Social Icons

Pages

Tuesday, December 16, 2014

காவிரி பாயும் திருவரங்கம்!




பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பனை பள்ளி கொண்ட
மாயனார் திருநன்மார்வும் மரகதவுருவும் தோளும்
தூய தாமரைகண்களும் துவரிதபவளவாயும்
ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே"



தொண்டரடிப்பொடி ஆழ்வார் இப்படி சொல்கிறார்


காவிரி பாய்ந்துவருகிறதாம்! 

ஒரு முறை காவிரி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்ததாம். (கதையல்ல நிஜம்தான்  பல்லாண்டுகள் முன்பு நடந்த நிகழ்ச்சி இது)வெள்ளம் ஊரையே விழுங்கி விடும் என்று அனைவரும் பயந்து கொண்டிருந்த போது, கம்பன் ஊருக்கு வந்தானாம். 

...’உலகுடைய தாயே! நீ கரைகடக்கலாகாது காண்!"
என முடித்து காவிரி கரையில் நின்று  பாடலை பாடினானாம். காவிரி  உடனே அடங்கிப்போய்விட்டாளாம்!
 ஊருக்குள் பாய்ந்துவேகமாகவந்தாலும் அரங்கனின் பாதத்தை  தொடும்போது வருடுவதுபோல மென்மையாக இருக்கிறதாம்!
  தென்னீர்பொன்னி திரைக்கையால் அடிவருட என்கிறார்  இன்னொரு ஆழ்வார் பெருமான்! காவிரியின்திரைக்கையால்  தனது திருவடியினை வருடிக்கொண்டிருக்க,  அனந்தன் எனும்  பாம்பின்மேல் பள்ளிக்கொள்ளும் பெருமான் அரங்கன்!
ஒருபுறம் ஆழ்வார்களின் பாசுர இசை!  மறுபுறம் காவிரியின் அலையோசை! 

மார்கழி  இன்றுபிறந்துவிட்டது!  திருவரங்கம்  புத்தாடை கட்டிக்கொண்ட சிறுமியைப்போல  மகிழ்ச்சியில்  திளைக்கிறது!  எங்கெங்கு காணினும் பக்தர் கூட்டம்! கோவிலைச்சுற்றிய நான்கு வாசல்களிலும்  வண்ணக்கோலங்களும் வாசல்திருமாடத்தில் விளக்கின் ஜோதிகளும்!

திருப்பாவை பாடிக்கொண்டு  செல்லும்  பாவைகள்! ஏழுதிருவீதிகளையும் சுற்றிக்கொண்டு அரங்கன் அடியார்கள்  பாடும் அண்ணல் நாமங்கள்!

வெள்ளைகோபுர உச்சியில்  வசந்த(குமாரி)க்குரல் ” எல்லே  இளங்கிளியே இன்னம் உறங்குதியோ?’ என்று  உரிமையாய் அதட்டுகிறது..

ரங்கா ரங்கா ரங்கா  என்று  எங்கும்  ஒலி பெருகிவருகிறது!
வடக்குச்சித்திரைவீதியில் வாழும்
லட்சுமிபாட்டிக்குக்கண்  சரிவரத்தெரியவில்லை.அதனுடன்  தினசரி  கோவிலுக்குப்போய்வரத்தவறுவதில்லை

“என்ன பாட்டி  கண் பார்வை  ரொம்பக்குறைஞ்சிபோயிருக்கு இந்த நிலைமைல  நீங்க கோவில்போய் ரங்கனைப்பார்க்கத்தான்
 முடியுமா ?” என்று ஒருநாள் கேட்டபோது,” ,என்னை ரங்கன் பார்க்கிறானே அது போதும்” என்றார்!

திருவரங்கநகருக்கு நான் அளிக்கும்ஒரு கவிதை!

மண்ணில் ஒளிரும் மகிழரங்கம்
மாந்தர்போற்றும் மாதவரங்கம்
கண்ணில் தெரியும் ஒரு சுவர்க்கம்-அது
காவிரி பாயும் திருவரங்கம்!

அண்ணல் ராமனின் கம்பன் காவியம்
அரங்கேற்றிய இடம் திருவரங்கம்
பண்ணிய புண்ணியத்தாலே-நாம்
எண்ணி மகிழும் அணியரங்கம்!

விண்ணளாவிய ராஜகோபுரம்
வெண்முகில்வருடும் பொன் கலசம்
பன்னிரண்டு ஆழ்வார்கள்-பாடி
அண்ணலைத்துதித்த நல்லரங்கம்!

அணியார் பொழில் சூழ் எழிலரங்கம்
 அண்டர்கோன் அமரும் பூவரங்கம்
தண் துழாய் மாலைசூடித்தந்த-கோதை
கண்டு கரம்பிடித்த களியரங்கம்!

4 comments:

  1. மண்ணில் ஒளிரும் மகிழரங்கம்
    மாந்தர்போற்றும் மாதவரங்கம்
    கண்ணில் தெரியும் ஒரு சுவர்க்கம்-அது
    காவிரி பாயும் திருவரங்கம்!

    அருமையாய் மனம் கவர்ந்தது..

    ReplyDelete
  2. மிக்க அருமை. .மார்கழி துவங்கும்போதே காவிரி சூழ் அரங்கன் வாழ் திருவரங்கத்தின் பெருமைகளை நல்லதோர் கவிதையால் பாடி பரிமளிக்க செய்த உங்களின் மார்கழி தொடரை தினந்தோறும் ஆவலுடன் எதிர் பார்த்துகொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  3. அரங்கனின் பெருமைக்கு மணிமகுடமாய் உங்களின் அழகான கவிதை வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  4. அனைவர்க்கும் மிக்க நன்றி ...கேபி சார் இயன்றவரை மார்கழிப்பதிவுகள் இடுகிறேன் நன்றி மிக

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.