Social Icons

Pages

Tuesday, April 29, 2008

வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு!

'இன்னிக்கு வெட்டு ஒண்ணு துண்டு ரண்டுன்னு வர்ஷாகிட்ட கேட்டுடணும் அதென்ன ஒருவாரமா முகத்த தூக்கிவச்சிட்டு யாரோடயும் சரியாப்பேசாம இருக்கிறா...இந்த நேரம்பாத்து என் மகன் -அதான் அவ புருஷன் -கார்த்திக்கும் வேற ஆபீசு வேலையாஅமெரிக்காபோயிட்டான்...இல்லேன்னா அவனைவிட்டு என்ன ஏதுன்னு விசாரிக்க வச்சிருக்கலாம்..

.நானும் அவங்களுக்கு கல்யாணமான இந்த ஆறுமாசமா வர்ஷாகிட்ட ஒரு மாமியார் மாதிரியா நடந்திட்டு இருக்கேன்? தாயா தோழியா தமக்கையா எத்தனை அன்பும் பாசமும் நேசமுமா இருக்கிறேன்? சீரியல் மாமியார் மாதிரி இருக்கக்கூடாது எல்லாரும் வர்ஷாவப் பாத்து பெருமப்படற மாதிரி மகத்தான மாமியாரா இருக்கணும்னு உண்மையாப் பழகறேன்;கண்ணா கவனிச்சிக்கறேன் ...அவளும் ஆறுமாசமா அப்டித்தான் இருந்தா..அமைதியான அடக்கமான பெண் .அதிர்ந்து பேசத்தெரியாது ...ஆனா இப்பதான் ஒருவாரமா மாறிட்டா.'

கவலையும்குழப்புமாய் பாக்யா தனக்குத்தானே முணுமுணுத்தபோது வாசலில் நிழலாடியது.

நீரஜாதான்.வர்ஷாவின் ஆபீஸ் தோழி.

"வாம்மா நீரஜா. லீவா இன்னிக்கு நீ ஆபீஸ்போகலயா?"

"ஆமா ஆண் ட்டீ...பையனுக்கு லேசா ஃபீவர்..பல்வரப்போகுது இல்ல அதான் பேதிவேற...அவனுக்காக லீவ் போட்டேன்...அப்டியே என் தங்கைக்கு கல்யாணமே கூடிவரலை.. அதுபத்தி விசாரிக்க அடுத்த் தெருல ஒரு புது ஜோசியர் வந்திருக்காரு.. அவரைப்பாகவும் போகப்போறேன். அவரு சொல்றது பலிக்குதாம் ..நடந்தது நடப்பது நடக்கப்போவது எல்லாத்தியும் துல்லியமா சொல்றாராம்!"

"அப்படியா?"

"ஆமா வர்ஷாவும் கார்த்திக் ஜாதகம் எடுத்திட்டு அவருக்கு ஆபீசுல ப்ரமோஷன் பத்தி கேட்க போன வாரம் போனதா சொன்னா..உங்களுக்குத் தெரியாதா என்ன?"

தெ... தெரியுமே? வயசாச்சில்ல நாந்தான் மறந்திட்டேன்..ஹிஹி.."

"அதானே பாத்தேன்..உங்க மருமகளுக்கு நீங்க கண்ணாடின்னா அவளும் உங்களுக்கு நல்ல துடச்சிவச்சபெல்ஜியம் கண்ணாடியாச்சே?
கண்ணு படாம நீங்க ரண்டு பேரும் இப்படியே இருக்கணும்...சரி நான் எதுக்கு வந்தேன்னா வர்ஷாகிட்ட நேத்து அவசரமா ஆயிரம் ரூபா ஆபீஸ்ல வாங்க்கிட்டேன் அதை திருப்பிக்கொடுக்கத்தான் வந்தேன் கொடுத்திடுங்க ஆண்ட்டி" என்று பணத்தை நீட்டினாள்.

அவள் சென்றதும் பாக்யா யோசித்தாள்.


ஓஹோ ஜோதிடரிம் போய்வந்துமுதல்தான் ஆளே மாறிட்டாளா?

அப்படி என்ன சொல்லி இருப்பாரு அந்த ஜோதிடர் நாமும்போய்கேட்போமே?

பாக்யா கார்த்திக்கின் ஜாதகத்துடன் கிளம்பினாள்

ஜாதகத்தைகூர்ந்துபார்த்த ஜோதிடர்," இந்த ஜாதகத்தை சமீபத்துல பார்த்தநினைவு .."என இழுத்தார்.

பாக்யா நிலமையைக் கூறிவிட்டாள்.

எதுக்கு இனியும் சுத்திவளைக்கணும் எல்லாமே வெட்டு ஒண்ணு துண்டு ரண்டுன்னா பிரச்சினை இல்லை.

அதுக்கு அவர்," ஆமாம இந்த ஜாதக்காரருக்கு ரண்டுகல்யாணம் இருக்கு.. ஒண்ணு முடிஞ்சிபோயிருக்குனு சொன்னேன். ஜாதகத்துல அது தெளிவா எனக்குத் தெரியுது..பெத்த தாயான உங்களுக்கும் அது தெரிஞ்சி இருக்கும் உண்மைதானே?" எனக்கேட்டார்.

பாக்யா சற்றுதயங்கி பிறகு." ஆமா "என்றாள்.

பிறகு பாக்யா வீட்டிற்குள் நுழையவும் டெலிபோன் ஒலிக்கவும் சரியாக இருந்தது.
ரிசீவரை எடுத்தாள்."ஹலோ?" என்றாள்

" அம்மா நான் தான் கார்த்திக் ..ஒருமுக்கியமான விஷயம்..வர்ஷா போன்ல சரியா பேசவே மாட்டேங்கறா..மெயில் அனுப்பினா பதிலே இல்ல.. கேட்டா ஒண்ணுமே சொல்லமாட்டேங்கறா....ஏதும் பிரச்சினையா உங்களுக்குள்ள?"

"பிரச்சினை எங்களுக்குள்ள இல்லப்பா, எல்லாம் உன் ஜாதகத்துலதான்.."

"என்னம்மா சொல்றீங்க?"

"ஆமாகார்த்திக்...உங்கப்பா குடும்பத்துல உங்க தாத்தாவுக்கு தாத்தா எப்போவோ யாரோடயே வந்த பகைல அவரு எதிரியோட வாழைத்தோப்பையே குலையோட வெட்டி சாய்ச்சிருக்காரு..பச்சசமரத்தை அதுவும் குலைவாழையை பகைமையோட வெட்டக்கூடாதாமே? அதனால அதுவே சாபமாகி அவங்க குடும்பவாரிசு அல்பாயுசுல போயிடும்னு இப்படி ஒரு
சாபம் இருக்கறதா முன்னமே ஊர்ல ஒரு ஜோசியர் சொல்லி அதுக்குப்பரிகாரமும் சொன்னதை எல்லாரும் அலட்சியப்படுத்தி இருக்காங்க...அது உங்கப்பாவரை தொடர்ந்திருக்கு . அறுபது வய்சுக்கு மேலே ஆண்வாரிசு நம்ம குடும்பத்துல தங்கலப்பா..ஆமா உங்கப்பாவும் ரண்டு வருஷம் முன்பு தன்னோட ஐம்பதாவதுவயசிலேயே போயிட்டாரே? நானும் உன் அப்பாவும் பரிகாரம் செய்துட முடிவு செய்தோம். அதன்படி உன்னோட அந்த அறியா ஆறு வயசுல, வாழைமரத்தோட ஒருகல்யாணம்செய்து வச்சி ரண்டு வாழைக்கன்றுகளை ரண்டுபவுன் காசுவச்சி ரண்டு ஏழைக்கு தானமா கொடுத்தோம். இது பலருக்கு பரிகாசமா இருக்கலாம்.ஆனா எனக்கு என் மகன் பலகாலம் ஆயுசோட வாழ இப்படி ஒண்ணு செய்தா தப்பில்லைனு தோணிச்சி. .கிராமத்துக்கோயில்ல இருபது வருஷம் முந்தி உனக்கு வாழைமரத்தோட நடந்தது முதல் கல்யாணம்.அதை நாம் அப்பவே மறந்துட்டோ ம்.இதை அரைகுறையா இங்க ஒரு ஜோசியர்கிட்ட போனவாரம் வர்ஷா கேட்டுட்டு உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடிச்சி அதை நாம் மறைச்சிட்டதா நினச்சி மனம் புழுங்கிட்டு தவிச்சிட்டிருக்கான்னு என்னால இப்பத்தான் உணரமுடிஞ்சிது..."

பாக்யா சொல்லும்போது,"நானும் உணர்ந்திட்டேன் அத்தை" என்று கூவிக்கொண்டேவந்த வர்ஷாவின் குரலில் உற்சாகக் குற்றாலம்!


வ வா ச போட்டி இரண்டுக்கு!!!!!!!!!!
மேலும் படிக்க... "வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு!"

காற்றின் ஒலி இசையா?

இசைக்கு மனது கட்டுப்படுகிறது. இசைக்கு மனிதர்கள் மட்டுமின்றி பறவைகளும் விலங்குகளும் கூட மயங்குகின்றன.

மனிதன் ஏற்படுத்தும் ஒலிகளைப்போலவே சில நேரங்களில் இயற்கையும் ஓசையை அதாவது ஒலியை உண்டாக்கும்.

காட்டில் விளாம்பழ ஓடு ஒன்று கிடக்கிறது யானை ஒன்றுஅதனைத்தின்று போட்டதில் அதன்மீது துளை ஒன்று எப்படியோ வந்துவிட அதனுள் காற்று புகுந்து புறப்படுகிறதாம். அது குழல் ஊதுவதைப்போல ஒலிக்கிறதாம்!இந்தச்செய்தியை அகநானூறு தெரிவிக்கிறது.

பொரியரை விளவின் புண்புற விளைபுழல்
அழலெறி கோடை தூக்கலின் கோவலர்குழலென...(பாடல்219)


கோடைவெய்யிலில் மூங்கில்கள் உலர்ந்துவிட்டன. மேல்கற்றுவீசும்போது நெல் உதிர்ந்து பொறிகிறது. அப்போது நகம் நெறிவதுப்பொல ஓசைவருகிறது இதையும் அகப்பாடல் ஒன்றுதெரிவிக்கிறது.

குன்றின்மீது சுனை நீர்வற்றிவிட்டது காற்று சுனைக்கு உள்ளே மோதிச்செல்கிறது அப்பொழுது பறைமுழங்குவதைபோல ஓசைகேட்கிறது.

இவை நம்நாட்டு ஒலிகள்.

இதைப்போன்ற வினோத சில மேல்நாட்டு ஒலிகளைக்கேட்கலாமா?

பாலைவனங்களில்பயணம் செய்தவர்கள் இனிமையான இசையொலிகளைக்கேட்டதாகக் கூறுவார்கள்.

மணி ஒலிப்பதைப்போலவும் வேறு சில ஒலிகள் கேட்பதாயும் சொல்வார்கள்.
எந்தக்கருவியிலிருந்து எந்ததிசையிலிருந்து என சொல்லமுடியவில்லை என்பார்கள்

விலங்குகளோ பறவைகளோ அலலது வண்டுகளோ இந்த ஒலியை உண்டாக்குவதில்லை. பாலைவனத்தில் ஆள்நடமாட்டமே இலலாத இடத்தினிலிருந்து இத்தகைய ஒலிகள் வருவது பற்றி டாக்டர் எமிலி சோரேல் என்னும் பௌதீகப் பேராசிரியருக்கு வியப்பாகி, இதனைக்குறித்து சில பரிசோதனைகள் செய்ய முன்வந்தார்.

டாக்டர் எமிலி தனது துப்பாக்கியை பாலைவன காற்று வேகமாக வந்து மோதும் திசைக்கு எதிராக 45டிகிரி கோணத்தில் நிற்கவைத்தார். என்ன ஆச்சர்யம்? உலோகக்கம்பி அதிர்வதுபோல ஓசை கேட்டது. பிறகு துப்பாக்கியை அப்படியும் இப்படியும் மாற்றிவைத்து பாலைவனத்தில் வழக்கமாய் கேட்கும் கம்பிச்சுருள் அதிர்வதைப்போன்ற ஒலி வரும்படிச் செய்தார் .பிறகு இந்த அமைப்பை மற்றவர் பார்வையில் படாமல் மறைத்துவிட்டு ஒருவிவசாயியை அழைத்து வந்து அந்த ஒலியைக் கேட்கச்செய்தார்.

பாலைவன இசையைக்கூர்ந்து கேட்ட விவசாயி மணியோசைமிகவும் இனிமையாக இருக்கிறது என்றார்.

டாக்டர் எமிலி இந்தப்பரிசோத்னையின்படி கூறும் கருத்து...

'அந்த விவசாயயநண்பர் என் துப்பாக்கியின்மீது பட்டு ஆற்றலுடன் வெளிப்பட்ட ஒலியை மணியோசை போல இருப்பதாகக் கூறினார். அந்த ஒலி எந்தத் துப்பாக்கியிலிருந்து தோன்றுவது என்பதை நான் அவருக்குக்காண்பித்தேன் அவர் ஆச்சரியம் அடைந்தார்
அந்த இனியஒலி அருகிலிருந்து கேட்காமல் எங்கொ தொலைவிலிருந்து வருவது போல அவர் கூறியது முற்றிலும் உண்மை .ஏனென்றால் அந்த ஒலிஅப்படித்தான் கேட்டது.

இந்த சோதனையில் நான் அறிந்த உண்மை இதுதான்.

பாலைவனத்தில் சுழன்று அடிக்கும் காற்று உயரத்தில் இருக்கும்போது ஏதோ ஒருபொருளின் வழியாக ஊடுருவிச்செல்லும்போது அந்தப்பொருளை அதிரச்செய்கிறது. அப்போதுதான் இந்த விசித்திரமான ஒலிகேட்கிறது.

