Social Icons

Pages

Monday, August 24, 2009

2050 லவ்ஸ்டோரி!







அனி வீடுவந்தபோது அவள் அப்பாபெரியசாமி ஆடவர்மலர் பத்திரிகையில் ஆழ்ந்திருந்தார்.

“டாட்! இன்னமும் இந்த கையில் வச்சி புக் படிக்கிற பழக்கத்தை விடலையா நீங்க? அதான் உங்க வாட்ச்லயே நெட் கனெக்‌ஷன் இருக்கே அதுலபடிக்கவேண்டியதுதானே?” என்றாள், தனது பேனாபோன்ற ஒரு சாதனத்தைத் திறந்து மின்னஞ்சலைப்பார்த்தபடி.

“என்னதான் சொல்லும்மா புஸ்தகம்னா நாங்க அந்த நாள்ள குமுதம் விகடன்லாம் கைல எடுத்துவச்சிட்டு ஆழ்ந்து படிக்கிற சுகம் இருக்கே அதுக்கு ஈடு ஆகாதுஅனிதா…” என்று ஆரம்பித்தவரைக் குறுக்கிட்டாள் அனி.

‘கால் மீ ‘அனி’ டாட்! நான் இதை முதல்லயே இந்தக்கதையை எழுதப்போகும் ஷை(லஜாபாட்டி)கிட்டயும் சொல்லி எச்சரிச்சிட்டேன்…இந்த 2050ல அ, னி , தா ன்னு இவ்ளோ பெரிய பெயரை யாராலும் கூப்பிடமுடியாதுன்னுதான் நான் அனி ன்னு மாத்திக்கிட்டேன்..இன்ஃபாக்ட் இருபத்தி ரண்டு வருஷம் முன்னாடி எனக்கு நீங்க உங்க மாம் பெயரான அபிதகுசலாம்பரி என்கிற பெயர் வைக்க நினச்சிங்களாமே?அம்மாதான் பிடிவாதமா அனிதான்னு வச்சதா கேள்விப்பட்டேன்.ரெடிகுலஸ் என்ன இதெல்லாம்? அந்தகாலம் மாதிரியே பெண் அடிமைகளா இருப்பாங்கன்னு நினச்சீங்களா?”


மகள் போட்ட போட்டில் பெரியசாமி பேசாத சாமியாகி விட்டார்.
தனக்குதிருமணம் ஆகும் முன்பு எப்படி இருந்தோம் என நினைத்துப்பார்க்க ஆரம்பித்தார்…
அசைபோடும் பழைய நினைவுகளேஅவரது தனிமைக்குத் துணை.

லஞ்ச் டாட் காமில் மதிய உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு டிவியை ஆன் செய்தார்…

ஏன்ஷியட் நெட் ஒர்க்ஸ் சானலில் பனிக்கால உடையில்விக்ரம், கடும்கோடைகால உடையிலிருந்த ஷ்ரேயாவோடு டுயட் பாடிக்கோண்டிருந்தார்,

சட்டெனத்திரும்பின அனிதா டிவியைப்பார்த்து அலறினாள்.

“ஓ மை காட்! கந்தசாமியா? 2009ல் வந்தபடமா?ஏன் இப்படி பழையபடமாவே வைக்கிறாங்க? டாட் இதெல்லாம் உங்ககாலப் படம்!நீங்கதான் பாக்கணும்! நான் பப் அல்லதுக்ளப்புக்குப்போகப்போறேன் ..மாம் வந்தா பிஸ்ஸா சமைச்சிவைங்கஇல்லேன்னா ஹாங்காங் நுடுல்ஸ் செய்யுங்க… மாம்ஸுக்கு அதான் பிடிக்கும்…. ஆமா எங்கபோனான் என் அருமைத்தம்பி டாம்?”

“தாமோதரனா? என்னம்மா அவன்பெயரையும் இப்படி சுருக்கிட்டே? அவன் டென்த் க்ரேட் ஆச்சேம்மா சின்சியரா படிக்க ப்ரண்ட்வீடுபோனான்”







‘வாட் ?மணி பத்தாகுது இன்னும் டாம் வீடுவரலையா? என்ன டாட் நீங்க பொறுப்பே இல்லாம இருக்கீங்க? ஒரு வயசுப்பையன் இருட்டி இவ்வளோநேரம் வெளில இருக்கான்னு கவலையே இல்லையா? மம்மி ஆபீஸ்போய் உழைப்பாங்களா இல்ல டாம் பத்தி கவலப்படுவாங்களா? நீங்க இப்படி ஆடவர் மலர்புக்படிச்சிட்டு ஆணீயம் பேசிக்கிட்டு இருக்கறது நல்லாவே இல்ல… நைட் மம்மி வந்ததும் உங்களுக்கு நல்ல டோஸ் இருக்கு….சரி நான் கிளம்பறேன் க்ளப்ல ஜீ(வா), ஜா(னி) ஜோ(தி) ரி(ஷி) எல்லாம் வெயிட் செய்துட்டு இருப்பாங்க..பை டாட்’

அனி அந்த சொகுசுக் காரில் ஏறி உட்கார்ந்து ரிமொட்டை எடுத்துக்கொண்டாள்.. நகரப் போக்குவரத்து சந்தடி ரிமோட்டை ஆஃப்செய்யவைத்தது.

.”ச்சேசே ப்ளடி ட் ராஃபிக்…..” என்று அவளே ட்ரைவ் செய்ய ஆரம்பித்தாள்.

கார்கணிணித்திரையில் தர்ம் சிரித்தான்… “ ஹாய் ஹண்ட் சம்!மை ப்ரின்ஸ்! என்றைக்காவது நீ என்னை ஏறெடுத்துப்பார்த்து ஐலவ்யூ சொல்லத்தான் போறேடா? என்கிட்ட என்ன இல்ல,…பழைய நடிகை பாவனா மாதிரி இருக்கேன்னு நீயே ஒருவாட்டி சொல்லி இருக்கே! ஐஞ்சடி அஞ்சங்குல உயரமும் இந்த ரோஜாப்பூநிறமும், கடைஞ்சிஎடுத்த தேகமும் எல்லா காளைகளையும் மயக்கும்போது நீ மட்டும் என்னடா விஸ்வாமித்ர தபஸ் செய்றே? நான் மேனகையா மாறணும்னு நீ எதிர்பார்த்தா ஐயாம் ரெடி யார்!”

திரை நோக்கி பறக்கும் முத்தமிட்டாள்.

