Social Icons

Pages

Monday, January 13, 2014

உனக்கே நாம் ஆட்செய்வோம்...







சிற்றஞ் சிறுகாலை வந்துஉன்னைச் சேவித்துஉன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

****************************************************************





“கோதை வழக்கத்தைவிடவும் இன்று சீக்கிரமாகக்கிளம்புகிறாய்..பனிகொட்டிக்கொண்டிருக்கிறது.

அப்பா  மார்கழி இன்றோடு முடிகிறதப்பா... கண்ணனிடம் எங்களது’பறை’யைப்பெற விரைகிறோம்..

அதென்ன  கோதை பறை பறை எனப்பலமுறை சொல்லிவிட்டாய் உண்மையில் என்ன அது என்று சொல்லேன்

அப்பா..இறைவா நீ  தாராய் பறை   என்று அவனிடம்  கேட்டிருக்கேன் அவன் அறிவான் அது என்னவென்று கிடைத்ததும் வந்து சொல்கிறேனே...

நம்மாழ்வார் சொல்வார்,’எம்மாவீட்டு’என ஆரம்பிக்கும் பாசுரத்தில்..’தனக்கேயாக எனைக்கொள்ளும் ‘ என்று..அப்படி ஒரு உன்னத பாகவத கைங்கர்யம் அவர்  வார்த்தைகளில்  மின்னும். அதிருக்கட்டும்  கோதை  ...

மார்கழித்திங்கள் என்றாய். மதிநிறைந்த (பக்ஷம்)என்றாய்  நன்னாள் என நாளைக்குறிப்பிட்டாய்
இப்போது இந்தக்காலையில் மாலைக் காணச்செல்லும் நீ  சிற்றஞ்சிறுகாலை என  வேளையைக்குறிப்பிடப்போகிறாயோ? அப்படி ஒரு பதம் உண்டு தமிழில் ..ஆம் அம்மா..வெட்ட வெளிச்சம் என்பதில்லையா அதுபோலத்தான்..”

புரிகிறது அப்பா..பூவண்ணனைக்கண்டுவந்து  உங்களிடம் விவரம் சொல்கிறேன்.

கோதை தோழியர் படை சூழ  கண்ணன் திருமாளிகைக்குவந்தாள்.

“பிரும்ம முகூர்த்தவேளையில்  யார் அது வாசலில்?” கண்ணன்  வினவினான்

“”சிற்றஞ்சிறுகாலை வந்துன்னை சேவித்து...”

காலை சிறுகாலை  சிற்றஞ்சிறுகாலை.. இருளைப்போக்கி ஒளியூட்டும் கதிரவன் நீயே என்பதால்  உனைத்தேடி இந்தக்காலையில் வந்தோம்...வந்து உன்னை சேவித்து நிற்கிறோம்”

“ஏன் நிற்கிறீர்கள்?  தயக்கமென்ன?அருகில் வந்து உங்கள் தேவைகளை சொல்லலாமே?”--கண்ணன்.

“அதில்லை... முன் அவதாரத்தில்  விபீஷணன்  அண்ணல்  அருகே வரையலாமல் சங்கையால் நம் அடியார்களால் தடை  ஏற்பட அப்படியே  ஆகாயத்தில் நின்றான்..  அதுபோல  உன்னோடு  உரையாட விடாமல்  ஏதும் தடைகல் வருமோ என்ற் அச்சத்தில்..”

“ விபீஷணன் அரக்கர் கூட்டத்தைசேர்ந்தவன்  அதனால் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது ஆனால் நீங்கள் அப்படி இல்லையே? சொல்லுங்கள்..”

கோதையுடன்  பெண்கள்  அவன் திருவடிக்குக்கீழ்  உரிமையுடன் அமர்ந்துகொண்டார்கள்.

:கிருஷ்ணா!உன்  திருமுக தரிசனமே மனத்தை நிறைத்துவிட்டது..  உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!பொன்போன்ற உயர்ந்த அழகிய  தாமரைபோல் மிருதுவான சுகந்தமான  உன் திருவடியினை..

புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே  என்னும் நம்மாழ்வாரைப்போல...

“இப்போது தான் என்னை அடைந்துவிட்டீர்களே அருகே நின்று அனுபவிக்கிறீர்கள்  பிறகென்ன மறுபடி  சரணம் என திருவடியைக்குறிப்பிடுகிறீர்கள்?”

“கண்ணா! இது அழிந்துவிடக்கூடாதே என்கிற கவலையில்தான்.. எங்களுக்கு கட்டாயம் மரணம் உண்டு உனக்கும் அவதார மறைவு உண்டு.. அதனால் இந்த அனுபவம்  சிலகாலம்தானே இருக்கும்?   போற்றும் பொருள் கேளாய்!  நீ கேட்டாய்! நாங்கள் பதில் சொல்கிறோம்.வேடிக்கைபார்க்காமல்  நாங்கள்  சொல்வதைக்கேளேன்..

போற்றும் பொருள் கேளாய்..

