Social Icons

Pages

Sunday, May 15, 2016

நன்னயம்!

 இன்றைய தினமலர் வாரமலரில் எனது சிறுகதை நன்னயம்  !


மேலும் படிக்க... "நன்னயம்!"

Saturday, April 23, 2016

புத்தக வீடு!

“There is no friend as loyal as a book.”  என்கிறார் Ernest Hemingway.
வாசித்தல் தவமா தாயின் மடியா, வாசித்தல் சுவாசித்தலா சுகமான அனுபவமா  என்பதையெல்லாம்  கவிதைவரிகளாய் பலர் எழுதிவிட்டனர். புத்தகம் வாசிப்பதே இப்போது குறைந்துபோய்விட்டது என்றும் சிலர் புலம்புகிறார்கள்.முன்பெல்லாம்  ரயில் பஸ்பயணங்களில்  புத்தகம் வாசிக்காமல்  செல்லும் பயணிகள்  மிகக்குறைவு.தினத்தந்தி போன்ற நாளிதழாவது சிலர் கைகளில் தவழும் இப்போது அந்தப்பழக்கம் கைபேசியால் கைவிடப்பட்டுவிட்டாலும் முற்றிலும் மறையவில்லை. அடிக்கடி  பயணம் மேற்கொள்வதால்  என்னால் இதனை உறுதியாகவும் சொல்ல இயலும். புத்தகம் வாசிப்பவர் இல்லாமலா  கடைகளில்  இத்தனை  மாத வார இதழ்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும்? இயற்கை சக்திகள் போல  இயல்பானதாக  என்றும் இருப்பது  புத்தகம் வாசிக்கும் பழக்கமும். இணையமும் kindle  இன்னபிற நவீன சாதனங்கள்  வந்தாலும்  ஒரு புத்தகத்தை கையில் எடுத்துவைத்துக்கொண்டு  அதை மெல்லப்பக்கம் பக்கமாய் திருப்பி  வாசிக்கும் அனுபவத்திற்கு ஈடு இணை ஏது?
 என் அப்பா  எந்தப்புத்தகமானாலும் அதை பிறந்த குழந்தையைப்போல  புத்தகத்திற்கு வலிக்காமல் மென்மையாய் எடுப்பார்.  சடசடவென பக்கங்களைப்புரட்டுவது, புத்தகத்தை  பாய்போல சுருட்டுவது, பக்க ஓரங்களை மடிப்பது, அவசரவசரமாய்  கடைசிபக்கத்திலிருந்து  ஆரம்பித்து  விரைந்து படிப்பது, படித்ததும் புத்தகத்தை தொப் என தூக்கிக்கடாசுவது என்பதெல்லாம் அப்பாவிற்கு  சுத்தமாய் பிடிக்காது. அவர் வாசிக்கும் அழகைப்பார்க்கவே நானும் என் உடன்பிறப்புகளும் தூர நின்று கவனிப்போம்.

பூஜைக்கென்று  தியானத்திற்கென்று  படுக்கவும்சமைப்பதற்ககும் என்றும் குளியல் இத்தியாதிகளுக்கு என்று பிரத்தியேக இடம் உள்ளதுபோல புத்தகங்களுக்கென்று நாம்   வீட்டில்இடம் ஒதுக்கி இருக்கிறோமா! 
  
புத்தகங்களுக்காகவே வாழ்ந்தவர்கள் வாழ்கிறவர்கள் பலர்.

கர்னாடகாவில் ஒருவர் புத்தகங்களூக்கு என்றே  வீடு கட்டி இருக்கிறார்  ஸ்ரீரங்கப்பட்டிணம் அருகே பாண்டவபுரா என்னும் இடத்தில் வீடுமுழுக்க புத்தகங்கள்  நூலகம் எனலாம் பழையவேதங்கள் முதல் மென்பொருள்  (கணிணி) பற்றிய பல்வகைப்புத்தக்ங்கள் ஷேக்ஸ்பியர்முதல் ஹாரிபாட்டர்வரை என சம்பத்தித்ததில் தனக்கென ஒருவண்டிகூடவாங்கிக்கொள்ளாமல் புஸ்தகங்களாகவாங்கிவிடுவார் அங்கேகவுடா.
வயது 68 தனியார் நிறுவனத்தில்  பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
வேலையில் இருந்தபோது போனஸ்  உபரிப்பணம் என்று கிடைப்பதை புஸ்தகங்களாகவாங்கிவிடுவாராம்.
“என் கணவர் ரயில்வே ஸ்டேஷன்லிருந்து சாக்கு மூட்டையில் புஸ்தகங்களாக  தோளில் சுமந்து வருவார்..இவருடன் வேலைபார்த்தவர்கள் எல்லா கார் ஸ்கூட்டர் நிலம் என்றுவாங்கிவார்கள் இவருக்குப்புஸ்தகங்கள்தான் எல்லாமே” என்கிறார் இவர் மனைவி விஜய லஷ்மி.


