அனிதா வீடுவந்தபோது அவள் அப்பாபெரியசாமி ஆடவர்மலர் பத்திரிகையில் ஆழ்ந்திருந்தார்.
“டாட்! இந்த 2020வருஷத்திலும் கையில் வச்சிட்டு புக் படிக்கிற பழக்கத்தை விடலையா நீங்க? அதான் உங்க வாட்ச்லயே 2011ன் ஆப்பிள் மறைந்து தமிழ்ப்பெண் ஆ.ரஞ்சனா என்பவர் கண்டுபிடிச்ச ஆரஞ்ச் இருக்குதே அதுலபடிக்கவேண்டியதுதானே?” என்றாள், தனது பேனாபோன்ற ஒரு சாதனத்தைத் திறந்து அதில் ஃபேஸ்(புக்)பார்த்தபடி.
“என்னதான் சொல்லும்மா புஸ்தகம்னா நாங்க அந்த நாள்ள குமுதம் விகடன்லாம் கைல எடுத்துவச்சிட்டு ஆழ்ந்து படிக்கிற சுகம் இருக்கே அதுக்கு ஈடு ஆகாதுஅனிதா…” என்று ஆரம்பித்தவரைக் குறுக்கிட்டாள் அனி.
‘கால் மீ ‘அனி’ டாட்! நான் இதை முதல்லயே இந்தக்கதையை எழுதப்போகும் ஷை(லஜா ஆண்ட்டி)கிட்டயும் சொல்லி எச்சரிச்சிட்டேன்…இந்த 2020ல அ, னி , தா ன்னு இவ்ளோ பெரிய பெயரை யாராலும் கூப்பிடமுடியாதுன்னுதான் நான் அனி ன்னு மாத்திக்கிட்டேன்..இன்ஃபாக்ட் இருபத்தி ரண்டு வருஷம் முன்னாடி எனக்கு நீங்க உங்க மாம் பெயரான அபிதகுசலாம்பரி என்கிற பெயர் வைக்க நினச்சிங்களாமே?அம்மாதான் பிடிவாதமா அனிதான்னு வச்சதா கேள்விப்பட்டேன்.ரெடிகுலஸ் என்ன இதெல்லாம்? அந்தகாலம் மாதிரியே பெண் அடிமைகளா இருப்பாங்கன்னு நினச்சீங்களா?”
மகள் போட்ட போட்டில் பெரியசாமி பேசாத சாமியாகி விட்டார்.ஆடவர்மலரில் ‘என் சோகக்கதையக்கேளு ஆண்குலமே ‘என்ற தலைப்பில் ஏகப்பட்ட ஆண்கள் கண்ணீர்வடித்து எழுதிய கதைகளைப்படிக்க முடியாமல் போனதில் தானும்கண்ணீர்வடித்தார்.
ஆரஞ்சில் டமில் ஸ்மெல் (தமிழ்மணம்) முகர அமர்ந்தார்.மனம் அதிலும் லயிக்கவில்லை
தனக்குதிருமணம் ஆகும் முன்பு எப்படி இருந்தோம் என நினைத்துப்பார்க்க ஆரம்பித்தார்…
அசைபோடும் பழைய நினைவுகளேஅவரது தனிமைக்குத் துணை.
லஞ்ச் டாட் காமில் மதிய உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு டிவியை ஆன் செய்தார்…
ஏன்ஷியட் நெட் ஒர்க்ஸ் சானலில் பனிக்கால உடையில்உடல் முழுக்க மூடி இருந்த நடிகர்தனுஷ் கடும்கோடைகால உடையிலிருந்த ஸ்ருதிஹாசனை நினைத்துப்பாடிக்கொண்டிருந்தார்.
ஒய் திஸ் கொலைவெறிடி?
சட்டெனத்திரும்பின அனிதா டிவியைப்பார்த்து அலறினாள்.
“ஓ மை காட்! டிவில ஏன் இப்படி பழையபடமாவே வைக்கிறாங்க? டாட் இதெல்லாம் உங்ககாலப் படம்!நீங்கதான் பாக்கணும்! நான் பப்க்குப்போகப்போறேன் ..மாம் வந்தா பிஸ்ஸாஅல்லது ஸ்பெக்கடி சமைச்சிவைங்கஇல்லேன்னா ஹாங்காங் நுடுல்ஸ் செய்யுங்க… மாம்ஸுக்கு அதான் பிடிக்கும்…. ஆமா எங்கபோனான் என் அருமைத்தம்பி டாம்?”