அனி யின் புத்தபுது ஜப்பானிய டொகொமோ மாடல்
5 ஜிசெல்போனில்(பிரசவம் தவிர அதில் எல்லா காரியங்களையும் வெற்றிகரமாய் செய்யலாம் என அதைக்கண்டுபிடித்த யென்சிங்மங் சொல்கிறார்) ஜோ(தி) வந்தாள்.

“வாட்ஸ் அப் டீ?”

“ஹேய் அனி…உன் ஆளு , இங்க மர்லின் மால் வந்திருக்கான்..அவன் காரை நான் பார்த்திட்டேன்....அன்பேசிவம்னு காரின் பின் கண்ணாடில கொட்டையா எழுதி இருக்கு, அவனேதான்..'


"ரியலி?'

”யெப் உடனே இங்க வா அனி"

*********************************

மர்லின்மாலுக்குள் அனி நுழையும்போது மெக்டொனால்ட்ஸ் வாசலில் பர்கர் கையோடேயே வந்து வழிமறித்தான் வா(சன்).

சிந்தெடிக் இழைகள்மின்னும் உடையுடன் தெரிந்தான் சராசரிக்கும் அதிகமான உயரம் ஆனால் ஆண்மையின் கம்பிரம் அதில் அதிகமாகவே இருந்தது.முகவெட்டில் பழைய நடிகர் ஷாரூக்கான்,சிரிப்பில் பழைய மாதவன்.துடிப்பில் பழையசூர்யா மொத்தத்தில் 2050ன் புதுமுகம் சாகர் போல அட்டகாசமாய் இருந்தான்.

“ ஹேய் அனி உனக்காகவே நான் வாழ்கிறேன்” என்றான் போதையான குரலில்.

“முதல்ல வழிவிடு…நான் அர்ஜண்டா போகணும்”

“அனி மை ஹனி!மை ப்ரெட்டி கேர்ல்! என் இனிய அழகுதேவதையே…!எவ்வளவு காலம் ஆனா என்ன தமிழ்ப்பெண்களுக்கு என்றும் தனி அழகுதான்.உன் நினைவில் நான் இருக்கேன் !அனி !இன்னும் நான் யார்கூடவும் டேட்டிங் வச்சிக்கல… பிகாஸ் உன்கூடத்தான் வாழணும்னுதான்..அனி!நான் டேட்டிங் கேட்டால் உடனே ஓடி வர ஆயிரம் பேர் இருக்காங்க ஆனா எனக்கு அவங்க வேண்டாம்.லுக் அனி ! நான் நாலுகோடி(டாலர்) சொத்துக்கு ஒரே வாரிசு.என்னை ஏன் நீ கல்யாணம்செய்துக்கக்கூடாது?”

“ஹலோ ஹலோ கொஞ்சம் அடங்கு….நான் தான் தர்மை லவ்பண்றேன்னு உனக்கு தெரியுமில்ல?”

“அதனால் என்ன அனி~ இ து 2050… அவனைக் காதலிச்சிக்கோ.. என்கூட டேட்டிங் வச்சிக்கயேன்..”

“வா! நான் மாடர்ன் கேர்ல்தான்… ஆனா உண்மையான காதலை மதிக்கிறவள். இன்னிக்கு விஞ்ஞானம் அசுரவேகத்துல வளர்ந்து மனித உறவுகளை சீரழிச்சிட்டிருக்கு… ஆண் பெண் இணைப்பை பயாலஜிகல் ஈவெண்ட்டா பாக்றாங்க ஆனா நான் மனசோட சம்பந்தப்படுத்திப் பாக்றேன் எனக்கு ட்ரூ லவ் தான் பெருசு என்னால் உன்மனசு கெட்டுருந்தா ஸாரி..குட்பை”

வாசனை ஒருவழியாய் கழற்றிவிட்டு ஜோதியை மொபைலில் தேடினாள். அவள் அப்போதுதான் ரெஸ்ட்ரூமிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.

“ஜோ! நான் 'டாய்ஸ் ஆர் அஸ்' கடைவாசலில் நிக்கறேன்” தகவல் கொடுத்தாள்

“யா யா…என் செல்லுல நானும் உன்னைப்பார்த்துட்டேன்.. அங்க வரேன் இரு”

ஜோ வந்ததும்
“அனீ….இந்த காம்ப்லெக்சில் தர்ம் இருகிற இட ம் சின்னகோயில் .அ துக்கு கார்லதான் போகணும்டி ..24வது மாடி”என்றாள்.

“மொபைலில் கோயிலைத்தேடினியா?”

“தேடி அங்க அ வ னைப் பார்த்தும் ஆச்சி… வா போகலாம்”

ஹைட்ரஜன் திரவஎஞ்சினை இருதயப்பகுதியில் தாங்கி இருந்த அந்த அதிநவீன சொகுசுக்கார் வேகமாக மேல் தளம் ஏறியது. பார்க்கிங் ஸ்லாட்டில் காரை செருகிவிட்டு இருவரும் மூச்சிறைக்க வந்தார்கள்,

அங்கே இருந்த சின்ன பிள்ளையார் கோயிலில் உட்கார்ந்து நெற்றியில் விபூதிப்பட்டை,இடுப்பில் பட்டு வேஷ்டியுடன் பாலும்தெளிதேனும் த ருவதாகவும் பதிலுக்கு சங்கத்தமிழ் மூன்றும் தரும்படியும் மெய்மறந்து பிள்ளளயாரிடம் கேட்டுக்கொண்டிருந்தான் தர்ம்.

“ஹாய் தர்ம்?”

யார் இந்த கணபதி பூஜையில் கரடி என அதிர்ந்து நிமிர்ந்தான் தர்ம்.

அனிஅவன் அருகில் சென்றாள்..ஜோ தான் போவதாயும் தர்மை சரிக்கட்டும்படியும் ஜாடைகாட்டிவிட்டு நகர்நதாள்.

“தர்ம் நான் ரெடியா… டேட்டிங்லாம் எனக்கும் பிடிக்கல வச்சிகிட்டாலும் அது உன்கூடத்தான்.. நம்ம கல்யாணம் எப்போன்னு சொல்லேன் ப்ளீஸ்?”

“லுக் மிஸ் அனிதா…எனக்கு இந்தக்கண்டதும்காதலில் நம்பிகை இல்ல…உன் பார்வைல நான் முப்பதுவருஷம் முன்னாடி இருந்திருக்கவேண்டிய மனுஷன் தான்..அப்படியே இருக்கட்டும்…என்னால உங்க மாடர்ன் லைஃபுக்கு ஈடுகொடுக்கமுடியாது…இதை பலதடவை சொல்லியும் இப்படி நான் எங்கே போனலும் தொடர்ந்து வந்து இப்படிக் கேட்டுதொல்லை பண்றீங்களே?”

