Social Icons

Pages

Thursday, April 05, 2012

சேர்த்தி!

சக்கரவர்த்திதிருமகனிடமிருந்து பெற்றுக்கொண்ட சீதனத்தை
விபீஷணன்  தற்காலிகமாக இறக்கி வைத்த இடத்தினருகில், உறையூரினைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த சோழப்பேரரசன் தர்மவர்மா  அருந்தவம் செய்து கொண்டிருந்தான். அவனது நிஷ்டை கலைகின்றது.

எதிரே அரங்கன் ஜ்வலிக்கும் ரெங்கவிமானத்துடன் எழுந்தருளியுள்ளார். அவனுக்குத் தான் கண்டது கனவா? அல்லது நினைவா? என்றே புரியவில்லை. நினைவு வந்த போதெல்லாம் அடிக்கடி மூர்ச்சையாகின்றான்.

    தர்மவர்மாவின் தவத்தினை நிறைவு செய்தான் அரங்கன்!விபீடணன் தனது அனுஷ்டானங்களை காவிரிக்கரையில் முடித்து விட்டு வந்து பார்த்தால் இங்கு ஒரே கோலாகலம்!.

விபீஷணன் மறுநாள் இலங்கைக்குச் சென்று ஆதிபிரம்மோற்சவம் நடத்துவதற்காக முற்பட்டான். தர்மவர்மா அவரை திருவரங்கத்திலேயே அந்த உற்சவத்தை நடத்தித்தர பிரார்த்தித்தான். வெகுவிமரிசையாக முதன்முதலாக திருவரங்கத்தில் ஆதிபிரம்மோற்சவம் நடைபெற்றது.


இன்று திருவரங்கத்தில் நடைபெறும் பிரும்மோற்சவங்களுக்கெல்லாம் ஆதியும் இதுவேயானது.

பிரும்மோற்சவம் முடிந்து விபீடணனால் விமானத்தினைத் தூக்க இயலவில்லை. அரங்கன் காவிரிக்காகவும், தர்மவர்மாக்காகவும், நமக்காகவும் நமது சந்ததியினர்க்காகவும் நிரந்தரமாக இங்கேயே தங்கிவிட தீர்மானித்துவிட்டார்.


   நாம் அனைவரும் அறிந்த அரங்கனின் பிரசித்தப்பெற்ற சேர்த்தி பங்குனி உத்திரம் மட்டும்தான். ஆனால் அரங்கன் நான்கு சேர்த்தி உற்சவம் கொண்டாடுகின்றார்.

இதில் சித்திரையில் இரண்டு! பங்குனியில் இரண்டு!. வருஷ ஆரம்பமான சித்திரையில் சித்ராபெளர்ணமியன்று காவேரிக்கரையில் முதல் சேர்த்தி. காவேரியில் பெருமாளின் மாலை மரியாதைகள் எல்லாம் சேர்த்து சேர்த்தி!.

   அதே மாதத்தில் ஸ்ரீராமநவமியன்று குலசேகராழ்வார் குமாரத்தியான சேரகுலவல்லியுடன் சேர்த்து. இரண்டாம் சேர்த்தி!.

  பங்குனி 6ம் திருநாள் ஆயில்ய நட்சத்திரத்தில் உறையூர் சோழராஜா குமாரத்தி கமலவல்லியுடன் சேர்த்தி! உத்திரத்தில் ரெங்கநாயகியுடன் சேர்த்தி! வருஷ ஆரம்பத்தினை கலயாணத்துடன் ஆரம்பித்து வருஷ முடிவினையும் கல்யாணத்துடன் முடிக்கின்றார் இந்த வைபோக ரங்கன்.

உத்திரத்தின் சேர்த்தி சேவை  உன்னதமானது உயர்த்தியானது. படிதாண்டா பத்தினியான அரங்கபிராட்டியார் இருப்பிடம் சென்று அங்கேயே சேர்ந்தருளுவார் அரங்கபெருமான். சேர்த்திமண்டபம்   வெறும் நாட்களிலும் சேவிக்கவேண்டிய திருமண்டபம்.


அகளங்கன் திருச்சுற்றில் ஸ்ரீரங்க நாச்சியார், (வில்வ மரத்தடியில்) தாயார் சந்நிதி அமைந்துள்ளது. பங்குனி உத்திர நாளன்று மட்டும், நம்பெருமாளும், தாயாரும் 'சேர்த்தியில்' ஒன்றாக எழுந்தருளி பக்தர்களை ஆசீர்வதிப்பது, சிறப்புடைய மிகப் பெரும் நிகழ்ச்சியாகும்!