“தாமோதரனா? என்னம்மா அவன்பெயரையும் இப்படி சுருக்கிட்டே? எங்கப்பா நினைவாய் வச்சபேரு.. இப்போ அவன் டென்த் க்ரேட் ஆச்சேம்மா சின்சியரா படிக்க ப்ரண்ட்வீடுபோனான்”
‘வாட் ?மணி ராத்திரி பத்தாகுது இன்னும் டாம் வீடுவரலையா? என்ன டாட் நீங்க பொறுப்பே இல்லாம இருக்கீங்க? ஒரு வயசுப்பையன் இருட்டி இவ்வளோநேரம் வெளில இருக்கான்னு கவலையே இல்லையா? மம்மி ஆபீஸ்போய் உழைப்பாங்களா இல்ல டாம் பத்தி கவலப்படுவாங்களா? நீங்க இப்படி ஆடவர் மலர்புக்படிச்சிட்டு ஆணீயம் பேசிக்கிட்டு இருக்கறது நல்லாவே இல்ல… நைட் மம்மி வந்ததும் உங்களுக்கு நல்ல டோஸ் இருக்கு….சரி நான் கிளம்பறேன், பப்ல ஜீ(வா), ஜா(னி) ஜோ(தி) ரி(ஷி) எல்லாம் வெயிட் செய்துட்டு இருப்பாங்க..பை டாட்’
அனி அந்த சொகுசுக் காரில் ஏறி உட்கார்ந்து ரிமொட்டை எடுத்துக்கொண்டாள்.. நகரப் போக்குவரத்து சந்தடி ரிமோட்டை ஆஃப்செய்யவைத்தது.
.”ச்சேசே ப்ளடி ட் ராஃபிக்…..” என்று அவளே ட்ரைவ் செய்ய ஆரம்பித்தாள்.
கார்கணிணித்திரையில் தர்ம் சிரித்தான்… “ ஹாய் ஹண்ட் சம்!மை ப்ரின்ஸ்! என்றைக்காவது நீ என்னை ஏறெடுத்துப்பார்த்து ஐலவ்யூ சொல்லத்தான் போறேடா? என்கிட்ட என்ன இல்ல,…பழைய நடிகை அனுஷ்கா மாதிரி இருக்கேன்னு நீயே ஒருவாட்டி சொல்லி இருக்கே! ஐஞ்சடி அஞ்சங்குல உயரமும் இந்த ரோஜாப்பூநிறமும், கடைஞ்சிஎடுத்த தேகமும் எல்லா காளைகளையும் மயக்கும்போது நீ மட்டும் என்னடா விஸ்வாமித்ர தபஸ் செய்றே? நான் மேனகையா மாறணும்னு நீ எதிர்பார்த்தா ஐயாம் ரெடி யார்!”
திரை நோக்கி பறக்கும் முத்தமிட்டாள்.
அனி யின் புத்தபுது ஜப்பானிய டொகொமோ மாடல்
7 ஜிசெல்போன் திரையில் ஜோ(தி) வந்தாள்.
“வாட்ஸ் அப் டீ?”
“ஹேய் அனி…உன் ஆளு , இங்க மர்லின் மால் வந்திருக்கான்..அவன் காரை நான் பார்த்திட்டேன்....அன்பேசிவம்னு காரின் பின் கண்ணாடில கொட்டையா எழுதி இருக்கு, கார் ஜன்னல்ல பட்டை பட்டையா விப்பூதிதான் அடிக்கல..சாட்சாத் அவனேதான்..'
"ரியலி?'
”யெப் உடனே இங்க வா அனி"
*********************************
மர்லின்மாலுக்குள் அனி நுழையும்போது மெக்டொனால்ட்ஸ் வாசலில் ஆனியன் ரிங்சுடன் வந்து வழிமறித்தான் வா(சன்).
சிந்தெடிக் இழைகள்மின்னும் உடையுடன் தெரிந்தான் சராசரிக்கும் அதிகமான உயரம் ஆனால் ஆண்மையின் கம்பிரம் அதில் அதிகமாகவே இருந்தது.முகவெட்டில் பழைய நடிகர்சிம்பு. சிரிப்பில் பழம்பெரும் நடிகர் விஜய்,துறுதுறுப்பில் பழையசூர்யா மொத்தத்தில் 2020ன் புதுமுகம் சாகர் போல அட்டகாசமாய் இருந்தான்.
