Social Icons

Pages

Thursday, January 09, 2014

ஒருத்தி மகனாய்ப் பிறந்து.......

ஒருத்தி மகனாய்ப் பிறந்து* ஓர் இரவில்-

ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்*

தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த*

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்*

நெருப்பென்ன நின்ற நெடுமாலே.,* உன்னை-

அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்*

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி*

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

****************************************************************************






வடிக்கொள் அஞ்சன மெழுதுசெம்  மலர்க்கண் மருவி மேலினி தொன்றினை நோக்கி
முடக்கிச் சேவடி மலர்ச்சிறு கருந்தாள்  பொலியு நீர்முகில் குழவியே போல*
அடக்கி யாரச்செஞ் சிறுவிர லனைத்தும் அங்கை யோடணைந் தானையிற் கிடந்த
கிடக்கை கண்டிடப் பெற்றில னந்தோ!  கேசவா! கெடுவேன்  கெடுவேனே.                   
 

"என்ன பாடல் அப்பா  இது?”  என்றாள்  கோதை  தன் தந்தை பெரியாழ்வார்  பாடி முடித்ததும்.. 
.
 
”இதை  குலசேகரஆழ்வார் ’  தேவகிபுலம்பல் ’என்று    பாடி இருக்கிறார் கோதை...
குழலினிது யாழினிது  என்பார்கள்  .  குழந்தையை எடுத்துக்கொஞ்சாமல் அதன் மழலையை அனுபவிக்காமல்  எந்தத்தாயினால்  இருக்கமுடியும்? குழந்தையை  தூக்கும்போது இடைவலித்தாலும் இறக்கியதும் மனம் வலிப்பதை  அனுபவிக்கும்   அன்னையரே அதிகம்!”




“தேவகிக்கு அந்த பாக்கியம் இல்லாமல்போக  யசோதை அதைப்பெற்றதற்கு அவள் என்ன தவம் செய்தாளோ எங்கும் நிறைபரபிரும்மம்’அம்மா’ என்றழைக்க?”




“ஆமாம்  கோதை..
 
’மருவு நின்திரு நெற்றியில் சுட்டி அசைத ரமணி வாயிடை முத்தம்*
தருத லும்,உன்றன் தாதையைப் போலும் வடிவு கண்டுகொண் டுள்ளமுள் குளிர*
விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து  வெகுளி யாய்நின்று ரைக்கும்மவ் வுரையும்*
திருவி லேனொன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதைபெற் றாளே ’
 


என்று யசோதைக்கு கிடைத்த  பேற்றினை  நினைக்கிறாள் தேவகி..இருவருமே உயர்ந்த  பெண்கள்தான். ஆயிரத்தில் ஒருத்தி தேவகி !ஆயிரத்தில் ஒருத்தி யசோதை! ”


“ஆஹா! அந்த தேவகியை இன்று நினைத்துப்பாடவேண்டும் அப்பா”


“கண்டிப்பாக அவளைப்போற்று கோதை கிருஷ்ணன் மகிழ்வான். தேவகிபரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்! தேவகி புத்ராய கிருஷ்ணாய  என்கிறது வேதமும்..  நீயும்  உன் தோழிகளும் அவன் திருவடி சேவைகண்ட மகிழ்ச்சியில் இருக்கிறீர்கள் அவனிடம் இனி வேண்டியதைப்பெற  விண்ணப்பம் செய்யுங்கள்”


தந்தைக்கு தலையசைத்துவிட்டு   கிருஷ்ணனின் இருப்பிடம் வந்தாள்.


கிருஷ்ணன்  கேட்டான்..”  என்ன பெண்களே  நடையழகைப்பார்த்தீர்கள் ஆனால் என்னை நாடி வந்த காரணம்  என்ன என்று சொல்லவே இல்லையே?


“ கோதை  அதை சொல்வாள் கண்ணா..”


கோதை பாட இருப்பதை கிருஷ்ணனுடன் அனைவரும்  ஆவலுடன் கேட்கத்தயாரானார்கள்..


ஒருத்திமகனாய்ப்பிறந்து...