காற்றால் அதிரும் அந்தப்பொருள் குன்றின் உச்சியாகவோ பள்ளத்தாக்கை நோக்கி நீட்டிக்கொண்டிருக்கும் பாறையின் கூர்மையானமுனையாகவோ அல்லது தனது நிலையிலிருந்து சற்றே நெகிழ்ந்து அதிர்வுகளை ஏற்படுத்தும் ஏதேனும் ஒன்றாகவோ இருக்கலாம் .அதிர்வுகளை ஏற்பத்தும் சாதனம் ஈரத்துடன் இருக்கும்போது ஒலிகள் கேட்பதில்லை 'என்றும் டாக்டர் எமிலிகூறுகிறார்.


மலைச்சாரலில் வளர்ந்துள்ள மூங்கில்களில் வண்டுகள் துளை ஏற்படுத்தி இருப்பது இயற்கை அந்ததுளைகளில் காற்று புகுந்து செல்லும்போது இனிய இசை ஏற்படும் என்று இலக்கியங்க்ள் கூறுகின்றன.


கில்பர்ட் என்பவர் நேச்சர் இதழுக்கு ஒருகடிதம் எழுதி உள்ளார்.

அந்தக்கடிதத்தில் தனது பண்ணைக்கும் சிறிது தொலைவில் உள்ள வீட்டுமுன்வாயிலுக்கும் உள்ள இடைபட்ட தொலைவில் பூச்சிகள் இறகடித்துப்பறப்பதால் உண்டாகும் ரீங்கார ஓசை கோடைக்கால மதியம் ம்ற்றும் மாலை வேளைக்ளில் தொடர்ந்து கேட்பதாகக்கூறுகிறார்.

'அந்த ஒலி உற்சாகத்தைஏற்படுத்தும் .ஆயிரக்கணக்கான தேனிகள் பறப்பது போல ஓசை உண்டானபோதிலும் ஒருபூச்சிகூட கண்ணுக்குத் தெரியாததுவியப்பு!'என்கிறார்.அவர்

சில ஓசைகள் எங்கிருந்துவருகின்றன என இதுநாள் வரையிலும் அறிய இயலவில்லை.
உலகத்தில் தோண்றும் எல்லா ஒலிகளுக்கும் ஏதேனும் ஒருஅடிப்படைக் காரணம் இருக்கும் .

காரணம் கண்டுபிடிக்கும்வரை அவை விசித்திரமான் ஒலிகள் என்றேஅழைக்கப்படும்.
மேலும் படிக்க... "காற்றின் ஒலி இசையா?"

தமிழ்ப்பிரவாகம் நடத்தும் இலக்கியப்போட்டிகள்!

அன்புடன் நண்பர்களுக்கு!

வணக்கம்!


ஆங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்த இணையத் தளத்தில் தமிழ் மொழியின்
பங்களிப்பை பெருக்குவதில் தமிழ் குழுமங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. தமிழ் மொழியை சுவாசிக்கும் அத்தனை இதயங்களுக்கும் இக் குழுமங்கள் இலக்கியத்தையும் , இலக்கணத்தையும், வரலாற்றையும், அன்றாட உலக நடப்புகளையும் அலசும் கருத்துக் களமாக விளங்குவதோடு நல்ல பல நட்புகளையும் வழங்கி இருக்கின்றது.


இலைமறை காயாக இருக்கும் பல படைப்பாளிகளை வெளிச்சத்துக்கு
கொண்டு வர இணையத் தளமும் , வலைப்பூக்களும் , தமிழ் குழுமங்களும் பெரிதும் உதவி வருவது ஆத்ம திருப்தியை தரும் விசயமாக இருந்து வருகிறது. இத்தனை பெருவெள்ளமாக இலக்கியப் பெருக்கும், கருத்துக் களமுமாக தமிழ் குழுமங்கள் வளர்ந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அதில் ஒரு துளியாக, சிறு தளமாக எமது தமிழ் பிரவாகம் உருவாகி வருவது குறித்து நாம் மிகவும் பெருமையடைகின்றோம்.


தமிழ் பிரவாகத்தின் அன்புக்குரிய உறுப்பினர்களுக்கும் , எமது குழுமத்தின்
வளர்சியிலும் நலனிலும் அக்கறை கொண்டு பின் புலத்தில் எமக்கு ஆதரவாகவும
உறுதுணையாகவும் இருந்து வரும் நல் இதயங்களுக்கும் இந்த வேளையில் எமது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்க விழைகிறோம்.


வரும் மே மாதம் 1ம் திகதி தனது முதலாம் ஆண்டு பூர்த்தியை தமிழ் பிரவாகம் மிகச் சிறப்பாக கொண்டாடும் இலக்குடன் வலை உலகில் இலக்கிய ஆர்வத்துடன் இருக்கும் சகலரும் பங்கேற்கும் வண்ணம் இலக்கியப் போட்டிகளை நடத்த திட்டமுள்ளது.


போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் வரும் ஜூலை மாதம் நடை
பெறவிருக்கும் முத்தமிழ்- பிரவாக நண்பர்களின் சந்திப்பில் வழங்கப் படும்.


போட்டிகளின் விபரங்கள் வருமாறு:


இலக்கியப் போட்டிகள்


சிறுகதை
கவிதை
கட்டுரை

நகைச்சுவை துணுக்கு ஆகிய பிரிவுகளில் நடாத்தப்படும்.

ஒருவர் எத்தனை போட்டிகளிலும் பங்கு பெறலாம். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு ஆக்கம் மட்டுமே அனுப்பலாம்.

ஒவ்வொரு ஆக்கமும் உங்கள் *சொந்தக் கற்பனையில்* படைக்கப்பட்டதாய் இருக்க வேண்டும்;

வேறெந்த ஊடகங்களிலும் பிரசுரமாகாத படைப்புகளாக இருக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பு படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.

*ஆபாசம் அல்லது தனி மனிதக் கீறல் இருப்பதாகக் கருதப்படும் எந்த ஆக்கமும் போட்டியிலிருந்து நீக்கப்படும் அதிகாரம் நடுவர்களுக்கு வழங்கப்படும்.*

போட்டிகளுக்கான ஆக்கங்கள் நம்மை வந்தடைய வேண்டிய கடைசி திகதி *2008 ம் ஆண்டு மே 31ம் திகதி*.

சிறுகதை & கட்டுரை போட்டிகளின் பரிசு விபரங்கள்:


- 1வது பரிசு - 2500.00 பெறுமதியான புத்தகங்களும், 2500.00 இந்திய
ரூபாயும் வழங்கப்படும்.

2 வது பரிசு- 1250.00 பெறுமதியான புத்தகங்களும் 1250.00 இந்திய
ரூபாயும் வழங்கப்படும்.


பரிசு பெறும் ஒவ்வொரு ஆக்கமும் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு மலரிலும், குழுமத்திலும் பிரசுரமாகும். மற்றைய ஆக்கங்கள் தமிழ் பிரவாகக் குழுமத்தில்பிரசுரமாகும்.

சிறுகதை:




ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.

எத்தகைய கருவையும் பின்னணியாகக் கொண்டு கதை புனையப்படலாம்.
ஒருவர் ஒரு சிறுகதை ஆக்கம் மட்டுமே அனுப்பலாம்.
சிறுகதை 7 பக்கங்களிலிருந்து 10 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். (A4 அளவு தாள்களே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது)

நடுவர்களின் முடிவே இறுதியானது.

கட்டுரை:



ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.

கட்டுரைகள் இங்கு தரப்பட்டிருக்கும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து ஒருவர் ஒரு கட்டுரை மட்டும் எழுதலாம்.

ஒவ்வொரு கட்டுரையும் 1000 சொற்களுக்கு மேற்படாதவையாக இருக்க வேண்டும்.



கட்டுரைகளுக்கான தலைப்புகள் :

பெண்ணியம்.
உலக அரங்கில் புலம் பெயர்ந்த தமிழர்களின் இன்றைய நிலை.
தமிழ் கலாச்சாரமும் , இந்துசமயத்தின் ஆதிக்கமும்.
உலக அரங்கில் இந்தியா வல்லரசாகக் கணிக்கப்டுகிறாதா இல்லையா?
ஈழத்தமிழரும் , இந்திய அரசியலும்.
அரசியலில் பொது மக்களின் பங்கு.
இன்றைய இளைஞர்களின் வளர்ச்சி ஆக்கபூர்வமான பாதை நோக்கியா? அழிவுப்பாதையை நோக்கியா?
இன்றைய சூழ்நிலையில் பணத்தின் ஆதிக்கத்தில் பாசம் மறைந்துவிட்டதா? இல்லையா?'
மெல்லத் தமிழினி....வாழும்?வீழும்?
கடவுள் பக்தியா , சுய கட்டுப்பாடா மனிதனை செம்மைப்படுத்தவல்லது?
தியானம் என்பது....!




நகைச்சுவைத் துணுக்கு:


ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.
ஒருவர் ஆகக் குறைந்தது ஐந்து துணுக்குகளை ஒரே தாளில் அனுப்பலாம். ஆனால் சிறந்த துணுக்காக 3 துணுக்குகளே தேர்வு செய்யப்படும்.

ஒவ்வொரு துணுக்கும் பரிசாக தலா 500.00 இந்திய ரூபாய்கள் வழங்கப்படும்.


கவிதை:

கவிதைப் போட்டி 2 பிரிவுகளில் நடத்தப்படும்.


1. மரபுக் கவிதை.
2. புதுக்கவிதை


ஒவ்வொரு பிரிவிலும்


ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.

இரண்டு பக்கங்களுக்குள் கவிதை இருக்க வேண்டும். (A4 அளவு தாள்களே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது)

1வது பரிசு 1500.00 ரூபா பெறுமதியான புத்தகங்களும் 1500.00 இந்திய ரூபாயும் வழங்கப்படும்.
2வது பரிசு 1000.00 ரூபா பெறுமதியான புத்தகங்களும் 1000 .00இந்திய ரூபாயும் வழங்கப்படும்.

தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டியில் யாரும் கலந்து
கொள்ளலாம். பரிசு பெறும் ஆக்கங்கள் ஆண்டு மலரிலும் , தமிழ் பிரவாகக்
குழுமத்திலும் பிரசுரிக்கப்படும். மற்றைய ஆக்கங்கள் தமிழ் பிரவாகக் குழுமத்து
இழைகளாகப் பிரசுரிக்கப்பட்டு உறுப்பினர்களின் கருத்துப் பகிர்வுகளுக்கு
சமர்பிக்கப்படும்.


எந்தவொரு ஆக்கமும் தனிமடலில் *Thamizmakal@gmail.com *என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். போட்டி சம்மந்தமான மேலதிக விபரங்களுக்கும் இதே மின்னஞ்சல் மூலமே தொடர்பு கொள்ளவும். Subject பகுதியில் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டிகள்- 2008 என்று குறிப்பிடவும்.


இணையத் தளத்தில் எழுதிவரும் அத்தனை அன்புள்ளங்களும் இவ் அறிவித்தலை ஏற்று பங்குபெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுவதோடு ஆர்வமுள்ள படைப்பாளிகள் , இணையத்தள அனுபவமில்லாத ஆனால் எழுத்துத் திறமையுடைய உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறும் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.


படைப்புகள் கட்டாயமாக யுனிகோடு முறையிலான ஈ-கலப்பை
தமிழ் உருவிலே தட்டச்சுப் பெற்றிருக்க
வேண்டும் என்பது மிக முக்கியம்.


இந்த இலக்கியப் போட்டிகளை அனைவரும் அறிந்துகொள்ள உதவியாக குழும
உறுப்பினர்களும், நண்பர்களும் இவ் இலக்கியப் போட்டி அறிவித்தலை தத்தமது
வலைப்பூக்களிலும் , வலைத்தளத்திலும் பிரசுரிக்குமாறு அன்புடன் கேட்டுக்
கொள்ளப்படுகின்றனர்.
நன்றி !
வணக்கம்!!
அன்புடன்
சுவாதி
மேலும் படிக்க... "தமிழ்ப்பிரவாகம் நடத்தும் இலக்கியப்போட்டிகள்!"

Monday, April 28, 2008

உன்னதங்கள்!

அடிச்சுவடுகள் ஏதுமின்றி
அலம்பிவிட்டதுபோல
தெரிகிறது வானம்


இதில் பூமிக்காக
மழைகொண்டுதந்த
மேகம் எது?

கால்களின்றி
விண்ணில் உலாவந்த
நிலா,
எப்படிப்பயணித்தது?

எத்தனைக் *கிரணங்களை
சூரியன்
பதித்தது?


இதைப்பற்றிய சிந்தை ஏதுமின்றி
பயணித்த பாதைகளில்
பதித்துக்கொண்டே போகிறோம்
நாம் ,
நமது அடிச்சுவடுகளை.
____________________________


*கிரணம்=கதிர்
மேலும் படிக்க... "உன்னதங்கள்!"

Sunday, April 27, 2008

காலமெல்லாம் காத்திருப்பேன்.

அத்தியாயம் 12ஜெய்நகர் போலீஸ் ஸ்டேஷன்.

இன்ஸ்பெக்டர் பசவராஜ் தனக்குத்தெரிந்த அரைகுறை தமிழில் பேச ஆரம்பித்தார்.

"சொல்லுப்பா மஞ்சுநாத்.!..எதுக்கு நீ அந்தம்மாவே கொலே செய்தே? "

அவர் எதிரில் முகம் இறுகி நின்று கொண்டிருந்த மஞ்சுநாத் சட்டென," இன்ஸ்பெக்டர்! நான் ராதிகாவைக்கொலை செய்யல... இதோ நின்னிட்டு இருக்கானே சாரங்கன், இவனுக்குத்தான் மனைவி மேல சந்தேகம் அதான் தீர்த்துக்கட்டி இருக்குறான்...ஆனா ஃப்ளாட்டுல அந்த பத்ரிக்கிழவர் ஏதோ என்கூட ராதிகா எப்பவோ வெளீல சுத்தினதா சொன்னதை காரணமா வச்சி என்னை இங்க அழைச்சி இப்படி விசாரிக்கறது சரி இல்ல ஆமா?" என்று கத்தினான்.