“ ஹேய் அனி உனக்காகவே நான் வாழ்கிறேன்” என்றான் போதையான குரலில்.
“முதல்ல வழிவிடு…நான் அர்ஜண்டா போகணும்”
“அனி மை ஹனி!மை ப்ரெட்டி கேர்ல்! என் இனிய அழகுதேவதையே…!எவ்வளவு காலம் ஆனா என்ன தமிழ்ப்பெண்களுக்கு என்றுமே தனி அழகுதான்.உன் நினைவில் தான் நான் இருக்கேன் !அனி !இன்னும் நான் யார்கூடவும் டேட்டிங் வச்சிக்கல… பிகாஸ் உன்கூடத்தான் வாழணும்னுதான்..அனி!நான் டேட்டிங் கேட்டால் உடனே ஓடி வர ஆயிரம் பேர் இருக்காங்க ஆனா எனக்கு அவங்க வேண்டாம்.லுக் அனி ! நான் நாலுகோடி(டாலர்) சொத்துக்கு ஒரே வாரிசு.என்னை ஏன் நீ கல்யாணம்செய்துக்கக்கூடாது?”
“ஹலோ ஹலோ கொஞ்சம் அடங்கு….நான் தான் தர்மை லவ்பண்றேன்னு உனக்கு தெரியுமில்ல?”
“அதனால் என்ன அனி~ இ து 2020… அவனைக் காதலிச்சிக்கோ.. என்கூட டேட்டிங் வச்சிக்கயேன்..”
“வா! நான் மாடர்ன் கேர்ல்தான்… ஆனா உண்மையான காதலை மதிக்கிறவள். இன்னிக்கு விஞ்ஞானம் அசுரவேகத்துல வளர்ந்து மனித உறவுகளை சீரழிச்சிட்டிருக்கு… ஆண் பெண் இணைப்பை பயாலஜிகல் ஈவெண்ட்டா பாக்றாங்க ஆனா நான் மனசோட சம்பந்தப்படுத்திப் பாக்றேன் எனக்கு ட்ரூ லவ் தான் பெருசு என்னால் உன்மனசு கெட்டுருந்தா ஸாரி..குட்பை”
வாசனை ஒருவழியாய் கழற்றிவிட்டு ஜோதியை ஐபோனில் கூகுளில் சர்ச்சில் போட்டு தேடினாள். அவள் அப்போதுதான் ரெஸ்ட்ரூமிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.
“ஜோ! நான் 'டாய்ஸ் ஆர் அஸ்' கடைவாசலில் நிக்கறேன்” தகவல் கொடுத்தாள்
“யா யா…என் செல்லுல நானும் உன்னைப்பார்த்துட்டேன்.. அங்க வரேன் இரு”
ஜோ வந்ததும்
“அனீ….இந்த காம்ப்லெக்சில் தர்ம் இருகிற இட ம் சின்னகோயில் .அதுக்கு கார்லதான் போகணும்டி ..24வது மாடி”என்றாள்.
”கூகுளில் கோயிலைத்தேடினியா?”
“தேடி அங்க அ வ னைப் பார்த்தும் ஆச்சி… வா போகலாம்”
ஹைட்ரஜன் திரவஎஞ்சினை இருதயப்பகுதியில் தாங்கி இருந்த அந்த அதிநவீன சொகுசுக்கார் வேகமாக மேல் தளம் ஏறியது. பார்க்கிங் ஸ்லாட்டில் காரை செருகிவிட்டு இருவரும் மூச்சிறைக்க வந்தார்கள்,
அங்கே இருந்த சின்ன பிள்ளையார் கோயிலில் உட்கார்ந்து நெற்றியில் விபூதிப்பட்டை,இடுப்பில் பட்டு வேஷ்டியுடன் பாலும்தெளிதேனும் தருவதாகவும் பதிலுக்கு சங்கத்தமிழ் மூன்றும் தரும்படியும் மெய்மறந்து பி்ள்ளையாரிடம் கேட்டுக்கொண்டிருந்தான் தர்ம்.
“ஹாய் தர்ம்?”
யார் இந்த கணபதி பூஜையில் கரடி என அதிர்ந்து நிமிர்ந்தான் தர்ம்.
அனிஅவன் அருகில் சென்றாள்..
அப்போதுஜோ சின்னதாய் விசில் அடித்தாள். ’மச்சி(னி) நான் ஜூட் விட்டுக்கறேன். மாப்பிள்ளையை அமுக்கிடு’ என்று கூறி நகர்நதாள்.
