Social Icons

Pages

Tuesday, April 17, 2007

பெயர் படும் பாடு!(வ.வா.ச. போட்டிக்கு)

--------------------------------------------------------------------------------
பெயர் ஒரு அடையாளம்.பெயரை நினைத்ததும்முழு உருவமும்கண்முன் வந்து நிற்கிற அளவுக்கு
ஒருவரின் பெயர் பெருமை அடைகிறது.அவர் வாங்கிய பட்டங்கள் எல்லாம் பிறகுதான். தங்கள்
பெயர்கள் படும்பாடு வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு சுவாரஸ்யமான அல்லது எரிச்சலான அனுபவமாயிருக்கலாம்!

எங்கள் வீட்டில் பாட்டி தன் கணவர் பெயரை சொல்லவே மாட்டார். அயுசு குறைந்துவிடுமாம்!

அன்று ஒரு குழந்தையின் நாமகரணத்திற்குப் போகவேண்டி வந்தது குழந்தைக்கு நிஷ்ருத்தி என்று பெயர்வைத்திருந்தார்கள் பலர் நிவர்த்தி,நீ விருத்தி. நீத்ருப்தி,நீருப்தி என்றே சொல்ல ஒரு சிறுமி "நவராத்திரி" என்று மழலையில் கூறவும் எல்லாரும் சிரித்துவிட்டனர்.

"இதுக்குதான் அந்த நாளில் க்ருஷ்ணா ராமா சிவா முருகா'ன்னு பெயர் வைப்பாங்க சாமி பெயரை வாய் நிறைய அழைச்சா நல்லது இல்லயோ?" என்று
ஒரு வயதான அம்மாள் சொல்லவும் ஒரு சிறுவன்"ராமனாதா?' என்றான் அவன் அப்பாவைப்பார்த்து.

"சாமியையே பேர் சொல்லி கூப்பிடலாம்னா அப்பா ஆசாமிதானே பேர் சொன்னா என்ன?" என்று கேட்டுவிட்டான்.

பெயரில் என்ன இருக்கிறது என்று சிலசமயம் தோன்றினாலும் சிலர் தங்கள் பெயரை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள்

மதுரையில் தெரிந்த குடும்பநண்பருடன் அவரது அண்டைவீட்டுக் குழந்தை பெயரிடும் வைபவத்துக்குப்போனோம் குழந்தை சிவப்பாய் அழகாயிருந்தான் பெயர்கேட்டேன்," பெரிய கருப்பு" என்றாள் குழந்தையின் பாட்டி பூரிப்பாக.

"சிவப்பா இருக்கான் குழந்தை, கருப்புனு பேர் வச்சிருக்கிங்களே?'

அவ்வளவுதான் , பெருசு கடும் கோபத்துடன் என்னப்பார்த்து," இங்கிட்டு இருக்கற குலதெய்வத்துக்கு நேர்ந்துக்கிட்டு பொறந்த புள்ளைம்மா இது..அதோட பேரை
கிண்டல் செஞ்சா உன்னை விடாது (அந்த) கறுப்பு" என்று எச்சரித்தாள்!

ஒருகல்யாணத்தில் அந்த 70வயது முதியவர் வாசலிலேயே பரிதவிப்பாக நின்றுகொண்டிருந்தார்,
அசாத்திய கவலைக்கோடுகள் நெற்றியில் 70MM திரையாய்!


நான் அருகில் சென்று அக்கறையாய் விசாரித்தேன்

"என்னங்க ,என்னாச்சு, மண்டபம் உள்ளே போகாமல் இங்கயே நிக்கறீங்களே? என்கூட வரீங்களா நான் அழைச்சிட்டுப் போகட்டுமா உங்களை?"

"இல்லைமா ஆட்டொவுல என்கூட வந்த பேபியக் காணம்மா.. " தொண்டை அடைக்க அவர் கூறினார்.அழுதுவிடுவார்போல இருந்தது.