“என்னிட நாலுபாண்ட் நாலுஷர்ட் தான் இருக்கின்றன,. பத்துவருஷம் முன்பு ஒருநிலத்தை பத்துலட்சத்துக்கு(இப்போது அதன் மதிப்பு ஒருகோடிக்குமேல்) விற்று நூலகத்தை கவனிக்க  விருப்பஓய்வும் பெற்றுக்கொண்டேன்” என்கிறார் அங்கே கவுடா
ஹரிகோட்டா என்ற பிசினஸ் புள்ளி ஒருமுறை கிருஷ்ணராஜ் சாகரில் கோவிலை புனருத்தாரணம் செய்யவந்தபோது இந்த நூலகத்தையும் வந்துபார்த்தாராம் அப்போது 70000 புத்தகங்கள் இருந்தனவாம். அவரே இந்த இடத்தில் 2005ல் நூலகமாய் கட்டிக்கொடுத்தாராம்.
அப்போதைய முதலமைச்சர் அங்கேகவுடாவைப்பாராட்டி 2கோடி நன்கொடைதருவதாக வாக்களித்தாராம் ஆனால்கிடைத்தது 25லட்சம் மட்டுமே!
பல எழுத்தாளர்கள் அரசியல்வாதிகள் படிப்பாளிகள் இங்குவந்துபோகின்றனர். வெளிநாடுகளிலிருந்தும் சிலர் வந்துபோகிறார்கள்.
அமெரிக்காவிலிருந்து இங்கேவந்து இந்த நூலகத்தைப்பார்த்த ரன்மல்ஸ்மித் என்பவர் பார்வையாளர்கள் புத்தகத்தில்,” இந்தியாவில் உயர்ந்தது தாஜ்மகால்மட்டுமல்ல இந்த நூலகமும்தான் .தாஜ்மஹாலைவிடவும் உயர்ந்தது என்பேன் அங்கே கவுடாவிற்கு எந்த உதவும் கிடைக்காதது துரதிர்ஷடம்தான்’என எழுதி உள்ளார்.

இந்த நூலகத்தில் காந்தீஜிபற்றிய 2500புத்தகங்களும் பகவத்கீதை பற்றி 2500புத்தகங்களும் 250000 உலக இதழ்கள் உலகநாடுகள்பற்றி 7000வரைபடங்கள் வேதங்கள் உபநிஷத்துகள் புராணங்கள் இவைபற்றி 2000 நூல்கள் ஆங்கில எழுத்தாளர்களின் 2லட்சம் புத்தகங்கள் இந்துகிறிஸ்துவ ஜைன இஸ்லாமிய புத்தகங்கள் பிரபலங்களின் அபூர்வபுகைப்படங்கள் பழையகால நாணயங்கள் கன்னடமொழி நாவல்கள் சிறுகதை தொகுப்புகள் கவிதைகள் கலை இலக்கியபுத்தகங்கள் தவிர தமிழ் மராட்டி ஒடிசி உருது பெர்சியன் அராபிக் தெலுகு வங்காளம் சீனா ரஷ்ய மொழி புத்தகங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கன.


-

மேலும் படிக்க... "புத்தக வீடு!"

Friday, April 22, 2016

பூமியைவாழவிடு!

பூமியைவாழவிடு!  World Earth Day!



புன்னகையை  முற்றிலும்
 இழக்குமுன்னமே
எனக்குப் புதை குழி
தோண்டப் போகிறீர்களா மனிதர்களே?
புகையிலைப் படுக்கையை
தயார் செய்து
ஆலைப் புகையிட்டு
பிளாஸ்டிக் மாலை அணிவிக்க
ஆயத்தமாகி விட்டீர்கள்!

என் கொடையாய் ஆறுகளைத்தந்தேன்
அழகுமிகு சோலைகளை உருவாக்கினேன்
பூலோக சுவர்க்கமாய் மாற்றினேன்
கனிகளை காய்களை பயிர்களை வளர்த்தேன்
வனங்களை அமைத்தேன் விலங்கு
இனங்களுக்கு அடைக்கலம் தந்தேன்


முன்னொருகாலத்தில்
இங்குஎன் குழந்தைகளான
 ஆறுகளில்நீரின் ஓயாத ஓட்டம்
பறவைகள்  பறந்துதிரிந்தபின்
இலைகள் அடர்ந்த மரங்களில் வசித்தன.
வனங்களும் பச்சைவயல்களும்
வயல் வரப்புகளும் வாய்க்கால்களும்
வளமாகவே  என்றும்இருந்தன

நாட்டுப்பற்றுகொண்ட
தியாகிகளையும் தலைவர்களையும்
புலவர்களையும் புரவலர்களையும்
என்று நல்லோர்கள் பலரைக்
கண்ட புண்ணியத்தாய் நான்!

இன்று..

தர்மம் தலைகுனிகிறது
ஊழல் உற்சாக ஊற்றாய்
ததும்பி வழிகிறது.

அஹிம்சை அழிந்து
அன்பும் மனிதநேயமும்
அற்பமாகிவிட்டது.

தீவிரவாதிகளுக்குப்
புகலிடமாய் இந்த
பூமித்தாய் ஆகலாமா?.

என்னைக் கண்டபடி
கூறு போட்டு
அடுக்குமாடிக் கட்டிடங்களை
அண்ணாந்து பார்க்குமளவுக்குக்
கட்டிவிட்டீர்கள்

என்கோபத்தை
 கோபக் குலுக்கலில்
சிறுபுருவ நெரிப்பில்
நியாயமாய் தெரிவித்தேன்
புரிந்து கொள்ளவில்லை நீங்கள்
.அல்லது
புரிந்தும் புரியாதது போல்
அலட்சியமாய் இருக்கின்றீரோ?
இரண்டுமே மெய்தான்.
.
என் மூச்சு எங்கே எனத்
தேடுகிறீர்களா என்ன?
அதைத்தான் கார்பன் மோனாக்சைடில்
பத்திரப்படுத்தி விட்டீர்களே!


