Social Icons

Pages

Thursday, March 19, 2015

சுட்டும் விழியாலே தீரும் துன்பங்களே!

புட்டப்பர்த்தியில் உதித்த பூந்தோட்டமே   நீ
இட்ட கட்டளையை ஏற்கும் பக்தர் கூட்டமே-தீ
பட்டமரம்போலாகும் துன்பங்களே -உன்
சுட்டுவிழியாலே தீரும் துன்பங்களே.....


இப்படி சத்யசாய்யி மீது அவரது பிறந்த நாளில்  சமீபத்தில் ஒரு பாடல் எழுதினேன்  .. அதை அழகாய் பாடிக்கொடுத்தார் என் தோழி  .அதனை காணொளியாக  இன்று என்பிறந்த நாளுக்கு அளிக்கிறேன்  கேட்டு சொல்லுங்கள் நன்றி!


  சத்யசாயிபாபாமீது நான் எழுதிய பாடலை என் தோழி திருமதி நாகிநாராயணன்  பாடிக்கொடுக்க  அதனை அழகிய காணொளியாக  செய்துகொடுத்திருக்கிறார் மதிப்பிற்குரிய நமது பேராசிரியர்  டாக்டர் திரு நாகராஜன். அவருக்கு  என்  பணிவான நன்றி.
எல்லாரும் பாட்டைக்கேட்டு மகிழவும்!  

மேலும் படிக்க... "சுட்டும் விழியாலே தீரும் துன்பங்களே!"

Wednesday, March 18, 2015

கொஞ்சம் சீரியசா யோசிச்சா...:)

வாழ்வின் எல்லா நிகழ்வுகளும் கனவுகள் அல்லது பிரமைகள் என்கிறது ஜென் புத்தமதம். அப்படியானால் நமது பிறப்பு என்பதும் கனவா அல்லது பிரமையா? பிறந்து இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதால் கனவாய் இருக்க சாத்தியமில்லைஆயினும் கனவுகளில் நாம் பயணம் செய்வதை மறுக்கமுடியாது. எல்லாவற்றிர்க்குமே கனவு ஆதாரம் அது சில நேரங்களில் மெய்ப்படுகிறது.

பிரமை என்பது கொஞ்சம் ஒத்துக்கொள்ளகூடியதாக இருக்கிறது. ஏனென்றால் வாழ்வின் பலகணங்களை பிரமிப்போடுதான்கழித்துக்
கொண்டிருப்பதாகப்படுகிறோம்.

புனரபி ஜனனம், புனரபி மரணம் 
மீண்டும் மீண்டும் பிறப்பு, இறப்பு. இந்த பஜகோவிந்த வரிகள் மனித வாழ்வை மட்டும் சொல்லவில்லை இந்த வரிகள் மிக ஆழமான அர்த்தம்கொண்டது.

பார்டிக்கள் Particle இயற்பியல், 
காஸ்மாலஜி என்ப்படும் பிரஞ்சத்தின் தோற்றம், போன்றவைகள் எல்லாமே இதற்குள் அடங்கும்.
Man is a pattern seeking animal என்ற கூற்று உண்டு. பல நூறு வருடங்களாக இதைத்தான் மனிதன் அறிவிலிலும் கலையிலும் தேடுகிறான். எல்லையற்ற பிரபஞ்சத்திலிருந்து தனக்குத் தேவையான ஒழுங்கை சமைத்து எடுத்துக் கொள்கிறான் -

'நம் எதிரே காணும் பொருள் தனிப்பட்ட ஒன்றல்ல. பிரபஞ்சத்தின், 
ஒரு பெரிய உண்மையின், நாம் உணரும்+ காணும் அத்தனையும் சேர்ந்த ஒரு மகா உண்மையின் வெளிப்பாடு' என்பது அரவிந்தர் வரிகள்.

என்ன திடீரென கனவு பிரமை, பிறப்பு மரணம் என்று பேச ஆரம்பித்துவிட்டேன் என்று பார்க்கிறீர்களா?:) காரணம் 
கடைசியில் தெரிந்துவிடும்!


ஒப்பற்ற கவிதை ஒரு கவிஞனின் படைப்புத்திறனால்மட்டும் பிறப்பதில்லை உலகம் அதிர்ஷ்டம் செய்ததாலேயே பிறக்கிறது என்று சொல்வார்கள்.

எம் எஸ் அவர்களின் குறை ஒன்றும் இல்லை என்கிற பாடலைக்கேட்கும்போது பாடல்வரிகளின் எளிமை பாடியவரின் அசாத்திய திறமை இதெல்லாம் நாம் அதிர்ஷ்டம் செய்ததாலேயே கிடைத்ததாக தோன்றுகிறது.குறை ஒன்றும் இல்லை என்ற நினைப்பே நி்றைதானே!
.

தமிழுக்கும் மதுவென்று பேர் என்றாரே பாரதிதாசன் !மதுமயக்கம் இன்னமும் தீரவில்லை!! தமிழ் கற்றால் குறை ஒன்றும் இல்லை. 

 வருத்தங்கள் வார்த்தைகளால் காயங்கள் சோகங்கள் அவமானங்கள் சோர்வுகள் இல்லாமல்  வாழ்க்கை இல்லை. ஆனால் என்னைக்கவலைகள் தின்னத்தகாதென்று நின்னைச்சரணடைந்தேன் என்று பாரதி சொன்னதுபோல வாழலாம்.

எண்ணும் திறன் உள்ளவரை எண்ணுவோம், நமக்கு வசமாகி உள்ள கலைகளையும் காரியங்களையும் செய்வோம், நமக்கு முடிகிறவரையில் பிறருடன் நமது இன்பங்களையும் நாம் பிறருடைய துயரங்களையும் பகிர்ந்துகொள்வோம்’ மனதை மாத்திரம் புதிதாக வைத்துக்கொள்வோம்

 கர்மத்தொடர்பை ஆன்மா என்று எண்ணி விடக்கூடாது என்று அமரர் மகாகவிஞர் திருலோக சீதாராம் அவர்கள் சொல்வார்.
அதாவது நாம் செய்த செயல்களையும் அவற்றின்  விளைவுகளையும் தொகுத்துவைத்துக்கொண்டு அதுவே  நாம் என்று எண்ணிக்கொள்ளக்கூடாது.

