Social Icons

Pages

Thursday, December 18, 2014

நீங்காத செல்வம் ...

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்!

பேர் பாடி...

போதும்  வேறொன்றும் வேண்டாம்  இருந்த இடத்தில் இருந்தபடியே அவன் பெயரைச்சொன்னாலேபோதும்.அதற்கே  அதிகம் அருள்பவன் அவன் உத்தமன்,

அப்படி என்ன  பெருமை  இந்த உத்தமனுக்கு? அவதாரம் என்றால்  அது ஒன்றாகத்தன இருக்கும் ஆனால் வாமன அவதாரத்தில் மட்டும்  இரட்டை அவதாரம் எடுக்கிறார். ஆம் குள்ளனாய் வந்து  பிறகு வான் முட்ட  நிமிர்ந்து விஸ்வரூபம் எடுக்கிறார். வாமனன்+திருவிக்கிரமன் அவதாரம்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி என்று  ஆரம்பிக்கிறாள்!.கேசவா நாராயணா  மாதவா கோவிந்தா என்றே சொல்பவள்  இந்த ஓங்கிஉலகளந்தவனை மட்டும்  உத்தமன் என்கிறாள்.

நெடுமாலான திருமால் தன்னைக்குறுக்கிக்கொண்டதால் உத்தமன்.


பிச்சை எடுக்கும்போது ஒருவனுடைய கல்வி, கேள்வி,புகழ்,சாதுரியம்,மற்றும் வெற்றி என்ற ஐந்து தேவதைகளும் அவனை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து மீண்டு வர இயலாத தூரத்துக்கு விலகுகிறார்கள் என்பது தெரியாதா ? அதையும் செய்தான் பெருமாள். அவன் உத்தமன்,

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்ததில்
என்ற குறள் அறியாதவர் யார் ?


 திரிவிக்கிரமனின் முதலடி யில் ஆண்டாள் மாலின் ஸ்பரிசம் உணர்ந்தாள். பூமிதேவியின் அம்சமான அவள் மீது தானாக திருவடியை பதித்தான் அவன் உத்தமன்.


அகலகில்லேன் இறையுமென்று  அவன் அடிக்கீழ் அமர்ந்து அவன் திருவடி காண நினைக்கும் நம்மாழ்வாரும் படியாய்க்கிடந்து உன்  பவளவாய்காண்பேனோ என்ற குலசேகராழ்வாரின் ஏக்கமும்   அப்படியே   இருக்க  எதிர்பாராமல் திருவடியை தன் தலைமீது வைத்தானாம்  அந்தப்பரவசத்தில் ஆண்டாள் சொல்வது உத்தமன் !

.

 . மஹாபலி மகன் நமுசி 'சின்னக்காலைக் காட்டிப் பிச்சை வாங்கிப் பெரிய காலால் அளந்து மோசம் செய்தாய் ' என்று தூற்றிப் பொருமினான். போற்றவில்லை பெருமானை, அதை சகித்துக்கொண்ட அண்ணல் உத்தமன்

சுக்ராச்சாரியார்[அசுரகுரு]பூச்சியாகக் கமண்டலத்தை அடைத்து தானத்தை நிறுத்த முயன்றதற்கு அவர் விழிக்குமட்டும் தண்டனைகொடுத்து உயிரைப்பிழைக்க வைத்த உத்தமன்.

மகாபலியை அழிக்காமல், அவன் அகந்தையை அழித்து, அவனைத் திருத்தி தடுத்தாட் கொண்ட) கருணை வடிவமான வாமன அவதாரமே உகந்ததாகப் பட்டது  
.வாமனன்  உத்தமன்.


அதனாலேயே அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி  என்று வாமனனை இன்னொரு பாசுரத்தில் முதலில் வைக்கிறாள் மனதுக்கு இனியனாகிலும் இராமன் இரண்டாவது வரியில் தான் வருகிறான்..



இந்தப்பாடலில்   எல்லாமே   பெரிதாகத்தெரிகின்றன   நிறைவாக வருகின்றன.
ஆரம்பமே ஓங்கி   உலகளந்த....

ஆமாம்  ஆகாயமளவுக்கு  காலை நீட்டி  அளந்தானாம் அத்தனை உயரம்!  மூவுலகமும் அளந்தவன் !