"இருக்காது என் தம்பிக்கு ஒரு எறும்புக்கு தீங்கு நினைக்கக்கூட மனசு வராது அவன் இந்தக்கொலையை செய்தான்னு சொல்றது அபாண்டம். உண்மையில் நான் தான் ராதிகாவைப்பத்தி என்புருஷன் ஊர்ல சொன்னதும் இங்கவந்தவ அவளைப்பார்த்ததும் துப்பாக்கில சுட்டுட்டேன்" என்றாள் சுமித்ரா.

"அக்கா! என்ன உளற்றீங்க? உங்களுக்கு துப்பாக்கிய கையில பிடிக்கத்தெரியுமா? எனக்காக பழியைப்போட்டுக்காதீங்க" சாரங்கன் வேதனையுடன் கத்தினான்.

"என்னப்பா செய்வது? உன்னைக்காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல.." அழுதாள் சுமிதரா.

சாரங்கன் இன்ஸ்பெக்டரை தீர்க்கமாய் பார்த்தான் பிறகு," இனியும் நான் உண்மையை மறைக்கவிரும்பல..மஞ்சுநாத் சொன்னது சரிதான் ..நேத்து எதிர்கட்டிடத்தில் ரொம்ப நேரம் அமர்ந்தவன் விடிவதற்கு கொஞ்சநேரம் முன்பாய் வீடுவந்தேன். என் மனைவியின் முகத்தைப்பார்த்தேன்...என்னை ஏமாற்றி வருகிறாள் அவள் என்பதை நினைத்தபோது நெஞ்சு கொதித்தது. நான் சாதுதான் .மென்மையான சுபாவக்காரன் தான் ஆனா நேத்து அவை எல்லாம் காணாமல போய் மிருகமாயிட்டேன்,,ஆத்திரத்தில் அவளை சுட்டுத்தள்ளிட்டு வெளில வந்திட்டேன்... நாந்தான் குற்றவாளி இன்ஸ்பெக்டர் என்னைக்கைது செய்யுங்க.."

"பாத்தீங்களா நான் சொல்லல இன்ஸ்பெக்டர்? தூக்கி அவனை ஜெயில்லபோடுங்க அயோக்கிய ராஸ்கல் சாரங்கன்" மஞ்சுநாத் கிண்டலாய் சிரித்தான்.

பசவராஜ் சட்டென," ஹலோ கொஞ்சம் வாயை மூடுங்க...போலீஸை முட்டாளா நினச்சி நீங்க எல்லாரும் பேசிட்டே போறீங்களே? எங்களுக்குத்தெரியும் உண்மையான குற்றவாளி யாருன்னு...அவங்களே இப்ப இங்க வரபோறாங்க பாருங்க?" என்றார்.

அனைவரும் குழப்பமாய் அவரைப்பார்க்கும்போது அடுத்த சில நிமிஷங்களில் அங்கே வந்த நபரைப்பார்த்ததும் சாரங்கன் அதிர்ச்சியில் கூவிவிட்டான். "மாலதீ?"

அவனை ஆழமாய்பார்த்த மாலதி," ஆமா சாரங்..நாந்தான் உங்க மனைவியைக்கொலை செய்தேன் ..சைலன்ஸர் பொருத்திய துப்பாக்கில சுட்டேன் அதைத்தான் உடனே இங்க வந்து இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்லி சரணடைந்தேன்..உங்க எல்லாரையும் இங்க வரவழைத்து விவரம் சொல்ல விரும்பினேன்.

"சாரங்! நானும் எட்டுமாதங்களாய் என் இல்லத்துக்கட்டிடவேலையை மேற்பார்வை பார்க்க வரும்போதெல்லாம் ராதிகா பெரும்பாலும் மஞ்சுநாத்துடன் சுத்தறதை காண நேர்ந்தது.மேஜிககலை தெரிந்த எனக்கு அவர்கள் அறியாமல் தொடர்ந்து பேசினதை எல்லாம் கேட்கமுடிஞ்சுது. கடைசியில் மஞ்சுநாத்தையும் துறந்து ராதிகா பம்பாய்க்குபோகபோவதை நேத்து ராத்திரி பால்கனிக்கு மழைக்குழாய்மூலமா ஏறிவந்து, மறைவா நின்னுட்டு இருந்த எனக்கு அவள் போனில் பேசியபோது தெரியவந்தது. புறப்பட இருந்த அவளைத்த்டுத்தேன். அட்வைஸ் செய்துபார்த்தேன் . அவள் கேட்கவில்லை. சாரங்கன் மாதிரி அன்பும் பொறுமையும் நிறைந்த மனுஷனைப்புரிஞ்சிக்கத்தெரியாமல் போனவளை கொலை செய்வதைத்தவிர எனக்கு வேறுமுடிவு தெரியவில்லை. " மாலதி முடித்துவிட்டு கண்பனித்தாள்.

அவள் கையில் விலங்கு மாட்டப்பட்டபோது சாரங்கனின் கண்கள் அவள் கண்களை பரிவோடு சந்தித்தன.

அவைகள்,'இந்த ஜனம்த்திலேயே உனக்காக காத்திருப்பேன் மாலதி 'என்று சொல்லாமல் சொல்லின.


முற்றும்.
மேலும் படிக்க... "காலமெல்லாம் காத்திருப்பேன்."

Saturday, April 26, 2008

மனம் ஒரு குழந்தை.

அதட்டிப்பார்த்தேன்
அடங்கவில்லை
அன்பாய் சொல்லிப்பார்த்தேன்
அழுது அடம்பிடித்தது
ஆனது ஆகட்டும் என்று
அலட்சியம் செய்தேன்
அமைதியாகிப்போனது
மனக்குழந்தை!
மேலும் படிக்க... "மனம் ஒரு குழந்தை."

காலமெல்லாம் காத்திருப்பேன்.

அத்தியாயம் 11
"யாரும்மா நீங்க? இந்த சூர்யா ·ப்ளாட்டுல யாரைப்பாக்கணும்?"

தூக்கக்கலக்கத்தில் காம்பவுண்ட் கதவைத் திறந்தபடி வேலய்யா கேட்டான்.

ஆட்டோக்காரருக்கு அவர் மீட்டருக்கு மேல் கேட்ட பணத்தை பர்சிலிருந்து எடுத்துக்கொடுத்துவிட்டு வந்த சுமித்ரா,"என் தம்பி

சாரங்கனைப்பாக்க வந்தேன்ப்பா....சூர்யா ·ப்ளாட்ஸ் நாலாவது ப்ளாக்குல வீடுன்னு அட்ரஸ்ல படிச்ச ஞாபகம். அங்க போகணும்.கொஞ்சம் வழி காட்டறியா? நான் ஊருக்குப்புதுசு" என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்



"சாரங்கன் ஐயா வீடுங்களா? அந்த தம்பி முகத்துல பொழுது விடியறத்துக்கு முன்னே இப்படி முழிச்சா எனக்கு இன்ன்னிப்பொழுது
நல்லாவேபோகும் சந்தேகமே இல்ல...அவரு அக்காவாம்மா நீங்க? அதான் மகாலட்சுமி மாதிரி இருக்கீங்க... முகத்துல இப்படி ஒரு

சாந்தக்களை எல்லாருக்கும் வராதும்மா... என் பேரு வேலய்யா...வாட்ச்மேன் நான் தான் இங்க... நீங்க வாங்கம்மா... தம்பி வீட்டுக்கு நான் கொண்டு சேக்கறேன்"

சி ப்ளாக்கின் அந்த நான்காவது மாடிக்குப்போகும் வழியில் வேலய்யா பேசிக்கொண்டே வந்தான்.

"ராத்திரிபூரா எதிரே புதுசா கட்டி முடிச்சிவந்திருக்கிற அணைக்கும் இல்லத்துல கோகுலாஷ்டமி நிகழ்ச்சி நடந்திச்சி..எல்லாரும்தாமதமாதான் இங்க வந்து படுத்தோம். அதான் நானும் நீங்க ஆட்டோல வர்ரது தெரியாம கண்அசந்து தூங்கிட்டேன். பிரசாதம்னு வந்தவங்களுக்கெல்லாம் வயிறு நிறைய சாப்பாடு போட்டுட்டாங்களா நல்லா சாப்பிட்டு படுத்ததுதான் தெரியும்...என் வேலையே ராத்திரி கண்முழிச்சி இங்க காவல் காக்கணும். ஆனா பாருங்க நேத்து அடிச்சப்போட்டாப்டி தூங்கி இருக்கேன்...·ப்ளாட்டை கவனிக்கற லட்சணம் இதுதானான்னு யாரும் கேட்டா இன்னிக்கு நான் வாயத்திறக்க முடியாது.. என்னவோ போங்க...மனுஷங்களுக்கு எப்போ என் நேருதுன்னு யாருக்குத்தெரியுது ? ஆங்..சாரங்கன் தம்பி வீடு வந்தாச்சி..இதாம்மா அவரு ·ப்ளாட்டு..பெல் அடிங்க. கதவ தொறப்பாங்க.."

சுமித்ரா காலிங்பெல்லில் விரல்வைத்து அழுத்தினாள். உள்ளே குருவி மூன்றுமுறை கத்தி ஓய்ந்தது.

"யாரும் திறக்கக்காணோமேப்பா? ஊருக்கு கீருக்கு போயிட்டாங்களா?' என்றாள் சுமித்ரா குழப்பமாய்.

"கதவைத்தட்டிப்பாருங்கம்மா...எல்லாம் இருப்பாங்க...தம்பிய ராத்திரி பூரா எதிர்கட்டிடத்துல நான் பாத்தேனே? "

"அப்படியா?' என்ற சுமித்ரா கதவைத் தட்டினாள். தட்டும்போது கதவு தானாய் உள் நோக்கி நகர்ந்தது.

"அட! கதவு திறந்தே இருக்குதா? எழுந்திட்டாங்களா காலைல நாலுமணிக்கே? ஆச்சரியமா இருக்கே ?" வேலய்யன் வியப்புடன் உள்பக்கம்பார்த்து இருட்டினூட்டே குரலால் கூவியபடி துழாவினான்.

"தம்பீ உங்க அக்கா வந்திருக்காங்க.."

உள்ளிருந்துபதில் இல்லை.

சுமித்ரா சற்று முகம் அரண்டவளாய் ."என்ன ஆச்சி? ராதிகாவும் இல்லையா வீட்ல? " என்றாள்.

வேலைய்யா கையிலிருந்த டார்ச் லைட்டினால் ஹாலுக்குள் ஒளிவட்டமிட்டு சுவரில் தெரிந்த சுவிட்சை விரலால் தட்டினான்.

வேகமாக ஹாலுக்குள் வந்த சுமித்ரா சுற்றும் முற்றும்பார்த்தவள்,"அந்த ஓரமா குப்புறக் கவிழ்ந்து கிடப்பது யாரு?" என்று வீறிட்டபடி அங்கே ஓடினாள்.

அடுத்தகணம்,"ஐயோ' என்று அலறினாள்.

தொடரும்---
மேலும் படிக்க... "காலமெல்லாம் காத்திருப்பேன்."

Friday, April 25, 2008

எனக்கு எப்போதும் இரண்டாவது இடம்

கூட்டம் ஆரம்பிக்க இன்னும் சில நிமிஷங்களே இருந்தன உதயன் தலைவரின் அருகே போய் நின்றுகொண்டுவிட்டான். நான் வழக்கம் போல இரண்டாவதாய் சற்று தள்ளிநின்று கொண்டேன். எனக்குப்பின்னே முகிலன், நிலவன் ஏனையோர்

தலைவர் அரசியலில் மிகவும் பிரபலமானவர். இருமுறை மந்திரிபதவி வகித்தவர். இப்போதும் தேர்தல்கூட்டத்திற்குத்தான் நாங்கள் கோவைக்கு வந்திருக்கிறோம். தலைவரைப்பற்றி எதிர்கட்சிகள் அவதூறாய்ப் பேசினாலும் அவர்மீது எனக்கு அபிமானம் உண்டு.

ஆனால் உதயனைப்போல தலைவருக்கு ஐஸ் வைக்க எனக்குத்தெரிவதில்லை. உண்மையான தொண்டன் எதற்கு தன் தலைவருக்கு ஐஸ் வைக்க வேண்டும் ?இயல்பாய் இருந்தால்போதாதா என நினைத்தே நான் பின்னுக்குபோய்விட்டேன் ,உதயன் முன்னால்போய்விட்டான்.அவனுக்குத்தான் தலைவர் முதலிடம் கொடுத்திருக்கிறார் நான் இரண்டாமிடத்தில். உதயன் இல்லையென்றால் மட்டும் என்னை அழைப்பார் முதலில்.

தலைவரின் பின்னே நாங்கள் ஐந்தாறு பேர் எப்போதும் அவர் எங்கு சென்றாலும் உடன் செல்வோம் ..இப்போதும்

உதயன் குனிந்து கைகட்டி தலைவரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். அவரும் அவனுக்கு
சின்னக்குரலில சில ஆணைகள் இட்ட் வண்ணம் இருந்தார். கூட்டத்தில் பலரின் கண்கள் உதயனைப்பொறாமையுடன் பார்த்தன.

என் மனைவி சொல்வாள்."உங்களுக்குப்பிழைக்கத் தெரியலீங்க....இந்த உலகத்துல முகமூடி போட்டுக்கிட்டுத்தான் பழகணும்..நாம் நாமாக இருந்தா யாரும் மதிக்க மாட்டாங்க..நீங்க இருக்கறதோ அரசியல் என்கிற முகமூடிக்கொள்ளைக்காரங்களின் பாசறைல ..இதுல உத்தம்புத்திரனா இருப்பேன்னு பிடிவாதம் பிடிச்சா இப்படியே ரெண்டாமிடத்துல இருக்கவேண்டியதுதான்... வேற வழியே இல்ல"

அரசியலிலோ திரைஉலகிலோ நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று என்னைப்போல நாலுபேராவது இருந்தால் தானே மக்களுக்கு மனதில் அவைகளைப்பற்றி நல்ல எண்ணம் வரும்?

