Social Icons

Pages

Wednesday, April 16, 2014

அந்நியமண்ணின் அழகுப்பூக்கள்!


பூலோகமே இதுதானா!




(மேலே வானம்  கீழே மலர்கள்!)

அமெரிக்காவில் சியாட்டல் நகரத்தில் ஸ்கஜிட்  என்கிற  இடத்தில்   வருடாவருடம் ஏப்ரலில் ட்யூலிப் மலர்க்கண்காட்சி நடக்கிறது. ..பார்த்தால்குக்கிராமம்  போல  இருக்கிறது அந்தப்பகுதி!


(குக்கிராமத்து வீடு இது:))


இதுவும்  கிராமத்துவீடுதான்!!!



  ஆனால் அங்கே  இருக்கும் தனித்தனி வீடுகள்  அரண்மனைபோல இருக்கின்றன .எல்லார் வீட்டு வாசலில்  பெரிய புல்வெளி  ஓரமாய்  ட்யூலிப்ஸ் அணிவகுப்பு. எல்லாம்  ஒரே உயரத்தில்  இருப்பது தனிச்சிறப்பு!


இது  daffodils  பூக்கள்.

Skagit Valley tulip festival.  என்கிறார்கள். மலர்கள் மலர்வதைப்பண்டிகை என்கிறார்கள்  பாருங்கள்!

ஊரில்  நுழையும்போதே  எல்லா இடங்களிலும் ட்யூலிப் மலர்கள்  வரைந்த  பானர்கள் . ஓரிடத்தில்  பாலத்தின் கீழ் இருந்த கல் சுவர் நெடுக நம் ஊரில்  சிலைகளைப்பதிப்பதுபோல  கற்பூக்களாய் ட்யூலிப்ஸ்!

(நான் மலர்களோடு  தனியாக ஏன் இங்கு நின்றேன்?(அப்பவாவது  கொஞ்சம்  அழகுமலரக்குப்பக்கத்தில் வருவோமா என்றுதான்:):)

மனிதர்களும் கார்களும் ஒரே எண்ணிக்கையில்  இருக்கும் இடம் அமெரிக்காவாகத்தான் இருக்கும்:) அத்தனை கார்களுக்கும் பார்க்கிங் வசதி செய்திருந்தாலும்  அதையும் மீறி  கார்கள் படையெடுப்பு! ஸ்ப்ரிங் ப்ரேக்  என விடுமுறை வேறு பள்ளிகளுக்கு.ஆகவே குடும்பமாய்  வந்துவிடுகிறார்கள். எல்லா வாகனங்களையும்  நிறுத்தியாக வேண்டுமே ஆகவே..

அந்த சிறு ஊரின் சின்ன  சாலையின் இருபுறமும் வெள்ளைக்கோட்டுக்கு வெளியே மண்சாலையில்  நிறுத்த அனுமதிகொடுத்தார்கள்.  ஒரு செமீ  காரின் டயர்பாகம் வெள்ளைக்கோட்டை மீறி ப்போனால் அதற்கு போலீஸ்(நம் மக்கள் செல்லமாய்’மாமா;என்கிறார்கள்.பெண்போலீசுக்கு’மாமி’) கார்மீது  சர்ரென  ஒரு தாளைக்கிழித்து ஒட்டுகிறார்கள்.’டிக்கட்’டாம்! அதாவது அபராதம்! 

.
திறந்தவெளியில்  களிமண் பூமியில் சரளைக்கற்களைத்தார்காலிகமாகக்கொட்டி  இருந்தார்கள். மொபைல் டாய்லெட்டுகள( வாசலில்  நீளமான  க்யூ)
.’அக்கட லேது’என்ற சுந்தரத்தெலுங்குக்குரலுடன்,’அல்லி நோட்ரீ’என்ற  கன்னடம் கேட்டதும்  காதில்  ஹனி பாய்ந்தது!



5டாலர் நுழைவுவாயிலில்   கட்டணம் வசூல்செய்ததும்  வலதுகை மணிக்கட்டுப்பக்கம்  கை முத்திரை வைக்கிறார்கள் அதுவும் ட்யூலிப்ஸ் மலர் சின்னம்தான்!  

திறந்தவெளியில் நம் கண்முன் ஹோவென  மலர்ந்து சிரிக்கின்றன ட்யூலிப்  பூக்கள்..எத்தனை  மலர்கள்! எத்தனை நிறங்கள்! சிவப்பு வெள்ளை  மஞ்சள் வயலட் மெஜந்தா மஸ்டட்  மெரூன்  பர்ப்பிள் ஆரஞ்சு  ரஸ்ட் இன்னும் பல நிறங்களில்! எல்லாம்  சின்ன தாமரைப்பூ  சைசில் பெரும்பாலும் இருக்கின்றன.  வண்ணபல்புகள் எனலாம்! 