இப்படி வாழ்கிற வாழ்க்கைதான் வாழ்வாங்குவாழ்தல் என்கிறார் .

 அப்படி ஒரு வாழ்க்கை சித்தியானால் அது அமரவாழ்வு என்கிறார் பாரதி .
அதிமானிடவாழ்வென்றார் அரவிந்தர் அருள்வாழ்வென்றார் வள்ளலார்.

 விளங்கிக் கொள்ளமுடியாமல்  திணறுகிறோம் நாம்!

(ஒண்ணுமில்ல நாளைக்கு 19 மார்ச் பிறந்த நாள் அதான் கொஞ்சம் சீரியசா யோசிச்சி எழுதினேன்:):)

//Pisces women are very captivating and fascinating.  She is charming, soft and feminine. //::) எப்படி?:)(குறைகளை சொல்லமாட்டோம் இல்ல?:)
மேலும் படிக்க... "கொஞ்சம் சீரியசா யோசிச்சா...:)"

Saturday, March 14, 2015

ஆசையின் கனி!





ராமாயணத்தை பழைய பஞ்சாங்கம், ’’Ramayana is full of cliche rhetorics. ’ திரும்பத் திரும்ப சொல்லப் பட்ட பழைய விஷயங்கள் என்கிறார்கள்!  புதிய கல்யாணத்துக்கு பழையபஞ்சாங்கத்தில் தான்  நாள் நட்சத்திரம் பார்க்கிறார்கள். . சூரியன் பழசு சந்திரன் பழசு  ஏன் வானமே பழசுதான். ’..இன்று புதிதாய்ப்பிறந்தோம் என்று நாம் கூவினாலும் நாளையின் பார்வையில் நாமே  பழைய ஆட்கள்தானே!! 

சரி இங்கே  நாம்  பழைய கதையை  தொடரலாம்!  இராவணன்  போரில் இராமனிடம் தோற்று  சீதையை விட்டுவிடு விபீஷணனை அரசனாக்கு   இன்றுபோய் நாளைக்குவா என்று சொல்லியதை  எல்லாம் இந்தக்காதுகளில்  வாங்கி அந்தக்காதுகளில்  விட்டுவிடுகிறான்.. நேரே அசோகவனம் வருகிறான்.சீதையைக்காமப்பார்வையில் பார்த்துவிட்டு,”மந்திரமில்லை வேறோர் மருந்தில்லை மையல் நோய்க்குச் சுந்தரக் குமுதச்  செவ்வாயமுதலா லமுதச்சொல்லீர்”என்று  அத்துமீறி உளறுகிறான்.வந்தீர் போனீர் சொல்லீர் என்ற மரியாதைச்சொற்களுக்கு ஒன்றும் குறைவில்லை :)
  
சீதை  சினத்துடன் சொல்கிறாள்.”போர்க்களம் புக்கப்போதென் 
ஆசையின் கனியைக்  கண்ணிற்கண்டிலைபோலும் அஞ்சி” என்கிறாள்.

ஆசையின் கனி! பழைய  கம்பராமாயணத்தில்  என்ன ஒரு புதிய வார்த்தை பாருங்கள்! தன் அன்புக்கணவனை  ஆசையின் கனி என்கிறாள் சீதை. ஆசைபழுத்த பழமாம்! இன்றைக்குப்புதிய கவிஞர்கள்  எங்காவது இப்படி எழுதி இருந்தால் தெரியப்படுத்தவும்.  

ஆசை பழுத்த பழம்போன்ற என் கணவனைப்போர்க்களத்திற் புகுந்திருக்கிற இவ்வேளையில் அஞ்சிக்காணவில்லைபோலும்?’ என இராவணனைக்கேட்கிறாள்.

இராவணன்  அப்போது மாயசனகன் உருவில் ஒருவனை ,”உன் தந்தையைக்கைப்பற்றி விட்டேன்  பார்” என அவள் முன்பு  கொண்டுவந்து நிறுத்துகிறான், தன்னால் அப்பாவும் இந்த நிலைக்கு ஆளானதில் சீதை முதலில்  வருந்தி துடிக்கிறாள்  பிறகுதான், அந்த மாயசனகன்,”...நின் பொருட்டாகப்பட்டேன் ஆவியோ அழிதல் அன்றோ அமரர்க்குமரசனாவான் தேவியாயிருத்தல் தீதோ சிறையிடைத் தேம்புகின்றாய்” என்று சொல்லவும் சீதை சுதாரிக்கிறாள். தன்னைப்பெற்ற தகப்பன் ஒருநாளும் இப்படி இரு வார்த்தையை சொல்லமாட்டான் என்று  அறிவு விழிக்கிறது. அமரரக்கும் அரசனாம் இராவணனுக்கு  தேவியாகவேண்டுமாம்! சனகனா  இப்படிச்சொல்வான்?

மாயவேட சனகன்  எனப்புரிந்ததும்,,”அரியொடும் வாழ்ந்த பேடை அங்கணத்தழுக்கு தின்னும் நரியொடும் வாழ்வதுண்டோ நாயினும் கடைப்பட்டோனே’ என்று  நெருப்பாய் உமிழ்கிறாள்.  ஆண்சிங்கத்தோடு வாழ்ந்த பெண் சிங்கமடா இது  , சாக்கடை அழுக்கைத்தின்னும் நரியுடன் வாழ்வதென்பது எங்காவது நடக்குமா? 

உடனே இராவணன் அவளை மேலும்  பயமுறுத்த  மாயசனகனை வெட்டுமாறு சொல்கிறான்.