“தர்ம் ஐ லவ் யூ.. நம்ம கல்யாணம் எப்போன்னு சொல்லேன் ப்ளீஸ்?” அனாவசியமாய் சுற்றி வளைக்காமல் நேராய் கேட்டுவிட்டாள்.
“லுக் மிஸ் அனிதா…எனக்கு இந்தக்கண்டதும்காதலில் நம்பிகை இல்ல…உன் பார்வைல நான் முப்பதுவருஷம் முன்னாடி இருந்திருக்கவேண்டிய மனுஷன் தான்..அப்படியே இருக்கட்டும்…என்னால உங்க மாடர்ன் லைஃபுக்கு ஈடுகொடுக்கமுடியாது…இதை பலதடவை சொல்லியும் இப்படி நான் எங்கே போனலும் தொடர்ந்து வந்து இப்படிக் கேட்டுதொல்லை பண்றீங்களே?”
“தர்ம் .நீ இல்லாம என்னால் வாழவே முடியாது உன் உருவம் என்மனசிலயே பதிஞ்சிருக்கு அங்க வேற யார்க்கும் இடம்இல்லை”
“இந்த வசனமெல்லாம் பழைய தமிழ்சினிமாக்கு லாயக்கு… என்னைவிடு தாயே !நான்போறேன் “
பட்டு வேஷ்டிதடுக்கத் தடுக்க எழுந்த தர்ம் வேகமாய் எஸ்கலேட்டரில் இறங்கி ஓடி பேஸ்மெண்ட்டிலிருந்து காரில் ஏறிக் கொண்டான்.
அனிதா திகைப்புடன் அப்படியே நின்றவள் தன் செல்போனில் அவன்கார்போகும்பாதையை கவனித்தாள்.
கார் ஜெய்நகர் பகுதியில் பத்மஜா வீட்டுவாசலில் நிற்கவும் அதிர்ந்தாள்
“வாட் த ஹெல் இவன் கார்போய் அவ வீட்ல நிக்குது?’
பத்மஜா மௌண்ட்கார்மல் கல்லூரியில் அனியுடன் படித்தவள்.பக்கா பட்டிக்காடு. பாவாடை தாவணி என்று அணிந்து பாவயாமி ரகுராமம் பாடிக்கொண்டிருப்பாள். தன் பெயரை யாராவது பத்து என்று அழைத்தால்,"அபசாரம் ...சுவாமிக்கு ஆகாது" என்று புலம்புவாள்.
அவள்வீட்டிற்கு தர்ம் ஏன் போகிறான்?
அடுத்த பத்தாவது நிமிடம் அனி ,தர்ம் முன் ப்ரசன்னமானாள்.
“தர்ம் திஸ் ஈஸ் டூ மச் .இந்த bad m a ja க்காகவா என்காதலை நீ நிராகரிச்சே ?இவ என்னைவிட எதில உ சத்தி ? பலூன் மாதிரி இருக்கா இந்த பேட்மஜா?”
“பத்மஜா என்றால் பத்மமான தாமரையில் அமர்ந்திருக்கும் திருமகள்.என்று பெயர் .உனக்கு செம்மொழி தமிழும் சரியா தெரியாது தேவமொழி சம்ஸ்க்ருதமும் புரியாது…நுனிநாக்குல ஆங்கிலம் பேசும் நவநாகரீக மங்கை நீ!” தர்ம் சீண்டினான்.
“ ஏய், பேட்மஜா! என் ஆளுடிஅவன் விடு அவனை” என பத்மஜாவை பிடித்துத்தள்ளினாள் அனிதா.
“ மிஸ் அனிதா இதப்பாருங்க….நான்பொறுமையான ஆண்பிள்ளைதான் ஆனா என் காதலிமேல யார் கைவச்சாலும் வெட்டிடுவேன் ஆம்மா?”
தர்ம் உறுமவும் அனிதா அவமானத்தில் முகம் சிவக்க வீடுவந்தாள்.
ஆனால் மறுநாளே ஒரு விபரீதமுடிவெடுத்தாள்.
***************************************************
டிசம்பர்மாதத்திய பனிப்புகை, சாலையில் பரந்து சூழ்ந்திருக்க
அந்த நடுநிசியில் அனி, காரில் ஏறி புறநகர்ப்பகுதியில் இருந்த அந்த மேலைநாட்டுவாசனை கொண்ட காலனிக்குள் காரை செலுத்தினாள் தர்ம் வீட்டுவாசலில் காரை ஓசைப்படாமல் நிறுத்தினாள்.