ஓங்கு பெருசெந்நெல்லாம்...
ஆகாயமளவு  உயர்ந்த செந்நெல்பயிர்கள்  பயிர்களின் செழிப்பு வர்ணனை!
 கயல் எல்லாம்  துள்ளுகிறதாம் ! உற்சாகம்  இங்கே  கயல்  உகள என்கிறாள்.. அழகிய குவளைமலரில்பொரிவண்டு  கண்படுப்ப...மலரில் தேன்முழ்கி  இருந்திருந்தால்தான்   வண்டுவரும்.தேன்   குடித்து  மயங்கியபடியே படுப்பது இங்கும் நிறைவு!

தேங்காமல்  உள்ளே புகுந்து சீர்த்தமுலையாம் அதாவது  தேக்கமே கிடையாதாம்..அப்படி ஒரு நிறைவு. சீர்த்த முலைகள்..நிறைந்த பெரிய மடிகளைக்கொண்ட வள்ளல் பெரும்  பசுக்கள்! வள்ளல் தன்மையே  பெரிதாம் இதில்  பெரும்பசுக்களாம்  நல்ல பெரிய பசுமாடுகள்.



வள்ளல்பசுக்கள்  அருகே குடம் கொண்டுபோய் பாலைவாங்கப்போனால் வற்றாமல் கொடுக்கிறது அதுவும் எப்படி குடம் நிறைக்க நிறைய.


தீங்கின்றி நாடெல்லாம்(ஒரு ஊர் மட்டுமில்லை  நாட்டுக்கே மழையாம்  இங்கும் ஆண்டாளின் மனவிரிவினைக்காணலாம்)

திங்கள்(மாதம்)மும்மாரி..ஒருமழை எல்லாம் போதாது மாதம் மும்மாரி பெயவேண்டும் அதுவும் தீங்கின்றி ..அதிகமாகவும் கூடாது  குறைவாகவும் பெய்துவிடக்கூடாது  ..தீமையற்ற நல்ல மழையாம்  ...உயர்ந்த மனச்சிந்தனை இது.

 நிங்காத செல்வம்..செல்வம் செல்வோம் என  சென்றுவிடக்கூடாதாம் நீங்காமல் இருக்கவேண்டுமாம்.  இவையெல்லாம் நிறைந்து  இருக்கவேண்டுமாம்!


ஆஹா  இந்தப்பாடல்தான் எத்தனை வளமாக  நிறைவாக இருக்கிறது!


ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவிலில்  அர்ச்சகர்கள் இந்தப்பாடலைப்பாடித்தான் நம்மிடம் அர்ச்சனைபிரசாதம் தருகிறார்கள்(வேறு சிலகோவில்களிலும் உண்டு)
அதனால்தான்  இந்தப்பாசுரம் இருமுறை  சொல்லப்படுகிறது.. 

ஆண்டாளின்  பரவசம்  உற்சாகம்  அனைத்து உயிர்களீடத்திலுமான  பரிவு அக்கறை தேசநலன் என அனைத்தும் இந்தப்பாசுரத்தில் காணப்படுகிறது!

**********************************************************************************************8
(உத்தமன் வருகிறார்  இன்றைக்கு  ஆம்  ஓங்கி உலகளந்த உத்தமன்!
இன்றைக்கு   நான் வாசலில் இட்ட கோலமுடன்  உத்தமனை வணங்கி வரவேற்போம்! )



--
மேலும் படிக்க... "நீங்காத செல்வம் ..."

Tuesday, December 16, 2014

காவிரி பாயும் திருவரங்கம்!




பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பனை பள்ளி கொண்ட
மாயனார் திருநன்மார்வும் மரகதவுருவும் தோளும்
தூய தாமரைகண்களும் துவரிதபவளவாயும்
ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே"



தொண்டரடிப்பொடி ஆழ்வார் இப்படி சொல்கிறார்


காவிரி பாய்ந்துவருகிறதாம்! 

ஒரு முறை காவிரி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்ததாம். (கதையல்ல நிஜம்தான்  பல்லாண்டுகள் முன்பு நடந்த நிகழ்ச்சி இது)வெள்ளம் ஊரையே விழுங்கி விடும் என்று அனைவரும் பயந்து கொண்டிருந்த போது, கம்பன் ஊருக்கு வந்தானாம். 

