Social Icons

Pages

Thursday, March 05, 2015

இன்று போய் போருக்கு நாளை வா!




கம்பராமாயணத்தில் யுத்தகாண்டம்.

போர்க்களம் என்பதால்  கம்பனின் பாடல்வரிகளில் அதன் தாக்கம் வந்துவிழுகிறது.

படுகளச்சிறப்பினை விளக்கும் இந்தப்பாடலைப்பாருங்கள்,

அந்தி வானகம் ஒத்தது, அவ் அமர்க் களம்; உதிரம்
சிந்தி, வேலையும் திசைகளும் நிறைந்தன; சரத்தால்
பந்தி பந்தியாய் மடிந்தது, வானரப் பகுதி;
வந்து மேகங்கள் படிந்தன, பிணப் பெரு மலைமேல்.

அமர்க்களம் என்றால் போர்க்களம்! நாம்  அமர்க்களம் என்னும் வார்த்தையை  பாராட்டுச்சொல்லாக  பயன்படுத்துகிறோம். உண்மையில் போர்க்களம் தான் அதன் பொருள்.அந்திவானம் போல  இருக்கிறதாம் போர்க்களம்.வானரசேனை பந்திபந்தியாய் அதாவது வரிசைவரிசையாய் மடிந்தனவாம் .பிணப்பெருமலைமேல் மேகங்கள் படிந்தனவாம்.



வானரப்படை நிலைகண்டு இலக்குவன் வருந்துகிறான்.நீலன்,அனிலன்,கவயன் அங்கதன் சாம்பன்(ஜாம்பவான்) என அனைவரும்  அம்புபட்டு வீழ்ந்துகிடக்கிறார்கள் .
அது கண்டு.கோபத்துடன் ராவணன் மீது தனது அம்புகளை  தொடுக்கிறான்  இலக்குவனின் வீரத்தை விளக்கும் இந்தப்பாடலைக்காணலாம்

நூறு கோடிய, நூறு நூறாயிர கோடி,
வேறு வேறு எய்த சரம் எலாம் சரங்களால் விலக்கி,
ஏறு சேவகன் தம்பி, அவ் இராவணன் எடுத்த
ஆறு நாலு வெஞ் சிலையையும் கணைகளால் அறுத்தான்.

இலக்குவனை அவன் வீரம் கண்டு புகழ்கிறான்ராவணன்.  பின்னர் அனுமனையும் அவன் புகழப்போகிறான்.ராவணன்.

'நன்று, போர் வலி; நன்று போர் ஆள் வலி; வீரம்
நன்று; நோக்கமும் நன்று; கைக் கடுமையும் நன்று;
நன்று, கல்வியும்; நன்று, நின் திண்மையும் நலனும்'
என்று கைம் மறித்து, இராவணன், 'ஒருவன் நீ' என்றான்

'


ஆனால் பிறகு இலக்குவனையும் வீழ்த்துகிறான் பிரும்மன் கொடுத்த வேற்படையினால். இலக்குவன் அயர்ந்துவீழ்கிறான்.
 அவன் உடலை அப்படியே தூக்க இராவணன் முயல்கிறான்,
. தன் கைகளால் அவனை அள்ளி எடுக்க முனைந்தான். அவனால் இலக்குவனைத் தூக்க முடியவில்லை. தன் இருபது கரங்களாலும் பலங்கொண்ட மட்டும் முயற்சி செய்தும் இலக்குவனை அசைக்கக் கூட முடியவில்லை. தோல்வியுற்று இராவணன் பெருமூச்செறிந்தான.


.


 அப்போது ஒரு மூலையில் இளைப்பாறிக் கொண்டிருந்த அனுமன் ஓடிவந்து இடையில் புகுந்து இலக்குவனைத் தன் இரு கரங்களாலும் எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு விரைந்து நீங்கினான். இராம லக்ஷ்மணர் மீது அவன் கொண்ட அன்பினால், அனுமனுக்கு இலக்குவனைத் தூக்குவது மிக சுலபமாக இருந்தது, ஒரு குழந்தையைச் சுமந்து செல்வது போல தூக்கிக் கொண்டு சென்றான். அப்போது அவனைப் பார்த்தால், தன் மகவை மடியில் கவ்விக் கொண்டு மரத்தின் மீது செல்லும் மந்தி- பெண் குரங்கைப் போல தோன்றினான்.

