Social Icons

Pages

Saturday, January 30, 2010

தாமரைக்கன்னங்கள்!
பூக்களிலே பெண்கள் தலையில் சூட முடியாத மலர் தாமரை. அதன் வடிவம் மகா அழகு.
சின்ன வயதிலிருந்தே நம்மில் பலருக்கு தாமரைப்பூவினை வரைவது பிடிக்கும். இதழ் விரிந்து மலர்ந்த தாமரைக்கோலங்கள் கண்ணைக் கவர்ந்து விடும்.தேவ மலர் என்று தாமரையை சொல்கிறார்கள். அதன் இளம் சிவப்பு நிறம் மென்மையான ஆனால் இதயத்தை ஊடுருவும் நறுமணம் அடுக்கடுக்கான அதன் இதழ்கள்
நீர்நிலையில்மட்டுமே காணும் அதன் தன்மை நீரில்வாழ்ந்தாலும் தனது இலைகளின் மீது அதனை பரவ அனுமதிக்காத ஆளுமை ...இதெல்லாம் தாமரையின் சிறப்புகள்.

வள்ளுவர் கூறுவாரே "வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்க்கு உள்ளத்தனையது உயர்வு" என்று. தாமரைமலரை மனதில் நினைத்தே அவர் இப்படிக்கூறி இருக்க வேண்டும். உள்ளத்தைப்பொறுத்தே உயர்வு என்பதை விளக்க உள்ளத்துக்கே உவமையான தாமரையைக் கையில் எடுத்தார் போலும்! தாமரையின் உயரத்தை தண்ணீரே நிர்ணயிக்கிறது. எனவே தண்ணீரின் உயரம் தாமரையின் உயரம், அதுபோல நம் எண்ணத்தின் உயரமே நம் உயரம் என்கிறார் குறளில்.

பெண்கள் மலர் போன்றவர்கள் என்பதால் தாமரை மலரை உவமைக்கு சொல்வார்கள். தாமரை என்ற பெயர் பெண்ணுக்கு உண்டு.அதன் சம்ஸ்க்ருத வடிவச் சொல் பத்மா நளினி சரோஜா பங்கஜம் எனப் பல,...தாமரைமலர்மீது திருமகள் அமர்ந்திருப்பதால் தாமரை தெய்வமலராகிறது. தாமரைக்கு மருத்துவ குணமும் உண்டு.


கம்பராமாயணத்தில் பெண்கள் ராமனை ,’தாமரைக் கண்ணினால் நோக்கினார்கள் ’என்ற இடம் வருவதை ஒருவர் சொற்பொழிவில் சொல்லும்போது ரசிகர் ஒருவர் குறுக்கிட்டாராம்.

"அந்நிய ஆடவனை பெண் விழி திறந்து பார்க்கமுடியுமா என்ன? நாணம் தடுக்காதோ? பாதி திறந்தும் பாதி மூடியும்தானே பார்க்க இயலும்?" என்று கேட்டாராம்.

சொற்பொழிவாளரும் சட்டென தயங்காமல்,"அதைத்தான்
நானும் சொல்ல வந்தேன்...அதற்குள் நீங்கள் அவசரப்பட்டுவிட்டீர்களே! பெண்கள் தாம்+அரைக்கண்ணால்நோக்கினார்கள்" என்று சமாளித்தாராம்!! தாமரை பாதி மலர்ந்தாலும் அதுவும் வசீகரமானது தானே?

தாமரைக்கன்னங்கள் என்று ஆரம்பிக்கும் பழைய சினிமா பாடல் உண்டு. (தாமரை இடம் பெறும் வேறு திரைப்பாடல்கள் ஏராளமாய் இருக்கும் இல்லையா?)அதன் இளம் சிவப்பு நிறம் பெண்களின் கன்னத்தில் இருந்தால் அது ஒரு தனி கவர்ச்சிதான்!!

