Social Icons

Pages

Saturday, February 20, 2016

உள்ளத்தால் வள்ளல்தான்!

இரண்டுநாட்கள்முன்பு(18.2 2016) ஓர் இனிய மாலைநேரத்தில் நாரதகானசபாவில் தமிழ்நாடுகண்ட மாபெரும்கவிஞனைப்போற்றிய சிறந்த ஒரு  நிகழ்ச்சிநடைபெற்றது.





 தஞ்சைவாழ் தமிழ்க்கவிஞர், வழக்கறிஞராய் பணிபுரிந்தவர் , சைவத்திருமுறை  பெரியபுராணம்  என  பலதமிழ் நூல்களில் கரைகண்டவர் ,ஆங்கிலப்புலமை மிக்கவர், சேக்கிழார் அடிப்பொடி என்னும்  திரு டி என் ராமசந்திரன் அவர்கள்  தலைமையில்   நிகழ்ச்சிநடந்தது..டி என் ஆர்  அவர்கள்  பேச்சு கவிஞரின் நினைவலைகளைப்புரட்டிப்போட்டது. அப்படியே மெய்மறந்துபோனோம் எனில் அதுதான் உண்மை. 
.நடிகை ரோஹிணி பாரதிபுத்திரன் சிறப்பு பேச்சாளர்களாக  அருமையாகபேசினார்கள்.
.பார்வையாளர்கள் வரிசையில் பல பிரபலங்கள் பாரதிபாஸ்கர், மறவன்புலவு சச்சிதானந்தம்  நடிகை சொர்ணமால்யா மேலும் பல கவிஞர்கள் எழுத்தாளர்கள் என  அரங்கி நிரம்பிவழிந்து திக்குமுக்காடியது!



தமிழகம்கண்ட அந்தக்கவிஞர் யாராக இருக்கும்?

அகத்தியமுனிபோன்ற உருவம்! விவேகானந்தரைப்போன்ற தீட்சண்ய விழிகள்!பளிச்சென்று குங்குமப் பொட்டு!  . சிறந்த மேடைப் பேச்சாளர்,  "சிவாஜி' இதழின் ஆசிரியர். அவருடைய "சித்தார்த்தன்' மொழிபெயர்ப்பு சிறப்பு மிக்கது. பாரதி புகழ் பாடியும் பரப்பியும் பாரதி கவிதைகளை மேடையில் உணர்வுடன் பாடியும் பாரதிப் பித்தராக பக்தராக விளங்கியவர்.  கவிஞரின் கணீர் குரலில் நேரிடையாகப் பாஞ்சாலி சபத காவியத்தைக் கேட்க கொடுத்து வைத்தவர்கள் பெரும் புண்ணியம் செய்தவர்கள். 


கவிஞரின்  நான்குபுதல்வர்களில்  மூவருடன் நான்!


 இவர்தாம் மகாகவிபாரதியாரின்  மனைவியின் கடைசிகாலத்தை கவனித்துக்கொண்டவர் அந்ததாயின் சிரம்  இந்தக்கவிஞரின் மடியில்தான்  தன் கடைசிமூச்சினை விட்டது, மாபெரும் கவிஞனின் மனையாளின் இறுதிக்காலம்  பாரதியின் ஆன்மீகப்புத்திரனின் ஆதரவிலும் அருகிலும்  முடிந்ததில் வியப்பென்ன!


சேக்கிழார் அடிப்பொடி  திரு  டி என் ஆர்!



 செல்லம்மாவுக்கு உடல்நலம் சரி இல்லை என்றதும் தன்குடும்பத்தைப்போட்டதுபோட்டபடிவிட்டுவிட்டு மூன்றுமாதகாலமும் அந்தப்பெண்மணியை மகாகவிஞனின் மனம் அறிந்தவளை பேணியப்பெருமை கொண்டவர். வாழ்க்கையின் பொருளாதார வசதிகள்  இல்லாதபோனாலும்   இவர் உள்ளத்தால் வள்ளல்தான்!