தேவகி என்னும்  ஆயிரத்தில் (லட்சத்தில் கோடியில் ) ஒருத்திக்கு மகனாகப்பிறந்து...(தோன்றி என்று சொல்லவில்லை இங்கு...கர்ப்பவாசத்தில் பிறந்தவன் ஆகவே பிறந்து)  ஆயர்குலத்தில் தோன்றிய அணிவிளக்கை, தோற்றமாய் நின்ற   என்று சொன்னதில் திருப்தி இல்லை கோதைக்கு ஆகவே
பிறந்து  என்கிறாள்.


ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர......


பிறந்த அந்த இரவிலேயே  ஆயிரத்தில்(லட்சத்தில்கோடியில்)  ஒருத்திக்கு மகனாய் வளர்ந்து...

கிருஷ்ணன் பகலில்பிறப்பதற்கென்ன? இரவில்தானே  திருடமுடியும்?ஒளித்துவைக்க உன்னதப்பொழுது இருட்டு அல்லவா?நந்தகோகுலத்தில் யசோதை வயிற்றில்  பிறந்த பெண்குழந்தையை மதுராவில்  உள்ள தேவகியின்  இடத்தில் கொண்டுவிடுவது  திருட்டு அல்லவா? மேலும் அங்கிருந்து கண்ணனை இங்கே கொண்டுவந்து விட்டதும் அதே தானே? இதெல்லாம் பகலில் முடியுமா  ஊர் மக்களுக்கு தெரிந்து  அது கம்சன் காதுக்கும் எட்டிவிடாதா? ஆகவே இரவில் பிறந்தான் கண்ணன்/  இரவிலேயே  யசோதையிடம் போய்ச்சேர்ந்தான்.வளர்ந்தான்.




தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த*

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்*

நெருப்பென்ன நின்ற நெடுமாலே.,







அப்படி ஒளிந்து வளர்வதையும் பொறுக்கமாட்டாமல்  கண்ணனைக்கொல்லவேண்டும் என்ற தீய எண்ணம் கொண்ட கம்சன்
கண்ணன் ஆய்ப்பாடியில் வளர்கிறான் என்ற செய்தி அறிந்தவுடன், கம்சன் தன் உடம்பையே தான் "தரிக்க முடியாமல்" உடலும் மனதும் தகிக்க, நெருப்பில் இட்ட புழுவாக துடித்ததைத் தான் ஆண்டாள் நயமாக ஒரே வார்த்தையில் "தரிக்கிலானாகி" என்கிறாள்!




நெருப்பு போல கம்சன் வயிற்றில் கண்ணன்  நிற்பதாக பொருள்  இங்கில்லை  கம்சன் வயிற்றில் கண்ணன் காலடி படும் அளவு அவன் புண்ணியம் செய்தவனா என்ன?  கம்சனின் வயிற்றில் பயம் என்னும் அக்கினியை  கொளுத்தினான் . நெருப்பு என்னும்படி நின்ற நெடுமால்( சர்வாதிகனே! அன்பர்களிடம் பேரன்பு கொண்டவன் )


“நல்லது...இன்னமும் நீங்கள் வேண்டுவதென்ன  என சொல்லவில்லையே?”


கோதை தொடர்ந்தாள்..






  உன்னை அருத்தித்துவந்தோம்...


எங்களுக்கு வேண்டியவைகளை யாசித்துக்கொண்டு வந்தோம்...


“கேட்டதும் கொடுப்பவன் கண்ணன் என்கிறீர்கள் அல்லவா?”


“ஆம்  .. நீ  பெரிய பெரிய அரண்மனை கேட்டால் கொடுப்பாய்  ஐஸ்வர்யம் அளிப்பாய் ஆடை ஆபரணம் கொடுப்பாய்/.. இன்னும் எல்லாம் கொடுப்பாய்..நல்லன  எல்லாம் தரும்  என்ற ஆழ்வார் மற்றும் தந்திடும்  என்றாரே!  ஆனால் இச்சுவைதவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவைபெறினும் வேண்டேன் என்றது போல எங்களுக்கு அவையெல்லாம் வேண்டாம்..”


“வேறென்ன தான் வேண்டும்  ?”