“தர்ம் ஐ லவ் யூ.நீ இல்லாம என்னால் வாழவே முடியாது உன் உருவம் என்மனசிலயே பதிஞ்சிருக்கு அங்க வேற யார்க்கும் இடம்இல்லை”

“இந்த வசனமெல்லாம் பழைய தமிழ்சினிமாக்கு லாயக்கு… என்னைவிடு தாயே !நான்போறேன் “

பட்டு வேஷ்டிதடுக்கத் தடுக்க எழுந்த தர்ம் வேகமாய் எஸ்கலேட்டரில் இறங்கி ஓடி பேஸ்மெண்ட்டிலிருந்து காரில் ஏறிக் கொண்டான்.

அனிதா திகைப்புடன் அப்படியே நின்றவள் தன் செல்போனில் அவன்கார்போகும்பாதையை கவனித்தாள்.

கார் ஜெய்நகர் பகுதியில் பத்மஜா வீட்டுவாசலில் நிற்கவும் அதிர்ந்தாள்

“வாட் த ஹெல் இவன் கார்போய் அவ வீட்ல நிக்குது?’

பத்மஜா மௌண்ட்கார்மல் கல்லூரியில் அனியுடன் படித்தவள்.பக்கா பட்டிக்காடு. பாவாடை தாவணி என்று அணிந்து பாவயாமி ரகுராமம் பாடிக்கொண்டிருப்பாள். தன் பெயரை யாராவது பத்து என்று அழைத்தால்,"அபசாரம் ...சுவாமிக்கு ஆகாது" என்று புலம்புவாள்.
அவள்வீட்டிற்கு தர்ம் ஏன் போகிறான்?

அடுத்த பத்தாவது நிமிடம் அனி ,தர்ம் முன் ப்ரசன்னமானாள்.
“தர்ம் திஸ் ஈஸ் டூ மச் .இந்த bad m a ja க்காகவா என்காதலை நீ நிராகரிச்சே ?இவ என்னைவிட எதில உ சத்தி ? பலூன் மாதிரி இருக்கா இந்த பேட்மஜா?”

“பத்மஜா என்றால் பத்மமான தாமரையில் அமர்ந்திருக்கும் திருமகள்.என்று பெயர் .உனக்கு செம்மொழி தமிழும் சரியா தெரியாது தேவமொழி சம்ஸ்க்ருதமும் புரியாது…நுனிநாக்குல ஆங்கிலம் பேசும் நவநாகரீக மங்கை நீ!” தர்ம் சீண்டினான்.

“ ஏய், பேட்மஜா! என் ஆளுடிஅவன் விடு அவனை” என பத்மஜாவை பிடித்துத்தள்ளினாள் அனிதா.

“ மிஸ் அனிதா இதப்பாருங்க….நான்பொறுமையான ஆண்பிள்ளைதான் ஆனா என் காதலிமேல யார் கைவச்சாலும் வெட்டிடுவேன் ஆம்மா?”

தர்ம் உறுமவும் அனிதா அவமானத்தில் முகம் சிவக்க வீடுவந்தாள்.

ஆனால் மறுநாளே ஒரு விபரீதமுடிவெடுத்தாள்.
***************************************************

டிசம்பர்மாதத்திய பனிப்புகை, சாலையில் பரந்து சூழ்ந்திருக்க
அந்த நடுநிசியில் அனி, காரில் ஏறி புறநகர்ப்பகுதியில் இருந்த அந்த மேலைநாட்டுவாசனை கொண்ட காலனிக்குள் காரை செலுத்தினாள் தர்ம் வீட்டுவாசலில் காரை ஓசைப்படாமல் நிறுத்தினாள்.

மெல்ல காம்பவுண்டுக்குள் குதித்தாள்.

நல்ல வேளை வள்கம் சொல்லும் நாய்கள் ஏதுமில்லை

மெல்லிய கான்வாஸ் ஒலியோடு இருபக்கமும் கண்களைத் துழாவினாள், ஹாலின் ஜன்னல் வெண்டிலேட்டரின் கண்ணாடிகளை ஓசையின்றி அகற்றினாள்

மெல்ல உள்ளே உடலை நுழைத்து வளைந்து இறங்கினாள்.

ட்ராயிங் ஹால் ரீடிங் ஹால் அடுத்து வீடு நடுவில் தெரிந்த மாடிக்குச்செல்லும் படிகளில் ஏறி சன்ன நீல நிற வெளிச்சம் தெரிந்த பெட்ரூமுக்குள் போனாள். அங்கு கட்டிலில் கழுத்துவரை கம்ஃபர்ட்டரைப் போர்த்திக்கொண்டு தர்ம் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தான்.

அனி அவன் அருகில்வந்து நின்றாள்.

“ஹேய் ஹாண்ட்சம் .தூக்கத்திலயும் நீ அழகுடா செல்லம்!இந்த அழகு எனக்குக்கிடையாதா?அப்படி என்றால் அந்த பேட்மஜாக்கும் கிடைக்கக் கூடாது ,, காதலுக்காக கொலையும் செய்வா இந்த மிஸ்அனி,ஆமா.. ஒழி நீ செத்துப்போ உனக்கு என்கையால்தான் முடிவு”
குனிந்து பலத்தையெல்லாம்திரட்டி கைகளை அவன்கழுத்தில் வைக்கும்போது அவள் கழுத்தை ஒரு வலியகரம் சட்டெனப் பற்றியது

“அவுட்ச்!” சன்னமாய் கூவியபடி திரும்பினாள்.

அவளைஅப்படியே ஓசைப்படாமல் வரும்படி ஜாடைகாட்டி அடுத்த அறைக்கு இழுத்துப்போன உருவம் அங்கு லைட்போட்டது .

வெளிச்சதில் அனிபார்த்தாள். அது ஒரு பெண். ஜீன்ஸும் டிஷர்ட்டும் அணிந்து நரைத்தபாப்தலைக்கு கணிசமாய் டை அடித்திருந்தாள்.வயது அறுபதுகளில் இருக்கலாம்.
பெரியசாமி அந்த நாளில் தான் மிகவும் சிலாகித்துரசித்ததாய் சொன்னதால் அனிதா நெய்ல்டாப்பில் கஷ்டப்பட்டுப்பார்த்த ஏய் படத்து நடிகை நமீதாபோலவும் தெரிந்தாள்.