5 comments:

 1. //பூக்களிலே பெண்கள் தலையில் சூட முடியாத மலர் தாமரை. அதன் வடிவம் மகா அழகு.
  சின்ன வயதிலிருந்தே நம்மில் பலருக்கு தாமரைப்பூவினை வரைவது பிடிக்கும். இதழ் விரிந்து மலர்ந்த தாமரைக்கோலங்கள் கண்ணைக் கவர்ந்து விடும்.//

  மிக சரியே... தலையில் சூடி பார்க்க முடியாத மலரிது... ஆயினும் இறைவனுக்கு சூட்டி அழகு பார்க்கலாம்...

  //தேவ மலர் என்று தாமரையை சொல்கிறார்கள். அதன் இளம் சிவப்பு நிறம் மென்மையான ஆனால் இதயத்தை ஊடுருவும் நறுமணம் அடுக்கடுக்கான அதன் இதழ்கள்
  நீர்நிலையில்மட்டுமே காணும் அதன் தன்மை நீரில்வாழ்ந்தாலும் தனது இலைகளின் மீது அதனை பரவ அனுமதிக்காத ஆளுமை ...இதெல்லாம் தாமரையின் சிறப்புகள்.//

  அழகு தாமரையை விட, நீங்கள் இங்கு வர்ணித்த விதம் அழகோ அழகு...

  //தாமரையின் உயரத்தை தண்ணீரே நிர்ணயிக்கிறது. எனவே தண்ணீரின் உயரம் தாமரையின் உயரம், அதுபோல நம் எண்ணத்தின் உயரமே நம் உயரம் என்கிறார் குறளில். //

  ம்ம்ம்... சரிதான்...

  //பெண்கள் மலர் போன்றவர்கள் என்பதால் தாமரை மலரை உவமைக்கு சொல்வார்கள். தாமரை என்ற பெயர் பெண்ணுக்கு உண்டு.அதன் சம்ஸ்க்ருத வடிவச் சொல் பத்மா நளினி சரோஜா பங்கஜம் எனப் பல,...தாமரைமலர்மீது திருமகள் அமர்ந்திருப்பதால் தாமரை தெய்வமலராகிறது. தாமரைக்கு மருத்துவ குணமும் உண்டு.//

  கமல் என்பதும் தாமரையை தானே குறிக்கிறது!!

  //தாமரைக்கன்னங்கள் என்று ஆரம்பிக்கும் பழைய சினிமா பாடல் உண்டு. (தாமரை இடம் பெறும் வேறு திரைப்பாடல்கள் ஏராளமாய் இருக்கும் இல்லையா?)அதன் இளம் சிவப்பு நிறம் பெண்களின் கன்னத்தில் இருந்தால் அது ஒரு தனி கவர்ச்சிதான்!!//

  ஆயிரம் தாமரை மொட்டுக்களே
  தாமரை கொடி, தரையில் வந்ததெப்படி
  தாமரை இலை தண்ணீர் போலே, ஒட்டி ஒட்டாமலிரு
  மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி பாடலில் “வெள்ளை தாமரையில் வீற்றிருப்பாள்” என்ற ஒரு வரி வரும்..

  மற்றுமொரு நல்ல பதிவு ஷைலஜா அவர்களே...

  வாழ்த்துக்கள்........

  ReplyDelete
 2. அருமையான தகவல்கள்

  இன்னும் தாமரையைப் பற்றி பல சுவையான செய்திகள் தமிழ் இலக்கியத்தில் உள்ளன.

  தா+மரை = தாவுகின்ற மான் என்றும் பொருள் உண்டு.

  சிவப்பு என்னும் பொருளில் தான் இச்சொல் தோன்றியதாகச் சொல்லுவதுண்டு.

  இதற்கு எடுத்துக்காட்டாக‌

  தாமிரம்

  தக்காளி

  போன்ற சொற்களை விளம்புவதுண்டு.

  வாழ்த்துகள்

  ReplyDelete
 3. கோபிக்கும் திகழ் அவர்களுக்கும் பின்னுட்டமிட்டதற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 4. ஹூம்ம்ம்ம்...இப்பல்லாம் தாமரையையும் பாக்க முடியல, குளத்தையும் பாக்க முடியல :((

  ReplyDelete
 5. what a fentastic post .. everybody love taamarai flower.
  I Like I Like I Like very much this post -- Thanks

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.