கோதை  இப்போது தன் தோழியரையும் குரல்கொடுக்க  சைகை காட்டினாள்
அனைவருமாக,
’கிருஷ்ணா  கேட்கலாமா?”  என்றார்கள்


 பயப்படாதீர்கள்  எதைவேண்டுமனலும் கேளுங்கள்




உன்னை அருத்தித்துவந்தோம் பறை தருதியாகில்*

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி*

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்



  உன்னிடத்தில் யாசிப்பதே பிசகு  நீயாக  கொடுக்கவேண்டும் சிறுமியர் நாங்கள்  உன்னைத்தான் நாங்கள்பலனாக  தரகேட்கிறோம்






கிருஷ்ணன்  அவர்களின்சாமர்த்தியமான் பேச்சில்  மனம் மகிழ்ந்தான்
 உன்னையே எங்களுக்குக்கொடுக்கவேண்டுமென்கிறார்கள்!
 “ஸ்த்ரீணாம் த்விகுண ஆஹார: ததாபுத்திஸ் ததாபலம் என்பதுபோல  பெண்களுக்கு ஆண்களை விட  உணவும் இரண்டு பங்கு புத்தியும் இரண்டு பங்கு !


ம்ம் பெண்களே  இவ்வளவுபேர் கூடிவந்துஎன்னயே கேட்கிறீர்களே..
 பறைகொள்வான் இன்றுயாம்வந்தோம் என்கிறீர்கள் இவற்றில் எது உங்கள் உள்ளங்களில் ஓடுகிறது?


 எங்களுக்குப்  பறை ஒன்று உண்டு ’தருதியாகில்’ அதாவ்து   உன் திரு உள்ளமாகில்-  பிராட்டியும் விரும்பும் செல்வத்தையும்  உனக்கு சேவகமும் செய்து  உன்னைப்பிரிந்துவாடும் வருத்தமும் நீங்கி  மகிழ்ச்சிஅடைந்துவாழ்வோம்!


நீ ஸ்ரீ;ஸ்ரீ; திருவுக்கும் திருவாகிய செல்வா !


திருத்தக்க செல்வமும்சேவகமும்யாம்ம்பாடி ...  கண்ணனிடமிருந்து ஒன்றைப் பெறுவதைக்காட்டிலும் கண்ணனையே அடைந்துவிட அவனையே யாசகமாய்க்கேட்போம். இதுவே எங்கள் நோக்கம்


இப்படி  கோதையும் பெண்களும் வேண்டிக்கொள்ளவும் கண்ணன் கண்களைத்திறந்து இசைவு அளிக்கிறான்.















3 comments:

  1. /// குழந்தையை இறக்கியதும் மனம் வலிப்பதை அனுபவிக்கும் அன்னையரே அதிகம்... /// அருமை... உண்மை...

    அருமையான விளக்கத்துடன் முடிவில் சிறப்பான நோக்கம்... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பிறந்தது ஓரிடம். வளர்ந்தது வேறிடம். என்கிற விஷயத்தை கண்ணதாசன் ஏதோ ஒரு படத்திற்காக எழுதிய பாடல். இது.கண்ணனின்
    அவதாரத்தை ஒட்டியது.

    பூவாகி காயாகிக் கனிந்த மரம் ஒன்று
    பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று
    காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா
    கனிந்து விட்ட சின்ன மரம் கண்ணீரில் ஆடுதடா

    வளர்க்கும் அன்னையின் வாழ்வில் தேனாறு என்கிறார். தேவகிக்கு கிடைக்காத எங்கேயோ உள்ள யசோதைக்கு கண்ணனை சீராட்டி வளர்க்கும் பாக்கியம் கிடைத்தது..அதைத்தான் நீங்களும் என்ன தவம் செய்தாயோ என்று சொன்னீர்கள்.

    அருமையான பாசுரம்.அழகான விளக்கம்.நன்றி.

    ReplyDelete
  3. திருத்தக்க செல்வமும்சேவகமும்யாம்ம்பாடி ...
    கண்ணனிடமிருந்து ஒன்றைப் பெறுவதைக்காட்டிலும் கண்ணனையே அடைந்துவிட அவனையே யாசகமாய்க்கேட்போம்.

    வியக்கவைக்கும் வேண்டுதலை சமர்ப்பித்த பாவையரின் நுண்ணுணர்வு பாராட்டத்தக்கது..பகிர்வுக்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.