ஆத்தா ஒன் சீலைதான்
காத்தாக அணைச்சிருக்கு
தறியிலே நெஞ்சது என்
உசுருலே பிணைஞ்சிருக்கு.
உதிரத்துல பாலூட்டி
உத்திரத்துல சீலைதூளிகட்டி
உள்ள என்னை படுக்கவச்சே.
பத்துமாசம் வரையிலும்
பாவிமவ நான் படுத்துறங்கி
பகலிரவு நேரமெல்லாம்
ஈரப் படுத்தினதை
பன்னீரா தொடச்சதும்
ஆத்தா உன் சீலையிலே,
மாரியாத்தா திருவிளாவுல
ஆரியமாலா வேஷங் கட்ட
அன்னிக்குப் பொருத்தமாச்சி
ஆத்தா உன் சீலை தான்.
உலக்கைக்கு உள்ளாற
உட்கார்ந்த ’அந்த’ நாளில்
திரையாகக் கிடந்தததுவும்
ஆத்தா உன் சீலைதான்
அப்போதைய வறுமையில
தாவணியா மாறினதும்
ஆவணிச்சந்தையில வாங்கின
ஆத்தா உன் சீலைதான்
சொத்துபத்து எல்லாம் வித்து
சொற்பதொகை சேகரிச்சி
பாத்துப்பாத்து சீரு செஞ்சி
புகுந்தவீட்டுக்கு அனுப்பிவச்சே.
பொறப்பட்டு வருகையில
பொட்டியிலே முக்கியமா
பொக்கிஷமா வந்ததுவும்
ஆத்தா உன் சீலைதான்.
நாகரீகம் தெரிஞ்சவரு
நல்லாத்தான் மகளோடு
குடும்பம் நடத்தறாருன்னு
ஆத்தா நீ நம்பி இருக்கே.
நகரமில்லஆத்தா ,நரகத்துல
நான் வந்திருக்கிற சேதி சொன்னா
அய்யோ உன் இதயம்தான்
அப்போதே நின்னுப்பிடும்
வாய்தொறக்க வழி இல்ல
அடிதடி இம்சையினு
நாலுமாச தாம்பத்தியத்துல
நாய்ப்பொழைப்பா நாறுகிறேன்
நாலெழுத்துப்படிச்சிருந்தா
நானும் தல நிமிந்து பேசிடுவேன்.
பயத்துல செத்துக்கிட்டு
பிடி சோறுக்கும் வழி இல்லாம்
பட்டினியில் கிடக்கும் என்னை
இடிபோல தாக்கிச்சி நேத்திக்கு
என்புருஷன் சொன்ன பேச்சு
பாலோட பண்பாட்டயும் ஊட்டி
வளத்த பாசக்காரி ஒன் கிட்ட
பாதகன் சொன்ன சொல்லை
பாவிநான் சொல்லிப்புட்டா
ஆத்தா நீ தாங்கமாட்டே.
மானங்கெட்ட மக்களுக்கு
முந்தானைவிரிச்சிப்போடணுமாம்
முட்டாள்புருஷன்கட்டளை.
தாள முடியலம்மா
சாவது தான் முடிவுன்னு
ஆத்தா ஒன் சீலையினை
அழுதபடி எடுக்கறேன்,
ஆசைதீரத்தொட்டு
தொட்டு த்டவறேன்.
கழுத்துக்கு சுருக்காக
கடைசிப்பயணமாக
ஆத்தா உன் சீலதான்
ஆயுசுக்கும் என்கூட.
முடிவோட சீலையினை
மூச்சுமுட்ட அணைக்கையிலே
முந்தானைமுடிச்சு
நெஞ்சுல நெருடிடவும்
திடுக்கிட்டுப் பாக்கறேன்.
திகைப்போட முடிச்சினை
வேகமா அவிழ்க்குறேன்,
கசங்கித்தான் கிடக்குது ஒத்த
நூறுரூவா நோட்டு!
மலர்ந்தேதான் மனசும்
மானசீகமாக் கூவிக்கொள்ளுது,
”பொறந்த ஊரு போய்ச்சேர
கிடச்சாச்சு,
ரயிலு டிக்கட்டுக்கு துட்டு!”
--