மெல்ல காம்பவுண்டுக்குள் குதித்தாள்.
நல்ல வேளை வள்கம் சொல்லும் நாய்கள் ஏதுமில்லை
மெல்லிய கான்வாஸ் ஒலியோடு இருபக்கமும் கண்களைத் துழாவினாள், ஹாலின் ஜன்னல் வெண்டிலேட்டரின் கண்ணாடிகளை ஓசையின்றி அகற்றினாள்
மெல்ல உள்ளே உடலை நுழைத்து வளைந்து இறங்கினாள்.
ட்ராயிங் ஹால் ரீடிங் ஹால் அடுத்து வீடு நடுவில் தெரிந்த மாடிக்குச்செல்லும் படிகளில் ஏறி சன்ன நீல நிற வெளிச்சம் தெரிந்த பெட்ரூமுக்குள் போனாள். அங்கு கட்டிலில் கழுத்துவரை கம்ஃபர்ட்டரைப் போர்த்திக்கொண்டு தர்ம் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தான்.
அனி அவன் அருகில்வந்து நின்றாள்.
“ஹேய் ஹாண்ட்சம் .தூக்கத்திலயும் நீ அழகுடா செல்லம்!இந்த அழகு எனக்குக்கிடையாதா?அப்படி என்றால் அந்த பேட்மஜாக்கும் கிடைக்கக் கூடாது ,, காதலுக்காக கொலையும் செய்வா அனிதா.,ஆமா.. ஒழி நீ செத்துப்போ உனக்கு என்கையால்தான் முடிவு”
குனிந்து பலத்தையெல்லாம்திரட்டி கைகளை அவன்கழுத்தில் வைக்கும்போது அவள் கழுத்தை ஒரு வலியகரம் சட்டெனப் பற்றியது
“அவுட்ச்!” சன்னமாய் கூவியபடி திரும்பினாள்.
அவளைஅப்படியே ஓசைப்படாமல் வரும்படி ஜாடைகாட்டி அடுத்த அறைக்கு இழுத்துப்போன உருவம் அங்கு லைட்போட்டது .
வெளிச்சதில் அனிபார்த்தாள். அது ஒரு பெண். ஜீன்ஸும் டிஷர்ட்டும் அணிந்து நரைத்தபாப்தலைக்கு கணிசமாய் டை அடித்திருந்தாள்.வயது அறுபதுகளில் இருக்கலாம்.
பெரியசாமி அந்த நாளில் தான் மிகவும் சிலாகித்துரசித்ததாய் சொன்னதால் அனிதா ’நெய்ல்டாப்’பில் கஷ்டப்பட்டுப்பார்த்த ஏய் படத்து நடிகை நமீதாபோலவும் கணிசமாய்த் தெரிந்தாள்.
“நான் தர்ம்மின் மாம்..நீ யார்?” என்றாள் அதட்டும்குரலில்
“நான் ,நா…ன்…” திணறினாள் அனி.
“பார்த்தா நல்லபடிச்சபொண்ணா தெரியற… நீ காரைநிறுத்தி உள்ளகுதிச்சி ஹால்ஜன்னல் கண்ணாடிகளைநகர்த்தி என் சன்னோட ரூம் போகிற வரை நான் உன்னை கவனிச்சிட்டு தான் இருந்தேன் ..இங்க எல்லாஇடத்திலும் அலார்ம் இருக்கு..விரல அமுக்கினா போலீஸ் வந்துடும் ..செக்யூரிடி துப்பாக்கி உன்மேல நீண்டுடும ஆ னா நான் செய்யல பிகாஸ் உன் துணிச்சல் எனக்குப்பிடிச்சிருக்கு. ப்ரேவ்கேர்ல்! உன்னைமாதிரி நானும் துணிச்சல்காரிதான்
சரி எதுக்குவந்தே ?ஏன் என் பையனைக்கொலைசெய்ய நினச்சே?”
அனி தயங்கிப்பிறகு விவரம் சொன்னாள்.கடைசியில்
“அத்தை என்னைப் புரிஞ்சுக்குங்க உங்க மகனை உயிராகக் காதலிக்கிறேன்…தர்ம் இல்லேன்னா எனக்கு வாழ்வேஇல்ல”கண் பனித்தாள்.