...’உலகுடைய தாயே! நீ கரைகடக்கலாகாது காண்!"
என முடித்து காவிரி கரையில் நின்று  பாடலை பாடினானாம். காவிரி  உடனே அடங்கிப்போய்விட்டாளாம்!
 ஊருக்குள் பாய்ந்துவேகமாகவந்தாலும் அரங்கனின் பாதத்தை  தொடும்போது வருடுவதுபோல மென்மையாக இருக்கிறதாம்!
  தென்னீர்பொன்னி திரைக்கையால் அடிவருட என்கிறார்  இன்னொரு ஆழ்வார் பெருமான்! காவிரியின்திரைக்கையால்  தனது திருவடியினை வருடிக்கொண்டிருக்க,  அனந்தன் எனும்  பாம்பின்மேல் பள்ளிக்கொள்ளும் பெருமான் அரங்கன்!
ஒருபுறம் ஆழ்வார்களின் பாசுர இசை!  மறுபுறம் காவிரியின் அலையோசை! 

மார்கழி  இன்றுபிறந்துவிட்டது!  திருவரங்கம்  புத்தாடை கட்டிக்கொண்ட சிறுமியைப்போல  மகிழ்ச்சியில்  திளைக்கிறது!  எங்கெங்கு காணினும் பக்தர் கூட்டம்! கோவிலைச்சுற்றிய நான்கு வாசல்களிலும்  வண்ணக்கோலங்களும் வாசல்திருமாடத்தில் விளக்கின் ஜோதிகளும்!

திருப்பாவை பாடிக்கொண்டு  செல்லும்  பாவைகள்! ஏழுதிருவீதிகளையும் சுற்றிக்கொண்டு அரங்கன் அடியார்கள்  பாடும் அண்ணல் நாமங்கள்!

வெள்ளைகோபுர உச்சியில்  வசந்த(குமாரி)க்குரல் ” எல்லே  இளங்கிளியே இன்னம் உறங்குதியோ?’ என்று  உரிமையாய் அதட்டுகிறது..

ரங்கா ரங்கா ரங்கா  என்று  எங்கும்  ஒலி பெருகிவருகிறது!
வடக்குச்சித்திரைவீதியில் வாழும்
லட்சுமிபாட்டிக்குக்கண்  சரிவரத்தெரியவில்லை.அதனுடன்  தினசரி  கோவிலுக்குப்போய்வரத்தவறுவதில்லை

“என்ன பாட்டி  கண் பார்வை  ரொம்பக்குறைஞ்சிபோயிருக்கு இந்த நிலைமைல  நீங்க கோவில்போய் ரங்கனைப்பார்க்கத்தான்
 முடியுமா ?” என்று ஒருநாள் கேட்டபோது,” ,என்னை ரங்கன் பார்க்கிறானே அது போதும்” என்றார்!

திருவரங்கநகருக்கு நான் அளிக்கும்ஒரு கவிதை!

மண்ணில் ஒளிரும் மகிழரங்கம்
மாந்தர்போற்றும் மாதவரங்கம்
கண்ணில் தெரியும் ஒரு சுவர்க்கம்-அது
காவிரி பாயும் திருவரங்கம்!

அண்ணல் ராமனின் கம்பன் காவியம்
அரங்கேற்றிய இடம் திருவரங்கம்
பண்ணிய புண்ணியத்தாலே-நாம்
எண்ணி மகிழும் அணியரங்கம்!

விண்ணளாவிய ராஜகோபுரம்
வெண்முகில்வருடும் பொன் கலசம்
பன்னிரண்டு ஆழ்வார்கள்-பாடி
அண்ணலைத்துதித்த நல்லரங்கம்!

அணியார் பொழில் சூழ் எழிலரங்கம்
 அண்டர்கோன் அமரும் பூவரங்கம்
தண் துழாய் மாலைசூடித்தந்த-கோதை
கண்டு கரம்பிடித்த களியரங்கம்!
மேலும் படிக்க... "காவிரி பாயும் திருவரங்கம்!"

