நீங்கள் திருவரங்கம் கோயிலுக்குப்போயிருக்கிறீர்களா?
பிரதான வாயில்வழியாக அதாவது ரங்கா ரங்கா கோபுரம்வழியாக திருக்கோவிலில் காலடி எடுத்துவைத்ததுமே -உடனேயே- உங்களின் வலப்புறத்திலிருக்கும் இருக்கும் முதல்சந்நிதியை ஏறெடுத்துப்பார்த்திருக்கிறீர்களா?
ரொம்ப ஆடம்பரமாக எல்லாம் இருக்காது மூலையில் ஒடுங்கினமாதிரிதான் இருக்கும் அந்த சந்நிதி.
அது என்ன பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரின் சந்நிதியா அல்லது
பரமபக்தன் அனுமனின்சந்நிதியா
அல்லது பக்தபிரஹலாதனின் சந்நிதியா?
எது? என்று கேட்கிறீர்களா?
ம்ஹூம் அவர்கள் யாரும் இல்லை.
பகவானுக்குத்தன் அடியார்களை மிகவும் பிடிக்கும்.
ஆனால் அடியாரைநேசிக்கும் அடியாரை அதைவிடப்பிடிக்கும்.
தன் அடியாரை குருவாக ஏற்று அவருக்குத்தொண்டு செய்யும் அடியவர்தான் ஆண்டவனின் மனத்தில் முதலில் இருப்பவர்.அப்படிப்பட்டவர்தான் கூரத்தாழ்வார். அவருக்கு அடுத்த சந்நிதியில் அருள்பவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார். பிறகு திருப்பாணாழ்வார், இடப்பக்கம்(உள்) ஆண்டாள் சந்நிதி ரங்கவிலாஸ் என அரங்கன் கோயில் வளாகம் அழகு மிளிரக்காட்சி அளிக்கும்.
கூரத்தாழ்வாரின் குருபக்திக்கு பலபல சொல்லலாம் .
குருபக்தியில் சிறந்த கூரத்தாழ்வாருக்கே, அரங்கன், அ(ந்த)ரங்கத்தில் உயர்பதவி கொடுத்திருக்கிறான்!
ஆமாம் !கோவிலின் முதல் சந்நிதி கூரத்தாழ்வாருடையதுதான் !
இனி திருவரங்கம் செல்லும்போது கோவிலில் நுழைந்ததும் முதலில் குருபக்தியில் சிறந்துவிளங்கியவரின் திருச்சந்நிதிக்கு சென்றுவாருங்கள்! அரங்கனுக்கு தன் அடியவர்களைக்கணடு வணங்கியபின்னர் தன்னைக்காணவருவதே பிடிக்கும்.
ராமானுசரின் பிரதம சீடரான கூரத்தாழ்வார் காஞ்சீபுரம் அருகே கூரம் என்னும் கிராமத்தில் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். அவரது இயற்பெயர்திருமறுமார்பினன். (ஸ்ரீவத்சாங்கர்)
.தனது செல்வத்தை ஏழை எளியோர்க்கு வாரிவழங்குவதிலேயே செலவிட்டார்.
அவரது அரண்மனை போன்ற பெரிய மாளிகையில் நள்ளிரவு வரை ’
பெறுங்கள் கொடுங்கள் மகிழுங்கள்!’ என்ற கோஷமே கேட்கும்.
ஒவ்வொரு நாளும் காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயில் திருக்கதவுகள் மூடிய பின் தான் இவரது வீட்டுக் கதவுகள் மூடப்படும். ஆனால்ஒரு நாள் ஊர் திருவிழாவிற்கு செல்ல வேண்டியிருந்ததால் சற்று முன்பாகவே அவர் இல்லக்கதவை மூடிவிட்டார். அந்தக் கதவில் கட்டப்பட்டிருந்த விலைஉயர்ந்த மணிகளின் ஒலி, கதவை சாத்தும்போது கோயில் வரை கேட்கும்.
திருக்கச்சி நம்பிகள் என்பவர் காஞ்சி வரதராசப்பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்து வந்தார் . கூரத்தாழ்வார் வீட்டு மணியொலி வரஜராஜப்பெருமாள் சன்னதி வரை கேட்கவும் பெருந் தேவித்தாயார், சுவாமியிடம் "என்ன! அதற்குள் கோயில் அடைக்கும் சத்தம்.. நடை சாத்த நேரமாகிவிட்டதா?" என்று வினவினாள்.