தாயென்கிறீர்கள் என்னை
பேணிக்காக்கத்தான்
மறந்துவிட்டீர் மைந்தர்களே!


ஆறுகளை நீரற்ற சகதி 
சேறுகளாக்கிவிட்டீர்,
 விலங்கினங்களைத்துரத்தி
வனத்தினில்புகுந்து
வான் உயரக்கட்டிடங்கள் எழுப்ப
 மானிடர்கள் வந்துவிட்டீர்கள்.



விட்டுவிடுதலையாகிப்பறந்த
 சிட்டுக்குருவிகள் எல்லாம்
விஞ்ஞான முன்னேற்றத்தின் விளைவுகளில்
கண்கட்டுவித்தைபோல
காணாமல்போய்விட்டனவே!

ஓசோன் ஓட்டை ஆனதனால்
உலகின் வெப்பமும் கூடியதே!
பருவத்தில்பெய்தமழையை
 வருமோஇனி மழை
என ஏங்கி நின்று
வான்பார்த்து
வருத்தத்தில்
 வாடி நிற்கிறீர்கள்!

மேனியெங்கும் பாளம்பாளமாய்
வெடிப்புவந்து  வேதனையுற்று
மூச்சுவிடவும் முடியாமல்
முனகும் இந்த பூமித்தாயினை
தவிக்கவிடும் மானிடரே!
எந்தையும்தாயும்
மகிழ்ந்துகுலாவி
இருந்த நாடென்று இதனை
உமது சந்ததியினருக்குக்
கைகாட்டிடவும்
பொய்யாய்க்கனவாய்
பழங்கதையாய்
பூமித்தாயின்  வரலாறு
 போகாதிருக்கவும்
புரிந்துகொண்டு வாழுங்கள்.



வெறும் வேஷமிட்டுவாழும்
வாழ்க்கையினின்றும்
வெளியே வாருங்கள்!
வேருக்குத்தான் நீர் தேவை எனும்
விவேகச்சிந்தனைஉங்களுக்கு
விரைவில்தானே வந்துவிட்டால்
பூமித்தாயாம் நானும்தான்
பூமியைவாழவிடு’ என்று
பூகம்பமுழக்கமிடமாட்டேன்
பூப்போலே  பூமண்டலத்தை
புரிந்து என்றும் காத்திடுவேன்!


-- (  முன்புபரிசுபெற்றகவிதையை  கவிஞர்வைரமுத்து பாராட்டியதும் இணைப்பில்)

மேலும் படிக்க... "பூமியைவாழவிடு!"

Thursday, April 21, 2016

அண்ணிக்கும் அமுதூறும்!

நம் பாரத தேசத்தில்குப்தர்களின் காலம் பொற்காலம் என்றால்தென் பாரதத்தில் அதாவது தமிழ்கூறும் நல்லுலகில் ஆழ்வார்களின் காலம் அமுதமயமான பொற்காலம் எனலாம்.அருளிச்செயல் என்ற அமுதம் பிறந்தது இந்தக்காலத்தில்தானே!





 பைந்தமிழும் பலவளமும் நிறைந்த பாண்டியநாட்டில் திருக்கோளூர் என்னும் ஊரில்  கிபி ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்இன்றைய நாள்போன்ற சித்திரைத்திங்களில் சித்திரை நடசத்திரத்தில்திருஅவதரித்தவர்.

தமிழிலும் வடமொழியிலும் சிறந்த புலமைபெற்று தமிழில் மதுரமான   அதாவது இனிமையான கவிதைகள் பலதந்தவர் அதனாலேயே மதுரகவி என அழைக்கப்பட்டார்.
புண்ணியப்பதிகள் எனப்படும் அயோத்தி மதுரா கயா காசி காஞ்சி அவந்தி துவாரகா என  எல்லா இடங்களையும் சென்று சேவிக்கப்புறப்பட்டார். 

அயோத்திக்குவந்தவர் இராமபிரானை அர்ச்சாவதாரத்தில்  சேவித்து பின் அங்கேயே  தங்கலானார். ஒருநாள் தன் சொந்த ஊர் திருக்கோளூர் திசைநோக்கி  தென் புறமாக கை  குவித்துத்தொழுதபொழுது அங்கே வானில் ஒரு பேரொளியைக்கண்டார்  ஏதும் கிராமம்தான் தீப்பற்றி எரிகிறதோ என அஞ்சினார்.ஆனால் அந்த ஒளியின் சுடர்  இரண்டுமூன்றுநாட்களுக்கும் அப்படியே அழகுடன் பொலிந்துதெரியவும் அந்ததிசை நோக்கி ஆர்வமுடன் நடக்கலானார். நெடுவழி நடந்து ஒளி தெரிந்த திருக்குருகூரை அடைந்தார்.

அப்போது அந்த ஒளி ஊர்க்கோயிலிலுக்குள் புகுந்து  சென்றதும்மறைந்துவிட்டது
 அந்த ஊர்க்காரர்களிடம் அந்த ஊரின் சிறப்பு பற்றி விஜாரித்தார்,. புளியமரத்துப் பொந்தில் சின் முத்திரையோடு ஒருவர் எழுந்தருளியிருக்கிறார். அதுதான் விசேஷம் என்று அவ்வூர்க்காரர்கள் சொன்னதும் அந்த மரத்தினை அடைந்தார்.