தொக ஒருங்கிய ஞானம் ஒன்று எவரினும் தூயான்,
தகவு கொண்டது ஓர் அன்பு எனும் தனித் துணை அதனால்,
அகவு காதலால், ஆண் தகை ஆயினும், அனுமன்
மகவு கொண்டு போய் மரம் புகும் மந்தியை நிகர்த்தான்.


இலக்குவன்  சற்று  இளைப்பாற அவகாசம் கொடுக்கும்  எண்ணத்தில்  இராவணன் முன்பு  வந்து நிற்கிறான்.



" "இராவணா! இனி பொய்யான போர்களைச் செய்யாதே" என்று சொல்லிக் கொண்டே தேருக்கு எதிரே வந்து நின்று "நீ பின்னே செய்ய வேண்டிய போர் நிறைய இருக்கிறது. இப்போது நான் சொல்வதைக் கேள்!" என்றான்
.
 இராவணனுக்கு முன்பாக நின்று கொண்டிருக்கும்போதேஅனுமன் தனது விஸ்வரூபத்தை எடுத்து, வானுக்கும் பூமிக்குமாக நின்றான். அவன் இராவணனைப் பார்த்து "வா! இராவணா! வா! வந்து என் முன்னால் என்னை எதிர்த்து நில்!உன் வீரத்தையும், புகழையும், ஆண்மையையும் ஒரே குத்தினால் இப்போதே ஒழித்து விடுகிறேன். குரங்கு ஒரு கையால் விடும் குத்தினை வலிமை குன்றாமல் தாங்குவாயோ?" என்றான்.’ அனுமன் ,
ராவணன் அதிர்ந்தான் திகைத்தான்.

"நின்ற இடத்தில் அசையாமல் நின்று, என் மார்பில் குத்து என்கிறாயே. என்னப்பா உன் துணிவு. சொல்லும் தரமன்று!. இவ்வளவு துணிச்சலோடு நீ வந்து நின்ற பின்னும் உனக்குக் கிடைக்க வேண்டிய வெற்றி வேறு என்ன இருக்கிறது. இனி போர் செய்வதும் தேவையில்லை. சூளுரைத்து எனக்கு இவற்றைச் சொன்னாய். காலம் ஓடுகிறது. பேசி என்ன பயன்? இதனால் எனக்குப் பழி ஏற்படினும் அதற்காக நான் வெட்கப்படப் போவதில்லை. ஏனெனில் நீ ஒரு மாபெரும் வீரன். ஆண்மையாளன். வா! உலகமே காணும்படி என் மார்பில் கடுமையாகக் குத்து" என்றான்’

 , வைரம் போன்ற தன் கையால் இராவணனின் விரிந்த மார்பில் ஓங்கி ஒரு குத்து விட்டான். அந்தக் குத்தின் விளைவாக, பெரிய பெரிய மலைகள் எல்லாம் சிதறி உடைந்து விழுந்தன. இராவணன் கண்கள் நெருப்பைச் சிந்தின. அவன் பத்துத் தலைகளின் மூளைகள் தயிர் போல கீழே சிந்தின

. அரக்கர்கள் அதிர்ச்சியால் உயிரை விட்டர்கள். வானர வீரர்கள் அதிர்ந்து போய் மயிரையும், பற்களையும் உதிர்த்தனர். மேகங்கள் நிலை குலைந்து மழையைப் பொழிந்தன. அந்த அதிர்ச்சியால் வில்லில் பூட்டப்பட்ட நாண்கள் உதிர்ந்தன. கடல் நீர் கரை தாண்டி உட்புகுந்தது. மலைகள்
கற்களை உதிர்த்தன. திசையானைகளின் பற்கள் சிதறி விழுந்தன. வீரர்கள் கையில் பிடித்த ஆயுதங்கள் நழுவி விழுந்தன. இராவணன் மார்பில் நெருப்பு எழுந்தது..