“நான் தர்ம்மின் மாம்..நீ யார்?” என்றாள் அதட்டும்குரலில்

“நான் ,நா…ன்…” திணறினாள் அனி.


“பார்த்தா நல்லபடிச்சபொண்ணா தெரியற… நீ காரைநிறுத்தி உள்ளகுதிச்சி ஹால்ஜன்னல் கண்ணாடிகளைநகர்த்தி என் சன்னோட ரூம் போகிற வரை நான் உன்னை கவனிச்சிட்டு தான் இருந்தேன் ..இங்க எல்லாஇடத்திலும் அலார்ம் இருக்கு..விரல அமுக்கினா போலீஸ் வந்துடும் ..செக்யூரிடி துப்பாக்கி உன்மேல நீண்டுடும ஆ னா நான் செய்யல பிகாஸ் உன் துணிச்சல் எனக்குப்பிடிச்சிருக்கு. ப்ரேவ்கேர்ல்! உன்னைமாதிரி நானும் துணிச்சல்காரிதான்
சரி எதுக்குவந்தே ?ஏன் என் பையனைக்கொலைசெய்ய நினச்சே?”

அனி தயங்கிப்பிறகு விவரம் சொன்னாள்.கடைசியில்
“அத்தை என்னைப் புரிஞ்சுக்குங்க உங்க மகனை உயிராகக் காதலிக்கிறேன்…தர்ம் இல்லேன்னா எனக்கு வாழ்வேஇல்ல”கண் பனித்தாள்.

“ரொம்பதமிழ் சினிமா பார்த்திருக்காங்க உன் அம்மா,நீ வயத்துல இருகக்றப்போன்னு நினைக்கிறேன்..தர்ம் மீது நீ கொண்ட காதலை நான் மதிக்கிறேன் …சரி இப்போ என்னோடுவா” என்றாள்.



அவளோடு அந்த அறையில் நுழைந்த அனி, அங்கு நிறைய சோதனைகுழாய்கள் பிப்பெட்டுகள்,ப்யூரெட்கள் இருப்பதையும்பார்மலின் நெடி அடிப்பதையும் உணர்ந்தாள். .கண்ணாடிஜாடிகளில் ரசாயனதிரவத்தில் தவளைகள் மிதந்தன சதைத்துணுக்குகள் பாலிதீன்பைகளில் ..மூட்டைமூட்டைகளாய்.

குரங்கு ஒன்று விட்டத்திலிருந்து க்ர்ர் என்று அசிங்கமாய் சிரித்தது. கேரட்டைக்கடித்துக்கொண்டு வெள்ளை முயல்கள் இரண்டும் கூண்டிற்குள் ஓட்டப்பந்தயம் நட த்தின. ஒரமாய் சின்ன மேஜைமீது சாதுவாய் வெள்ளைஎலிதூங்கிக்கொண்டிருந்தது.

“மேடம் நீங்…. நீங்க?”குழப்பமும் திகைப்புமாய் அனி கேட்டாள்.

“நான் ஒரு சயின்டீஸ்ட் பேர் குந்தளா தேவி.செல்லமா’குந்த்!’ அனி! என்கதை ரொம்ப சோகமானது முப்பது வருஷம் முன்னாடி எனக்கு கல்யாணமாகி அந்த உறவில் பிறந்த குழந்தை இறந்துபோனது அதில் ரொம்பமனம் உ டைஞ்சிபோனேன்.
அ ப்போது என் கவனத்தை திசைமாற்ற க்ளொனிங் துறையில் கவனம் செலுத்தினேன். என் கணவரும் இதுக்கு சம்மதித்தார். என்னோட ரண்டாவது குழந்தையை க்ளோனிங் முறைலதான் பெற்றேன் அவன்தான் தர்ம்… அடுத்து அர்ஜ் ,பீம் .நகுல், சகா ன்னு மொத்தம் அ ஞ்சுபையன்கள் எனக்கு .

எல்லாருமே ஒரே அச்சில் வார்த்த மாதிரி இருப்பாங்க .அதனால குழப்பம் வேண்டாம்னு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு ஊ ர்ல அனுப்பி படிக்கவச்சிட்டேன். தர்ம் மட்டும் இங்க பெங்களூர்ல என்கூட இருக்கான்..வருஷம் ஒருமுறை எல்லாரும் இங்க வருவாங்க.. ஒருவாரம் வீட்லயே இருப்பாங்க சேர்ந்து வெளில போக மாட்டாங்க…..இப்போ இங்க தான் இருக்காங்க….

அனி! உனக்கு தர்ம் கிடைக்கலேன்னா என்ன, மீத நாலுபேர்ல யாரையாவது செலெக்ட் செஞ்சிக்கோயேன்? எல்லாருமே க்ளோனிங் கைஸ்! லுக்கிங் நைஸ்! அவங்களில் ஒருத்தனுக்கு கண்டிப்பா என் கண்ணுக்குபழையநடிகை ஐஸ்வர்யாராய் மாதிரி இருக்கற உன்னைப்பிடிச்சிடும். நான் கல்யாணம் செஞ்சிவைக்கிறேன்…”

குந்தளாதேவி இபடிச்சொல்லும்போது, “ஹாய் மாம் யாரோட பேசிட்டு இருக்கிங்க?’ எனக்கேட்டபடி வந்த நால்வரையும் பார்த்தாள் அனி, அடுத்தகணம் மயக்கம்போட்டு விழுந்தாள்.



*****பிகு:)************************************************************
ஓண்ணு ரண்டுவார்த்தைகள்+தலைப்பில் மட்டும் மாற்றம் செய்து மீள்பதிவு! .
மேலும் படிக்க... "2050 லவ்ஸ்டோரி!"

Wednesday, August 19, 2009

GEMSHOW (அல்லது) கல் எல்லாம் மாணிக்கக் கல் ஆகுமா?!






கோயம்பேடு மார்க்கெட்டுல கூறுகட்டி காய்கறிவிக்கறமாதிரி முத்து பவழம் கிறிஸ்டல் ஜேட் ப்ளூசஃபையர் இன்னபிற கற்களை அமெரிக்கத்தலைநகரில் (வாஷிங்டன்)விற்றுக்கொண்டிருந்த இடத்துக்கு ஒரு நன்னாளில் போனதை விவரிக்கவே இந்தப்பதிவு!