“நீ என்னையும் கொல்லும் வல்லமை படைத்தவனில்லை இப்போது இவனையும் கொல்லப்போவதில்லை உன்னையும் கொன்றுகொள்ளமாட்டாய், ஆனால் என் தலைவன் இராமனின் அம்பினால் சுற்றத்தாருடன் பிழைத்திராமல் உயிர் நீங்குவாய்  “ என்று சொல்கிறாள்!

சீதை சொன்னதுதானே நடந்தது!




மேலும் படிக்க... "ஆசையின் கனி!"

Friday, March 06, 2015

புது யுகப்பெண்மை !




அன்று ....

 புரண்டு புலம்புவதிலேயே சுகம்
கண்டுமகிழ்ந்தனர் பெண்கள்
சுதந்திரம் பெற்றாலும் பறக்கமுடியாத
ஜோதிடக்கிளிகளாயிருந்தனர் பெண்கள்
சமத்துவம் பெற்றாலும் எண்ணச்சிறகுகளை
வடிவுக்குக்கொண்டுவர இயலாத
ஊமைக்கிளிகளாயிருந்தனர் பெண்கள்!

இன்று
 பெண்கள் நிலையில் பெரும் மாற்றம்!
சென்றுவிட்டன அவநம்பிக்கை, ஏமாற்றம்!
மென்மை என்பது தேவைதான் எனினும் அதுவே
நன்மை பெண்மைக்கு என்னும் நிலைஇன்று இல்லை
மலர்களை மட்டும் சூடியபெண்கள்  இன்று
மாநிலத்தையே நடத்தும் மங்கையர்க்கரசிகள்.
காய்கறிகளை மட்டும் துண்டுபோட்ட காரிகைகள்
நியாயங்களின் கண் இமைகள் நசுக்கப்படும்பொழுது
அநியாயங்களைத்துண்டுபோடவும்
அறிந்து வைத்திருக்கிறார்கள் 
ஏழுஸ்வரங்களை இசைக்கும் வாயும் பெண்ணைத்
தாழ்வாய் நினைப்பவர்களிடம் இடியாய் முழங்குகிறது

வழி தவறுகிற கோவலக்கணவர்களை தன் விதியெனப்
பழி ஏற்காமல் காவலில் வைத்து தண்டிக்கிறார்கள்!
கண்ணகியின் வாரிசுகளான பெண்கள் இன்று
காணாமல் அழிக்கவேண்டியது  ஒரு நகரத்தை அல்ல
பெண்மைக்குக்களங்கம் கற்பிக்கும் கயவர்களை
எண்ணை விட்டு எரித்துப்பொசுக்குவதுதான்.

கற்பென்பது இருபாலருக்கும் சொந்தம் என்பதை
கற்பிக்கவேண்டும்  ஆரம்பப்பள்ளியிலே.
பெண்மை மென்மைதான் ஆயினும் அதன்
மேன்மையை ஆண்மை மதிக்கத்தவறினால்
வன்மையாய்  சீறும் என்பது உண்மை.
இதுதான் புது யுகப்பெண்மை  !பாரதி கண்ட
புதுமைப்பெண்ணின் தன்மையை 
பூக்கள் தூவி வரவேற்பது
 சமூகத்திற்கு நன்மை!
மேலும் படிக்க... "புது யுகப்பெண்மை !"

Thursday, March 05, 2015

இன்று போய் போருக்கு நாளை வா!




கம்பராமாயணத்தில் யுத்தகாண்டம்.

போர்க்களம் என்பதால்  கம்பனின் பாடல்வரிகளில் அதன் தாக்கம் வந்துவிழுகிறது.

படுகளச்சிறப்பினை விளக்கும் இந்தப்பாடலைப்பாருங்கள்,

அந்தி வானகம் ஒத்தது, அவ் அமர்க் களம்; உதிரம்
சிந்தி, வேலையும் திசைகளும் நிறைந்தன; சரத்தால்
பந்தி பந்தியாய் மடிந்தது, வானரப் பகுதி;
வந்து மேகங்கள் படிந்தன, பிணப் பெரு மலைமேல்.

அமர்க்களம் என்றால் போர்க்களம்! நாம்  அமர்க்களம் என்னும் வார்த்தையை  பாராட்டுச்சொல்லாக  பயன்படுத்துகிறோம். உண்மையில் போர்க்களம் தான் அதன் பொருள்.அந்திவானம் போல  இருக்கிறதாம் போர்க்களம்.வானரசேனை பந்திபந்தியாய் அதாவது வரிசைவரிசையாய் மடிந்தனவாம் .பிணப்பெருமலைமேல் மேகங்கள் படிந்தனவாம்.



வானரப்படை நிலைகண்டு இலக்குவன் வருந்துகிறான்.நீலன்,அனிலன்,கவயன் அங்கதன் சாம்பன்(ஜாம்பவான்) என அனைவரும்  அம்புபட்டு வீழ்ந்துகிடக்கிறார்கள் .
அது கண்டு.கோபத்துடன் ராவணன் மீது தனது அம்புகளை  தொடுக்கிறான்  இலக்குவனின் வீரத்தை விளக்கும் இந்தப்பாடலைக்காணலாம்

நூறு கோடிய, நூறு நூறாயிர கோடி,
வேறு வேறு எய்த சரம் எலாம் சரங்களால் விலக்கி,
ஏறு சேவகன் தம்பி, அவ் இராவணன் எடுத்த
ஆறு நாலு வெஞ் சிலையையும் கணைகளால் அறுத்தான்.

இலக்குவனை அவன் வீரம் கண்டு புகழ்கிறான்ராவணன்.  பின்னர் அனுமனையும் அவன் புகழப்போகிறான்.ராவணன்.

