"ஹார்ட் அட்டாக்... தூக்கத்திலேயே உங்க அப்பாவுக்கு உயிர் போயிருச்சு கணேசா... மனசை திடப்படுத்திக்க. எனக்கு தெரியும், நீ நிலை குலைந்து போவன்னு. ஒற்றுமையான, பாசமான குடும்பத்தின் ஆணி வேரா இருந்த அற்புதமான மனுஷர் உங்கப்பா; இனி, அவர் நம்ம கூட இல்லையேங்கிறத குடும்ப டாக்டரான என்னாலேயே தாங்க முடியல. உங்க எல்லாருக்கும் இது ரொம்ப கஷ்டம் தான். என்ன செய்ய... காலம் தான் இதுக்கு மருந்து,'' என்றார், கணேசனின் குடும்ப டாக்டர்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் விஷயம் தெரு முழுவதும் பரவி, கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது.
'வாத்தியார் ராமநாதன் போயிட்டாராமே... தங்கமான மனுஷன்...'
'நேத்து கூட என்னை பாத்து, பிசினசில் நஷ்டமானதுக்கு ஆறுதலா பேசினாரே...' என்று ஆளாளுக்கு ராமநாதனை புகழ்ந்தபடியே, துக்கத்தை கொட்டினர்.
அப்பா இறந்து விட்டதாக நினைக்க, கணேசனுக்கு சிரமமாக இருந்தது. இன்னமும் அவர் தூங்குவது போலவே இருந்தார். இரவு தூங்கப் போகும் முன், முகம் கழுவி, தலைவாரி, சின்னதாய், நெற்றியில் விபூதி பூசி கொள்வார்; தூய வெள்ளை வேட்டி, வெள்ளை நிற அரைக் கை கதர் சட்டை அணிவார்.
'உடம்பும், மனசும் எப்பவும் பளிச்சுன்னு இருக்கணும். பேரழகா இல்லன்னாலும், பாக்கற மாதிரியாவது இருக்கணுமில்ல...' என்று, ஒருநாள் அப்பா தன்னிடம் சொன்னதை நினைத்து பார்த்தான்.
'ஜனனத்தை வரவேற்கிற மாதிரி, மரணத்தையும் வரவேற்கணும் கணேசா... மரணங்கிறது கல்வியில் ஒரு கூறு...' என்று அப்பா கூறியது நினைவுக்கு வர, ''கற்றுக் கொள்ளத்தான் அமரலோகம் போயிட்டீங்களாப்பா...'' தந்தையின் பாதங்களை, இரு கைகளிலும் பிடித்தபடி, உடல் குலுங்க அழுதான், கணேசன்.
அப்பாவிற்கு அழுவது பிடிக்காது. 'எதையும் இயல்பாய் எடுத்துக்கணும்...' என்பார்.
ஆனாலும், அவர் சற்று அதிகம் கலங்கியதை, இரண்டு முறை பார்த்துள்ளான். பத்து ஆண்டுகளுக்கு முன், கேன்சரில் அம்மா இறந்த போது, மிகவும் கலங்கி போனவர், 'கணேசா... உங்கம்மாவுக்கு நான் எதுவுமே செய்யலயப்பா... அவளாய் எதுவும் கேட்டதும் கிடையாது. அவள் ஆசைகளை நானாவது கேட்டு செஞ்சிருக்கணும். எதையுமே இழந்த பின் தான், அதோட மதிப்பு இரட்டிப்பாகிறதுங்கிறது உண்மையாப் போச்சே... உன் அம்மாவோட நினைவு, இப்போ எனக்கு அப்படித்தான் இருக்கு...' என்று நெகிழ்ந்த குரலில் சொல்லிய போது, அவர் முகம் கலங்கியிருந்ததை கவனித்தான், கணேசன்.
அதற்கு முன்பும் ஒரு முறை அவர் கண் கலங்கியதை பார்த்துள்ளான். அச்சம்பவம் அவன் நினைவிற்கு வந்தது...
அப்போது கணேசனுக்கு, 15 வயது; அவன் தம்பிக்கு, 10 வயது. அன்று, கணேசனின் தம்பியும், அவனோட நண்பன் நரேந்திரனும் ஆடிப்பதினெட்டாம் பெருக்குக்கு ஆற்றில் குளிக்கப் போன போது, ஆற்று வெள்ளத்தில் சிக்கினர். படித்துறையில் சிலர் அமர்ந்திருந்தாலும் நீச்சல் தெரியாததால், கையை பிசைந்தபடி, வெறுமனே பதறினர்.