Monday, December 15, 2014

தமிழின் மிகபெரிய ஆளுமையை சந்தித்தோம்!




திரு வெசா திரு ஹரிகி




தமிழின் மிகப்பெரிய ஆளுமைக்குரியவரும், விமர்சன வித்தகருமான

திரு வெங்கட் சாமிநாதன் அவர்களை வெசா  என்று தமிழ் அன்பர்கள்  அழைப்பார்கள். 

வடக்கே பல காலம் இருந்தவர் .இவரது  விமர்சனங்களில் பலர் வளர்ந்திருக்கிறார்கள். ‘எங்களுக்கு முன்னோடி  வெசா அவர்கள்தான்’ எனபல கலைஞர்கள் சொல்வார்கள்.

  நேர்மையான வெளிப்படையான  கருத்துக்கள் திரு வெசா அவர்களுடையது.

. கதை கவிதை  கட்டுரைதிரைப்படம் பரதம் ஓவியம் நாடகம் என பன்முக ஆளுமை கொண்டவர்.
 அவரது விமர்சனத்தில் தன் பெயர்  எங்காவதுவருமா  என ஏங்கும் கலைஞர்கள் பலர் உண்டு(நானும் தான்! என்றாவது  ஒரு நல்லபடைப்பினில்  அவர் பாராட்டினைப்பெற்றுவிடவேண்டும் என்பது லட்சியமும் கூட)


இந்த சுட்டியில்....
  வெ சா அவர்களுக்கு பெங்களூர் நகரம் பெருமைப்படுத்தியதை விவரமாககாணலாம்.. 

பெங்களூருக்கு வெசா வந்திருக்கிறார் என்று தெரிந்தநாளிலிருந்தே எங்களுக்கெல்லாம்  வெசா அவர்களை சந்திக்க  மிக ஆவலானது. 


(மகேஷ்  ,திருமூல நாதன்,பின்னே  திருமால், ராமலஷ்மி ஷைலஜா, ரஞ்சனி நாராயணன், ஹரிகிருஷ்ணன்.)

சென்றவருடம் அமர்க்களமாக   நடந்தவிழாவில் அவருக்குப்  பொன்னாடை போர்த்தி பரிசுப்பணம்கொடுத்து, மைசூர்தலைப்பாகை வைத்து(அந்த தலைப்பாகையை பத்திரமாக வைத்திருக்கிறீர்களா என கேட்க நினைத்தேன் கடைசியில்மறந்துவிட்டேன்:)திரைபிரபலங்கள் மற்றும் இதரமொழி இலக்கியப்பிரபலங்கள் புடைசூழ அன்று விழாநாயகர்களில் ஒருவராக அமர்ந்திருந்தார். எல்லாவற்றையும் இணையத்தில்தான் பார்த்தோம்! அன்றிலிருந்தே   மிகவும் ஆவலுடன்
 நம் மதிப்பிற்குரிய திருவெங்கட் சாமிநாதன் அவர்களை  சந்திக்கும்  வாய்ப்பிற்குக்காத்திருந்தோம்.

வடக்குவாசல் ஆசிரியராக இருந்த திருபென்னேஸ்வரன் பெங்களூர்வந்தபோது  ‘சந்திக்க அழைத்துப்பொவதாய் சொன்னார் ஆனால் கடைசிநிமிஷத்தில் அவருக்கு இயலவில்லை  தலைநகர் திரும்பிவிட்டார்.
 

அப்படி இப்படி2வருடங்களாய்  திட்டமிட்டுதிட்டமிட்டு  நாங்கள்  கண்ட கனவு நனவானது!




(ஜீவ்ஸ் ஐய்யப்பன்   ராமலஷ்மி   ரஞ்சனி   ஹரிகிஜி  திரு.
 வெசா)

ஆம் சென்ற சனிக்கிழமை  மதியம்  ஹெப்பால் பகுதியில் எஸ்டீம் மால் மூன்றாம் தளத்தில்  திரு வெசா அவர்களுடன்  இரண்டுமணி நேரம்  நடந்த இனிய சந்திப்பு மறக்கமுடியாதது! வேகமாக நடக்க இயலாத  நிலையில் எங்கள் அழைப்பினை ஏற்று அந்த இடத்திற்கு , வந்த  திருவெசா அவர்களுக்கு மிக்க நன்றி.