பாரதியின் பாடல்களை  வாசிப்பவர் பலர் உண்டு சுவாசித்த சிலரில் இவர் தலையானவர். கவிதைகளை இவர் வாசிப்பதே  ஓர் அழகு. தமிழ் என்னும் சர்க்கரைசாகரத்திலிருந்து  இவர் அள்ளித்தந்த அமுதக்கவிதைகளைகேட்டு அந்நாளில் மயங்காதார் யார் இருப்பார்கள்!


(என் வலப்புறம் கவிஞர்சிவ சூரி,முன்வரிசையில் திரு டி என் ஆர்  மறவன்புலவு திருசச்சிதானந்தம்)



 கவிஞரைப்  பார்க்கும் பொழுது    மிகப்பெரிய  செல்வந்தர்போல கம்பிரமாக இருப்பார்!   அமைதியும்   வசீகரமான  புன்முறுவலும், உள்ளத்தில் உண்மை இருப்பதால் முகத்தில்கொண்ட இயல்பான ஒளியுடனும் அவர்   காட்சி அளிப்பார்   
பாரதிதாசனிடமும் அபார அன்பு கொண்டவர் இவருக்கு. அவருடைய கவிதைகள் அத்தனையும் மனப்பாடம். பாரதிதாசனின் "குடும்ப விளக்கு' கவிதை நூலை மனப்பாடம் செய்திருக்கிறார். 
முன்னாள் முதலமைச்சர் காமராஜ் இவருக்கு நண்பர். சிவாஜி பத்திரிகையின் வெள்ளிவிழாவில் கலந்துகொண்டிருக்கிறார் அறிஞர் அண்ணாவை மதித்தவர். அவரும் இவர் பெருமையை உணர்ந்தவர்!

    இளம்வயதிலேயே   அவருக்கு    தன்னம்பிக்கை அதிகம்.   அவர்   தனக்கு   இருந்த   மிகப்பெரிய  சொத்தாக   நினைத்தது        தமிழைமட்டும்..  ' என்  தமிழுக்கு  மசியாதது எதுவும்  இல்லை'     என்று   தலையை நிமிர்த்திக்கூறிக்கொள்வார்.   

 பாரதிதாசன்     அவரைப்பற்றி  மிகச்சரியாக பாடி இருக்கிறார். :- 
'இவனுயர்ந்தான்   அவன்   தாழ்ந்தான் 
என்னும்  இன   வேற்றுமை   ஓர்  அணுவும்  இல்லான்      
எவன்   பொதுவுக்கு   இடர்   சூழ்ந்தான்  
அவன்   தாழ்ந்தான்   அஃதில்லான்  
உயர்ந்தான்  என்று  
நுவல்வதிலே   திருலோகன்  அஞ்சாநெஞ்சன் 
தக்க  நூற்கள்   ஆய்ந்தோன்'  
அவர்தான் கவிஞர்   திருலோக  சீதாராம் ! 

ஒரு ஆற்றல்மிக்க கவிஞராய் ,பத்திரிகை ஆசிரியராய், தேசிய இயக்க முன்னோடியாய்,

 கேட்போர் மயங்கும் பேருரையாளராய், இலக்கியவாதியாய் பன்முகம் கொண்ட 

மேதையாய்த் திகழ்ந்தவர்  திருலோகசீதாராம்

எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம்’ என்றான் பாரதி. 

இவரோ, 'எழுத்தும், எழுதுகோலும் மட்டுமன்றி எழுதுபவனும் தெய்வம்' என்று 

இலக்கிய உலகில் ஒரு உன்னத வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார்.

 அவர்தான் கவிஞர் திருலோக சீதாராம்!

 நாம்  எதிர்பார்க்கக்கூடியதைக்   காட்டிலும்   மிக்கப்  பெரியவராக  வல்லவராக  இருந்தார்  என்பது ஆணித்தரமான  உண்மை ஆனால்அவரைத்   தமிழகத்திற்கு   ஞாபகப்  படுத்தத்  தவறிவிட்டார்கள். இது தமிழகத்தின் சாபக்கேடு.