அச்சமயம் அந்த பக்கம் வந்த ராமநாதன் விஷயம் கேள்விப்பட்டு, ஓடி வந்து ஆற்றில் குதித்தவர், முதலில் மீட்டது, நரேந்திரனை தான்.
அடுத்து, தன் மகனை காப்பாற்ற முனைந்த போது, அவன் பிணமாகத் தான் கிடைத்தான்.
'என் பிள்ளைய காப்பாத்திட்டு, உன் பிள்ளைய பறி கொடுத்திட்டியேடா...' என்று தலையில் அடித்தபடி அழுதார், ராமநாதனின் நண்பர் பரமசிவம்.
பள்ளியிலிருந்து சுற்றுலா சென்றிருந்த கணேசன், விஷயம் கோள்விப்பட்டு, பாதியிலேயே திரும்பி வந்தவன், 'பெத்த மகனை முதல்ல காப்பாத்தணும்ன்னு தோணலயா... என் தம்பி இப்ப இறந்துட்டானே...' என்று கோபத்துடன் கேட்டு, அழுதான்.
மகனை, நிதானமாய் ஏறிட்ட ராமநாதன், 'கணேசா... உன் கோபம் நியாயமானது தான்; ஆனா, எனக்கு அந்த நேரம் பரமசிவத்தை தான் நினைக்க தோணுச்சு. நானும், பரமசிவமும் ஸ்கூல் பிரண்ட்ஸ்; சிறுவயதிலிருந்து இணை பிரியாத நாங்க இப்பவும், உள்ளூர் பள்ளிகளில் ஆசிரியர்களாய் இருந்து, ஒரே ஊரில் குடியிருக்கோம். எனக்கு, உன் தம்பி இல்லாட்டாலும் நீ இருக்கே... ஆனா, என் நண்பனுக்கு நரேந்திரன் ஒரே பிள்ளை...' என்று சொல்லி முடிக்கையில், அவரது கண்கள் கலங்கியிருந்தன. அவர் கைகளை ஆறுதலாக பற்றி, 'மன்னிச்சிடுங்கப்பா... உங்க நல்ல மனசை, நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேன்...' என்றான், கணேசன்.
அன்றிலிருந்து, கணேசனுக்கு, தன் அப்பா மீதுள்ள மதிப்பும், மரியாதையும், பன்மடங்கு பெருகியது. பரமசிவம் - ராமநாதனின் நட்பும், மேலும் இறுகிப் போனது.
'உறவில் தான் விரிசல், குடைச்சல் எல்லாம். நட்பில் அதெல்லாம் வருவதில்லை. நட்புக்கு அடிப்படை ஒத்த தொழிலோ, அந்தஸ்தோ, வயதோ அல்ல. வாழ்க்கை நிலையில், பல்வேறு அந்தஸ்துகளில் இருப்பவர்கள் இடையிலும் பிரிக்க முடியாத நட்பும், பாசமும் ஏற்படுவதை பார்க்கிறோம். கொடுப்பதும், பெறுவதும் ஒன்றேயாகிற காமம் போன்று, ஆன்மாவின் அந்தரங்க ஆழத்தில், ஈருயிர்கள் சங்கமிப்பதே உயர்ந்த நட்பின் அடிப்படைன்னு நினைக்கிறேன்...' என்று அடிக்கடி சொல்லி மகிழ்வார், பரமசிவம்.
நரேந்திரன் மேல் படிப்பிற்கு வெளியூர் சென்ற போதும், பணி கிடைத்த போதும், நன்றி மறவாமல், ராமநாதனை வணங்கி, ஆசிர்வாதம் பெற்றுச் சென்றான். பரமசிவம் மற்றும் ராமநாதன் இருவரும் இணைந்தே பெண் பார்த்து, நரேந்திரனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
அலுவலக புராஜக்ட் என, மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தில், அமெரிக்காவிற்கு சென்றுள்ள நரேந்திரன், தன் அப்பாவையும் தன்னுடன் அழைத்து போவதாக கூறிய போது, முதன் முறையாக தன் நண்பரை பிரியும் வருத்தம் இருந்தாலும், 'மகன் குடும்பத்துடன் மகிழ்ச்சியோட இருந்துட்டு வா...' என்று வழியனுப்பி வைத்தார், ராமநாதன்.