"ஐய்யெயோ..?" மனசுக்குள் ஆட்டோக்காரர் குழந்தையை கடத்திக் கொண்டு போய்விட்டது போலவும் அது கைகாலை உதைத்து அழுவது போலவும், 'நாலு லட்சம், ஆனேக்கல் ரோடுல அடர்த்தியான காட்டுல, புளியமரத்து அடில் கொண்டுவந்துவை,அப்போதான் உன் குழந்தையை தருவேன் இல்லேன்னா சதக் சதக்.." என்று கன்னாபின்னாவென்று தேவையான பொழுதில் வராத கற்பனை அப்போது காட்சிகளாய் ஓட...


'ஒருவார்த்தை பேச ஒருவருஷம் காத்திருந்தேன்..' என்று என் செல்போன் சிணுங்கியது.

"ஹலோ?"

4 நிமிஷம் பேசிமுடித்துவிட்டு திரும்பினால் அந்த முதியவர் முகம் பிரகாசமாயிருந்தது.

நான் அவரிடம்."சாரி சார்..போன் வந்திடிச்சி..பேபி விவரம் சொல்லுங்க நான் தேடிப்பாக்கறேன்..இல்லேன்னா பக்கத்ல தான் போலீஸ் ஸ்டேஷன் இருக்கு.." என்றேன் அவசர அவசரமாய்

"பேபி வந்தாச்சுமா..ஆட்டோக்கு சில்லரைகொடுக்க அம்பது ரூபாயை மாத்த பக்கத்துகடைக்குதான் போய்ருக்கு பேபி..நாந்தான் பயந்துட்டேன்.. கமான் பேபி..கல்யாணமண்டபம் உள்ளே போகலாம் நாம.." என்று என்னிடம் கூறியபடியே அவர் குலாவிக் கை பிடித்த அந்த பேபியைப் பார்த்தேன்

"ஓஹோ உந்தன் பேபி இதுதானா உந்தன் பேபி?" என்று அந்த 65வயது அம்மாளைப் பார்த்து என் வாய் முணுமுணுத்தது.


தவமாய் தவமிருந்து (சேரன்படம் இல்லீங்க நிஜமாவே) பத்துவருஷம் கழித்து ஒரு அழகான பெண்குழந்தை பெற்றாள் என் கன்னட தோழி ஒருத்தி. குழந்தையின் முதலாவது பிறந்தநாளை தனது புது வீட்டில் கொண்டாடப் போவதாகவும் அவசியம் வரவேண்டுமென்றும் சொல்லி இருந்தாள்.

புறப்படும்போது அடுத்ததெருவிலிருந்து வித்யா போன் செய்து," என் தம்பி திவாகர் ப்ளஸ் டூ முடிச்சி லீவுக்கு வந்துருக்கான் அவனுடன் என் புத்திரபாக்கியங்களை அனுப்பிட்டு பத்து நிமிஷத்துல நான் உன் வீடு வரேன் நானும் நீயும் சேர்ந்து போகலாமா?" என்று கேட்டாள்

"உன் தம்பிக்கு நம்ம ·ப்ரண்ட் வீடு தெரியுமா?"

"சொல்லீருக்கேன் நாலாவது தெருல மூணாவது புதுவீடு, வாசல்ல ஜெய்கலா னு க்ரானைட்ல பள பள னு பேர் இருக்கும்னு..'

"உன் தம்பி படா ஸ்மார்ட் ஆச்சே..நைஜீரியால இருந்தாகூட கண்டுபிடிச்சி போயிடுவான்...உன் வால்களை அவன்கூட அனுப்பிட்டு நீ நிதானமா வா, நானும் நீயும் சேர்ந்து போகலாம்.."

இருவரும் பட்டுபுடவை சரசரக்க அந்தப் புது வீட்டிற்குள் நுழைந்தோம்

மண்டபமேடையில் எங்கள் கன்னடத்தோழியின் குழந்தையை திவாகர் தூக்கி வைத்துக் கொண்டு ஏதோ கொஞ்சிக் கொண்டிருப்பது கூட்ட நெரிசலில்
தெரிந்தது. தோழி எங்களுக்குப் பின்னே வாசலில் வந்த யாரையோ வரவேற்கப் போயிருந்தாள்

திவாகர் அருகில் தோழியின் கணவர் நஞ்சுண்டையா அவனையே முழித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.சங்கட சிரிப்பு வேறு அவர்முகத்தில் விட்டுவிட்டு வந்துகொண்டிருந்தது.