அன்று பக்தர்கள் சக்திக்கேற்ப, வெண்ணெய், டைமண்ட் கல்கண்டு, திராஷை, முந்திரி, ஏலப்பொடி சேர்த்து வெள்ளிக் கிண்ணங்களில் அமுது படைப்பர் நிவேதனமாக. அன்று(இன்று) ஸ்ரீரங்கத்தார் இல்லங்களில் சக்கரைப்பொங்கலும் செய்வார்கள்.


பிரணய கலகம் என்றழைக்கப்படும் மட்டையடி நிகழ்ச்சி சேர்த்திக்கு முன்பாக நடக்கிறது. உற்சவ அரங்கன்  உலாப்பிரியர்..  ஒன்று உள்ளூரில் சுத்திக்கொண்டு இருப்பார் அல்லது  அன்பர்களின் இதயத்திற்குள் சுழன்று கொண்டிருப்பார். ஜீயபுரம் என்கிற சி்ற்றூரில்  ஒரு
 மூதாட்டி தன்பேரனை நீண்டநேரமாய் காணாமல் பதறித்தவித்து அவன் பெயரை அழகியமணவாளா என்றழைக்கவும் அவள் மனம்வேதனைப்படக்கூடாதென்று அரங்கன்  சிறுவன் வடிவில் சென்று தீந்தயிர் சோற்றுடன் கீரையும் வாங்கி உண்டான்.இன்றும்  வருடம் ஒருமுறை ஜீயபுரம் செல்கின்றான்.தேர்த்திருவிழா வீதி உலா என வருடம் முழுக்க அரங்கனுக்குக்கொண்டாட்டம்தான். ஆனாலும் உறையூர் இளவரசி கமலவல்லியை காதலித்து மணந்த நாளை மறக்கமுடியுமா அரங்கனால்? ஆகவே அந்ததினம் உறையூருக்கு ஓசைப்படாமல் போய்விடுவார்.

ரங்கநாதர் தான்  அணிந்து இருந்த மோதிரத்தை உறையூர்  கமலவல்லிநாச்சியாருக்கு அன்பளிப்பாக கொடுத்து இருப்பார். அவ்வாறு கொடுத்து விட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதாயாரிடம் வரும்போது மோதிரம் எங்கே? என்று ஸ்ரீரெங்கநாதரிடம் சண்டையிட்டு அவரை மட்டையால் தாக்கும் நிகழ்ச்சிதான் வருடா வருடம் நமக்கு

 நடித்து காட்டப்படும்.

இந்த வினோதமான நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஸ்ரீதாயார் சன்னதிக்கு வருவார்கள்.

ஸ்ரீரங்கத்தில் இருந்தவரை  இதற்கு நான் ஆஜராகிவிடுவேன்  தாயார் சந்தியிலிருந்து வேகமாக வாழைமட்டைகள்  அரங்கன் பல்லக்குமீது வீசிவர உடனே அரங்கன் பல்லக்கை மூடிக்கொண்டு பயந்தமாதிரி பின்னோக்கி நகர...இந்த வேடிக்கை விளையாட்டு ஊடல் காட்சிகள் கண்ணுக்கு ரம்மியமானவை..அனைத்தையும் தானே நடித்துக்காடும் அரங்கனின் குறும்பினை ரசிப்போம்.நம்பெருமாள் சித்திரை வீதி மற்றும் உத்தர வீதிகளில் அரையர் இசையுடன் வலம் வந்தபிறகு, ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதிக்குள் போகையில் கதவுகள் சாற்றப்பட்டு புஷ்பங்களையும் பழங்களையும் எறிந்து நம்பெருமாளைத் தடுத்துவெளியே நிறுத்தி வைப்பார்கள். கதவுகள் திறக்கப்படும்போது பெருமாள்
உள்ளேபோக முயற்சி செய்வதும்  கதவு தடால் என சாத்தியதும் திரும்பவருவதுமாக  இருப்பார்.

கடைசியில் சமாதானம் ஆகும்.

நம்பெருமாளு்ம் சமாதானத்திற்கு அருளப்பாடு ஸாதித்து நம்பெருமாள் சொல்ல வேண்டியவைகளை அரையர்கள் தாள இசையில் இசைப்பர்.
 நம்பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையே நிகழும் சொற்றொடர் பரிமாற்றத்தை தம்பிரான்படி பாசுரங்கள் கொண்டு சேவிப்பர்கள்.அரையர்கள் நம்பெருமாள் வார்த்தையை நம்பெருமாளிடம் விண்ணப்பித்து, தாயாரிடமும் விண்ணபிப்பார்கள்.
 பண்டாரிகள் சொல்லிய தாயார் வார்த்தையை அரையர்கள் நம்பெருமாளிடம் விண்ணப்பிப்பார்கள். (நம்பெருமாள் அஞ்சு வார்த்தை, தாயார் வார்த்தையானது இரட்டிப்பாகிறபடியால் அரையர்கள் 15 தடவையும் பண்டாரிகள் 5 தடவையும் நம்பெருமாள் மற்றும் ஸ்ரீரங்கநாச்சியார் வார்த்தைகளாகச் சொல்லுவர்.