பழைய நினைவில் மூழ்கியவனுக்கு, 'பரமசிவம் மாமாவிற்கு சொல்ல வேண்டுமே...' என்ற பரபரப்பு ஏற்படவும், மொபைல் போனில், நரேந்திரனை தொடர்பு கொண்டான். போன், 'ஸ்விட்ச் ஆப்' என வரவும், வீட்டிற்கு போன் செய்தான். ஒரு பதிலும் இல்லை; 'விடுமுறைக்கு எங்காவது வெளியில் போய் விட்டனரா...' என, நினைத்த கணேசனை மேலும், யோசிக்க விடாமல் துக்கம் கேட்கும் கூட்டம் அலைமோதியது.
கணேசனின் மனைவியும், குழந்தைகளும் ராமநாதனின் காலடியை விட்டு நகரக் காணோம்.
''கணேசா... உறவுன்னு சொல்லிக்க நான் ஒருத்தி தான் உள்ளூர்ல இருக்கேன்... டில்லி, மும்பையில இருக்கிற தூரத்து சொந்தங்களுக்கு தகவல் தெரிஞ்சாலும், அவ்வளவு தூரத்திலிருந்து உடனே வர முடியுமோ, என்னவோ. ஏன் தாமதிக்கணும்? இன்னிக்கே எடுத்துடலாமே...'' என்று, அத்தை பட்டென்று கேட்கவும், கணேசனுக்கு சற்று எரிச்சலானது.
''இல்ல அத்தை... அப்பாவோட பிரண்ட் வரணும்,'' என்றான்.
''யாரு அது, எங்க இருக்கார்?''
''அமெரிக்காவுல இருக்காரு...''
''அமெரிக்காவா... அப்போ ரெண்டு நாளாவது ஆகுமே... அதுவரை வச்சிருக்கணுமா... பகல்ல இறந்தா, மூன்றரை மணி நேரந்தான் வைச்சுருக்கணும்; அதுக்குமேல் வச்சிருந்தா, இறந்தவர், வாழ்ந்த போது செய்த புண்ணியங்களுக்கு பலன் இருக்காதுன்னு சொல்வாங்க. இறந்தவரோட இறுதி பயணத்தை தாமதப்படுத்த யாருக்கும் உரிமை இல்லன்னு தர்மசாஸ்திரம் சொல்லுது,'' என்றாள் அத்தை அழுத்தமாக!
''அத்தை... சாஸ்திரம், சம்பிரதாயங்களை மீறியது நட்புங்கிற உறவு. அவர் வர்ற வரைக்கும் அப்பா இங்கே தான் இருப்பார். அதை மீறி, நான் தகனம் செய்தால், அப்பாவோட ஆத்மா சாந்தி அடையாது. அது எனக்கு தெரியும்,'' என்று உறுதியான குரலில் சொல்லி, ஐஸ் பாக்சுக்கு சொல்ல, மொபைல் போனில் எண்ணை அழுத்தியபடி, வாசலுக்கு வந்தான் கணேசன்.
அப்போது, சர்ரென பெரிய கார் ஒன்று, வாசலில் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கியவரை கண்டதும், கண்கள் விரிய, ''பரமசிவம் மாமா... நீங்களா...'' என்றான்.
''ஆமாம்... நானே தான்; சர்ப்ரைசா இருக்கட்டும்ன்னு தான் யாருக்கும் தகவல் சொல்லாம புறப்பட்டோம். மொபைல் போனையும் அணைச்சு வச்சோம். பின்ன... என் தோஸ்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேணாமா... வயசானாலும், நட்பு மட்டும் தான் இளமையா இருக்கும். ஒரு விஷயம் தெரியுமா... நரேந்திரனின் புராஜக்ட், திட்டமிட்டதுக்கு முன்னரே முடிஞ்சு போச்சு. இனிமே, அவன் நிரந்தரமா இந்தியாவுல தான் இருக்கப் போறான். எனக்கும், ராமநாதனை விட்டு அமெரிக்காவுல இருக்க முடியல. சொர்க்கமா இருந்தாலும், என் நண்பன் பக்கத்துல இருக்கிறத போல இருக்குமா... எல்லாத்தையும் நேர்ல சொல்லி, என் நண்பனை திக்கு முக்காட வைக்கணும்ன்னு தான், ரகசியமா கிளம்பி வந்தேன்.