குழம்பிய சுவாமி தனக்கு சேவை செய்து வந்த திருக்கச்சி நம்பிகளிடம் இதைப் பற்றிக் கேட்க, அவரும் நடந்ததைச் சொன்னார்.
அதைக் கேட்ட பெருமாள், "ஆழ்வானின் செல்வத்திற்கு அத்தனை சிறப்பா? கோயில் கதவு மூடும் முன்னே அவன் வீட்டுக்கதவு மூடப்பட்டதே!" என்றார்
தாயார் நம்பியிடம் உத்தம ஆத்மாவான கூரேசனைதான் காணவிரும்புவதாய் கூறினாள்
நான் நாயினும் கடையேன் எனக்குத்தாயாரை தரிசிக்கும் பாக்கியமும் இல்லை தகுதியும் இல்லை என்றார்’.என் வீட்டுக் கதவுகளை அப்படிச் சத்தம் வராப் போலே சாத்தி, என் செல்வத் திமிரைக் காட்டி விட்டேனோ? அந்தச் சத்தம் கேட்டா, அது கோயில் அடைக்கும் சத்தம் என்று தாயார் குழம்பிப் போனார்கள்?-என்பதால் தான் கூரேசன் மிகவும் வருந்தி, வெட்கப்பட்டுப் போகாமல் இருந்தார்.
அப்படியான உள்ளம் கூரத்தாழ்வானுக்கு!\\\\\
.
’செல்வம் அல்ல உய்ய வழி” என்பதைப் புரிந்து கொண்டு எல்லாச் செல்வங்களையும் தானம் செய்ய ஆரம்பித்தார். செல்வச்செருக்கு,குலச்செருக்கு, கல்விச்செருக்கு என மூன்றையும் அறுத்தவர்,அதனால் முக்குறும்பை அறுத்தவர் எனப்பெயர்பெற்றவர்.
மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்சம் முக்குறும்பாம்குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி அல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனி யாது வருத்தமன்றே.
இரமானுஜ நூற்றந்தாதிப்பாடல் இது.
ஒருவரை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்வோம் அல்லவா.. அதையே மொழியைக் கடக்கும் பெரும்புகழோன் என்று கூரத்தாழ்வாரைப் பற்றி திருவரங்கத்தமுதனார் தன்னுடைய இராமானுச நூற்றந்தாதியில் சிறப்பித்துள்ளார்
சிறு வயதிலிருந்தே நிறைந்த கல்வியுடன் நற்பண்புகள் அவரிடம் காணப்பட்டன. எல்லோருக்கும் பிடித்த பாத்திரமாக விளங்கிய அவருக்குத் தகுந்தாற்போல, ஆண்டாள் என்ற பெயர் கொண்ட ஒரு நல்ல குணவதி அவருக்கு மாலையிட்டாள்.பெண்குலத்தின் பொன்விளக்கு என்பார்கள் இந்த ஆண்டாளம்மாவை.
தன் செல்வத்தை எல்லாம் தானம் செய்த பின்னர் குருவைத் தேடிய அவர், ஸ்ரீராமானுஜரைச் சரணடைந்தார். அவருக்குத் தொண்டு செய்து வாழும் எண்ணத்தில் மனைவியிடம் ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீராமானுஜருக்கு சேவை செய்வோம் என்று கூறினார்.
"எத்தனை தூரம் போக வேண்டும். வழியில் எதாவது பயம் உண்டா?"
"மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம்! ஏன் எதாவது எடுத்து வந்திருக்கிறாயா?
"ஆம் சுவாமி,தாங்கள் சாப்பிட என்று ஒரு தங்க வட்டில் கொண்டு வந்திருக்கிறேன்".
அதை வாங்கி வீசி எறிந்தார் ஆழ்வார்.
பின் நீண்ட பயணத்திற்குப் பின் திருவரங்கம் அடைந்து அங்கு ஒரு வீட்டில் தங்கினார்கள். கீழச்சித்திரை வீதியில் தேருக்கு நேராக அமைந்த அந்த வீட்டில் உணவில்லாமல் மூன்று நாட்கள் பட்டினி கிடந்தனர்.
ஆண்டாளம்மாள் தன் கணவர் இப்படிப் பட்டினியாக இருப்பதைப் பார்த்து தவித்துப் போபோய்விட்டாள். அவளுக்குத் தானும் பட்டினி கிடப்பது தெரியவில்லை. நேராக மனதில் ஸ்ரீரங்கநாதனைக் கண்டு பேசினாள், "அப்பா, திருவரங்கனே! உனக்கு மட்டும் மூன்று வேளைகளும் இனிப்புடன் பிரசாதம் போகிறது. உன் பக்தன் இங்கு மூன்று நாட்கள் பட்டினியாக இருப்பது தெரியவில்லையா? நீ மட்டும் அங்கு வயிறாற அமுது உண்கிறாயே!"