ஆனாலும் இந்தக்கூட்டத்தில் உதயனைவிட எனக்கு முன்னுரிமைதருவார் தலைவர் என எதிர்பார்த்திருந்தேன் கூட்டம் அமைக்கப் படாதபாடுபட்டது நான் என்பது எல்லாருக்கும் தெரியும்.

ஆனாலும் இப்போதும் இரண்டாம் இடம் எனக்கு.

பொறுமை இழந்துவிடுவேன் போலிருக்கிறது.
மேடையில் தலைவரின் நாற்காலிக்குப்பின்னே பவ்யமாய் உதயன் நின்றுகொண்டிருக்க மேடையின் பின்னே பளபளக்கும் சாடின் திரையின் ஓரமாய் அனாதையாய் நான்..

என் தலைகுனிகிறது.

குனியக்குனியக்குட்டுவார்களோ? இருக்கும் இருக்கும். கூட்டம் முடியட்டும் தலைவரிடமேபொங்கிவிடவேண்டும்

நினைத்துக்கொண்டே நான் விழிகளை உயர்த்தவும்' டுமீல் டுமீல 'என இருமூறை துப்பாக்கிகுண்டுவெடிக்கவும் சரியாக இருக்கிறது.

'ஐயோ ஐயோ'

கூட்டம் சிதறிசின்னாபின்னமாகிறது
.
மேடை நிலைகுலைகிறது.

"தலைவரை சுட்டுட்டான் யாரோ ஒருபாவி.பக்கத்துலயே நின்னுட்டு இருந்த உதயனுக்கும் குண்டடிபட்டு, ரண்டுபேரும் ரத்த வெள்ளத்துலகிடக்கிறாங்க.." ஓலமிட்டது ஒருகுரல்.

"யாராவது ரெண்டுபேரு வாங்க... தலைவரைத்தூக்கிப்பாருங்க மூச்சு இருக்கா பாக்கணும்"
தொண்டர் ஒருவர் கூக்குரலிட்டார்.

முகிலன் விரைகிறான் முதலில் .

பின்னாலேயே நானும் செல்கிறேன், மேடை ஓரமாய் ரத்தவெள்ளத்தில் அனாதையாய்கிடக்கும் உதயனின்மீது பார்வை படர்வதை தவிர்க்க இயலாதவனாக.


(வா வ ச ..இரண்டு போட்டிக்காக)
மேலும் படிக்க... "எனக்கு எப்போதும் இரண்டாவது இடம்"

காலமெல்லாம் காத்திருப்பேன்.

அத்தியாயம்-10.


எதிர் கட்டிடத்தில் கோகுலாஷ்டமி நிகழ்ச்சிகள் முடிந்து விட்டன.

அப்பார்ட்மெண்ட்டில் அனைவரும் தங்களது ஃப்ளாட்டுக்குத் திரும்ப ,சாரங்கன்
மட்டும் அந்த தியான மண்டபத்தில்
ஒரு தூண் ஒரமாக சாய்ந்து உட்கார்ந்திருந்தவன் அந்த ஆன்மிக சொற்பொழிவின் உள்
அர்த்தம் நிறைந்த கதையை மறுபடியும் அசை போட்டான். சட்டென உடம்பு
சிலிர்த்துப்போனது. ஏதோ புரிந்த மாதிரி இருந்தது, அமைதியான அந்த இடத்தில்
காதுக்குள் மீண்டும் மீண்டும் அந்தக்குரல் எதிரொலித்தது.


"இந்த ஜன்மாவும் நீ எனக்குக்கிடைக்காவிட்டால் , அடுத்த ஜன்மாவிலும் அதற்கு
அடுத்த ஜன்மாவிலும் ,........'


எங்கேயோ கேட்ட குரல்! அந்தக்குரலை உணர்ந்தான் சாரங்கன். எத்தனை ஆண்டுகள் ஆனால்
என்ன, மனிதர்களைக்காணாதபோதிலும் அடையாளம் காட்டுவது குரல்தானே?


ஒளி மறையலாம்.
ஒலி விலகுமா? கண்ணுக்குப்புலப்படாத ஒலியைக்காற்றின்வழியே பிடித்து சேமித்தும்
வைத்துவிடுகிறோம்.


சாரங்கனுக்குக்கண் பனிக்க ஆரம்பித்தது.


"மா....மாலதீ, நீயா? அன்று நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் இன்று இந்த இளம்
வயதிலேயே சந்நியாசினி போல
ஆகிவிட்டாயா தாயே? உன் மனதை அன்று நான் புரிந்துகொண்டும் , உன்னை மனதார
விரும்பியும்நிராகரித்ததற்கு இன்று எனக்கு ஒரு நம்பிக்கை துரோகி மனைவியாய்
கிடைத்து இருக்கிறாள். மன்னிச்சிடு மாலதி இந்தப்பாவியை?'
வாய்விட்டுப்புலம்பி விட்டான்.குரல்கேட்டு அந்த இல்லத்தின் செயலாளர் ஓடி
வந்தார்.


சாரங்கனைப்பார்த்ததும் "சார்... நீங்க இன்னும் வீட்டுக்குப்போகலயா?
எல்லாரும் போயிட்டாங்களே... இங்கயே தங்கலாம்னாலும் தங்கிக்கலாம்..
உள்ளவாங்க".என்று கனிவோடு சொன்னார். அந்த அன்பும் கனிவும் அந்த இல்லத்தில்
பணிபுரிபவர்களின் சிறப்பு குணங்கள்.


அன்புதான் அங்குதாய்மொழி.


அந்த அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவரைப்பார்த்து சாரங்கன்," "ஐயா! இந்த
இல்லத்தலைவிக்கு சொந்த ஊர் எது அவங்களோட பூர்வாங்கபேர் என்ன ?அவங்க இந்த
ஸ்தாபனம் அமைக்க யார் உதவி செய்தாங்க ?இதெல்லாம்
கொஞ்சம் சொல்லுங்களேன் " என்று கேட்டான்


"சொல்றேன்..." என்று ஆரம்பித்த அந்தபெரியவர் முழுக்கதையை கூறி முடித்தபோது
சொற்பொழிவாற்றிய அந்த்ப்பெண், கருணானந்தமயீ என்ற பெயரில் இப்போது மற்றவர்களால்

அறியப்பட்டாலும் அது டில்லியில் தன்னை ஆழமாய் காதலித்த
மாலதிதான் என்பது சாரங்கனுக்கு உறுதியாகிப்போனது.
அவள் அப்பாவின் சொத்துக்கள் கோர்ட்டில் கேசில் இருப்பதாக முன்பு சொல்லி
இருந்தாள் அவை இபபொழுது கைக்குவரவும், அவள்அப்பாவும் மரணமடையவும் மாலதி
பெங்களூர்வந்து அனாதை இல்லம் ஆரம்பித்திருக்கிறாள், அதுவும் சாரங்கன் குடி
இருந்த பகுதிக்கு எதிரிலேயே.


எதிரேயே எட்டுமாதங்களாய் வந்து போய்க்கொண்டிருந்தவளை இத்தனை நாள்
பார்க்காமலேயே இருந்திருக்கிறேனா?


"ஐயா நான் அவங்களைஉடனே பார்த்துப்பேசணும் உதவ இயலுமா?" சாரங்கன் அவசர அவசரமாய் கேட்டான்.


'வாருங்கள்! தன்னை எந்த நேரத்தில் யார் பார்க்க வந்தாலும் தலைவி
மறுக்கமாட்டாங்க."..அந்தப்பெரியவர் சாரங்கனை
மாலதியின் அறைக்கு அழைத்து சென்றார்.

ஆனால் அங்கு மாலதி இல்லை


*தொடரும்*
மேலும் படிக்க... "காலமெல்லாம் காத்திருப்பேன்."

Monday, April 21, 2008

காலமெல்லாம் காத்திருப்பேன்.

அத்தியாயம்.9.
"ஹலோ மஞ்சுநாத்?"


ஜெய்நகர் போவதாக சாரங்கனிடம் சொல்லிய ராதிகா தெருமுனையிலிருந்த பார்க்கில்
போய் ஒரு பெஞ்சில் உட்கார்ந்துகொண்டாள். சுற்றிலும் பார்வையை நுழைத்தபடி செல்போனில் மஞ்சுநாத்தை அழைத்தாள்


ஏற்கனவே ஆபீசில்தான் வசமாய்மாட்டிக்கொண்டுவிட்ட கவலையில் வீட்டில்
முடங்கிக்கிடந்த மஞ்சுநாத்
ராதிகாவின் அழைப்பை வழக்கம்போல் ஆரவ்மாய் ஏற்காமல் சுரத்தில்லாமல்
" ஹலோ ?"என்றான்.


" ஹேய் மஞ்சு, வேர் ஆர் யூ யா? இங்க, சாரங்கனுக்கு சந்தேகம்
வந்திடிச்சி..இன்னிக்கு ஆபிசிலிருந்து வந்ததுமுதல் கேள்வியா கேட்டு தாக்கறாரு.
நீ வாங்கித்தந்த வைரநெக்லசை சந்தேகமா கையில் வாங்கிப்பாத்தாரு நான்
கவரிங்குனு அடிச்சி சொல்லிட்டேன்.ஆனா முகம் சரியாஇல்ல... எனக்குபயமா
இருக்கு..சாதுமிரண்டா காடு கொள்ளாதும்பாங்க இல்ல?"


"உன் புருஷன் முகம் சரியா இல்லாம போகக் காரணம் ஆபிசில் என் கோல்மால்
தெரிஞ்சுபோனதுலதான்
நீ கவலைப்படாதே டியர்.. அப்றோம் ஒருவிஷயம்...."


"என்ன சொல்லு?"


"ராது,அந்த வைரநெக்லசை திருப்பித்தந்துடேன்?"


"ஐயோ!எதுக்குதரணும்?ஆசையா நான் கேட்டேன்னு நீ வாங்கித்தந்தியே மறந்திட்டியா?"


"ஆபீசில் நான்பணத்தை திரும்பக்கட்டணும் ராதிகா...கைல பைசா காசு இல்ல..நெக்லசை
வித்து முதல்ல கொஞ்சம் கட்டிடலாம்னு பாக்றேன் இல்லாட்டி வேலை போய்டும்"


"ஹேய் போடா..உனக்கும் எனக்கும் இன்னிக்கு நேத்திக்குப் பழக்கமா? என்பள்ளிக்கூட
நாளில் நான் சென்னைக்கு எஸ்கர்ஷன் போனபோது அங்க பீச்சில் என்னை நீ
பாத்துகண்ணடிச்சே .அப்றோம் என்னையே ஃபாலோ செய்து என் ஊருக்கும் வந்தே..அங்க
தோப்புல சந்திச்சிட்டோ ம்.போன்ல லெட்டர்ல நிறைய நாம பேசிட்டு இருந்தோம்..நடுல
நாந்தான் வேலைவிஷய்மா பம்பாய் போனேன் பிசியாயிட்டேன்..நமக்குள்ள தொடர்பே
இல்லாம் போச்சி..ஆனா கடைசில உன்னை எதிர்பாராமல் இதே ஊர்ல சந்திச்சதும்
குஷியாபோச்சி. உனக்காக நான் எத்தனைதடவை என்னை இழந்திருப்பேன்? நீ எனக்காக் அந்த
வைரநெக்லசைஇழக்கக் கூடாதாக்கும்?'


'ராதிகா! நான் சிக்கல்ல மாட்டிட்டு இருக்கேன். பணம் கட்டலேன்னா
ஜெயிலுக்குபோகணும் .
அதான் கேக்கறேன் இதபாரு,நாளைக்கு சாரங்கன் ஆபீஸ்புறப்பட்டுப் போனதும் நான் வீடு
வரேன் நெக்லசை என்கிட்ட கொடு ப்ளீஸ்"


"......................"


...அடப்பாவி ஒருத்தன் சிக்கல்ல மாட்டிட்டு கஷ்டப்படறேன்னு சொல்றேன் நீ நெக்லசை
தர மறுக்கிறே?
பாதகி! காரியவாதி! நீ சாரங்கனை ஏமாத்தலாம் என்னை ஏமாத்த நினச்சே..மகளே
உன்னைநான் தொலைச்சிக்கட்டிடுவேன் ஆமா.."


மஞ்சுநாத் இணைப்பை துண்டித்ததும் ராதிகா அரண்டுபோனாள்.

மஞ்சுநாத் கையில் இனி காசு கிடையாது போலிருக்கிறதே ?கொடுத்த நகையையே
திருப்பிக்
கேட்கிறானே?
இவனைநம்பி இனி வாழமுடியாது.. வேற ஆளைப்பார்க்க வேண்டியதுதான்.. பேசாம
வீட்டுக்குப்போயி
துணிமணிகளைமூட்டைகட்டிட்டு விடியறதுக்குள்ள எங்காவது ஓடிப்போயிடணும்.. வேற
சுகவாழ்க்கைதேடிக்கணும்..புருஷனும் உஷாராயிட்டான் ..கள்ளக்காதலனும்
காசிபணமில்லாத நிலைல இருக்கான்...இனி இங்க நமக்கு
சரிப்படாது..'


குழப்பமாய் தன் அபார்ட்மெண்ட் வந்தவளை கீழ் ஃப்ளாட்டில்குடி இருப்பவர்களின்
குழந்தை அழைத்தது.


"ஆன் ட்டீ?"


ராதிகா லிஃப்டில் ஏற இருந்தவள் திரும்பினாள்.


'ஹை...வர்ஷாகுட்டியா? என்ன தனியா இருட்டுல நிக்கற கண்ணு?"


