Social Icons

Pages

Sunday, January 05, 2014

உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்!





ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்!

***********************************************************************************

கோதைக்குக்குழப்பம் அதிகமாகிவிட்டது  நப்பின்னையை  அவ்வளவு  வேண்டிக்கொண்டோம்  முந்தையநாள் பாசுரத்தில் அவள் தானும் எழுந்துவரவில்லை  கண்ணனையும் அனுப்பித்தரவில்லையே இன்று  மறுபடிப்போய்  வேண்டிக்கொள்வோம்... பொங்கும் பரிவு அன்னைக்கு  எப்போதும் உண்டு. பால்போல வெள்ளை உள்ளம்  அவளுக்கு.. தயையின்  இருப்பிடம் அல்லவா தாயார் என்பவள்?

நினைத்தபடி தோழிகளுடன் அந்த இல்லம்போகவும் வாசலிலேயே நப்பின்னை நின்றுகொண்டு இவர்களை வரவேற்றாள்.”நானும் உங்களுடன் வாசலில் நிற்கிறேன்  கண்ணனை நீங்கள்  போற்றிப்  பாடப்போவதைக்கேட்கப்போகிறேன்” என்றாள் .

உள்ளிருந்து  கிருஷ்ணன்,”அசட்டுப்பெண்களே  நான் இந்த ஊரில்  இடையர் ஜாதியைச்சேர்ந்தவன்  எந்தவிதத்தில் உயர்ந்தவன்? மாடு மேய்த்து ஜீவனம் செய்கிறவன்.. எனக்கு என்ன இருக்கிறதென்று இங்கே வந்தீர்கள்  ?” என்றான்  வேண்டுமென்றே குறும்புக்குரலில்.

அதற்கு மறுமொழியாய் வெளியே   நின்ற பெண்கள்,” வியப்பாகத்தான் இருக்கிறது கிருஷ்ணா நீ சொல்வது!  இடைச்சாதிதான் நீ! யசோதயின் இடையில் வாழ்ந்தவன்.. பாண்டவர்க்கும் கௌரவர்க்கும் இடையே  தூதுபோனவன்.. படைத்தல் காத்தல் அழித்தலில் இடையில் உள்ள  பணியைச்செய்யும்  பார்ந்தாமனின் அவதாரம் நீ! உறவைக்காட்டிலும் இடையில் வரும் நட்பை(குசேலர்) பெரிதும் மதிப்பவன்.. இன்னும்  சொல்வேன் கண்ணா  நீ இடைச்சாதிதான்! சுமார் பத்து லட்சம் பசுக்களை வைத்துக்கொண்டிருக்கிற மகாராஜனான நந்தகோபன் குமாரன் நீ அல்லவா? எல்லாம்  செழுமையான பெரிய பசுக்கள். ஒவ்வொரு பசுவையும்  கறக்கவேண்டுமென  கலத்தைக்கொண்டுபோனால் கலம்கண்டதும்  பால் சொரிந்துக்கொட்டி மேலே   எதிர்த்து வழிகிறது பால் எல்லாம். .முந்தையப்பாட்டில்  வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் என்றாள் எங்கள்தோழி  கோதை இங்கேயும் வள்ளல்தான் பசுக்கள்   ஏனென்றால் உன் திருக்கரம் பட்ட பசுக்கள். ‘வேண்டிற்றெல்லாம்  தரும் கோதில் என் வள்ளல் மணிவண்ணன் ‘ என்றாரே உன் அடியார்? நீ வள்ளல்  உன் பசுக்களும் வள்ளல்.கலமிடாவிட்டாலும் மாற்றாதே(இடைவிடாது)  பாலைப்பொழியும் பசுக்கள்!  கோச்செல்வம்  பலகொண்ட நந்தகோபரின் திருமகன் அல்லவோ நீ?   உன்னை நாங்கள்  உணர்ந்தோம்..அறிவுறாய்!  அம்பரமே  தண்ணீரே சோறே என்று தர்மங்களைப்பண்ணும் புண்ணியபலத்திலும்  பசுக்களை காக்கும்  கோரட்சகத்தன்மையாலும் அவன்  உன்னை மகனாக  அடைந்திருக்கிறான். அதனை  அறிந்து .திருப்பள்ளி எழுவாய்“என்றார்கள்.

“அது சரி... என்னை என்னவாக உணர்ந்தீர்கள்  பெண்களே?’ கிருஷ்ணனும் விடாமல் கேட்டான்.

“அப்படிக்கேள்  கண்ணா.. நீ அடியாரைக்காப்பதில்  சிரத்தை உடையவன்..  நாராயணபரா வேதா;  வேதங்கள் நாராயனனையே பிரதிபலிப்பவை.. ‘மறையாய் நால் வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே’  வேத முதல்வனே..என்றெல்லாம்  உன் அடியார் போற்றிஉள்ளார்கள். ‘நம்முடைய நாயகனே நான் அம்றையின் பொருளே’ என  யசோதைப்பிராட்டியும் சொல்வதை ஆயர்குலத்துப்பெண்கள் நாங்களே கேட்டிருக்கிறோம் உனக்குத்  தெரியாததுபோல எங்களைக்கேட்கிறாய்!  நீ வேதம் போற்றும் திண்மையானவன்  அதனால்  ஊற்றமுடையாய் என்கிறாள் கோதை.  மேலும் தொடர்கிறாள்..

