாத்தா.


    ReplyDelete
  2. வணக்கம்
    அற்புதமானவிளக்கம் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. ஆழ்வார் பெருமான் ....யார்.?

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.