Social Icons

Pages

Thursday, March 08, 2012

உதய கன்னி உரைப்பது கேட்டீரோ?







மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால் எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்? சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்கு!



மார்ச் 8 –ம் நாள் உலகம் முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களைச் சிறப்பிக்கும் இந்நாள் பல்வேறு நாடுகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.



இனம், மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.



ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டு போராடியதைக் குறிப்பிடத்தான் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.. பழங்காலத்தில் கிரேக்கத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வர பெண்கள் போராடினார்கள். பிரெஞ்சு புரட்சியின் போது பெண்கள் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத் தன்மை வேண்டி போராடினார்கள்



ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்ள, உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க, அரசமாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது! அரசமாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் "கைது செய்வோம்" என்று மிரட்டிய அரசனின் மெய்காப்பளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கி கொன்றனர்.



இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்துபோனான். "கோரிக்கைகளைக் கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன்", என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்திருந்தவர்களைச் சமாதானப்படுத்தினான். இயலாது போகவும் அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்!



தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட.. ஆளும்வர்க்கம் அசைந்துகொடுக்கத் துவங்கியது.



இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்ட நாள் கோரிக்கையான வாக்குரிமை கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.



பிரான்சில், புருஸ்ஸியனில் (Prussian King) இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848-ம் ஆண்டு மார்ச் 8-ம் நாளாகும்! அந்த மார்ச் 8-ம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.


இத்தனை அல்லல் பட்டு கிடைத்த இந்த நாளின் பெருமையை சில மகளிரே உணர்ந்திருக்கவில்லை முழுமையாக.

ஆமாம்! "மங்கையராய்ப்பிறப்பதற்கே மாதவம் செய்திடவேண்டுமம்மா" என்றார் கவிஞர் ஒருவர். அப்படிப்பட்ட உயர்நிலையை தக்கவைத்துக்கொண்டிருக்க தவறிக்கொண்டிருக்கிறோம். நமது இளைய தலைமுறைகளுக்குச் சரியான வழிகாட்டியாக முந்தைய தலைமுறைபெண்களில் சிலர் இருப்பதில்லை. அதற்கு உதாரணம் அழகிப்போட்டி.





இதில் பங்குபெற எனக்குத்தெரிந்த ஒரு மத்தியதரக்குடும்பத்துப்பெண்மணி தன் மகளை மேடைக்குப் போட்டித் தேர்வுக்கு அனுப்பி இருந்தார். பள்ளியில் நடந்த அழகுப்போட்டியில் அழகுராணியாக அவள் மூடிசூடிக்கொண்டதைப் பெருமை வழியக்கூறி இனிப்புகளை அனைவருக்கும் விநியோகித்தார். அழகுப்போட்டியில் கலந்துகொண்ட அந்த ஒன்பதுவயதுக்குழந்தை அழகான குட்டிப்பெண் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லைதான். ஆனால் படிப்பிலும் சுட்டியான அந்தக்குழந்தை எப்போதும் வகுப்பில் முதல் ராங்க். எம் ஐ டி யில் ஏரோநாடிக்ஸ், தொடர்ந்து மாஸ்டர் டிகிரி என முடித்துவிட்டு விண்வெளி ஆராய்ச்சிக்குச் செல்லவேண்டும் என்பது அவளின் லட்சியம். இப்படி படிப்பை நோக்கிய லட்சியப்பாதையில் செல்லும் குழந்தைகளை அழகிப்போட்டி திசை திருப்பிவிடுகிறது.




கொலை, வன்முறை, குண்டுவெடிப்பு, ஆள்கடத்தல், குழந்தைகளின் பாலியல் வன்முறை கொடுமைகள், உள்நாட்டு அரசியல் லஞ்சங்கள், அதில் சிக்கிக்கொண்ட பெரியதலைகள், தீவிரவாத தாக்குதல்கள், அந்நிய நாடுகளுடன் கருத்து வேற்றுமைகள் என்கின்ற பலவிதமான சோர்வுகளுக்கு நடுவே இந்தியாவுக்கு உலக அழகியாக இந்தியப்பெண் ஒருவர் முடிசூடிக்கொள்வது சற்று ஆசுவாசத்தைத் தருகின்றது.



