மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவு உற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதரு மா போலே நீ பூவைப் பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்து அருளி கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
”கோதை! உன் முகம் என்னம்மா இத்தனை ஒளிவீசி ஜொலிக்கிறது?”
“கதிர்மதியம்போல் முகத்தவனின் கருணையால் அப்பா.. நேத்ர தரிசனம் கிடைத்துவிட்டது நேற்று! அந்த விழிவழி வந்த ஒளி எங்கள் யாவரையும் பிரகாசிக்கவைத்துவிட்டது! எங்கள் சாபமெல்லாம்(துயரமெல்லாம்) நீங்கிவிட்டது!”
“ஆஹா இதைவிடப்பே(வே)றென்ன வேண்டும் அம்மா?”
“ஆம் அப்பா...இன்று அவனை அணுகி ஒன்று வேண்டப்போகிறோம் என்ன என்று கண்டுவந்தபின் சொல்கிறேனே!”
கோதை உற்சாகமாய் கண்ணன் திருமாளிகைக்கு தன் தோழிகளுடன் ஓடிவந்து நின்றாள்.
உள்ளே அமர்ந்திருந்த கிருஷ்ணனும் வெளியே நப்பின்னையோடு ஆயர்குலப்பெண்களும் கோதையும் காத்திருப்பதை அறிந்தவனாய் அடுத்து அவர்களின் கோரிக்கை என்னவாக இருக்குமென்ற எண்ணத்தில் ஆழ்ந்தான்.
“கண்ணா! ஒரு விண்ணப்பம்” என்றார்கள் வெளியே நின்ற பெண்கள்.
“ம்ம் சொல்லுங்கள் நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டு அதன்படிதானே நடக்கிறேன்?”
“ ஆம் கண்ணா ..ஆனாலும் அந்த ‘நடை’யை நாங்கள் காணவேண்டும்’
“ என்ன விளக்குங்கள்?”
“ மழைக்காலத்தில் மலைக்குகை ஒன்றில் தன் பேடையோடு பொருந்திக்கிடந்து உறங்கும் சீர்மையுடைய சிங்கமானது, உணர்ந்தெழுந்து கண்களை கனல்பொறி பறக்கும்படி விழித்து, பரிமளம் நிரம்பிய பிடரி மயிர்கள் எழும்படி, எல்லா பக்கங்களிலும் அசைந்து தேகத்தை உதறி உடல் ஒன்றாகும்படி நிமிர்ந்து கர்ஜனை செய்து வெளிப்புறப்பட்டு வருவதுபோல.......”
“நான் சிங்கமா? நான் நடந்தால் இப்படித்தான் சிங்கநடை இருக்குமெனத்தெரிந்துகொள்வீர்கள் போலப்பேசுகிறீர்களே?”
“நீதான் சிங்கம் சந்தேகமென்ன? எங்கள் கோதையின் தந்தை பெரியாழ்வார் உனக்குத்தொட்டிலிட்டு,”தேவகி சிங்கமே தாலேலோ” என்று அருளி இருக்கிறார். தேவகி சிங்கத்தைப்பாடி பற என்றும் பாடல் உண்டு.. நீதான் அசல் சிங்கம் உன் நடையை நாங்கள் பார்க்கவிரும்புகிறோம்.... பெருமான் அரிபொங்கிக்காட்டும் அழகு என்பது ஆழ்வார் வாக்கு.
ஆகையால் பூவைப்பூ வண்ணா! அதஸீ புஷ்பஸங்காசம்..காயாம்பூ மலர்ப்பிறங்கல் அன்னமால் என்று ஞானிகளும் ஈடுபடும்படியான உன் வண்ணம் !, பெரியாழ்வார் ஆசைப்பட்டதுபோல தளர் நடை நடவானோ என்றெல்லாம் நாங்கள் கேட்கமாட்டோம்.. வேட்டையாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே என்று மேலும் அவர் அருளியதுபோலவும் அந்த வேட்டை நடையும் வேண்டாம்..அது கோப நடை அது தேவை இல்லை.”
அப்படியானால் நான் எப்படித்தான் நடக்க வேண்டும் சொல்லுங்களேன்...’
“அப்படிக்கேள் கண்ணா...உன் கோயில் நின்று -அதாவது உன் இருப்பிடத்திலிருந்து- நாங்கள் வந்துள்ள இந்த இடத்துக்கு நடந்து வந்து அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த சிம்மாசனத்தில் வீற்றிருந்து நாங்கள் வந்த காரியத்தை ஆராய்ந்து அருள் செய்யவேண்டும் தேவாதிதேவனை சென்றுநாம் சேவித்தால் ஆ ஆ என்று ஆராய்ந்து அருள்வான் என முன்னமே தெரிவித்தோம் நீ தேவாதிராஜன் உன் பள்ளிக்கட்டிலிலிருந்து இறங்கி நடந்துவந்து சிம்மாசனம் அமர்ந்து எங்களுக்கு என்ன தேவை என்பதை ஆராய்ந்து விசாரித்து அருளவேண்டும் ஆம்..கண் அழகைக்கண்ட நாங்கள் உன் நடையழகையும் கண்டு கொள்ளவேண்டும் !”
“அன்புக்கட்டளையை நிறைவேற்றாமல்போவேனா எப்படி நடந்துவரவேண்டும் என்று சொல்லிவிடுங்கள் இப்போது..”