அனுமன் தனது கை முஷ்டியை மடக்கி இராவணன் மார்பில் விட்ட குத்தானது, அவன் மார்பில் விழுந்த மாத்திரத்தில், முன்பு திசை யானைகளோடு (அஷ்ட திக் கஜங்கள்) மோதி அவற்றின் தந்தங்கள் ஒடிந்து அவன் மார்பில் தங்கிவிட்ட்ருந்தனவாம். அவைகள் அனுமன் விட்ட குத்து விழுந்த வேகத்தில், பின் புறமாக முதுகைத் துளைத்துக் கொண்டு  கீழே விழவும்,. இராவணன் நிலைகுலைந்தான்.

 இராவணன்.  அனுமனைப்பார்த்து வியந்து சொல்கிறான்
”உலகில் எனக்கு நிகரான வலிமை யாரிடமாவது இருக்கிறது எனில், அது உன்னிடம் இருக்கிறது. உலகில் உனக்குப் புறம்பாய் இருப்பவர் ஆண்மையற்றவர் எனும்படியான திறன் படைத்தவன் நீ!!. பிரம்மனே சாபமிட்டு என் வலிமையைக் குறைத்தாலும் குறைவடையாத என் வலிமை இப்போது உன்னால் தளர்ச்சி அடைந்து விட்டது.   நீவெற்றி உடையவன்" என்று இராவணன் அனுமனைப் பாராட்டினான்.

புகழ்ந்தானே ஒழிய அடுத்து ராவணன் விட்ட குத்தில் அனுமன்  தளர்ந்துதான் போனான்.
 இலக்குவன் மயக்கம் தெளிந்து எழுந்தான். உடனே ராவணன் குத்தில்  சற்றே  சரிந்திருந்தஅனுமனையும் அழைத்துக் கொண்டு இருவரும் இராமன் இருக்குமிடம் சென்றனர்.

இராமன் இராவணனுடன் போரிடுவதற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்தான்.


இராவணனும் தன் தேரை இராமனுக்கு எதிராகக் கொண்டு வந்து நிறுத்தினான். போர் புரிய இராவணன் தேர்மீது வந்து நிற்க, இராமன் மட்டும் தரையில் நடந்து சென்று போரிடுவதா என்று அனுமன் கருதினான், இருவரும் ஒத்த நிலையில் போரிடவேண்டுமெனக் கருதி, இராமனைத் தன் தோள்மீது ஏறிக்கொண்டு போரிடுமாறு வேண்டிக் கொண்டான்.

'நூறு பத்துடை நொறில் பரித் தேரின்மேல் நுன்முன்
மாறு இல் பேர் அரக்கன் பொர, நிலத்து நீ மலைதல்
வேறு காட்டும், ஓர் வெறுமையை; மெல்லிய எனினும்,
ஏறு நீ, ஐய! என்னுடைத் தோளின்மேல்' என்றான்.

மெல்லிய எனினும்  என்கிற  வார்த்தையில் வரும்,அனுமனின் அடக்கத்தைப்பாருங்கள்.  இலங்கையை  தீயிட்டு  அரக்கர்களை கதிகலங்கச்செய்து இப்போது ராவணனையும்  தான் விட்ட குத்தில் பிரமிக்கவைத்த  பலம்கொண்ட வீரன் அனுமன்  அண்ணலிடம்  அடக்கிவாசிக்கிறான். அனுமனின் வினயம்  போற்றுதலுக்குரியது.

'நன்று, நன்று!' எனா, நாயகன் ஏறினன், நாமக்
குன்றின்மேல் இவர் கோள் அரிஏறு என; கூடி,
அன்று வானவர் ஆசிகள் இயம்பினர்; ஈன்ற
கன்று தாங்கிய தாய் என மாருதி களித்தான்


 இராமனும் 'நன்று' என்று சொல்லி அனுமனின் தோள் மீது ஏறிக் கொண்டு போர் புரியச் சென்றான்  ஈன்ற  கன்றுதாங்கிய தாயாம்...பிறந்தகுழந்தையை  ஒரு தாயானவள் எப்படிப்பரிவாய்தாங்குவாளோ அப்படி தன்  நாயகனை  தோள்மீது ஏற்றித்தாங்குகிறாம் அனுமன் ! அனுமனுக்கு  ராமனிடம் இருப்பது பரிவா பக்தியா என்றால் இரண்டும் ஒன்றைஒன்றுவிஞ்சுகின்றன எனலாம்

ராமாயணத்தின் விறுவிறுப்பான கட்டம்  இதுதான்  ஆம் இராம -இராவண யுத்தம் ஆரம்பமாகிறது.
.
ஊழி வெங் கனல் ஒப்பன, துப்பு அன உருவ,
ஆழி நீரையும் குடிப்பன, திசைகளை அளப்ப,
வீழின் மீச்செலின், மண்ணையும் விண்ணையும் தொளைப்ப,
ஏழு வெஞ் சரம், உடன் தொடுத்து, இராவணன் எய்தான்.

