Social Icons

Pages

Thursday, April 21, 2016

அண்ணிக்கும் அமுதூறும்!

நம் பாரத தேசத்தில்குப்தர்களின் காலம் பொற்காலம் என்றால்தென் பாரதத்தில் அதாவது தமிழ்கூறும் நல்லுலகில் ஆழ்வார்களின் காலம் அமுதமயமான பொற்காலம் எனலாம்.அருளிச்செயல் என்ற அமுதம் பிறந்தது இந்தக்காலத்தில்தானே!

 பைந்தமிழும் பலவளமும் நிறைந்த பாண்டியநாட்டில் திருக்கோளூர் என்னும் ஊரில்  கிபி ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்இன்றைய நாள்போன்ற சித்திரைத்திங்களில் சித்திரை நடசத்திரத்தில்திருஅவதரித்தவர்.

தமிழிலும் வடமொழியிலும் சிறந்த புலமைபெற்று தமிழில் மதுரமான   அதாவது இனிமையான கவிதைகள் பலதந்தவர் அதனாலேயே மதுரகவி என அழைக்கப்பட்டார்.
புண்ணியப்பதிகள் எனப்படும் அயோத்தி மதுரா கயா காசி காஞ்சி அவந்தி துவாரகா என  எல்லா இடங்களையும் சென்று சேவிக்கப்புறப்பட்டார். 

அயோத்திக்குவந்தவர் இராமபிரானை அர்ச்சாவதாரத்தில்  சேவித்து பின் அங்கேயே  தங்கலானார். ஒருநாள் தன் சொந்த ஊர் திருக்கோளூர் திசைநோக்கி  தென் புறமாக கை  குவித்துத்தொழுதபொழுது அங்கே வானில் ஒரு பேரொளியைக்கண்டார்  ஏதும் கிராமம்தான் தீப்பற்றி எரிகிறதோ என அஞ்சினார்.ஆனால் அந்த ஒளியின் சுடர்  இரண்டுமூன்றுநாட்களுக்கும் அப்படியே அழகுடன் பொலிந்துதெரியவும் அந்ததிசை நோக்கி ஆர்வமுடன் நடக்கலானார். நெடுவழி நடந்து ஒளி தெரிந்த திருக்குருகூரை அடைந்தார்.

அப்போது அந்த ஒளி ஊர்க்கோயிலிலுக்குள் புகுந்து  சென்றதும்மறைந்துவிட்டது
 அந்த ஊர்க்காரர்களிடம் அந்த ஊரின் சிறப்பு பற்றி விஜாரித்தார்,. புளியமரத்துப் பொந்தில் சின் முத்திரையோடு ஒருவர் எழுந்தருளியிருக்கிறார். அதுதான் விசேஷம் என்று அவ்வூர்க்காரர்கள் சொன்னதும் அந்த மரத்தினை அடைந்தார்.

ஒளிபொருந்தியதேகத்துடன்மௌனமாக இருந்த நம்மாழ்வாரைக் கண்டு ஆச்சரியப் பட்டார் மதுரகவிகள். இவருக்குக் கண் பார்வை உண்டா, காது கேட்குமா என்று கண்டுபிடிக்க ஒரு பாறாங்கல்லைத் தூக்கிக் கீழே போட்டார். ''செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?'' என்று கேட்டார் மதுரகவியார். 