“கைமாவின் நடையன்ன மென் நடை என்றார் குலசேகர ஆழ்வார்.. வெகுநாள் ஆகிவிட்டதால் உனக்கு மறந்துவிட்டதா? அன்றி நீ விஸ்வாமித்திர மகரிஷியுடன் மிதிலைக்குச்சென்றதை நினைத்துப்பார்! கார் உலாவும் சீர் குலாவும் மிதிலையில் கன்னிமாடம் தன்னில் சந்திரபிம்ப முகத்தாளான சீதையைப்பார்த்ததும் ஒரு நடை நடந்தாயே அந்த நடையழகை எங்களுக்காட்டவேண்டும்... அன்று உன் மாமனார் ஜனகமகாராஜன் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு,” யானைபோலவும், சிங்கம்போலவும், புலி போலவும் காளைபோலவும் கம்பீரமாக நடந்து வரும் இந்தக்குமாரர்கள் எந்த அரசனின் மைந்தர்கள் ? இவர்கள் நடையழகே என் மனத்தை இழுத்துவிட்டன்” என்றாராம் அந்த நடையழகை எங்களுக்குக்காட்டி இந்த சிம்மாசனத்தில் சேவை சாதிக்கவேண்டும் பிறகு நாங்கள் வந்த காரியம் என்ன என்று விசாரிக்கலாம்!”
கிருஷ்ணன் எழுந்துவிட்டான்.. தான் இருந்த இடத்திலிருந்து அவர்கள் விரும்பியதுபோல அவர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
கரம் குவித்த கோதையும் இதரப்பெண்களும் அவனைப்போற்றிப்பாட சித்தமானார்கள்!
******************************************************************************************************** "வந்த கார்யம்" . "- கண்ணபிரான் பள்ளி கொள்ளும்போது "ஏரார் கோலம் திகழக்கிடந்தாய் கண்டேன் எம்மானே" என்றும், "அம்மாமலர்க்கண் வளர்கின்ற எண்ணன் செய்கேனே" என்றும் ஈடுபட்டு, "அரவணையாய் ஆயரேரே துயிலெழாயே" என்று திருப்பள்ளி உணர்த்தவேண்டுமென்பது ஒரு காரியம். இக்காரியம் நிறைவேறியாயிற்று.
அடுத்த காரியங்கள் -
உள்ளிருந்து புறப்பட்டருளும் அழகு சீரிய சிங்காசனத்து வீற்றிருக்கும் அழகு காணவேண்டும், பல்லாண்டு பாடவேண்டும் என்பன. புறப்பட்டு அருளும் அழகு காணுகையும், வீற்றிருக்கும் அழகு காணுகையுமாகிற காரியங்கள் ஆனவை விண்ணப்பம் இப்பாட்டிலேயே சித்தித்துவிட்டன. பல்லாண்டு பாடுகையாகிற காரியம் அடுத்த பாட்டில் நிறைவேறுகிறது.
ராமாயணத்தில் பெருமாளுடைய புறப்பாட்டின் அழகை "பர்வதாதிவ நிஷ்க்ரம்ய சிம்ஹோ கிரி குஹாசயஹா" என்று வால்மீகி வர்ணித்தார். அதையே ஆண்டாள் இப்பாட்டில் நான்கு அடிகளாலே விவரித்து உரைத்தாள்-
நல்லதொரு காட்சிச்சித்திரபாசுரம் இது!
அடுத்த காரியங்கள் -
உள்ளிருந்து புறப்பட்டருளும் அழகு சீரிய சிங்காசனத்து வீற்றிருக்கும் அழகு காணவேண்டும், பல்லாண்டு பாடவேண்டும் என்பன. புறப்பட்டு அருளும் அழகு காணுகையும், வீற்றிருக்கும் அழகு காணுகையுமாகிற காரியங்கள் ஆனவை விண்ணப்பம் இப்பாட்டிலேயே சித்தித்துவிட்டன. பல்லாண்டு பாடுகையாகிற காரியம் அடுத்த பாட்டில் நிறைவேறுகிறது.
ராமாயணத்தில் பெருமாளுடைய புறப்பாட்டின் அழகை "பர்வதாதிவ நிஷ்க்ரம்ய சிம்ஹோ கிரி குஹாசயஹா" என்று வால்மீகி வர்ணித்தார். அதையே ஆண்டாள் இப்பாட்டில் நான்கு அடிகளாலே விவரித்து உரைத்தாள்-
நல்லதொரு காட்சிச்சித்திரபாசுரம் இது!
Tweet | ||||
மிகவும் அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
This comment has been removed by the author.
ReplyDeleteஆண்டாள் லக்ஷ்மி நரசிம்மரை மனதில் கொண்டு இந்த பாசுரத்தை எழுதியதாக சொல்வதுண்டு.நடை என்றாலே சிங்க நடைதான்.. இதற்கு பக்க பலமாக இதையும் சொல்வார்கள்.இந்த பாசுரம் 23 வது.கூட்டினால் 5 வரும்.5வது நக்ஷத்திரம் மிருகசீர்ஷம்.மிருகத்தின் தலையும் மனித உடலும் கொண்டது.ஹயக்ரீவர் வராஹ மூர்த்தி இருந்தாலும் இந்த பாசுரம் நரசிம்மரை குறிப்பது...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅருமையான தொகுப்பு தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நேத்ர தரிசனம் கிடைத்துவிட்டது நேற்று! அந்த விழிவழி வந்த ஒளி எங்கள் யாவரையும் பிரகாசிக்கவைத்துவிட்டது! எங்கள் சாபமெல்லாம்(துயரமெல்லாம்) நீங்கிவிட்டது!”
ReplyDeleteஅருமையான காட்சி சித்திரம் ..பாராட்டுக்கள்..!