"எதிர ஒரு பெரிய பில்டிங் வந்திருக்கே அதுல இன்னிக்கு சிறப்பு
நிகழ்ச்சியாம்..கோகுலாஷ்டமின்னு ராத்திரிபூரா பஜனை பாட்டு டான்ஸ் எல்லாம்
இருக்கு ....நம்ம ஃப்ளாட்ல எல்லாரும் போயிட்டாங்க ..சாரங் அங்கிளும் அங்கதான்
இருகாரு,நான் என்னோட டான்சுக்கு சலங்கை எடுத்துட்டுப்போக மறந்திட்டேன் அதான்
திரும்ப வீடுவந்தேன்... இப்போ போயிட்டே இருக்கேன்.நீங்களும் வரீங்களா ஆண்ட்டீ? " என்றது அந்த ஆறுவயது சிறுமி.


"நான் நானா? இல்லம்மா வேலை வீட்ல நிறைய இருக்கு ..இன்னும் டின்னரே செய்யல ...
நீ போய்ட்டுவா..."
என்றாள் ராதிகா..
'ஓகே ஆண்ட்டி"


வீட்டிற்குள் நுழைந்து பால்கனிஓரமாய் நின்று வெளியே பார்த்தாள்.


எதிர்கட்டிடத்திலிருந்து மைக்கில் ஒரு பெண்ணின் குரலில் தீர்க்கமான சொற்பொழிவு
நடந்துகொண்டிருந்தது காதில் விழ ஆரம்பித்தது.
'தத்வ விவேகா விஷ்ணுபுராணாத் என்று விஷ்ணுபுராணத்தை மிகவும்
கொண்டாடிப்பேசுகிறார் ஆதிசங்கரர். எங்கும் வியாபித்திருக்கிற பரமாத்மா தான்
ஸ்ரீ கிருஷ்ணபகவான். அவனிடம் ஆத்மார்த்த பக்தி கொண்டள் ருக்மிணி. அவள்
கிருஷ்ணனுக்கு ஏழு சுலோகங்களை எழுதி அனுப்பினாள்.அதில் ஏழாவது சுலோகமாக,'இந்த
ஜன்மத்தில் நீ எனக்குக்கிடைக்காவிட்டாலும் அடுத்த ஜன்மத்திலும் அதற்கு
அடுத்தடுத்த ஜன்மத்திலும் தொடரும் நூறு ஜன்மங்களிலும் உன்னையே தொடர்ந்து அடைய
முயற்சி செய்வேன்' என்று பொருள்பட எழுதினாள். நூறு ஜனமம் என்று ருக்மிணி கணக்கு
சொல்வது எண்ணிக்கையைக்குறிக்க அல்ல. ஆயிரம் ஆயிரம் என்று வேதம் சொல்வதெல்லாம்
வெறும் ஆயிரம் இல்லை. அனேகம் என்ற பொருளில் உபயோகப்படுகிறது.'சதம்'என்பது
எண்ணிக்கையைக் குறிக்க வந்ததன்று. அதேபோலத்தான் சஹஸ்ரம் என்பதும். உலகையே
அளந்தவனை எண்ணிக்கையில் அடக்கிவிட இயலுமா?சஹஸ்ரநாமங்கள் இருப்பினும் 'கோவிந்தா'
என்று பக்தன் குரல்கேட்டதும் ஓடிவருபவன் க்ருஷ்ணன். அதர்மம்
தலைதூக்கும்போதெல்லாம் தன் அடியார்களுக்கு இன்னல் வரும்போதெல்லாம் அவர்களை
ரட்சிக்க அவதாரம் எடுப்பவனகடவுள்.


*பரித்ராணாய சாதூனாம் வினாசாய துஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே!
.*


ராதிகா சட்டென தன் செவிகளை கரங்களால் மூடிக்கொண்டாள்." ஸ்டுபிடா இருக்கு
இந்தப்பேச்செல்லாம்!ஹ்ம்ம்...இந்த மாதிரி பழைய கதை பேசியே மக்களை உருப்படாம
அடிக்கிற கூட்டம் இது... ஆன்மீகமாம் சொற்பொழிவாம்! அழகா ஒரு டிஸ்கோ டான்ஸ்
வச்சிருக்கலாம்.'

முணுமுணுத்தபடி அடுத்து என்ன செய்யலாம் எனதிட்டமிட்டவள் யோசித்துக்குழம்பி ஒரு
முடிவிற்கு வந்தபோது மணி நடுநிசியைய்த்தாண்டி விட்டிருந்தது. பம்பாயில்
கொஞ்சநாள் இருந்தபோது பழகிய ஒரு ஹிந்திக்கார இளைஞனின் நினைவுவந்தது. பால்கனி
சுவரில் சாய்ந்துகொண்டு,அவனுக்கு போன் செய்தாள்.

"ரத்தன் சிங்! நான் பம்பாய் வரேன்....உன்கூட தங்கப்போறேன் ..சரியா?
ஓ..லவ்லிபாய்! சோ ஸ்வீட் ஆஃப்யூ! ஆமா ...கல்யாண வாழ்க்கைபோர்
அடிக்குது...அதான் இதுக்கு பைபை சொல்லிட்டு உன்னைப்பாக்க வரேன்.. இதோகிளம்பிட்டே
இருக்கேன் ரத்தன்சிங்..பம்பாய் வந்து போன் செய்றேன்.."

போனை வைத்துவிட்டு பால்கனியிலிருந்து அறைக்கு வந்தாள்.

எதிர் கட்டிடத்திலிருந்து யாரோ
'அன்பர்கள் பிரசாதம் பெற்றுக்கொண்டு செல்லவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்'
ஸ்பீக்கரில் யாரோ உரக்கக்கேட்டுக்கொண்டார்.


"ஓ நிகழ்ச்சிகள் முடிஞ்சிடிச்சா?அப்போ எல்லாரும்
ஃப்ளாட்டுக்குத்திரும்பிடுவாங்க...அதுக்கு முன்னாடி ஜூட் விடணுமே?'


ராதிகா சூட்கேசில் வேண்டியதை அடைத்துக்கொண்டு அறையினின்றும் ஹாலிற்குவந்தாள்.
வாசல்கதவைத்திறக்க இருந்தவளை சட்டென தடுத்து நிறுத்தியது ஒரு கரம்.

ராதிகா வெளிறிபோன முகத்துடன் நிமிர்ந்தாள்.

உடல்முழுவதும் கறுப்புத்துணி போர்த்திக்கொண்டிருந்த அந்த உருவம், ராதிகாவை
முட்டித்தள்ளி சுவர் மூலையில் கொண்டு நிறுத்தியது.

'ஏய் யார் நீ.? யாரு? நான் போலீசைக் கூ...கூப்பிடுவே....." முடிப்பதற்குள் அவள்
செல்போனை பிடுங்கிக்கொண்ட அந்த உருவம் , தன் கையிலிருந்த ரிவால்வரை அவளை நோக்கி நீட்டியது.
ராதிகா பயத்தில் கண்கள் நிலைகுத்த அப்படியே நின்றாள்.

தொடரும்...
மேலும் படிக்க... "காலமெல்லாம் காத்திருப்பேன்."

Tuesday, April 15, 2008

காலமெல்லாம் காத்திருப்பேன்.

காலமெல்லாம் காத்திருப்பேன்
அத்தியாயம் 8

"சுமித்ரா! சுமித்ரா!"

எதிர்வீட்டு பாக்யா அலறிக்கொண்டு ஓடிவந்தாள்

கோகுலாஷ்டமிக்காக பூஜை அறையை அலங்கரித்துக்கொண்டிருந்த சுமித்ரா நிமிர்ந்தாள்.

"வா பாக்யா!ரொம்ப பதட்டமாய் தெரியறியே, உக்கார்ந்து நிதானமா சொல்லேன்?' என்றாள்
மென்மையானகுரலில்.

சாரங்கனைப்போல சுமித்ராவிற்கும் அதிர்ந்து பேசிப்பழக்கமில்லை.

"சு சுமித்ரா...உன் பொறுமைக்கு சோதனை வந்திடிச்சி...ஆமா..உன் புருஷனை..உன் புருஷனை.."

"என்னாச்சு பாக்யா? என்புருஷனுக்கு என்னாச்சு?" சுமித்ரா பதட்டமாய் கேட்டாள்.

"உன் புருஷனை போலீஸ் பிடிச்சிட்டுப்போயிட்டிச்சி.."

"என்ன, போலீசா?"

"ஆமா..மேலத்தெருவுல இருக்கற உங்க சம்மந்தி-அதான் சாரங்கன்மாமனாரை உன் புருஷன்
அரிவாளில் வெட்டிப்போட்டுட்டானாம்"


"ஐயோ"

'பேச்சுவார்த்தையில ஆரம்பிச்சி கடைசில அது இப்படி ஆயிடிச்சின்னு பாத்தவங்க சொன்னாங்க.. "

சுமித்ரா தலையில் அடித்துக்கொண்டபடி போலீஸ் ஸ்டேஷனுக்குப்போனாள்.

லாக்கப்பில் இருந்த சீனீவாசன் இவளைக்கண்டதும் கதறி அழ ஆரம்பித்தான்.

"சுமித்ரா! என்னை மன்னிச்சிடு. நான் உனக்கும் உன் தம்பிக்கும் துரோகம் செஞ்சிட்டேன்...அந்தப்
பொண்ணு ராதிகா நல்ல பொண்ணு இல்ல. சினிமா ஆசைல ஒருவருஷம் முன்னாடியாரோடயோ பம்பாய் போயி சுத்திட்டு வீடுவந்தவ. அதெல்லாம் தெரிஞ்சும் அவன் அப்பன் எனக்குபணம் தர்ரதா சொன்னதால உங்க ரண்டுபேருகிட்டயும் அதை மறைச்சி சாரங்கனுக்கு ராதிகாவை கட்டிவச்சேன். இப்போ எனக்குப் பணம் வேணும்னு அவன்கிட்ட கேக்கப்போயி அவன் இல்லைன்னதும் கோபத்துல கத்தினேன்,"ஏண்டா..உன் பொண்ணு கதை தெரிஞ்சா எவன் கட்டிக்குவான்னு நான் பரிதாப்பட்டு சாரங்கனுக்கு கட்டிவச்சேன்,,அதுக்குக்கூலியா அப்பப்போ பணம் கேக்கறேன் முதல்ல ஒத்துக்கிட்டு இப்போ முடியாதுன்னு கைவிரிக்கிறியே மக கழுத்துல தாலி ஏறி அவ பெங்களூர்ல சந்தோஷமா குடித்தனம் நடத்தற திமிரா உனக்கு?'ன்னு கேட்டேன்.

அதுக்கு அவன்'ராதிகா சாரங்கனோட சந்தோஷமா இருக்காளோ இல்ல
தன் போக்குல வழக்கம்போல எவன்கூட சுத்தறாளோ எனக்குக்கவலை இல்ல.என் பொறுப்பு
விட்டது...ஏதோ ஊர்வாய அடைக்க ஒருகல்யாணம் செய்து அனுப்பிட்டேன் அவ்வளோதான். என் காரியம் ஆச்சி. உனக்கு பைசாகாசுதரமாட்டேன்னான்.கெஞ்சினேன் கதறினேன் ..கடைசில....கடைசில.."

சொல்லிவிட்டு தலைகுனிந்தவனை எரிச்சலுடன் பார்த்தாள் சுமித்ரா.

:ஐயோ ..என் வாழ்கையை நாசம் செஞ்சது போதாதுன்னு என் அன்புத்தம்பிவாழ்க்கையையும் நாசம்
பண்ணிட்டியே பாவி மனுஷா ?சாரங்கன் வெகுளி ,அவனை ஏமாத்தறது சுலபம் ..அந்த ராதிகாமட்டும் என் தம்பிகூட ஒழுங்கா வாழாமல் இருப்பதா எனக்கு தெரியவந்திச்சி, அவளை என்கையாலயே திர்த்துக்கட்டிட்டு
நானும் உன்கூட ஜெயிலுக்கு வரேன் இப்பவே நேர்ல போய் பார்த்துடறேன்.."

சுமித்ரா ஆற்றாமையாய் தலையில் அடித்துக்கொண்டு இருட்டத் தொடங்கிய அந்தநேரத்தில் பஸ்ஸ்டாண்டிற்கு வந்தாள்.

தொடரும்.....
மேலும் படிக்க... "காலமெல்லாம் காத்திருப்பேன்."

Saturday, April 12, 2008

சித்திரைப்பெண்ணே! சித்திரைப்பெண்ணே!

மெல்லசிவந்த மாங்கொழுந்தும்
மண்ணில் சிதறிக்கிடக்கும் வேம்பூவும்
கொள்ளை அழகாய் நறுமலர்கள்பூக்கக்
கொண்டாடிவரும் வசந்தமுடன்
மஞ்சள்பலாவும் பலஇன் கனியும்
மக்கள் மகிழத் திருவிழாக்களும்
பஞ்சமின்றி பாரில் தந்திடவே
பாவை சித்திரை வருகின்றாள்

உண்ணும் உணவிலும் வாழ்க்கையின்
உயர்ந்த தத்துவம் பல உண்டு
எண்ணிப் பார்க்கையிலே அதுவும்
எளிதில் நமக்கு புலனாகும்
இனிக்கும் வாழ்க்கை என்றைக்கும்
இசைந்தே கசப்பையும் ஏற்றுவிடும்
விரும்பி கசப்பை உண்ணுவதை
வேப்பம்பூபச்சடி உணர்த்திவிடும்


ஊழிக்கால ஓவியத்தேரை
ஒவ்வொருவருடமும் ஓட்டிவரும்
வாழி சித்திரை !வாழிய நீ!
வாழ்வில் வளமே தங்கும் இனி!
மேலும் படிக்க... "சித்திரைப்பெண்ணே! சித்திரைப்பெண்ணே!"

Friday, April 11, 2008

சித்திரையே வருவாய்!

வசந்தமதை வரவழைத்து
வாசலிலே நிற்கவைத்து
வாசனை மலர்கள் அளித்து
வாழ்த்துகூற வந்தனையோ?


விழியின் மணியேபோல்
விரித்தமலர் மணமேபோல்
உரித்துவைத்த முக்கனிச் சுவையேபோல்
உவந்த தமிழ் சொல்லே போல்
சிரித்துவரும் மழலைபோல்
சித்திரையே நீ வந்தாயோ!