 மணிக்கொடி  நின்று   கு  ப  ரா   வெறுமனேதான்   இருக்கிறார்  என்று  தெரிந்தவுடன்   அவரை    கிராம  ஊழியனுக்கு    கௌரவ  ஆசிரியராகக்  கொண்டு  வந்ததும்   கவிஞரே,  மாதச்  சம்பளத்தோடு.    வல்லிகண்ணன்   சென்னையில்   சினிமா  இதழில்   இருந்தவரை   வலுக்கட்டாயப்  படுத்தி   கிராம  ஊழியனுக்குக்  கொண்டு  வந்ததும்   கவிஞரே.     கிராமத்துப்   பையனாக   வந்த   தன்னை  அழைத்துச்  சென்று    ரேடியோவில்   சந்தர்ப்பம்   வாங்கித்  தந்து   உற்சாகப்  படுத்தியதை      சுரதாவே  எழுதியும்  உள்ளார்


ஹெர்மன் ஹெஸ்ஸே(Hermann Hesse) எழுதிய 'சித்தார்த்தா'எனும் நூலை இவர் 

 மொழிபெயர்த்தார். மொழிபெயர்ப்பில் நழுவிவிடும் மூலநூலின் உயிர்ப்பை போலன்றி, 

சீதாராம் அவர்களின் மொழிபெயர்ப்பு ஜீவனுடன் விளங்கியது.

 பல ஆங்கிலக் கவிதைகளையும் மொழியாக்கம் செய்தார்.

 Hermann Hesse) மறைந்ததகவல்வந்ததும் மனைவியிடம்,’குளிக்க தண்ணீர்தயார்

 செய்துவை”என்றாராம் “என்ன இந்த நேரத்தில்குளியல்?” என மனைவி வியப்புடன் 

கேட்டாராம்.”என் நெருங்கிய  உறவினர் இறந்துவிட்டார் நான் முழுக்குப்போடணும்”

 என்றாராம்.

ஆங்கிலமேதைக்கவிஞர்களின்  கவிதைவரிகளை சொல்லச்சொல்ல உடனுக்குடன் அழகாய்

பிரமிக்கும்விதத்தில் மொழிபெயர்த்துக்கொடுப்பாராம்!


 தமது 56ம் வயதில் கவிஞர் 1973 ஆம் வருடம் அவரின் ஞானத்தந்தை பாரதியினைத்

 தேடி இவ்வுலகை நீத்தார். இவரைப்பற்றி  சொல்ல  இன்னும் நிறைய இருக்கிறது.

கங்கைவெள்ளம்  சங்குக்குள்ளே அடங்கிவிடாதுதான்! 

.அன்றைய  நிகழ்ச்சியில் குறும்படம் காண்பிக்கப்பட்டது.

திருச்சிமாநகரத்து பெருமைமிகு கவிஞர் திருலோக சீதாராமைப் பற்றி 70 நிமிடக் குறும்படம் ஒன்றை "ஆம்பல்' அமைப்பு வாயிலாக திருரவி சுப்ரமண்யம்வழங்கியிருக்கிறார்.
  திருலோக சீதாராம் அவர்களைப் பற்றி ஒரு குறும்படம் எடுத்திருப்பது தமிழுக்கும், தமிழ்க் கவிதைக்கும், பாரதிக்கும், பாரதிதாசனுக்கும் செய்யப்பட்டிருக்கும் அஞ்சலி.
படத்தில் சேக்கிழார் அடிப்பொடி திரு டிஎன் ராமச்சந்திரன் அவர்கள்  திருலோகத்துடன் பல்லாண்டு பழகியவர். பாரதியின்ஆன்மிகபுத்ரன் என்று கவிஞரை, தன் நண்பரை, தஞ்சை டி.என். ராமச்சந்திரன் ஒரு வார்த்தையில் சொல்லியதே  கவிஞரின் சிறப்பைக்கூறிவிடுகிறது. இந்தக் குறும்படமே டி.என்.ஆர். அவர்களின் பார்வையில்தான் நகர்கிறது. ஏராளமான தகவல்கள், நிகழ்ச்சிகள் என்று அருமையாகத் தயாரித்திருக்கிறார் ரவி சுப்பிரமணியன்.
.
ஒரு பாடல்முழுக்க மருதுவின் கைவண்ணத்தில் நம்மைக்கட்டிப்போடுகிறது.

