மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்!!
மைத்தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனைபோது துயிலெழ வொட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.
தேட்டருந்திறல் தேனினைத் தென்னரங்கனை – திருமாதுவாழ்
வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால்கொள் சிந்தையராய் -
ஆட்டமேவியலந்தழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள்தாம்
ஈட்டம் கண்டிடக்கூடுமேல் அதுகாணும் கண் பயனாவதே
குலசேகரப்பெருமானின் பாசுரத்தை பாடிய பெரியாழ்வார்,”பார்த்தாயா கோதை, நம்முடைய முயற்சியினால் தேடி அடைவதற்கு மிகவும் அருமையானவனும், தன்னை அடைந்தவர்களக்கு மிகுந்த பலனைக் கொடுப்பவனும், தேன் போன்று இனிமையும் குணமும் உள்ளவனும், திருவரங்கத்தில் வாசம் செய்பவனும், பெரியபிராட்டியார் பிரியாமல் இருப்பதற்கு உகந்ததாய், எப்போதும் வாடாத மணம் பொருந்திய மாலையினைக் கொண்டுள்ள திருமார்பினையுடைய பெரியபெருமாளை – பல்லாண்டு பாடி, அவன் மிகுதியான அன்பு கொண்ட மனதினையுடையவராய், அதனால் ஆடுவதில் ஈடுபட்டு, அந்த ஆட்டத்தினால் சோர்வு ஏற்பட்டு, அதனை நீக்குவதற்காக அவனை, அவன் நாமங்களைச் சொல்லி அழைத்து மெய்மறந்து நிற்கும் அவனுடைய உண்மையான அடியார்கள் கூட்டத்தினைக் காணும் வாய்ப்பு கிட்டினால், நமது கண்கள் அடைந்த பேறு அதுவே ஆகும் ;என்கிறாரே இதில் முதல் வரியைக்கவனி... தேட்டருந்திறல் தேனாம் அவன்! நமது விடா முயற்சியால் அவனை அடையலாம் எனக்குறிப்புதருகிறார் குலசேகரர்! திருமாது வாழ் ... ஆம் திருமகள் வசிக்கும் இடம் அவன் திருமார்பு!”
பெரியாழ்வார் மனம் மகிழசொல்லவும் கோதை,” ஆம் அப்பா .. இன்று எப்படியாவது அவனிடம் துயில் கலைந்து திருவாய் திறக்கப்பிரார்த்தனை செய்யப்போகிறோம் .. கண்பெற்ற பயனைக்கடைசி பாசுரத்திலாவது அடைந்துவிட மாட்டோமா என்ன?” என்றாள்.
“உன் மன உறுதியும் பக்தியும் எண்ணத்தை நிறைவேற்றும் அம்மா சென்றுவா”
கோதை தோழிகளுடன் அந்தவீட்டுக்கு வந்து நின்றாள்//உள்ளே விளக்கெரிவது தெரிகிறது..குத்துவிளக்கு ஐந்து முகங்களைக்கொண்டது
(பரமாத்ம தோற்றம் என்கிற "மிக்க இறைநிலை"ஜீவாத்ம தோற்றம் என்கிற "உயிர்நிலை"
மோட்சம் கை கூடுவதற்கு உதவும் வழிவகையான "தக்க நெறிகள்"
பரமன் திருவடியைப் பற்ற முடியாமல் தடுக்கும் இடையூறுகளாம் "ஊழ்வினைகள்"
பரமாத்ம அனுபவம் என்கிற "வாழ்வினை" (முக்தி அல்லது மோட்சம்) இப்படி உரை சொல்கிறது
நல்ல பிரகாசமாக இருக்கிறது.(இவைகள் மனத்தில் ஒளிவிட்டு இருக்கவேண்டுமாம்)
அங்கே கோட்டுக்கட்டில் போடப்பட்டுள்ளது அதாவது யானை தந்தத்தில் செய்யப்பட்ட கட்டிலாம்.