விளையாட்டுத்துறை, வணிகத்துறை என்று இந்தியா பின்தங்கி இருந்தாலும் அழகுத்துறையில் இந்தியா முதலிடம் பெற்றது பெருமையாகிவிட்டது!



வணிக நிறுவங்களும் தங்களது பிஸினஸ் முன்னேற்றத்திற்கு அசுர விளம்பரம் செய்து பெண் என்னும் பிரமாதமான சரக்கினை அது அள்ள அள்ளக்குறையாத தங்கச்சுரங்கம் என்ற எண்ணத்தில் அழகிப்போட்டிகளை நடத்த ஆரம்பித்தனர்.



வணிக நிறுவனங்களின் வியாபாரத்திற்குத் தங்களை விட்டில் பூச்சியாக பலி கொடுப்பதைப் போட்டியில் பங்கு கொள்ளும் அழகிகள் அறிய நியாயமில்லை.



"பெண் என்றால் அழகு; ஆண் என்றால் வீரம்" என்னும் நீண்டகாலப்பாகுபாடு எத்தனையோ காலமாகியும் காப்பாற்றப்பட்டு வருவதால், இதன் உச்சக்கட்ட மோசடியாக நடப்பது அழகிப்போட்டி என்றாகிறது.



தங்களைப் பிறருக்காக அழகுப்படுத்திக்கொள்வதில் பலப்பல பெண்கள் தங்கள் நேரத்தை, சிந்தனையைச் செலவழிக்க நேரிடுகிறது. தங்கள் ஆற்றல், பண்பு, சிந்தனை என்று எதையும் வளர்த்துக்கொள்ளாமல் அழகுப்பதுமைகளாகவும் அலங்காரப்பொருட்களுமாகவே இருந்துவிடுகிறார்கள். போட்டிகளில் பங்கு பெறும் இளம் பெண்கள் ஒரு கனவுலகில் வாழ்கிறார்கள்!



இன்றைய நம் தமிழ்ச்சமுதாயத்தில் அழகுப்போட்டிக்கான சிந்தனை அவளை விபரீதமான இடத்தில் கொண்டு நிறுத்துகிறது.



மனதைச் சலனப்படுத்தி மாய உலகில் அவளைச் சஞ்சரிக்கவைக்கிற அழகுப்போட்டிகள் நமக்குத்தேவைதானா?

இதனைப் பெற்றோர் உணரவேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது.

விளையும் பயிருக்கு வேலியாய் பெற்றோர் இருக்க வேண்டும். அதுவும் பெண் எனும் இளம்பயிரைத் தாய் எனும் வேலி பேணிக்காக்க வேண்டும்.



"குடும்பம் என்பது ஜனநாயக பண்புகளை வளர்க்கும் தொட்டிலாக இல்லை" என்று ஐ நா வின் அறிக்கையே கூறுகிறது.



போன தலைமுறைப் பெண்களைவிடவும் இந்தத் தலைமுறைப் பெண்களின் சிந்தனை வேகம் கூடி இருக்கிறது.



ஆகவே இந்தியா போன்ற ஏழைநாட்டிற்கு அவசியமில்லாத அழகுப்போட்டியில் தன் மகளை கலந்துகொள்ள வைப்பதைவிட, ஆற்றலை வளர்த்துக்கொள்ள சிந்தனையை சீராக செலுத்திக்கொள்ள பயிற்சி அளிக்க வேண்டும்.



மனிதநேயம், தன்னலமற்ற பாசம் பகிர்ந்துகொள்வது, பரஸ்பரம் விட்டுக்கொடுப்பது, பண்பு கலாசாரம் ஆகியவற்றை மதிப்பது போன்றவைகளை சிறுவயதிலேயே குழந்தைகளூக்குப் பாலோடுபுகட்டும்போது சாதகமான சமூக, கலாசார, அரசியல், பொருளாதார மாற்றங்களை இளைய தலைமுறையினரால் கொண்டுவர இயலும்.



இத்தகைய உன்னத நிலைக்கு நம் குழந்தைகளைக் கொண்டு செல்ல நாம் பாடுபடுவோம். இவற்றுக்கு எதிரான அழகுப்போட்டி போன்ற சக்திகளைப் பலவீனப்படுத்துவோம்!








அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில்

அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்

உதய கன்னி உரைப்பது கேட்டிரோ!



பாரதியின் வரிகளை பாரெங்கும் முழக்குவோம்!


(நன்றி இன்று என் இந்தக்கட்டுரையை வெளியிட்ட இந்நேரம்.காமிற்கு)











--







15 comments:

  1. மிக நல்ல கருத்துக்கள். பெண்மையைப் போற்றிடுவோம் இந்நாளில். இதோ... தி.இ.க்கா...

    ReplyDelete
  2. மகளிர் தின சிறப்புப் பதிவு
    மிக மிக அருமை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்ல கட்டுரை....

    அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. வணக்கம்! சிந்தனையுடன் சிறப்பான கட்டுரை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு மகளிர் தின வாழ்த்துக்கள் மேடம்

    ReplyDelete
  7. குல மாதர் தம் புகழ் ஓங்குக..
    மகளிர் தின நல் வாழ்த்துக்கள் சகோதரி..

    ReplyDelete
  8. Anonymous7:16 PM

    மகளிர் தின நல்வாழ்த்துகள்...
    மகளிர் தின பதிவு
    அருமை...

    ReplyDelete
  9. ஆஹா அற்புதம் அருமை...
    கண்டேன் பிரகாசிக்கும் பாரதி கண்ட புதுமைப் பெண்ணை....
    ஆஹா! ஆஹா!!....அன்னை சக்தியின் அருள் நிறைந்து பிரகாசிக்கிறது...

    அருமை அருமை அருமை...
    பெண்கள் காட்சிப் பொருளாக காட்டப் படுவதை அவர்கள் உணரவேண்டும், பணத்திற்கும் பொருளுக்கும் ஆசைப் பட்டு சுய கெளரவத்தையே விட்டு மனநோய் கொண்ட பெரும்பாலான ஆண்களின் பொம்மைகளாக இருப்பதை நாகரிகம் என்றப் பெயரில் பெண்களின் தன்மானம் சீரழிக்கப் படுவதை முதலில் அவர்களே உணரவேண்டும். அப்படி அசிங்கத்திற்கு ஆட்படும் பெண்களுக்கு விழிப்புணர்வு தருவதோடு, விளம்பரப் பொருளாக முன்னிலைப் படுத்துவதை மறுதலிக்க வேண்டும். மாறாக அது போன்று இருப்பவர்களிடம் அது அல்ல இந்தியப் பெண்ணின் லட்சியம். வேதம் படித்த பெண் ஞானிகள் இருந்த பூமி, பெரும் ஞானிகளின் விவாதங்களிலே நடுவராக இருந்து அறிய பல அபூர்வ தீர்ப்புச் சொன்னவள் இந்த இந்தியப் பெண்... இனப் போராட்டத்திலே கண்டம் விட்டு கண்டம் இருந்தும் போராடிய தில்லையாடி வள்ளியம்மை போன்ற பெண்கள் கொண்ட சமூகம் இது.

    அயல் நாட்டில் இருந்து வந்தவர்களையும் நிவேதிதா சகோதிரி என்றும், அன்னை தெரேசா என்றும் மருமகளாக வந்தவர்களைக் கூட அன்னை என்று அழைத்து போற்றும் நல்ல பூமி. அங்கே பிறந்த நாம் செய்வனச் செய்வோமே தவிர வேறெதுவும் செய்ய மாட்டோம். என்று உரிமைக் குரல் கொடுத்து அவலத்தைப் போக்க வேண்டும். உலகத்திற்கே நாகரிகம் சொல்லித் தந்த இந்த இந்திய இனத்தை சேர்ந்த பெண்கள் யாவருக்கும், நல்ல முன்னோடியாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை பெண்களே உணராத வரை பாரதி கண்ட பெண்ணை பார்ப்பது அபூர்வமாகிவிடும்.

    வேதம் புதுமை செய்ய புதுமைப் பெண்கள் பெருகாதபோது நன் மக்கள் எங்கே... நன்மக்கள் இல்லாத போது கலியை வெல்லும் அமரர்கள் தாம் எங்கே? அந்தக் கலையை உலகிற்கே இந்தியா அளிக்கும் என்று அறைகூவலிட்டு சென்ற பாரதியின் கனவு தான் எங்கே?