பரத் சுந்தரின் இசையும் கவிஞரின் பிரபலக்கவிதைவரிகளான முன்பொரு பாடல் எழுதினேன், அதன் மூலப் பிரதி என் வசம் இல்லை என்கிற பாடலும்....ஆஹா....கேட்டால்தான்  அதன்  சுகம் தெரியும்!
,  ஒளிப்பதிவில் சிபி சரவணன் பணி அற்புதமாக இருக்கிறது.  இக்குறும்படத்தில், ரவி சுப்பிரமணியனின் எழுத்தும் இயக்கமும் குறும்படத்தின் சிறப்புக்குத் தனிப் பெருமை சேர்க்கின்றன.
இதற்குப்பின்னணியில்   உள்ள  ரவியின் உழைப்பை நான் அறிவேன்.

நிகழ்ச்சிக்கு  திருலோக சீதாராமின் வாரிசுகள் வந்திருந்தனர். குடும்ப நட்பு என்பதால்  எனக்கு அவர்களைப்பார்த்துப்பேசும் பேறு கிட்டியது. அறிவு ஜோதியாம்  டிஎன் ஆர் அவர்களை  சிறுவயதிலேயே எனக்குப்பழக்கம்  ஆனால் பல்லாண்டுகள் அவரைப்பார்க்கவே இல்லை  அண்மையில்2014ல் அவரது எண்பதாவது  ஆண்டுநிறைவுவைபவத்தில் வணங்கி ஆசிபெற்றேன் மறுபடி இந்த நிகழ்ச்சியில் சிவப்பழத்தை சக்தியுடன் அருகில் தரிசித்த  மன நிறைவை வெறும் வார்த்தைகளில் எப்படிச்சொல்வேன்!

தமிழ்பேசுபவர்கள்  இந்தக்குறும்படத்தை  அவசியம் ஒருமுறை பார்க்கவேண்டும். .. கவிஞர்வாழ்ந்தகாலத்தில் தமிழ்நாடுமதிக்கத்தவறிய மாபெரும் கவிஞனை நாம் வாழ்கின்றகாலத்திலாவது  உணர்ந்துகொண்ட பெருமை நமக்குக்கிடைக்கும்! அந்தமாபெரும் கவிஞனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகவும் இருக்கும்!
பின்குறிப்பு..
 (என் தந்தையும்  எழுத்தாளருமான திரு ஏஎஸ்ராகவன் கவிஞர் திருலோகசீதாராமுக்கு மிகவும் அணுக்கமானவர்  அப்பாவின்  குரு, காட்ஃபாதர், கைடு  எல்லாமே அவர்தான் அப்பாமட்டும் இரண்டுவருடங்கள்முன்பு  வானுலகம் செல்லாமலிருந்தால் இந்தக்குறும்படத்தில் தன்  வெறும்புகைப்படத்தைமட்டும் அளித்திருக்கமாட்டார்  வாய்நிறைய பலமணிநேரம் அவரைப்பற்றிய தன் நினைவுகளை மகிழ்ந்து பகிர்ந்திருப்பார். அவர் சார்பில்  நான் சிறிதளவாவது  எழுதவேண்டும் என்ற  ஆவலில்  எழுதிய பதிவு இது)


என் அன்புத்தந்தையும் எழுத்தாளருமான அமரர் ஏஎஸ்ராகவன்.


2 comments:

  1. படங்களும் பதிவும் மிக அருமை. குறிப்பாக கடைசி படத்தில் தங்களின் தந்தையாரைப் (எழுத்தாளரைப்) பார்த்ததில் மேலும் மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. அருமையாக எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.