நாங்கள் இருவரும் பரிசுப்பொருளுடன் மேடை நோக்கி நடந்து போனபோது, திவாகர் குழந்தையிடம்," ஹேய் ஜெய்குட்டி ஜெய்கலாகுட்டி..அழகுசெல்லம்.. என்
தேவதையே..ஜெய்கலாகுட்டி...யே கலா, கலா! கண்ணடிச்சிக் கலக்கறா.."என்று வாய் நிறையக் கொஞ்சிக் கொண்டிருந்தது கேட்டு நானும் வித்யாவும் அதிர்ந்துபோனோம்

அடப்பாவி திவாகர்! ஜெய்கலா,குட்டியா?

குழந்தையின் அப்பா இப்படி முழிக்கக் காரணம் இதுதானா?

வேகவேகமாய் வித்யா தன் தம்பியை ஒரு ஓரத்திற்குக் கடத்திச் சென்று,:"டேய் மடையா.. என்னடா ஜெய்கலான்னு குழந்தையக் கொஞ்சறே?" என்று சீறினாள்

"ஏன் அதுதானே குழந்தையோட பேரு? புதுவீட்டுக்கும் அதைத்தானே பேரா வச்சிருக்காங்க?"

"ஐய்யோ..அது குழந்தையோட அம்மா பேருடா..குழந்தை பேரு நிமிஷாம்பா.. அழைப்பிதழ்ல பாக்லயா நீ?"

" ஜெய்கலா மாடர்னா இருக்கே அதுதான் குழந்தை பேருன்னு நினைச்சேன், கொஞ்சினேன்..இதென்ன நிமிஷாம்பா மணியாம்பான்னு ஓல்ட் நேம் குழந்தைக்கு வைப்பாங்கன்னு எனக்குத்தெரியுமா?'

" நிமிஷாம்பா என்கிற சக்திதெய்வத்துக்கு வேண்டிப் பிறந்த குழந்தை அதான் அந்தப்பெயரை வச்சிருக்காங்க..நல்லவேளை..என் ·ப்ரண்ட் ஜெய்கலா ஹஸ்பண்ட்டுக்கு தமிழ் தெரியாதோ நீ பிழைச்சியோ? ஆனாலும் தன் ஒய்·ப் பேரையே பயல் திரும்பத்த்ரும்ப சொல்றானேன்னு உன்னையே அவர் முறைச்சிருக்கார்!"

"அப்படியா சாருக்கு தமிழ் தெரியாதா அப்படின்னா இன்னும் அதிகமாக்கொஞ்சி இருப்பேனே? அநியாயமா நீங்க ரண்டுபேரும் வந்து கெடுத்துட்டீங்களே?" என்ற
தனது உடன் பிறப்பை உதைக்கத் தயாரானாள் வித்யா!!
*************************************************************************************

13 comments:

  1. ரொம்ப நாளைக்கு முன்னாடி ஜூனியர் விகடன்ல படிச்சது...ஏதோ கிராமத்து பிரச்சனை பத்தி எழுதின கட்டுரை...ஒரு இஸ்லாமிய பெண்மணி கிட்ட அவரோட கணவர் பெயர் கேட்டு இருக்காங்க...அதுக்கு அவங்க சொன்னது...ரெண்டு அம்பது ஒரு முகமது...அதாவது நூர்முகமது....

    ReplyDelete
  2. :))

    நல்லா இருக்குங்க!

    ReplyDelete
  3. ஷைலஜா அக்கா,

    //" ஜெய்கலா மாடர்னா இருக்கே அதுதான் குழந்தை பேருன்னு நினைச்சேன், கொஞ்சினேன்..இதென்ன நிமிஷாம்பா மணியாம்பான்னு ஓல்ட் நேம் குழந்தைக்கு வைப்பாங்கன்னு எனக்குத்தெரியுமா?'//

    இது சூப்பர் :-)

    நிமிஷாம்பானு இதுவரை பேரு கேள்விபட்டதே இல்லை :-)