 நீ பெரியாய்!  சிறிய இடையன் போல  வேஷம்போட்டு வந்திருக்கிறாய்!!  நீ மாடுகளைமேய்ப்பவன் அல்ல  கண்ணா மாடுகள்  உன்னை மேய்கின்றன. உன்னைக்கண்ணால் பார்த்தே பசி தீர்க்கின்றன.  நீ பெரியாய்!  ஓங்கி உலகளந்தவன் என்று  அன்றே உன்னைப்பாடிவிட்டேன்..  நீ பெரியாய்! அந்த வேதங்களாலும் காணமுடியாத  பெரியவன்!

உலகினில்  தோற்றமாய் நின்ற சுடரே,,,  ‘பாடக மெல்லடியார்  வணங்கப் பன்மணி முத்தொடு இலங்கு சோதி’ என்றாரே ஆழ்வார்  பெரிய திருமொழியில் உன்னை!  நீ  ஜோதி ஸ்வரூபமானவன்!

உலகினில்  அவதாரம் செய்ய  நின்ற ஒளிமயமானவனே!

துயிலெழாய்..திருப்பள்ளி  எழுவாயாக”

கண்ணன்  உள்ளிருந்தபடியே  இவைகளைக்கேட்டு  வேண்டுமென்றே அமைதியாக இருக்கவும் பெண்கள் மேலும் சொல்கிறார்கள்..

“பகைவர்கள் உன்னோடு போரிடுவதற்கு தங்கள் வலிமை இழந்து போய்   எதிர்க்க இயலாமல் உன் வாசலில் வந்து  உன் திருவடிகளை வணங்குவதுப்போல நாங்கள் போற்றி உன்னைப்பாடியபடி வந்து  விட்டோம்  புகழ்ந்து  பாட க்கூடி நிற்கிறோம்  ”

“ஓஹோ  நீங்களும் என் அடியார்களுக்கு  தொல்லைதந்த  பகைவர்கள்போல  என்ன ஆபத்துவருமோ என பயந்துதான் இங்கே வந்தீர்களா?”

“கிருஷ்ண கிருஷ்ண! இதென்ன பேச்சு? இந்தப்பிறவியில் புத்தி தெரிந்த நாள் முதலாய் நாங்கள்  எந்த அடியார்களிடத்தும் அப்படி ஒரு குற்றம் செய்யவில்லை.. உன் விஷயமாகவும் நாங்கள் குற்றம் இழைத்ததில்லை என்பதை நீயே  அறிவாய்”

“அப்படி இருக்க  அவர்களைப்போல  நாங்களும்  வந்தோம் என  எதற்காக சொன்னீர்களாம்?’

”எங்கள்  பாவை நோன்புக்காரியங்கள் சிலருக்குப்பிடிக்காமல் இருக்கலாம்  நாம் நல்லதை நினைத்துசேய்வது எல்லாமும் எல்லாருக்குமா பிடித்துப்போகிறது கண்ணா?  கோதை தலைமையில் நாங்கள்  இப்படிச்செய்வதை சிலர் தடுக்க நினைக்கலாம். அந்தபயம் இருக்கிறதே  அதனால் உன் அண்மையில் நாங்கள் வராமல்போய்விடுவோமா என்ற கவலை உள்ளதே  ..”

“நீங்களாக பயந்துவந்தீர்களே தவிர உங்களுக்கு விரோதிகள் இருப்பதாகத்தெரியவில்லை..”

“இப்படித்தான்  துருவன் தவம் செய்தபோது  மனிதர்கள் யாரும் கெடுதல் செய்யவில்லை எனினும் தேவதைகள் அவன் தவம் கெட தடங்கல் செய்யவில்லையா? விஸ்வாமிதர மகரிஷியின் தவம் கெட எத்தனைவிதமான  முயற்சிகள் நடந்தன? அப்படித்தான்்   எங்கள் நோன்பிற்கும் தடை ஏதும் வருமோ  என்ற அச்சம்..  பாதிக்கிணறு தாண்டிவிட்டோம் பரந்தாமா  இனி உன் அருளால் தான் மீதம்  பூர்த்தியாக வேண்டும் அதற்காக  கோதையின்  தந்தைபோல  உன்னைப்போற்றிப்பாடவந்தோம்...  ஆழ்வார்  பெருமான் பாடினாரே,” பாடோமே? எந்தை பெருமானை பாடி நின்று, ஆடோமே? ஆயிரம் பேரானை பேர் நினைத்து, சூடோமே? சூடும் துழாய் அலங்கல் சூடி நாம் கூடோமே ?கூடக்குறிப்பாகில் நன்னெஞ்சே!’ என்று  .அப்படிப்பாடப்போகிறோம் கண்ணா!”

”அப்படியா   அதை நானும் கேட்டு மகிழ்கிறேனே  பாடுங்கள் பெண்களே!”

கண்ணன்   இப்படிச்சொல்லவும்  “மற்றவை நாளைக்கு” என்றபடி கோதையும் பெண்களும் விடைபெற்றார்கள்.



 

3 comments:

  1. Anonymous12:41 PM

    வணக்கம்

    சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. உங்கள் விளக்கத்தில் காணப்பெற்ற ஆயர் சிருமநிகளுக்கும் கண்ணனுக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம் புதுமையாகவும் இரசனையுடன் இருந்தது.அந்த இடையர் என்பதற்கு சமத்காரமாக கூறிய ஒவ்வொரு சமாதானமும் பிரமாதம்.நல்ல கற்பனா சக்தி.
    பகைவரை தன வலிமையினால் வென்றான் கண்ணன்.இந்த கள்ளம் கபடு அற்ற சிறுமிகளை அந்த மாயக்கண்ணன் .தன்னுடைய கல்யாண குணங்களினாலும்,ரூப லாவண்யத்தாலும் கவர்ந்தான் .
    சிறப்பாக இருந்தது இந்த பதிவு.

    ReplyDelete
  3. மிகச் சிறந்த பகிர்வு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.