'நன்று, போர் வலி; நன்று போர் ஆள் வலி; வீரம்
நன்று; நோக்கமும் நன்று; கைக் கடுமையும் நன்று;
நன்று, கல்வியும்; நன்று, நின் திண்மையும் நலனும்'
என்று கைம் மறித்து, இராவணன், 'ஒருவன் நீ' என்றான்

'


ஆனால் பிறகு இலக்குவனையும் வீழ்த்துகிறான் பிரும்மன் கொடுத்த வேற்படையினால். இலக்குவன் அயர்ந்துவீழ்கிறான்.
 அவன் உடலை அப்படியே தூக்க இராவணன் முயல்கிறான்,
. தன் கைகளால் அவனை அள்ளி எடுக்க முனைந்தான். அவனால் இலக்குவனைத் தூக்க முடியவில்லை. தன் இருபது கரங்களாலும் பலங்கொண்ட மட்டும் முயற்சி செய்தும் இலக்குவனை அசைக்கக் கூட முடியவில்லை. தோல்வியுற்று இராவணன் பெருமூச்செறிந்தான.


.


 அப்போது ஒரு மூலையில் இளைப்பாறிக் கொண்டிருந்த அனுமன் ஓடிவந்து இடையில் புகுந்து இலக்குவனைத் தன் இரு கரங்களாலும் எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு விரைந்து நீங்கினான். இராம லக்ஷ்மணர் மீது அவன் கொண்ட அன்பினால், அனுமனுக்கு இலக்குவனைத் தூக்குவது மிக சுலபமாக இருந்தது, ஒரு குழந்தையைச் சுமந்து செல்வது போல தூக்கிக் கொண்டு சென்றான். அப்போது அவனைப் பார்த்தால், தன் மகவை மடியில் கவ்விக் கொண்டு மரத்தின் மீது செல்லும் மந்தி- பெண் குரங்கைப் போல தோன்றினான்.

தொக ஒருங்கிய ஞானம் ஒன்று எவரினும் தூயான்,
தகவு கொண்டது ஓர் அன்பு எனும் தனித் துணை அதனால்,
அகவு காதலால், ஆண் தகை ஆயினும், அனுமன்
மகவு கொண்டு போய் மரம் புகும் மந்தியை நிகர்த்தான்.


இலக்குவன்  சற்று  இளைப்பாற அவகாசம் கொடுக்கும்  எண்ணத்தில்  இராவணன் முன்பு  வந்து நிற்கிறான்.



" "இராவணா! இனி பொய்யான போர்களைச் செய்யாதே" என்று சொல்லிக் கொண்டே தேருக்கு எதிரே வந்து நின்று "நீ பின்னே செய்ய வேண்டிய போர் நிறைய இருக்கிறது. இப்போது நான் சொல்வதைக் கேள்!" என்றான்
.
 இராவணனுக்கு முன்பாக நின்று கொண்டிருக்கும்போதேஅனுமன் தனது விஸ்வரூபத்தை எடுத்து, வானுக்கும் பூமிக்குமாக நின்றான். அவன் இராவணனைப் பார்த்து "வா! இராவணா! வா! வந்து என் முன்னால் என்னை எதிர்த்து நில்!உன் வீரத்தையும், புகழையும், ஆண்மையையும் ஒரே குத்தினால் இப்போதே ஒழித்து விடுகிறேன். குரங்கு ஒரு கையால் விடும் குத்தினை வலிமை குன்றாமல் தாங்குவாயோ?" என்றான்.’ அனுமன் ,
ராவணன் அதிர்ந்தான் திகைத்தான்.

"நின்ற இடத்தில் அசையாமல் நின்று, என் மார்பில் குத்து என்கிறாயே. என்னப்பா உன் துணிவு. சொல்லும் தரமன்று!. இவ்வளவு துணிச்சலோடு நீ வந்து நின்ற பின்னும் உனக்குக் கிடைக்க வேண்டிய வெற்றி வேறு என்ன இருக்கிறது. இனி போர் செய்வதும் தேவையில்லை. சூளுரைத்து எனக்கு இவற்றைச் சொன்னாய். காலம் ஓடுகிறது. பேசி என்ன பயன்? இதனால் எனக்குப் பழி ஏற்படினும் அதற்காக நான் வெட்கப்படப் போவதில்லை. ஏனெனில் நீ ஒரு மாபெரும் வீரன். ஆண்மையாளன். வா! உலகமே காணும்படி என் மார்பில் கடுமையாகக் குத்து" என்றான்’

 , வைரம் போன்ற தன் கையால் இராவணனின் விரிந்த மார்பில் ஓங்கி ஒரு குத்து விட்டான். அந்தக் குத்தின் விளைவாக, பெரிய பெரிய மலைகள் எல்லாம் சிதறி உடைந்து விழுந்தன. இராவணன் கண்கள் நெருப்பைச் சிந்தின. அவன் பத்துத் தலைகளின் மூளைகள் தயிர் போல கீழே சிந்தின

. அரக்கர்கள் அதிர்ச்சியால் உயிரை விட்டர்கள். வானர வீரர்கள் அதிர்ந்து போய் மயிரையும், பற்களையும் உதிர்த்தனர். மேகங்கள் நிலை குலைந்து மழையைப் பொழிந்தன. அந்த அதிர்ச்சியால் வில்லில் பூட்டப்பட்ட நாண்கள் உதிர்ந்தன. கடல் நீர் கரை தாண்டி உட்புகுந்தது. மலைகள்
கற்களை உதிர்த்தன. திசையானைகளின் பற்கள் சிதறி விழுந்தன. வீரர்கள் கையில் பிடித்த ஆயுதங்கள் நழுவி விழுந்தன. இராவணன் மார்பில் நெருப்பு எழுந்தது..

அனுமன் தனது கை முஷ்டியை மடக்கி இராவணன் மார்பில் விட்ட குத்தானது, அவன் மார்பில் விழுந்த மாத்திரத்தில், முன்பு திசை யானைகளோடு (அஷ்ட திக் கஜங்கள்) மோதி அவற்றின் தந்தங்கள் ஒடிந்து அவன் மார்பில் தங்கிவிட்ட்ருந்தனவாம். அவைகள் அனுமன் விட்ட குத்து விழுந்த வேகத்தில், பின் புறமாக முதுகைத் துளைத்துக் கொண்டு  கீழே விழவும்,. இராவணன் நிலைகுலைந்தான்.