நவரத்தினங்களில் இந்த மாணிக்கம் என்கிற கல்லுக்கு ரொம்பவே மதிப்பு! Ruby இதுக்கு ஆங்கிலத்துலபேரு.

மாணிக்கத்திலும் பல தினுசுகள்.


Adelaide ruby" is a common name for almandine garnet,
"Cape ruby" is a common name for pyrope garnet found in South Africa; "Arizona ruby" and "Colorado ruby" are common names for pyrope garnet.

"American ruby" and "Mont Blanc ruby" are really garnet or rose quartz.

"Bales Ruby" is really pale red spinel.

"Bohemian ruby", "Montana ruby" and "Mountain ruby" are really red garnet.

"Brazilian ruby" is really pink or "fired" topaz, or pink tourmaline.





இப்படி ஒவ்வொரு கல்லுக்கும் பலதினுசான வடிவங்கள் தோற்றங்கள் அவைகளை பல்லாயிரம் அல்லது லட்சக்கணக்கில் வியாபாரத்திற்க்கொண்டுவந்து வைக்கும் இடம்தான ஜெம் ஷோ!







அதைக்கொட்டியும் மாலையாய் கட்டியும் வச்சிருக்காங்க ! வைரம் பிளாட்டினம் எல்லாம் கண்ணாடி ஷோகேசிலிருந்து கண்ணடித்தது.

.


எதைப்பார்க்க எதைவிட? ஜம்னு தான் இருக்கு ஜெம்ஷோ!


அமெரிக்கால இருக்கறவங்களுக்கும் அவங்கவீடுகளுக்கு என்னைமாதிரி வந்துபோறவங்களுக்கும் இதுதெரிஞ்சிருக்கும்

அதனால அப்படிப்பட்டவங்க அடுத்த சிலவரிகளை ஸ்கிப் பண்ணிடுங்க!

அமெரில்லால 30முக்கிய ந்கரங்களில் இந்த ஜெம் ஷோ சில(1967முதலாம்) வருஷங்களா நடத்தறாங்க...நம்ம ஊர் கல்யாணமண்டபம் மாதிரி நாலுமடங்கு பெருசா இருககற கட்டிடத்துல நூத்துக்கண்க்கான ஸ்டால்கள்.

உலகத்தின் அத்தனை விதமான கற்களும்(கூழாங்கல்போன்ற ஏதோகல்லில் கூட மோதிரம் கைக்குப்ரேஸ்லெட் என்றுசெய்து வைத்திருந்தனர். ”wow! amazing! awesome!" என்று அதனை அந்நியமக்கள் சிலர் சிலாகித்துக்கொண்டிருந்தனர்).

ஜெம்ஷோ நடக்கும் இடத்துக்குள்

உள்ள நுழைய ஆறுடாலர் நுழைவுக்கட்டணம் முன்னே இருந்ததாம் இந்தவாட்டி இலவசக்கூப்பன் கொடுத்திருந்தாங்க. அதைக்காண்பிச்சி நுழைஞ்சா வாயிலில் ஒரு காவல்காரர் கூப்பனைவாங்கிட்டு இடதுகைமணிக்கட்டுல OK அப்படீன்னு entryஸ்டாம்ப்பினால் ஒத்தி எடுத்தார்...(.மறுநாள்குளிக்கிறவ்ரை இது தேர்தல்ஓட்டுமசி மாதிரி ஒட்டிட்டு இருக்கு!)

பேருக்கு ஐஞ்சாறு ரோஸ்நிற உடம்பு போலீஸ்காரர்கள் நுழைவு வாயிலில ஒருஓரமா பயமுறுத்தாமல் கருணைக்கண்களோடு நிக்கிறாங்க.

இவங்களை நம்ம ஊர்க்காரங்க மாமா என்கிறாங்க பெண்போலீசை மாமிங்கறாங்க அங்கேஒரேஒரு அழகானமாமிகண்ல தென்பட்டாங்க,

உள்ள நுழைஞ்சதும் ஏதோ தேவலோகம்மாதிரி காட்சி அளித்தது. பலஸ்டால்களில் மணிகளின் விறபனைக்கு அழகழகான பெண்(மணிகள் பள) பலர்!...

.கல்யாணத்துக்கு வைரமோதிரத்தை செலெக்ட் செய்துகொண்டிருந்தது வைர ஸ்டாலில் ஒரு அமெரிக்கஜோடி .

pretty! wow ! என்று இருவரும் சில மோதிரங்களை அணிந்துபார்த்தபடி புகழ்ந்துகொண்டார்கள்..




முத்தானமுத்தல்லவோன்னு பாடலாம்போல முத்துச்சரக்கள் ஆயிரக்கணக்கில் சரம் சரமா
கோல்கேட்வெண்மையில், தந்தக்கலரில் லேசா மஞ்சள்பூச்சோடு என காணப்பட்டது கோலிக்குண்டு சைசிலிருந்து கடுகு அளவுவரை எல்லா மணிவகைகளும் இருந்தன. ஒரிஜினலைபோல டூப்ளிகேட் கற்களும் சொன்னாலேதவிர தெரியாத வகையில் ஏமாற்றின:).


எத்தனை வண்ணங்கள் அப்பப்பா!

சிவப்புன்னா அதுல அடர்த்தியான சிவப்பிலிருந்து மிகமென்மையான சிவப்புவரை ஏழுவிதங்கள் அதுபோல எல்லா வர்ணங்களிலும்.

இயற்கையில் இத்தனை நிறங்களான்னு கவிதை எழுதலாம்போல கைதுறுதுறுத்ததுன்னா பாத்துக்குங்களேன்!

எதைபாகக்றது எதைவிடறதுன்னே தெரியல!

மாணிக்கச்சரங்கள் (தங்கத்தில் கட்டிய சரமாகவோ நெக்லசாகவோ இல்லை அப்படியே இயற்கையாக ஒரு நூலில்மட்டும் கோக்கப்பட்டு) அந்த விளக்குவெளிச்சத்தில்கண்ணைப்
பறித்தன.

இந்த ஸ்டாலில் நல்லகூட்டம் நானும்
எட்டிப்பார்த்தேன்.

இக்கட ச்சூடு அக்கடச்சூடு என்று ஒரே சுந்தரத்தெலுங்கு நிறையவேகேட்டது.
கடைக்காரர் ஜப்பான்காரர்போலத்தெரிந்தார்

அவர் ஸ்டாலில் ரூப் தேரா மஸ்தானான்னு பாடலாம் போல ரூபி சிவந்திருந்தாள்.