ஸ்ரீரங்கநாச்சியாரால் அனுமதிக்கப்பட்ட பிறகு நம்பெருமாள் ஸந்நிதி வாசலில், எழுந்தருளி ஆழ்வாருக்கு மரியாதை செய்து அனுப்புவார்.
உடனே முதல் ஏகாந்தம் நடக்கும். தளிகை நிவேதனம் நடந்து பங்குனி உத்தர மண்டபத்திற்கு நம்பெருமாள் எழுந்தருளுவார், பிறகு இரவு 10 மணி வரை பொதுஜனஸேவை நடைபெறும்.

இரண்டாம் ஏகாந்தம்-தீர்த்தபேரர் பெரியகோயிலிலிருந்து புறப்பட்டு வடதிருக்காவிரியில் தீர்த்தவாரி கண்டருளி, நம்பெருமாளிடம் வந்ததும் கத்யத்ரயம் ஸேவிக்கப்படும்.
இராமாநுசர் அருளிச் செய்த கத்யத்ரயம் என்னும் க்ரந்தம் இன்றைய தினம்தான் அவதரித்தது. கத்யத்ரய சாற்றுமுறைக்காக இரண்டாம் ஏகாந்தத்தளிகை நிவேதனம் ஆனதும் தீர்த்தபேரர் பெரியகோயிலுக்கு எழுந்தருளுவார்மூன்றாம் ஏகாந்தம் நம்பெருமாள் நாச்சியார் இருவருக்கும் பதினெட்டு ஆவர்த்தி திருமஞ்சனம் ஆகும். (எம்பெருமானார் திருக் கோட்டியூர் நம்பிகளிடம் பதினெட்டு ஆவ்ருத்தி நடந்த சிரமத்தை எம்பெருமானார்க்கு தீர்த்தருளுவதற்காக பதினெட்டு தடவை கைலி ஸமர்ப்பித்துத் திருமஞ்சனம் நடைபெறுகிறது)) திருமஞ்சன திருவாராதனத்தில் அரையர்களுக்கு “வசந்தனுக்கு அருளப்பாடு” என்று ஸாதித்து இசையில் தம்பிரான்கள் இயற்றிய வசந்தன் பாட்டு (கூடின காலத்தின் வர்ணனை) ஸேவிக்க இருவரும் கேட்டு மகிழ்ந்தருளுவர்.

 மூன்றாம் ஏகாந்தத் தளிகை நிவேதனம் ஆனதும், ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளே எழுந்தருளுவார். நம்பெருமாள் பங்குனி உத்தர மண்டபத்திலிருந்து புறப்பட்டுத் தாயார் ஸந்நிதிக்கு முன் ஸ்ரீரங்கநாச்சியாரைப் பார்த்து திரும்பிக் கொண்டு, பிரியமனம் இல்லாமல் ஒரு ஒரு அடியாக வைத்து வைத்து மெல்ல எழுந்தருளுவார்.,அரங்கத்தமாவென்றே மொழிந்தேனாக
 அரங்கனுடன் அரங்கத்து நாச்சியாரும்
இரங்கவெனை அழைத்தான் என்றென்முன் வந்தார்
இனிய தமிழ் மொழிநயத்தைத் தெளிந்திட்டேனே!

(புலவர் சக்திசரணன்)

--

14 comments:

 1. Wonderful Pictures with Very Informative Write-up.

  Thanks for sharing this valuable post.

  ReplyDelete
 2. மூன்றாம் ஏகாந்தத் தளிகை நிவேதனம் ஆனதும், ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளே எழுந்தருளுவார். நம்பெருமாள் பங்குனி உத்தர மண்டபத்திலிருந்து புறப்பட்டுத் தாயார் ஸந்நிதிக்கு முன் ஸ்ரீரங்கநாச்சியாரைப் பார்த்து திரும்பிக் கொண்டு, பிரியமனம் இல்லாமல் ஒரு ஒரு அடியாக வைத்து வைத்து மெல்ல எழுந்தருளுவார்.//

  நேரே பார்ப்பது போல் உள்ளது.

  நம்பெருமாள், ஸ்ரீரங்கநாச்சியார் பற்றிய விவரிப்பு அழகு.