ஓய்வின்றி உழைப்பவரை
உலகில் வளர்ப்பாய்!
தாயாகி அன்புமழை
தரணிக்குத் தருவாய்!
தமிழ்நாட்டோ டு வையகமும்
தழைத்திடச் செய்வாய்!
மேலும் படிக்க... "சித்திரையே வருவாய்!"

Thursday, April 10, 2008

காலமெல்லாம் காத்திருப்பேன்!

காலமெல்லாம் காத்திருப்பேன்
அத்தியாயம் 7




சந்தேக நூலிழை கயிறாகமுன்பு அதை அறுத்து எறிய நினைத்த சாரங்கன், அன்று வீடுவந்ததும் ராதிகாவை அழைத்தான்.

"என்ன இது புதுசா இருக்கு குரலை உயர்த்தி என் பேரைச்சொல்லிக்கூப்பிடறீங்க?" வியந்தாள் ராதிகா.

'காரணம் இருக்கு ராதிகா..ஆமா அன்னிக்கு எனக்காக வாங்கினதாய் நீ காண்பித்த அந்த பித்தளைபட்டர்ப்ளை வச்ச ஷூ எங்க?
ஷூ ராக்கிலயும் காணோமே?' என்று சாரங்கன் கேட்டான்.

"அ அது அதுவந்து... அந்த மாடல் உங்க அழகுக்கு எடுபடாதுன்னு கடைல கொண்டுபோய் கொடுத்து அதுக்கு பதிலா எனக்கு ஒரு சப்பல் வாங்கிட்டேன்."

நிஜம்தானே இது ராதிகா?

பின்ன நா நான் என்ன திட்டம்போட்டு பொய் சொல்றேனா ? சரி அபத்தமாய் பேசறதைவிட்டு இந்த காஃபியைக்குடிங்க நான் ஜெய்நகர் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் போகணும்.."

எதுக்கு போகணும்?

என்ன கேள்வி இது? வெஜிடபிள் வாங்கிவரத்தான்..


என்கூட பைக்குல வாயேன் நான் அழைச்சிட்டுப்போறேன்

போதும் உங்க கூட பைக்கில வந்தா பின்னாடி வரும் சைக்கிள் ஓவர்டேக் செய்யுது நம்ம வண்டியை அவ்வளோ மெதுவா ஓட்டறீங்க!"

ஸ்லோ அண் ட் ஸ்டெடி நான்

எனக்கு ஸ்பீட் தான் பிடிக்கும் சரி நான் ஆட்டோ ல போயிட்டுவரேன்

அமர்க்களமாய் அலங்கரித்துக்கொண்டு அவள்புறப்படவும் சாரங்கன் அழைத்தான்.

ராதிகா?


அடட்டா எனாச்சு இன்னிக்கு உங்களுக்கு ?சும்மா கூப்பிட்டறீங்க ஏதேதோ கேக்கறீங்க ?

ராதிகா! இருட்டப்போற நேரத்துல உன் கழுத்துல எதுக்கு இப்படி ஒரு டால் அடிக்கும் நெக்லஸ்? ஆமா அது என்ன வைரமா இப்படிமின்னுகிறதே?

வைரமா? அதெல்லாம் சாத்தியமா நமக்கு? எல்லாம் போலிகற்கள்தான்..நகையும் தங்கமேஇல்ல...கவரிங்தான்"

அப்படியா கைலகொடு நான் பார்க்கிறேன்

ஹலோ எதுக்கு உங்களுக்கு பெண்கள் நகையெல்லாம்?


கொடுக்கறியா இல்லையா?

சாரங்கனின் உஷ்ணக்குரலில் சற்றே அதிர்ந்த ராதிகா நெக்லசைக் கழற்றினாள்

கோபமாய் "இந்தாங்க" என்றாள்

நெக்லசைவாங்கியதுமே அது கனத்தது. கற்களின் மிதமான ஒளி வைரம் என்பதை உறுதிப்படுத்தியது.

போலிகள்தான் அதிகமாய் மின்னும்..அசலுக்குத்தான் கனம் அதிகம். தங்கசங்கிலியில் பதிக்கப்பட்ட வைரநெக்லஸ்தான் அது என்பதை உணர்ந்த சாரங்கன் அதை திருப்பி அவளிடமே கொடுக்கவும் வாங்கி அணிந்தவள் விருட்டென வெளியேறினாள்.

அவள் நகர்ந்ததும் வாசல் கதவைத் தாளிட்டான் சாரங்கன்.

அறைக்குள் நுழைந்து ராதிகாவின் பீரோவைத்திறந்தான். குடித்தனம் வந்ததும் அவள் ஆசைப்பட்டாளே என வாங்கித்தந்த புது பீரோ.அவனுடையதற்கென தனி வார்ட்ரோப் இருக்கிறது .உடைகளில் கூட கணவனோடு சேர்ந்து இருக்க விரும்பாத பெண் தனக்கு மனைவியாக வாய்த்ததை எண்ணி ஒருக்கணம் வருந்தினான்.

மற்றவர் பொருட்களை -அது மனைவியாக இருந்தாலும்- தொடவிரும்பாத சாரங்கன் ,கண்களில் எரிச்சலோடு பீரோவைக்குடைந்தான்.

சேலைகள் சுடிதார்கள் ஜீன்ஸ்டாப்ஸ் உள்ளாடைகள் என்று அடைத்துவைத்திருந்தாள். அடுக்கி ஒழுங்காக எதுவுமேஇல்லை.
ராதிகாவின் மனதைப்போல அதுவும் சிதறி காணப்பட்டது. அவைகளில் எதையோ தேடினான்.

சில்நிமிடங்களில் கண்டுபிடித்தான்.

அது ஒரு வெல்வெட்நகைப்பெட்டி.

அதைத்திறந்தான்.

பெட்டியில் நகை இல்லை ஆனால் ஒரு சீட்டு இருந்தது.

எடுத்தான் பிரித்தான் படித்தான்.

'வித் லவ் டு மை ஸ்வீட்கார்ட் ஃப்ரம் மஞ்சு 'என்று எழுதி இருந்தது.

அதிலேயே நெக்லஸ்வாங்கிய ரசீதும் இருந்தது.. க்ருஷ்ணையாசெட்டி நகைக்கடையில் வைரநெக்லஸ் ஒன்று நான்குலட்சத்திற்கு வாங்கின ரசீது.

"மஞ்சுநாத்!துரோகி!' சாரங்கனின் வாய் கோபமாய் கத்தியது.

ஷூவில் ஏற்பட்டசந்தேகம் காரணமாய் நெக்லஸ் விஷயத்தை சோதனை செய்ய உண்மைதெரியவந்தது.

கம்பெனியில் சுருட்டிய பணத்தில் தன் மனைவிக்கு-அவனுடைய காதலிக்கு- மஞ்சுநாத் நெக்லஸ்வாங்கிக்கொடுத்ததை தன் கண்களால்
பார்க்க நேரிட்டதை தாங்க இயலாதவனாய் நின்றான்.

பழைய்படிபீரோவைபூட்டிவிட்டு ஹாலிற்குள் நுழைந்தான்.

படபடப்பாய்வந்தது .

தண்ணீர்குடிக்க சமையலறைக்குப் போகும்பொது காலிங்பெல் அடிக்கப்படவும் தயங்கிப்பின் திறந்தான்.

வாசலில் பத்ரி நின்றுகொண்டிருந்தார்.

இவனைக் கண்டதும்,
"சாரங்கா! என்னப்பா முகமெல்லம் சிவந்திருக்கு ?அன்றலர்ந்ததாமரை போல எப்போவுமே இருக்குமே உன்முகம்? உடம்புசரீல்லையாப்பா? நான் உன்னை எதிர்கட்டிடத்திறப்புவிழான்னு இன்னிக்கு நடக்க இருக்கிற ஆன்மிக சொற்பொழிவுக்கு அழைத்துப் போக வந்தேன்...இன்னிக்குகோகுலாஷ்டமிதினம் தெரியுமா உனக்கு?" என்றார்.

'கோகுலாஷ்டமியா இன்றைக்கு? உலகை ரட்சிக்க துஷ்டர்களை அழிக்கஅவதாரம் செய்த க்ருஷ்ணின் ஜன்ம தினமா? இதைக்கொண்டாடக்கூட நேரமில்லாம்ல் ஊர் சுற்றுகிறாள் ராதிகா!

நரகாசுரன் என்கிற அசுரனை அழிக்க நாராயணன் அவதாரம்செய்தார். ராவணனை அழிக்க ராமாவதாரம்நடந்தது.
துஷ்டர்களை அழிக்க கடவுள்களேஅவதாரம் எடுக்கிறார்கள்.

நான் ராமனாக இருக்கிறேன் ஆனால் என் மனைவி சீதையாக இல்லையே..

நம்பிய எனக்கு அவள் துரோகம் செய்கிறாள், அப்படியானால் நானும் அவதாரபுருஷனின் செயலை செய்தால் என்ன?'

என்னப்பா யோசிக்கறே?" என்று பத்ரிகேட்கவும் சுதாரித்த சாரங்கன்

"நான் வரேன் சார் உங்ககூட" என்றான்.

சாரங்கன் ஒருமுடிவோடு அவருடன் புறப்பட்டான்.

தொடரும்..
.
.
மேலும் படிக்க... "காலமெல்லாம் காத்திருப்பேன்!"

மூலிகையே! மூலிகையே!

முன்குறிப்பு..
மறக்காமல்பின்குறிப்பு பார்க்க:)

மேனகா ஆறுமாதம் முன்புவரை மேனகா கார்த்திகேயனாக இருந்தாள் இப்போது மூலிகைமாமணிமேனகாகார்த்திக் என்றாகிவிட்டாள்.


இந்த ஆறுமாதத்தில் நடந்தது என்னன்னு கேக்கறீங்களா?

ரொம்ப டார்டாய்ஸ் வத்தி சுத்தவேண்டாம்னாலும் நாலுமாதம்முன்பு என்பதால் கொஞ்சம்பின்னோக்கித்தான் போகணும்.

அன்னிக்கு ஹொசூர்-க்ருஷ்ணகிரி நெடுஞ்சாலைல நானும் மேனகாவும் போய்க்கொண்டிருந்த கார் ,
ஹோசுரைத் தாண்டியதுமே எல்லைதாண்டிய வருத்தமோ என்னவோ சட்டுனு நின்னுபோச்சி.

"என்னாச்சு ட் ரைவர்? நாங்க கிருஷ்ணகிரி மலைக்கோயில் பாக்கணும்னுதான்
காலைலயேபெங்களூரைவிட்டுப்புறப்பட்டோ ம் மணி 7ஆகுது...8மணிக்குள்ல போயிடமுடியுமா?'

"தெரில்லம்மா என் கார் ஆஞ்சநேயர் மாதிரி அதன் பலம் அதுக்கே தெரியாது நாமதான்
நினைவுபடுத்தணும்...இருங்க பாக்றேன்"

என்று கார்கீழே குனிந்தவர் நீங்க அப்படி "ஓரமாமர நிழல்ல உக்காருங்க இல்ல காலாற நடந்திட்டுவாங்களேன்...நான் ரிப்பேர் ஆனதும் செல்போன்ல கூப்பிடறேன்" என்றார்

நேரம் ஆனதே தவிர கார் ரிப்பேர் சரிஆகல...

஢ நாங்க பக்கத்துல ஏதோ பாதை தெரியவும் அதில் நடக்க ஆரம்பித்தோம்..பச்சைபச்சைநிறமேன்னு பாடலாம் போல அவ்ளோ பச்சைசுற்றிலும். அதைரசித்தபடி நடந்து வந்ததில் எங்கோவழிதவறிகாட்டுக்குள்புகுந்து விட்டதை உணர்ந்தோம்.

"பயமாருக்கே மனித சஞ்சாரமே இல்லையேடி?" நான் இருமுறை மரியாதையாய்(திருதிரு) முழித்தேன்.

"காட்டுவழிபோறபுள்ள கவலப்படாத.. "பாட ஆரம்பித்தாள் மேனகா.

மேனகா=துணிச்சல்.

ஆனாலும் இத்தனை துணிச்சல் ஆகுமா?


"வீரப்பன் வசிச்ச காடுமாதிரி இருக்கு...கரடி எதும் வரபோகுது ...திரும்பிப் போயிடலாமே...கார் ரிப்பேர் ஆயிடிச்சான்னு ட் ரைவர்கிட்ட கேக்கலாம்னு பார்த்தா செல்போன் ஒர்க் ஆகல...அவரும் போன் செய்து இந்தக்காட்டுல லைன் கிடச்சிருக்காதுபோல.."

"லைன்(lion)னதும் ஏதோ சிங்கம் உறுமறாப்ல இல்ல? கர்ஜனை கேக்குதா உனக்கு?"

"ஐயோ சி சி சிங்கமா? நாய் வள்ளுன்னாலே நடுங்கிபோறவளிடம் சிங்க கர்ஜனை கேட்குதான்னு கேக்கறியே மேனகா? உனக்கு இப்போகூட பயமேவராதா?"

"என்ன பயம்? கைப் பையில தான் ஆயுதம் இருக்கே, உன் உலகப் புகழ்பெற்ற மைபா?"

சுமதியின் கிண்டலுக்கு வேறு இடமாயிருந்தால் அவளுக்குக்கிடைக்கவேண்டிய தண்டனையே வித்தியாசமாய் இருந்திருக்கும் இங்கே
காட்டில் இப்போ அவளை நம்பி இருப்பதால் மௌனமாய் நின்றேன்.

"திரும்பிப் போயிடலாம் வா சுமதி" என நான் கெஞ்ச ஒருவழியாய் அவள் சம்மதிக்க ..


அப்போது

சிம்மகர்ஜனை அருகில் கேட்டுவிட்டது.பயத்தில் உடல் நடுங்க ஆரம்பித்தது. மரணபயம்.!