    இருந்தும் தங்களைப் போன்ற பாரதியின் புதுமைப் பெண்கள் தாம் இவைகளை இன்னும் சிறப்பாக பேச வேண்டும். இன்றைய மகளிர் தினம் யுகங்களுக்கு முன்பே பெண்ணை சக ஞானிகளோடு விவாதம் செய்த பெண்களின் பறிபோன சம உரிமை சற்று துளிர் விட்டு முளைக்கும் இந்த காலத்தில், பாரதியின் கனவு மெய்ப்பட வேண்டுமாயின் கல்வி கேள்விகளில் தேர்ந்த தங்களைப் போன்றப் பெண்கள் இன்னும் அவற்றைப் பற்றி மென்மேலும் சிந்தித்து... இந்த நிலையை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும்.

    அதே நேரம், எல்லையை மீறுவது புதுமைப் பெண்ணின் லட்சணம் என்னும் புரியாத் தனத்தையும் உங்களைப் போன்றவர்கள் தாம் யாவருக்கும் புரிய வைக்கவும் வேண்டும். சகோதரர்கள் நாங்கள் பின்புலத்தில் நிற்போம்.

    அரைகுறை ஆடை உடுத்தி பெண்ணைக் காட்சிப் பொருளாக்கி செய்யும் வியாபாரத்திற்கு துணை போகும் பெண்களை அவர்கள் செய்வது என்னவென்று அப் பெண்களுக்கு முதலில் புரிய வைக்க வேண்டும். அப்படி செய்பவர்களை சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் பெண்கள் கூடி சரியான ஒரு பாதையில் போக இயன்ற முயற்சியை செய்ய வேண்டும்... வளரும் விஞ்ஞான உலகில் இவைகளே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். பெண்கள் சீரழிந்தால் கண்கள் சீரழிந்தது போல்....

    தங்களின் கட்டுரை முத்தாய்ப்பாய் நிறைவல்ல!.... புதியதோர் சிந்தனைக்கு பாதை அமைக்கிறது.... அருமை, அருமை, அருமை சகோதிரியாரே!

    மிகப் பெரிய பின்னூட்டம்... பொருத்தருள வேண்டும்.

    தங்களுக்கும், உலகில் உள்ள அனைத்து சகோதிரிகளுக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள்.
    வெல்லட்டும் பாரதியின் புதுமைப் பெண் கனவு...
    என் அன்னையர் இந்த உலகிற்கே குருவாக திலங்கும் நிலை நிச்சயம் ஒரு நாள் கிட்டும்.

    ReplyDelete
  10. /போன தலைமுறைப் பெண்களைவிடவும் இந்தத் தலைமுறைப் பெண்களின் சிந்தனை வேகம் கூடி இருக்கிறது./

    உண்மைதான். இன்னும் தேவையாகும் விழிப்புணர்வைக் கோரும் நல்ல பதிவு ஷைலஜா.

    மகளிர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. கருத்துகூறீய அனைவர்க்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  12. உங்கள் கருத்துக்கள் உண்மைதான். பெண்ணிற்கு பெண்தான் எதிரி. ஆண்கள் கொடுக்கும் அளவிற்கு உற்சாகம் பெண்கள் கொடுப்பதில்லை. பொறாமைக்குணமோ?

    ReplyDelete
  13. //மனிதநேயம், தன்னலமற்ற பாசம் பகிர்ந்துகொள்வது, பரஸ்பரம் விட்டுக்கொடுப்பது, பண்பு கலாசாரம் ஆகியவற்றை மதிப்பது போன்றவைகளை சிறுவயதிலேயே குழந்தைகளூக்குப் பாலோடுபுகட்டும்போது சாதகமான சமூக, கலாசார, அரசியல், பொருளாதார மாற்றங்களை இளைய தலைமுறையினரால் கொண்டுவர இயலும்.//

    உண்மையான வரிகள்.. கத்துக் கொடுக்க தகுதியான யாருமில்லாமல்தான் இன்றைய இளைய சமுதாயம் இதெல்லாம் என்னன்னே தெரியாம வளருது. பலமான அஸ்திவாரம் தேவைதான்.

    ReplyDelete
  14. திரு விச்சு மற்றும் அமைதிச்சாரலின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  15. Fantastic Shylaja ji....

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.