ஒளிபொருந்தியதேகத்துடன்மௌனமாக இருந்த நம்மாழ்வாரைக் கண்டு ஆச்சரியப் பட்டார் மதுரகவிகள். இவருக்குக் கண் பார்வை உண்டா, காது கேட்குமா என்று கண்டுபிடிக்க ஒரு பாறாங்கல்லைத் தூக்கிக் கீழே போட்டார். ''செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?'' என்று கேட்டார் மதுரகவியார். 

''அத்தைத் தின்று அங்கே கிடக்கும்'' என்றார் ஆழ்வார் (இந்த விவரம் நம்மாழ்வார் சரிதத்தில் வருகிறது)
விடையில் இரு தத்துவம் புதைந்துள்ளது. செத்ததின், அதாவது உயிர் இல்லாத இவ்வுடம்பில், ஜீவன் என்னும் சிறியது பிறந்தால், பாவ புண்ணியங்களின் பயன்களை நுகர்வதே அதற்கு வாழ்க்கையாக இருக்கும். தன்னை பற்றிய அறிவு, பரமாத்வான திருமாலை பற்றிய அறிவற்ற ஜீவனுக்கு, பரமாத்மாவை பற்றிய அறிவு ஏற்பட்டால், அதைக்கொண்டே பக்தி வளரும்.பதிலின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்ட மதுரகவிகள், நம்மாழ்வாரின் மேதாவிலாசத்தை புரிந்துக்கொண்டு அவரின் சீடரானார்.
  1. மதுரகவியாழ்வாருக்கு நம்மாழ்வாரின் பாசுரங்களில் பற்று ஏற்பட்டது.  மாலைப்பாடி வந்த மதுரகவியார் நம்மாழ்வாரையே பதினோரு பாசுரங்களால் ஆன பாமாலை ஒன்றால் பாடித்துதித்தார். அப் பாமாலையின் முதற்பா ''கண்ணிநுண்சிறுத்தாம்பு'' எனத்  தொடங்குவதால்  அதற்குக்  'கண்ணிநுண்சிறுத்தாம்பு'   என்பதே  பெயராயிற்று
(இந்த கண்ணி நுண் சிறுத்தாம்பு எனத்தொடங்கும் 11 பாடல்களை பல்லாயிரம்முறை  தியானித்து நம்மாழ்வாரை தரிசித்து நாலாயிரம்தமிழ்ப்பாசுர ரத்தினங்களை பிற்காலத்தில் நாதமுனிகள் மீட்டது  தனிக்கதை)(காணாமல்போன பொருள் கிடைக்க இப்பாசுரம் சொல்வது பல இல்லங்களில் இன்றும் வழக்கம்)
  1. .கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
    பண்ணிய பெருமாயன் என் அப்பனில்
    நண்ணித்தென் குருகூர் நம்பி என்றக்கால்
    அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே.
அண்ணிக்கும்  என்றால் தித்திக்கும்... கண்ணிகள் கொண்ட சிறு தாம்பக்கயிறினால்  கட்டப்பண்ணிக்கொண்ட பெருமாயனான  கண்ணனைவிடவும்  விரும்பி  தென்குருகூர் நம்பி என்னும் நம்மாழ்வார் என்று சொல்லும்போது  நாவில்  தித்திப்பாகும் அமுது ஊறுமாம்! அண்ணலைவிடவும் ஆச்சார்யன்(குரு) உயர்வானவர் என்று மதுரகவி  பாடும் இந்த 11பாடல்களின் சிறப்பு  சொல்லிமாளாது இவற்றை 10000முறை சொன்னால் நேரில் நம்மாழ்வார் சேவை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
.
 நம்மாழ்வாரிடமிருந்து பலவற்றையும் அறிந்துகொண்டு அவரையே துணைவராகக் கொண்டு அவருடைய புகழையே பாடி வந்தார். நம்மாழ்வார் திருநாடு அலங்கரித்த பின்னர், அவருடைய அர்ச்சை வடிவ உருவத்தைத் திருக்குருகூர் நகரில் எழுந்தருளச் செய்து போற்றி வந்தார்.

நம்மாழ்வாரின் பெருமை வானளவா கடலளவா எனில் அதனினும் பெரிது எனலாம்.

 வேதங்கள் நான்கு  நம்மாழ்வார் அருளிச்செய்த தமிழ்பிரபந்தங்கள் நான்கு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேதத்திற்கு சமமானது.
 திருவிருத்தம்....ரிக்வேத சாரம்
திருவாசிரியம்...யஜுர்வேதசாரம்
பெரியதிருவந்தாதி.,,,அதர்வ வேதசாரம்
திருவாய்மொழி...ஸாமவேத சாரம்

இதில் ஸாமவேதசாரமான திருவாய்மொழிக்கு தனிப்பெருமை உண்டு.’வேதாநாம் ஸாமவேதோஸ்மி’ வேதங்களில் நான் ஸாமவேதமாக இருக்கிறேன் என்பதுதானே கண்ணனின் கீதோபதேசம்!


மற்றபிரபந்தங்களை பெருமாள் திருவீதி எழுந்தருளும்போது சேவிக்கலாம் ஆனால் திருவாய்மொழி பெருமாள் முன்பு அதாவது ஆஸ்தானத்தில் மட்டுமே ஸேவிக்கப்படவேண்டும்.

வேதங்கள் என்னும்கரும்பினை சுவைப்பது நம்மில் பலருக்கு இயலாத ஒன்று எனவேதான் வேதங்களின் சாரத்தை செந்தமிழில் அழகான பாசுரங்களாக கொடுத்துள்ளனர் ஆழ்வார்பெருமக்கள். ஆழ்வார்களின் அருளிச்செயல்களை தினமும்  ஆராதிக்கும்போது ‘தமிழ்மறையோன்’என்று அறிமுகப்படுத்திக்கொள்வதில் தனக்குப்பெருமை என்கிறார் சுவாமிதேசிகனும்.