அன்புத்தம்பிவிழியன் கல்யாணத்துக்குப்போகும் முன்பே என்னை சிங்கம் விழுங்கிவிடுமா? ஐயோ என் கனவுகள் எல்லாம் நிறைவேறாமலே போய்விடுமா?

மறுபடி சிம்மகர்ஜனை..

ஐயோ சிங்கம் அருகில் மிக அருகில்...
நான் "ஆதீமூலமே அரங்கநாதானே காப்பத்து"கடைசிபிரார்த்தனைகளோடு கண்களைமூடிவிட்டேன்

மெல்லக் கண்திறந்தபோது........

எதிரில் காவிஉடையுடன் அறுபதுவயது மதிக்கத்தக்க பெரியவர் கொள்ளிடத்தில் சலவை செய்த வேட்டியின்வெள்ளை
நிறத்தில்தேன்கூடுபோல்தாடி வைத்துக்கொண்டு,சந்நியாசி மாதிரி தெரிந்தார்.
..அவர் கையில் கொடிகளும்பச்சைச்செடிகளும் சில இருந்தன எனலமா அல்லது அவைகள் அவர்மேல் படர்ந்திருந்தன எனலாமா என யோசிக்கையில்,

"ஷைலஜா..இவர்தான் சிங்கம்போக கர்ஜனை செய்தபடிநடந்துவந்தாராம்...காட்டுல விலங்குகள் வருமாம அதுக்குபாதுகாப்புக்கு இப்படி செய்வாராம் சொன்னாரே உன் காதுல விழலயா?" என மேனகா கேட்டாள்.

"எனக்குத்தான் கண்ணைமூடினதும் காதும் பயத்தில் அடைத்துக்கொண்டுவிட்டதே யார் என்ன பேசினார்களோ எதுவும் காதில் விழவில்லை
அப்போது.."
என்று சொல்ல வந்து சொல்லாமலே தயங்கினேன்.


"குழந்தைகளே!" என்றார்.

நாங்கள் பின்னாடிதிரும்பிப்பார்த்தோம் .

எந்தக் குழந்தையையும் காணவில்லை.

"உங்களைத்தான் குழந்தைகளே!" என்று எங்களை நோக்கி சொன்னார்.

ஆஹா ஏழுகழுதைவயதாகும் நாங்கள் குழந்தைகளா?:)

மகிழ்ச்சியில் உடல் எடை ஒருகிலோ ஐம்பதுமூணுகிராம் ஏறியது.

சுமதி சிரித்தபடி கைகுவித்தாள். அறிமுகப்படுத்திக்கொண்டு பிறகு,

வழிதெரியாமல் காட்டிற்குள் வந்த கதையை விவரித்தாள்.

நீங்க நல்ல உன்னதமான இடத்துக்கு வந்திருக்கீங்க..எல்லாரையும் இந்தப்பாதை இழுத்துவராது பெண்களே..பாக்கியசாலிகள் நீங்கள் அதான் வந்துவிட்டீர்கள்,ஆமாம்,,இந்தப்ரதேசம்முழுவதும் அபூர்வ மூலிகைகள் பல கொண்டது ..காற்றில் வீசும் நறுமணமே அதற்குசாட்சி.
கருணான்ந்த சமய்சஞ்சீவி வைத்தியசாலை முன்னாளில் தஞ்சாவூரில் ரொம்பப்பிரபலம்...சித்தவைத்தியம் மூலிகைசிகிச்சையில் புகழ்வாய்ந்தது. அந்த பரம்பரைல வந்தவன் அடியேன்... அபூர்வவைத்தியங்கள் செய்பவன்.."

"காளிமுத்து டாக்டர் மாதிரியாடீ?"

"உஸ் சும்மா இரு ஷைலஜா"

அவர் தன்கையிலிருந்த சிலசெடிகளின் இலைகளை கசக்கிப்பிழிந்து சாறு எடுத்தார். தனது வெண்தாடியின் ஒருபக்கம் தடவினார்
ஐந்தே நிமிஷங்களில்... என்ன ஆச்சரியம் நரைத்த அந்தமுடி சரேலென கருத்துப்போனதைக்கண்டோ ம்.

"ரசவாதம் தெரியுமா உங்களுக்கு?" சுமதியின் கண்களில் ஆயிரம் வாட்ஸ்பல்பு.
சிரித்தார் அவர் , பிறகு"அது சகலமும் அறிந்த சித்தர்களுக்குதெரியும் தாயே...நான் சாதாரண மானுடன்...ஆனால் மூலிகைரகசியங்கள்
அறிந்தவன் அவ்வளவுதான்" என்றார்.

சுமதி தனக்கு லேசாய் ஜலதோஷம் என்றாள்

இன்னொரு செடியின் இலைகளை முகரச்சொன்னார் தயங்கிதயங்கிமுகர்ந்தாள்
அடுத்த கண்மே தும்மல் நின்று ஜலதோஷம் போயேபோச் கான் போயிந்தி ஹோகித்து!

"இது போலபலமூலிகைகள் உள்ளன... இங்கு நான் ஒரு மூலீகைவைத்தியன் தான் ஆனால் நகரத்திற்குவரமாட்டேன் என்னைத்தேடி இங்குவருபவர்களுக்குமட்டும் சிகிச்சைஅளிப்பேன் விருப்பமுள்ளவர்களுக்கு மூலிகை ரகசியம் சொல்லித் தருவேன்"

எனக்கு மூலிகையாவது ரகசியமாவது எப்படியாவது காட்டைவிட்டு வெளியேபோய் சூடாய் ஒரு மசாலாடீ குடித்தால்தேவலைபோல் இருந்தது. அவருடைய உதவியுடன் வெளியே வந்துவிட்டோ ம்.

சுமதி அன்றிலிருந்து மூலிகைவைத்தியம் கற்க ஆரம்பித்துவிட்டாள்.

'இது மூக்கிரட்டை இலை இதை அரைச்சி அடிபட்டகாயத்துல போட்டால் பிளந்த காயம் ஒண்ணா சேர்ந்துடும்'

'தேமல்போகணுமா துவர்ப்பாக்கு வில்வ இலை நிலவேம்பு கஸ்தூரிமஞ்சள் இவைகளைப் பொடி செய்து நீரில்குழைத்து...' என்பாள்

இலுப்பைப்பூ கஷாயமாம் வல்லாரைக்கீரை துகையலாம்...

டூவீலரில் தனியாக அங்கேபோய் முலிகைசெடிகளைபறித்து அள்ளிக்கட்டிக்கொண்டுவந்துவிடுவாள்
பலநேரம் ஆடுமாடுகள் அவள் வண்டியைத்துரத்தி நெடுந்தொலைவு தொடர்ந்து வந்ததாய் பலர் சொன்னார்கள்.

எல்லாநோய்க்கும் தன்னால் ;மூலிகைசிகிச்சை செய்யமுடியும் என்பாள்...சித்தவைத்திய, மூலிகைசிகிச்சைமூலம் குழந்தைப்பேற்றினை உண்டாக்கும் டாக்டர் ஜமுனாவைப்போல தானும் வருங்காலத்தில் வரவேண்டும் என்பாள் உறுதியான குரலில்.

அனுமன் தூக்கிவந்த சஞ்சீவிமலை மூலிகைகள்தனக்குத் தெரியும் என்று குறிப்புகளைக்காட்டுவாள்.
தம்பணாமந்திரம் சொல்லி போகர் அவர் கையிலும் அகப்படாமல் விலகி ஓடும் அபூர்வ சஞ்சீவிமூலிகையை மந்திரத்தால்
கைப்பற்றிய கதையை விவரிப்பாள்
நாவல்மரப்பட்டையை நிழலில் உலர்த்தி அதைப்பொடிசெய்த சூரணம் பித்தத்தை நீக்கும் என சொல்வாள்.

அவள் கணவர் இதிலிருந்து தப்பிக்கவோ என்னவோ ஒருவருஷத்திற்கு ஆஸ்திரேலியாவில் வேலை மாற்றலாகிப்போய்விட்டார்.

குழந்தைகள் இருவரும் வரும் வருஷம் ஹாஸ்டலில் தங்கிப்படிப்பைத் தொடரலாமா என ஆலோசிப்பதாக குடும்பகிசுகிசு காற்றுவாக்கில் கசிந்துவந்தது!

நானும் மேனகாவீடுபோய்வந்தால் பச்சைஇலைக்கட்டுகளோடுதான் வீட்டிற்குத்திரும்புவதால் வீட்டில் எதிர்ப்புகிளம்பிவிட்டது. ஆனாலும் உற்ற தோழி மேனகா போய்ப்பார்க்காமல் இருக்கலாமா என்று நேற்று அவள்வீடு சென்றேன்.

இரண்டுபெண்கள் கல் உரலில் எதோஇலைகளைப்போட்டு மசிய அரைத்துக்கொண்டிருந்தார்கள். மூலிகை செடிகளின் நெடி தான் எங்கும்.

மேனகாதனக்குக்கிடைத்த பட்டத்தை சொல்லி மகிழ்ந்தாள். மூலிகைமாமணி மேனகாவாம்!
வாழ்த்திவிட்டு நைசாக நகர இருந்தவளை அதிசிய மூலிகைக்குளிகை என எதையோ கையில் தந்து என்னைமுழுங்கச் சொல்கிறாள்.
.
அதை சாப்பிட்டால் நினைத்த இடத்திற்குபோய்விடலாமாம். சோதனைமுயற்சிக்கு என்னைத்தயார்படுத்துகிறாளாம்!

குளிகை இப்போது என் கையில்!
இதோ முதலில்ஆல்ப்ஸ் நோக்கிப்புறப்பட்டுக்கொண்டிருக்கிறேன்!!!

பின்குறிப்பு...இம்மாதத்தின் முதல்நாள் இடவேண்டிய பதிவு இது தாமதமாகிவிட்டது!!
மேலும் படிக்க... "மூலிகையே! மூலிகையே!"

Wednesday, April 09, 2008

கொலையும் செய்வாள் பத்மினி!

இன்னிக்கு ரண்டுல ஒண்ணு பாக்காம விடமட்டேன் ஆமா..
அன்னிக்கு முறத்தால்புலியை விரட்டிய வீரத்தமிழ்மரபில்வந்த பெண் நான் என்கிறதை நிரூபிக்கத்தான்
போறேன்

பத்மினியின் முகம் கோபத்தில் விசாகப்பட்டினம் வெய்யிலாய் தகித்தது.

நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன்... வலை போட்டு தடுத்தும் பாத்தேன்..
ஆனா அதையும் மீறி என்னை என்னை...

கன்றிச்சிவந்த தன்கன்னங்களை கண்ணாடியில் பார்த்தாள்.

ஐயோ இந்தபாதகம் செய்தால் பார்த்திட்டு நான் சும்மா இருக்கணுமா?

பல்லைக்கடித்தவள் யோசித்தாள்.


அன்று இரவு நினைத்தபடி தன் திட்டதை முடித்தாள் பத்மினி.

வெளியூர்போன கணவனுக்குபோன் செய்தாள்.

"சந்துரு! நேத்திக்கே நான் உங்க கிட்ட சொன்ன விஷயம்தான்..என்னால ஒருவாரமா பொறுக்கமுடியல நீங்களும் ஊர்ல இல்ல ,, நான் என்ன செய்யறது
சொல்லுங்க கடைசில கடைசில....."

"என்னாச்சு பத்மினி தீர்த்துக்கட்டிட்டியா?"

"ஆமாங்க..வலைகட்டி படுத்துட்டாலும் எப்படியாவது உள்ளவந்தா நான் என்ன செய்வேன்?அதான்
இன்னிக்கு கொசுமருந்துவாங்கி எல்லா கொசுக்களையும் கொலைசெய்துட்டேன்.. இனி கொசுக்கடி இல்லாம நிம்மதியா தூங்கலாம் இல்ல?"

*******************************************************************************
மேலும் படிக்க... "கொலையும் செய்வாள் பத்மினி!"

Monday, April 07, 2008

காலமெல்லாம் காத்திருப்பேன்.

அத்தியாயம் 6

ராகவ் எண்டர்ப்ரைசஸ்.

மானேஜிங் டைரக்டர் சுரேஷின் பிரத்தியேக அறை.

ஏசியின் அந்தக்குளுமையிலும் சுரேஷுக்கு வியர்த்துகொட்டியது. உடம்பே பற்றி எரிகிற மாதிரி இருந்தது.எதிரே கைகட்டிக்கொண்டு
சாரங்கன் அமைதியாக நின்றிருந்தான்.அவனுக்கு சுரேஷைப்போல ஆத்திரம் வரவில்லையெனினும்
மஞ்சுநாத் இப்படிச் செய்துவிட்டதில் மனது வேதனைப்பட முடிந்தது.

கம்பெனியின் சீனியர் மேனேஜர் என்ற முறையில் மஞ்சுநாத்தை மிகவும் நம்பியிருந்தார் விபத்தில் மறைந்துபோன சுரேஷின் அப்பா.
.அதனால் அப்போது வெளிவராத உண்மைகள் எல்லாம் இப்போது தெரியவந்தன. அவன் ஊழல் செய்துவிட்டதற்கு ஆதாரமான ஃபைல்கள் ஒவ்வொன்றாய் வெளியே வரவும் சுரேஷ் அதிர்ந்துபோனான்.

"சாரங்கன்" என்றான் சுரேஷ் உடைந்தகுரலில்.

"யெஸ்சார்' என்றான் பவ்யமாய் சாரங்கன்

" இந்த மஞ்சுநாத் நிறைய தில்லுமுல்லு செய்திருக்கிறான். ராஸ்கல் அவனுக்கு எத்தனை தைரியம் பாருங்க? ஆமா... அமெரிக்காவுக்கு கால் போட்டு பேசிட்டீங்களா?"

"யெஸ் ஸார்... அமெரிக்காக்கு பேசிட்டேன்.. பேசின காலை டேப் செய்துவிட்டேன்"

" வெரிகுட்...ஒரிஜினல் கொட்டேஷன்20% போட்டிருக்க, 9%ன்னு கொட்டேஷன் செட்டப் ஆகி உள்ளது இல்லையா சாரங்கன்?"