எய்த வாளியை, ஏழினால், ஏழினோடு ஏழு
செய்து, வெஞ் சரம் ஐந்து ஒரு தொடையினில் சேர்த்தி,
வெய்து கால வெங் கனல்களும் வெள்குற, பொறிகள்
பெய்து போம் வகை, இராகவன் சிலை நின்று பெயர்ந்தான்


இராவணன் எய்த ஏழு கணைகளையும், தனது ஏழு அம்புகளால் பதினான்கு துண்டுகளாக்கி, அனல் கக்கி அகிலத்தையே அழிக்கவல்ல ஐந்து கொடிய கணைகளை இராமன் விடுத்தான். இவ்வைந்து அம்புகளையும் இராவணன் அந்தரத்தில் அறுத்தெறிந்து மேலும் பல கணைகளை ஏவ, அவற்றையும் இராமன் அழித்து ஒழித்தான்.

இம்பரான் எனில், விசும்பினன் ஆகும், ஓர் இமைப்பில்;
தும்பை சூடிய இராவணன் முகம்தொறும் தோன்றும்;
வெம்பு வஞ்சகர் விழிதொறும் திரியும்;-மேல் நின்றான்
அம்பின் முன் செலும், மனத்திற்கும் முன் செலும், அனுமன்


மனோவேகம் என்பார்களே அப்படியான  செய்கையாம் அனுமனுக்கு. அண்ணலின் அம்புச்சரம் எங்கெல்லாம்  செல்லவேண்டுமோ அங்கெல்லாம்  அம்பின் முன் செல்லும் மனத்திற்கும் முன் செலும் அனுமனாம்!

 போர்க்களத்தில் தலையற்ற முண்டங்கள் எழுந்து ஆடுகின்றன; அந்த முண்டங்களோடு பேய்களும் ஆடுகின்றன; அவைகள் பாடுகின்றன; துதிக்கை துண்டிக்கப்பட்ட யானைகளும், குதிரைகளும் இரத்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன.

 "ஆடுகின்றன கவந்தமும்; அவற்றொடு ஆடிப்
 பாடுகின்றன அலகையும்; நீங்கிய பனைக்கை
 கோடு துன்றிய கரிகளும் பரிகளும் தலைக் கொண்டு
ஓடுகின்றன, உலப்பு இல, உதிர் ஆறு உவரி".


இராமபிரான் போர்க்களத்தில் தன் கோதண்டத்திலிருந்து விடுத்த அம்புகள், இராவணன் ஒருவன் மட்டும் உயிருடன் நிற்க, ஒரு இலட்சம் அரக்கர்களின் தலைகளை அறுத்தும், பல கோடி சேனைகளைச் சிதைத்தும் அழித்து வீழ்த்தின. எந்தத் திசை நோக்கினாலும், பிணக் குவியல்கள் குவிந்து கிடந்தன. யானைகளும், குதிரைகளும், அரக்கர்களும் உடல்கள் பின்னி மலை போல குவிந்து கிடந்தன. இவற்றைக் கண்டு இராவணன் பாம்பு போலச் சீறினான்.

ஆனால்இராமனின் முகத்தில் போர்க்களத்தில் கூட புன்னகையாம் ! முன்னர்  மாயமானைப்பிடிக்க  சென்றபோதும் இராமனை,”சிந்துரப்பவளச்செவ்வாய் முறுவலன் என்று கம்பன் வர்ணித்தார்.  அவதார நோக்கம்  நிறைவேறும் முதல்கட்டம் அதுதானே அதன் விளைவாய் எழுந்த புன்னகையாக இருக்கலாம்
.
இப்போதும்  இராவண அழிவு நடக்க இருப்பதை நினைத்து  வந்த முறுவலாகவும் இருக்கலாம்.