இப்படி ஒரு ஆழ்வாரின் பெருமையை உலகறியச்செய்தவர் மதுரகவிஆழ்வார்தான்.



மதுரகவியார்,  நம்மாழ்வாருக்கு நித்திய ஆராதன விழாக்களையெல்லாம் சிறப்புற நடத்தி வந்தார். அத்திரு விழாக்களில் ’வேதம் தமிழ் செய்த மாறன் வந்தார்;  திருமாலுக்குரிய தெய்வப் புலவர் வந்தார்;  அளவிலா ஞானத்து ஆசிரியர் வந்தார்’ என்பவை முதலாகப் பல விருதுகளைக் கூறித் திருச்சின்னம் முழங்கினார். 

இதைக்கேள்விப்பட்ட மதுரைச்சங்கத்தார்,
''உங்கள் ஆழ்வார் பக்தரே அன்றி பகவானல்லரே. இவர் சங்கமேறிய புலவரோ? இவர் பாடிய திருவாய்மொழி சங்கமேறிய செய்யுளன்று. இவரை வேதம் தமிழ் செய்தவர் என்று புகழ்வதும் தகுமோ?'' என்று பலவாறு பேசி விருதுகளைத் தடுத்துரைத்தனர்.

அதற்கு மதுரகவிகள் மனம் பொறாமல் வருந்தி,  ''இவர்களின் கர்வம் பங்கமாகும்படி தேவரீர் செய்தருள வேண்டும்'' என்று நம்மாழ்வாரைத் துதித்தார்.

நம்மாழ்வாரும் ஒரு கிழப்  பார்ப்பனர் வடிவம் ஏந்தி வந்து,  திருவாய்மொழியில் 'கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே' என்ற பாசுரத்தின் முதலடியை ஒரு சிற்றேட்டில் எழுதிக்கொண்டு சென்று,  சங்கப் பலகையின் மீது வைத்தால் அவர்கள் செருக்கு அடங்கும் என்று கூறியருளினார். 
அவ்வாறே மதுரகவியும் நம்மாழ்வாரின் கண்ணன் கழலிணை பாசுரத்தை எழுதிய ஏட்டை எடுத்துக்கொண்டு மதுரைச் சங்கம் போய்ச் சேர்ந்தார். அங்கு சங்கப் பலகையில் ஒரு முனையில் கண்ணன் கழலிணை பாசுரம் எழுதி வைத்த நறுக்கு ஓலை வைக்கப்பட்டது.  மறுமுனையில் புலவர்கள் ஏறி அமர்ந்தனர். அந்த அளவில், சங்கப் பலகையானது, பொற்றாமரைப் பொய்கையில் மூழ்கி, தன் மேலிருந்த புலவர்களையெல்லாம் நீரில் வீழ்த்தி, உடனே மேலெழுந்து தன்மீது வைத்த சிறு முறியை மாத்திரம் ஏந்திக் கொண்டு மிதந்தது.

அப்போது நீரில் விழுந்து தடுமாறி எழுந்து, மெல்ல நீந்திக் கரை சேர்ந்த சங்கப் புலவர்கள், வேதம், வேதத்தின் முடிவுப் பொருட்கள் முதலான யாவற்றையும் பிறரால் கற்பிக்கப்படாமல் தாமேயுணர்ந்த நம்மாழ்வாரது இறைமை எழில் பொருந்திய திறனைத் தெரிந்துகொண்டு செருக்கு அழிந்தனர்.
சங்கப்புலவர்கள் நம்மாழ்வாரது பெருமையைக்குறித்து தோத்திரமாக  பாடல்கள் பாடிவெளியிட்டனர்.

...சேமங்குருகையோ செய்யதிருப் பாற்கடலோ
நாமம் பராங்குசமோ நாரணமோதாமந்
துளவமோ வகுளமோ தோளிரண்டோ நான்கும்
உளவோ பெரும உமக்கு...

என்ற இப்பாடல்வடிவாக  ஆழ்வாரின் தெய்வத்திரு உருவைப்போற்றி வியந்தனர்.
தமது குரும் தெய்வமுமான நம்மாழ்வாரை  குற்றம் சொல்லியவர்களை  நோக்கி மதுரகவி இப்படிப்பாடினார்

ஈயாடுவதோ கருடர்க்கெதிரே !
இரவிக்கெதிர் மின்மினி ஆடுவதோ !
நாயாடுவதோ நரகேசரி முன் ?
அழகூர்வசி முன் பேயாடுவதோ !
பெருமான் வகுளாபரணன் அருள்
கூர்ந்தோவாதுரை ஆயிரா மாமறையின்
ஒருசொற் பொருமோ உலகிற்கவியே !




  பிறகு மதுரகவியாழ்வாருடன் சேர்ந்து சங்கத்தாரும்நம்மாழ்வாரின் விருது கூறல் முதலியவற்றை முன்னிலும் சிறப்பாக நடத்தி வந்தனர்.

தொடர்ந்து, மதுரகவியாழ்வார் தமது குருவாகிய நம்மாழ்வாருக்கு பலவகை விழாக்களையும் ஆராதனைகளையும் நடத்தி வந்ததோடு, ஆழ்வாரது அருந்தமிழ் மறைகளின் பொருட்களைப் பலரும் உணரும்படி உரைத்து சிலகாலம் எழுந்தருளியிருந்தார்.  சில காலத்துக்குப் பின்பு பேரின்பப் பெருவீட்டை அடைந்தார்.