''அத்தைத் தின்று அங்கே கிடக்கும்'' என்றார் ஆழ்வார் (இந்த விவரம் நம்மாழ்வார் சரிதத்தில் வருகிறது)
விடையில் இரு தத்துவம் புதைந்துள்ளது. செத்ததின், அதாவது உயிர் இல்லாத இவ்வுடம்பில், ஜீவன் என்னும் சிறியது பிறந்தால், பாவ புண்ணியங்களின் பயன்களை நுகர்வதே அதற்கு வாழ்க்கையாக இருக்கும். தன்னை பற்றிய அறிவு, பரமாத்வான திருமாலை பற்றிய அறிவற்ற ஜீவனுக்கு, பரமாத்மாவை பற்றிய அறிவு ஏற்பட்டால், அதைக்கொண்டே பக்தி வளரும்.பதிலின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்ட மதுரகவிகள், நம்மாழ்வாரின் மேதாவிலாசத்தை புரிந்துக்கொண்டு அவரின் சீடரானார்.
 1. மதுரகவியாழ்வாருக்கு நம்மாழ்வாரின் பாசுரங்களில் பற்று ஏற்பட்டது.  மாலைப்பாடி வந்த மதுரகவியார் நம்மாழ்வாரையே பதினோரு பாசுரங்களால் ஆன பாமாலை ஒன்றால் பாடித்துதித்தார். அப் பாமாலையின் முதற்பா ''கண்ணிநுண்சிறுத்தாம்பு'' எனத்  தொடங்குவதால்  அதற்குக்  'கண்ணிநுண்சிறுத்தாம்பு'   என்பதே  பெயராயிற்று
(இந்த கண்ணி நுண் சிறுத்தாம்பு எனத்தொடங்கும் 11 பாடல்களை பல்லாயிரம்முறை  தியானித்து நம்மாழ்வாரை தரிசித்து நாலாயிரம்தமிழ்ப்பாசுர ரத்தினங்களை பிற்காலத்தில் நாதமுனிகள் மீட்டது  தனிக்கதை)(காணாமல்போன பொருள் கிடைக்க இப்பாசுரம் சொல்வது பல இல்லங்களில் இன்றும் வழக்கம்)
 1. .கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
  பண்ணிய பெருமாயன் என் அப்பனில்
  நண்ணித்தென் குருகூர் நம்பி என்றக்கால்
  அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே.
அண்ணிக்கும்  என்றால் தித்திக்கும்... கண்ணிகள் கொண்ட சிறு தாம்பக்கயிறினால்  கட்டப்பண்ணிக்கொண்ட பெருமாயனான  கண்ணனைவிடவும்  விரும்பி  தென்குருகூர் நம்பி என்னும் நம்மாழ்வார் என்று சொல்லும்போது  நாவில்  தித்திப்பாகும் அமுது ஊறுமாம்! அண்ணலைவிடவும் ஆச்சார்யன்(குரு) உயர்வானவர் என்று மதுரகவி  பாடும் இந்த 11பாடல்களின் சிறப்பு  சொல்லிமாளாது இவற்றை 10000முறை சொன்னால் நேரில் நம்மாழ்வார் சேவை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
.
 நம்மாழ்வாரிடமிருந்து பலவற்றையும் அறிந்துகொண்டு அவரையே துணைவராகக் கொண்டு அவருடைய புகழையே பாடி வந்தார். நம்மாழ்வார் திருநாடு அலங்கரித்த பின்னர், அவருடைய அர்ச்சை வடிவ உருவத்தைத் திருக்குருகூர் நகரில் எழுந்தருளச் செய்து போற்றி வந்தார்.

நம்மாழ்வாரின் பெருமை வானளவா கடலளவா எனில் அதனினும் பெரிது எனலாம்.

 வேதங்கள் நான்கு  நம்மாழ்வார் அருளிச்செய்த தமிழ்பிரபந்தங்கள் நான்கு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேதத்திற்கு சமமானது.
 திருவிருத்தம்....ரிக்வேத சாரம்
திருவாசிரியம்...யஜுர்வேதசாரம்
பெரியதிருவந்தாதி.,,,அதர்வ வேதசாரம்
திருவாய்மொழி...ஸாமவேத சாரம்

இதில் ஸாமவேதசாரமான திருவாய்மொழிக்கு தனிப்பெருமை உண்டு.’வேதாநாம் ஸாமவேதோஸ்மி’ வேதங்களில் நான் ஸாமவேதமாக இருக்கிறேன் என்பதுதானே கண்ணனின் கீதோபதேசம்!


மற்றபிரபந்தங்களை பெருமாள் திருவீதி எழுந்தருளும்போது சேவிக்கலாம் ஆனால் திருவாய்மொழி பெருமாள் முன்பு அதாவது ஆஸ்தானத்தில் மட்டுமே ஸேவிக்கப்படவேண்டும்.

வேதங்கள் என்னும்கரும்பினை சுவைப்பது நம்மில் பலருக்கு இயலாத ஒன்று எனவேதான் வேதங்களின் சாரத்தை செந்தமிழில் அழகான பாசுரங்களாக கொடுத்துள்ளனர் ஆழ்வார்பெருமக்கள். ஆழ்வார்களின் அருளிச்செயல்களை தினமும்  ஆராதிக்கும்போது ‘தமிழ்மறையோன்’என்று அறிமுகப்படுத்திக்கொள்வதில் தனக்குப்பெருமை என்கிறார் சுவாமிதேசிகனும்.

இப்படி ஒரு ஆழ்வாரின் பெருமையை உலகறியச்செய்தவர் மதுரகவிஆழ்வார்தான்.மதுரகவியார்,  நம்மாழ்வாருக்கு நித்திய ஆராதன விழாக்களையெல்லாம் சிறப்புற நடத்தி வந்தார். அத்திரு விழாக்களில் ’வேதம் தமிழ் செய்த மாறன் வந்தார்;  திருமாலுக்குரிய தெய்வப் புலவர் வந்தார்;  அளவிலா ஞானத்து ஆசிரியர் வந்தார்’ என்பவை முதலாகப் பல விருதுகளைக் கூறித் திருச்சின்னம் முழங்கினார். 

இதைக்கேள்விப்பட்ட மதுரைச்சங்கத்தார்,
''உங்கள் ஆழ்வார் பக்தரே அன்றி பகவானல்லரே. இவர் சங்கமேறிய புலவரோ? இவர் பாடிய திருவாய்மொழி சங்கமேறிய செய்யுளன்று. இவரை வேதம் தமிழ் செய்தவர் என்று புகழ்வதும் தகுமோ?'' என்று பலவாறு பேசி விருதுகளைத் தடுத்துரைத்தனர்.