சந்திப்பிற்கு வந்தவர்களில்  திருமூல நாதன் என்னும் இளைஞனைப்பற்றி நிறைய சொல்லவேண்டும் ஏனென்றால் தமிழ் உலகம் இந்த இளைஞரைப்பற்றி  அதிகம் அறிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.  4வயதிலேயே  1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்தவர் , . இன்னமும் இவர் பெருமையை மகிமையைக்கூற  ஓரு பெரிய
 பதிவே  எழுதவேண்டும்.






சிலரை சந்திப்பதற்கு முன்பு என்னவெல்லாம் பேசவேண்டும் என தீர்மானித்துவைத்திருப்போம் மனதிற்குள் ஒரு ஒத்திகையும் நடந்திருக்கும்! ஆனால் திரு வெசா அவர்களிடம் அப்படியெல்லாம்  ஏற்பாடுடன் செல்லவில்லை..இயல்பான  ஒரு சந்திப்பாகவும், இனிய நம் குடும்பப்பெரியவரை சந்தித்துப்பேசிமகிழ்ந்ததாகவும் அமைந்தது.


சந்திப்பிற்கு வந்திருந்த  மகேஷ் என்னும் இளைஞர்(கம்பராமாயண  முற்றோதல்வகுப்பின் தலையாய் மாணவர்களில் இவரும் ஒருவர்) திருவெசா அவர்களிடம்,விமர்சனக்கலையில் உங்களுக்குப்பிறகு முழுமையான  விமர்சகர்  யார் என நினைக்கிறீர்கள்?” என்கேட்டார்.

”யாரும் வரலாம்  அதை நீங்க தான் வளர்த்துக்கொள்ளவேண்டும்” என்றார் வெ சா.

“அகிலனுக்கு ஞானபீட விருதுகிடைத்தபோது நீங்கள் எழுதிய விமர்சனம் மறக்கமுடியாதது”

“ஆமாம்  இந்த எழுத்துக்கெல்லாம்  ஞானபீடம் விருதா  என மற்றவர்கள் வாசிக்கும்போது நினைக்கக்கூடாதபடி  படைப்பு இருக்கவேண்டும்” என்றேன்.

”போட்டோ  எடுப்பது   ஓவியம்போல  இல்லை  அது ஒரு கருவியின் வேலைஆயினும் அது ஒரு கலையா?” 




ஆம் அதுவும் கலைதான்  கலை என்பது  எதையும் ரசிக்கும் கண்ணோட்டத்தில் இருக்கிறது.எடுப்பவர் பார்வையில் அது பெருமையடைகிறது பிரபலமாகிறது    உதாரணத்திற்கு ராம லஷ்மி   எடுக்கும் படங்கள்நன்றாக உள்ளன பறவைகள் பற்றிய அவர் படங்கள் பிரமாதமாக இருந்தன .ரசனையில்  மேன்மை இருக்க வேண்டும்!”

உங்கள் விமர்சனங்கள் அனைத்தும்  சேர்த்து ஒரே புத்தகமாகப்போட்டால் என்ன?

இப்படி மகேஷ் கேட்டதும் வெசா  சிரித்தபடி,” யார் தயாராக  இருக்கிறார்கள்?

நீங்கள் தயார் என்றால் எல்லாவற்றையும் இப்போதே தருகிறேனே!”என்றார்




 உங்கள் காலத்தில் உங்கள் பார்வையில் கூர்மையான விமர்சனம்  இருந்தது
ஆனாலிப்போது  ஜெ யமோகம் சொல்வதுபோல் இணையத்தில் எழுத வாய்ப்புகள் பெருகிவிட்ட இந்தக்காலத்தில் குப்பைகள் பெருகிவிட்டன என்பதைப்பற்றி தங்கள் கருத்து?

ஆமாம்  குப்பையும் பெருகிவிட்டன  ஆனால் நல்ல எழுத்துக்களும் தென்படுகின்றன  .