ஆமாம் சார்.. 11%வித்தியாசம் வருகிறது... கணக்கில் பதினாலு லட்சம் குறைகிறது."

"பதினாலுலட்சம்! க்ரேட் அமௌண்ட் யார்..!அத்தனையும் முழுங்கிட்டான மஞ்சுநாத்.அவனை அவனை.."

"சார் .. பி காம் ப்ளீஸ் ...நான் உங்களுக்கு எல்லா வகையிலும் உதவறேன்அமைதியா இருங்க.."

"உங்க உதவிலதானே எல்லாமே அம்பலமயிருக்கு? ஐ ஷுட் தாங்க் யூ சாரங்கன்... ஆமா,ஆடிட்ல தெரியாம போயிடுமா? மஞ்சுநாத் என்ன தைரியத்துல இப்படி செய்தான்?'

:'"அதான் சார் எனக்கு ஆச்சர்யமா இருக்கு!"

"ஆடிட்டருக்கு ஒரு வாகனம் லஞ்சமா வாங்கித்தந்திருப்பான். வேறென்ன..ஹ்ம்ம் அவனை முழுவதும் நம்பியது பழைய எம்டியின் தப்பு.அவர் என் அப்பாவா இருந்தா என்ன ஒரு மனிதனை எந்த அளவு நம்பணும்னு அனுபவத்துல தெரிஞ்சிருக்க வேண்டாமா அவருக்கு?"

"மஞ்சுநாத்தை ஒரு நண்பன் என்கிற முறைல நான் விஜாரித்துப் பார்க்கட்டுமா சார்? கிளெரிகல் எர்ரர் மாதிரி அமைத்து அந்தப்பணத்தைக்கட்டவைத்துவிடலாம்.."

"வேற வழி? மீட்டிங் என்று கொண்டுபோனால் கம்பெனியின் மற்ற பெரிய அதிகாரிகள் தலையிட்டுப் போலீசை வரவழைக்கச் சொல்வாங்க அது அவனுக்கும் தலைகுனிவு, நம்ம கம்பெனிக்கும் அவமானம்"

"மஞ்சுநாத் அத்தனைமோசமானவர் இல்லை சார்.. மன்னிப்பு கேட்டுக்கொள்வார் என நம்பறேன்"

"சாரங்கன்1 இன்னமும் அந்த துரோகியை நீங்க சிலாகிச்சி பேசுவது வியப்பா இருக்கு! லட்சக்கணக்கில் கம்பெனி பணத்தை ஸ்வாகா செய்துவிட்டு ஒன்றுமே நடக்காதது போல இத்தனை நாளாய் இங்கே வேலை செய்துகொண்டிருக்கிறான். நம்மை முட்டாள் என
நினைத்துவிட்டான். அமெரிக்காவிலிருந்து மூணு மெஷின்ஸ் வரவழைக்கலாம் என்று அவன் சொன்னதும் அவனை முற்றிலும் நம்பி,
அதில் இறங்க வைத்தது என் அப்பாவின் தப்புதான் அதான் இத்தனை விபரீதத்துக்குக் காரணம்"

" சார்!உங்க அப்பா- எங்க பழைய எம்டி -உத்தமமான மனிதர் சார்.. எல்லாரையும் நம்பி அவர்களைத்தட்டிக்கொடுத்து வேலைவாங்குபவர் அவருக்கு நம்பிக்கைதுரோகம் செய்தவர் மஞ்சுநாத்தானே தவிர உங்க அப்பாமீது எந்ததப்பும் இல்லை. எப்படியோ மஞ்சுநாத் தனது
ஒரிஜினல் ஃஃபைலை தவறுதலாய் தன் காபின் டேபிள் ட்ராயரில் வைத்திருக்கவும்,ஏதோ வேலையாக அந்த ட் ராயரைத் திறக்கப்
போன என் கண்ணில் பட்டுவிட்டது ...படித்துப்பார்த்ததும் திகைத்துப்போயிட்டேன் சார்,அதான் உஙக்ளுக்கு உடனே தெரிவித்தேன்"

"சாரங்கன்...நீங்க மட்டும் பாக்கலேன்னா எதுவுமே எனக்கு தெரியவந்திருக்காது. போலியாக ஒரு கொட்டேஷன் தயார் செய்து
பதினோரு பர்சன்ட்டை தன் பர்சனல் செலவுக்கு எடுத்துகிட்டு ,இந்தக்கம்பெனில மூணுமாசமா என் பக்கத்துலயே இழைஞ்சிபேசிட்டு
இருந்திருக்கான் மஞ்சுநாத், இது தெரியாம இவனை நான் வந்த்தியாசமானவன்னு அதிசயமா பார்த்து இப்படி ஏமாந்ந்திருக்கிறேன் எப்பேர்ப்படா முட்டாள் நான்? மஞ்சுநாத் ஒரு ஃப்ராட் சீட் அயோக்கியன்.."


மேஜையிலே ஓங்கிக்குத்தினான் சுரேஷ்.

"ஸார் ப்ளீஸ்.."

"ஓக்கெ ஒகே,,எனக்கு அ ந்த அயோக்கியனை நேர்ல பாக்கவும்பிடிக்கல சாரங்கன். நான் வெளியே போகிறேன் ,நீங்க பார்த்து பிடித்து
விசாரணை செய்து எனக்கு போன் செய்யுங்க.."

"யெஸ்சார்"

சுரேஷ் வெறுப்பும் விரக்தியுமாய் வெளியே சென்றான்.

சீட்டிலிருந்த ராகினிக்கு சுரேஷின் முகமே ஏதோ விபரீதத்தை கோடுகாட்டவும் சாரங்கனிடம் வந்து நின்று," என்ன ஆச்சு சார்ங் அவருக்கு?"'என்று கேட்டாள்.

"அதுவந்து... சின்ன ப்ராப்ளம் ராகினி ...அப்புறமா விவரம் சொல்ட்டுமா இப்போ கொஞ்சம் வேலை இருக்கே ப்ளீஸ்?'

சாரங்கன் இப்படிசொல்லும்போது ராகினி அவன் முகத்தையே ரசித்தபடி குறும்பாய் அவனிடம்," கையில் ஃப்ளூட் வச்சிடா அசல் காலண்டர்
க்ருஷ்ணர்தான் சாரங் நீங்க! எத்தனை அழகானமுகம் உங்களுக்கு! 'மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப்பெரியவாய கண்கள் என்னைப் பேதமை செய்தனவே" ன்னு அமலனாதிபிரான் அரங்கனைப்பார்க்கும்போது பாடிய பாடல் நினைவுக்கு வருது..உங்க கண்களும் இப்போ என்னைப்பாடாய் படுத்துது! பார்வை ஒன்றே போதுமே என்கிறதெல்லாம் இதனால்தானா சாரங்?"


சாரங்கன் வெட்கம்கலந்தபுன்னகையுடன் நகரவும் எதிரில் மஞ்சுநாத் வரவும் சரியாக இருந்தது.

"வழக்கம்போல சார் லேட் இன்னிக்கும் ஆபீசுக்கு! எங்க சுத்திட்டுவராரோ யார்கண்டாங்க?" ராகினி மஞ்சுநாத்தைக் கண்டதும் முணுமுணுத்தபடிபோய்விட்டாள்.

சாரங்கனிடம் ராகினி பேசிக்கொண்டிருந்ததையும் அதற்கு சாரங்கன் வெட்கப்பட்டதையும் தூத்த்திலிருந்து கவனித்துகொண்டு வந்த மஞ்சுநாத்," வாட் மேன்! அழகுதேவதை ஏதும் அடல்ட்ஸ் ஒன்லிஜோக் அடிச்சிதா உன்கிட்ட? கன்னமெல்லம் இப்ப்டி சிவந்திருக்கு உனக்கு? கொடுத்துவச்சவன்பா...எல்லாப் பொண்ணுங்களும் உன்னையே சுத்தறாங்க..."என்று சொல்லி கண்களைச் சிமிட்டினான்.

சாரங்கன் அதற்கு முகத்தை சகஜமாய்வைதுக்கொண்டு,"மஞ்சுநாத் !உங்ககூடதனியாபேசணும்"என்றான்.

"எ என்ன விஷயம் ?" முகத்தில் கடுப்பேற மஞ்சுநாத் கேட்டான்.

"அ அது வந்து.."

"என்ன பர்சனல் விஷயமா?" இப்ப்டிக்கேட்கும்போது முகம் வெளிறியது மஞ்சுநாத்திற்கு.

"இல்லை இது அஃபீஷியல்.."

பெருமூச்சுவிட்டபடி தோளைக்குலுக்கிய மஞ்சுநாத், சாரங்கனுடம் அந்த அறைக்குள் நுழைந்தான்.

சாரங்கன் சுற்றிவளைக்காமல் அனைத்தையும் கூறிவிட்டு அமைதியாய் நின்றான்.

"ஓஹோ இத்தனைக்கும் நீதான் கராணமா ?" மஞ்சுநாத் சுட்டுவிடுவதுபோல பார்த்தான்.

கம்பெனியின் ஊழியன் என்கிற முறையில் என்கடமையை செய்தேன் மஞ்சுநாத்"

அப்பாவிம மாதிரி இருந்திட்டு எனக்கே குழி பறிக்கிறியா? என்னை ஒருவார்த்தைகேட்காமல் புது எம்டிகிட்ட எல்லாத்தியும்
சொல்லீ இருக்கணுமா ?அதைவிட அமெரிக்கால நான் மெஷின் வாங்கின கம்பெனிக்கும்போன் செய்து சவிசாரித்து அதையும்
டேப்பில் பதிவு செய்திட்டியா ? டேய், நீ துப்பறியும்கதை அதிகம்படிப்பாயோ?"

" மஞ்சுநாத் எனக்கு வேறு வழி தெரியவில்லை ...என்னால் இப்போது முடிந்ததெல்லாம் கோபமாய் இருந்த சுரேஷை சமாதானம் செய்யமுடிஞ்சதுதான்.. அவர் மட்டும் இப்போ உங்க முன் இருந்தால் உங்களை போலீசில் பிடிச்சி தள்ளி இருக்கலாம்"

"ஷட் அப்..இந்த நிலைமையை மோசமாக்கியதே நீதான்.. அதை நான் உடனே எரிச்சிருக்கணும் விட்டதால் உன் கண்ணில் பட்டிருக்கு"

"போகட்டும் மஞ்சுநாத்! எடுத்தபணத்தை கம்பெனிக்கு கட்டிடுங்க எல்லாம் சரியாய்டும்.."

"இல்லேன்னா?"

"விஷயம் டைரக்டர்ஸ் மீட்டிங் வரைபோய்டும் உங்க கதை அம்பலமாயிடும்"

"என்ன மிரட்டறியா?"

நோ நோ எம்டியின் அடுத்த நடவடிககீதுவாக் இருக்கும் என்கிறேன்"

சாரங்கா.. சாதுமாதிரி இருந்துகிட்டு இப்படி சாமர்த்தியமான காரியம் செய்துட்டோ ம்னு பெருமையாஉனக்கு?"

பெருமை ஏதுமில்ல... கடமைதான், கம்பெனியின் ஊழியன் என்கிற வகையில்.. இப்போதும் மோசமில்லை.உங்கள காப்பத்தணும்னுதான்
நீங்க கம்பெனிமூலமா எடுத்த பணத்தை திரும்ப போடச்சொல்றேன்.."

அதுக்கு பதிலா நீ ஒண்ணு செய்

என்ன சொல்லுங்க.


"ஆடிட்டரை ஏற்கனவே கவனிச்சிடேன்.. உனக்கும் ஒரு லட்சம் தந்துடறேன்..சுரேஷை சமாளிச்சிட்டு ஒரிஜினல் ஃபைலை என்கிட்டக்
கொடுத்திடு"

"நோ மஞ்சுநாத்..நான், நேர்மையா இருக்கவே விரும்பறேன்.."

"ஆமாண்டா, பெரிய நேர்மை, நீதின்னு வாய் கிழியப் பேசுங்க ...நாட்ல அவனவன் கோடிகோடியா சுருட்டறான் ..
எதோ சில லட்சம் அடிச்சா என்னைமாட்டிவிடுங்கடா..டேய் இப்ப சொல்றேன், உங்களால் ஆனத பாத்துக்குங்க..".என்று கத்திவிட்டு
காலை தரையில் அழுத்தி சத்தமாய் ஓங்கி ஒரு மிதி மிதித்தான்.

சாரங் சற்றே வெறுப்பும் பயமுமாய் தலைகுனியும்போது , கால்களை அலட்சியமாய் தரையில் குத்தி வைத்து நின்று
கொண்டிருந்தவனின் பாதங்களை மூடி இருந்த அந்த ஷூக்களை சட்டென கவனித்தான்.

சில நாட்கள்முன்பு இதே சாக்லேட்ப்ரவுன் கலரில், லேஸ்போடுமிடத்தில் சின்னதாய் பித்தளைவண்ணத்துப்பூச்சி அமர்ந்த நிலையில் ,இதே
ஷூக்கள் இரண்டை தன்வீட்டு அறையின் திரைச் சீலையின் கீழேபார்த்தது நினைவுக்குவந்தது.

திடுக்கிட்டவன் நிமிர்ந்தபோது மஞ்சுநாத் அங்கு இல்லை.

சாரங்கனின் நெஞ்சில் சந்தேகம் நூலிழையாய் நுழைய ஆரம்பித்தது.
(தொடரும்)
மேலும் படிக்க... "காலமெல்லாம் காத்திருப்பேன்."

Friday, April 04, 2008

ஞானம்(கவிதை)

நாறும் திசையெங்கும்
நாலுகால்பாய்ச்சலில் ஓடுகிறது
நாய்.

இருந்த இடத்திலேயே
கண்ணிவைத்து
இரை தேடுகிறது
சிலந்தி.

நாய்க்கு, அலைச்சல்
சிலந்திக்கு, வலை .
ஞானம்!
மேலும் படிக்க... "ஞானம்(கவிதை)"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.