“ரொம்பதமிழ் சினிமா பார்த்திருக்காங்க உன் அம்மா,நீ வயத்துல இருக்றப்போன்னு நினைக்கிறேன்..தர்ம் மீது நீ கொண்ட காதலை நான் மதிக்கிறேன் …சரி இப்போ என்னோடுவா” என்றாள்.
அவளோடு அந்த அறையில் நுழைந்த அனி, அங்கு நிறைய சோதனைகுழாய்கள் பிப்பெட்டுகள்,ப்யூரெட்கள் இருப்பதையும்பார்மலின் நெடி அடிப்பதையும் உணர்ந்தாள். .கண்ணாடிஜாடிகளில் ரசாயனதிரவத்தில் தவளைகள் மிதந்தன சதைத்துணுக்குகள் பாலிதீன்பைகளில் ..மூட்டைமூட்டைகளாய்.
குரங்கு ஒன்று விட்டத்திலிருந்து க்ர்ர் என்று அசிங்கமாய் சிரித்தது. கேரட்டைக்கடித்துக்கொண்டு வெள்ளை முயல்கள் இரண்டும் கூண்டிற்குள் ஓட்டப்பந்தயம்
நட த்தின. ஒரமாய் சின்ன மேஜைமீது சாதுவாய் வெள்ளைஎலி சுகமாய்த் தூங்கிக்கொண்டிருந்தது.
“மேடம் நீங்…. நீங்க?”குழப்பமும் திகைப்புமாய் அனி கேட்டாள்.
“நான் ஒரு சயின்டீஸ்ட் பேர் குந்தளா தேவி.செல்லமா’குந்த்!’ அனி! என்கதை ரொம்ப சோகமானது எனக்கு கல்யாணமாகி பிறந்த குழந்தை இறந்துபோனது அதில் ரொம்பமனம்
உடைஞ்சிபோனேன்.
அ ப்போது என் கவனத்தை திசைமாற்ற க்ளொனிங் துறையில் கவனம் செலுத்தினேன். என் கணவரும் இதுக்கு சம்மதித்தார். என்னோட ரண்டாவது குழந்தையை க்ளோனிங் முறைலதான் பெற்றேன் அவன்தான் தர்ம்… அடுத்து அர்ஜ் ,பீம் .நகுல், சகா ன்னு மொத்தம்
அஞ்சுபையன்கள் எனக்கு .
எல்லாருமே ஒரே அச்சில் வார்த்த மாதிரி இருப்பாங்க .அதனால குழப்பம் வேண்டாம்னு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு ஊ ர்ல அனுப்பி படிக்கவச்சிட்டேன். தர்ம் மட்டும் இங்க பெங்களூர்ல என்கூட இருக்கான்..வருஷம் ஒருமுறை எல்லாரும் இங்க வருவாங்க.. ஒருவாரம் வீட்லயே இருப்பாங்க சேர்ந்து வெளில போக மாட்டாங்க…..இப்போ இங்க தான் இருக்காங்க….
அனி! உனக்கு தர்ம் கிடைக்கலேன்னா என்ன, மீத நாலுபேர்ல யாரையாவது செலெக்ட் செஞ்சிக்கோயேன்? எல்லாருமே தர்ம் போலவே க்ளோனிங் கைஸ்! ஒரே வார்ப்புல செய்த பொம்மைகள் மாதிரி இருப்பாங்க.. அவங்களில் ஒருத்தனுக்கு பழையநடிகை ஐஸ்வர்யாராய் மாதிரி இருக்கற உன்னைப்பிடிச்சிடும். நான் கல்யாணம் செஞ்சிவைக்கிறேன்…”
குந்தளாதேவி இபடிச்சொல்லும்போது, “ஹாய் மாம் யாரோட பேசிட்டு இருக்கிங்க?’ எனக்கேட்டபடி வந்த நால்வரையும் பார்த்தாள் அனி, அடுத்தகணம் மயக்கம்போட்டு விழுந்தாள்.
*****பிகு:)************************************************************
இது பழைய பதிவு புதிய காப்பி!!
ஓண்ணு ரண்டுவார்த்தைகள்+தலைப்பில் மட்டும் மாற்றம் செய்து மீள்பதிவு! .
படத்திலிருக்கிற பெண் அழகா இருந்தா நன்றி
பிலாசபி பிரபாகரனுக்குத்தான் நைசா அவர் பதிவிலிருந்துதான் சுட்டேன்!!!