    ReplyDelete
  4. //"ஐய்யெயோ..?" மனசுக்குள் ஆட்டோக்காரர் குழந்தையை கடத்திக் கொண்டு போய்விட்டது போலவும் அது கைகாலை உதைத்து அழுவது போலவும், 'நாலு லட்சம், ஆனேக்கல் ரோடுல அடர்த்தியான காட்டுல, புளியமரத்து அடில் கொண்டுவந்துவை,அப்போதான் உன் குழந்தையை தருவேன் இல்லேன்னா சதக் சதக்.." என்று கன்னாபின்னாவென்று தேவையான பொழுதில் வராத கற்பனை அப்போது காட்சிகளாய் ஓட...
    //

    அதிகமா தமிழ் படம் பாக்கறதோட எஃபக்ட் :-)

    ReplyDelete
  5. // அவரோட கணவர் பெயர் கேட்டு இருக்காங்க...அதுக்கு அவங்க சொன்னது...ரெண்டு அம்பது ஒரு முகமது...அதாவது நூர்முகமது..//

    ஸ்யாம்! வாங்க! ரெண்டு அம்பது மாதிரி சிக்ஸ்ஃபேஸ்,, eye 1000,
    இன்னும் இருக்கும் இல்ல?:)

    ReplyDelete
  6. நாமக்கல் சிபி said...
    :))

    நல்லா இருக்குங்க! //

    நல்லாருக்கா நாமக்கல் நிபி சாரி(நறநறங்காதீங்க):) சிபி ? நன்றி!
    ஷைலஜா

    ReplyDelete
  7. நிமிஷாம்பானு இதுவரை பேரு கேள்விபட்டதே இல்லை என்று சொல்லும் வெட்டிப்பயல் பாலாஜீ! மைசூர் போறப்போ ஸ்ரீரங்கப்பட்டினம் போனீங்களா அங்க காவிரி சங்கமம் போனீங்களா ரொம்ப பிரசித்தம் ஆச்சே அது த்ரிவேணீ சங்கமம் வடக்குல இருக்கறமாதிரி. இறுதிக்கரியங்கள் நடத்த பலர் அங்கு வருவாங்க..அதிருக்கட்டும் அந்த சங்கமம் நுழைவுவாயிலில் ஒரு சக்திவாய்ந்த கோயில்.உங்க பிரர்த்தனையை நிமிஷத்தில் நிறைவேத்திவைக்கும் தெய்வம்.பேரு நிமிஷாம்பாஅம்மன்.நம்ம கருமாரி அம்மன் மாதிரி கர்நாடக ஜனங்களுக்கு அது! கொத்தாயித்தா?:)

    ReplyDelete
  8. இதெ படிக்கும் போது 2005ல் நான் எழுதியது நினைவுக்கு வந்தது. அதான் மீள்பதிவாக இங்கு:

    என் பெயர் படும் பாடு!!!