ஆஹா!

மாணிக்கம்!
எத்தனை உசத்தியான கல் இது! அபிராமிபட்டர் அன்னையைப்பாடும்போது முதல்பாடலிலேயே உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்கிறாரே!

மாணிக்கங்கட்டி வயிரமிடைகட்டி. ஆணிப்பொன்னாற்செய்த என்று பெரியாழ்வார் இந்தக்கலைத்தான் முதலில் கொண்டுவந்து கண்ணனுக்கு வண்ணத்தொட்டில் கட்டுகிறாரே!


சிலம்பில்மாணிக்கப்பரல்! (சிலப்பதிகாரமும் கண்ணகியும் நினைவுக்கு வரணுமே இங்க?) எனக்கு பூம்புகார்படம் புகையாய் ரீவைண்ட் ஆகியது. லேசா விஜயகுமாரியின் நீண்ட(ஒட்டு? கூந்தலும் உருட்டுமுழியும் கூடவே நினைவில்வந்தன!

மனிதருள்மாணிக்கம் என்கிறார்கள்



கல்லெல்லாம் மாணிக்கக்கல் ஆகுமா?


ஆகாதுதான் கண்ணதாசரேன்னு கவிஞருக்கு பதில் சொல்லியபடி


மாணிக்கத்தைப்பார்ததும் மலர்ந்த நான் என் கணவரைத்திரும்பிப்பார்த்தேன் ..காணவில்லை அங்கு.

தெரியுமே,.

இதுமாதிரி இடங்கள் துணி,நகைக்கடைகள் எல்லாம் உடன்வந்தால் எனக்கும் அவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாததுபோல வேறுபுறம் வேடிக்கைபார்த்து நிற்பார். துப்பறிந்து அவரை இழுத்துவந்து .”மாணிக்கம் பாருங்க”

என்றேன் கிசுகிசுப்பானகுரலில்.

”ஆ மாணிக்கமா? என்கூட பெங்களூர்ல ஒர்க் பண்ணிட்டுவேறகம்பெனிமாறிபோன அந்த டூல்ரூம் டிபார்ட்மெண்ட்மாணிக்கமா ? வாவ் ! அதுவும் இங்கயா? நல்லவேளை..பொழுதுபோகாம இந்தமணிக்கூட்டதுல மாட்டிட்டு தவிச்சிட்டு இருக்கோமேன்னு நினச்சேன் பேச்சுத்துணைக்கு நல்ல ஆள் கிடைச்சாரு..எங்கே மாணிக்கம் எங்கேமாணிக்கம்(maani come)! ” என்று பரபரத்தார்.

இடுக்கண்வருங்கால்மட்டுமல்ல இப்படியொரு இக்கட்டான நிலமையிலும் சிரிச்சிப்பழக்கம் எனக்கு ஆகவே சிரித்துதொலைத்துவிட்டு விவரம்கூறினேன்

‘ ரூபி அதாவது மாணிக்கம் இதான்பாருங்க அழகா இருக்கு என்ன ஒரு ஒளிபாருங்க? ஜோரா இல்ல? ”!


ஏதோ துர்வஸ்துவைப்பார்க்கிறவர்
போலபார்த்துவிட்டு.” ஓ இதானா? மஞ்சளா இருந்தா தங்கம் அதுதான் உன்னைக்கல்யாணம் செய்தபின்னாடி தெரிஞ்சிட்டேன் மத்தபடி நான், இந்த நவரத்தின கல் பத்தின அறிவு இல்லாத ’கல்’ லாதவன்” என்று சொல்லி நகர்ந்தார் என் தங்கமான புருஷன்!

மாணிக்கத்தின விலையைக்கேட்டதும் அதை எனது இந்திய மூளை ரூபாயில் பெருக்கிப்பார்த்து அம்மாடியோவ் என வாய் முணுமுணுத்து மனசு இப்ப வேணாம் என்று முடிவெடுத்தது.


ஏதேதோ கொழுக்மொழுக்கென்றமணிகள் மாலைகளை எல்லாம் அசராமல் வெளிநாட்டுப்பெண்கள் வாங்கிப்போகிறார்கள்.கழுத்திலிட்டு அழகுபார்க்கிறார்கள். தரம் குணம் பார்த்துப்பலர் நிதானமாய் பொறுமையாய் வாங்கிறார்கள்

வழக்கம்போல இந்தியஸ்டாலில் நம்ம மக்கள்கூட்டம் அலைமோதியது.

பவழங்களை ரோஜாப்பூபோல செய்து செயி்னில்பதித்து பரப்பி இருந்தார்கள்.

பவழமா பழவமா எதுசரி?

‘நற்பவழம் இங்ககிடைக்குமாடீ புவனா ?”என்று ஒருமாமி அடுத்தவாரம் பிரசவிக்க இருக்கிற தன்மகளிடம் ஆர்வமாய்க் கேட்டுகொண்டிருந்தார்

காதில்தேன் பாய்ந்தமாதிரீ இருக்கவும் அந்த செந்தமிழுக்குச்சொந்தக்காரர்களைப்பார்த்து புன்னகைத்தேன்.அவங்க வேற ஏதோநகைபார்ப்பதில்பிசியா இருந்ததால் என்புன்னகையை கண்டுக்கல!

சர்தார்ஜீஒருத்தர் ஜீ என்றார் என்னைப்பார்த்து அவர்ஸ்டாலுக்குபோனதும்...தெரிஞ்ச
ஹிந்திலகொஞ்சம் அவர்கிட்டபேசினேன். வடக்கத்திக்கார நகைகள் ராஜஸ்தானி நகைகள் 18கேரட் தங்க நகைகள் என ஏதேதோ இருந்தன. ஆனால் மாணிக்கத்தைக்கண்ட என்கண்கள் மற்றொன்றினைப்பரவசமாய்க்காணவிரும்பவில்லை

இருந்தாலும் வந்ததுக்கு ஏதும் வாங்கணுமே! இந்தியா போனா காலனி சிநேகிதிங்க கேப்பாங்க இல்ல ?:)

அடுத்து இனனொரு ஸ்டால்ல கருப்பில் ஒருக்றிஸ்டல் சரம், முத்துசரம், சிவப்பு மணிமாலை அஞ்சுடால்ர்னாங்க அதுல நாலுசரம் வாங்கினேன்.

இன்னும் கைப்பைகள் கிஃப்ட்பொருட்கள்
இவைகளுக்கு தனி ஸ்டால்கள்!