முறுவல் எய்திய முகத்தினன், முளரி அம் கண்ணன்,
மறு இலாதது ஓர் வடிக் கணை தொடுத்து, உற வாங்கி,
இறுதி எய்தும் நாள், கால் பொர, மந்தரம் இடையிட்டு
அறுவது ஆம் என, இராவணன் சிலையினை அறுத்தான்

இராவணனுக்கு புதிது புதிதாக தேர்கள் அறுந்த தேர்களுக்கு மாற்றாக வந்து கொண்டிருக்க  அப்படி வந்த தேர்களையெல்லாம் இராமன் அறுத்து ஒடித்தான்.

 ஓர் அம்பினால் இராவணனின் தலைகளை அலங்கரித்துக் கொண்டிருந்த மகுடங்களை அடித்துக் கீழே விழ்த்தினான்.

அந்த மகுடங்கள் கடலில் போய் விழுந்தன. காலம் காலமாய் இராவணன் தலைகளை அலங்கரித்த மகுடங்களை இழந்தான்.

போர்க்கருவிகள் எதுவும் இல்லாமல்,  போரிட தேர் இல்லாமல், தலையில் மகுடங்கள் இல்லாமல் வெறும் கையனாய், உலகத்தோர் பார்த்து "தர்மத்தைக் கடந்த பாவிகளின் நிலை இதுதான்" என்று சொல்லிக் கொண்டு ஆரவாரம் செய்ய, அவனது கருமை நிறம் மேலும் கருகிடவும், கால் விரல்களால் தரையில் கீறிக் கொண்டும், நாணி தலை குனிந்து நின்றான்



. தன் எதிரில் நாணித் தலை குனிந்து நிற்கும் இராவணனைப் பார்த்து  மனமிரங்கி, தனித்து வெறுங்கையனாய் நிற்கும் இவனைக் கொல்வது நன்றன்று என நினைக்கிறான்  இராமன்.
 'உன் தீமை இப்போது அடங்கிவிட்டதா?' என்று  கேட்டு விட்டு, மேலும் சொல்கிறான்

'அறத்தினால் அன்றி, அமரர்க்கும் அருஞ் சமம் கடத்தல்
மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி;
பறத்தி, நின் நெடும் பதி புகக் கிளையொடும்; பாவி!
இறத்தி; யான் அது நினைக்கிலென், தனிமை கண்டு இரங்கி

 "தர்மத்தால் மட்டுமே பெரிய போர்களில் வெல்ல முடியுமே தவிர, வலிமையினால் மட்டும் அல்ல என்பதை மனதில் கொள்க! பாவி! இறந்த நின் சுற்றத்தாரோடு உன்னையும் கொன்றிருப்பேன். ஆனால் உனது இந்த தனித்த அவல நிலை கண்டு நான் உன்னைக் கொல்லவில்லை. எனவே ஓடிப் போ! உன் நகரத்துக்குச் சென்று ஒளிந்து கொள்!" என்றான் இராமன்.



: "ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
 பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா! என நல்கினன் - நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்".

காற்று அறைந்த  பூளை ஆயின என்கிற  வரியை  ஆழ்வாரிடமொருந்துபெறுகிறார் கம்பர்.

காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை
      உற கடல் அரக்கர்-தம் சேனை
கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த
      கோல வில் இராமன்-தன் கோயில்
என்கிறது  ஆழ்வார் பாசுரம்.

//உனது படைகள் எல்லாம் சண்டமாருதத்தில் சிதைந்த பூளைப் பூக்கள் போல சிதறுண்டு அழிந்து ..//  என்பது கம்பனின்    பாடல்வரிகளின் பொருள்.


 ஆள் ஐயா!

இதற்கு பற்பல வகைகளில் பொருள்கொள்ளலாம்

என்ன ஆளய்யா?
அரக்கரை ஆள்கின்றஆள் ஐயா!