அதற்கு மதுரகவிகள் மனம் பொறாமல் வருந்தி,  ''இவர்களின் கர்வம் பங்கமாகும்படி தேவரீர் செய்தருள வேண்டும்'' என்று நம்மாழ்வாரைத் துதித்தார்.

நம்மாழ்வாரும் ஒரு கிழப்  பார்ப்பனர் வடிவம் ஏந்தி வந்து,  திருவாய்மொழியில் 'கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே' என்ற பாசுரத்தின் முதலடியை ஒரு சிற்றேட்டில் எழுதிக்கொண்டு சென்று,  சங்கப் பலகையின் மீது வைத்தால் அவர்கள் செருக்கு அடங்கும் என்று கூறியருளினார். 
அவ்வாறே மதுரகவியும் நம்மாழ்வாரின் கண்ணன் கழலிணை பாசுரத்தை எழுதிய ஏட்டை எடுத்துக்கொண்டு மதுரைச் சங்கம் போய்ச் சேர்ந்தார். அங்கு சங்கப் பலகையில் ஒரு முனையில் கண்ணன் கழலிணை பாசுரம் எழுதி வைத்த நறுக்கு ஓலை வைக்கப்பட்டது.  மறுமுனையில் புலவர்கள் ஏறி அமர்ந்தனர். அந்த அளவில், சங்கப் பலகையானது, பொற்றாமரைப் பொய்கையில் மூழ்கி, தன் மேலிருந்த புலவர்களையெல்லாம் நீரில் வீழ்த்தி, உடனே மேலெழுந்து தன்மீது வைத்த சிறு முறியை மாத்திரம் ஏந்திக் கொண்டு மிதந்தது.

அப்போது நீரில் விழுந்து தடுமாறி எழுந்து, மெல்ல நீந்திக் கரை சேர்ந்த சங்கப் புலவர்கள், வேதம், வேதத்தின் முடிவுப் பொருட்கள் முதலான யாவற்றையும் பிறரால் கற்பிக்கப்படாமல் தாமேயுணர்ந்த நம்மாழ்வாரது இறைமை எழில் பொருந்திய திறனைத் தெரிந்துகொண்டு செருக்கு அழிந்தனர்.
சங்கப்புலவர்கள் நம்மாழ்வாரது பெருமையைக்குறித்து தோத்திரமாக  பாடல்கள் பாடிவெளியிட்டனர்.

...சேமங்குருகையோ செய்யதிருப் பாற்கடலோ
நாமம் பராங்குசமோ நாரணமோதாமந்
துளவமோ வகுளமோ தோளிரண்டோ நான்கும்
உளவோ பெரும உமக்கு...

என்ற இப்பாடல்வடிவாக  ஆழ்வாரின் தெய்வத்திரு உருவைப்போற்றி வியந்தனர்.
தமது குரும் தெய்வமுமான நம்மாழ்வாரை  குற்றம் சொல்லியவர்களை  நோக்கி மதுரகவி இப்படிப்பாடினார்

ஈயாடுவதோ கருடர்க்கெதிரே !
இரவிக்கெதிர் மின்மினி ஆடுவதோ !
நாயாடுவதோ நரகேசரி முன் ?
அழகூர்வசி முன் பேயாடுவதோ !
பெருமான் வகுளாபரணன் அருள்
கூர்ந்தோவாதுரை ஆயிரா மாமறையின்
ஒருசொற் பொருமோ உலகிற்கவியே !
  பிறகு மதுரகவியாழ்வாருடன் சேர்ந்து சங்கத்தாரும்நம்மாழ்வாரின் விருது கூறல் முதலியவற்றை முன்னிலும் சிறப்பாக நடத்தி வந்தனர்.

தொடர்ந்து, மதுரகவியாழ்வார் தமது குருவாகிய நம்மாழ்வாருக்கு பலவகை விழாக்களையும் ஆராதனைகளையும் நடத்தி வந்ததோடு, ஆழ்வாரது அருந்தமிழ் மறைகளின் பொருட்களைப் பலரும் உணரும்படி உரைத்து சிலகாலம் எழுந்தருளியிருந்தார்.  சில காலத்துக்குப் பின்பு பேரின்பப் பெருவீட்டை அடைந்தார்.


மதுரகவிகளை ஆழ்வார்கள் வரிசையில் சேர்த்துக் கொள்வதற்கு முக்கியக் காரணம், அவர் நம்மாழ்வாரின் பிரதம சீடராக இருந்து திருவாய்மொழியை நெறிப்படுத்தினார் என்பதோடு, அதைப் பரப்பி ஒழுங்காகப் பாராயணம் செய்ய ஏற்பாடுகளும் செய்தார் என்பதனால்தான்!

மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் !

2 comments:

 1. ரொம்ப அருமையான பதிவு .அதுவும் மதுரகவியாழ்வாரின் திருநக்ஷத்திர நன்னாளில் அவரை பற்றி கூறியும் அன்னாரின் குரு நம்மாழ்வாரின் பெருமையையும் சிறப்பினையும் அற்புதமாக எழுதி எங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி கேபி சார்... தங்களின் தவறாத வருகையும் மேலான கருத்தும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன

   Delete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.