  ReplyDelete
 3. மிக அருமையாக சேர்த்தி பற்றி எழுதியிருப்பது நன்று. ரசித்தேன்...

  ReplyDelete
 4. Nice naration..
  Thanks for sharing.

  எங்கள் ஊரில் (இராஜமன்னார்குடி) பிரதி தை மாதம் மூன்றாம் தேதி பகல் முழுவதும் பெருமாள் தெருத் தெருவாக சுற்றி வந்ததால், தாயால் கோவம் கொண்டதாகவும் இரவில் கோவில் கதவு சாற்றப்பட்டு, பின்னர் நள்ளிரவு மட்டையடி உற்சவம் நடக்கும். நான்காம் நாள் எகசிம்ஹாசனம் எனும் உற்சவம் நடக்கும். நான்கு சிங்கங்கள் நாற்புறமும் தாங்கியபடி இருக்கும் ஒரே ஊஞ்சலில் தாயார் பெருமாளுடம் சேர்த்தி உற்சவம் அது. கண்கொள்ளாக் காட்சியாகும்.

  மட்டையடி லிங்க் இங்கே..


  எகசிம்ஹாசனம் லிங்க் இங்கே..

  ReplyDelete
 5. உங்கள் எழுத்தோடு எப்போதும் சேர்த்திதான்!
  இப்போதுதான் சேவித்து விட்டு வந்தேன். உடன் உங்கள் பதிவு.
  4 சேர்த்திகள் மட்டுமல்ல. முன்பு ஆண்டாளுடன் சேர்த்தி உத்சவம் நடந்ததாகவும் மீண்டும் நடத்த பிரயாசைப்பட்டார்கள். ஆனால் என்ன காரணத்தாலோ அது வடிவம் பெறவில்லை.

  ReplyDelete
 6. தெரியாத பல விஷயங்களை நான் இப்போது தெரிந்து கொண்டேன். அருமைக்கா...

  ReplyDelete
 7. அருமை... அருமை...

  ReplyDelete
 8. அரங்கன் மீது தாங்கள் சாத்திய புகழ் மாலை வழக்கம் போல அழகாகவே உள்ளது.

  ReplyDelete
 9. அருமையான பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 10. ஜெகன்னாதன்8:45 PM

  இந்த பதிவிற்கு உங்களுக்கு மிக்க வந்தனம். அநுபவித்து எழுதி விஷயம் தெரியாதவர்களுக்கும் விளக்கி அநுபவிக்கச் செய்துவிட்டிர்கள். (நானும் முன்னாள் ஸ்ரீரஙத்தான் தான், ஆனாலும் இவ்வளவு விஷயங்கள் தெரியாது அதாவது எனக்கு அவ்வளவு போதாது!) ரிஷபனும் அவன் பங்கிற்கு இன்னொரு விஷயதானம் செய்ததற்கும் நன்றி. (இந்த பதிவைப் படித்தபின் அவன் பதிவிற்குப் போகத்தான் முடிவெடுத்திருந்தேன்!) இதை உடனே என் அம்மாவுடனும், சகோதர சகோதரிகளுடனும் பகிர்ந்து கொள்கிறேன். மீண்டும் நன்றி! - ஜெ.

  ReplyDelete
 11. கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி
  திரு ஜகன்னாதன் அவர்களுக்கு ..நான் கேட்ட வாசித்த பார்த்த நிகழ்வுகளைப்பகிர்ந்துகொண்டேன் நன்றாக இருந்தால் அது அரங்கன் கருணைதான்...நன்றி மிக.

  ReplyDelete
 12. சமுத்ரா கொடுத்திருந்த இணைப்பை பயன்படுத்தி இந்த தளம் வந்தேன். கடவுள் மற்றும் விழா போன்ற பதிவுகள் அநேகமாக வரவேற்பு பெரும். இது கண்கூடு. இன்னும் மற்ற பதிவுகளை படிக்க வில்லை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. சுவாரஸ்யமான விவரங்கள்.

  ReplyDelete
 14. தாயார் சந்தியிலிருந்து வேகமாக வாழைமட்டைகள் அரங்கன் பல்லக்குமீது வீசிவர உடனே அரங்கன் பல்லக்கை மூடிக்கொண்டு பயந்தமாதிரி பின்னோக்கி நகர...இந்த வேடிக்கை விளையாட்டு ஊடல் காட்சிகள் கண்ணுக்கு ரம்மியமானவை..அனைத்தையும் தானே நடித்துக்காடும் அரங்கனின் குறும்பினை ரசிப்போம்.

  ரசிக்கவைத்த அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.