''இன்னிக்கு நட்சத்திரப்படி, உன் அப்பாவோட, 70வது பிறந்த நாள்; ஏகாதசியில வாய்த்திருக்கிறது ரொம்ப விசேஷம். ஆமா, வீட்ல என்ன விசேஷமா; ஏகப்பட்ட தலை தெரியுதே...
''
பரவசமாய் பேசிய பரமசிவத்தை கலங்கிய கண்களுடன், கணேசன் இறுக கட்டிக் கொள்ள, திடுக்கிட்டவர், ''கணேசா... என்ன ஆச்சு...'' என்றார்.
கணேசனுக்கு அதுவரை அடங்கியிருந்த துக்கம் பீறிட்டு கிளம்பியது.
அதற்குள் வீட்டிற்குள் ஓடிய நரேந்திரன், அங்கிருந்தே, ''அப்பா... மாமா நம்மை விட்டு போயிட்டார்ப்பா...'' என, கதறினான்.
பரவசமாய் பேசிய பரமசிவத்தை கலங்கிய கண்களுடன், கணேசன் இறுக கட்டிக் கொள்ள, திடுக்கிட்டவர், ''கணேசா... என்ன ஆச்சு...'' என்றார்.
கணேசனுக்கு அதுவரை அடங்கியிருந்த துக்கம் பீறிட்டு கிளம்பியது.
அதற்குள் வீட்டிற்குள் ஓடிய நரேந்திரன், அங்கிருந்தே, ''அப்பா... மாமா நம்மை விட்டு போயிட்டார்ப்பா...'' என, கதறினான்.
பரமசிவம் பதற்றமாய் உள்ளே வந்தவர், உடல் குலுங்க, நண்பனின் தலைமாட்டில் அப்படியே சரிந்து உட்கார்ந்தார். நண்பனிடம் பேசுவதற்கு ஆயிரம் ஆயிரம் விஷயங்களுடன் வந்தவருக்கு இப்போது பேச்சற்று தொண்டை அடைக்க, கண்ணீர் தாரை தாரையாக வழிய, சிலையாக அமர்ந்திருந்தார்.
''கணேசா... சாஸ்திரிக்கு சொல்லிடலாமா...'' என்று மறு படியும் குரல் கொடுத்தாள், அத்தை.
அடுத்த சில நிமிடங்களில், சாஸ்திரி வந்து இறங்கினார்.
''காரியத்தை ஆரம்பிக்கலாமா... இறந்து போனவரின் பிள்ளைகள் எல்லாம் இப்படி வந்து நில்லுங்க...'' என, சாஸ்திரி கூற, அவரை நோக்கி நடந்தான், கணேசன்.
அதுவரை, பிரமை பிடித்தது போன்று அமர்ந்திருந்த நரேந்திரன், சட்டென ஓர் அறைக்குள் சென்று, வேட்டி கட்டி வந்தவன், வெற்று மார்புடன் கணேசன் அருகில் போய் நின்று, ''வந்துட்டோம்... இனி, நீங்க காரியத்தை ஆரம்பிங்க...'' என்றான்.
ஷைலஜா
Advertisement
சென்றவார தினமலரில் வந்த கதை
http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=32162&ncat=2
Tweet | ||||
அருமையான கதை அம்மா...
ReplyDeleteமனதைத் தொட்ட கதை. பாராட்டுகள்.
ReplyDeleteநன்றி திருவெங்கட்நாகராஜ்
Deleteபிரதிலிபியில் நட்பதிகாரம் என்னும் போட்டி இருக்கிறதே அறிந்தீர்களா வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி ஜி என்பி சார் ப்ரதிலிபி போட்டி பார்த்தேன் நேரமில்லை கலந்துகொள்வதற்கு நலம்தானே வருகைக்கு நன்றி மிக
Deleteமனதை உருக்குகிறது..கண்கள் நீரால் நிரம்பின கதை முடிவினைப் படித்து...
ReplyDeleteநன்றி பாரு.. தாமதமா பதில் சொல்றேன் பயணம் எதிர்பாராமல் வந்துவிட்டது!(வழக்கம்போல:):)
Deleteநெகிழ்ச்சியான கதை, வாசிக்கும்போதே மனம் கனக்கிறது. வாழ்வில் இதுபோன்ற நண்பர்கள் அமைவது அதிர்ஷ்டம்தான்! வாழ்த்துகள்
ReplyDeleteToday only i read. Eyes full of tears. very touching
ReplyDelete