 இராவணன்.  அனுமனைப்பார்த்து வியந்து சொல்கிறான்
”உலகில் எனக்கு நிகரான வலிமை யாரிடமாவது இருக்கிறது எனில், அது உன்னிடம் இருக்கிறது. உலகில் உனக்குப் புறம்பாய் இருப்பவர் ஆண்மையற்றவர் எனும்படியான திறன் படைத்தவன் நீ!!. பிரம்மனே சாபமிட்டு என் வலிமையைக் குறைத்தாலும் குறைவடையாத என் வலிமை இப்போது உன்னால் தளர்ச்சி அடைந்து விட்டது.   நீவெற்றி உடையவன்" என்று இராவணன் அனுமனைப் பாராட்டினான்.

புகழ்ந்தானே ஒழிய அடுத்து ராவணன் விட்ட குத்தில் அனுமன்  தளர்ந்துதான் போனான்.
 இலக்குவன் மயக்கம் தெளிந்து எழுந்தான். உடனே ராவணன் குத்தில்  சற்றே  சரிந்திருந்தஅனுமனையும் அழைத்துக் கொண்டு இருவரும் இராமன் இருக்குமிடம் சென்றனர்.

இராமன் இராவணனுடன் போரிடுவதற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்தான்.


இராவணனும் தன் தேரை இராமனுக்கு எதிராகக் கொண்டு வந்து நிறுத்தினான். போர் புரிய இராவணன் தேர்மீது வந்து நிற்க, இராமன் மட்டும் தரையில் நடந்து சென்று போரிடுவதா என்று அனுமன் கருதினான், இருவரும் ஒத்த நிலையில் போரிடவேண்டுமெனக் கருதி, இராமனைத் தன் தோள்மீது ஏறிக்கொண்டு போரிடுமாறு வேண்டிக் கொண்டான்.

'நூறு பத்துடை நொறில் பரித் தேரின்மேல் நுன்முன்
மாறு இல் பேர் அரக்கன் பொர, நிலத்து நீ மலைதல்
வேறு காட்டும், ஓர் வெறுமையை; மெல்லிய எனினும்,
ஏறு நீ, ஐய! என்னுடைத் தோளின்மேல்' என்றான்.

மெல்லிய எனினும்  என்கிற  வார்த்தையில் வரும்,அனுமனின் அடக்கத்தைப்பாருங்கள்.  இலங்கையை  தீயிட்டு  அரக்கர்களை கதிகலங்கச்செய்து இப்போது ராவணனையும்  தான் விட்ட குத்தில் பிரமிக்கவைத்த  பலம்கொண்ட வீரன் அனுமன்  அண்ணலிடம்  அடக்கிவாசிக்கிறான். அனுமனின் வினயம்  போற்றுதலுக்குரியது.

'நன்று, நன்று!' எனா, நாயகன் ஏறினன், நாமக்
குன்றின்மேல் இவர் கோள் அரிஏறு என; கூடி,
அன்று வானவர் ஆசிகள் இயம்பினர்; ஈன்ற
கன்று தாங்கிய தாய் என மாருதி களித்தான்


 இராமனும் 'நன்று' என்று சொல்லி அனுமனின் தோள் மீது ஏறிக் கொண்டு போர் புரியச் சென்றான்  ஈன்ற  கன்றுதாங்கிய தாயாம்...பிறந்தகுழந்தையை  ஒரு தாயானவள் எப்படிப்பரிவாய்தாங்குவாளோ அப்படி தன்  நாயகனை  தோள்மீது ஏற்றித்தாங்குகிறாம் அனுமன் ! அனுமனுக்கு  ராமனிடம் இருப்பது பரிவா பக்தியா என்றால் இரண்டும் ஒன்றைஒன்றுவிஞ்சுகின்றன எனலாம்

ராமாயணத்தின் விறுவிறுப்பான கட்டம்  இதுதான்  ஆம் இராம -இராவண யுத்தம் ஆரம்பமாகிறது.
.
ஊழி வெங் கனல் ஒப்பன, துப்பு அன உருவ,
ஆழி நீரையும் குடிப்பன, திசைகளை அளப்ப,
வீழின் மீச்செலின், மண்ணையும் விண்ணையும் தொளைப்ப,
ஏழு வெஞ் சரம், உடன் தொடுத்து, இராவணன் எய்தான்.

எய்த வாளியை, ஏழினால், ஏழினோடு ஏழு
செய்து, வெஞ் சரம் ஐந்து ஒரு தொடையினில் சேர்த்தி,
வெய்து கால வெங் கனல்களும் வெள்குற, பொறிகள்
பெய்து போம் வகை, இராகவன் சிலை நின்று பெயர்ந்தான்


இராவணன் எய்த ஏழு கணைகளையும், தனது ஏழு அம்புகளால் பதினான்கு துண்டுகளாக்கி, அனல் கக்கி அகிலத்தையே அழிக்கவல்ல ஐந்து கொடிய கணைகளை இராமன் விடுத்தான். இவ்வைந்து அம்புகளையும் இராவணன் அந்தரத்தில் அறுத்தெறிந்து மேலும் பல கணைகளை ஏவ, அவற்றையும் இராமன் அழித்து ஒழித்தான்.

இம்பரான் எனில், விசும்பினன் ஆகும், ஓர் இமைப்பில்;
தும்பை சூடிய இராவணன் முகம்தொறும் தோன்றும்;
வெம்பு வஞ்சகர் விழிதொறும் திரியும்;-மேல் நின்றான்
அம்பின் முன் செலும், மனத்திற்கும் முன் செலும், அனுமன்


மனோவேகம் என்பார்களே அப்படியான  செய்கையாம் அனுமனுக்கு. அண்ணலின் அம்புச்சரம் எங்கெல்லாம்  செல்லவேண்டுமோ அங்கெல்லாம்  அம்பின் முன் செல்லும் மனத்திற்கும் முன் செலும் அனுமனாம்!