“சொல்லுங்கள்”

“பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து ..மாடுகளை மேய்த்து அதில் வரும் வரும்படியில் உண்ணும் இடைக்குலத்தில் பிறந்து..
 நீ  இங்கு வந்து பிறந்தது யாருக்காக என அறிவாயா?

“அதையும் நீங்களே சொல்லுங்களேன்...”

நீ குற்றேவல்( கைங்கர்யம்) எங்களைக்கொள்ளாமல்போகாது..

உனக்கு சேவகம் செய்யாமல் எங்களால் இருக்கவும் முடியாது அதைப்பெறாமலிருக்க உன்னாலும் முடியாது. நீ மனமிரங்கி எங்களின் கைங்கர்யத்தைப்பெற்றுக்கொள்வதே எங்கள் பிறவிப்பயனாகும்

“கோதையின் அப்பா அன்றே சொல்லிவிட்டாரே”வளைத்து வைத்தேன் உன்னைப் போகலொட்டேன்’ என்று... சரி..நான்  உங்களின் கைங்கர்யங்களை ஏற்கிறேன்.. உங்களுக்கு வேண்டிய பறைகளைத்தருகிறேன் பெற்று செல்லுங்கள்..”

“இந்தப்பறைக்காக  வந்தவர்களோ நாங்கள்? “
இற்றைப்பறைகொள்வாய் ...அன்றுகாண் கோவிந்தா..

அமிர்தம் இருக்க  நீரைவிரும்புவோமோ?

”அடேயப்பா கோபமாய் வருகிறதோ பெண்களே?’

“இல்லையோ பின்னே? நாங்கள் என்ன பூமியை எடுத்து நோக்கிய வராஹனை நினைக்கிறோமா அன்றி ஓங்கி உலகளந்த  வாமனனை நினைக்கிறோமா இன்னும் நீ எடுத்த அவவதாரப்பெயர்களை குறிக்கிறோமா  கோவிந்தா  என்கிறோம் ஐயா! பசுக்களைத்தேடிவந்தவன் நீ.   ஆயர்பாடிப்பெண்கள் நாங்கள்..குற்றேவல் எங்களைக்கொள்ளாமல் போகாது  “

“சரி சரி  நீங்கள் விரும்பும் குற்றேவல் தான்என்ன?”

“எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும்... ஆமாம் இன்றையப்பொழுதோடு போகாது....போகக்கூடாது.. உனக்கு தொண்டு செய்யவேண்டும்.. ‘சன்மம் பலப்பல செய்து’என்பார் ஆழ்வார் பெருமான்.

உந்தன்னோடு..நீ பரமபதம் போனால் அங்கேயும் வருவோம்.. நீ அவதாரம் எடுக்குமிடமெல்லாம் உன் உறவாய்  தொடர்வோம்
உற்றோமேயாவோம்...  இளையபெருமானைப்போலே உன் கூடவே இருக்கவேண்டும்.  ஏழேழ்பிறவிக்கும்..ம்ம்.. நினைவிருக்கட்டும்.

உனக்கே நாம் ஆட்செய்வோம்... ‘தனக்கேயாக எனக்கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே’ என்ற நம்மாழ்வாரைப்போலே  உனக்கு சேவகம் செய்வதில்  களிப்பு கொள்வோம்.

“ஆமாம்  கோதை உன் தந்தையும் சொல்வார்,,”உறுவதாவது-நீள் குடத்தானுக்கு ஆட்செய்வதே’ என்று அவர்மகளாயிற்றே அப்படியே வார்த்தைகளைப்போடுகிறாய் அதுவும்  கூட்டம் சேர்ந்து”

“ கூடுவதே கோவிந்தா என்பதற்குதானே அதிருக்கட்டும்...
உனக்கே நாம்  ஆட்செய்ய இருப்பதால் மற்றை நம் காமங்கள் மாற்று கண்ணா. உன்னை உனக்கான  தொண்டினைமட்டும் செய்துகொண்டு   நாங்கள் இருக்கும்படியாக நீ எங்களை மாற்று.  அறியாச்சிறுமிகள் எங்கள்  ஆசைகளை  நாங்களாக மாற்றிக்கொள்ள  அறிவுமில்லை போதிய வலிமையும் இல்லை.. அவற்றை நீயேதான் மாற்றி அருளவேண்டும்..”

************************


, பறை’ என்று சொல்லிக்கொண்டு வந்தவர்கள், அந்தப் பறை வியாஜம்தான் என்பதைத் தெளிவாக முடிவுகட்டிப் பேசுகிறார்கள் அவன்  அன்பினால மலரும் பணிதான் தங்களுடைய வேண்டுகோளின் உயிர்நிலை என்கிறார்கள்.
திருப்பாவையின் தனிப்பெரு நோக்கம் இந்த உயிர்நிலைப் பாட்டில் வெளியிடப் படுகிறது

...



++


1 comment:

  1. பாட்டின் விளக்கம் மிகவும் அருமை... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.