    எனது முழுப்பெயர் கலைவாணி,
    ஆனா நா என்னை எல்லோருக்கும் கலை அப்படீன்னு அறிமுகப்படுத்துவேன். சும்மா ஒரு படம் காண்பிப்பதற்காக அல்ல. உதாரணமா அன்பே சிவம் படத்திலெ மாதவன் செய்யற மாதிரி (அன்பரசு – அர்ஸ்)… இது ஒரு நீண்ட வேதனைக் கலந்தக் கதை.
    நான் இங்கு வந்தப் பிறகு பல விதங்களில் என் பெயர் உச்சரிப்பதை கேட்கத் தொடங்கினேன், இதில் வேதனைக்கலந்த உண்மை என்னான்னா எப்படி மாத்திப் போட்டாலும் என் பெயர் அருமையான அர்த்தங்கள் கொண்ட பல தமிழ் வார்த்தைகளை உருவாக்கிக் கொடுப்பதுதான்.
    நான் முதன் முறையா பல்கலைக் கழகத்தில் சேர்ந்தப்ப எனது பேராசிரியர் எழுதியது:
    அன்பு களவாணி (திருடன் - களவாணிப் பயலெ!)
    சரி இது தட்டச்சு தவறா இருக்கும்னு விட்டுடலாம்…
    அப்புறம் ஒரு வருசம் கழிச்சி, நான் ஒரு அலுவலகத்தில் பயிற்சிப் பெறுவதற்காக சேர்ந்தப் பொழுது அங்கிருந்தவர்கள் சேருவதற்கு முன்னாலெ ஒரு தேர்வு இருக்கு என்றனர்.
    "ஹலோ கிழவாணியா பேசறது?"
    "இல்லை நான் கலைவாணி!"
    "ஓ , மன்னிக்கவும் களவாணி" (மறுபடியும்)
    அதுக்கப்புறம் நா ஒரு முடிவு செஞ்சேன், நம்ம பேரு பெரிசா இருக்கறதனாலெ தான் இந்த மாதிரி பிரச்சனை, நாமளெ கலை அப்படின்னு வச்சிட்டா
    … ஆனா கதை இன்னும் முடிஞ்ச மாதிரி தெரியலெ.
    அதுக்கப்புறம் சமீபத்திலெ நா ஒரு புதிய அலுவலகத்தில் முழு நேர வேலையில் சேர்ந்தேன். முதல் நாள் அனைவருடனும் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
    மேலாளர்..."முதலில் அனைவரும் நம்முடன் இணைந்துள்ள புதிய நண்பரை வரவேற்போம்", "மிஸ் குலை" (வாழைக்குலை) குலைக்குலையாய் முந்திரிக்காய்) (கைத்தட்டல் தொடர்ந்து சிரிப்பு) (டேய் என்னங்கடா..எல்லாரும் சேர்ந்து விளையாட்றீங்களா?)
    அன்னிக்கு ஆரம்பிச்சது…
    ஒருமுறை எனது மேலாளருடன் ஒரு புதியப்பணியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பும்போது…
    "சரி.. கலி… நீங்க இங்கெ எங்களுடன் வேலை செய்வது
    சந்தோசமாக இருக்கிறது.(கலி முத்திப்போச்சு!..)
    அது கலை (எனக்கு இதுத்தேவையா?)
    ஓ.. காளி! (பத்ரகாளி)
    ஹீ… ஹீ…. ரொம்ப நெருங்கிட்டீங்க (ப்போடாங்க்…)
    அதுக்கப்புறம் நா எப்படியோப் போறங்கன்னு என் பெயரை சரியா உச்சரிக்க சொல்லிக்கொடுக்கறதெ முழுசா விட்டுட்டேன்."

    பிறகு ஒரு நாள் காலை நேரத்தில் பணியிலிருக்கும் போது
    "ஹேய், கிளை எப்படி போய்கிட்டிருக்கு? (மரக்கிளை)
    நல்லா இருக்கு (சொல்லிட்டு திரும்பிட்டேன்..நமக்கு எதுக்கு இந்தப் பேர் திருத்தற வேலன்னுட்டு)
    "இப்படித்தானே நீங்க உங்கப் பேரெ சொல்லுவீங்க?"
    (ஆ..ஹா ஆரம்பிச்சுடாங்கய்யா…!!!)
    "ஊ.. .. அது கலை"
    "கொளாய்: (குழாய், குழாயடி சண்டை)(வேணாம்... சொல்லிட்டேன்….)
    "கொலை?"
    மறுபடியும் சொல்றேன், வேணாம்..... (அவனை கொலை செய்து விடலாமா என்று ஒரு கணம் நினைத்தேன்.....)
    "களை?" (களைப் பிடுங்குதல்)
    (ஐயோ...தாங்கமுடியலெயே, வலிக்குது, இன்னும் கொஞ்ச நேரம் போனா அழுதுடுவேன்..)
    "பழகினா, கொஞ்ச நாளிலெ உங்கப் பேர் எனக்கு வந்திரும்னு நெனைக்கிறேன் ஹா, ஹா",
    டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா, தமிழ்லெப் பாத்தா இரண்டே இரண்டு எழுத்துத்தாண்டா!!)
    என்னடா…சந்திரமுகியிலெ தலைவர் "துர்கா" பேரெ தர்கான்னு நக்கலடிக்கிற மாதிரி…நம்ம பேர் ஆயிடுச்சுன்னு நெனைக்கும்போது …. எனது தோழி ஒரு புத்திசாலித்தனமான உபாயம் சொன்னாள்
    அதாவது… எனது பேர் வர்ற மாதிரி வேறு வார்த்தையை சொல்லிச் சொல்ல சொன்னாள்.
    அப்புறம் நான் கலைடாஸ்கோப் என்னும் வார்த்தையைச் சொல்லி (கலை வருது) என் பெயரெ எல்லோருக்கும் சொல்ல ஆரம்பிச்சேன்..
    கலைடாஸ்கோப்பில் வரும் கலை... கலைடாஸ்கோப்பில் வரும் கலை...
    இப்பவும் எல்லோரும் ஒழுங்கா சொல்றதில்லெ. அவங்க சொல்றாங்க கலாய்(கலாய்க்கிறது, கலாய் பூசறது)
    "ஹேய் கலாய்!!?
    "யா?"
    ச்சும்மா உன் பேரெ சொல்லிப் பார்க்கலாமென்னுட்டு…
    ஹா..ஹா…ஹா..
    ஓஹோ.. ரொம்ப நல்லா இருக்கு (தூத்தெறி…)