 போர்க்களத்தில் தலையற்ற முண்டங்கள் எழுந்து ஆடுகின்றன; அந்த முண்டங்களோடு பேய்களும் ஆடுகின்றன; அவைகள் பாடுகின்றன; துதிக்கை துண்டிக்கப்பட்ட யானைகளும், குதிரைகளும் இரத்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன.

 "ஆடுகின்றன கவந்தமும்; அவற்றொடு ஆடிப்
 பாடுகின்றன அலகையும்; நீங்கிய பனைக்கை
 கோடு துன்றிய கரிகளும் பரிகளும் தலைக் கொண்டு
ஓடுகின்றன, உலப்பு இல, உதிர் ஆறு உவரி".


இராமபிரான் போர்க்களத்தில் தன் கோதண்டத்திலிருந்து விடுத்த அம்புகள், இராவணன் ஒருவன் மட்டும் உயிருடன் நிற்க, ஒரு இலட்சம் அரக்கர்களின் தலைகளை அறுத்தும், பல கோடி சேனைகளைச் சிதைத்தும் அழித்து வீழ்த்தின. எந்தத் திசை நோக்கினாலும், பிணக் குவியல்கள் குவிந்து கிடந்தன. யானைகளும், குதிரைகளும், அரக்கர்களும் உடல்கள் பின்னி மலை போல குவிந்து கிடந்தன. இவற்றைக் கண்டு இராவணன் பாம்பு போலச் சீறினான்.

ஆனால்இராமனின் முகத்தில் போர்க்களத்தில் கூட புன்னகையாம் ! முன்னர்  மாயமானைப்பிடிக்க  சென்றபோதும் இராமனை,”சிந்துரப்பவளச்செவ்வாய் முறுவலன் என்று கம்பன் வர்ணித்தார்.  அவதார நோக்கம்  நிறைவேறும் முதல்கட்டம் அதுதானே அதன் விளைவாய் எழுந்த புன்னகையாக இருக்கலாம்
.
இப்போதும்  இராவண அழிவு நடக்க இருப்பதை நினைத்து  வந்த முறுவலாகவும் இருக்கலாம்.

முறுவல் எய்திய முகத்தினன், முளரி அம் கண்ணன்,
மறு இலாதது ஓர் வடிக் கணை தொடுத்து, உற வாங்கி,
இறுதி எய்தும் நாள், கால் பொர, மந்தரம் இடையிட்டு
அறுவது ஆம் என, இராவணன் சிலையினை அறுத்தான்

இராவணனுக்கு புதிது புதிதாக தேர்கள் அறுந்த தேர்களுக்கு மாற்றாக வந்து கொண்டிருக்க  அப்படி வந்த தேர்களையெல்லாம் இராமன் அறுத்து ஒடித்தான்.

 ஓர் அம்பினால் இராவணனின் தலைகளை அலங்கரித்துக் கொண்டிருந்த மகுடங்களை அடித்துக் கீழே விழ்த்தினான்.

அந்த மகுடங்கள் கடலில் போய் விழுந்தன. காலம் காலமாய் இராவணன் தலைகளை அலங்கரித்த மகுடங்களை இழந்தான்.

போர்க்கருவிகள் எதுவும் இல்லாமல்,  போரிட தேர் இல்லாமல், தலையில் மகுடங்கள் இல்லாமல் வெறும் கையனாய், உலகத்தோர் பார்த்து "தர்மத்தைக் கடந்த பாவிகளின் நிலை இதுதான்" என்று சொல்லிக் கொண்டு ஆரவாரம் செய்ய, அவனது கருமை நிறம் மேலும் கருகிடவும், கால் விரல்களால் தரையில் கீறிக் கொண்டும், நாணி தலை குனிந்து நின்றான்



. தன் எதிரில் நாணித் தலை குனிந்து நிற்கும் இராவணனைப் பார்த்து  மனமிரங்கி, தனித்து வெறுங்கையனாய் நிற்கும் இவனைக் கொல்வது நன்றன்று என நினைக்கிறான்  இராமன்.
 'உன் தீமை இப்போது அடங்கிவிட்டதா?' என்று  கேட்டு விட்டு, மேலும் சொல்கிறான்

'அறத்தினால் அன்றி, அமரர்க்கும் அருஞ் சமம் கடத்தல்
மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி;
பறத்தி, நின் நெடும் பதி புகக் கிளையொடும்; பாவி!
இறத்தி; யான் அது நினைக்கிலென், தனிமை கண்டு இரங்கி

 "தர்மத்தால் மட்டுமே பெரிய போர்களில் வெல்ல முடியுமே தவிர, வலிமையினால் மட்டும் அல்ல என்பதை மனதில் கொள்க! பாவி! இறந்த நின் சுற்றத்தாரோடு உன்னையும் கொன்றிருப்பேன். ஆனால் உனது இந்த தனித்த அவல நிலை கண்டு நான் உன்னைக் கொல்லவில்லை. எனவே ஓடிப் போ! உன் நகரத்துக்குச் சென்று ஒளிந்து கொள்!" என்றான் இராமன்.



: "ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
 பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா! என நல்கினன் - நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்".

காற்று அறைந்த  பூளை ஆயின என்கிற  வரியை  ஆழ்வாரிடமொருந்துபெறுகிறார் கம்பர்.

காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை
      உற கடல் அரக்கர்-தம் சேனை
கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த
      கோல வில் இராமன்-தன் கோயில்
என்கிறது  ஆழ்வார் பாசுரம்.

//உனது படைகள் எல்லாம் சண்டமாருதத்தில் சிதைந்த பூளைப் பூக்கள் போல சிதறுண்டு அழிந்து ..//  என்பது கம்பனின்    பாடல்வரிகளின் பொருள்.


 ஆள் ஐயா!

இதற்கு பற்பல வகைகளில் பொருள்கொள்ளலாம்

என்ன ஆளய்யா?
அரக்கரை ஆள்கின்றஆள் ஐயா!