மாணிக்கங்கட்டி வயிரமிடைக்கட்டி ஆனிப்பொன்னால் செய்த வண்ணச்சிறுதொட்டில் கட்டியவர் என் தந்தையாக்கும்!
கோதைக்கு பெருமை பிடிபடவில்லை..
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி .... மென்மை குள்ர்ச்சி வாசனை அழகு வெண்மை என்னும் ஐந்துகுணங்கள் கொண்ட படுக்கை! மெத்தென்று அதாவது மென்மையாக இருக்கிறதாம்.. அதில் ஏறி..
கொத்தலர்பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்.....
கொத்துகொத்தாய் மலர்களை சூடிய குழலுடைய நப்பின்னையின் திருமார்பில்...( முதல்பாட்டில் நப்பின்னையை ஆயர்பாடிபெண்கள் கதவுதிறக்கவேண்டவும் அவள் சட்டென எழுந்திருக்க கண்ணன் அவளை அழுத்திப்பிடித்து எழவிடாமல் செய்யும் நிலை இது.”சற்றுநேரம் பொறு நப்பின்னை..வெளியே அவர்களின் கெஞ்சு(கொஞ்சு) மொழியை இன்னும் நான் கேட்கவேண்டும்...அதற்குள் கதவைத்திறக்கவேண்டாம். சற்று விளையாட்டுப்பார்ப்போம் இரு” என்கிறான்.
“என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்? நமது குழந்தைகள் அல்லவா இவர்கள்? அவர்கள் மீது கோபம் கொள்ள வேண்டாம்”, என்று தடுக்கிறாள்.
இதுவே புருஷகாரத்தின் (புருஷகாரம் = சிபாரிசு செய்தல்) அடிப்படையாகும்.
‘தன்னடியார்கள் திறத்தகத்துத்தாமரையாளாகிலும்
சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்
பெருமான்”அது அப்படி இல்லை நப்பின்னை” என சொல்கிறார்
இந்த உலகில் உள்ள அடியார்கள் ஏதேனும் தவறு இழைத்தவுடன், அதனை பெரியபிராட்டியே பகவானிடம் சுட்டிக் காண்பித்தாலும், அதனைப் பகவான் மறுத்து, மன்னித்துவிடுவான்.
வைத்துக்கிடந்த மலர்மார்பா..... அவள் திருமார்பு கருணை நிறைந்தது ஆகவே கைவளைகுலுங்க எழுந்து வர இருந்தவளை அடக்கி அங்கே உன் மாலை சூடிய மார்பினை வைத்திக்கிடக்கிறாய்.
வாய் திறவாய்.... உன் திருவாய் திறக்கலாமே? அன்னையை அடக்கி அங்கே அடங்கிக்கிடப்பது உன் உடல் அனைத்தும் எனினும் வாய் திறந்து எங்களை அழைக்கலாகாதா?
"தொண்டரோர்க்கருளிச் சோதிவாய் திறந்து..’என்கிறாரே நம்மாழ்வாரும்.. ஒருவார்த்தை நீ சொன்னால்போதுமே உள்ளம் குளீர்ந்துவிடுமே கண்ணா! கதவு திறக்காவிட்டால்போகிறது நீ உன் வாயைத்திறக்கக்கூடாதா? இருவரின் நிலை கண்டுதானே நான் எழுந்திராய் என்னாமல் வாய் திறவாய் என்கிறேன் அதுகூட முடியாதா உன்னால்?
ஓஹோ நீ பேசமாட்டாயோ சரி நப்பின்னை அன்னையையே அழைத்துக்கொள்கிறோம்,,போ.
கோதைக்கு சின்னக்கோபம் வந்தது..
மைத்தடங்கண்ணினாய்! என்றாள்
நன்கு மை எழுதிய பெரிய கன் உடையவளே!