இப்படி மேலும் சுவையாக  செவிக்குவிருந்தாக பேசிக்கொண்டு போக, ராமல்ஷ்மி ஜீவ்ஸ் ஐய்யப்பன்   ரஞ்சனி நாராயணன்  ஆகியோர்
தங்களின் புதிய சிறுகதை கவிதை நூல்களை வெ சா அவர்களிடம் அளித்து ஆசி பெற நானும் என் அப்பாவின் சமீபத்தியமறுபதிப்பு வெளியீடான நாவலை அவரிடம் அளிக்க,  அன்றைய சந்திப்பில்  சமோசா ஜாமூன் நான் கொண்டுபோன மைசூர்பாக்(இதைப்பற்றி அன்று சாப்பிட்டவர்கள்  முக்கியமாய் சந்திப்பின் நாயகர் தான்  கருத்து சொல்லவேண்டும்):) காபி என்று  இடையே வயிற்றுக்கும்  விருந்தாக அமைய  மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்தது. எங்கள் அனைவரின் சார்பில் வெசா அவர்களுக்கு  பெங்கலூரின் குளிருக்குப்பாதுகாப்பாக  கம்பளி சால்வையை  திரு ஹரிகிருஷ்ணனும் ஐய்யபனும் போர்த்தினார்கள்.

 எங்கள் கனவு நனவானதில் அனைவரும் மகிழ்ந்து  பின் விடைபெற்று வீடு திரும்பினோம்.



(ராமலஷ்மி  ஷைலஜா  ரஞ்சனி ஹரிகிருஷ்ணன்   நடுவில்  திரு வெசா)


(சந்திப்பில் கலந்துகொண்டவர்கள்..திரு ஹரிகிருஷ்ணன், மகேஷ், திருமூலநாதன், ஐய்யப்பன், திருமால் பார்வதி  ஷைலஜா ராமலஷ்மி ரஞ்சனி நாராயணன் ஆகியோர்)




மேலும் படிக்க... "தமிழின் மிகபெரிய ஆளுமையை சந்தித்தோம்!"

Thursday, December 11, 2014

விண் மட்டும் தெய்வம் அன்று மண்ணும் அஃதே !

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல   ..என்று  பாரதி மகிழ்ந்துகொண்டாடினான்

கம்பன் பிறந்த தமிழ் நாடு என்றான்,
கம்பன் மீது  பாரதிக்கு இத்தனை காதலா! ஆம் இளமையிலேயே  எட்டயபுரம் அரண்மனையில்  புலவர் பலருடனும் பழகித்தமிழ்ப்புலமை  பெற்ற  பாரதி,அங்கிருந்த  கம்பராமாயணம் கற்றுத்தேர்ந்த இருவருடன் நெருங்கிப்பழகி கம்பன் காவியத்தை தெளிவாக  அறிந்துகொண்டான் மாகவிஞன்.

பாரதி அறுபத்தி ஆறு என்ற பகுதியில் ...

சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே
சொல் என்று ஹிரணியன்   தான் உறுமிக்கேட்க
நல்லதொருமகன் சொன்னான்.’தூணில் உள்ளான்
நாராயணன் துரும்பிலும் உள்ளான்’என்றான்
வல்ல பெருங்கடவுள் இலா அணுவொன்றிலையே


என்று பாரதி பாடியதற்குக்காரணம் கம்பனின் இரணியவதைப்படலப்பாட்டுப்பகுதியை  படித்ததின் பாதிப்புதான்.

சாணினும் உளன்; ஓர்தன்மை அணுவினைச் சதகூறிட்ட
கோணினும் உளன்; மாமேருக் குன்றினுமுளன்; இந்நின்ற
தூணினும் உளன்; நீசொன்ன சொல்லினும் உளன்;
இத்தன்மை காணுதி விரைவின்

என்கிறது கம்பன் பாடல்.


இதன்படி  இறைவன் எங்குமுளன் என்பதை அறிந்த  பாரதி
காக்கைச்சிறகினிலே நந்தலாலா  என்றபாட்டில் காணும் அனைத்திலும் கண்ணனைக்கண்டதாக கூறியும்  திருப்தி அடையவில்லை.