. . கமுக மரத்தில் வாளை மீன்கள் தாவிக்குதிக்கும் வளமிகுந்த கோசல நாட்டின் வள்ளலான இராமபிரான், வெறும் கையுடவனாக போர்க்களத்தில் நிற்கும் இராவணனைப் பார்த்து "என்ன ஆள் ஐயா நீ! உனது படைகள் எல்லாம் சண்டமாருதத்தில் சிதைந்த பூளைப் பூக்கள் போல சிதறுண்டு அழிந்து போனதைக் கண்டாயல்லவா? போ! இன்றைக்கு உன் அரண்மனைக்குத் திரும்பிப் போய்,போருக்கு வேண்டிய ஆயுதங்களோடு நாளைக்கு வா! என்று (தனித்து நிற்பவனிடம் போர் செய்யக்கூடாதென்ற மரபினை அறத்தினை உலகிற்கும் எடுத்துரைக்கும்  எண்ணமுடன்),கருணை மேலிடச் சொன்னான் வள்ளல் இராமபிரான்.

பின்குறிப்பு...

இராமனின்  இடம் அயோத்திதானே  அல்லது சீதையின் இடம் மிதிலைதானே? இந்த இரண்டும் இல்லாமல்  கோசல நாடுடை வள்ளல்  என  கம்பன்  இராமனைக்கூறிய காரணம் என்னவாக  இருக்கும்?


மேலும் படிக்க... "இன்று போய் போருக்கு நாளை வா!"

Sunday, March 01, 2015

படியாய்க்கிடந்து உன் பவளவாய் காண்பேனே!




மன்னன்  குலசேகரனின் அவையில் மந்திரிகள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர்.

“என்ன ஆயிற்று நம் மன்னருக்கு? அரச வளாகத்திற்குள்  திருமால் அடியார்களை மட்டும்  உள்ளே வரச்சொல்லவும் என்கிறார். ராமா ராமா என்று நாமாவளிகளும், ஆன்மீகசொற்பொழிவுகளுமாக.... இதென்ன அரச சபையா அல்லது பஜனை மண்டபமா? ” என்று  எரிச்சலடைந்தார்  ஒரு அமைச்சர்.

“ நாட்டின் மீது மன்னருக்கு அக்கறையே இல்லை..இதற்கு ஒரு முடிவுகட்டவேண்டும் ..அந்த  நவரத்தின மாலையை எடுத்து பழியை  திருமால் பக்தன் ஒருவர் மீது போடுவோம். மன்னருக்கு  அப்போதுதான்  அவர்கள் மீது வெறுப்புவரும்.நாட்டின் மீதும்கவனம் வரும்” என்ற அமைச்சர்  தன் திட்டத்தை செயலாற்றினார்.

குலசேகர மன்னன்  அன்று அரியணை அமர்ந்ததும் இந்த் செய்தியை அமைச்சர்கள் வாயிலாகக்கேட்டு அதிர்ந்தான்,



”திருமாலின் அடியார்கள் ஒருக்காலும் இச்செயலை செய்திருக்கமாட்டார்கள் “ என்று  உறுதியாகக்கூறிய மன்னன் மெய்க்காவலனை அழைத்தான் அவனிடம்,” ஒரு குடத்தில் சீறும் நல்லபாம்பினை  உள்ளே போட்டு அதை எடுத்துவா” என்று உத்தரவிட்டார்.
குடம் வந்ததும் மன்னன் அமைச்சர்களிடம்,’ என் அவைக்கு  வந்துள்ள  ஹரியின் ஜனங்கள்  மாலையைத்திருடி இருந்தால் குடத்தில் உள்ள பாம்பு என் கரத்தைக்கொத்தட்டும்” என்றார். குடத்தினுள்  கைவிட்டார்.
பாம்பு  பதுங்கியது ( ‘ஆரம் கெடப் பரன் அன்பர் கொள்ளாரென்று வாரம் கொடு குடப்பாம்பில் கையிட்டவன்” என்ற வரிகள் ஆழ்வார் பெருமானைப்பெருமைப்படுத்துகிறது)

அமைச்சர்கள் தங்கள் செயலுக்கு மன்னிப்புகேட்டனர்  ஆனால் மன்னனின்  மனம் புழுங்கிப்போனது

.”மாலின் அடியார்களை சோதித்துப்பார்கும் நிலைமை எனக்குத்தேவைதானா அது நான் மன்னனாய் இருப்பதால்  ஏற்பட்ட அவலம் அல்லவா?  வேண்டாம் எனக்கு இந்த அரசக்கோலம்.’உண்டியே உடையே உகந்தோடும் இம்மண்டலத்தொரும் கூடுவதில்லை யான்”(பெருமாள் திருமொழியில் பாசுரம் 4)  என்று மகனிடம்  பொறுப்பை ஒப்படைத்தான் தனது செல்வம் நிரம்பிய அரசபதவியைத்துறந்தான்.

    அரசபதவியைத் துறந்து அண்ணலின் ஆழ்ந்த பக்தரானார்அதனால் குலசேகர ஆழ்வாரானார்.

ஒவ்வொரு ஆழ்வாருக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு. குலசேகர ஆழ்வாரின் சிறப்பு அவர் இராமன் மேல் கொண்ட அதீத பக்தி .

 பெருமாள் என்று அழைக்கப்படும் இராமபிரானின் மேல் உணர்ச்சி உந்திய அன்புப் பேராறு பூண்டமையின் ஆழ்வாரை "குல சேகர பெருமாள்" என்று சிறப்பாக வழங்கலாயினர். 

பெரியாழ்வார் கண்ணனுக்குத் தாலாட்டுப் பாடியது போல குலசேகராழ்வார்

மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறுவாய்த்தவனே!
தென்னிலங்கைக்கோன்முடிகள் சிந்துவித்தாய்! செம்
பொன்சேர்கன்னிமாமதிள்புடைசூழ் கணபுரத்
தென்கருமணியே!என்னுடைய
இன்னமுதே! இராகவனே! தாலேலோ.