தடங்கண்ணாம்! எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருப்பதால் பரந்த கண்களோ?இன்னமும் கண்ணன் எழுந்து கொள்ளவிடவில்லை என்பதால் வெறிக்கும் கண்ணோ?அன்றி அருகில் மைவண்ணன் இருப்பதால் கண்ணனின்சாயலே மையானதோ? அருமைதான்! உன் கண்ணுக்கு மையாய் விளங்கும் அந்த திருமேனியை எங்கள் கண்ணிலும் இடுவாயாக!
உன் மணாளனை, எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்? = உன் கணவனை, தூக்கத்தில் இருந்து எழவே விட மாட்டாயா நீயே பார் அம்மா
எத்தனை ஏலும், பிரிவு ஆற்றகு இல்லாயால்? = எங்களை நீ எத்தனை ஏற்றுக் கொண்டாலும், அவன் பிரிவினையும் ஆற்ற மாட்டாய் இல்லை போலும்
அதான் அவன் மார்பில் நீங்காது இருக்கிறாயே அகலகில்லேன் இறையும் என்று கணமும் பிரியாத நிலை அப்புறம் என்ன? அவனை அனுப்பு அவனோடு உன்னையும் தரிசிப்போம் அல்லவா?
தத்துவம் அன்று! = இது் தத்துவமே அன்று! உன் சுயரூபத்துக்குசேராததுநாங்கள் சொல்வது உண்மையே
தகவு அன்று.. இது உன் சுபாவத்திற்கு சேராதது நீ புருஷகார பூதை அல்லவா! உன்னைப் பற்றித் தான் அவனைப் பற்றணும்!
ததுவன்று தகவு என்னும் வாசகமே இந்தப்பாசுரத்தின் சிகர அமைப்பாகும். உபநிஷத்துவாக்கியம் போல அமைக்கப்பட்டுவிட்டதாக சான்றோர் கூறுகின்றனர். உலக மாதாவின் தனிப்பெரும் கருணையே அவள் குணம் அதாவது தகவு. தந்தையின் அருளுக்கு மக்களை இலக்காக்குவது அவளது ஸ்வரூபம் அதாவது தத்துவம்
ஆண்டாள் உபநிஷத்து என்பார் வேதாந்த தேசிகர் தனது பிரபந்த சாரம் என்னும் நூலில் திருப்பாவையைப்பற்றி...
Tweet | ||||
அடியார்கள் என்றால் பகவான் மறுத்து, மன்னித்து விடுவார்...
ReplyDeleteவிளக்கம் மிகவும் அருமை...
தொடர வாழ்த்துக்கள்...
அருமையான விளக்கம், பகிர்விற்கு நன்றி.
ReplyDelete//உன்னைப் பற்றித் தான் அவனைப் பற்றணும்! //
ReplyDeletejust brilliant.
இந்த வரிக்கு விளக்கம் தருவதில் வைஷ்ணவ சம்பிரதாயத்தில்,
வடகலை சம்ப்ரதாயத்திர்க்கும் தென்கலை சம்ப்ரதாயத்திற்கும்
ஏதாவது வித்தியாசம் அதாவது
ஐ மீன்
பெருமாளை ஆஸ்ர்யப்பதில்.
நேரடியாக சரணாகதி,
தாயார் மூலமாகத் தான் சரணாகதி அடைய இயலும்
என்பதில்,
கருத்து பேதங்கள் உள்ளதா ?
சுப்பு தாத்தா.
menakasury.blogspot.com
சுப்பத்தாத்தாக்கு நமஸ்காரம் நன்றி வருகைக்கு. சரணாகதி பற்றி தனக்கள் கேட்டதை பெரியவர்கள் யாரிடமாவது விஜாரித்து சொல்கிறேன் கருத்து பேதம் இருக்க வாய்ப்ப்ய் இருக்கலாம்...தெரியவில்லை ..நன்றி ஓர் ஆய்வு செய்ய வைத்தமைக்குட் கருத்திட்ட டிடி கும்மாச்சி விஜய்பதிக்கும் மிக்க நன்றி
Deleteவிரிவான விளக்கங்கள். அருமையான நடை. வாழ்த்துக்கள்
ReplyDelete