என்ன ஆச்சரியம்! உடனேயே கதவைத் தட்டிய ஒரு பரிசாரகன், ஒரு பொட்டலத்தைக் கொடுத்து, "அரங்கன் என்னை அனுப்பி, இதைக் கொடுத்து வரச் சொன்னார்" என்றான். அதைப் பிரித்துப் பார்த்தால் அதில் அரவணைப் பிரசாதம் இருந்தது. ஆண்டாள் அதை எடுத்துத் தன் கணவரிடம் கொடுத்தாள்.
கூரத்தாழ்வார் தன் மனைவியிடம், அரங்கனை வேண்டினாயா என்று வினவ,
"ஆம், மூன்று நாட்கள் என் கணவர் பட்டினி கிடக்கிறார். உனக்கு மட்டும் பிரசாதம் போகிறதே என்று ரங்கநாதனிடம் கேட்டேன் " என்றாள்.
அனைத்தையும் விட்டு வந்தபின்னும் அரங்கனிடம் நீ இப்படிவேண்டிக்கொள்ளலாமா சரி இனி இம்மாதிரி செய்யாதே எனச்சொல்லி அவர் அரங்கபிரசாதத்தில் தானும் சிறிது எடுத்துக்கொண்டு மனைவிக்கும் சிறிதுகொடுத்துவிட்டு இரவு முழுதும் திருவாய்மொழியை ஓதியவண்ணமே கழித்தார்.
(பரமனின் பிரசாதம் உண்ட பலனாய் பத்துமாததில் அவர்களுக்கு இரட்டைக்குழந்தைகள் பிறந்தன.
பராசரபட்டர் வியாசபட்டர் என்று பேரறிவும் மிகுந்த ஞானமும்கொண்டஅவர்களைப்பற்றி பிறகுவிவரமாய் எழுத அரங்கன் அருளவேண்டும்!)
குணங்களில் சிறந்தவரும், ஜீவகாருண்யம், குரு பக்தி, வைராக்யம், பகவத் பாகவத தொண்டு இவைகளில் சிறப்பு பெற்றவர் ஆழ்வார் பெருமான், தான் கண்களை இழக்கக் காரணமாயிருந்த "நாலூரான்' என்பானும் நற்கதியடைய திருமாலிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டவர் ! ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாணநன்னயம் செய்துவிடல்’ என்னும் குறளுக்கு கூரேசரே சான்று.
சுமார் 12 வருட காலம் கழித்து ராமானுஜரும், கூரத்தாழ்வாரும் காஞ்சியில் சந்தித்தனர். அப்போது ராமானுஜர் காஞ்சிப் பேரருளாளனிடம் வேண்டிக் கொண்டதால், கூரத்தாழ்வார் இழந்த பார்வையை மீண்டும் பெற்றார்.
ஒருநாள் திருவரங்கனின் திரு முன்பு ஆழ்வார் சென்று,”பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய! கேள்!’ என்னும் திருமழிசைபிரானின் பாசுரத்தைப்பாடி,”அடியேனுக்கு உன் திருவடி ஏகும் பேற்றினைக்கொடு” என்று வேண்டிக்கொண்டார்.
எம்பெருமான் முகம் மலர்ந்து,”பரமபதம் தந்தோம்’ என்றார்.
இராமானுஜர் பதற்றமாய் தன் சீடனிடம்,” கூரேசா நீ ஏன் முந்திக்கொண்டாய்?’ என்று கேட்க அதற்கு கூரேசர்,” எம் குருவான உம்மைப்பிறகுவரவேற்க-எதிர்கொண்டழைக்க- நான் முன்னே செல்லவேண்டாமா?’ என்று சொல்லவும், இராமானுஜர் கண் பனித்துப்போனார்.
கூரத்தாழ்வார் இராமானுஜரிடம் கொண்டிருந்த குருபக்தி, மதுரகவி, நமாழ்வாரிடம் கொண்டிருந்த குருபக்தியோடு ஒப்பிடவேண்டிய இனிய சிந்தனையாகும்.
.நாளை(22-1-2014) தை ஹஸ்தம் ,கூரத்தாழ்வார் பெருமானின் திருநட்சத்திரம்!
(17.1.2009 அமைந்த இவரின் அவதார தினம், இவரது ஆயிரமாவது ஆண்டாக அமைந்தது.)