மதுரகவிகளை ஆழ்வார்கள் வரிசையில் சேர்த்துக் கொள்வதற்கு முக்கியக் காரணம், அவர் நம்மாழ்வாரின் பிரதம சீடராக இருந்து திருவாய்மொழியை நெறிப்படுத்தினார் என்பதோடு, அதைப் பரப்பி ஒழுங்காகப் பாராயணம் செய்ய ஏற்பாடுகளும் செய்தார் என்பதனால்தான்!

மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் !
மேலும் படிக்க... "அண்ணிக்கும் அமுதூறும்!"

Saturday, February 20, 2016

உள்ளத்தால் வள்ளல்தான்!

இரண்டுநாட்கள்முன்பு(18.2 2016) ஓர் இனிய மாலைநேரத்தில் நாரதகானசபாவில் தமிழ்நாடுகண்ட மாபெரும்கவிஞனைப்போற்றிய சிறந்த ஒரு  நிகழ்ச்சிநடைபெற்றது.





 தஞ்சைவாழ் தமிழ்க்கவிஞர், வழக்கறிஞராய் பணிபுரிந்தவர் , சைவத்திருமுறை  பெரியபுராணம்  என  பலதமிழ் நூல்களில் கரைகண்டவர் ,ஆங்கிலப்புலமை மிக்கவர், சேக்கிழார் அடிப்பொடி என்னும்  திரு டி என் ராமசந்திரன் அவர்கள்  தலைமையில்   நிகழ்ச்சிநடந்தது..டி என் ஆர்  அவர்கள்  பேச்சு கவிஞரின் நினைவலைகளைப்புரட்டிப்போட்டது. அப்படியே மெய்மறந்துபோனோம் எனில் அதுதான் உண்மை. 
.நடிகை ரோஹிணி பாரதிபுத்திரன் சிறப்பு பேச்சாளர்களாக  அருமையாகபேசினார்கள்.
.பார்வையாளர்கள் வரிசையில் பல பிரபலங்கள் பாரதிபாஸ்கர், மறவன்புலவு சச்சிதானந்தம்  நடிகை சொர்ணமால்யா மேலும் பல கவிஞர்கள் எழுத்தாளர்கள் என  அரங்கி நிரம்பிவழிந்து திக்குமுக்காடியது!



தமிழகம்கண்ட அந்தக்கவிஞர் யாராக இருக்கும்?

அகத்தியமுனிபோன்ற உருவம்! விவேகானந்தரைப்போன்ற தீட்சண்ய விழிகள்!பளிச்சென்று குங்குமப் பொட்டு!  . சிறந்த மேடைப் பேச்சாளர்,  "சிவாஜி' இதழின் ஆசிரியர். அவருடைய "சித்தார்த்தன்' மொழிபெயர்ப்பு சிறப்பு மிக்கது. பாரதி புகழ் பாடியும் பரப்பியும் பாரதி கவிதைகளை மேடையில் உணர்வுடன் பாடியும் பாரதிப் பித்தராக பக்தராக விளங்கியவர்.  கவிஞரின் கணீர் குரலில் நேரிடையாகப் பாஞ்சாலி சபத காவியத்தைக் கேட்க கொடுத்து வைத்தவர்கள் பெரும் புண்ணியம் செய்தவர்கள். 


கவிஞரின்  நான்குபுதல்வர்களில்  மூவருடன் நான்!


 இவர்தாம் மகாகவிபாரதியாரின்  மனைவியின் கடைசிகாலத்தை கவனித்துக்கொண்டவர் அந்ததாயின் சிரம்  இந்தக்கவிஞரின் மடியில்தான்  தன் கடைசிமூச்சினை விட்டது, மாபெரும் கவிஞனின் மனையாளின் இறுதிக்காலம்  பாரதியின் ஆன்மீகப்புத்திரனின் ஆதரவிலும் அருகிலும்  முடிந்ததில் வியப்பென்ன!


சேக்கிழார் அடிப்பொடி  திரு  டி என் ஆர்!



 செல்லம்மாவுக்கு உடல்நலம் சரி இல்லை என்றதும் தன்குடும்பத்தைப்போட்டதுபோட்டபடிவிட்டுவிட்டு மூன்றுமாதகாலமும் அந்தப்பெண்மணியை மகாகவிஞனின் மனம் அறிந்தவளை பேணியப்பெருமை கொண்டவர். வாழ்க்கையின் பொருளாதார வசதிகள்  இல்லாதபோனாலும்   இவர் உள்ளத்தால் வள்ளல்தான்!

பாரதியின் பாடல்களை  வாசிப்பவர் பலர் உண்டு சுவாசித்த சிலரில் இவர் தலையானவர். கவிதைகளை இவர் வாசிப்பதே  ஓர் அழகு. தமிழ் என்னும் சர்க்கரைசாகரத்திலிருந்து  இவர் அள்ளித்தந்த அமுதக்கவிதைகளைகேட்டு அந்நாளில் மயங்காதார் யார் இருப்பார்கள்!


