ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்!
பேர் பாடி...
போதும் வேறொன்றும் வேண்டாம் இருந்த இடத்தில் இருந்தபடியே அவன் பெயரைச்சொன்னாலேபோதும்.அதற்கே அதிகம் அருள்பவன் அவன் உத்தமன்,
அப்படி என்ன பெருமை இந்த உத்தமனுக்கு? அவதாரம் என்றால் அது ஒன்றாகத்தன இருக்கும் ஆனால் வாமன அவதாரத்தில் மட்டும் இரட்டை அவதாரம் எடுக்கிறார். ஆம் குள்ளனாய் வந்து பிறகு வான் முட்ட நிமிர்ந்து விஸ்வரூபம் எடுக்கிறார். வாமனன்+திருவிக்கிரமன் அவதாரம்ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி என்று ஆரம்பிக்கிறாள்!.கேசவா நாராயணா மாதவா கோவிந்தா என்றே சொல்பவள் இந்த ஓங்கிஉலகளந்தவனை மட்டும் உத்தமன் என்கிறாள்.
நெடுமாலான திருமால் தன்னைக்குறுக்கிக்கொண்டதால் உத்தமன்.
பிச்சை எடுக்கும்போது ஒருவனுடைய கல்வி, கேள்வி,புகழ்,சாதுரியம்,மற்றும் வெற்றி என்ற ஐந்து தேவதைகளும் அவனை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து மீண்டு வர இயலாத தூரத்துக்கு விலகுகிறார்கள் என்பது தெரியாதா ? அதையும் செய்தான் பெருமாள். அவன் உத்தமன்,ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்ததில்
என்ற குறள் அறியாதவர் யார் ?
திரிவிக்கிரமனின் முதலடி யில் ஆண்டாள் மாலின் ஸ்பரிசம் உணர்ந்தாள். பூமிதேவியின் அம்சமான அவள் மீது தானாக திருவடியை பதித்தான் அவன் உத்தமன்.
அகலகில்லேன் இறையுமென்று அவன் அடிக்கீழ் அமர்ந்து அவன் திருவடி காண நினைக்கும் நம்மாழ்வாரும் படியாய்க்கிடந்து உன் பவளவாய்காண்பேனோ என்ற குலசேகராழ்வாரின் ஏக்கமும் அப்படியே இருக்க எதிர்பாராமல் திருவடியை தன் தலைமீது வைத்தானாம் அந்தப்பரவசத்தில் ஆண்டாள் சொல்வது உத்தமன் !
.
. மஹாபலி மகன் நமுசி 'சின்னக்காலைக் காட்டிப் பிச்சை வாங்கிப் பெரிய காலால் அளந்து மோசம் செய்தாய் ' என்று தூற்றிப் பொருமினான். போற்றவில்லை பெருமானை, அதை சகித்துக்கொண்ட அண்ணல் உத்தமன்
சுக்ராச்சாரியார்[அசுரகுரு]பூச்சியாகக் கமண்டலத்தை அடைத்து தானத்தை நிறுத்த முயன்றதற்கு அவர் விழிக்குமட்டும் தண்டனைகொடுத்து உயிரைப்பிழைக்க வைத்த உத்தமன்.
மகாபலியை அழிக்காமல், அவன் அகந்தையை அழித்து, அவனைத் திருத்தி தடுத்தாட் கொண்ட) கருணை வடிவமான வாமன அவதாரமே உகந்ததாகப் பட்டது
.வாமனன் உத்தமன்.
அதனாலேயே அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்று வாமனனை இன்னொரு பாசுரத்தில் முதலில் வைக்கிறாள் மனதுக்கு இனியனாகிலும் இராமன் இரண்டாவது வரியில் தான் வருகிறான்..
ஆரம்பமே ஓங்கி உலகளந்த....
இந்தப்பாடலில் எல்லாமே பெரிதாகத்தெரிகின்றன நிறைவாக வருகின்றன.
ஆமாம் ஆகாயமளவுக்கு காலை நீட்டி அளந்தானாம் அத்தனை உயரம்! மூவுலகமும் அளந்தவன் !
ஓங்கு பெருசெந்நெல்லாம்...