. . கமுக மரத்தில் வாளை மீன்கள் தாவிக்குதிக்கும் வளமிகுந்த கோசல நாட்டின் வள்ளலான இராமபிரான், வெறும் கையுடவனாக போர்க்களத்தில் நிற்கும் இராவணனைப் பார்த்து "என்ன ஆள் ஐயா நீ! உனது படைகள் எல்லாம் சண்டமாருதத்தில் சிதைந்த பூளைப் பூக்கள் போல சிதறுண்டு அழிந்து போனதைக் கண்டாயல்லவா? போ! இன்றைக்கு உன் அரண்மனைக்குத் திரும்பிப் போய்,போருக்கு வேண்டிய ஆயுதங்களோடு நாளைக்கு வா! என்று (தனித்து நிற்பவனிடம் போர் செய்யக்கூடாதென்ற மரபினை அறத்தினை உலகிற்கும் எடுத்துரைக்கும்  எண்ணமுடன்),கருணை மேலிடச் சொன்னான் வள்ளல் இராமபிரான்.

பின்குறிப்பு...

இராமனின்  இடம் அயோத்திதானே  அல்லது சீதையின் இடம் மிதிலைதானே? இந்த இரண்டும் இல்லாமல்  கோசல நாடுடை வள்ளல்  என  கம்பன்  இராமனைக்கூறிய காரணம் என்னவாக  இருக்கும்?


3 comments:

  1. அருமையாக இருந்தது.ஆனால் கடைசியில் கோசலை நாடுடை வள்ளல் என்று கம்ப நாட்டாழ்வார் ஏன் சொன்னார் என்கிற கேள்வியை எழுப்பி என்னை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டீர்களே!!

    ReplyDelete
  2. ஒவ்வொன்றாக விளக்கம் மிகவும் ரசித்தேன்...

    ReplyDelete
  3. நன்றி டிடி மற்றும் கேபிசார்

    கேபிசார் கோசலநாடு எதுதெரியுமா? பாலகாண்டத்தில் பாட்டு உண்டு இப்படி
    ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்,
    காசு அலம்பு முலையவர் கண் எனும்
    பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்
    கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்:

    பொருள்





    ஆசலம் = சலம் என்ற சொல்லுக்கு நடுக்கம், உதறுதல், அலைபாயுதல் ( Trembling, quivering, wavering; ) என்று பொருள். ஆ + சலம் மிகுந்த, அல்லது பெரிய சலம். புலன்கள் ஒன்றில் ஒன்றுக்கு தாவிக் கொண்டே இருக்கும். விளக்கிருக்க தீ தேடும் மனம்

    புரி = புரிகின்ற, செல்கின்ற, அலைகின்ற


    ஐம் பொறி = ஐந்து பொறிகளான

    வாளியும் = அம்புகளும்

    காசு அலம்பு = வைரம் வைடூரியம் போன்ற விலை உயர்ந்த மணிகளால் ஆன கழுத்தில் அணியும் அணிகலன்கள் அசைந்து ஆட (அலம்ப). காசும் பிறப்பும் கலகலப்பக் என்பது திருப்பாவை.

    (கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து
    பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
    காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
    வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
    ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
    நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
    கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
    தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய் )


    முலையவர் = மார்பங்களை உடையவர் (பெண்கள்)

    கண் எனும் = கண்கள் என்ற

    பூசல் அம்பும் = சண்டை பிடிக்கும் அம்பும். பூசல் என்பதற்கு பூஜைக்குரிய என்று ஒரு பொருளும் உண்டு என்றாலும் வாளி , அலை பாயும் என்று பேசும் இந்த இடத்தில் அது அவ்வளவாக பொருந்தாது


    நெறியின் புறம் செலாக் = வழி தவறி செல்லாத

    கோசலம் = கோசலம் என்ற ஊரின்

    புனை ஆற்று அணி கூறுவாம் = ஆற்றினை (river ) அணியாக அணிந்த நிலை கூறுவாம். அங்கு ஓடும் நதி, அந்த ஊருக்கு மாலை போட்ட மாதிரி இருக்கிறதாம்.

    ஊர் வர்ணனைதான் என்றாலும் எவ்வளவு நுணுக்கம்.

    அதிலும் வாழ்வியலை படம் பிடிக்கிறான் கம்பன்.



    கோசலம் கௌசலை பிறந்த நாடு. தட்சிண கோசல நாட்டைச் சேர்ந்தவள். ! கோசலத்தின் தலைநகர் அயோத்தி. தசரதனுக்கு கோசலம் வரதட்சிணையாகக் கிடைத்தது என்றொரு செவிவழிக் கதை அல்லது புனைவு உண்டு. கம்பன், வால்மீகியில் இந்தக் கதை இல்லை.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.