(என் வலப்புறம் கவிஞர்சிவ சூரி,முன்வரிசையில் திரு டி என் ஆர்  மறவன்புலவு திருசச்சிதானந்தம்)



 கவிஞரைப்  பார்க்கும் பொழுது    மிகப்பெரிய  செல்வந்தர்போல கம்பிரமாக இருப்பார்!   அமைதியும்   வசீகரமான  புன்முறுவலும், உள்ளத்தில் உண்மை இருப்பதால் முகத்தில்கொண்ட இயல்பான ஒளியுடனும் அவர்   காட்சி அளிப்பார்   
பாரதிதாசனிடமும் அபார அன்பு கொண்டவர் இவருக்கு. அவருடைய கவிதைகள் அத்தனையும் மனப்பாடம். பாரதிதாசனின் "குடும்ப விளக்கு' கவிதை நூலை மனப்பாடம் செய்திருக்கிறார். 
முன்னாள் முதலமைச்சர் காமராஜ் இவருக்கு நண்பர். சிவாஜி பத்திரிகையின் வெள்ளிவிழாவில் கலந்துகொண்டிருக்கிறார் அறிஞர் அண்ணாவை மதித்தவர். அவரும் இவர் பெருமையை உணர்ந்தவர்!

    இளம்வயதிலேயே   அவருக்கு    தன்னம்பிக்கை அதிகம்.   அவர்   தனக்கு   இருந்த   மிகப்பெரிய  சொத்தாக   நினைத்தது        தமிழைமட்டும்..  ' என்  தமிழுக்கு  மசியாதது எதுவும்  இல்லை'     என்று   தலையை நிமிர்த்திக்கூறிக்கொள்வார்.   

 பாரதிதாசன்     அவரைப்பற்றி  மிகச்சரியாக பாடி இருக்கிறார். :- 
'இவனுயர்ந்தான்   அவன்   தாழ்ந்தான் 
என்னும்  இன   வேற்றுமை   ஓர்  அணுவும்  இல்லான்      
எவன்   பொதுவுக்கு   இடர்   சூழ்ந்தான்  
அவன்   தாழ்ந்தான்   அஃதில்லான்  
உயர்ந்தான்  என்று  
நுவல்வதிலே   திருலோகன்  அஞ்சாநெஞ்சன் 
தக்க  நூற்கள்   ஆய்ந்தோன்'  
அவர்தான் கவிஞர்   திருலோக  சீதாராம் ! 

ஒரு ஆற்றல்மிக்க கவிஞராய் ,பத்திரிகை ஆசிரியராய், தேசிய இயக்க முன்னோடியாய்,

 கேட்போர் மயங்கும் பேருரையாளராய், இலக்கியவாதியாய் பன்முகம் கொண்ட 

மேதையாய்த் திகழ்ந்தவர்  திருலோகசீதாராம்

எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம்’ என்றான் பாரதி. 

இவரோ, 'எழுத்தும், எழுதுகோலும் மட்டுமன்றி எழுதுபவனும் தெய்வம்' என்று 

இலக்கிய உலகில் ஒரு உன்னத வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார்.

 அவர்தான் கவிஞர் திருலோக சீதாராம்!

 நாம்  எதிர்பார்க்கக்கூடியதைக்   காட்டிலும்   மிக்கப்  பெரியவராக  வல்லவராக  இருந்தார்  என்பது ஆணித்தரமான  உண்மை ஆனால்அவரைத்   தமிழகத்திற்கு   ஞாபகப்  படுத்தத்  தவறிவிட்டார்கள். இது தமிழகத்தின் சாபக்கேடு.

 மணிக்கொடி  நின்று   கு  ப  ரா   வெறுமனேதான்   இருக்கிறார்  என்று  தெரிந்தவுடன்   அவரை    கிராம  ஊழியனுக்கு    கௌரவ  ஆசிரியராகக்  கொண்டு  வந்ததும்   கவிஞரே,  மாதச்  சம்பளத்தோடு.    வல்லிகண்ணன்   சென்னையில்   சினிமா  இதழில்   இருந்தவரை   வலுக்கட்டாயப்  படுத்தி   கிராம  ஊழியனுக்குக்  கொண்டு  வந்ததும்   கவிஞரே.     கிராமத்துப்   பையனாக   வந்த   தன்னை  அழைத்துச்  சென்று    ரேடியோவில்   சந்தர்ப்பம்   வாங்கித்  தந்து   உற்சாகப்  படுத்தியதை      சுரதாவே  எழுதியும்  உள்ளார்


ஹெர்மன் ஹெஸ்ஸே(Hermann Hesse) எழுதிய 'சித்தார்த்தா'எனும் நூலை இவர் 

 மொழிபெயர்த்தார். மொழிபெயர்ப்பில் நழுவிவிடும் மூலநூலின் உயிர்ப்பை போலன்றி, 

சீதாராம் அவர்களின் மொழிபெயர்ப்பு ஜீவனுடன் விளங்கியது.

 பல ஆங்கிலக் கவிதைகளையும் மொழியாக்கம் செய்தார்.

 Hermann Hesse) மறைந்ததகவல்வந்ததும் மனைவியிடம்,’குளிக்க தண்ணீர்தயார்

 செய்துவை”என்றாராம் “என்ன இந்த நேரத்தில்குளியல்?” என மனைவி வியப்புடன் 

கேட்டாராம்.”என் நெருங்கிய  உறவினர் இறந்துவிட்டார் நான் முழுக்குப்போடணும்”

 என்றாராம்.

ஆங்கிலமேதைக்கவிஞர்களின்  கவிதைவரிகளை சொல்லச்சொல்ல உடனுக்குடன் அழகாய்

பிரமிக்கும்விதத்தில் மொழிபெயர்த்துக்கொடுப்பாராம்!