 என்று இராமனுக்கு தாலாட்டுப் பாடியவர். இராம காவியத்தில் ஆழ்ந்த  இவர் பல நேரங்களில்  கேட்பது  கதை என அறியாமலேயே  ஒன்றிப்போய்விடுவார். அத்தகைய  சம்பவங்கள் பல  உண்டு.ஒன்று மட்டும்  சொல்லலாம்




, சீதையை ராவணன் கொண்டு சென்றான் என்றுராமாயண சொற்பொழிவாளர் கூற, இதனைக் கேட்ட மன்னன் குலசேகரன்  உடனேயே படை திரட்டிக்கொண்டு இலங்கை நோக்கி சென்று கடலில் இறங்கிவிட்டார். அங்கே ஸ்ரீராமன், சீதா, லட்சுமண, ஆஞ்சனேயர் சகிதமாக, மன்னனுக்குக் காட்சி அளித்தார் என்று கூறப்படுகிறது.

திருவரங்கம் பெரிய கோயிலில் மூன்றாவதாக இருக்கும் திருச்சுற்றிலே சேனைவென்றான் திருமண்டபம் என்பதைக் கட்டினார். இத்திருச்சுற்றையும் செப்பம் செய்தார். இதனாலேயே இம்மூன்றாவது சுற்றுக்கு இவரது பெயர் இன்றும் வழங்கப்பட்டு வருகிறது

திருமலை சென்ற குலசேகர ஆழ்வாருக்கு திருவேங்கடவனை தரிசித்தபின்னர் அந்த  இருப்பிடத்தைவிட்டு அகலவே மனம் வராமல் போகிறதாம்.


இங்கேயே எங்காவது  தங்கிவிடவேண்டும் என நினைக்கிறார்.

வேங்கடத்து கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே -  அதாவதுபறவையாய்   பிறக்க விரும்புகிறார்.  ஆனால் வல்லூறு  வந்து பறவையை  அடித்துவிடுமே  ஆகவே...

திருவேங்கடச் சுனையில் மீனாய் பிறப்பேனே -   பிறகு மீனாய்ப்பிறக்க விரும்புகிறார்...மீனின் வாழ்வும் அதிகமல்லவே  .யாரும் வலைவீசிப்பிடித்துப்போய்விட்டால் என்ன செய்வது?

வேங்கடக் கோந்தானுமிழும் பொன் வட்டில் பிடித்து உடனே புகப்பெறுவெனாவேனே - பணியாளனாய் இருக்க விரும்புகிறார் ஆயினும் பணிப்பொறுப்பு கைமாறிப்போக நேர்ந்தால்..?

பண்பகரும்வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துசெண்பகமாய் நிற்கும் தவமுடையெனாவேனே - மலராய்/மரமாய்........மலர் வாழ்வு ஒருநாள்தான் மரம் வாழ்வு பலநாள் எனினும் யாரும் வெட்டி வீழ்த்திவிட்டால்..?


தென்னென வண்டினங்கள்பண்பாடும் ங்கடத்துள்அன்னனையபொற்குவடாம் அருந்தவத்தெனாவேனே -சிகரமாய்....உணர்ச்சியற்ற கல் தானே  இயற்கை அழிவில் மலையும் பொடியாகுமே?

திருவேங்கட மலையில் கானாறாய்ப்பாயும் கருத்துடையயெனாவேனே - ஆறாய்........மழை  வற்றினால்  கடும் கோடைவந்தால்ஆறும் வற்றுமே?

திருவேங்கட மலை மேல் நெறியாய்க் கிடக்கும் நிலையுடையெனாவேனே - பாதையாய்....  பாதை என்பது ஒன்றா என்ன  பலப்பல உண்டு பயன்படுத்தாத பாதைகள்  நாளடைவில்  காணாமல்போகுமே?

, இறைவன் கருவறைக்குள் செல்லும் வழியில் அனைவரும் ஏறி, இறங்கும் படிக்கல்லாகக் கிடந்தால் பக்தர்களின் காலடிகளைத் தாங்கும் புண்ணியமும் கிடைக்கும், இறைவனின் பவள வாயினை எந்நேரமும் கண்டுகளிக்கும் வாய்ப்பும் கிடைக்கும் என எண்ணினார்.

படியாய்க் கிடந்து உன் பவளவாய்க் காண்பேனே என்று தன் ஆவலை வெளியிடுகிறார் குலசேகராழ்வார்.

இதனாலேயே வேங்கடவன் கருவறை வாயில் படிக்குக் குலசேகரப்படி என்ற பெயர் வழங்கப்படுகிறது!

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே

படிக்கட்டைப் பொன் தகட்டால் மூடி விடலாம். அல்லது கட்டடச் சீரமைப்பில் படிக்கட்டையே எடுத்து விடலாம். அப்படிச் செய்தால் இறைவனைக் காண இயலாது. தான் படிக்கட்டாய்ப் பிறந்த பிறவிப்பயன் கிட்டாமல் போகலாம் எனத் தோன்றுகிறதாம் ஆழ்வாருக்கு.


அதனால் இறுதியாகச் சொல்கிறார், .

பவளம் போன்று சிவந்த வாயையுடைய திருவேங்கடநாதன் உறையும் திருமலையில் ஏதேனும் ஒரு பொருளாகப் பிறந்தால் போதும்.எனக்கு அதுவே பெரும் பேறு என்ற பொருள்பட,


செம்பவள வாயான் திருவேங்கட மென்னும்
எம்பெருமான் பொன் மலைமேல் ஏதேனுமாவேனே!

என்று பாடியுள்ளார்.

குலசேகர் ஆழ்வாரின் திருநட்சத்திரம் இன்று(1-3-2015) 
ஆழ்வார் பாதங்களைப்பற்றி  ஆண்டவனின் அருளைப்பெறுவோம்.






மேலும் படிக்க... "படியாய்க்கிடந்து உன் பவளவாய் காண்பேனே!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.