ஞானரதம் ஏறி உலகை வலம் வந்தும்  ஏதோ சொல்ல மனம் விழைவதை உணர்ந்தார்.
அப்போதுபார்த்து  ரதம் அருகே வந்த ஒருவன்,” சாமீ!  இந்த ரதம் ஏறி வானம் போனீங்களா?’ என்றுவியப்பாய் கேட்டான்.
’ஆம்  ..ஞானரதம்  அல்லவா  விண்ணுக்கும் செல்லும் மண்ணுக்கும் மீளும்’ என்றார் மகாகவிஞன்.




‘சாமி! வானம் போயி கடவுளைக்கண்டீங்களா?’

‘ஏன் வானத்தில் தான் கடவுள் இருக்கிறாரா?”

‘கடவுளேன்னு மேல ஆகாயம் பாத்துதானே கை குவிக்கறோம் கண்ணு மூடி வேண்டிக்கறோம்?”

‘அப்படி இல்லை  அப்பா..கடவுள் எங்கும் இருக்கிறான்”

“அதெப்படி சாமி? இப்ப  கோயில்ல இருக்கற சிலையை  செய்தது ஒரு மனுஷன்.விக்கிரகத்தை வடிச்சது மனுஷன். மனுஷன் செய்ததால் சிலை கடவுளானால்  மனுஷன்  என்ன ஆகீறான் கடவுளையே படைச்சவன் மனுஷன் ஆகிறானா? அப்ப மனுஷன் கடவுளா?”

“அப்பா! நீ யாரென்று தெரியவில்லையே.. என்னமாய் கேள்விகேட்கிறாயப்பா”

“நான் உங்க சீடன்னு வச்சிகுங்க சாமி..பதில் சொல்லுங்க..உண்மைல  கடவுள் எங்கதான்  இருக்காரு?”

இப்படி  ஆரம்பிக்கிறார்.

பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்



மேலும் கம்பனின் பாடல் அவருக்கு நினைவுக்குவருகிறது நீ சொல்லிய சொல்லிலும் உளன்  என்றால் இவனுக்குப்புரியுமா?

கேளப்பா சீடனே கழுதை ஒன்றைக்
கீழான பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப் பார்த்திரு கரமும் சிரமேற் கூப்பி
சங்கர சங்கர வென்று பணிதல் வேண்டும்.
கூளத்தினை மலத்தினையும் வணங்கல் வேண்டும்
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்


என்கிறார்.

கீழான  என்று ஏன் சொன்னேன் ? யோசிக்கிறார் கவிஞர்.

கழுதை  பாரமானஅழுக்குத்துணி சுமக்கிறது  அதனால்தியாகி கழுதை.
ஆனால்  பன்றி தேள்  கீழானவைகள்  ஒன்று மலம்தின்பதால் இன்னொன்று கொட்டி விடம் இடுவதால்.  அப்படிக் கீழானவர்களையும்  பார்த்துகரம் குவிக்கவேண்டுமாம்.கூளம் மலம் எல்லாம் கீழானது அதையும் வணங்கல் வேண்டும்.

தாழ்ந்தோரை உதறித்தாம் உயரமுடியுமோ மேலோரின் தாள்பணிந்தே நிற்பது இயல்பானால் கடவுளும் மேல் நோக்குவானே தவிர குனிந்து இந்தபூமியை நோக்குவானா ?நீங்காதபொருள் அனைத்தும் கொண்டது  பூமியன்றோ? மண்ணைப்புகழாமல்  விண்ணைமட்டும்  உயர்த்துவதா?  உயர்ந்தால் அட மண்ணில் தெரியுது வானம்!

ம்ம்  எழுதியது சரி தான்  என கவி உள்ளம் சமாதானம் அடைகிறது.

விண்நோக்கி  தியானிக்கும் உள்ளம்  மண் நோக்கிக்குனியவும் வேண்டும்.
இறைவனை ஒன்றேபோலக்காணவேண்டும்.
ஆகவே  கடைசியாக  இப்படி முடித்தார்.

விண்மட்டும் தெய்வமன்று மண்ணும் அஃதே!
சீடனுக்குப்புரிந்ததோ இல்லையோ  கவிஞருக்குத்தன்கவிதை முழுமைபெற்றதில்  மகிழ்ச்சி கொண்டது மனம்!










மேலும் படிக்க... "விண் மட்டும் தெய்வம் அன்று மண்ணும் அஃதே !"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.