    ஏதோ வாந்தி எடுக்கிற மாதிரி இருந்தாலும் வாழ்க்கை அமைதியா ஓடிட்டிருந்தது, ஆனா ரொம்ப நாளுக்கப்புறம் திடீர்னு ஒரு நாள்… என்னுடைய கணினியில் இணைய தொடர்பு செயலிழந்துவிட்டது…அதனாலெ நான், வாடிக்கையாளர் உதவியை அணுகினேன் (என் போறாத காலம், அது சென்னையிலிருக்கும் ஒரு அழைப்பு நிலையத்திற்கு (Call Center!) போயிறிச்சி)
    எனக்கு இந்த விசயம் தெரியலெ அதனாலெ நா அமெரிக்க உச்சரிப்பிலெ பேச ஆரம்பிச்சேன்..
    "உங்கள் பெயர் மேடம்
    "கலை"
    "என்ன, திரும்பவும் சொல்லுங்கள் மேடம்
    "கலை… கலைடாஸ்கோப்பில் இருப்பதுப்போல"
    "எனக்கு சரியாகப் புரியவில்லை மேடம், உங்க தொடர்பு எண்ணைக் கொடுத்தால் நான் கோப்பில் பார்க்கிறேன்..."
    (ஸ்… எண்ணைக் கொடுத்தேன்)
    "ஹோ… கலைவாணி, சரியா" (ஒரு மாதிரி நக்கலானக் குரலில்… )
    (அட பாவி மக்கா… நீ நம்மூரா??!! அமெரிக்கா உச்சரிப்பை நிறுத்திவிட்டு
    நம்மூர் உச்சரிப்பில்..)
    அந்தப்பக்கம் என்ன நினைக்கிறாங்கன்றது எனக்கு நல்லா தெரிஞ்சது…. பேரெ பாத்தா
    "உர்ஸ் பாம்மிங்லி" ன்னு போட்ற மாதிரி இருக்கு
    … ஸீனெப் போட்றது மட்டும் பிரின்ஸஸ் டயானா ரேஞ்சு க்கா!!!
    "அண்ணா… சத்தியமா நா அந்த மாதிரி இல்லீங்கண்ணா!!!"

    ReplyDelete
  9. நல்லா காமெடிங்க! ரசிக்கும் படி எழுதுரீங்க!

    ReplyDelete
  10. மஞ்சூர்ராசா! நீங்க அனுப்பினது முன்னமே படிச்சிருந்தாலும் இப்போ படிச்சதும் ஒரே சிரிப்பிதான் போங்க!

    ReplyDelete
  11. காட்டாறு!(காட்டுல சிங்கம்தானிருக்கும் ஆறு உண்டா?:)) கருத்துக்கு நன்றிங்க.

    ReplyDelete
  12. ஹைய்யோ..சிரிச்சுச்சிரிச்சு............

    மஞ்சூரும் விடலை (!) பார்த்தீங்களா?

    ReplyDelete
  13. நன்றாக இருக்கிறது. ஆனா ஃபேஷனா பேர் வைக்கிறேன் அப்படினு பண்ணற அலும்பு தாங்கல.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.