 தமது 56ம் வயதில் கவிஞர் 1973 ஆம் வருடம் அவரின் ஞானத்தந்தை பாரதியினைத்

 தேடி இவ்வுலகை நீத்தார். இவரைப்பற்றி  சொல்ல  இன்னும் நிறைய இருக்கிறது.

கங்கைவெள்ளம்  சங்குக்குள்ளே அடங்கிவிடாதுதான்! 

.அன்றைய  நிகழ்ச்சியில் குறும்படம் காண்பிக்கப்பட்டது.

திருச்சிமாநகரத்து பெருமைமிகு கவிஞர் திருலோக சீதாராமைப் பற்றி 70 நிமிடக் குறும்படம் ஒன்றை "ஆம்பல்' அமைப்பு வாயிலாக திருரவி சுப்ரமண்யம்வழங்கியிருக்கிறார்.
  திருலோக சீதாராம் அவர்களைப் பற்றி ஒரு குறும்படம் எடுத்திருப்பது தமிழுக்கும், தமிழ்க் கவிதைக்கும், பாரதிக்கும், பாரதிதாசனுக்கும் செய்யப்பட்டிருக்கும் அஞ்சலி.
படத்தில் சேக்கிழார் அடிப்பொடி திரு டிஎன் ராமச்சந்திரன் அவர்கள்  திருலோகத்துடன் பல்லாண்டு பழகியவர். பாரதியின்ஆன்மிகபுத்ரன் என்று கவிஞரை, தன் நண்பரை, தஞ்சை டி.என். ராமச்சந்திரன் ஒரு வார்த்தையில் சொல்லியதே  கவிஞரின் சிறப்பைக்கூறிவிடுகிறது. இந்தக் குறும்படமே டி.என்.ஆர். அவர்களின் பார்வையில்தான் நகர்கிறது. ஏராளமான தகவல்கள், நிகழ்ச்சிகள் என்று அருமையாகத் தயாரித்திருக்கிறார் ரவி சுப்பிரமணியன்.
.
ஒரு பாடல்முழுக்க மருதுவின் கைவண்ணத்தில் நம்மைக்கட்டிப்போடுகிறது.

பரத் சுந்தரின் இசையும் கவிஞரின் பிரபலக்கவிதைவரிகளான முன்பொரு பாடல் எழுதினேன், அதன் மூலப் பிரதி என் வசம் இல்லை என்கிற பாடலும்....ஆஹா....கேட்டால்தான்  அதன்  சுகம் தெரியும்!
,  ஒளிப்பதிவில் சிபி சரவணன் பணி அற்புதமாக இருக்கிறது.  இக்குறும்படத்தில், ரவி சுப்பிரமணியனின் எழுத்தும் இயக்கமும் குறும்படத்தின் சிறப்புக்குத் தனிப் பெருமை சேர்க்கின்றன.
இதற்குப்பின்னணியில்   உள்ள  ரவியின் உழைப்பை நான் அறிவேன்.

நிகழ்ச்சிக்கு  திருலோக சீதாராமின் வாரிசுகள் வந்திருந்தனர். குடும்ப நட்பு என்பதால்  எனக்கு அவர்களைப்பார்த்துப்பேசும் பேறு கிட்டியது. அறிவு ஜோதியாம்  டிஎன் ஆர் அவர்களை  சிறுவயதிலேயே எனக்குப்பழக்கம்  ஆனால் பல்லாண்டுகள் அவரைப்பார்க்கவே இல்லை  அண்மையில்2014ல் அவரது எண்பதாவது  ஆண்டுநிறைவுவைபவத்தில் வணங்கி ஆசிபெற்றேன் மறுபடி இந்த நிகழ்ச்சியில் சிவப்பழத்தை சக்தியுடன் அருகில் தரிசித்த  மன நிறைவை வெறும் வார்த்தைகளில் எப்படிச்சொல்வேன்!

தமிழ்பேசுபவர்கள்  இந்தக்குறும்படத்தை  அவசியம் ஒருமுறை பார்க்கவேண்டும். .. கவிஞர்வாழ்ந்தகாலத்தில் தமிழ்நாடுமதிக்கத்தவறிய மாபெரும் கவிஞனை நாம் வாழ்கின்றகாலத்திலாவது  உணர்ந்துகொண்ட பெருமை நமக்குக்கிடைக்கும்! அந்தமாபெரும் கவிஞனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகவும் இருக்கும்!
பின்குறிப்பு..
 (என் தந்தையும்  எழுத்தாளருமான திரு ஏஎஸ்ராகவன் கவிஞர் திருலோகசீதாராமுக்கு மிகவும் அணுக்கமானவர்  அப்பாவின்  குரு, காட்ஃபாதர், கைடு  எல்லாமே அவர்தான் அப்பாமட்டும் இரண்டுவருடங்கள்முன்பு  வானுலகம் செல்லாமலிருந்தால் இந்தக்குறும்படத்தில் தன்  வெறும்புகைப்படத்தைமட்டும் அளித்திருக்கமாட்டார்  வாய்நிறைய பலமணிநேரம் அவரைப்பற்றிய தன் நினைவுகளை மகிழ்ந்து பகிர்ந்திருப்பார். அவர் சார்பில்  நான் சிறிதளவாவது  எழுதவேண்டும் என்ற  ஆவலில்  எழுதிய பதிவு இது)


என் அன்புத்தந்தையும் எழுத்தாளருமான அமரர் ஏஎஸ்ராகவன்.


மேலும் படிக்க... "உள்ளத்தால் வள்ளல்தான்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.