எழுபதுவயது கொரியப்பெண்மணி சுறுசுறுப்பாய் கல்லாப்பெட்டில உட்கார்ந்தபடி ஐபோனில் பேசிக்கொண்டிருந்தார்.

அழகான டப்பாவில் மடித்தபொட்டலத்தில் கற்கள் மணிகள்! மணி (money) மட்டும் நம்மகிட்டகொள்ளையா இருந்தா போட்டுத் தாக்கலாம்..அப்படி ஒரு வெரைட்டி!

ஒருஇடத்தில் சட்டென மெல்லிய துணியில் ஸ்டால்களின் பாதை நடுவே திரைபோட்டிருந்தார்கள்.

திரைக்குப்பின்னால் என்ன நடக்கிறதென.
தெரிஞ்சிக்கலேன்னா டைலினால் மாத்திரையைமுழுங்கினாலும் தலை வெடிச்சிடும்போல இருக்கவே திரைக்குமுன் சின்னமேஜைஅருகே நாற்காலியில்அமர்ந்திருந்த அந்த அயல்நாட்டுமனிதரைக்கேட்டேன்

ஹோல்சேல் பிசினஸ் அதாவது மொத்தவியாபாரமாம் ஜுவல்லரிக்கடைக்கார்கள் வியாபரிகள்மட்டும் தங்கள் அடையாள அட்டையைக்காட்டிட்டு உள்ளபோகலாமாம்.

நன்றிகூறிவிட்டு வேற பெரிய நகைக்கடைக்கெல்லாம் சொந்தமில்லை என்பதால் ட்ரேட்மார்க் புன்னகையைமட்டும் சிந்திவிட்டு அங்கேருந்து நகர்ந்தேன்.






2டாலர்கள்( அமெரிக்கப்பணமில்லைஇது செயின் டாலர்) 2 வெள்ளிமாதிரியான உலோகமோதிரங்கள் ஏழெட்டு மணிமாலைகள் ஒரு கார்னெட்பேஸ்லெட் மட்டும் அந்த் ஐந்துமணிநேரத்தில் இருபதுடாலர்களைகொடுத்துவாங்கி மகிழ்ச்சியாய் வீடுவந்தேன்.

அன்று வீட்டுக்குவந்த விருந்தினர்கூட்டதில் ஒருபெண்.தானும் மதியம் ஜெம்ஷோபோய் மாணிக்கச்சரம் வாங்கி வந்ததை கழுத்தில்போட்டுக்காட்டினாள்

’நல்லாருக்கு’ என்றேன் நான் கண்களைவிரித்தபடி

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ஷைலஜா?!

அந்தப்பெண் தொடர்ந்தாள்

’என்னவோபோங்க வாங்கிட்டேனே தவிர அசல்மாணிக்கமான்னு டவ்ட்டாவே இருக்கு, அவ்ளோவிலைகொடுத்தது தரமானதுதான்னு வித்தவங்க சொல்றாங்க. இருந்தாலும் நம்மூர் நாதெள்ளசம்பத்துசெட்டிக்கடைலயோ இல்ல ஜாயலுக்காஸ்லயோ தங்கமாளிகைலயோ வாங்கீனா ஒருத்ருப்திதான்.மேலும்...ராசிக்கேத்த கல்போடணும்னு ஒருதமிழ் வெப்சைட்ல படிச்சது வீடுவந்ததும் நினைவுக்கு வந்தது. மாணிக்கம்னாலும் இந்தக்..கல்லுபோட்டதிலிருந்து ஒரே குழப்பமா இருக்கு... என்னஎன்னவோ சிந்தனைகள்”
என்றாள்கவலையோடு.

அடப்பாவமே மனசு தெளிவில்லேன்னா எந்தக்கல்லுல நகைபோட்டுட்டாலும் குழப்பம்தான்னு புரிஞ்சிக்கவேண்டாமோ?

மனசுக்குள் சொல்லியபடியே


அந்தப்பெண்ணை நான் வியப்பாய் நிமிர்ந்து பார்த்தபோது அவள் கழுத்திலிருந்த மாணிக்கங்கள் எதுக்கும் கவலைப்படாமல்இயல்பாக மின்னிக்கொண்டே இருந்தன.!









!



!:)



--
மேலும் படிக்க... "GEMSHOW (அல்லது) கல் எல்லாம் மாணிக்கக் கல் ஆகுமா?!"

Monday, August 17, 2009

முள்ளும் மலரும்


மறுக்கமுடியாது
முள்ளைமுள்ளால்தான்
எடுக்கமுடியும் என்பதை.

நியாயம் பேசும்
துலாபாரத்தில்

நிமிடம் காட்டு.ம்
கடிகாரத்தில்.

பூக்களின் சாம்ராஜ்யத்தில்
முள்கூட
முடிவெடுக்கிறது!

பாதுகாப்பிற்கு
முள்வேலி

பூக்களைப்போல
முட்களை நாம் நேசிப்பதில்லை
இதனாலோ என்னவோ
பாதைமுள்ளாய் வந்து
பாதத்தைப்பதம்
பார்க்கிறது!


கண்மீன்களில்
தெரியும் பார்வைமுள்

முட்கள் பூக்களைப்போல்
வாடுவதில்லை

முள்ளும் மலரும்
மலரும்முள்ளாகும்
மனிதமனச்செடியில்மட்டும்!




--
மேலும் படிக்க... "முள்ளும் மலரும்"

Thursday, August 13, 2009

மணற்கேணி2009.

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும்
மாபெரும் கருத்தாய்வுப்போட்டிக்கு உங்கள் படைப்புகளை அனுப்பிவிட்டீர்களா?
ஆகஸ்ட் 15 படைப்புகளை அனுப்ப கடைசிநாள்!
பிரிவு3 இலக்கியம் எனும் வரிசையில்,

தமிழர் இசை எனும் தலைப்பில் நான் அனுப்பி இருக்கிறேன்..பதிவினை போட்டி முடிவு வரும் வரை வெளியிடக்கூடாது என்பதால் இங்கு பதியவில்லை.

தமிழ் அன்பர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்!
வெற்றிக்கு வாழ்த்துகள்!
நாம் யாராவது வென்றால் சிங்கப்பூரில் சந்திப்போம்!:)
மேலும் படிக்க... "மணற்கேணி2009."

Wednesday, August 05, 2009

ஆயிரம் நட்சத்திர விருந்து!