ஆகாயமளவு உயர்ந்த செந்நெல்பயிர்கள் பயிர்களின் செழிப்பு வர்ணனை!
கயல் எல்லாம் துள்ளுகிறதாம் ! உற்சாகம் இங்கே கயல் உகள என்கிறாள்.. அழகிய குவளைமலரில்பொரிவண்டு கண்படுப்ப...மலரில் தேன்முழ்கி இருந்திருந்தால்தான் வண்டுவரும்.தேன் குடித்து மயங்கியபடியே படுப்பது இங்கும் நிறைவு!
தேங்காமல் உள்ளே புகுந்து சீர்த்தமுலையாம் அதாவது தேக்கமே கிடையாதாம்..அப்படி ஒரு நிறைவு. சீர்த்த முலைகள்..நிறைந்த பெரிய மடிகளைக்கொண்ட வள்ளல் பெரும் பசுக்கள்! வள்ளல் தன்மையே பெரிதாம் இதில் பெரும்பசுக்களாம் நல்ல பெரிய பசுமாடுகள்.
வள்ளல்பசுக்கள் அருகே குடம் கொண்டுபோய் பாலைவாங்கப்போனால் வற்றாமல் கொடுக்கிறது அதுவும் எப்படி குடம் நிறைக்க நிறைய.
தீங்கின்றி நாடெல்லாம்(ஒரு ஊர் மட்டுமில்லை நாட்டுக்கே மழையாம் இங்கும் ஆண்டாளின் மனவிரிவினைக்காணலாம்)
திங்கள்(மாதம்)மும்மாரி..ஒருமழை எல்லாம் போதாது மாதம் மும்மாரி பெயவேண்டும் அதுவும் தீங்கின்றி ..அதிகமாகவும் கூடாது குறைவாகவும் பெய்துவிடக்கூடாது ..தீமையற்ற நல்ல மழையாம் ...உயர்ந்த மனச்சிந்தனை இது.
நிங்காத செல்வம்..செல்வம் செல்வோம் என சென்றுவிடக்கூடாதாம் நீங்காமல் இருக்கவேண்டுமாம். இவையெல்லாம் நிறைந்து இருக்கவேண்டுமாம்!
ஆஹா இந்தப்பாடல்தான் எத்தனை வளமாக நிறைவாக இருக்கிறது!
ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவிலில் அர்ச்சகர்கள் இந்தப்பாடலைப்பாடித்தான் நம்மிடம் அர்ச்சனைபிரசாதம் தருகிறார்கள்(வேறு சிலகோவில்களிலும் உண்டு)
அதனால்தான் இந்தப்பாசுரம் இருமுறை சொல்லப்படுகிறது..
ஆண்டாளின் பரவசம் உற்சாகம் அனைத்து உயிர்களீடத்திலுமான பரிவு அக்கறை தேசநலன் என அனைத்தும் இந்தப்பாசுரத்தில் காணப்படுகிறது!
**********************************************************************************************8
(உத்தமன் வருகிறார் இன்றைக்கு ஆம் ஓங்கி உலகளந்த உத்தமன்!இன்றைக்கு நான் வாசலில் இட்ட கோலமுடன் உத்தமனை வணங்கி வரவேற்போம்! )
--
Tweet | ||||
தெளிவான அழகான விளக்கம்... வாழ்த்துக்கள்...
ReplyDelete..உயர்ந்த மனச்சிந்தனை ..அழகான ஆக்கம்..
ReplyDeleteவேறு ஒன்றும் செய்ய வேண்டாம். அந்த உத்தமன் பேர் பாடியே நாம் நற்கதி அடையலாம் என ஆண்டாள் இந்த பாசுரத்தில்.உபாயம் சொல்லிக்கொடுக்கிறாள்
ReplyDeleteஅருமையான விளக்கம்,சுவையான நடை,திகட்டாத எழுத்து ஒன்று சேர அமைந்தது இந்த பதிவு.
அழகான கட்டுரை...
ReplyDeleteஆஹா... ஆண்டாளின் பாட்டுக்கு என்ன அற்புதமான விளக்கம் அக்கா... பிரமாதம்.
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அம்மா...
ReplyDelete