 மலர்ந்தும்மலராத பாதிமலர்கள்  கூட  பார்வைக்கு விருந்தாக இருந்தன..  பாத்திபாத்தியாய் கட்டி ட்யூலிப்ஸ் வயல்களை  அமைத்திருக்கிறார்கள். சிலமலர்கள் இரட்டை வண்ணங்களில்  சட்டென அதில் அணில்  முதுகின்மீது ராமர்போட்ட கோடுகள்போல  இருக்கும்  ட்யூலிப்சின்   ஆளுமை கண்ணைக்கொள்ளை அடிக்கிறது! பாத்திகளுக்கிடையே நின்றும் அமர்ந்தும் படங்கள் எடுத்துக்கொள்கிறார்கள் பார்க்கவருகிறவர்கள்..



 பரந்த நிலப்பரப்பு அல்லவா அதனால்  பல்லாயிரம் ஜனங்கள் அங்கே  நடந்துபோகையில் எந்தவித  இடிபாடோ  கூட்ட கசகசப்போ கிடையாது.  பர்கர்  பாப்கார்ன்  முதல்  கோக்  போன்ற பானங்கள் வரை கொஞ்சம் அதிகப்படிவிலையில்   அந்த பூத்தோப்பில்  உணவுக்கடை  ஒன்றில்  கிடைக்கிறது.

இதுவும் டாபிடல்ஸ் பூக்கள்.

ட்யூலிப்ஸ் செடிகள்  விற்பனைக்கும்கிடைக்கிறது.. நாலு பல்பு(மொட்டு உள்ள அரையடி அளவிலான நான்கு செடிகள் ஒருபாக்கெட்டில்) வாங்கினால்  ஒண்ணூ ஃப்ரீயாம்! ஆனா ஒண்ணு 20டாலர்!’அம்மாடி  இந்தவிலையில் மல்லி முல்லை துளசி வாங்கிவச்சா பூஜைக்காவது ஆகும்’ என க்ரீன்கார்டு பெண்மணி முணுமுணுத்தார்!

அழகிய   அயல்நாட்டுப்பெண்கள் பலர்  மலர்கள் அருகே செல்லும்போது  ஓர் தமிழ் இளைஞர்,’மலர்கள்  நோக்கும் மலர்கள்” எனக்கவிதையாக ஆரம்பித்தவர்  ஏனோ தொடரக்காணோம் அருகில் நின்ற   மனைவியின் விழிமலர்க்கணைகள் வந்ததோ என்னவோ:):)

கிஃப்ட் ஷாப்பில்  டி ஷர்ட் கைப்பை டீ கப்   போட்டோஃப்ரேம் என எல்லாவற்றிலும் டுலிப்ஸ்மலர்கள்  முத்திரை பதிக்கின்றன. ட்யூலிப்ஸ் தவிர  டாபிடல்ஸ் மலர்களும் மஞ்சள் நிறத்தில்அழகாக  இருக்கின்றன ... ட்யூலிப்ஸ்  செடிகளுக்கு  கொஞ்சம்  தான் பேரழகென்று தலைக்கனம் இருக்கிறதுபோலும் மலர்கள்  எல்லாம் பெரும்பாலும் நிமிர்ந்தே  இருக்கின்றன் ஆனால்  டாஃபிடல்ஸ்  ரொம்ப  பணிவு. மலர்ந்ததும்  லேசாய்க்குனிந்துவிடுவதும் ஓர் அழகுதான்! 

பார்த்ததும்  வில்லியம் வோர்ட்ஸ்வர்த்தின்’  த டா·பிடல்ஸ்'  நினைவுக்கு வந்தது.

      I wandered lonely as a cloud
    That floats on high o'er vales and hills,
   When all at once I saw a crowd,
   A host, of golden daffodils;
   Beside the lake, beneath the trees..


தங்கள் அழகும் வாழ்வும் சிலகாலங்களுக்கு மட்டுமே என்றாலும்  சிரிக்கத்தவறுவதில்லை பூக்கள்!






5 comments:

  1. ஆகா...! அழகோ அழகு...

    படங்களே மனதைக் கவர்கின்றன...

    ReplyDelete
  2. மலர்த்திருவிழா வர்ணனையும் படங்களும் மனம் கொள்ளை கொள்கின்றன. பாராட்டுகள் ஷைலஜா.

    ReplyDelete
  3. படங்கள் மனதைக் கொள்ளை அடித்தன.... எத்தனை எத்தனை பூக்கள்.....

    ReplyDelete
  4. மிக்க நன்றி பின்னூட்டமிட்ட சே குமார் வெங்கட்நாகராஜ் கீதமஞ்சரி டிடி அனைவர்க்கும்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.