பட்டு மெத்தை வேண்டாம்
அம்மாவின்
இடுப்பே போதும்

மயிலிறகுவேண்டாம்
மடியிலிட்டு
விரலில் வருடினாலேபோதும்

அம்மாவின்உள்ளங்கை
தொட்ட சுகம்
வேறெதிலும் கிட்டாது

கண்ணுக்குத்தெரியாத
கருணை உணர்வை
கன்றான தன் மகவிற்கு
கனிவுடன் தருவாள்

வாய் நனைத்து மட்டுமல்ல
வயிற்றையும் நிறைத்துவிடுவாள்

எந்த ஐந்துநட்சத்திர ஓட்டலில்
இந்த ஆயிரம் நட்சத்திரவிருந்து கிடைக்கும்?

இயற்கையின் நூதனமா இங்கு
தாய் தரும் சீதனம்?

பனிக்குடம் உடைந்தவுடன்
பால்குடங்கள் திறந்துவிடும்

தாய்தரும் பாலில்
அன்பின் அடர்த்தி அதிகம்

உதிரம் பெயர்மாறும்
உடம்பின் இரண்டாவது திரவம்
எட்டடுக்கு மாளிகையின்
கட்டான அஸ்திவாரம்.
*************************************************************************************



(வருடந்தோறும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது)
மேலும் படிக்க... "ஆயிரம் நட்சத்திர விருந்து!"

Monday, August 03, 2009

காவிரிப்பெண்ணே வாழ்க!







நீரின்றி அமையாது உலகு!

பொதுவாக தண்ணீரை சக்தியின் மறுவடிவமாகவே பார்க்க வேண்டும். வன தேவதைகளைப் போல் ஆற்று தேவதை, நதி தேவதைகளும் உண்டு என்று பெரியவர்கள் கூறுவார்கள்.நம்பாரத நாட்டில் நதிகளை நாம் புனிதமாகவே கருதுகிறோம்.

ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது கூட தண்ணீரை தெய்வமாக மதிப்பதன் உள்அர்த்தம்தான்!




ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதத்தில் 18 ஆம் தேதியன்று வரும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள்.


பதினெட்டு என்கிற எண்ணுக்குத்தான் எத்தனை சிறப்பு!
,
18 நாட்கள் போர் மகாபாரதத்தில்
18 பாகங்கள் பகவத்கீதைக்கு
18 சித்தர்கள்
18 படிக்கட்டுகள் சபரிமலைதெய்வத்திற்கு
இன்னும் பல இருக்கலாம் இவ்வகையில் ஆடிக்குப்பதினெட்டாம் நாள் சிறப்பு!

இன்று ஆடிப்பதினெட்டு!




இந்த தேதியில் தான் மழை நீர் சேகரித்து வைத்து, மேட்டூர் அணை திறந்து விட பட்டு காவிரியில் கலக்கிறது. அப்படி கலந்து விட்டபின் காவிரி நதி கூடுதலாக பெருகி,
அதிகரித்து ஓடும். இதனால் தான் பெருக்கு என்ற பெயர் வந்தது. இதனால் உழவர்கள் தங்கள் நெல் விதைக்கும் வேலையை ஆரவாரத்துடன் ஆரம்பிக்கிறார்கள். இப்பொழுது நெல், கரும்பு முதலியவையை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றாத இந்த ஜீவ நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் வேலையை தொடங்குவார்கள்.



அதே போல் நம் ஊர்களிலும் பல பெண்கள், நதிக்கு பூஜை செய்து வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் சந்தோஷம், செல்வம் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை!




பதினெட்டாம் பெருக்கன்று திருச்சி தஞ்சைப்பகுதி மக்கள் கோலாகலமாய் காணப்படுவார்கள்
அம்மாமண்டபம் கல்லணைமுக்கொம்பு என திருச்சியைச்சுற்றிய பகுதிகள் திருவிழா போல மாறிவிடும்.

படித்துறையில் மக்கள் வெள்ளம் காவிரிவெள்ளத்தை ஆர்வமுடன் கண்டு களிக்கும். மிட்டாய் பலூன் கடைகள் முளைக்கும்

கலந்தசாதங்கள் சக்கரைப்பொங்கல் வடாம் வற்றலுடன் படித்துறை வளாகத்தில் உட்கார்ந்தபடி சாப்பிடுவோம்.



திருவரங்கத்தில்

ரங்கநாதர் காவிரிக்கு சீர் கொடுப்பது வழக்கம். தென்னீர் பொன்னி திரைக்கையால் அடிவருடுகிறாளே தினமும் அவளுக்கு பதில் மரியாதை தர வேண்டாமா?

இவ்விழாவன்று ஸ்ரீரங்கம் அம்மாண்டபத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். அன்று காவிரித்தாய்க்கு அவர் சார்பில் புடவை,வளையல் ,குங்குமம் மற்றும் வெற்றிலை ஆகிய பொருள்கள் சீதனமாக தரப்படுகிறது.இச்சீதனம் யானையின்மீது கொண்டுவரப்பட்டு ஸ்ரீரங்கம் காவேரி ஆற்றில் மிதக்க விடுவார்கள்!



கவி உள்ளம் கொண்ட தமிழ்மக்களுக்கு காவிரி ஆடியில் அசைந்துவரும்போது சூல்கொண்ட பெண்ணாக காட்சி அளிக்கிறாள்.



மேட்டிலும் படுகையிலும் பாய்ந்து மண்ணைப்பொன்னாகி மகிழ்ச்சி விளைவிக்கும் காவிரியை வாழி என வாழ்த்துகிறார்கள்!மஞ்சள் குங்குமம பூமாலை தந்து கருகமணிபோட்டு அனுப்புவார்கள். அந்திசூரியனின் நிறம்பட்டு மேனிக்கு இளம்சிவப்புவண்ணச்சேலையை சுற்றிவிட்டதுபோல ஆடிச்செல்வாள்.

காவிரியில் நீர் வற்றி மணலில் ஊறும் எறும்புகள் தெ்ரியும் காலம் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கிறது அப்போதெல்லாம் நம் கண்களில்தான் காவிரி.





உற்சாகமாய் தன்போக்கில் வரும் நதிகள் எல்லாமே

கடைசியில் கடலில்தான் கலக்கின்றன.

காவிரியும் நுரைமலர் குலுங்க காதலைத்தேடி கடல் நோக்கிச்சென்று கொண்டிருக்கிறாள்!



காவிரிப்பெண்ணே நீ வாழி!
மேலும் படிக்க... "காவிரிப்பெண்ணே வாழ்க!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.